ISSAI,IYARKAI & IRUVAR 1.3

PhotoGrid_Plus_1603258679672-15637653

இசை… இயற்கை மற்றும் இருவர்

அத்தியாயம் ஒன்றின் தொடர்ச்சி…


வேணிம்மா உறங்கி விட்டது தெரிந்ததும், வீணையை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு… ஜமுக்காலத்தை எடுத்து மடித்து வைத்தாள்.

உறங்க மனமில்லை! சற்று நேரம் பால்கனியில் உலாத்திக் கொண்டிருக்க நினைத்து, அறையை விட்டு வெளியே வந்தாள்.

அன்றைய இரவுப் பொழுதில்…

பாவை அறையின் பால்கனி!

கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தாள்.

இவள், தேன்பாவை!

மெல்லிய ஜரிகை வைத்தப் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். எப்பொழுதும் இப்படித்தான் இவளது உடை! அடர்ந்த கூந்தலை, ஏனோதானோ என்று நான்கைந்து சுற்றுச் சுற்றி, தளர்ந்த கொண்டை போட்டிருந்தாள். முகத்தில் கூட ஒன்றிரண்டு முடிக்கற்றைகள் விழுந்திருந்தன. அது, முகப்பருக்களை மறைத்தன!

முழுக்க முழுக்க பாட்டிகளின் கவனிப்பில் வளர்ந்தவள், பாவை!

அம்மா, அப்பாவின் அன்பை உணர்ந்திராதவள்.

இன்று வரை, இவள் உணர்ந்த ஒரே அன்பு வேணிம்மாவினது மட்டுமே!

உரிமை இல்லாத இடம் என்று உணர்ந்த பின்பும், அதை உணர்த்திக் கொண்டிருக்கும் உறவுகள்! வெறுத்து போயிருந்திருக்கும் இவளது உள்ளம், வேணிம்மா மட்டும் இல்லையென்றால்!!

இவளது குரலைப் போல குறையில்லாதது அல்ல, இவளது உள்ளம்!

அது, பல உதாசீனங்களைத் தாங்கிக் கொண்டதில், கொஞ்சம் உடைந்து போயிருந்தது. மேலும், கவலைகளையெல்லாம் வெளிக்காட்டாமல் இருப்பதால், நிறையவே கடினப்பட்டிருந்தது.

ஆனால், இந்த உதாசீனங்கள், கவலைகள்… என்று எதை நினைத்தும், அவள் கண்ணீர் வடிக்க மாட்டாள்.

காரணம்? ஒன்று, பார்ப்போரின் பரிகாசப் பார்வைக்கு ஆளாகிவிடுவோம் என்ற இறுக்கம். மற்றொன்று, தன் வேணிம்மா பரிதவித்துவிடுவார் என்ற வருத்தம்!

தான் இப்படி இருந்தும்… இப்பொழுதெல்லாம், தன்னை நினைத்து வேணிம்மா கவலைப்படுகிறார் என்று தெரிந்தது. தனக்குத் திருமணம் நடந்தாலாவது, அவரது கவலை கொஞ்சம் குறையும் என்று புரியவும் செய்தது.

இக்கணம், ‘ஆண்டவா… ஜாதகப் பொருத்தம் இருக்கனும். இந்த வரன் கண்டிப்பா அமையனும்’ என்று முணுமுணுத்துக் கொண்டு, அனைத்துக் கடவுள்களையும் மனதிற்குள் மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.

மேலும், இந்த வரன் அமைந்தால், நிறைவேற்றுவதற்கென்று சில நேர்த்திக் கடன்களையும் நினைத்து வைத்துக் கொண்டாள்.

நடப்பதை நிறுத்திவிட்டு, மெல்லிய இசையைக் கைப்பேசியில் ஓட விட்டாள். மூங்கில் ஊஞ்சலின் மேல் அமர்ந்து, மெல்ல விழிகளை மூடிக்கொண்டாள்! கிட்டத்தட்ட இசையின் மடியில் இயல்பாய் ஒரு இளைப்பாறல்!!

பால்கனியில் பால்நிலா பொழியும் பனியில் அமர்ந்திருக்கும் பாவை பற்றி…

இசையைப் போல் பிரமாண்டமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைப்பவள்!

சந்தோசம் என்னும் சாலையில், அவள் கால்கள் நடந்து பழகியதில்லை!

தனக்கென்று ஒரு வீடு வேண்டும். அது, குருவிக் கூடு போன்று இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணுபவள்!

எல்லோரும் வாழும் வாழ்வை போல், தானும் வாழ வேண்டும் என்று நினைப்பவள்!

அடைக்கும் தாழ் இல்லாமல் ஓர் அன்பு வேண்டும் என்று ஏங்குபவள்!

கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் குவியல் என்று சொல்லுபவள்!

மேலும்… ஜாதகம், ராசி பலன்கள் மீது முழு நம்பிக்கை கொண்டவள்!

குறிப்பாக, கடவுளின் மேல் அளவுகடந்த நம்பிக்கை உண்டு!

முக்கியமாக, இசையோடு இசைந்தே தன் வாழ்க்கைப் பயணம் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறாள்!

இப்படி ஒரு வாழ்க்கை வாழ, ஓர் உற்ற துணை வேண்டும் என்று ஆசைப்படுகிறாள், கானங்களின் மீது தீரா காதல் கொண்ட, இந்த இசைக் காதலி!

சில நிமிடங்களுக்குப் பின், அறைக்குள்ளே சென்று உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலை பொழுதில்

நாகலாபுரம் அருவி!!

சென்னையிலிருந்து இரண்டு மணி நேரப் பயணம் செய்தால், இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

இரவின் குளிரை இன்னும் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கும் மலைப் பாறைகள். அதை, அப்படியே அந்த இடம் முழுவதும் பாய்ச்சிக் கொண்டிருந்தன. தண்ணீர் ஓடிக் கொண்டே இருப்பதால், பச்சை பசேல் என்று வளர்ந்திருக்கும் செடிகொடிகள்.

செடி கொடிகளுக்கு ஊடே, ஒரு சின்ன அருவி இருந்தது. அருவியிலிருந்து தெறித்த தண்ணீர் துளிகளால், அருகிலிருந்த பாறைகள் நனைந்திருந்தன.

மேலும், பெரிய பெரிய மரங்களும் இருந்தன!

அடர்ந்த கிளைகள் கொண்ட மரங்களின் காரணமாக, காலை வெயில் இன்னும் காட்டிற்குள் நுழையவில்லை. ஆனால், அதற்குமுன்னே அங்கே ஒருவன் நுழைந்திருந்தான்.

மேலும், ஒவ்வொரு பாறைகளிலும் தாவித் தாவிச் சென்று… சுற்றி இருந்த இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருந்தான்.

இவன், சிவபாண்டியன்!

காலத்தின் நிகழ்வுகளைக் காட்சியாக நிறுத்தி வைக்கும் ஆற்றல் பெற்றவன். அதான், நிழற் படங்கள் எடுப்பவன்!!

இங்கேயும் அதற்காகத்தான் வந்திருக்கிறான்.

ஷார்ட்ஸ் மற்றும் ஃபார்மல் ஷர்ட் அணிந்திருந்தான். முதுகில், காக்கி நிறத்தில் ஒரு பெரிய பயணப்பொதி!

இதற்கு முன், எங்கேயோ சுற்றிவிட்டு வந்திருப்பான் போல… ஸ்போர்ட்ஸ் ஷூ-வில் கொஞ்சம் சகதி… மற்றும் உடைகளில் ஆங்காங்கே அழுக்கு!

முழுக்க முழுக்க அம்மா அப்பா-வின் கனிவான கவனிப்பில் வளர்ந்தவன். இன்றைய நாளிலும்… அம்மா, அப்பா, தங்கை, தங்கை கணவன் என்று அனைவரின் அன்பில் வாழும் இளைஞன் இவன்.

குறைகளே இல்லாத வாழ்வு, இவனுடையது!

சுயமரியாதையை முக்கியம் என்று சொல்பவன். அதற்கு ஏதாவது ஓர் இழுக்கு வந்தால், இயற்கை சீற்றத்தை ஒத்த கோபம் கொள்பவன்.

சற்று நேரம் நடந்தவன், பயணப்பொதியை இறக்கி வைத்துவிட்டு… ஈரமாயிருந்த பாறையின் மேல் இரு விழிகள் மூடிப் படுத்துவிட்டான்.

சிறு பூச்சிகளின் சத்தம்… ஓடும் நீரின் சலசலப்பு… மெல்லிய காலை காற்றின் கிசுகிசுப்பு… கிட்டத்தட்ட இயற்கையின் மடியில் இயல்பாய் ஒரு இளைப்பாறல்!

காலை வேளையின் கதிரவன் கதிர்களை எதிர்பார்த்திருக்கும் பாண்டியன் பற்றி…

இயற்கையைப் போல், தன்னை எளிமையாக வெளிப்படுத்துபவன்!

கவலை என்ற சாலையில், இவன் கால்கள் நடந்து பழகியதில்லை!

வழக்கம் போல் வாழும் வாழ்வை, கடுகளவும் விரும்பாதவன்!

வான் கூரையின் கீழே, வனங்களுக்கு ஊடே வாழும் வாழ்வை ரசிப்பவன்!

அன்பிற்கும் அறிவியல் உண்டு என்ற கொள்கை கொண்டவன்!!

கண்ணீர் என்பது வெறும் உப்புக் கரைசல் என்று சொல்பவன்!

மேலும், ‘மூட நம்பிக்கை என்பது, வாழ்க்கைப் பாதையின் முட்டுச் சந்து’ என்று எண்ணுபவன். ஒருநாளும் அதை முட்டிக் கொண்டு நிற்க மாட்டான்!

குறிப்பாக, கடவுள் நம்பிக்கை அறவே இல்லதாவன்!

முக்கியமாக, இயற்கையோடு இயைந்தே தன் வாழ்வு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருப்பவன்!

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதைத் தொடர, ஓர் உற்ற துணை வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறான், கானகங்களின் மீது தீரா காதல் கொண்ட, இந்த இயற்கை காதலன்!!

ஆக, இந்த இருவரின் இயல்புகள் எதுவுமே இம்மியளவும் இணைந்து போகவில்லை! இது இசையும், இயற்கையும் கண்டுபிடித்து இயம்பியது!!