Ninaivenisapthamaai-9

NN_Pic-7f9388cd

Ninaivenisapthamaai-9

  • Renuka
  • November 24, 2020
  • 0 comments

நினைவே நிசப்தமாய்  – 9 (Pre-Final)

விஜயின் அலைபேசியை ஆராய்ந்தபடியே, ரவீந்தர் விஜயின் கழுத்தை இன்னும் இன்னும் நெறித்தான்.

ரவீந்தரின் செய்கையில் விஜயின் மூச்சு மெல்ல மெல்ல குறைந்து இதய துடிப்பு அதன் வேகத்தை குறைக்க ஆரம்பிக்க ரவீந்தரின் கைகள் சரெலென்று விலகியது.

விஜய் மொந்தென்று தரையில் விழுந்தான்.

“நீ சாக கூடாது” ரவீந்தரின் குரலில் கர்ஜனை.

“அது, தான் உன்னை விட்டுட்டேன்.” ரவீந்தரின் கண்கள் அவனை கூர்மையாக பார்த்தன.

விஜய், சிரமபட்டு மூச்சுவிட்டான். விஜயின் மனம், ‘மித்திலா… மித்திலா…’ என்று துடித்தது.

‘அவள் மாட்டிக்கொள்வாளோ?’ தன்னிலை மறந்து, அவன் மனம் அவளுக்காக துடித்தது.

ரவீந்தர் விஜயின் அலைபேசியை ஆராய, அவன் கண்கள் சுருங்கியது.

“உன் மொபைல் வேலை செய்யலியா? ஏன் எதுமே சரியா வரலை?” ரவீந்தர் குரல் கேள்வியோடு தேங்கி நின்றது.

‘அடிப்பாவி, அங்க இருந்தே என் மொபைலை ஹேக் பண்ணிட்டாளா? சரியான கேடி’ அவன் அவளை மெச்சி கொண்டான்.

விஜய் மூச்சு விட சிரமப்பட்டு கொண்டே, தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தான்.

“ஓ… நான் என் நண்பனுக்கு பேசினேன். அவன் கிட்ட இருந்து பதில் இல்லை. என் மொபைல் தான் வேலை செய்யலியா?” விஜயின் குரலில் அறியாமையும், அப்பாவித்தனமும் ஒட்டி கொண்டது.

“உனக்கு இது கூட தெரியலை. உன்னை வச்சிக்கிட்டு…” ரவீந்தர் தலை இருப்பக்கமும் அசைந்து கொண்டது.

விஜய்க்கு இன்னும் மூச்சு விடுவது சிரமமாக இருந்து, தொண்டையும் வறண்டிருக்க… அருகே இருந்த தண்ணீரை அவன் எடுக்க முயல, ரவீந்தர் அவன் முகத்தில் அந்த தண்ணீரை வீசினான்.

தண்ணீர் அவன் மேல் விழுந்த வேகத்தில் அதை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, தன்னை கொஞ்சம் திடபடுத்திக் கொண்டான் விஜய்.

“பாஸ்…” மரியாதையாக அழைத்து அவனை பரிதாபமாக பார்த்தான் விஜய்.

“இது தான் விஜய், எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நீ இங்க தொடர்ந்து வேலை பார்க்குற” ரவீந்தரனிடம் ஏளன புன்னகை.

“ஏன் கேமரா கொண்டு வந்த?” ரவீந்தரனின் குரலில் கர்ஜனை.

“அது நான் வீட்டில் வச்சது. அந்த, மித்திலா என்ன பண்றான்னு பார்க்குறதுக்கு. அவளை… அவளை ஒரு தனி ரூமில் அடச்சி வக்சிருக்கேன். அவளை கண்கானிக்க நான் வச்சது. மறந்துபோய் கொண்டு வந்துட்டேன்.” தட்டு தடுமாறி விஜய் சமாதானம் பேசினான்.

ரவீந்தரின் முகத்தில் கொஞ்சம் சந்தேகம். கொஞ்சம் தெளிவு.

“ஏன் மித்திலாவை கொல்லலை?” ரவீந்தரிடம் கேள்வி.

“அவ ஏதோ ஒரு சிப் வச்சிருக்கேன்னு சொல்றா. அவ, செத்துட்டா எல்லா உண்மையும் வெளிய போயிடுமுன்னு சொல்றா. எந்த உண்மைன்னு சொல்ல மாட்டேங்குறா” விஜய் ரவீந்தர் நம்பும் விதமாக கூறினான்.

“ம்…” ரவீந்தரிடம் கர்ஜனை.

“அவ பொய் சொல்றா” ரவீந்தர் உதட்டை சுழித்தான்.

விஜய் எதுவும் புரியாதவன் போல் பரிதாபமாக பார்த்தான்.

“சரி விடு. உனக்கு எதுவும் புரியாது. நான் சொல்றதை செய். நான் சொல்ற இடத்துக்கு அவளை அனுப்பு.” ரவிந்தரின் குரலில் கட்டளை.

“எதுக்கு?” விஜயின் முகத்தில் அப்பாவித்தனம்.

“ம்… மித்திலா ரொம்ப புத்திசாலி. அது தான் அவ அப்பாவுக்கு கொடுத்த விருந்தை அவளுக்கும் கொடுக்கனும்” ரவீந்தரின் குரலில் சிரிப்பு.

“சரி…” தலைஅசைத்து தப்பிதோம் பிழைத்தோம் என்று விஜய் வீட்டை நோக்கி விரைந்தான்.

வீட்டில், மித்திலா குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

கதவு தட்டபட, துவாரம் வழியாக பார்த்துவிட்டு கதவை திறந்து, “விஜய்…” என்று கூவினாள் மித்திலா.

கதவை அடைத்துகொண்டு, “பயந்துட்டியா?” விஜயின் புருவங்கள் சுருங்கியது.

“என் மேல உனக்கு என்ன அக்கறை?” அவனிடம் கேள்வி.

“என்னை பார்த்தா அக்கறை இல்லாதவங்க எல்லாரும் சாகனுமுன்னு நினைக்குறவ மாதிரியா இருக்கு?” அவள் பேச்சு இன்று அவனை போல்.

“ரவீந்தர் என்னை கொல்ல மாட்டான்னு நீ தானே சொன்ன?” அவன் கேள்வி அறைக்குள் நுழைந்தபடி தொடர்ந்தது.

அவளிடம் மௌனம்.

“மித்திலா, அவனை பார்த்தவுடன் கெட்டவன்னு நீ எப்படி சொன்ன?”

“உனக்கு அவனை எப்படி தெரியும்? ஏற்கனவே அவனை பார்த்திருக்கியா? சொல்லு மித்திலா” அவன் கேள்விகள் தொடர்ந்தது.

“அவன் மனிதனே இல்லை” அவள் உதடுகள் முணுமுணுத்தன.

“மிருக மனம் கொண்டவனா?” விஜய் கேலி பேசினான்.

“உனக்கு எப்பவும் விளையாட்டு தானா?” அவள் குரலில் சிடுசிடுப்பு.

“அவன் இல்லை ரவீந்தர்.” ‘அவனின்’ அழுத்தம் கொடுத்து அவள் நிறுத்த, பட்டென்று சந்தேகம் நிறைந்த முகத்தோடு திரும்பினான் விஜய்.

“ஹீ இஸ் எ ஹுமனாய்ட் ரோபோட்” அவள் குரலில் உறுதி.

“ஹா… ஹா… “ விஜயிடம் பயங்கர சிரிப்பு.

“என்ன சிரிக்குற?” அவள் குரலில் பரிதவிப்பு.

“இல்லை, அவங்க தான் என்னை முட்டாளுன்னு நினைக்குறாங்க. நீயும் அதை நிருப்பிக்கற பார்த்தியா?” அவன் குரலில் குறும்பு.

அவள் கண்கள் விரிந்து அவனை முறைத்தது.

அவனை கரகரவென்று இழுத்து கொண்டு அவள் மடிக்கணினி முன் நிறுத்த அவன் அதிர்ந்து நின்றான்.

ரவீந்தரின் முகம் ரோபோட் போல் காட்சி அளிக்க, விஜய் ஸ்தம்பித்து நின்றான்.

“நான் உனக்கு கொடுத்த கேமரா எக்ஸ்ரே கேமரா. அவன் யாருன்னு உடனே எனக்கு காட்டிருகிச்சு. அவன் ரோபோட். அது தான் உன் கேமரா, ப்ளூ டூத் எல்லாத்தையும் நொடி பொழுதில் கண்டுகொண்டான்.” அவள் படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

“உஃப்…” அவன் பெருமுச்சு வெளியேறியது.

“என்னால் நம்ப முடியலை. நம்மளை மாதிரி தான் இருந்தான்!” அவன் குரலில் அதிர்ச்சி.

“அது தான் ஹுமனாய்ட் ரோபோட்.” அவளின் பதில்.

“அப்ப உண்மையில் வில்லன் யாரு?” விஜயின் குரலில் குழப்பம்.

மித்திலாவிடம் மௌனம்.

“உங்க அப்பா எங்க இருக்காங்க?” விஜயிடம் கேள்வி.

“என் அப்பாவை சந்தேகப்படுறியா?” மித்திலாவின் குரல் உடைய எத்தனித்தது.

“அப்படி இல்லை. என் அண்ணனை நான் இத்தனை நாள் பக்கத்தில் இருந்து பார்க்கிறேன். நீ பார்க்கலையேன்னு…” அவன் குரலில் தடுமாற்றம்.

“ஃபெமிலி டாக்டர் பொறுப்பில் இருக்காங்க அப்பா. அப்பாவுக்கு அவர் ரொம்ப நெருக்கம்.” அவள் குரலில் நிதானம். பொறுமை.

விஜய்க்கு பொறி தட்டியது.

“விஜயேந்திரன் தானே உங்க அப்பாவுக்கு நண்பர்?”  அவன் புருவம் உயர்ந்தது.

“ம்….” அவள் தலை அசைந்தது.

“நீ அவரை பார்த்திருக்கியா?” அவன் கண்கள் அவளை கூர்மையாக பார்த்தது.

“சொல்லத்தான் கேள்வி பட்டிருக்கேன்” அவள் குரலில் தயக்கம்.

“வேற என்ன கேள்வி பட்டிருக்க?” அவன் குரலில் ஏளனம்.

“அவர் பையன் ரவீந்தர். ஃபாரினில் படிச்சிட்டு இருக்கார்ன்னு அப்பா சொல்லிருக்காங்க.” அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“ஒ…” அவன் குரலில் நக்கல் கலந்த ஆச்சரியம்.

“ரொம்ப நக்கல் பண்ணாத. உனக்கு இது கூட தெரியலை” அவள் குரலில் இப்பொழுது ஏளனம்.

அவன் முகத்தில் புன்னகை.

“அடுத்து என்ன பண்ண போறோம்?” அவள் கழுத்து கேள்வியோடு திரும்பியது.

“கேமரா, ப்ளூட்டூத் எல்லாம் கொடுத்தியே. பார்க்கலியா?” அவனிடம் மீண்டும் கேலி.

“நான் தான் எல்லாத்தையும் டிஸ்கன்னெக்ட் பண்ணி, உன் மொபைலை ஹேக் பண்ணிட்டேன்னே. ஏதாவது, ஆபத்து வந்தா இருக்கட்டும்னு உன் மொபைலில் ஆப் போட்டு வச்சிருந்தேன். அந்த ஆப் மூலமா எல்லாத்தயும் ஹேக் பண்ணிட்டேன்.” அவள் கண்கள் சிமிட்டி கொண்டது.

அவள் கண் சிமிட்டலை, அவன் கண்கள் ரசித்து கொண்டது.

“ரவீந்தர் உன்னை ஒரு இடதுக்கு வர சொன்னான் விருந்து வைக்கனுமுன்னு சொன்னான். சொன்னான்னு சொல்லவா இல்லை சொல்லுச்சுன்னு சொல்லவா?” அவன் குரலில் கேள்வி தேங்கி நின்றது.

“இப்ப இது தான் முக்கியமா?” அவள் அவனை முறைத்து கொண்டே தொடர்ந்தாள்.

“ஹ்ம்ம்… இது தான் ரவீந்தரை இயக்கம் செய்யறவங்க பாலிசி போல. அவங்களை எதிர்த்தா, விருந்து வைப்பாங்க போல. என் அப்பாவும், உன் அண்ணனும் எதுக்கோ அவங்களை எதிர்திருக்கனும்.” அவள் பேச்சு கணிப்போடு ஒலித்தது.

“விருந்தில் ஏதோ பழம் கொடுத்திருக்காங்க. அண்ணன் பழத்தை பத்தி தெரியாமல் அதை சாப்பிட்டிருக்கான். பழம் மட்டும் தான் அவனுக்கு நினைவில் இருக்கு. வேறு எதுவும் அவனுக்கு தெரியலை” அவன் பேச்சும் கணிப்போடு ஒலித்தது.

“அப்பாவுக்கும் அதே நாள் அது தான் நடந்திருக்கு” அவள் குரலில் சோகம்.

“ஸோ, விஜயேந்திரன் பழங்கள் ஆராய்ச்சி பண்றவர். ரவீந்தர் ரோபோட் சம்பந்தமா டெக்னிகல் ஃபில்டில் உள்ளவன். அப்பாவும் பையனும் சேர்ந்து ஒரு ரோபோட்டை வச்சிகிட்டு எல்லா வேலையும் பண்றாங்க” அவன் கணிப்பை வெளியிட்டு கொண்டிருந்தான்.

“உங்க அண்ணனும், என் அப்பாவும் எதுக்கு இவங்களை எதிர்க்கனும்? தப்புன்னு தெரிஞ்சி தான் சொல்லிருகாங்க. ஆனால், ரவீந்தரை இவங்க சந்தேகபடலை. அந்த விருந்துக்கு… ஐ மீன் அந்த கெட்டூகெதருக்கு அப்பா சந்தோஷமா தான் போனாங்க.” அவள் நெற்றி சுருங்கியது.

“அண்ணனும் சந்தோஷமா தான் போனான். ஆனால் இவங்க கண்டுபிடிச்ச ஏதோ ஒன்னு அவங்களுக்கு ரொம்ப இடைஞ்சலா இருந்திருக்கு.” அவன் நாடியை தடவிகொண்டு சிந்தனையை வெளிப்படுதினான்.

“எல்லாம் சரி தான். ஆனால், இவங்க பண்ற தப்பு என்ன? நாம இவங்களை எப்படி நெருங்கறது?” அவள் முகத்தில் குழப்பம்.

“அருணுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனால், அருண் என்ன நிலைமையில் இருக்கான்னு தெரியலை. அருணை அடைச்சு வச்சிருக்கணும். இல்லை, அருணும், உங்க அப்பா, என் அண்ணன் மாதிரி நிலையில் இருக்கணும்.” அவன் கூற, அவளுக்கு திக் என்று இருந்தது.

“இனி, நான் ஆஃபிசுக்கு போக முடியாது. நிச்சயம் என் மேல சந்தேகம் வந்திருக்கும்.” விஜய் தன் நெற்றி பொட்டை அழுத்தி யோசித்தான்.

“நான் போறென் விருந்துக்கு” அவள் குரலில் பிடிவாதம்.

“வேண்டாம்” அவன் குரலில் மறுப்பு.

“உனக்கு என் மேல என்ன அக்கறை?” அவள் குரலில் எரிச்சல்.

“தெரியலை” அவன் குரலில் தன்மை.

அந்த தன்மையில் அவள் மனதில் ஒர் இதம்.

“அப்பாவுக்கும், அண்ணனுக்கும் அவங்களை பத்தி தெரியாது. நமக்கு தெரியும். அவன் கொடுக்கும் பழத்தில் ஆபத்துன்னு தெரியும். அவன் ஒரு ரோபோட்ன்னு தெரியும். உள்ள போனதும் நான் அவனை என் கன்ட்ரோலில் கொண்டு வந்திருவேன். அந்த பழத்தை சாப்பிட மாட்டேன்” அவள் குரலில் நம்பிக்கை.

அவன் முகத்தில் சிந்தனை.

“அப்ப, நான் போகட்டுமா?” அவள் குரலில் ஆவல்.

“நானும் உன் கூட வரேன்.” அவள் தலை அசைத்து கொண்டான்.

ரவீந்தர் குறிப்பிட்ட நாளில் இருவரும் அந்த இடத்திற்கு சென்றனர்.

வெளியே பூக்கள் நிறைந்த தோட்டம். அந்த நறுமணம் எங்கும் பரவி இதமாக இருந்தது.

“ரவீந்தர் வாழறான்” விஜய் தோள்களை குலுக்கி கொண்டான்.

“ரோபோட் ஏன் வாழ போகுது? இல்லை, வேறு யாரோ வாழறாங்க.” அவள் குரலில் கிசுகிசுப்பு.

இருவரை கண்ட ரவீந்தர் என்னும் ரோபோட் சிடுசிடுத்தது.

“விஜய் உன்னை யார் வர சொன்னா?” ரவீந்தர் என்னும் ரோபோட் குரலில் எரிச்சல்.

“இல்லை… மித்திலாவுக்கு வழி தெரியலை.” விஜயின் குரலில் தடுமாற்றம்.

“சரி… சரி… இங்கயே இரு” அதன் குரலில் கட்டளை.

விஜயின் கண்களில் பதட்டம். மித்திலா கண்மூடி, அவனுக்கு ஆறுதல் கூறி ரவீந்தரை தொடர்ந்தாள்.

விஜய் வீட்டை நோட்டமிட்டான். யாரும் அங்கு இல்லை. மெல்ல மெல்ல தோட்டத்திற்கு சென்றான். அங்கு அடர்ந்த மரங்கள் இருந்தன. பகலிலும் இருள் கவ்வி இருந்தது. அத்தனை அடர்ந்த மரங்கள்.

மரம் எங்கும் கனிகள். விதவிதமான கனிகள். ‘இந்த காலத்தில் இப்படி ஒரு இடமா?’ அவனுள் அதிர்ச்சி.

பழங்கள், பலவிதமாக பல நிறத்தில் செழித்து இருந்தன. செயற்கை நீரூற்று. தண்ணீர் செடிகளுக்கு செழித்து ஓடியது.  எங்கும் பசுமை.

‘எல்லாம் ஹைபிரிட் பழங்கள். இதில் தான் ஏதோ சிக்கல் இருக்குமோ?’ விஜயின் மனதில் கேள்வி.

அங்கு ஒரு அறைக்குள் இருந்து, “என்னை காப்பாத்துங்க… என்னை காப்பாத்துங்க…” ஒரு குரல் கீனமாய் ஒலித்து கொண்டிருந்தது.

விஜய் அங்கு எட்டிப்பார்க்க, “அருண்…” சட்டென்று கதவை திறந்து அவனை விடுவித்தான்.

அருண், ஏதோ கேட்க முயல, “அருண் இங்க இருந்து தப்பிச்சு ஓடிருங்க. உங்க  வீட்டில் இருக்காதீங்க. நான் கொடுக்கிற அட்ரெஸ்க்கு போங்க. நானும் கொஞ்ச நேரத்தில் அங்க வருவேன். அங்க வச்சி பேசிப்போம்” அருணை விடுவித்துவிட்டு, ஏதுவும் அறியாதவன் போல் அந்த இடத்திலிருந்து வெளியே வந்துவிட்டான் விஜய்.

அதே நேரம் மித்திலாவின் நெற்றியில் வியர்வை துளிகள்.

“என்ன, உன் ஜாம்மிங் டிவைஸ் வேலை செய்யலியா?” ரவீந்தரின் குரலில் கேலி.

‘ஜாம்மிங் டிவைஸ் மட்டுமில்லை. இன்னும் நான் வைத்திருந்த எந்த கண்ட்ரோல் டிவைஸும் வேலை செய்ய வில்லை.’ அவள் பதட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது.

“என்னை கண்ட்ரோல் பண்ணலாமுன்னு நீ நினைச்சிருப்ப” ரவீந்தரின் குரலில் மீண்டும் கேலி.

அவளிடம் மௌனம்.

“மித்திலா, நீ புத்திசாலி தான். ஆனால், உன் கூட ஒருத்தன் இருக்கானே அவன் படுமுட்டாள். முட்டாள் விஜய் ஜாம்மிங்க் டிவைஸை அங்கயே வச்சிட்டு வந்துட்டான். அவனுக்கு நீ உதவி செய்யறன்னு நான் புரிஞ்சிகிட்டேன். நீ என்னை கண்டுபிடிச்சிருப்பன்னு எனக்கும் தெரியும்.” ரவீந்தரின் குரலில் மெச்சுதல் போல ஏளனம்.

“விஜயோட அண்ணன் கார்த்திக், பயங்கர புத்திசாலி. உங்க அப்பாவும் தான்! பாவம் அதனால் தான் அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை. விஜய்க்கு சுத்தமா அறிவு கிடையாது. என்னை பத்தி தெரிந்தாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது. ஒரு வேலையை ஆயிரம் தடவை சொல்லி கொடுத்தாலும் தப்பா தான் செய்வான். ஆனால், பலசாலி. அதுக்கு தான், அவனை அடியாள் வேலைக்கு வச்சிருக்கோம்.” ரவீந்தர்  என்னும் ரோபோட் பேசிக்கொண்டே போனது.

மித்திலா, அவன் பேச்சை உள்வாங்கி கொண்டாலும், அவள் மூளை அடுத்து என்ன செய்வது என்பதிலே குறியாக இருந்தது.

“ரொம்ப யோசிக்காத, நீ கொண்டு வந்த எந்த டிவைஸும் வேலை செய்யாது.” அது அனைத்தையும் பிடுங்கி தூக்கி போட்டது.

ரவீந்தர், அவள் அலைபேசியை பிடுங்க, “எங்க அப்பா போட்டோ அதில் மட்டும் தான் இருக்கு. இந்த மொபைலால் உனக்கு என்ன ஆபத்து?” மித்திலாவின் குரல் கெஞ்சியது.

ரோபோட்க்கு இளகியதோ? இல்லை அதை இயக்கி கொண்டிருக்கும் மனிதனுக்கு இளகியதோ? ரவீந்தர்  என்னும் ரோபோட்  அந்த அலைபேசியை விட்டுவிட்டது.

“இந்த பழம் சாப்பிடு” ஒரு கத்தியால் வெட்டட்பட்ட பழத்தை நீட்டியது ரவீந்தர்  என்னும் ரோபோட்.

‘விஜய் வீட்டில் இருக்கும் வேலைப்பாடு நிறைந்த அதே போல் கத்தி’ மித்திலாவின் அறிவு கணக்கிட்டு கொண்டது.

மித்திலா மறுப்பாக தலை அசைக்க, “நீ சாப்பிடத்தான் செய்யணும். இங்க வந்து, இது வரைக்கும் இந்த பழத்தை சாப்பிட்டவங்க. இது என்ன செய்யுமுன்னு தெரியாம சாப்பிட்டாங்க. நீ தெரிஞ்சே சாப்பிட போற.” மிரட்டல் குரல் ஒலித்தது.

“அப்படி என்ன தப்பு பண்றீங்க நீங்க?”மித்திலாவின் குரல் கடைசி நிமிடத்திலும் போராடி பார்த்தது, பழங்களை கைகளில் உருட்டியபடி.

அந்த பழங்கள் சின்ன சின்ன ஸ்ட்ராபெர்ரி போல் பார்க்க மிக அழகாக இருந்ததது.

ரவீந்தர் என்னும் ரோபோட் வேறு பக்கம் திரும்பி படபடவென்று ஓர் அறைக்குள் சென்றது.

சில நொடிகளில் திரும்பிவந்து அவள் மேல் குளிர் நீரை ஊற்றியது. மித்திலாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

“என்ன நாங்க பண்ற தப்பை மொபைலில் ரெகார்ட் பண்ணலாமுன்னு பாக்கறியா. இப்ப எல்லாம் தண்ணீராகிருக்கும். எதுவும் வேலை செய்யாது. பழத்தை சாப்பிடு.” அவள் கழுத்தை நெருக்கியது.

மித்திலாவின் கைகள் அந்த பழத்தை அவள் உதடுகள் அருகே எடுத்து செல்ல அவள் கைகள் நடுங்கியது. ஆனால் மறுக்க முடியவில்லை.

“ரொம்ப பயப்படாத. அந்த விஜய் உன்னை பார்த்துப்பான். அவன் உன்னை காதலிக்குறான். காதல் அவன் கண்களில் தெரியுது.” கர்ஜித்தது அதன் குரல்.

அந்த நொடியில் மித்திலாவின் கண்களிலும் மையல்.

“ஓ… நீயும் காதலிக்கறியா? இதை சாப்பிட்ட பிறகு நீ ஒரு அரைலூசு தான். அவன் ஏற்கனவே அப்படி தான். எல்லாம் பொருத்தமா இருக்கும்.” அவள் வாயில் அது பழத்தை திணித்தது.

சுவை அலாதியாக இருந்தது. முதலில் தான் மித்திலா மறுப்பு தெரிவித்தாள்.

மித்திலாவின் அறிவு உண்ண மறுப்பு தெரிவித்தாலும், அதன் சுவையில் அவள் மேலும் மேலும் பழங்களை ஆர்வமாக உண்ண ஆரம்பித்தாள். அவள் சுவை நரம்புகள், அவள் மூளையை மெல்ல மெல்ல வெல்ல ஆரம்பித்தது.

அவள் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிசப்தத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தன.

வெளியே விஜய் அவளுக்காக காத்திருந்தான் படபடக்கும் இதயத்தோடு.

‘ரவீந்தரோடு நான் எப்படி சண்டையிடுவது?’ வழி தெரியாமல் விழி பிதுங்கி அவன் வெளியே நின்றான்.

உள்ளே அவள் நினைவுகள் நிசப்தமாகின… பழம், கத்தி என்று அவள் நாக்கு பிறழ ஆரம்பித்தது.

தொடரும்…

 

Leave a Reply

error: Content is protected !!