ISSAI,IYARKAI & IRUVAR 10.1
ISSAI,IYARKAI & IRUVAR 10.1
இசை… இயற்கை மற்றும் இருவர்
அத்தியாயம் – 10
முழுதாய் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது! நடந்து நிகழ்வுகளுக்குள்ளே நடந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அதைக் கடந்து வருவதற்கு!
அப்படி வந்தபின்,
வேணிம்மா வீட்டில்…
வேணிம்மாவின் குடும்பத்தினர் அனைவரும், ‘கிருஷ்ணாம்மாவை மரியாதையில்லாமல் நடத்திவிட்டான்’ என்று, சிவா மேல் கோபமாக இருந்தனர். அதிலும் கிரிக்கு கோபம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது!
காரணம், அம்மாவின் மேலிருந்த அன்பு மற்றும் பாவையின் மீதிருந்த வெறுப்பு! இது இரண்டும் சேர்ந்து, சிவபாண்டியன் மீதான கோபம், என்றும் தணியாத கோபமாக மாறியிருந்தது!!!
வேணிம்மா??
படுத்தே இருந்தார். எதிலும் கவனம் இல்லாமல் இருந்தார். எழுந்து நடமாடவில்லை. பேத்தியின் வாழ்க்கையை நினைத்து, பெரும் துன்பம் கொண்டிருந்தார்.
தேன்பாவை??
‘வேணிம்மாவைத் தவிர தனக்கு உறவென்று யாருமில்லை’ என்ற எண்ணத்தை உள்ளம் முழுவதும் நிரப்பியிருந்தாள். அதை நினைத்து நினைத்து, தன் மனதை திண்ணமாக்கிக் கொண்டாள்.
‘உறவென்று ஒருவன் இருக்கிறான்’ என்ற நினைப்பு, அவளுக்கு வரவேயில்லை! ஏனென்றால், கணவனின் ‘வெளியே போ’ என்ற வார்த்தை, அவளை அவ்வளவு பாதித்திருந்தது!! பாதிப்பின் ஆழம் சற்று அதிகம்தான்!!!
சிவபாண்டியன் வீட்டில்…
நளினி மற்றும் மதி… இருவரும், சிவாவின் சந்தோஷம் மற்றும் மரியாதை கேள்விக்குறியானத்திற்குக் காரணம் பாவைதான் என்று நினைத்தனர்! பாவை மட்டும்தான் என்று நம்பினர்! ஆதலால், பாவையின் மீது கோபத்தில் இருந்தனர்!!
சிவா வாழ்க்கையில் பாவை இல்லாமல் இருந்தால், அவன் மகிழ்ச்சி திரும்பிவிடும் என்று நம்புகின்றனர்.
சிவாவின் மீது அதீத பாசம், எனவே இவர்கள் இப்படி!
முடிந்தவரை அவனுக்கு ஆறுதல் சொல்லி, உண்ணச் செய்து… அவர்கள் இருவரும் தொழில் சம்பந்தமான வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.
செண்பகம்… மகனின் வாழ்க்கையை நினைத்து, மனம் வருந்திக் கொண்டிருந்தார்!
சிவபாண்டியன்??
பாவை இல்லாத மூன்றாவது நாளில்… காலையிலிருந்தே, ஒரே இடத்தில உட்கார்ந்திருந்தான்.
சற்று நேரம், ‘இங்கே இருக்கவே பிடிக்கலை’ என்று பாவை சொன்னதை நினைத்துக் கோபம் கொண்டிருந்தான்.
அதன்பிறகு…
‘ஏன் அப்படிச் சொன்னாள்? ஏன் அவளது பாட்டி அப்படி நடந்துகொண்டார்?’ என்று நினைத்துப் பார்த்தான்.
‘உரிமையில்லை’ என்று சொன்னதற்குப் பின்னே இருவரின் எதிர்வினைகள் இப்படி இருந்தன. ‘அந்த வார்த்தை, அவர்கள் இருவரையும் ஏன் இவ்வளவு பாதிக்க வேண்டும்?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அதன்பிறகு…
‘அவள் எப்படி பேசினாலென்ன, தான் அப்படிப் பேசியிருக்க கூடாது’ என்ற எண்ணம் வந்தது.
எண்ணத்தின் முடிவில்… தன் வார்த்தை பிரயோகங்கள், அவள் மேல் வைத்த அன்பிற்கான அவமானம் என்று உணர ஆரம்பித்தான்.
அதன்பிறகு…
அறையைச் சுற்றிப் பார்த்தான்!
பால்கனிக்குக் கண்கள் சென்றன! தளிர்த்து இருக்கும் போன்சாய்களுக்கு இடையே… அவன் மேல் சரிந்து நின்று கொண்டு, அவள் பேசிய தாளமொழிகள் நியாபகத்திற்கு வந்தன!!
மேற்கூரை தென்பட்டது! தூறலில் நனையாதிருக்க… தன் தோள்களைப் பிடித்துக் கொண்டு, அவள் தொங்கியது தெரிந்தது! தன் தோள்வளைவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்!!
‘ராக்கிங் சேரை’ பார்த்தான்! கால்களை மடக்கி… தன் மடியில் அமர்ந்து… மனதில் தலை சாய்த்து… அவள் அசைந்தாடிய தருணங்கள், நினைவில் வந்தாடின!!
அமர்ந்திருந்த மெத்தை… தன் முதுகில் முகம் வைத்து தூங்குபவளின் முகத்தை, கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது!
மேலும், வண்ண வண்ண கூழாங்கற்களும் வட்டவடிவ கண்ணாடியும் கூட, அவளின் ஸ்வர வரிசைக்காக ஏங்கின! ஏன்?? வனங்களை நேசிப்பவனும் கூடத்தான்!!
ஆக மொத்தத்தில்…
வருடக் கணக்கில் அவன் வாழ்ந்த அறைதான்! இருந்தும், நாட்கணக்கில் வாழ்ந்தவளின் நினைவுகளை மட்டும் காட்டுகிறது என்றால்… அதெல்லாம் பிரிவின் பெரிய பெரிய துயரங்கள்!!
இத்தனைக்கும், அந்நியோன்னியங்கள் அதிகமில்லை! அன்பும் சரியான விதத்தில் பகிரப்படவில்லை! அப்படியென்றால் இதெல்லாம் காதலின் பெரிய பெரிய உயரங்கள்!!
அதன்பிறகு…
‘ஹனியை அலைபேசியில் அழைத்துப் பார்க்கலாமே?’ எனத் தோன்றியது.
அதைச் செய்தான்!
ம்கூம்!’ பாவை அழைப்பை ஏற்கவேயில்லை! ஏமாற்றமாக இருந்தது!!
மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.
அந்தோ பரிதாபம்! அவனின் எந்தவொரு அழைப்பையும், அவள் ஏற்கவில்லை!!
‘சரி, அவளது பாட்டிக்கு அழைக்கலாம்’ என்று நினைத்து, அழைத்துப் பார்த்தான். அவர்தான், எதிலும் கவனம் இல்லாமல் இருக்கிறாரே? ஆதலால், அழைப்பை ஏற்கவில்லை.
இன்னும் கோபத்தில் இருக்கிறார் என்று, இவன் நினைத்துக் கொண்டான்!
‘சரி! வேறு யாரிடமாவது பேசிப் பார்க்கலாம்” என்று நினைத்து, கிரியை அழைத்துப் பார்த்தான்.
கிரி அழைப்பை ஏற்றவுடன், “எதுக்கு ஃபோன் பண்ண?… என் அம்மாவை வீட்ட விட்டு வெளியே போகச் சொல்லுவியா? அவங்க யாருன்னு தெரியுமா?… உன்மேல சரியான கோபத்தில் இருக்கேன். வீட்டுப் பக்கம் வந்திடாத! இனிமே ஃபோனும் பண்ணிடாத” என்று கோபப்பட்டுப் பேசி, அழைப்பைத் துண்டித்தார்.
ஒரு மகனாக அவர் பேசுவதில் நியாயம் இருக்கிறது என நினைத்தாலும், ‘ஏன்டா அழைத்தோம்?’ என்ற எண்ணமும் வந்தது!
இதற்கிடையே… பிரவீன் அலைபேசியில் அழைத்து, ‘அன்று, பாவை உன்னிடம் பேசச் சொன்னாள்’ என்று சொல்லியிருந்தான்.
கஷ்டமாக இருந்தது! ஆனாலும், ‘இங்கிருக்க பிடிக்கவில்லை’ என்று சொன்னவள், ‘ஏன், தன்னிடம் பிரவீனைப் பேசச் சொன்னாள்?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
மேலும், மீண்டும் பாவையின் அலைபேசி எண்ணுக்கே அழைக்க ஆரம்பித்தான்.
அதன்பிறகு,
அஞ்சன இரவு வரை… அவள் அலைபேசி எண்! அவளுக்கான அழைப்புகள்! அவளில்லா அரற்றல்கள்! இவை மட்டுமே, பாண்டியனுக்கு!!
இரவு நேரம், வேணிம்மா வீடு
எதற்காகவும் அறையை விட்டு வெளியே வராமல்… மூன்று நாட்கள் அறைக்குள்ளே அடைபட்டிருந்தார்கள், பாவையும் வேணிம்மாவும்!
அன்றைய இரவில்…
மெத்தையில் இருந்து, வேணிம்மா மெல்ல எழுந்தார்.
பாவை, பால்கனியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘இன்னும் உறங்காமல் என்ன செய்கிறாள்?’ என்ற எண்ணம் வந்தது. இருந்தும் அவள் நிலைமை புரிந்தது.
சற்று நேரம் வீட்டிற்குள்ளே நடந்து வரலாம் என நினைத்து, அறையை விட்டு வெளியே வந்தார்.
அனைவரும் தூங்கச் சென்றுவிட்டார்கள் போல! வீட்டிற்குள் ஒரே நிசப்தம்!!
இரவு விளக்கின் ஒளியில்… சுவரைப் பிடித்துக் கொண்டே, மெதுவாக எட்டுகள் எடுத்து வைத்தார். வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த, தன் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தார்.
அப்படியே வந்தவர், கிரியின் அறை வாசல் வரை வந்துவிட்டார்.
‘இங்கே வந்திட்டேனா?’ என நினைத்தவர், மீண்டும் வரவேற்பறைக்குச் செல்லத் திரும்பினார். அக்கணம், கிரியின் அறையில் பேச்சு சத்தங்கள் கேட்டது. அதிலும் பாவையின் பெயர் காதில் விழுந்தது.
‘அவளைப் பற்றி, இவன் என்ன பேசுகிறான்?’ என்ற கேள்வி வந்ததும், அறையின் வாசலில் நின்றுவிட்டார்.
அறையின் உள்ளே…
“ப்பா, பாவை ரெண்டு நாளா ப்ராக்டிஸ் எதுவும் பண்ணவேயில்லை” – கௌசியின் குரல்.
“ம்ம்” – கிரி.
“அவளோட லைஃப் நினைச்சி ரொம்ப பீல் பண்றா போல!?” – மீனாட்சி.
“ம்ம்” – கிரி.
“இந்த மாதிரியே இருந்தான்னா, கச்சேரி அன்னைக்கு நல்லா பாட முடியாது-ப்பா” – கௌசி.
“விடும்மா! அவ நல்லா பாடினா என்ன? பாடலைன்னா என்ன?” – கிரியின் குரல் அத்தனை அலட்சியத்துடன் வெளியே கேட்டது!
“அது சரிதான்!” – மீனாட்சி.
“இல்லை மீனாம்மா! ரெண்டு பேரும் சேர்ந்து பாடறப்போ… அவ நல்லா பாடலைன்னா, எனக்கும் அஃபக்ட் ஆகும்-ல?” – கௌசியின் குரலில் அவளுக்கான சுயநலம் அப்பட்டமாகக் கேட்டது!
“ரெண்டு கச்சேரி பார்ப்போம் கௌசி. அதுக்கப்புறமும் நல்லா பாடலைன்னா… பாட்டிகிட்ட அதையே காரணமா சொல்லி, அவளோட இம்ஃபார்ட்டன்ஸ் கம்மி பண்ணிடு”
“இதுகூட சரிதான்” – மீனாட்சி.
“அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நான் தனியா பாட ஆரம்பிச்சிடனும். சரியா-ப்பா?”
“ம்ம்ம்!” என்றவர், “அப்படியே அவ பாடாம இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்” என்றார்.
“அப்புறம் ஒருநாள்… நான், கிருஷ்ணாம்மாவோட இசை வாரிசா மாறிடுவேன்!!” – கௌசியின் குரலில் ஆசை அதிகப்படியாக இருந்தது.
“கண்டிப்பா! கௌசல்யா கிரிதரன்… சங்கீத கலாநிதி கிருஷ்ணவேணியோட இசை வாரிசு!!” – கிரியின் குரலில் கொஞ்சம் கம்பீரம்! கொஞ்சம் கனவு! கொஞ்சம் பெருமை! நிறைய பேராசை!!
“அவ வாழ்க்கை, இப்படியானது நமக்கு ஒருவிதத்தில நல்லதுதான் போல!?” – மீனாட்சி.
“ம்ம்” – கிரி.
“ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை? சரியாகுமா?” – மீனாட்சி.
“தெரியலை! ஆனா, அவன் மேல சரியான கோபத்தில் இருக்கேன்! எவ்வளவு தைரியம் இருந்தா, நம்ம அம்மாவை வெளியே போகச் சொல்லியிருப்பான்! கண்ணு முன்னாடி வந்தான்னா, அவ்வளவுதான்! …..” என்றபடியே கிரியின் கடுங்கோபப் பேச்சுக்கள் தொடர்ந்தன!
அறையின் வெளியே…
கேட்டதை ஜீரணிக்க முடியாமல்… வேணிம்மா… மெதுவாகச் சுவரைப் பிடித்துக் கொண்டே நடந்து, பூஜை அறைக்குச் சென்றார்.
இங்கே… வேணிம்மாவைத் தவிர இன்னொரு நபராலும் அறைக்குள் பேசியது கேட்கப்பட்டிருந்தது. அந்த நபர் சங்கர்!
பூஜை அறைக்குள்…
தன் பிள்ளைகளைப் பற்றித் தெரியும். இருந்தும், இப்படிப் பேசிக் கொள்வார்களா? என்ற வருத்தத்தில்… கோபத்தில்…
இவர்களுக்குப் பாவை மீது அன்பு கிடையாது என்று தெரியும். ஆனால், இவ்வளவு வெறுப்பைச் சுமந்து கொண்டு இருக்கிறார்களா?
இவ்வளவு மட்டமாக யோசிப்பார்களா? இசை இருக்கும் இடத்தில் எப்படி இவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்கள் இருக்க முடியும்?
கௌசல்யா!? இவள் ஏன் இப்படி இருக்கிறாள்? இசை இவளுக்கு மட்டும் சொந்தமானதா? மற்றவர்கள் பாடுவதை வைத்து, ஏன் தன் திறமையைத் தீர்மானிக்கிறாள்?
இசை வாரிசாமே? சொத்துக்கு வேண்டுமானால் வாரிசு இருக்க முடியும். திறமைக்கு எப்படி வாரிசு இருக்க முடியும்??
இப்படி இன்னும் நிறைய கேள்விகள் மற்றும் மனக் குமுறல்கள், இறைவனின் முன்னே வைத்தார்.
தன் குடும்பத்தினரைப் பற்றி நினைக்க நினைக்க மூச்சு வாங்கியது.