ISSAI,IYARKAI & IRUVAR 11.2
ISSAI,IYARKAI & IRUVAR 11.2
இசை… இயற்கை மற்றும் இருவர்
அத்தியாயம் – 11
வரவேற்பறையில்…
கிரி, கௌசி, மீனாட்சி… இன்னும் பேசிக் கொண்டுதான் இருந்தனர்.
பாவையும், சங்கரும்… அங்கு வந்தனர். சங்கர், கொஞ்சம் ஓரமாக நின்று கொண்டான். பாவை, கிரியின் முன்னே சென்று நின்றாள்.
பாவை வந்து நிற்கிறாள் என்று தெரியும். இருந்தும் தலையைக் குனிந்து கொண்டு… கிரி அலட்சியமான உடல் மொழியுடன் இருந்தார்.
“என்ன வேணும்? எதுக்கு இப்படி வந்து நிக்கிற?” என்று கௌசி கேட்டாள்.
“கிரி மாமா! நான் உங்ககூட பேசணும்” என்றாள், நேராகக் கிரியைப் பார்த்து!
அதன்பிறகும், “அப்பாகிட்ட என்ன பேசணும்?” என்று கௌசிதான் கேட்டாள்.
“நான் கிரி மாமாகிட்டத்தான் பேசணும்” என்று உறுதியாக நின்றாள், பாவை.
“ஏய்! உனக்கு என்னாச்சு?” என்று மீனாட்சி கேட்டார்.
மீனாட்சியைப் பார்த்து, “எனக்கு எதுவும் ஆகலை” என்றவள், “இவங்கதான என் கச்சேரி எல்லாம் பார்த்துக்கிறாங்க! அப்போ, நான் இவங்ககிட்டதான் பேசணும்” என்று சொன்னாள்.
கச்சேரி என்றதும்… கிரி, மெதுவாகத் தலை நிமிர்ந்தார். ஆனால், எதுவும் பேசவில்லை.
சங்கர், ‘அவளால் முடியும்வரை, அவள் பேசட்டும்’ என்பது போல், பாவையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னைப் பார்க்கிறார் என்று தெரிந்ததும், “கிரி மாமா” என்று அழைத்தாள், பாவை.
“என்ன பேசணும்?” என்றார்.
“நான் இனிமே கௌசி கூடச் சேர்ந்து கச்சேரி பண்ண மாட்டேன்” என்று பாவை சொன்னவுடனே, கிரி சோஃபாவில் இருந்து விருட்டென எழுந்துவிட்டார்.
கௌசி, மீனாட்சி… இருவரும் அதிர்ச்சியுடன் பாவையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சொல்ற?” என்று கேட்டார், கிரி கடுமையுடன்!
“நான் தனியாத்தான் கச்சேரி பண்ணுவேன்! கௌசி கூடச் சேர்ந்து பண்ணப் போறதில்லை” என்றாள் தெளிவான உச்சரிப்புடன்! தீர்க்கமான பார்வையுடன்!
“ஏன்?”
“நானும் என் விருப்பப்படி பாட வேண்டாமா?” என்று கேள்வியாகக் கேட்டவள், “அதான் தனியாவே பாடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.
கௌசிக்கும் கோபம். ‘தான் இவளுடன் சேர்ந்து பாடப்போவதில்லை’ என்று சொல்வதற்கு முன், ‘இவள் சொல்லிவிட்டாளே?’ என்ற கோபம். அதனால், “தனியா பாடறது ஈஸின்னு நினைச்சியா?” என்று கேட்டாள், இறுக்கமான முகத்துடன்!
பதில் சொல்ல, பாவை கொஞ்சம் யோசித்தாள். பின், “பாடறது எனக்கு கஷ்டம் இல்லை” என்றாள்.
கௌசியின் முகம் ஆற்றாமையை வெளிப்படுத்தியது. அவளுக்கு ஆதரவாக… மீனாட்சி, அவளருகில் வந்து நின்றுகொண்டார்.
மகளின் நிலை கண்ட கிரி, “உனக்கு கச்சேரி வாய்ப்பு பத்தி என்ன தெரியும்?” என்று நக்கலாகக் கேட்டார், பாவையிடம்!
சட்டென மனதில் நம்பிக்கை குறைவது போல் இருந்தது, பாவைக்கு. அகத்தில் நினைப்பதை, அவளது முகம் பிரதிபலித்தது.
பாவையைப் பார்த்த சங்கர்… அவள் ‘இதை உணர்ந்து கொள்வாளா?’ என்று தெரியாது. இருந்தும்… அவளுக்கு ஆதரவாக, அவள் அருகில் வந்து நின்றான்.
இது எதையும் கண்டுகொள்ளாமல் கிரி தொடர்ந்தார்.
“ஒரு கச்சேரிக்கு எவ்வளவு பணம் தர்றாங்க? அதுல பக்க வாத்தியங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்? என்னென்ன சபா இருக்கு? அதுல இருக்கிற மெம்பெர்ஸ் யாரு? ஸ்பான்சர்-னா என்ன?? மத்த கிளாசிக்கல் சிங்கர்ஸ் யாரு? அவங்களோட காண்டாக்ட் இருக்கா? இல்லை, ஏதாவது ஒரு சபா நம்பராவது தெரியுமா?” என்று நீளமாகப் கேள்வி கேட்டு, அவள் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கினார்.
இதுவரை இதெல்லாம் கிரிதான் பார்த்து வந்தார். பாடுவது மட்டுமே அவளது வேலை. ‘இதில் எதுவுமே தனக்குத் தெரியாதே!’ என்ற பயம், அவள் கண்களில் தெரிந்தது. நம்பிக்கை முற்றிலும் தொலைவது போல் இருந்தது.
அக்கணம், “தெரியலைன்னா, தெரிஞ்சிக்குவா” என்று கிரியைப் பார்த்து சொன்ன சங்கர், “அப்படித்தான தேனு” என்றான்.
‘என்ன நினைத்தாளோ?’… உடனே, “ஆமா, தெரியலைன்னா கத்துக்கிடுவேன். ஆனா, தனியாத்தான் பாடப் போறேன்” என்றாள் பாவை, மீண்டும் கிரியின் கண்களைப் பார்த்து!
இதற்கிடையே, “என்ன-டா அப்பாவையே எதிர்த்து பேசிறியா?” என்று மீனாட்சி சங்கரைப் பார்த்துக் கேட்டார்.
“அவன் அப்படித்தான்” என்றவர், “நம்ம அம்மாவுக்கு இப்படி ஆனதுக்கு காரணமாவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கான்” என்றார் கிரி.
“இது என்ன புதுசா சொல்றீங்க?” என்று பாவை அவசரமாகக் கேட்டாள்.
“புதுசெல்லாம் ஒண்ணுமில்லை!” என்ற கிரி, “உன்னை நினைச்சிக் கவலைபட்டுத்தான, அம்மா மூணு நாளா படுத்து இருந்தாங்க. அந்தக் கவலையிலதான், அவங்களுக்கு இப்படி ஆகிடுச்சு” என்றார்,
“இல்லை! இல்லவே இல்லை! அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்று கத்திச் சொன்னாலும், ‘அப்படியும் இருக்குமோ?’ என்று மனம் கவலை கொண்டது, பாவைக்கு! அது, அவள் உடல்மொழியில் தெரிந்தது!!
‘எதைப் பற்றிப் பேச வந்தால், இவர்கள் எதைப் பற்றி பேசி… அவளைத் திசை திருப்புகிறார்கள்?’ என்று சங்கருக்குக் கோபம் வந்தது.
“அப்பா” என்று மெதுவாக அழைத்தான் சங்கர்.
‘என்ன?’ என்பது போல் அனைவரும் பார்த்தனர்.
“நீங்க சொல்ற மாதிரி இருக்கலாம்! தேனு-வ நினைச்சி பாட்டி கவலைப்பட்டிருப்பாங்க! ஆனா, அதுமட்டும்தான் காரணம்னு சொல்ல முடியாது” என்றான் பொதுவாக!
‘ஏன்?’ என்பது போல் பார்வை, அங்கே நின்ற அனைவரிடமும்!
“வீட்ல இருக்கிறவங்க பேசுற சில விஷயங்கள்கூட, அவங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கலாம்” என்றான் பூடகமாக!
“என்னடா சொல்ற?” என்றார் கிரி!
“அன்னைக்கு நைட்டு, நீங்க பாவையைப் பத்தி பேசினதைப் பாட்டி கேட்டுட்டாங்க” என்று உண்மையைச் சொன்னான்.
“அது அதெப்படி…” என்று தடுமாறினார்.
“எப்படின்னா? நானும் கேட்டேன். பாட்டி கேட்டதை, நான் பார்த்தேன்”
“இல்லை…” என்று சொல்லும் போதே,
“கிருஷ்ணாம்மா வாரிசு” என்று மட்டும் சொன்னான்.
அவனின் இந்த இரண்டு வார்த்தைகள்… திடிரென பாவையின் பேச்சுக்கள்… கிரி, மீனாட்சி, கௌசி… மூவரையும், அவன் சொல்வதை நம்பச் சொன்னது. மேலும்,’கிருஷ்ணாம்மா, தாங்கள் பேசியதைக் கேட்டிருக்கிறார்’ என்ற விடயமே, மூன்று பேரையும் அசௌகரியமாக உணரச் செய்தது.
“அப்பா” என்று அழைத்தவன், “பாட்டி ஏற்கனவே உடம்பு சரியில்லாதவங்க. நடந்த விஷயம் அவங்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தியிருக்கும். அவ்வளவுதான்! இந்தமாதிரி சம்பந்தப் படுத்திப் பேசாதீங்க” என்றான்.
கிரி, கோபத்துடன் பாவையைப் பார்த்தார். பின், “தனியா பாடு! நல்லா பாடு” என்றவர், “பார்க்கிறேன், உன்னால ஒரு கச்சேரியாவது பண்ண முடியுதான்னு?” என்று சவலாகச் சொல்லிவிட்டு, அவர் அறையை நோக்கிச் செல்லப் போனார்.
தன்னையும் மீறி, “கிரி மாமா” என்று பாவை அழைத்ததும், கிரி நின்று திரும்பினார்.
“நானும் சொல்றேன். கண்டிப்பா ஒரு நாள் தனியா கச்சேரி பண்ணுவேன்” என்றாள் சாவலாக!
“நீ கச்சேரி பண்ணு… இல்லை, பண்ணாம போ! எனக்கு அதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை” என்றவர், ” ஆனா, உனக்குத்தான் கல்யாணம் பண்ணி வச்சாச்சில. இனிமே நீ இங்கே இருக்காத. கிளம்பு” என்று சொல்லிவிட்டு, அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமில்லாமல், அறைக்குச் செல்லப் போனார்.
அப்பொழுது, ‘பாட்டிக்கு, தான் பேசியது தெரியும்’ என்கின்ற விடயத்தைக் கேட்டு அசையாமல் நிற்கும் கௌசியைப் பார்த்தவர்… “கௌசி, அப்பா இருக்கேன்-டா!” என்று அவளது தலை வருடினார்.
மேலும், “இந்த வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. கிருஷ்ணாம்மா-ங்கிற பேருக்கு ஒரு மரியாதை இருக்கு. உனக்கு கண்டிப்பா சான்ஸ் வரும்” என்று சொல்லி, அவளைத் தோளோடு தோள் அணைத்தவாறு அழைத்துச் சென்றார்.
அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பாவையைப் பார்த்து, “அதான் கிரி சொல்லிட்டான்-ல, கிளம்பு” என்று சொல்லிவிட்டு, மீனாட்சியும் சென்றுவிட்டார்.
அவர்கள் மாறப்போவதில்லை! மாற்றுவதும் அவள் வேலையல்ல! மேலும், அதை நினைத்து வருந்துவதும் தேவையில்லை!
ஆனால், அவளது இசை வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது! அதை நினைத்து மகிழ்ந்து கொள்வதே நல்லது!!
சற்று நேரத்தில்…
வேணிம்மா அறைக்குள் வந்திருந்தாள்.
“தேனு” என்று அழைத்துக் கொண்டே, மீண்டும் அறைக்குள் வந்தான் சங்கர்.
“என்ன?” என்பது போல் பார்த்தாள், புடவைகளை எடுத்து வைத்துக் கொண்டே!
“அப்பா சொல்றதை நினைச்சிக் குழம்பிக்காத. கிருஷ்ணாம்மா-ங்கிற பேருக்கு ஒரு மரியாதை இருக்கு! இல்லைன்னு சொல்லலை. ஆரம்பத்தில, அதுக்காக உங்க ரெண்டு பேருக்கும் சான்ஸ் வந்திருக்கலாம். ஆனா, அதுக்கப்புறம் வந்த வாய்ப்பெல்லாம் உங்களோட திறமைக்காகத்தான் வந்திருக்கும்”
‘திறமை மேல் நம்பிக்கை வை’ என்று அவன் சொன்னதை, உள்வாங்கிக் கொண்டாள்.
“அப்படியே பாட்டி பேர வச்சித்தான் சான்ஸ் வருதுன்னா, எங்களுக்கும் சான்ஸ் கிடைச்சிருக்கும்-ல??” என்று கேள்வி கேட்டான்.
அவன் சொல்வது, ‘சரிதான்’ என்று தோன்றியது.
“கண்டிப்பா… இந்த வீட்டுக்காக, அப்பாவோட சப்போர்ட் இருக்கிறதுனால… கௌசிக்கு கொஞ்சம் சீக்கிரமா சான்ஸ் கிடைக்கலாம். அதுக்கு அர்த்தம் உனக்கு கிடைக்காம போகாதுன்னு இல்லை”
அந்த வார்த்தைகள், அவளுக்கு நம்பிக்கை தந்தன.
“எனக்குத் தெரிஞ்ச சபா மெம்பெர்ஸ், கச்சேரி நடத்திறவங்க காண்டாக்ட்ஸ் கொடுக்கிறேன். நீ சான்ஸ் கேட்டுப்பாரு”
நன்றியோடு அவனைப் பார்த்தாள்.
“இன்னொன்னு! உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற போட்டியில, பாட்டியோட பேரைக் கெடுத்திடக் கூடாது” என்றும் சொன்னான்.
அவள் முகம் ஒருமாதிரி மாறியது.
அதைக் கண்டவன், “நான் உனக்கு மட்டும் சொல்றேன்-ன்னு நினைக்காத! அப்பாகிட்ட சொல்ல முடியுமான்னு தெரியலை. ஆனா கண்டிப்பா, கௌசிகிட்டயும் சொல்லுவேன்” என்றான்.
‘ம்ம்’ என்று தலையைசைத்து, மீண்டும் எடுத்து வைத்தாள்.
“நான் கொண்டு போய் விடவா?” என்று கேட்டான்.
‘வேண்டாம்’ என்று தீர்க்கமாக மறுத்துவிட்டாள்.
“சரி கிளம்பு” என்று சொல்லித் திரும்பப் போனவனை, “ஒரு நிமிஷம்” என்று கூப்பிட்டு நிறுத்தினாள்.
‘சொல்லு’ என்பது போல் என்றான்.
“தேங்க்ஸ்” என்றவள், எதையோ சொல்லத் தயங்கி நின்றாள்.
‘என்ன சொல்லப் போகிறாள்?’ என்பது போல், அவன் நின்று கொண்டிருந்தான்.
“நீங்க… உங்க லைஃப பார்க்கணும்” என்றாள்.
எதுவும் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான். ‘ஏன், எதுவும் சொல்லவில்லை?’ என்று எண்ணி குனிந்து கொண்டாள். அறையின் வாசலுக்குச் சென்றவன், கதவில் லேசாகத் தட்டினான். நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆல் தி பெஸ்ட் பாவை” என்று சொல்லவிட்டுச் சென்றான். அவனது ‘பாவை’ என்ற ஒற்றை அழைப்பு, பாவைக்குள் ஓராயிரம் நிம்மதியைக் கொண்டு வந்தது!
இனி, சங்கர்?
என்றுமே கண்ணியமாகத்தான் காதலை வெளிப்படுத்தியவன். எந்த நிலையிலும், அவன் அந்தக் கண்ணியம் தவறவில்லை. மேலும்… கொஞ்சம் அவகாசம் வேண்டும், அவனது அன்பை மறக்க! மடைமாற்ற!!
இங்கே, சங்கருக்கு பாவை மேல் இருந்தது உண்மையான அன்பு! அது… அவளது கனவை நோக்கி, ஒரு அடி அவளை முன்னே நகர்த்தியிருக்கிறது!!
இனி, பாவை?
கடகடவென எடுத்து வைத்தாள். பத்து நிமிடங்களுக்குப் பின்னர் வந்த முதல் நொடியில், இந்த வீட்டிற்கும் அவளுக்கும் இருந்த சம்பந்தம் முடிந்தது!
ஆம்! வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்!!
முட்டுக்காடு கடலின் பின்-நிலை-நீர் பகுதி… (Sea Back Water)
வெயிலால் வெளிறிப் போயிருந்த வானம்! அதைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் காட்சிப்பிழையுடன், உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள்!
அதனையடுத்து… நேர்கோடாய் தெரியும் தார் சாலை, அதில் புள்ளிகளாய் வாகனங்கள்!
அதனையடுத்து… மத்தியான வெயிலைப் போர்த்தியிருக்கும் கடலின் பின்-நிலை-நீர்ப்பரப்பு!
தெளிவில்லா பின்னணி காட்சியாக இவைகள்!
நீர்ப்பரப்பின் ஓரத்தில், ஒரு பழைய படகு! நீரின் ஆழத்தில் ஆங்காங்கே நிற்கின்ற குச்சிகள்!
துள்ளியமான காட்சியாக இவை இரண்டும்!!
சட்டென ஒரு ‘கிளிக்’!
கேமரா வழியே எடுத்ததைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான், சிவபாண்டியன். அந்தநொடி, அலைபேசியின் கூப்பிட்டது.
கேமராவிலிருந்து கவனத்தை எடுக்காமல், பேண்ட் பைக்குள் இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.
திரையில் ‘ஹனி’ என்ற பெயர்! அவ்வளவுதான்!! அதற்கு மேல் அவன் கவனம் மொத்தமும், அவள்தான்!
“ஹனி” என்றான் அழைப்பை ஏற்றுக் கொண்டே! அத்தனை அவசரம்!! அத்தனை அவசியம் கூட!!
அமைதி மட்டுமே அவளிடம்!
“ஹனி பேசு! ஏதாவது பேசு? எப்படி இருக்கிற? ஏன் ஃபோன் அட்டென் பண்ணலை?” என்றவன் குரலில் கொஞ்சம் பதற்றம்! கொஞ்சம் பரிதவிப்பு! நிரம்ப பாசம்!!
“ஃபிரீயா இருக்கீங்களா?” என்று ஆரம்பித்தாள்.
“ஏன் இப்படிக் கேட்கிற? எதுனாலும் சொல்லு பாவை!” என்றான் அவஸ்த்தையாக!
“எனக்கு உங்களைப் பார்க்கணுமே?” என்றாள் மெல்லிய குரலில். மேலும், “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே?” என்றாள், அதைவிட மெல்லிய குரலில்.
“எங்கே வர? எப்போ வரணும்? நீ வீட்டுக்கு வர்றியா? இல்லை, நான் வந்து கூப்பிட்டுக்கவா?” என்றவன் குரலில் வேகம், வேகம் மட்டுமே!
“பேசணும்” என்றாள் ஒற்றை சொல்லில்!
“பேசலாம் பாவை! ஆனா, என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான், அவள் பேசும் விதத்தின் பேதமை கண்டு!
“ஒண்ணுமில்லை! நீங்க வாங்க!” என்று மட்டும் சொன்னாள்.
“இப்போ நீ எங்க இருக்கிற பாவை!?” என்றவன் குரலில் ஏதோ ஒரு இயலாமை!
“வேணிம்மா வீட்டுக்கு வெளியே நிக்கிறேன்!” என்றவள், “வர்றீங்களா?” என்று கேட்டாள்.
“வர்றேன் பாவை! ஆனா, நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ நம்ம வீட்டுக்குப் போயேன். நான் வந்திடுறேன். இப்படி நிக்க வேண்டாமே?” என்று கேட்டுப் பார்த்தான், அவளுக்குக் காத்திருப்பது பிடிக்காது என்று புரிந்து!
ஓரிரு நொடிகள் அமைதி மட்டுமே அவளிடம்!! பின், “பரவால்ல! வெயிட் பண்றேன்” என்றாள் காத்திருப்பதில் குறையில்லை என்பது போல்!
“சரி வர்றேன்!” என்று அழைப்பைத் துண்டித்தான்.
‘என்ன நடந்திருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே… கேமரா, அதன் ஸ்டாண்ட் மற்றும் பைகள் என அனைத்தையும் எடுத்து காரில் வைத்தான்.
மஹிந்திரா தாரில்… ஒரு அதிவேக பயணத்திற்குப் பின், மனம் முழுதும் நிரம்பியவள் நிற்கும் சாலைக்குள் வந்தான்.
வேணிம்மா வீட்டின் சாலை…
அந்தச் சாலையின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, பாவை முன்னே வந்து நின்றான், சிவா!
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலாயிற்று, மனைவியைப் பார்த்து! அவளுடன் பேசி!
பார்த்தான்!
ஆனந்தங்கள் தொலைத்த முகம்! மேலும், அது நிறைய அழுதிருக்கும் போல! மனதின் நலிவு, உடல் மெலிவாய் வெளிப்பட்டிருந்தது! ‘சூழ்நிலையைக் கொஞ்சம் சரியாகக் கையாண்டிருக்கலாமோ?’ என்ற எண்ணம் வந்தது, சோர்ந்து போயிருக்கும் சரிபாதியைப் பார்க்கையில்!
இமைதட்டாமல் பார்த்ததில், இருவிழியின் கருவிழிகள் களைப்படைந்தன!
ஆம்! களைப்படைந்தன! காரணம், கவலையில் தோய்த்தெடுத்த அந்த முகம்!
சுருக்கமாக, சிறு பிரிவினால் மனைவியைப் பாராமல் தவித்துப் போயிருந்த கணவனுக்கு… தண்ணீருக்குப் பதில் தாகத்தை நீட்டுவது போல் இருந்தது, அவள் தோற்றதைப் பார்த்தபின்!!
மனைவிக்கு?!!