ISSAI,IYARKAI & IRUVAR 13.2

ISSAI,IYARKAI & IRUVAR 13.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் -13 


“வெயிட் பண்ணுங்க! சமைச்சி முடிச்சிடுறேன்” என்று சொல்லி, சமயலறைக்குள் நுழையப் போனாள்.

“என்னது?! இனிமேதான் சமைக்கப் போறியா?” என்று கேட்டு, குறுக்கே வந்து நின்றான்.

“ம்ம்ம்” என்றவள், “கடகடென்னு செஞ்சிடுவேன்” என்றாள்.

“செம்ம பசி பாவை! நீ சமைச்சிட்டு கூப்பிடுறியோன்னு நினைச்சேன்” என்றான் சலிப்பாக!

“அரைமணிநேரம்தான்” என்றாள் சமாதானமாக!

“ப்ச் என்ன பாவை?” என்று அலுத்துக் கொண்டான்.

“ஒரு அரைமணிநேரம்… என்கூட இருக்க முடியாதா?” என்று கேட்டு, அவன் பேச இடம் கொடுத்தாள்.

“நான் அப்படிச் சொன்னேனா?” என்றவன், “ஆயுஸுக்கும் உன்கூட இருக்க நான் ரெடி” என்று, கிடைக்கும் இடத்தில் அவன் காதலை அவளிடம் கடத்தப் பார்த்தான்.

“ஏன் சாப்பிடச் சொன்னோம்-னு நினைக்கிற மாதிரி பேசாதீங்க?” என்று சொல்லி, திரும்பி நடக்கப் போனாள்.

அவள் கைப்பிடித்து நிறுத்தி, “ஏன்டா சாப்பிட ஒத்துக்கிட்டோம்னு நினைக்கிற மாதிரி சமைச்சிடாத” என்று திருப்பித் தந்தான்.

அவன் கையை உதறிவிட்டு, உர்ரென்று பார்த்தாள்.

“சரி சரி பேசலை! நீ குக் பண்ணு, நான் கொஞ்சம் ரெப்பிரஷ் பண்ணிக்கிறேன்” என்று சமாதானமாகச் சொன்னதும், ‘சரியென’ சமயலறைக்குள் சென்றாள்.

அதன் பின்,

பாண்டியன் வரும் வரை, காய்கறி நறுக்குதல்! வெங்காயம் வெட்டுதல்! தேங்காய் அரைத்தல்! இதுபோன்ற வேலைகள் மட்டுமே, பாவைக்கு!!

அதன் பின்பு… “ஏதாவது ஹெல்ப்?” என்று கேட்டு, அவளருகில் வந்து நின்றான், பாண்டியன்.

‘வேண்டாம்’ என்பது போல் தலையாட்டியதும், பாத்திரங்கள் அதிகம் இல்லாததால் சமையலறைத் திண்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.

இடைஞ்சல் இல்லாமல் இரண்டு பேர் நிற்க முடியும் என்ற அளவுகளுடைய சமையலறை! அடுப்பின் பக்கமிருந்த சின்ன சன்னல் வழியாக, தெருவில் சிறுவர்கள் விளையாடும் சத்தம் வந்து கொண்டிருந்தது!!

எக்கிக் கொண்டு… சன்னலின் வழியே தெருவைப் பார்த்தவன், எதார்த்தமாக திரும்பும் பொழுது, மடமடவென வேலை செய்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.

மெல்லிய கருப்பு ஜரிகை வைத்த சந்தன நிற பட்டுப்புடவை! ஏனோதானோ என்று ஒரு கொண்டை! மரிக்கொழுந்து மல்லிகையும் சேர்ந்து கட்டியிருந்த சிறிய பூச்சரம்!

திருத்தப்படாத புருவங்கள்! தடித்திருந்த ஒன்றிரண்டு பருக்கள்! சாயங்கள் இல்லா உதடுகள்! கூடுதலாக, நெற்றியில் மெல்லிய சந்தனக்கீற்று!

அழகாய் தெரிந்தாள்! ரசித்துப் பார்த்தான்!!

அதே ரசனையுடன், “கச்சேரி சான்ஸ் தேடினியா??” என்று கேட்டான்.

“ம்ம்ம்” என்றவள், “கோயில்-ல, கொஞ்சம் பெரிய பூஜை… சின்ன சின்ன பங்க்ஷன் நடக்கிறப்போ, கச்சேரி நடத்துவாங்க. அங்கே பாடுறதுக்கு கேட்டிருக்கேன்” என்று சொன்னாள்.

“நீ சபா-லதான பாடணும்னு சொன்ன? “அப்புறம் இது எதுக்கு?” என்று கேட்டான்.

“சபால பாடறதுக்கும் சான்ஸ் கேட்டிருக்கேன்” என்றாள்.

“அப்புறமென்ன??!”

“வேணிம்மா வீட்ல இருக்கும்போது சான்ஸ் வர்றது ஈசி!”

“சரி இப்போ!”

“நான் இங்க இருக்கிறது யாருக்குத் தெரியும் சொல்லுங்க!? எப்படி சான்ஸ் வரும்?”

“என்னமோ கச்சேரியே பண்ணாத மாதிரி சொல்ற? இதுக்கு முன்னாடி கச்சேரி பண்ணிருக்கியே?”

“நீங்க சொல்றது சரிதான்! என்னைத் தேடி வர்றவங்களும் இருப்பாங்க. ஆனா, எங்கே போவாங்க? யார்கிட்ட கேட்பாங்க!?” என்றவள், “கிரி மாமாகிட்டதான?! அவரு என்கிட்ட சொல்வாரா?” என்று கேட்டாள்.

“ஓ! இது வேற இருக்கா?”

“இப்பவே சில இடத்தில கேட்கிறப்போ, ‘கிரிகிட்ட பேசிக்கிறோம்னு’ சொன்னாங்க. ‘இல்லை, என்கிட்டயே பேசுங்கன்னு’ சொல்லி, கான்டக்ட் நம்பர் கொடுத்திருக்கேன்! பார்க்கலாம்?”

“ஃபைன்” என்றவன், “கோயில்-ல பாடறது எதுக்கு?” என்று கேட்டான்!

“சபா வச்சிருக்கிறவங்களோட கான்டக்ட் இருக்கிறவங்க… ஸ்பான்ஸர் கொடுக்கிறவங்க… கச்சேரி ஏற்பாடு பண்றவங்க… இப்படி யார்னாலும் வருவாங்க. அவங்க மூலமா சான்ஸ் கிடைக்கலாம் இல்லையா??”

“ஓ!”

“சான்ஸ் தேடியும் போகணும்! அதே சமயம் சான்ஸ் தேடி வர்ற மாதிரியும் பார்த்துக்கணும்! இப்படித்தான் யோசிக்கிறேன்!!”

“ம்ம்ம்”

“இன்னொரு ஐடியா இருக்கு! சரியா யோசிச்சிட்டு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தவள், ஓரவிழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே… “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்! கேட்கலாமா?” என்று தயக்கமாகக் கேட்டாள்.

“கேட்கணும்னா கேளு! இது எதுக்கு பெர்மிஷன்?” என்றான் தாராளமாக!

“அன்னைக்கு வேணிம்மா உங்ககிட்ட நடந்துக்கிட்டதுக்கு, உங்களுக்கு கோபமே இல்லையா? என்கூட ரொம்ப நார்மலா பேசறீங்க?!” என்று கேட்டுவிட்டு, மீண்டும் காய்கறி நறுக்க ஆரம்பித்தாள்.

“அன்னைக்கும்… அதுக்கு அடுத்து ஒரு ரெண்டு நாளும் ஒருமாதிரி இருந்தது. அவ்வளவுதான்! அதுக்கடுத்து, அன்னைக்கே சொன்னேனே! உன்னைப் பத்திதான் யோசிச்சேன்”

அவள், “ஓ!” என்றதும், “உனக்கு என்மேல கோபம் இருக்கா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்” என்ற குரல் நெடிலாய் ஒலித்தது! அது, அவள் கோபத்தின் நெடியைக் காட்டியது!!

மிகச் சாதாரணமாக, “சரியாயிடும்” என்றவன், “உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.

“என்ன?!”

“அன்னைக்கு யாரும் எதையும் புரிஞ்சிக்கிட்டு பேசலை! ஸோ, அதைப் பத்தி பேச வேண்டாம்! அது முடிஞ்சி போனது, திருப்பி அதை எடுக்காத!” என்றான் கண்டிப்பான குரலில்!

காய்கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு, கணவனைப் பார்த்தாள்.

“அன்ட் இன்னோன்னு, முக்கியமானதும்கூட!” என்றதும், “சொல்லுங்க” என்று கேட்டாள்.

“உன் பாட்டியும் என் அம்மாவும், அன்னைக்கு அப்படி நடந்துகிட்டதுக்கு காரணம், நீயும் நானும்தான்! நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு ஒழுங்கா இருந்திருந்தா, அவங்க ஏன் அப்படிப் பேசப்போறாங்க!? ஸோ, இதுல அவங்களை இழுக்காத!!” என்று சொல்லிவிட்டு, அலைபேசியைப் பார்த்தான்.

‘சரிதான்’ என்று தோன்றியதால், சத்தமின்றி நின்றாள். மேலும்… சற்றும் விழிகள் அசையாமல், அவனைக் கூர்ந்து நோக்கினாள்!

பாவைக்கு, பாண்டியன் புதிதாய் தெரிந்தான்!!

ஏதோ நெருட, அவன் நிமிர்ந்ததும்… முடிந்த அளவு விரைவாக அவனிடமிருந்து விழிகளை மீட்டுக் கொண்டு, சகஜமாக காய்கறிகளை வெட்டினாள்.

“உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான்.

“ம்ம் கேளுங்க” என்று சொன்னாள், ஒரு பாத்திரத்தில் அரிசியை அளந்து எடுத்துக் கொண்டே!

“கச்சேரி அன்னைக்கு ஏதோ பேசணும்னு சொன்னீயே, அது என்ன?”

“அன்னைக்கு கார்ல சொன்னேனே?! அதுதான்” என்று சொல்லிவிட்டு, அரிசியைக் கழுவினாள்.

“ஓ!” என்றான் ‘அவ்வளவுதானா?’ என்ற குரலில்!

“ஒரு லாங் டிரைவ் போய்க்கிட்டே இதெல்லாம் சொல்லணும்னு நினைச்சேன். அதுக்கப்புறம்…” என்றவளுக்கு, அன்று அறையில் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றது… தான் சொல்ல நினைத்தது… எல்லாம் நியாபகத்திற்கு வந்தது!

“அதுக்கப்புறம்… ” என்றான் ‘முழுதாய் சொல்’ என்பது போல்!!

“அப்படியே ஐ லவ் யூ சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்” என்று அலட்டிக் கொள்ளமால் சொல்லி, அரிசியை ‘ரைஸ் குக்கரில்’ போட ஆரம்பித்தாள்.

“ஐ லவ் யூ-வா?” என்று ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டே… திண்டிலிருந்து குதித்து, அவள் முன்னே வந்து நின்றான்.

“வழிவிடுங்க” என்று அவனைப் பிடித்து தள்ளி நிறுத்தியவள், அப்பளம் பொறிக்க எண்ணையைச் சட்டியை மின்னடுப்பில் வைத்தாள்.

அவள் தள்ளிய வேகத்திலே… அவளருகில் வந்து நின்று, “நிஜமா ஐ லவ் யூ சொல்லணும்னு நினைச்சியா?” என்று குனிந்து, அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

“ம்ம்ம்” என்றவள், “அன்னைக்கு ரூம்-ல ரொம்ப நேரம் உங்களையே பார்த்துக்கிட்டு நின்னேன்! அப்போ தோணுச்சு, சொல்லணும்னு!” என்றாள்.

‘தன்னைப் போலவே, அவளும் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள்’ என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை வெளிப்படுத்தவும் செய்தான்!

அதைக் கண்டவள், “இதுக்கு எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்? எனக்குத்தான் உங்களைப் பிடிக்குமே? ஐ லவ் யூ சொல்றதுல என்ன இருக்கு?” என்றாள் இயல்பாக!

சிரித்துக் கொண்டே, ‘அது சரிதான்’ என்பது போல தலையை ஆட்டினான்.

“அதோட நீங்க சொல்லவே இல்லை” என்றாள் குறையாக! பின், “சொல்லவும் மாட்டீங்க!” என்றாள் குற்றமாக! பின், “அதான் நானாவது சொல்லாலாம்னு நினைச்சேன்!” என்றாள் நிறைவாக!

“என்னது? நான் சொல்லவே இல்லையா?” என்றான், சண்டை போடும் குரலில்!

“ஆமா!” என்றாள், சத்தியம் செய்யும் குரலில்!

“ஹலோ! நான் நிறைய தடவை சொல்லயிருக்கேன்”

“நிறைய…?” என்று யோசித்தவள், “இல்லை! பொய் சொல்றீங்க! நீங்க சொல்லவே இல்லை!!” என்றாள்.

“ப்ச்! சொல்லியிருக்கேன்”

‘இவன் எப்போ சொன்னான்?’ என்று மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்.

“என்ன நியாபகம் இல்லையா?”

‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“53712392” என்று சொல்லி, ஓர் புன்னகை புரிந்தான்.

“இதுவா?” என்றாள் புரியாமல்!

“ம்ம்ம்” என்றவன், இன்னும் புன்னகையை அதிகப்படுத்தினான்.

“இதெப்படி?” என்றாள் இன்னும் புரியாமல்!

“ஃபர்ஸ்ட் டே பேசறப்பவே… நம்ம ரெண்டு பேருக்கும் ஒப்பீனியன், டேஸ்ட் டிஃபரென்ஸ் இருக்குன்னு தெரிஞ்சது! ஸோ, நமக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லா இருக்கணும்னு நினைச்சி, பீரியாடிக் டேபிள் வச்சி… சொன்னதுதான் இது!” என்று விளக்கினான். [53 (I) – Iodine: 71 (LU)– lutetium: 23 (V) – Vanadium: 92 (U) – Uranium]

‘இதெல்லாம் தேவையா?’ என்ற எண்ணத்தோடுதான், கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் எப்போ சொன்னாலும், ‘புரியலை… சொல்றதே வேஸ்ட்’-ன்னு சொல்லிட்டு இருந்தவ, இன்னைக்கு வந்து ‘சொல்லவே மாட்டிங்கன்னு’ சொல்ற?” என்று, அவளைக் குறை சொன்னான்.

‘ஏன்டா இந்தப் பேச்சை எடுத்தோம்?’ என்ற நிலைதான், பாண்டியனின் பாவைக்கு!

“இதுல, நான் சொல்லவே இல்லையாம்! இவங்க பர்ஸ்ட் சொல்லலாம்னு நினைச்சாங்கலாம்!” என்றான் நக்கலாக!

அவனின் பேச்சுத் தொனியில், “நான் அன்னைக்கே கேட்டேன்-ல?! ஆல்ஃபபெட் போட்டுப் பார்க்கணுமா-ன்னு?” என்று கேட்டாள்.

“ஹே! ஆல்ஃபபெட் எங்கருக்கு?! பீரியாடிக் டேபிள் எங்கருக்கு?!!” என்று பற்கள் தெரியும் வண்ணம் சிரித்தான். 

“சொல்றது எதையும் புரியிற மாதிரி சொல்றதில்லை. இதுல புரிஞ்சிக்கோ… புரிஞ்சிக்கோ-ன்னு சொல்றது” என்று முணுமுணுத்தாள், வேண்டுமென்றே அவனுக்கும் கேட்கும்படி!!

“நான் புரியிற மாதிரி சொல்லலைன்னு சொல்றியா?”

“ஆமா!”

“புரியிற மாதிரி சொல்லியிருந்தா?” என்று, தூண்டிலாய் ஓர் கேள்வி!

“நான் ஈஸியா புரிஞ்சிருப்பேன்” என்று, மாட்டிக்கொண்ட மீனாக ஓர் பதில்!!

“இவ்ளோதான ஹனி?!” என்றவன், “சொல்லிட்டா போச்சு!” என்று சொல்லி, “ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ!” என்று மூன்று முறை காதலைக் கத்திச் சொன்னதில், சமையலறைச் சுவற்றில் பட்டு எதிரொலித்து… பாவையின் காதிற்குள் முன்னூறு முறை ஒலித்தது.

முன்னறிவிப்பு இன்றி வந்த ‘ஐ லவ் யூ’-களால், இலகுவாக மூச்சுவிட கொஞ்சம் அவஸ்தைப்பட்டாள்!

மேலும்… மெத்தனமாக அவளை நெருங்கி, “புரிஞ்சிடுச்சா??” என்று கேட்டான், மொத்தமாய் அவளை விழுங்கும் பார்வையுடன்!

“ம்ன்” என்றாள் கேள்வியாக, சுத்தமாய் சத்தமில்லாமல்!

“நான் சொன்னது புரிஞ்சதா?” என்று, அவள் விழிக்குள் சென்று வினா எழுப்பினான்.

“அது… அது…” என்றவளுக்கு, அதைத் தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை!

தொண்டைக்குழியிலிருந்து எழுந்த வார்த்தை… அதே தொண்டைக்குழியில் விழுந்து… எழுந்து வெளியே வர முடியாமல் தவித்தன, பாண்டியனின் பாவைக்கு!

‘என்ன சொல்லப் போகிறாள்?’ என்று ஆவலுடன், அவள் அதரத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான், பாவையின் பாண்டியன்!!

“அது…” என்றாள் மீண்டும்!

‘சொல்லு’ என்பது போல் கண் மூடித் திறந்தான்.

“அது… அப்பளம் பொறிக்கணும்” என்றாள் காற்றாகிப் போனக் குரலில்!

‘அடச்சே’ என்றானது காத்திருந்தவனுக்கு!

‘போகவா?’ என்பது போல் கண்களால் கேட்டாள். ‘போ’ என்பது போல் தலையசைத்தான். அவனின் சின்ன தலையசைப்பு கூட, அவளைச் சன்னமாகப் பாதித்தது!

அங்கிருந்து நகர்ந்து… சூடான எண்ணெயின் முன்னே சென்று நின்று கொண்டு, தன்னை மறந்து இதழ் விரித்தாள்.

புதிதாய் தெரிந்தவன், வெகு நாட்களுக்குப் பிறகு பாவையின் முகத்தில் கொஞ்சம் புன்னகையைக் கொண்டு வந்துவிட்டான்!

‘உன்னை விடுவதாக இல்லை’ என்பதுபோல், மீண்டும் அவளருகில் வந்து நின்றான்.

புன்னைகையை மறைத்தபடியே, “இப்போ என்ன?” என்றாள் அலட்சியமாக, அப்பளம் பொறித்துக் கொண்டே!

‘இதோ பாரு!’ என்று வலக்கரத்தை நீட்டி, அவள் அணிவித்த மோதிரத்தைக் காட்டினான்.

“இதுக்கென்ன?”

“இது போட்டு விடும்போது, நீ சொன்னது நியாபகம் இருக்கா??”

“நல்லா நியாபகம் இருக்கு! என் மேல அன்பு இருந்தா, இதைக் கழட்டக் கூடாதுன்னு சொன்னேன்!”

“அவ்வளவுதான்! உன் மேல அன்பு இருக்கு, அதான் கழட்டாம வச்சிருக்கேன்! வா வா வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லி, அவள் கைப்பிடித்து இழுத்தான்.

‘இதுக்குத்தானா, இதெல்லாம்!?’ என்று நினைத்தவள்… அவன் கையை உதறிவிட்டு, “அன்னைக்கு நீங்க சொன்னது, உங்களுக்கு நியாபகம் இருக்கா?” என்று திருப்பிக் கேட்டாள்.

பதில் சொல்லாமல் நின்றான்.

“நியாபகம் இல்லை போல!” என்று நய்யாண்டி செய்தவள், “ஒரு பொருளோட என் அன்பை கம்பேர் பண்ணாதன்னு சொன்னீங்க” என்று சொன்னதும், தள்ளி நின்றுகொண்டான்.

அவனைப் பார்த்துக் கொண்டே, “சமையல் முடிக்கிற வரைக்கும் அங்கேயே நில்லுங்க!” என்று உத்தரவு போல் சொன்னாள், மனைவி!

அடுத்த நொடியே… அவளின் உத்தரவை உதாசீனப்படுத்தும் வண்ணம், அவளருகில் வந்து நின்று கொண்டான், கணவன்!

மீண்டும் புன்னைகைத்தாள், அவன் அறியாமல்! இம்முறை கொஞ்சம் வெட்கமும் கூடச் சேர்ந்து இருந்தது, ஆதலால்!!

மோதிரம் அணிவித்த நாளில் இருந்த மகிழ்ச்சையை விட, இந்த நாளில் அனுபவித்த மகிழ்ச்சி அதிகம்தான்! அதை இருவரும் உணர்ந்திருந்தனர்!!

சிறு சிறு சலசலப்புகள், சலனங்களுக்கு இடையே சமையல் முடிந்திருந்தது.

ஒரு தட்டில் சாப்பாடு வைத்து, அவனிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டவன், மீண்டும் சமயலறைத் திண்டில் அமர்ந்து கொண்டான்.

அவன் ஒரு வாய் எடுத்து வைத்ததும், “ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்காக சமைச்சிருக்கேன்! உப்பு, புளி, காரம் எல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றாள்.

மென்றுகொண்டே தலையாட்டினான்!

இரண்டு வாய் உண்ட பின்பு, “தனித்தனியா சொல்லத் தெரியலை! மொத்தமா சொல்லவா?” என்று கேட்டான்!

“ம்ம்ம்”

“மொத்தத்தில ம்ம்ம்” என்று இழுத்தவன், “சாப்பாடு-ல டேஸ்ட் ரொம்பக் கம்மியா இருக்கு” என்றான் இதயமேயில்லாமல்!!

முறைத்தாள்.

“முறைக்காத! நீ வேணும்னாலும் சாப்பிட்டுப் பாரு” என்று ஒரு வாய் எடுத்து, அவளுக்கு ஊட்டிவிட கை உயர்தினான்.

‘வேண்டாம்’ என்பது போல் பின்னே சென்றாள்.

“நான் உனக்கு ரெண்டு தடவை ஊட்டிவிட வந்திருக்கேன். ரெண்டு தடவையும், இப்படித்தான் பண்ற! இதுல, உனக்கு அன்பு நிறைய இருக்கு! எனக்கு உன் மேல அன்பு இல்லையா?! எந்த ஊரு நியாயம்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘ஆ’ என்று வாய் திறந்தாள்.

சிரித்துக் கொண்டே ஊட்டிவிட்டான்!

அவள் மென்று விழுங்கியதும், “இப்போ ஒத்துக்கிறியா?” என்றான், ‘எனக்கும் உன்னைப் பிடிக்கும் என்பதை!’ என்ற அர்த்தங்களோடு!

“ம்ம்ம்” என்றாள் அழகாக!

“அப்படி வா வழிக்கு!” என்றவன், “என்ன ஒத்துகிற ஹனி?” என்றான் ஆவலோடு!

“நீங்க சொன்னது கரெக்ட்தான்!” என்றாள், அவனுக்கு ஆதரவாக! பின், “சாப்பாடு-ல டேஸ்ட் ரொம்பக் கம்மியா இருக்கு!” என்றாள், அவளுக்கு ஆதரவாக!

‘உன்னை” என்று அடிக்குரலில் அழைத்தவன்… ‘என்ன செய்யவென்று தெரியாமல்?’, மீண்டும் ஒரு வாய் ஊட்ட வந்தான்!

மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்!!

அந்தக் கணம் தித்திப்பானதுதான், இருவருக்குமே!!

அதன் பிறகு,

சற்று நேரத்திற்கு… அவன் உண்பது! அவளுக்கு ஊட்டுவது! அதையும் இதையும் பேசுவது! அதற்காக அவதிப்படுவது! இவை மட்டுமே!!

அதன்பின்,

‘ஏன் இதுபோன்ற தருணங்கள் இதற்குமுன் அமையவில்லை?’ என்ற ஏக்கம் வந்திருந்தது, மனைவிக்கு!

கணவனுக்கு??

அவன் ஊட்டிய சாப்பாடு காலியானதில்… அவன் ஊட்ட நினைக்கும் அன்பு, காதல், அக்கறை எல்லாமே ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டுக்கொண்டன!


Leave a Reply

error: Content is protected !!