ISSAI,IYARKAI & IRUVAR 14.1

ISSAI,IYARKAI & IRUVAR 14.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 14


அடுத்து ஒரு நான்கு நாட்கள் கடந்திருந்த நிலையில்… பாண்டியனை அலைபேசியில் அழைத்து, ‘ஒரு உதவி வேண்டும்’ எனப் பாவை கேட்டிருந்தாள்.

இத்தனை நாளில்… உதவி வேண்டுமெனக் கேட்பது இதுதான் முதல்முறை என்பதால், அப்படி ஒரு ஆனந்தம் அவனுள்!

வானின் நீலத்தையெல்லாம் வாரிப் பூசிட நினைக்கும் பட்டத்தைப் போன்று… அவன் மனம் பறந்து கொண்டிருந்தது, அதீத மகிழ்ச்சியில்!

அதே மகழ்ச்சியுடன் கிளம்பி வந்த பொழுது, வீட்டின் முன்னே பாவை நின்று கொண்டிருந்தாள்.

காரின் சன்னலைத் திறந்தவனிடம், “நீங்க ஃபிரியா? போய்க்கிட்டே பேசலாமா?'” என்று கேட்டதும், “ஃபிரிதான்! ஏறு” என்று சொல்லி, கார் கதவைத் திறந்துவிட்டான்.

பாவை ஏறிக் கொண்டதும், கார் கிளம்பியது.

சற்று நேரத்திற்குப் பின்,

நல்ல விசாலமான கிளைச் சாலை! ஆள் நடமாட்டம் இல்லாத நேரம்! இருபுறமும் பத்து அடி உயரத்தில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது! ஒரு ஏழெட்டு மரங்கள் வளர்ந்து நின்றன!

அதில் ஒரு மரத்தின் அடியில் காரை நிறுத்தியிருந்தான்!!

இருவரும் இருக்கையில் இருந்தபடியே ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்து கொண்டனர்.

குரலில் துள்ளலுடன், “சொல்லு ஹனி! என்ன ஹெல்ப் வேணும்??” என்று கேட்டான், ‘ஏதோ பெரிதாய் கேட்பாள், அதைச் சரியாய் செய்ய வேண்டும்’ என்ற எதிர்பார்ப்புடன்!

“எனக்கு ஒரு கேமரா வேணும்?” என்றாள்.

“கேமராவா?” எனக் கேட்டான், ‘அது எதுக்கு இப்போ?’ என்ற சந்தேகக் குரலில்!

“கோயில்-ல, வீட்ல சின்ன சின்னதா பாடறதெல்லாம் ரெக்கார்ட் செஞ்சி, ஒரு சேனல் கிரியேட் பண்ணி அப்லோட் பண்ணலாம்னு நினைக்கிறேன்!”

“ஓ!” என்றான், ‘இவ்வளவுதானா?’ என்ற ஏமாற்றத்துடன்!

“அதான், கேமரா வேணும்!” என்றாள் மீண்டும்!

“என்கிட்டயே இருக்கு! நாளைக்கு எடுத்திட்டு வந்து தர்றேன்” என்றான்.

“ம்கூம்! எனக்குப் புதுசுதான் வேணும்”

“சரி, வாங்கிடலாம்” என்றதும், “ஒரு 10000-லருந்து 15000-க்குள்ள இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க” என்றாள்.

“எதுக்கு இந்தப் பட்ஜெட்??” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டான்.

“வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தது போக, பேலன்ஸ் இருக்கிறது கொஞ்ச அமௌன்ட்தான்! வீணை வேற வாங்கணும். அதனால, இந்த ரேஞ்-ல இருந்தா போதும்” என்றாள்.

சட்டென, “ப்ச்! ஏன் பாவை?” என எரிச்சலடைந்தான்!

‘எதற்கிந்த கோபம்?’ எனப் புரியாமல் பார்த்தாள்.

“வீட்டுக்கு ஆன செலவில, எதுக்குமே என்னை கொடுக்க விடலை! சரி, அப்போ ரொம்பக் கோபமா இருக்கிறன்னு விட்டுட்டேன்! இத்தனை நாள் பேசினதுக்கப்புறமும், அப்படியே இருந்தா எப்படி?!” என்று கோபப்பட்டான்!

“எதுக்கு தேவையில்லாம…” என்று ஆரம்பிக்கும் போதே, ‘உஃப்’ என்று சொல்லி, தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினான்.

“என்னாச்சு?”

“ஒண்ணுமில்லை” என்றவன், “இதுதான் ஹெல்பா?” என்று கேட்டான்.

அவள், “ம்ம்” என்றதும், “சரி, உன்னை வீட்ல விட்டுறேன்!” என்று சொல்லி… நேராக அமர்ந்து, காரை கிளப்பப் போனான்.

வந்த பொழுது இருந்த துள்ளல், இப்போது அவனிடம் இல்லை என்பதை உணர்ந்ததும், “என்னாச்சு-ன்னு சொல்லுங்க?” என்றாள்.

“உனக்கு சப்போர்ட் பண்ணப் போறேன்னு சந்தோஷமா வந்தேன். ஆனா, இப்போ டோட்டல் அப்செட்!” என்றான் கவலையாக!

அவன் சொன்னதைக் கேட்டதும், பாவைக்கு கஷ்டமாக இருந்தது!

“கிளம்பலாம் பாவை” என்று சொல்லி, காரை கிளப்புகையில்… கியரில் இருக்கும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “வேண்டாம்” என்றாள், ஏதோ வேண்டுமென்பது போல்!

“ஏன்?”

“கொஞ்ச தூரம் இப்படியே ட்ராவல் பண்ணிட்டு, அப்புறமா வீட்டுக்குப் போகலாமே?” என்றாள், அவனை அப்படி ஒரு மனநிலையில் அனுப்புவதற்கு மனமில்லாமல்!

“சரி” என்றவன், காரைக் கிளப்பினான்.

கொஞ்ச நேரப் பயணத்தின் பின், கார் புறநகர்ப் பகுதியைத் தாண்டி வெகுதூரம் வந்திருந்தது. அந்த இடத்தில், “திரும்பலமா?” என்று கேட்டான்.

“இன்னும் கொஞ்ச தூரம்” என்றாள் கெஞ்சலாக!

“வேண்டாமே பாவை?!” என்றான், சாலையில் கவனம் செலுத்த முடியாமல்! ஓட்டுவதற்கும் மனமில்லாமல்!

“வேணும்” என்று மட்டும் சொன்னாள். திரும்பவும் ஓட்ட ஆரம்பித்தான்.

சற்று நேரத்திற்குப் பின், புறநகர் சாலையைக் கடந்து… மாநில நெடுஞ்சாலையை அடைந்ததும், “போதுமா?” என்று கேட்டான்.

“ப்ரீ-ன்னு சொன்னீங்கள… இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே?!” என்று கேட்டாள்.

‘இவளுக்கு என்னாயிற்று?’ என்று நினைத்தாலும், அதன்பின்னும் ஓட்டினான்.

சற்று நேரத்திற்குப் பின்…

மஹிந்திரா தார், அந்த மாநில நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் ஒருபுறத்தில் பாவையும், மறுபுறத்தில் பாண்டியனும் நின்று கொண்டிருந்தனர்.

“வேண்டாம்-னு சொன்னேன்-ல பாவை? கேட்டியா?! இப்போ பாரு, டயர் பங்ச்சர்!” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

‘இதற்கு நானென்ன செய்ய முடியும்?’ என்று நினைத்தாலும், அமைதியாக நின்றாள்.

“டிரைவ் பண்ற மைன்ட்-ல இல்லைன்னு தெரிஞ்சிதான, வேண்டாம்னு சொன்னேன்” என்று திட்டிக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில்… அந்த வழியாக வந்த ஒரு பெண் காவலர், அவன் கத்துவதைப் பார்த்துக் கொண்டே வந்ததால்… அவர்கள் அருகே வந்து, தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

மேலும், “என்ன ப்ராப்ளம்?” என்று கேட்டார்.

“டயர் பங்ச்சர்” என்று சொன்னான்.

“ஒரு ரெண்டு கிலோமீட்டர் போனா வொர்க்ஷாப் இருக்கும்” என்று உதவியாக நினைத்துச் சொன்னார்.

“பரவால்ல! நானே சரி பண்ணிடுவேன்” என்றதும், அந்தக் காவலர் பாவையைப் பார்த்தார்.

‘என்ன நினைத்தாரோ?’, “இங்கே வாங்க!” என்று பாவையை அழைத்தார்.

அவர் அருகில் சென்றதும்… அவளிடம் ஏதோ கேட்டதற்கு, “ஆமா மேடம்! ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப்தான்” என்று பதில் சொன்னதும், கிளம்பிவிட்டார்.

அவர் போனதும், காரினுள் சென்று அமரப்போனவளை, “என்ன சொன்னாங்க?” என்று பின்னேயே கேட்டு வந்த பாண்டியன் குரல் தடுத்தது.

அமைதியாக நின்றாள்.

“ப்ச்! சொல்லு பாவை!!” என்றான் பொறுமையில்லாமல்!

அவன் திட்டியதை நினைத்துப் பார்த்தவள், “உங்களால ஏதாவது ப்ராப்ளம்-னா கம்பளைன்ட் பண்ணச் சொன்னாங்க!” என்றாள் பொய்யாக!

“கம்பளைன்ட்டா??” என்று கத்தியவன், “நீ என்ன சொன்ன?” என்றான் கண்களை சுருக்கிக் கொண்டு!

“சரி-ன்னு சொன்னேன்” என்றாள்.

“அடி வாங்கப் போற!” என்றான் பொறுக்க முடியாமல்!!

“அப்போ கம்பளைன்ட் கன்பார்ம்” என்றாள் பாந்தமான குரலில்!

இரண்டொரு நொடிகள், பொறுமையாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்… அவள் சொல்லிய விதத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு, அது பொய்யென்று புரிந்தது.

சட்டென்று சிரித்துவிட்டான்!!

“கம்பளைன்ட்-ன்னு சொன்னதும் சிரிச்சி சமாளிக்கிறீங்களா?” என்றாள் விடாமல்!

“பொய்தான சொன்ன” என்று சொல்லி, மேலும் சிரித்தான்!!

“ஓட்டத் தெரியாம ஓட்டிக்கிட்டு வந்து… நீங்க டயரை பங்ச்சர் பண்ணிட்டு, என்னைத் திட்டிக்கிட்டு இருக்கீங்க! எந்த ஊரு நியாயம் இது?” என்றாள் விளையாட்டாக!

“அது சரி” என்று சொல்லி, மேலும் மேலும் சிரித்தான்!!

அவன் சிரிப்பதையே பார்த்தவள், “டோட்டல் அப்செட்-ன்னு சொன்னீங்க! இப்ப ஓகேவா?” என்று கேட்டாள்.

“டோட்டல் ஹேப்பி ஹனி” என்று, வண்டியில் தாளம் போட்டுக் கொண்டே சொன்னான்.

அவனது பேச்சிலும், செயலிலும் கவரப்பட்டவள்… அவனுடன் சேர்ந்து சிரித்தாள்.

சட்டென பாவைக்கு, ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து சிரிச்சிப் பேச முடியுமா-ன்னு தெரியலை’ என்று, அவனிடம் அன்று சொல்லியது நியாபகத்திற்கு வந்தது!

ஆனால், இன்று நடப்பதைப் பார்த்தவளுக்கு… அது முடியும் என்றே தோன்றியது!!

தாளம் போடுவதை நிறுத்திவிட்டு… சுற்றிலும் பார்த்தவன், “இதுகூட நல்லாத்தான் இருக்கு” என்று சொல்லி, மஹிந்திரா தாரின் முன்பக்கத்தில் மேலேறி அமர்ந்தான்.

“நானும்” என்று அவள் சொன்னதும், கைப்பிடித்து ஏற்றிவிட்டான்.

பழக்கமில்லாததால் வந்த பயத்தில்… அவனை நெருங்கி அமர்ந்து… அவன் புஜத்தினுள் கையை நுழைத்துக் கொண்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

இல்லாளின் செயலினால் இறக்கையில்லாமல் பறந்தவன், “இப்பெல்லாம் ஏன் ‘பாண்டியன்’-ன்னு கூப்பிட மாட்டிக்க?” என்று ஒரு முக்கியமானக் கேள்வி கேட்டான்.

” ‘அப்படிக் கூப்பிடாத’-ன்னு நீங்கதான சொன்னீங்க!” என்றாள், அடுத்த நொடியே!

“அது கோபத்தில சொன்னது. அதெல்லாம் மறந்திட்டு, பாண்டியன்-னு கூப்பிடேன்” என்று ஆசையாகக் கேட்டான்.

“நல்லா நியாபகம் இருக்கே! எப்படி மறக்க?” என யோசித்தவள், “அப்படியெல்லாம் கூப்பிட முடியாது” என்று அழிச்சாட்டியம் செய்தாள்.

“சரி! கூப்பிடாத” என்று அலட்சியமாகச் சொன்னவன், “நீ கூப்பிடலைன்னா என்ன? நான் கூப்பிட்டுப் போறேன்” என்று அலப்பறை செய்தான்.

‘ஆங்! அதெப்படி?’ என்பது போல் பார்த்தாள்.

“சொல்லுங்க மிஸஸ் பாண்டியன்! கேஷ்?ஆர் செக்?” என்று கேட்டான்.

கேள்வி புரியாமல் பார்த்தாள். இருந்தும், அவன் அழைக்கும் விதத்தில் பூரிப்படைந்தாள்.

“கேமரா வாங்க ‘மணி’ தர்றேன்னு சொன்னியே! அது, கேஷ்? ஆர் செக்?” என்று… அவளின் விருப்பத்திற்கேற்ப இறங்கி வந்தான், பாவையின் பாண்டியன்!

“நீங்கதான வாங்கித் தரப்போறீங்க, நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்று… அவனின் விருப்பத்திற்கேற்ப இறங்கி வந்தாள், பாண்டியனின் பாவை!

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்! அர்த்தமாகிக் கொண்டிருக்கும் வாழ்வில், அர்த்தமற்ற சிரிப்புகள்!!

சாலையின் இருபுறமும், ஆங்காங்கே வயல்வெளிகள் மற்றும் தரிசு நிலங்கள்! தூரத்தில் தெரியும் கிராமத்து வீடுகள்!!

எப்போதாவது, இருசக்கர வாகனங்கள் போவதும் வருவதுமாய் இருந்தன!

மேற்கில் உதிரப்போகும் சூரியப்பூ! செவ்வானம்! மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் குருவிகள்!!

கொஞ்சம் புழுதிக்காற்று! கொஞ்சம் புரிந்து கொள்ளப்பட்ட காதல்!!

மஹிந்திரா தார் மேல்! மனங்கவர்ந்தவள் அருகில்!!

வேறென்ன வேண்டும் சிவபாண்டியனுக்கு!?

ரசித்துச் சொன்னான், “கோல்டன் அவர்ஸ்” என்று!!

“எது? நாம இப்படி உட்கார்ந்திருக்கிறதா?” என்று கேட்டாள், இன்முகத்துடன்!

“ச்சே ச்சே! போட்டோகிராபி-ல சன்செட் அன்ட் சன்ரைஸ்-க்கு முன்னாடி, பின்னாடி இருக்கிற நேரத்தை கோல்டன் அவர்ஸ்-ன்னு சொல்லுவோம்” என்றான் இரக்கமேயில்லாமல்!

அவளிடம் ஓர் அமைதி!

‘நான்சிங்கா போய்விட்டோமோ?’ என்று நினைத்ததும், அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“உங்களை…” என்று சொல்லி, அவன் புஜங்களில் மெல்லக் குத்த ஆரம்பித்தாள்.

“ஹே! போற போக்க பார்த்தா, நான்தான் கம்பளைன்ட் பண்ணனும் போல” என்று சொன்னதும்… சிரித்துக் கொண்டே செல்லமாகக் குத்தினாள்.

அதன் பின்பும், இருவரும் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மொத்தத்தில், வண்டிச் சக்கரம்தான் பிளவுபட்டு, சாலையில் நிற்கிறது. ஆனால் இருவரின் வாழ்க்கை என்ற வாகனம்… கொஞ்சம் பழுது சரி செய்யப்பட்டு, சந்தோஷச் சாலைக்குள் நுழைந்துவிட்டது.

சிவபாண்டியன் வீடு

இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது.

சென்பகம், வீட்டின் வரவேற்பறையில் இருந்தார். சிவா வரும் நேரம் என்பதால், கதவைத் திறந்து வைத்திருந்தார்.

சற்றுநேரத்தில் சிவாவும் வந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும், “மணி நாலாகுது! சரியான டைம்க்கு சாப்பிட வேண்டாமா?” என்று பாசத்துடன் கடிந்து கொண்டார்.

“சாரி சாரி-ம்மா” என்று சொல்லிக் கொண்டு, அவர் அருகில் வந்து அமர்ந்தான்.

“இன்னைக்கு மட்டுமில்ல சிவா! இப்போ கொஞ்ச நாளாவே, நீ சரியா சாப்பிட வர்றதேயில்லை?!” என்றார் கண்டனக் குரலில்!

“அது…” என்று, அவன் சொல்ல வரும்போதே,

“பசியோட இருக்கிறது நல்லதில்லை!” என்றார் கரிசனமாக, அவன் வயிற்றை நினைத்து! பின், “வேறேதாவது பிரச்சனையா? அதான் இப்படி இருக்கியா?” என்றார் கவலையாக, அவன் வாழ்க்கையை நினைத்து!

“ம்மா! பசியோடெல்லாம் இருக்கிறதில்லை. பிரச்சனையும் இல்லை”

‘அப்புறம்?’ என்பது போன்று பார்த்துக் கொண்டிருந்தார்.

“அது… பாவையைப் பார்க்கப் போறேனா… அவ சாப்பிடச் சொல்றா… அதான்… அங்கேயே… சாப்பிடறேன்” என இடைவெளி விட்டுவிட்டுச் சொன்னவன் முகத்தில், ஒரு இன்பமான புன்னகையும் இருந்தது!!

அவன் சொன்ன விதத்தைக் கண்டு… அவரும் சிரித்துக் கொண்டே, “சரி! போ கண்ணா!! போய் ரெஃப்பிரஷ் பண்ணிட்டு வா! காஃபி குடிக்கலாம்” என்று சொன்னார்.

“சரிம்மா” என்று புன்னகை மாறாமல் சொல்லி… எழுந்து, அவன் அறையை நோக்கி நடந்தான்.

வெகு நாட்கள் கழித்துப் பார்க்கிறார், இப்படி அவன் இயல்பாக புன்னகை புரிந்து! அவன் மகிழ்ச்சி, அவரையும் தொற்றிக் கொண்டது!!

மேலும், ‘பாவையா இப்படி?’ என்ற அதிர்ச்சி வந்தது! ஆனால், இம்முறை ஆனந்த அதிர்ச்சி!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!