ISSAI,IYARKAI & IRUVAR 15.1

ISSAI,IYARKAI & IRUVAR 15.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 15


தேன்பாவை வீடு

காரை நிறுத்திவிட்டு, மாடிப்படிகள் ஏறி வந்த பாண்டியன்… வீட்டின் கதவு திறந்திருந்ததால், “பாவை” என்றழைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.

நுழைந்ததுமே, சமயலறையில் இருக்கிறாள் என்று தெரிந்தது! நேரே அவள் நிற்கும் இடத்தில் வந்து நின்றான்!!

காஃபி போடுவதற்குத் தயாராக எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு, எதுவுமே செய்யாமல் நின்று கொண்டிருந்தவள்… அவனைப் பார்த்ததும், “வாங்க” என்றாள் சோர்வான குரலில்!

குரலின் பேதைமை கண்டு, “என்னாச்சு ஹனி?” என்று கேட்டான்.

“கொஞ்சம் தலைவலி” என்றாள் சோகமாக!

“ஏன் திடிர்னு?” என்று காரணம் கேட்டான்.

“ஏதோ டென்ஷன்!” என்றாள் கவனமேயில்லாமல்!

“இப்போ எதுக்கு டென்ஷன்?!” என்ற கேள்விக்கு, பதில் சொல்லாமல் நின்றாள்.

“ப்ச்! சொல்லு பாவை” என்றான், சலிப்புடன் கூடிய அழுத்தமாய்!

“ஒண்ணுமில்லை” என்றாள் நெற்றி முடிச்சுக்களுடன்!

அதைக் கண்டவன், “வேணும்னா, ரிலாக்ஸ் ஆகிறதுக்கு எங்கயாவது போகலாமா?” என்று கேட்டுப் பார்த்தான்.

“வேண்டாம். ரெஸ்ட் எடுக்கணும்” என்று மறுத்தாள், தெளிவில்லாத முகத்துடன்!

அவள் முகத்தைப் பார்த்ததும், “இப்படி இருக்காத பாவை! வா, கொஞ்சம் நேரம் வெளியே போயிட்டு வரலாம்” என்று, அவள் கைப் பிடித்து அழைத்தான்.

மெதுவாக அவன் பிடியிலிருந்து கையை உருவிக்கொண்டு, “உங்களுக்குப் புரியலையா?” என்று கேட்டாள்.

‘எதற்கிந்த கேள்வி?’ என்பது போல் அவனிடம் ஓர் மௌனம்!

அந்த மௌனத்தை மொழிபெயர்த்தவள், “தலைவலி-ன்னு சொல்றேன், வெளியே வா-ன்னு கூப்பிடறீங்க? என் ஹெல்த் பத்தி உங்களுக்கு அக்கறையே இல்லையா?” என்று குறை சொல்லும் தொனியில் கேட்டுவிட்டு, சமயலறைத் திண்டில் சாய்ந்து நின்றாள்.

‘அக்கறை இல்லயா?’ என்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தன, அவனது உடல்மொழி!

அதை வாசித்தவள், “கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். அதான் வெளியே வர முடியாதுன்னு சொன்னேன். புரிஞ்சிக்கோங்க” என்று விளக்கமாகச் சொன்னாள்.

“புரியுது பாவை” என்றதும், “தேங்க்ஸ்” என்றாள்…  தான் ஓய்வெடுக்க வேண்டும் என்றதும், அவன் ஒத்துக் கொண்டதால்!

“அன்ட் சாரி” என்றான்.

“சாரி எதுக்கு?”

“ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னப்புறமும், வெளியே வா-ன்னு கூப்பிடத்துக்கு… உன்னோட ஹெல்த் பத்தி கேர் பண்ணாததுக்கு… சாரி பாவை!” என்றான் மீண்டும் 

இல்லை! அவன் மன்னிப்பு கேட்பது போல் தெரியவில்லை. எதையோ உன்னிப்பாய் கவனிக்கச் சொல்கிறான் எனப் புரிந்தது.!!

“ஆனா பாவை! அன்னைக்கு, எனக்கு டயர்டா இருக்கு, ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்னு சொன்னதுக்கு… ம்ம்ம்” என்று, நடந்தது மறந்து போனது போல் யோசித்தான்.

அவனின் ஒய்வைப் பற்றிய எண்ணமில்லாமல், ‘உடனே வந்து கூட்டிட்டுப் போக வேண்டும்’ என்று சொன்னது நியாபகத்திற்கு வந்தது, பாவைக்கு!

“அப்போ என்னோட ஹெல்த் பத்தி…?” என்ற கேள்வியின் முற்பாதியைக் கேட்டான்.

‘இவன் உடல்நலத்தில் தனக்கு அக்கறை இல்லை என்று சொல்கிறானா?’ என்று, கேள்வியின் பிற்பாதியைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

“அன்னைக்கு உடனே உன்னைக் கூப்பிட வரலைன்னதும், உன்மேல எனக்கு அக்கறை இல்லைன்னு சொன்ன?”

ஆம்! காத்திருந்த தருணங்களில் அப்படித்தான் நினைக்கத் தோன்றியது!

“இன்னைக்கு வெளியே வா-ன்னு கூப்பிட்டப்போ, நீ வரலை!”

தன் வார்த்தைகளில் இருக்கும் முரண்பாடு புரிந்தது, பாவைக்கு!

“ஸோ, உன்னோட லாஜிக்படி பார்த்தா, இன்னைக்கு என்மேல உனக்கு அக்கறை இல்லையா?”

யோசிக்கக் கூட இல்லை! திண்டில் சாய்ந்திருந்தவள்… திடுமென நேராகி, தன் நெற்றியை அவன் நெஞ்சோடு மோதிக் கொண்டு நின்றாள்!!

“ஹனி” என்றழைத்தான் நிதானமாக!

“எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்கமேல அக்கறை, அன்பெல்லாம் நிறைய இருக்கு. அதனால இப்படிச் சொல்லாதீங்க!” என்றாள் நிம்மதியற்ற குரலில்!

“சரி சரி சொல்லலை” என்றான் அவசரமாக! பின், “எனக்கே அது தெரியும் பாவை” என்றான் ஆறுதலாக!

நிம்மதியுடன்… இன்னும் நெருங்கி நின்றுகொண்டாள், பாண்டியனின் பாவை!

“அதேமாதிரி எனக்கும் உன்மேல அக்கறை இருக்குன்னு புரியுதா?” என்று கேட்டுப் பார்த்தான்.

“ம்ம் புரியுது” என்றாள் கேட்டவுடனே!

ஆனால்… இன்று எளிதாகப் புரிவது, அன்று ஏன் புரியாமல் போனது? என்ற குழப்பம் வந்தது. சுயஅலசலின் அடுத்த கட்டமாக, ‘தன் எதிர்பார்ப்பில்தான் ஏதோ பிழை இருக்கிறதோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அதன்பிறகு,

சற்று நேரத்திற்கு… பருமனான அமைதிகள்! பாசமான அணைப்புகள்! இவை மட்டுமே, இருவருக்கும்!!

அதன்பின், “ஆக்சுவலா, அன்னைக்கு நான் சொல்ல வந்தது என்ன தெரியுமா?” என்று கேட்டான்.

‘என்ன?’ என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“ரிலேஷன்ஷிப்-ல செல்ஃப் கேர் முக்கியம்! இப்போ தெரியாது பாவை!

பட், ஃபியூச்சர்ல குழந்தைங்க, வேலை, பேரன்ட்ஸ் பார்த்துகிறது… இப்படி நிறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் வரும்போது, கண்டிப்பா செல்ஃப் கேர் அவசியம்!

சிம்பிளா சொல்லனும்னா… உன்னை வருத்திக்கிட்டுதான், உன் அன்பைக் காட்டணும்னு அவசியம் கிடையாது! அவ்வளவுதான்!!” என்று, தன் அன்பின் அறிவியலை விளக்கினான்.

‘புரிந்துவிட்டது’ என்ற பொருளில் ஒரு மெல்லிய புன்னகை, பாவையிடம்!

“இப்போ சொல்லு எதுக்கு டென்ஷன்?”

“ஸ்டேஜ்-ல தனியா பாடின மாதிரி கௌசி ஒரு போட்டோ அனுப்பியிருந்தா!”

“ஓ! அவங்களுக்கு சான்ஸ் கிடைச்சிருச்சா?”

“ம்ம்ம்” என்றவள், “அதை பார்த்ததிலிருந்து… கொஞ்சம் டென்ஷன். நாம எப்போ அப்படிப் பாடுவோம்னு, ஒரு ஆசை வந்திருச்சு. அதான், நைட் சரியா தூங்க முடியலை” என்றாள் சோகத்தின் பின்னணியை!

“கங்கிராட்ஸ்-ன்னு போட்டு முடிக்காம, இப்படிக் கவலைப்பட்டுக்கிட்டு நிக்கிற??”

“கொஞ்சம் கஷ்டமா இருக்கு! ஸ்டேஜ்-ல பாடணும்னு ஆசைப்பட்டு, டிவி ப்ரோக்ராம்-ல பாடுறதை நினைச்சி” என்று சொல்லி… அவனிடமிருந்து விலகி நின்று, காஃபி போட ஆரம்பித்தாள்.

“ஸீ! பாடுறது உனக்குப் பிடிக்கும். அதை மட்டும் பாரு! இடத்தைப் பார்க்காத. எங்கே பாடினாலும் 100% உன்னோட பெஸ்ட்-டை கொடு”

“நீங்க சொல்றது சரிதான்” என்று சொல்லி, பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தவள், “உங்களுக்கு காஃபி?” என்று கேட்டாள்.

“வேண்டாம்” என்றவன், “டேப்லெட் எதுவும் போட்டியா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் தேவையில்லை. கொஞ்சம் நேரம் தூங்கினா சரியாயிடும்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு தம்பளரில் காஃபி தூள் மற்றும் சக்கரையைப் போட்டாள்.

“ஸுயரா?” என்று கேட்டதற்கு, “ம்ம்ம்” என்றவள், காஃபி போட்டு முடித்திருந்தாள்.

“அப்புறம் ஹனி! நான் ஒரு ட்ரிப் போறேன்”

“எப்போ?” என்றாள் காஃபி பருகிக் கொண்டே!

“இன்னைக்கு ஈவினிங். திரும்பி வர டூ த்ரீ டேய்ஸ் ஆகும். ஏதும் தேவைன்னா, உடனே ஃபோன் பண்ணனும்” என்றான், அன்புக் கட்டளையாக!

“ம்ம்ம் சரி” என்றாள்.

“சரி வா! இப்போ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு” என்று அவன் சொன்னது, இருவரும் சமயலறையிலிருந்து வெளியே வந்தார்கள்.

வரவேற்பறை

விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்து, சுவரில் சாய்ந்திருந்தான். எதையோ யோசித்துக் கொண்டு, அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.

“பாவை, எதையும் யோசிக்காம, கொஞ்ச நேரம் தூங்கு” என்றான்.

இன்னும் யோசனையாகவே இருந்தாள்.

“ரெண்டு பேரோட ஆசையும், தனியா பாடுறது-தான? அதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குதுன்னா, அதை கரெக்டா யூஸ் பண்ணு” என்றவன், “இப்போ தூங்கு” என்று தலையணையைக் கொஞ்சம் சரி செய்தபடி சொன்னான்.

“வேணிம்மா நியாபகமா இருக்கு! எப்பவும்… கச்சேரிக்கு முன்னாடி, அவங்ககிட்டதான் பாடிக் காட்டுவேன். இப்போ…” என்றவள்… தலையணையில் தலை சாய்க்காமல், தன்னவன் மடிமீது தலை சாய்த்தாள்.

தலைகோதி தேற்றிக் கொண்டே, “நான் வேணா ட்ரிப் கேன்சல் பண்ணவா?” என்று கேட்டதற்கு, “ச்சே ச்சே வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள்.

“இல்லை பாவை…” என்று பேசப் போனவனை, “சரியா தூங்கலைன்னா வாய்ஸ்-ல அது தெரியும். தூங்கவிடுங்க” என்று சொல்லி, கண்மூடினாள்.

‘எங்கே ஆரம்பித்து… எங்கே வந்து முடிக்கிறாள்?’ என்று எண்ணியவனுக்கே, தன் அகத்தின் ரதியைப் புரிந்து கொள்ள தனி அகராதியே வேண்டுமெனத் தோன்றியது!

கண் சொருகிக் கொண்டிருந்தவளைப் பெருங்காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான், சிவபாண்டியன்!!

தேன்பாவை வீடு

மூன்று நாட்கள் கடந்திருந்தது. இந்த மூன்று நாட்களும்… அவர்கள் இருவரின் அளவாடல்களும், அன்பின் பரிமாற்றங்களும், அக்கறை பேச்சுகளும் அலைபேசி வழியே நடந்திருந்தன.

இன்று…

தொலைக்காட்சி நிகழ்சிக்கானப் படப்பிடிப்பு நாள் என்பதால், பாவை கிளம்பிக் கொண்டிருந்தாள். வெகு தினங்கள் கழித்து, மிதமான ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.

“வெளியில் சொல்ல மனம் துள்ளுதே –சொல்ல வேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே” – என்ற வரிகள் பாடிக் கொண்டே, கண்களில் மையிட்டுக் கொண்டாள்.

“இனியொரு உலகம் உனைத்தவிர எனக்கொரு சுகம் இலையெனத் தந்தவா” என்று பாடிக் கொண்டிருக்கையில, அலைபேசி அழைத்தது.

எடுத்துப் பார்த்தாள். பாண்டியன்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.    

‘வந்துவிட்டானா?’ என்ற கேள்வியுடனே அழைப்பை ஏற்றாள்.

“குட் மார்னிங் ஹனி” என்றவன் குரல், தூக்க கலக்கத்தில் ஒலித்தது.

“வந்தாச்சா?”

“ம்ம்ம், டூ அவர்ஸ் முன்னாடிதான். தூங்கிட்டு இருந்தேன். திடிர்னு முழிக்கிறப்போ, உன் நியாபகம். அதான் போன் பண்ணேன்” என்றவன்,

“என்ன பண்ற?” என்று கேட்டான்.

“கிளம்பிக்கிட்டு இருக்கேன்”

“ஓ! சில்க் சாரீ கட்டி… ஏதாவது பாடிக்கிட்டே மேக்கப் போட்டுக்கிட்டு! கரெக்ட்டா?”

“ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் சந்தேகமாக!

“அன்னைக்கு நம்ம ரூம்-ல அப்படித்தான ரெடியாகிக்கிட்டு இருந்த. ரொம்ப நேரம் பார்த்துக்கிட்டு இருந்தேன்”

“ஓ!” என்றாள், ‘தன்னைப் போலவே, அன்று அவனும் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான்’ என்ற ஆச்சரியத்தில்!

“நான் வந்து கூட்டிட்டுப் போகவா?” என்று கேட்டதற்கு, “வேண்டாம்! நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றாள்.

அதன்பின்னும்… ஒரு ஐந்து வினாடிகள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அழைப்பைத் துண்டித்தார்கள்.

தொலைக்காட்சி நிலையம்

நிறைய தயக்கத்துடன்தான் உள்ளே நுழைந்தாள்.

அங்குள்ளோர் அனைவரும் ஒரு கனிவான வரவேற்பைத் தந்தனர். அவர்ளின் பார்வையிலும் செயலிலும் மரியாதை இருந்தது.

சற்று நேரம், அவளது மேடைக் கச்சேரி பற்றிப் பேசினார்கள். பின்… ஒத்திகைகள் நடந்தன, அவளுக்கு இசைக் கலைஞர்களுக்கும் இடையே!

இப்படியே சற்று நேரம் கடந்த பின், பண்டிகை தின சிறப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.

சின்ன இடம்தான்!

பின்னணியாக கோவில் போன்ற அமைப்பு! அதன் நடுவில், சகல அலங்காரங்களுடன் ஒரு விநாயகர் சிலை!!

சிலையருகே தீபங்கள் ஏற்றப்பட்ட ஒரு சிறிய குத்துவிளக்கு! தோரணங்கள், விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது!!

மூன்று சதுர வடிவ மேடை இருந்தது! அனைத்திற்கும் முன்னே மைக் வைக்கப்பட்டிருந்தது!!

மற்ற இரண்டு மேடைகளிலும் இசைக்கலைஞர்கள் அமர்ந்தனர்! நடுவில் இருந்த மேடையில் சென்று பாவை அமர்ந்து கொண்டாள்!!

இரண்டு மூன்று கேமராக்கள் சுற்றி இருந்தன! நிறைய ஆட்கள், அங்கங்கே நின்று கொண்டிருந்தனர்!!

அவள் அமர்ந்ததும், அங்கிருந்த உதவியாளர் வந்து, “எல்லாம் கரெக்ட்டா இருக்கா மேம்?” என்று கேட்டதும், “ம்ம்” என்று தலையாட்டினாள்.

பாடல் ஆரம்பித்தது…

முதலில் வயலின் கலைஞர் வாசித்ததும், அதைத் தொடர்ந்து…

“ஒற்றை கொம்பனை பற்றி பார் அதில் உள்ளத் தாமரை தித்திக்கும்… பற்றும் நம் பணி வெற்றி பாதையில் பற்றும் நாள் வரை சித்திக்கும்” என்று பாவை முதல் முறை பாடி முடித்து, அதையே அடுத்த முறை பாடும் பொழுது கடமும் சேர்ந்து கொண்டது.

“தித்தித்தால் அது சித்திக்கும் சித்தித்தால் அது தித்திக்கும்… சித்தித்தால் அது தித்திக்கும் தித்தித்தால் அது சித்திக்கும்” என்று பாடுகையில் குரல் திகட்டாத தித்திப்பாய் இருந்தது.

“சங்கர சங்கரி பங்கயர் கண்களில் மங்களம் புரிந்திட வந்தானே” என்று ஒரே மூச்சில் பாடி, மீண்டும் ‘ஒற்றைக் கொம்பனை” என்று பல்லவியை வந்து பிடித்தாள்.

ஒரு வினாடிக்குப் பின், ‘பக்தியுடன் பூவை…’ என்று முதல் சரணத்தை ஆரம்பித்திருந்தாள்.

அடுத்து முப்பது நொடிகளுக்குப் பின்…

“பெற்றவரை உலகமென்று சுற்றி வரும் பிள்ளை தான்… பிள்ளைகளின் பாசம் என்ன சொல்லி தரும் எல்லை தான்” என்று இரண்டு முறை பாடுகையில் ‘ள’ கரங்களும், ‘ற’ கரங்களும் உச்சரிப்பின் சிகரத்தைத் தொட்டன!

அடுத்து ஒரு எழுபது நொடிகளுக்குப் பின், இரண்டாவது சரணம் பாடிக் கொண்டிருந்தாள்.

“வஞ்சகத்தை வெல்லும் தெய்வம் வாழ்வில் நல்கும் நன்மை தான்… தஞ்சமென்று சொன்னால் போதும் காவல் நிற்கும் உண்மை தான்” என்று வரிகளைப் பாடுகையில், விநாயகனைத் துதித்தால், வினை தீர்க்கும் என்ற நம்பிக்கை தரும்படி பாடினாள்.

கடைசியில்,

“தும்பிக்கை ஒரு நம்பிக்கை என துன்பம் தீர்த்திடும் தூயவனே… ஐங்கரன் என்பவன் அற்புதம் செய்பவன் பொற்பதம் மின்னிட வந்தானே ” என்று ஒரே மூச்சில் பாடி, மீண்டும் பல்லவியைப் பாடி பாடலை முடித்தாள்.

அதன்பிறகு,

சற்று நேரத்திற்கு… நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர், இயக்குனரின் பாராட்டுக்கள்! இசைக் கலைஞர்களுடன் பேசிக் கொண்டிருத்தல்! இசையில் ஈடுபாடு கொண்ட உதவியாளர்களின் அறிமுகம்! இவை மட்டுமே, தேன்பாவைக்கு!!

அதன் பின்,

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, நிலையத்திலிருந்து வெளியே வந்தாள்.

பாடி முடித்த பின் கிடைத்த பாராட்டு… இத்தனை பேரின் அறிமுகம்… தனியாகப் பாடியது… எல்லாம் சேர்ந்து, ‘இது மேடைக் கச்சேரியில்லேயே’ என்ற ஒரு சிறு வருத்தத்தையும் போக்கியிருந்தது!

வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது, பாவைக்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!