ISSAI,IYARKAI & IRUVAR 15.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 15


நிகழ்கணத்தின் நொடிகளை நெகிழ்ந்து ரசித்துக் கொண்டே சாலையை வந்தடைந்தவள்… ஆட்டோ வருமா என்று பார்க்கும் பொழுது, அலைபேசி அழைத்தது. கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்.

கணவன்தான்!

அழைப்பை ஏற்று, “ஹலோ… இப்போதான் முடிஞ்சது. நான் வீட்டுக்கு…” என்று சொல்லும் போதே, “ஆப்போசிட்-ல பாரு” என்றான்.

பார்த்தாள்.

‘ஹாய்’ என்பது போல் கைகளை அசைத்துக் கொண்டு, பாண்டியன் நின்று கொண்டிருந்தான்.

இதை எதிர்பார்க்கவேயில்லை, பாண்டியனின் பாவை!

‘வரவா?’ என்று சைகையால் கேட்டவனிடம்… ‘இல்லை! நானே வருகிறேன்’ என சைகையால் சொல்லி, இருபுறம் வரும் வாகனங்களைப் பார்த்தவாறே நடந்து… அவன் அருகில் வந்திருந்தாள்.

“நீங்க எப்படி?” என்று கேட்கும் பொழுதே, “ஃபர்ஸ்ட் கார்ல ஏறு! இங்கே கொஞ்சம் கன்ஜஸ்டடா இருக்கு. போய்க்கிட்டே பேசலாம்” என்றான்.

காரில் ஏறிக் கொண்டதும், அவள் பக்க கதவை அடைத்தான். பின்… அவனும் ஏறிக் கொண்டு, காரை கிளப்பினான்.

போக்குவரத்து நெரிசலிலிருந்து வெளியே வரும்வரை, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி வந்ததும், மூன்று நாள் பிரிவை கணவனின் தோள்களில் பிரியத்துடன் சாய்ந்து வெளிப்படுத்தினாள்.

அவள் கொடுக்கும் அன்பை அமைதியாக வாங்கிக் கொண்டான், ஓர் ஐந்து நிமிடத்திற்கு!

அதன்பின், “எப்படி பாடின?” என்று கேட்டதுதான் தாமதம்… சட்டென தோளிலிருந்து எழுந்து, நேராக அமர்ந்துகொண்டாள்.

“ஷூட் பண்றவங்க… அங்கே வேலை பாக்கிறவங்க… என்னை மாதிரியே பாட வந்த இன்னும் ரெண்டு பேர்… எல்லோரும் சொன்னாங்க… சூப்பரா பாடின-ன்னு!

இதுவரைக்கும் இப்படி யாரு என்கிட்டே சொன்னதில்லை. எல்லோரும் கௌசியைத்தான் பாராட்டுவாங்க. முத தடவை என்னைய பாராட்டுறாங்க. ரொம்பப் பிடிச்சிருந்தது.

முதல கூட ஸ்டேஜ்-ல பாடமா, இப்படிப் போய் பாடுறோம்னு தயக்கம் இருந்தது! ஆனா, இப்போ அது கொஞ்சம் கூட இல்லை.

ரொம்ப சந்தோஷமா இருக்கு!” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.

“அது உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது” என்றான்… நலிவு-மெலிவு இதையெல்லாம் தாண்டி, அவள் முகத்தில் ஒரு பொலிவு வந்திருந்ததைப் பார்த்தவன்!

“ஒரே ஒரு வருத்தம்தான்” என்று ஏக்கத்துடன் சொல்லும் போதே, “என்ன?” என்று கேட்டான்.

“வேணிம்மா இருந்து பார்த்திருக்கலாம்” என்று சொல்லிவிட்டு, சன்னலின் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.

அவள் வாட்டத்தைப் போக்கும் ‘தேன்குரலால் இந்த தேன்பாவை’ என்ற வார்த்தைகள், செவிப்பறைக்குள் வந்து ஒலித்தன.

எதுவும் சொல்லாமல் ஒரு பத்து நிமிடங்கள் அமைதியாக இருந்தவன், “சாப்பிட்டியா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்” என்றவள், “நீங்க அட்ரஸ் கேட்கும்போது கூட வருவீங்கன்னு நினைக்கலை. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?” என்று கேட்டாள்.

“ச்சே ச்சே இல்லை ஹனி” என்றான் சாலையில் கவனத்தை வைத்துக் கொண்டே!

“சரி! எங்கே போய்க்கிட்டிருக்கோம்?” என்று கொஞ்சம் ஆர்வமாகக் கேட்டதும், “சர்ப்ரைஸ்” என்று சொல்லிவிட்டான்.

புகைப்படக் கண்காட்சி

சாலையின் ஒருபுறம் இருந்த வாகனம் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு… எதிர்பக்கம் இருந்த கண்காட்சிக் கட்டிடத்திற்குள், பாவையைக் கூட்டிச் சென்றான்.

ஆம்! அவளை ஒரு புகைப்படக் கண்காட்சிக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான்!!

உள்ளே நுழைந்ததும், அவள் அவனைப் பார்த்தாள்.

“போட்டோ எக்சிபிஷன்” என்றான், அவள் பார்வை புரிந்து!

“எல்லா போட்டோவும் நீங்க எடுத்ததா?” என்று கேள்வி கேட்டதும், “சிலது! மத்தவங்களோடதும் இருக்கு!” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும்… புருவங்களை உயர்த்திக் கொண்டே, அந்த பிரமாண்ட கூடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.

வர்ணிக்க வண்ணங்களின் வார்த்தைகள் தேவையில்லை என்பது போன்று… சுவரின் பூச்சுகள், பளபளக்கும் தரை என எங்கெங்கும் வெள்ளை நிறம்!

வர்ணிக்க வண்ணங்களின் வார்த்தைகள் தேடவேண்டும் என்பது போன்று… எல்லா உள்ளடக்கிய புகைப்படங்கள்!

ஒவ்வொரு புகைப்படமும் தனித்து தெரியும்படியாக விளக்குகள் வடிவமைக்கப்பட்டிருந்தன!

மேலும், நன்கு குளிரூட்டப்பட்டிருந்தது!!

பத்து பதினைந்து பேர் இருந்தனர்! பெரிய கூடம் என்பதால், தூரத்தில் நிற்பது போன்ற உணர்வு தந்தது!!

ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள்.

பார்த்து கொண்டே வருகையில், “பாவை” என்றழைத்து, ஒரு புகைப்படத்தின் முன் நின்றான்.

அவளும் நின்று… நிமிர்ந்து அவனைப் பார்த்து, “நீங்க எடுத்ததா?” என்று கேட்டதும், ‘ஆமாம்’ என்றான் இமைகளால், அந்த இயற்கை ரசிகன்!!

புகைப்படத்தைப் பார்த்தாள்.

சிறு கற்களும், வெள்ளை மணலும் இருந்த சமவெளிபரப்பில்… ஒரு வேன் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது!

அதில் நிறைய கணிதக் குறிகள், விதவிதமான வண்ணங்களில்!

பின்னணியாக பனி படர்ந்த இமயமலை! மேலே தெளிவான நீல வானம்!!

அவள் பார்த்து முடித்ததும், “இது ஜக்ஸ்டபொசிஷன்(juxtaposition) போட்டோகிராபி” என்றான்.

“அப்படினா??”

“கான்ட்ரஸ்ட் ஆர் சிமிளாரிட்டிஸ் இருக்கிற மாதிரி ரெண்டு திங்ஸ் சேர்த்து போட்டோ எடுக்கிறது”

“ஓ!”

“நல்லா இருக்கா?” என்று வார்த்தைகளால் கேட்டவனுக்கு… ‘ஆமாம்’ என்றாள் கண்களாலே, அந்தக் கானங்களின் காரிகை!

பின்… கூடத்தின் குறுக்கே இருந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து, ‘இது நீங்க எடுத்ததா?’ என்று கேட்டபடியே, பாண்டியனுடன் நடந்தாள். 

ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும்… நின்று, அவனைப் பார்த்தாள்.

“ம்ம்ம்! கிரிஸ்டல் பால் போட்டோகிராபி! நான் எடுத்ததுதான்” என்றதும், “வித்தியாசமா இருக்கு” என்றாள்.

விடிவெள்ளிகளும், வெண்ணிலாவும் விழித்துக் கொண்டிருந்த இரவு வானம் மற்றும் கடல்… இவை தெளிவில்லாத பின்னணியாக!

புகைப்படத்தின் குவியம்(FOCUS), கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கிரிஸ்டல் பந்தின் மேல் இருந்தது!

தெளிவில்லாத பின்னணியான கடலும் வானமும், அந்த கிரிஸ்டல் பந்தில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது! ஆனால், தலைகீழாக!!

அதாவது… ஆகாயம் கீழே, ஆழ்கடல் மேலே என்பது போல்!!

பந்தின் தலைகீழ் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு, வாழ்க்கை நேராகிக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது.

“இது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் புகைபடத்திலிருந்து கண்கள் எடுக்காமல்!

“எடுத்துக்கோ” என்றான், அவளிடமிருந்து பார்வை விலகாமல்!

‘ம்ம்ம்’ என்று விருப்பமாகத் தலையாட்டியதும்… அங்கிருந்த பணியாளர் ஒருவரை அழைத்து, ஏதோ சொன்னான்.

பின், அடுத்தடுத்த புகைப்படங்களைப் பார்த்தார்கள். சிலர் வந்து அவனிடம் பேசிவிட்டுச் சென்றார்கள்.

சற்றுநேரத்தில், ‘வீட்டுக்குப் போகலாமா? பசிக்குது’ என்று பாவை கேட்டதும், இருவரும் வெளியே வந்தார்கள்.

கார் நிறுத்துநிமிடம் நோக்கி நடக்கையில், “பாவை, இனிமே வீட்ல போய் குக் பண்ணி சாப்பிட லேட்டாகும். ஸோ, ரெஸ்டாரென்ட் போகலாமா?” என, ‘அவள் என்ன சொல்வாளோ?’ என்ற தயக்கத்துடன் கேட்டான்.

அவள் யோசித்தாள்.

“நம்ம இதுவரைக்கும் இந்த மாதிரி…” என அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்னே, “போகலாம்” என்று சொல்லி, அவனுடனான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள்.

அதன்பிறகு,

சற்று நேரத்திற்க்கு… விஸ்தாரமான உணவகம்! வண்ண விளக்குகள்! விதவிதமான உணவுவைகள்! விரும்பி உண்ணுதல்! விவாதமில்லா பேச்சுக்கள்! இவை மட்டுமே, இருவருக்கு!!

அதன்பின், இருவரும் கிளம்பினார்கள்.

மஹிந்திரா கார் பாவை வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பயணம் முழுவதும், காலையில் அலைபேசியில் பேசியது… தன்னைக் கூட்டிச் செல்ல வந்து காத்திருந்தது… உணவகத்தில், அவனின் கரிசனமான செயல்கள்… அனைத்தையும் பாவையின் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், “பாவை” என்ற குரல் கேட்டதும், நிகழ்கணத்திற்கு வந்தாள்.

‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தவளிடம், “வீடு வந்திருச்சி” என்றான்.

எதுவும் சொல்லாமல்… கதவைத் திறந்து இறங்கப் போனவளுக்கு, அவனைப் பிரிவதில் ஒரு விருப்பமின்மை உணர்வு வந்தது.

இதுநாள் வரைக்கும் வராத உணர்வு, அது!

இறங்காமல் யோசித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன், “என்னாச்சு பாவை?” என்று கேட்டான்.

“நீங்க…” என்று ஆரம்பித்தவள், “டைம் என்ன?” என்று கேட்டு முடித்தாள்.

“10:30” என்றவன், “ஏன், எதுக்கு கேட்கிற?” என்றான்.

“கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமா? வீட்டுக்கு வந்திட்டுப் போறீங்களா?” என்று கேட்டதும், “டோர் க்ளோஸ் பண்ணு” என்றான்.

அவள் கதவை அடைத்ததும், “இதுக்கு எதுக்கு இவ்வளவு ஹெசிட்டேட் பண்ற?” என்று சொல்லிக் கொண்டே, கேட் முன் நிறுத்திய காரை ஓரமாக நிறுத்தினான்.

பின்… இறங்கி, இருவரும் மாடிக்குச் சென்றார்கள்.

வீட்டின் கதவைத் திறந்தவளிடம், “பாவை, இங்கே இருக்கலாமா?” என்று, விசாலமான மாடி முற்றத்தைக் காண்பித்தான்.

அவள் சரியென்றதும்… சற்று நேரம், மாடி முற்றத்தில் நடந்து கொண்டே பேசினார்கள்! போதவில்லை!!

அதன்பின், மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பேசினார்கள்! போதவில்லை!!

மௌனத்தின் பிரியங்களைப் போல்… இன்று, பேச்சின் பிரியங்களும் அதிகமாயிருந்தது!

பின், மாடியின் சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்கள்.

பெரிதாக நிலவொளி இல்லாத இரவு! இருள் போர்வைப் போர்த்திக் கொண்டு உறங்கும் அக்கம்பக்கத்து வீடுகள்!!

வீட்டின் வரவேற்பறை விளக்கிலிருந்து விழுந்து சிதறிய ஒளி மட்டுமே, முற்றத்தின் வெளிச்சம் என்று!!!

பேசிக் கொண்டிருக்கும் போதே, “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்று கேட்டாள்.

‘கேளு’ என்பது போல் பெருவிரல் உயர்த்தினான்.

“இந்த ரெண்டு நாளா, என்னை மிஸ் பண்ணீங்களா?”

“அதென்ன ரெண்டு நாள்? எப்போ உன்கூட இல்லைனாலும் மிஸ் பண்ணுவேன்”

” ப்ச்! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க”

“ம்ம்! மிஸ் பண்ணேன்”

“அப்படி என்னை மிஸ் பண்றப்போ, என்ன தோணும்?” என்றாள், அவனிடம் கோடி காதலை எதிர்பார்த்து!

“உன்னை கிஸ் பண்ணனும்னு தோணும்” என்றான், அவன் காதல் கேடியாய்!

அந்தப் பதிலில் கொஞ்சம் தடுமாறினாலும், “அப்போ லவ் பண்ணா அழுவீங்களா?” என்றாள் கேலியாக!

“ஹே ஹனி! மிஸ் பண்றப்பவே கிஸ் பண்ணத் தோணும்போது, லவ் பண்றப்போ தோணாதா?!” என்றான் ஜாலியாக!

ஒரு தினுசான அவனது பேச்சில், அவளது ஒட்டுமொத்த திசுக்களும் தித்தித்தது! அதைத் திண்டாடித் திண்டாடித் தேகத்தினுள் தலைமறைவாக்க முயற்சித்தாள்!

ஆனால், முயற்சியில் தோற்றுப்போனாள்!!

அவளின் திண்டாட்டத்தைக் கண்டவன், “மிஸஸ் பாண்டியன்! நான் சொன்ன மாதிரி, நீங்களும் சொல்லுங்க” என்றான் கொண்டாட்டமாய்!

“என்ன சொல்லணும்?’ என்பது போல் பார்த்தாள்.

“மிஸ் பண்றப்போ, லவ் பண்றப்போ… உனக்கு, என்ன தோணும்னு சொல்லு!”

“அது … அது…” என்று திண்டாட்டத்துடன் திணறியவளைப் பார்த்து, “ஹலோ! இன்னைக்கும் அப்பளம் பொறிக்க வேண்டாம். ஆன்சர் வேணும்” என்றான் சிரித்துக் கொண்டே!

“ஆன்சர்தான??” என்று கேட்டவள், இதழ்களில் புன்னகையுடன்… அவனது வலக்கை விரல்களுடன், தன் வலக்கை விரல்களைக் கோர்த்துக் கொண்டு, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

இதமாக சாய்ந்து கொண்டு… இணைந்திருந்த கரங்களை, அவன் இதழ்களின் அருகே கொண்டு சென்றாள், பாண்டியனின் பாவை!

சொல்லாமலே அவள் செயலின் அர்த்தம் புரிந்தது.

இடக்கரத்தால், அவள் தோள்களை அன்பாய் அணைத்துக் கொண்டு, அவளது உள்ளங்கையில் முத்தம் வைத்தான், பாவையின் பாண்டியன்!!

ஆகா! காலதாமதமான முதல் முத்தம்! காலஅளவுகள் இல்லாமல் கொடுக்கப்பட்ட முதல் முத்தம்!!

முத்தத்தின் முடிவில்… அவள் உள்ளங்கை முழுவதும், அவன் உதட்டு ரேகைகளின் கறைகள்!

கறை நல்லது! ஆம், முத்தத்தின் கறை நல்லது!!