ISSAI,IYARKAI & IRUVAR 16.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 16


அடுத்த நாள், பாண்டியனின் பிறந்தநாள்

மதியம் மூன்று மணிவரை… நளினி பிரவீனுடன் நேரத்தை செலவிட்டவன், அதன்பின் பாவையைப் பார்க்கச் சென்றான்.

தான் கோவிலுக்குச் செல்வதாகவும், அங்கே வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறும் பாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆதலால்… மனைவியை அழைத்துச் செல்ல, கோவிலின் முன் காத்திருக்கிறான்.

அவன் கோவில் முன்தான் நிற்கிறான் என்று பாவைக்குத் தெரியும். இருந்தும், அவனை உள்ளே அழைக்கவில்லை.

காரணம்?

தன் நம்பிக்கைகளை அவன் மதிப்பது போல, அவன் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொண்டாள். மேலும், அந்தக் காத்திருப்பில் இருக்கும் காதலையும் கண்டுகொண்டாள்!

கோயிலின் உள்ளே…

மாலை நேரமென்பதால்… மஞ்சள், வெள்ளை நிற விளக்குகள் போடப்பட்டிருந்தன!

பூ அலங்காரத்துடன் கடவுள்! தீபங்கள் ஏற்றப்பட்ட கருவறை! திருநீறும் குங்குமமும் சந்தனமும் கலந்த நறுமணம்! கூடவே, அகர்பத்தி வாசனையும்!

சன்னிதானத்தின் முன் நின்று கொண்டு… இரு கரங்களையும் குவித்து, மனமுருகி நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

பின், பூசாரி வந்து அர்ச்சனை தட்டைத் தந்ததும், வாங்கி கொண்டாள். மேலும்… தீபத்தை வணங்கியவள், குங்குமம் திருநீறும் எடுத்துக் கொண்டாள்.

அதன்பின்… சூட்டைத் தணிக்கவென்று தண்ணீர் ஊற்றிவிடப்பட்ட பிரகாரத்தை… பார்த்து, பதனமாகச் சுற்றி வந்தாள்.

பின்னர் வெளியே வந்தவள்… முதலில் இருந்த பூக்காரரிடம் பூ வாங்கி வைத்துக் கொண்டே, கணவனை நோக்கி வந்தாள்.

சொன்னது போலவே கிளிப்பச்சை நிற புடவை… இலைப்பச்சை நிற ரவிக்கை அணிந்து வருபவளை, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்!

அவனது அன்பு அதிகமாவதால், அவள் அழகாய் தெரிந்தாள்!!

அருகில் வந்ததும், “போகலாமா?” என்று கேட்டான், அந்த இல்லாள் ரசிகன்!

இசைவாய் ஓர் தலையசைப்பு மட்டும், இசைப் பிரியையிடமிருந்து!!

கிளம்பினார்கள்!

தேன்பாவை வீடு

வீட்டின் உள்ளே நுழைந்ததுமே, அவன் முன்னே சென்று நின்றாள். ‘என்ன?’ என்கின்ற கேள்வியுடன், அவனது கண்கள் அவளைப் பார்த்தன.

“ஒரு சந்தோஷமான விஷயம்” என்றாள் ஆழமான குரலில். பின், “கச்சேரி சான்ஸ் கிடைச்சிருச்சி” என்றாள் ஆனந்தமான குரலில்.

ஆனந்த அதிர்ச்சியில் அப்படியே அசையாமல் நின்றான்.

“கங்கிராட்ஸ் எதுவும் இல்லையா?” என்று கேட்டாள்… உன்னைத் தவிர, வேறு யாரிருக்கிறார் என் வெற்றியைக் கொண்டாட என்பது போல்!

“ச்சே” என்றவன், அவள் உள்ளங்கைகளைப் பிடித்திழுத்து, தன் உள்ளதோடு உரசி நிறுத்திக் கொண்டான், நானொருவனே போதும் என்பது போல்!

“கங்கிராட்ஸ் ஹனி!” என்றவன், “எப்படி கிடைச்சது?” என்று கேட்டான்.

“கோயில்-ல பாடினதை வச்சி, கேட்டாங்க”

“ஓ! என்கிட்ட சொல்லவேயில்லை?”

“காலையிலதான் கன்ஃபார்ம் பண்ணி ஸ்லாட் அலாட் பண்ணாங்க. கோயிலுக்குப் போயிட்டு வந்துதான் உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்” என்றாள், அவன் கண்களைப் பார்த்து!

“ஓகே ஓகே” என்றான், சற்று அவளை விலக்கி நிறுத்தி!

“ரொம்ப பெரிய சபா கிடையாது” என்றாள், முழுதாய் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டே!

“அட! எதுலயாவது சேட்டிஸ்ஃபை ஆகணும்-ம்மா!” என்றவனுக்கு… அலைபேசி அழைப்பே வந்ததும், அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவனின் பேச்சால், சுருக்கென்று ஏதோ தைத்தது பாவைக்குள்!

சுயஅலசலில் அடுத்த கட்டமாக… தன்னுடைய எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கட்டும்! அவனது அன்பின் வெளிப்பாடுகளில், ஏன் தன் மனம் திருப்தி அடையவில்லை என்ற கேள்வி வந்தது?

திருப்தியடையவிடாமல் எது தன்னை தடுக்கிறது? என்று ஆராய ஆரம்பித்தாள்.

அக்கணம், “ஹனி” என்று சொல்லிக் கொண்டு வந்தவனிடம், “ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி, படுக்கையறைக்குச் சென்று… வண்ணத்தாள்கள் சுற்றப்பட்ட பரிசை எடுத்து வந்து… அவனிடம் தந்தாள்.

‘கிஃப்ட்டா?” என்று ஆசையுடனும் ஆச்சரியத்துடனும் கேட்டவனிடம், “ம்ம்ம்” என்றாள்.

பின், “நான் டின்னருக்கு ரெடி பண்றேன்” என்று சமயலறைச் செல்லப் போனவளிடம், “பர்த்டே ஸ்பெஷல் டின்னர்?” என்றான் கேள்வியாக!

“எதுக்கும் சாப்பிட்டுப் பார்த்திட்டு முடிவு பண்ணுங்க” என்றாள் கேலியாக!

சிரித்துக் கொண்டே பரிசைத் திறக்க ஆரம்பித்தான்! முழுவதும் திறந்ததும், படு வியப்படைந்தான்!

ஒரு கருப்பு நிற சட்டமிடப்பட்ட புகைப்படம், அது! அளவில் கொஞ்சம் பெரியது!!

அதைக் கையில் வைத்துக் கொண்டே, சமயலறைச் சென்றான்.

மனைவியின் அருகில் சென்றதும், மீண்டும் ஒருமுறை புகைப்படத்தைப் பார்த்தான்.

தனித்தனியா எடுக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, ஒரு பெரிய புகைப்படக் கலவை உருவாக்கப்பட்டிருந்தது, அந்தப் புகைப்படம்!

இதில் அவன் வியப்படையும் வண்ணம் என்ன இருக்கின்றதென்றால், அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் அவளெடுத்தது!

எப்படிக் கண்டுகொண்டான் என்றால்? ஒன்று, எடுத்திருந்த இடம்!

மாடி முற்றத்தில் அமர்ந்திருந்த காக்கை! வீட்டு உரிமையாளரின் ரோஜா செடிகள்! தினம் வரும் தண்ணீர் லாரி! இப்படித்தான் இருந்தன புகைப்படங்கள்!

மற்றொன்று, எடுத்திருந்த விதம்!

சுமார் ரகம்தான் அனைத்தும்! ஆனால், அவனுக்குச் சுகம் தந்தது!!

புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “நீங்க வாங்கிக் கொடுத்த கேமரா வச்சிதான் எடுத்தேன். உங்க அளவுக்கு  எடுக்க முடியாது! ஏதோ எனக்குத் தோணதை எடுத்து வச்சேன்!!” என்றாள்.

அவள் சொல்வது உண்மைதான்!

துல்லியமாகப் புகைப்படம் எடுப்பவனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தோரயமாகத்தான் எடுத்திருந்தாள்! ஆனால், அந்தத் தோராயத்தில் அவன் துல்லியங்கள் எல்லாம் தோற்றுப் போயின!

அது காதல்!!

மெல்லியதான புன்னைகை உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்தபடியே, மீண்டும் சமைக்க ஆரம்பித்தாள்.

தன்னிடம் அளவுகடந்த அன்பை எதிர்பார்க்கிறாள் என்று தெரியும். ஆனால்… அதே அளவு அன்பை, தன் மீது வைத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான்.

தன் வாழ்வின் ஆணிவேரென்று நினைத்தவள், என்றும் வேறாகிப் போக வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்டான்!

அவளுடன் வாழப் போகும் நாட்கள் யாவும், வசந்தம் தரும் நாட்கள் என்று உணர்ந்தான்.

உணர்ந்ததும் உணர்ச்சிவசப்பட்டு, “ஹனி” என்று அழைத்து… அதீத அன்பின் வெளிப்பாடாய், அவளை அணைத்துக் கொண்டான்.

இந்நேரத்தில் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை, ஒருநொடி அவள் உடல்மொழி காட்டியது. மறுநொடியிலிருந்து இரு கரங்களால் கணவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“கிஃப்ட் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்றாள், அவன் உள்ளத்தோடு ஒட்டி நின்று கொண்டு!

“எக்ஸ்பெக்ட் பண்ணலை ஹனி!” என்றான் கணிசமான காதலைக் கண்களில் கொட்டி!

“ஹேப்பி பர்த்டே பாண்டியன்” என்றாள், அவன் கண்கள் கொட்டிய காதலை அள்ளி எடுக்கும் பார்வையுடன்!

அந்தப் பரிசு… அந்தப் பார்வை… அந்த ‘பாண்டியன்’… அந்தப் பாவை… எல்லாம் சேர்ந்து அவனை ஒரு வழியாக்கியதில், பாண்டியனின் பாவையை ஆரத் தழுவிக் கொண்டான்.

பின்… உள்ளங்கைகளால் அவளிரு கன்னங்களை ஏந்தி… உள்ளத்தின் உவகையுடன்… உதட்டில் புன்னகையுடன்… அவளது உச்சி நெற்றியில் முத்தமிட்டான்.

முத்தத்தின் முடிவில், சிவாபாண்டியனின் பிறந்தநாள் கொண்டாட்டம் முழுமையடைந்தது!!

****    

தேன்பாவை வீடு

அடுத்து எட்டு நாட்கள் கடந்திருந்தது.

கச்சேரி பாடலுக்கான பயிற்சி, அபங் பயிற்சி வகுப்புகள், வீட்டு வேலைகள் பார்ப்பது, பாண்டியனுடன் பேசுவது… இப்படி இளைப்பாற நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஒன்பதாவது நாளன்று வகுப்புகள் கிடையாது என்றதும், வேறு ஏதாவது செய்யலாமே என யோசித்தவள்… கச்சேரி அன்று உடுத்தப் போகும் பட்டுப் புடவைக்கு குஞ்சம் வைக்க முடிவு செய்தாள்.

பழக்கமான ஒன்றுதான்!

எனவே பட்டுநூல் வாங்கி வந்து குஞ்சங்கள் தயாரித்து… அதில் மணிகள் கோர்த்து, புடவை முந்தானையில் வைத்து… மும்முரமாக மூழ்கிப் போய் தைத்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய நாள், மத்தியான நேரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டியன் வந்தான்.

வெளிச்சத்திற்காகத் திறந்திருந்த கதவின் அருகே நின்று, “ஹாய்” என்றான், காலணிகளைக் கழட்டிக் கொண்டே!

நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். பின், தைக்க ஆரம்பித்தாள்.

உள்ளே வந்தவன்… கையிலிருந்த பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு,  “இதெல்லாம் பண்ணுவியா?” என்று கேட்டான்.

“ம்ம்” என்றாள் செய்யும் வேலையில் கவனம் இருந்தபடியே!

புடவை அழுக்காகாமல் இருக்கவென்று விரித்திருந்த பாயில் அமர்ந்து கொண்டு, மேலும் இரண்டு மூன்று கேள்வி கேட்டான்.

சரியான கவனத்துடன் அவள் பதிலளிக்கவில்லை. எனவே, அந்தப் பாயின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டான்.

அதன்பிறகு,

சற்று நேரத்திற்கு…  குஞ்சம் தயாரித்தல்! தங்கநிற மணி வைத்தல்! புடவையில் குஞ்சம் வைத்து தைத்தல்!! இவை மட்டுமே, பாவைக்கு!

அதன் பின், நிமிர்ந்து பார்த்தாள். பாண்டியன் படுத்திருந்ததைப் பார்த்ததும், எழுந்து சென்று கதவை அடைத்து வந்தாள்.

பின், புடவையை எடுத்து மடித்து வைத்துவிட்டு… படுத்திருந்தவன் அருகில் வந்து அமர்ந்து, அவன் தோளில் கை வைத்தாள்.

“முடிச்சாச்சா?” என்று கேட்டவன், கையைத் தலைக்கு அணைவாக வைத்துக் படுத்து கொண்டான்.

“ம்ம்ம்” என்றவள், “பாட்டு ப்ராக்டிஸ்… வீட்டு வேலை அப்படினே இருந்ததா, அதான் கொஞ்சம் ரிலாக்ஸாக…” என்று சொல்லும் போதே, “மீ டைம்” என்று மட்டும் சொன்னான்.

சட்சட்டென சில நிகழ்வுகள் கண் முன் வந்து நின்றன, பாவைக்கு!

‘ஒரு ஒன் அவர் கொடு, ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்து பேசறேன்’ என்று அவன் சொன்னது… ‘இல்லை, என்னிடம் பேசு’ என்று தான் நின்றது… அதன்பின், ‘அவாய்ட் பண்றீங்க’ என்று வாக்குவாதம் செய்தது… இப்படியெல்லாம் கண்முன் காட்சிகளாக விரிந்தன.

‘ஏன் அப்படி?’ என நினைக்கும்போதே… இன்று தனக்கான நேரத்தை அவன் தொந்தரவு செய்யாதது புரிந்தது.

“பாவை” என்றான்.

படுத்திருந்தவனைப் பார்த்தாள்.

“நம்மளோட ரொட்டின் லைஃப்-ல, கண்டிப்பா மைன்ட் டயர்ட் ஆகும். மைன்ட் ரிலாக்ஸ் ஆகாம ஓடிக்கிட்டு இருந்தா, ஒரு கட்டத்திலே ‘என்ன வாழ்க்கைன்னு?’ சலிப்பு வந்திடும்!

ஸோ, இந்த மாதிரி மீ டைம் எடுத்து மைன்ட்-அ ரீசார்ஜ் பண்ணிக்கணும்.

ரிலாக்ஸ் ஆகமாலே இருந்தா, கண்டிப்பா அது ரிலேஷன்ஷிப்-அ பாதிக்கும். பட் ரிலாக்ஸாகிட்டா, போரிங்நெஸ் போயி ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங் ஆகும்

சிம்பிளா, அது உனக்கான நேரம்! உனக்கு எது பிடிக்குதோ, அதைப் பண்ணனும்!அந்த நேரத்தை நான் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது!!” என்று தன் அன்பின் அறிவியலை விளக்கினான். 

“இப்போ புரியுது” என்றவள், “ஆனா, அன்னைக்கு நீங்க என்னை அவாய்ட் பண்ணறீங்களோன்னு நினைச்சேன்” என்றாள்.

“ஹே ஹனி! உன்னை அவாய்ட் பண்ணிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?” என்றான், உன்னை தவிர்க்கவில்லை, நீ என் வாழ்வில் தவிர்க்க முடியாதவள் என்பது போல!

சொன்னதோடு நிற்காமல், தன்னவள் மடியில் தலை வைத்துக் கொண்டான்.

“என்ன இது?” என்றாள், திகைப்பு-தித்திப்பு இரண்டும் சரிவிகிதமாக கலந்த குரலில்!

“மீ டைம்(me time) முடிஞ்சிருச்சுல? இது வி டைம்(we time)! இப்படிதான்!!” என்றான், அவள் குரலிலிருந்த திகைப்பை ஒதுக்கிவிட்டு, தித்திப்பை எடுத்துக் கொண்டு!!

அவனது பேச்சில்… அவளின் திகைப்பு ஓடிப்போயிற்று! தித்திப்பு முழுவதுமாய் ஓட்டிக் கொண்டது! எனவே, அவனது கேசத்தை நேசத்துடன் கோதிவிட ஆரம்பித்தாள்!!

“பாண்டியன், நான் உங்ககிட்டஒண்ணு கேட்கணும்” என்றாள்.

“கேளு!”

“இப்போ எப்படிப் பேசி புரிய வைக்கிறீங்க? ஏன் முன்னாடி பேசவேயில்லை?”

“நாம எப்போ முழுசா பேசியிருக்கோம்?” என்று மட்டும் கேட்டான்.

யோசித்துப் பார்த்தாள்.

‘அக்கறை இல்லை’ என்று புரியாமல் பேசிய தினத்தில்… அவன் பேசச் சொல்லியும், பேசாமல் ‘பாட்டு பயிற்சி’ என சென்றது!

‘கோவிலுக்கு வரவில்லை’ என கோபம் கொண்ட நாளில்… பால்கனியிலிருந்து அவன் பேச அழைத்தும், தான் பேசாமல்  படுத்துறங்கியது!

கடைசியாக கச்சேரி அன்று… ‘அறையில் சென்று பேசலாம்’ என்று சொல்லியும், எல்லோர் முன்னிலும் நின்று பேசியது!

யோசிப்பின் முடிவில்… அவன் பேச வரும்பொழுது, தானும் பேசியிருக்க வேண்டுமோ? என நினைத்தாள்.

சுய அலசலில் அடுத்த கட்டமாக…  ‘எது தன்னை…?’ என்கின்ற போதே, ‘ப்ச் வேண்டாம்!’ என்று விட்டுவிட்டாள்.

காரணம்?

அந்தச் சுய அலசலில், பெரும்பான்மையான புரிதலின்மை தன்னிடம் இருப்பது போன்று தெரிவதால்… அவளுக்குள் அது ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்க ஆரம்பித்தது.

ஆதலால், அதை விட்டுவிட்டாள்!

மேலும் அதிகப்படியாக யோசித்ததால், தலைகோதுவதை நிறுத்தி இருந்தாள்.

அதை உணர்ந்தவன்… அவளைப் புரிந்தவன்… “ஹனி நடந்ததை நினைக்காத” என்றான்.

சிரித்துக் கொண்டே, மடியில் தலைசாய்த்திருக்கும் தன்னவனைப் பார்த்தபடியே… மீண்டும் தலைகோத தொடங்கினாள்.

அவன் சொன்னது போல் ஆரோக்கியமான விவாதத்தை… சண்டை என்று எண்ணி தவிர்க்காமல் இருந்திருந்தால், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்திருக்க முடியும் எனத் தெரிந்தது.

இந்தப் பிரிவும் வந்திருக்காது என மனம் வருந்தியது.

அவனுக்கு… தன் மீது அன்பு, அக்கறை இருக்கிறது என்ற உண்மை புரிந்தது. இதற்கு மேலும் புரிந்து கொள்ளாமல் இருந்தால்… தன் புரிதலில்தான் பிழை என்று தெரிந்தது.

அவன் அருகாண்மையில், ‘தனக்கென யாருமில்லை’ என்ற உணர்வு போயொழிந்து, ‘யாதுமாய் நானிருக்கேன்’ என்ற உணர்வு மேலோங்கியிருப்பதை உணர முடிந்தது.

அவனுடன் வாழப் போகும் நாட்கள் யாவும், வசந்தம் தரும் வரம் வாங்கி வைத்திருக்கும் நாட்கள் என்பதையும் உணர்ந்தாள்.

கூடவே, ராக்கிங் சேர்… கூழாங்கற்கள்… போன்சாய் மரங்கள்… பால்கனி … இந்த இடங்களில் அவனுடனான பேச்சுக்கள் அனைத்திற்கும் மனம் ஏங்க ஆரம்பித்தது.

இனி இவனைப் பிரிந்து வாழ முடியாது என்பதை உள்ளம் உணர்ந்தது.

இக்கணத்தில்… தான் உணர்ந்ததை எப்படி அவனுக்கு உணர்த்த என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

தீவிர யோசனை என்பதால் தலை கோதுவதை நிறுத்தியிருந்தாள். மெனக்கெடல் எடுத்து சிறப்பாய் உணர்த்த வேண்டுமென்பதால், இப்படி ஓர் தீவிர யோசனை!

கண்களை மூடிக் கொண்டு, ‘எப்படி உணர்த்த?’ என்று தலை சொரிந்து கொண்டே யோசித்தாள்.

‘பாண்டியன்… சேர்ந்து வாழாலாம்’ என்று சொன்னாலென்ன? என்று ஒரு மனம் கேட்க, ‘ச்சே ரொம்பச் சாதாரணமா இருக்கு’ என்று ஒரு மனம் வேண்டாமென்றது!

‘பேசாமல், ஐ லவ் யூ சொல்லிவிடு’ என்று இதயத்தின் ஒரு அறை எடுத்துக் கொடுத்தது!

‘அட! உனக்கு அவனைப் பிடிக்கும் என்று ஓராயிரம் முறை சொல்லியாயிற்றே’ என இதயத்தின் மற்ற மூன்று அறைகளும் எள்ளி நகையாடின!!

உடனே, ‘ச்சே’ என நினைத்து… தன் கையால் பின்னந்தலையில் லேசாகத் தட்டிக் கொண்டாள்.

ஆயிரம் ஆயிரம் ஆசையுடன் முடிவெடுத்தவள், அதைப் பிரகடனப்படுத்த வழிதெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு திண்டாடினாள்.

பின்… பெருவிரலால் நெற்றிப்பொட்டைக் குத்திக் கொண்டே, ‘வேறெப்படி உணர்த்த?’ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், “பாவை” என்ற ஓர் அழைப்பு!

கண் திறந்து பார்த்தாள். பாண்டியன் எழுந்து அமர்ந்திருந்தான்.

‘இவன் எப்பொழுது எழுந்தான்?’ என்ற கேள்வியோடு பார்த்தாள். பின், ‘தலை கோதுவதை நிறுத்தியதும், எழுந்திருப்பான்’ என்ற பதிலோடு பார்த்தாள்.

அவளின் செயல்களையெல்லாம் பார்த்ததால், “ஏதாவது சொல்லணுமா ஹனி?” என்று கேட்டான், ஆழமான பார்வைகளுடன்!

“அது… அது…” என்று, கம்பிக் கருவி வாசிப்பவளின் வார்த்தைகள் தந்தியடிக்க ஆரம்பித்தன!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!