ISSAI,IYARKAI & IRUVAR 6.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 6

விடிகாலையில் ஒரு ஐந்து மணியளவில், சிவா வீட்டின் அழைப்பு மணி அடித்தது. செண்பகம் எழுந்து வந்து, கதவு திறந்தார்.

சிவா நின்று கொண்டிருந்தான். ஐந்து நாட்கள் கழித்து திரும்பி வருவேன் என்று சொன்னவன், நான்கு நாட்களிலே வந்திருந்தான்.

மகனைக் கண்டதும், “என்ன சிவா, சீக்கிரமா வந்திட்ட? பாவைக்காகவா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

அவனும் சிரித்துக் கொண்டான்!

“நீ வர்றது, பாவைக்குத் தெரியுமா?”

“சீக்கிரமா வருவேன்னு சொல்லியிருந்தேன்” என்றவன், “இவ்ளோ ஏர்லியா வருவேன்னு தெரியாது” என்றான்.

“ஓ!”

“பாவை அங்கேதான் இருக்காளா-ம்மா?” என்று கேட்டான்.

“ஆமா சிவா!! ரெண்டு நாள் நல்லா இருந்தா. அப்புறம் ஒரு மாதிரி டல்லா தெரிஞ்சா. அதான், ‘உன் பாட்டிகூட இருந்திட்டு வா-ன்னு’ சொல்லி, நான்தான் அனுப்பி வச்சேன்”

“ம்ம்ம்”

“போ மாட்டேன்னுதான் சொன்னா! நான்தான், ‘சிவா ஒன்னும் சொல்ல மாட்டான். போ-ன்னு’ சொல்லி அனுப்பி வச்சேன்” என்றார்.

“ம்ம்ம்”

“குடிக்க எதுவும் வேணுமா?”

“இல்லைம்மா வேண்டாம்” என்றவன், “ரொம்ப டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுக்கணும்” என்றான்.

“சரி கண்ணா! போய்த் தூங்கு! அப்புறமா போய் பாவையைக் கூட்டிட்டு வா” என்று சொன்னதும், அறைக்குள் சென்றான்.

அதிகாலைப் பொழுது என்பதாலும்… அசதி அதிகம் இருந்ததாலும்… பாவைக்கு ஒரு குறுஞ்செய்து அனுப்பிவிட்டு, சிவா தூங்கிவிட்டான்.

******

அன்றைய நாள் விடிய ஆரம்பித்திருந்தது.

பாவை எழுந்திருந்தாள். அதிகாலை வேளையின் வேலைகளை முடித்துவிட்டு, குளித்து பூஜை அறைக்கு வந்தாள். விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு, மீண்டும் அவளது அறைக்குச் சென்றாள்.

அதன் பிறகு…

சற்று நேரத்திற்கு… வீணை மீட்டல்! குரலுக்கான பயிற்சிகள்! ஸ்வர வரிசைகள்! சில பாடல்கள்! இவை மட்டுமே!!

பின், அலைபேசியைக் கையில் எடுத்தாள். பாண்டியனிடம் இருந்து, ‘ரீச்சிடு ஹோம்’ என்ற குறுஞ்செய்தி வந்திருந்தது.

வாசித்ததும், முகத்தில் ஒரு முறுவல் வந்தது. பின், அவனை அலைபேசியில் அழைத்தாள்.

பாண்டியன் உறங்க ஆரம்பித்து, கொஞ்ச நேரம்தான் இருக்கும். அலைபேசி ஒலி கேட்டது.

உறக்கம் கலையாமல், கண்கள் திறக்காமல்… அலைபேசியை எடுத்து காதில் வைத்து, “ஹலோ” என்றான்.

“என்ன பண்றீங்க?” என்று ஆரம்பித்தாள்.

ஒரு கண்ணை மட்டும் திறந்து, திரையைப் பார்த்தான். பின், “சொல்லு ஹனி” என்றான்.

“நீங்க சொல்லுங்க. என்ன பண்றீங்க?”

“தூங்கிக்கிட்டு இருக்கேன்”

“தூங்கிறீங்களா?? மணி ஆறரை”

“அதுக்கென்ன?”

“என்னை எப்போ கூப்பிட வருவீங்க??”

“வர்றேன் பாவை. கொஞ்ச ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்” என்றான் அசதியில்!

“ப்ச்… எப்போ??” என்றாள் அதன்பின்னும்!!

“தெரியலை! பட், செம்ம டயர்ட்!! ஸோ, தூங்க விடு” என்றான் தூக்க கலக்கத்தில்!

“சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிட்டுப் போங்க. நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன்” என்று சொல்லி, பாவை அழைப்பைத் தூண்டித்தாள்.

அலைபேசியை வைத்துவிட்டு, பாண்டியன் தூங்கிவிட்டான்.

நேரம் கடந்தது.

காலை வேளை போய், நண்பகல் வேளை வந்தது. அப்போதுதான் எழுந்தான், சிவா.

எழுந்ததும் அலைபேசியைப் பார்த்தான், ‘பாவை அழைத்திருக்கிறாளா?’ என்று!! இல்லை, அழைப்புகள் ஏதும் இல்லை.

எழுந்து குளித்துவிட்டு வந்தவனுக்கு, செண்பகம் ஜூஸ் தயாரித்துக் கொடுத்தார்.

“சிவா! பாவை பாட்டி போன் பண்ணியிருந்தாங்க”

“என்னவாம்?”

“மத்தியான சாப்பாட்டுக்கு அங்கே வர சொன்னாங்க!”

“ஓ! அப்போ நீங்களும் வர்றீங்களா-ம்மா?” என்று கேட்டான்.

“ஆமா சிவா! அவங்களைப் பார்த்திட்டு, அப்படியே பாவையைக் கூட்டிட்டு வந்திடுவோம்” என்று, இருவரும் கிளம்பினர்.

வேணிம்மா வீடு!

கிரி, கிரியின் மனைவி மற்றும் கௌசி இருந்தனர். மீனாட்சி மற்றும் சங்கர் வெளியே சென்றிருந்தனர்.

கிரியும் வேணிம்மாவும் வரவேற்பறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வருவார்கள் என்று தெரியும் என்பதால், வாசற்கதவு திறந்துதான் இருந்தது.

பாவை, அவளது அறையில் இருந்தாள்.

சிறிது நேரத்தில்… சிவாவும், செண்பகமும் வந்தனர். வேணிம்மாவும், கிரியும்… எழுந்து நின்று, வரவேற்றனர்.

இருவரையும் பார்த்து, சிரித்த முகத்துடன்… “உட்காருங்க” என்றார், வேணிம்மா! இதற்கிடையே கிரியின் மனைவியும் வந்திருந்தார்.

“கௌசி” என்று, கிரி சத்தமாக அழைத்தார்!

அறையிலிருந்து கௌசி வந்ததும், “பாவையைக் கூப்பிடு” என்றார் கிரி!

“இதோ அப்பா” என்று சொல்லி, கௌசி சென்று பாவையை அழைத்து வந்தாள்.

பாவையைப் பார்த்ததும், பாண்டியன் புன்னகை செய்தான். ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை! மாறாக, அவன் பார்வையைப் புறக்கணித்தாள்.

அதற்குள், “வாங்க, லேட்டாகிடுச்சி. சாப்பிடலாம்” என்றார் வேணிம்மா.

அனைவரும் எழுந்தனர்.

சற்று நேரத்தில்… சாப்பாட்டு மேசையில்!

கிரி, வேணிம்மா, கௌசி… செண்பகம், சிவா அமர்ந்திருந்தனர். கிரியின் மனைவியும் பாவையும் பரிமாற ஆரம்பித்தனர்.

“பாவை நீ சாப்பிடலையா?!” என்று பாண்டியன் கேட்டான்.

“அப்பவே சாப்பிட்டேன்” என்று பதில் சொல்லிவிட்டு, செண்பகத்திற்குப் பரிமாறினாள்.

“அது… சரியான நேரத்தில சாப்பிடலைன்னா அசிடிட்டி வரும். பாடும்போது அது தொந்தரவு கொடுக்கும். அதான் கரெக்ட் டைம்-க்கு சாப்பிட்டிடுவா. அங்கேயும் கரெக்ட் டைம்-க்கு சாப்பிடுற மாதிரி பார்த்துக்கோங்க” என்றார்.

‘பார்த்துப்போம்’ என்பது போல் அம்மாவும் மகனும் தலையாட்டினர். 

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே…

“ரொம்ப நேரம் உட்கார்ந்திட்டேன் போல, உட்கார முடியலை” என்று எழுந்த வேணிம்மா, “நீங்க சாப்பிடுங்க! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்” என்று நடக்க ஆரம்பித்தார்.

பாவை, பின்னேயே வருவதைக் கண்டு… “நீ அவங்களைக் கவனி! கிளம்பிறப்போ என்னை எழுப்பு” என்று சொல்லி, அவரது அறைக்குச் சென்றார்.

சில நிமிடங்களுக்குப் பின்,

“சிவா, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்?” என்றார் கிரி!

 ‘இவர், என்ன சொல்லப் போகிறார்?’ என்ற ரீதியில்… பாவை கிரியைப் பார்த்தாள்.

‘இந்த வீட்டின் மருமகன்! ஏன் இப்படி ஒருமை விளிப்பு?’ என்ற அர்த்தங்களுடன் செண்பகம், கிரியைப் பார்த்தார்.

“சொல்லுங்க” என்றான் சிவா!

“பாவை… ப்ராக்டிஸ்-க்கு கரெக்டா வர்றமாதிரி பார்த்துக்கணும்” என்றார்.

“கண்டிப்பா அங்கிள்! அவளுக்கு மியூசிக் பிடிச்சிருக்கு! ஸோ, என்னோட ஃபுல் சப்போர்ட் இருக்கும்” என்றான்.

அவனின் அந்தப் பதிலில், கௌசிக்கும் கிரிக்கும் கொஞ்சம் திருப்தியில்லை.

“அப்போ இனிமே கச்சேரி சம்பந்தமான விஷயங்களை நீங்களே பார்த்துப்பீங்களா?” என்று கேட்டார்.

“அது எனக்குத் தெரியாத ஏரியா! நான் எப்படி?” என்று தயங்கியவன், “இப்போ யார் பார்த்துக்கிறா?” என்று கேட்டான்.

“ரெண்டு பேரும் சேர்ந்து பாடுறதால நான்தான் பார்த்துக்கிறேன்”

“அப்போ, நீங்களே பார்த்துக்கோங்க” என்று பொறுப்பை அவரிடமே விட்டுவிட்டான்.

அவனின் இந்தப் பதிலில், கௌசிக்கும் கிரிக்கும் நிறைய திருப்தியிருந்தது.

சாப்பிட்டு முடித்து, சிவா கைகழுவச் சென்றான். பாவையும், கணவன் பின்னேயே வந்தாள்.

கைகழுவும் இடத்தில்…

தண்ணீரில் கைகளைக் காட்டியபடியே, “கோபமா?! காலையிலேயே வரலைன்னு?” என்று கேட்டான்.

“என்னோட கச்சேரி விஷயமா, இனிமே நீங்களே பார்க்கலாமே?!” என்று கேள்வி கேட்டு நின்றாள்.

“ஓ! இது வேற!!” என்றான் சலிப்பாக!

“பதில் சொல்லுங்க” என்றாள் சளைக்காமல்!

“எனக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியாது பாவை!! நான் எப்படி?” என்று கேட்டான்.

‘அவன் சொல்வதும் சரிதான்’ என்று தோன்றியதால், அவன் பதிலை ஒத்துக் கொண்டாள்.

ஆனால், அடுத்த கேள்வி வைத்திருந்தாள். “எப்போ கூப்பிட வரச் சொன்னேன். இப்போ வந்திருக்கீங்க?” என்று கேட்டு நின்றாள்.

“சொன்னேனே பாவை! ரெஸ்ட் எடுக்கணும்-ன்னு”

அவன் பதிலில், கொஞ்சமும் திருப்தி இல்லை! உடனே, “உங்களுக்கு என்மேல அக்கறையே இல்லை” என்று, அவளே ஒரு முடிவுக்கு வந்து சொன்னாள்.

“மிச்சத்தை வீட்ல போய் பேசிக்கலாம்! கிளம்பு” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகன்றான்.

கஷ்டமாக இருந்தது, பாவைக்கு!

அறையிலிருந்து எழுந்து வந்த வேணிம்மா காதுகளில், பாவையின் ‘அக்கறையே இல்லை’ என்ற வார்த்தை விழுந்துவிட்டது.  அப்படியே திரும்பிப் போய்விட்டார்.

சற்று நேரத்திற்குப் பின்…

எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு, பாவை-பாண்டியன் மற்றும் செண்பகம் கிளம்பினார்கள்.

மூவரையும் வழியனுப்ப, வேணிம்மா கீழ்தளம் வரை வந்தார். அவர்கள் மின்தூக்கியைத் திறந்து இறங்கியதும், “நீங்க ரெண்டு பேரும் இங்கேயே நில்லுங்க. நான் காரை எடுத்திட்டு வர்றேன்” என்று சொல்லி, ‘பார்க்கிங்’ நோக்கிச் சென்றான், சிவா!

அவன் சென்றதும்,

மூவரும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். அக்கணத்தில், நளினியிடம் இருந்து செண்பகத்திற்கு அழைப்பு வந்தது.

“இருங்க, பேசிட்டு வர்றேன்” என்று சொல்லி, தள்ளிச் சென்றார்.

அவர் கண்பார்வையில் இருந்து மறைந்ததும்…

“வேணிம்மா”

“என்னம்மா?”

“சங்கர் பத்தி… மத்தவங்களைப் பத்தி பாண்டியன்கிட்ட சொல்லிடவா?”

சட்டென, ‘அக்கறை இல்லை’ என்ற வார்த்தை பிரயோகம்… அவர் சிந்தைக்குள் வந்தது. ஆதலால், “இப்போ வேண்டாம். இப்போதான கல்யாணம் ஆகியிருக்கு. ஒரு மாசம்… இல்லைன்னா கொஞ்சம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்ட பிறகு சொல்லு” என்றார்.

“மறைக்கிற மாதிரி இருக்கு” என்றாள் வேதனையுடன்!

“மறைக்கலாம் போறதில்லை” என்றவர், “சரி, இந்தக் கச்சேரி முடிஞ்சதும் சொல்லிடு” என்றார், அவளின் வேதனையைப் பார்த்து!

மேலும், “அதுவரைக்கும் இதெல்லாம் யோசிக்காம, ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணு! அது ரொம்ப முக்கியம்!!” என்று அறிவுரையும் வழங்கினார்.

“ம்ம்” என்று பாவை சொல்லும் போதே, பாண்டியன் வந்து ‘ஹார்ன்’ அடித்தான்.

“கூப்பிட்றாங்க! நான் கிளம்புறேன் வேணிம்மா” என்றாள்.

“சந்தோஷமா இரு” என்று சொல்லி, அவள் உச்சி நெற்றியில் ஒரு முத்தம் வைத்தார்.

அதற்குள், “பாவை வா! சிவா வந்திட்டான்” என்று செண்பகம், பாவையை அழைத்தார்.

வேணிம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு… பாவையும், செண்பகமும் காரில் ஏறினர்.

மூவரும் சென்றுவிட்டனர். சற்று நேரம் கார் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றார், வேணிம்மா.

சாதாரணப் பேச்சாகத்தான் இருக்கும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாலும்… ‘தான், பார்த்துக் கொடுத்த வாழ்க்கையில், பாவை சந்தோஷமாக இல்லையோ?’ என்று ஓர் உறுத்தல் மனதில் வந்தது, வேணிம்மாவிற்கு!!

அக்கணம், “பாட்டி” என்ற குரல் கேட்டதும், திரும்பிப் பார்த்தார். கௌசி நின்று கொண்டிருந்தாள்.

“நீ எதுக்கு வந்த?”

“தனியா எப்படி வருவீங்க? அதான் வந்தேன்” என்று சொல்லி, கைபிடித்துப் பாட்டியை அழைத்துக் கொண்டு சென்றாள்.