Uyirodu Vilaiyadu – 6

Uyirodu Vilaiyadu – 6

(ஒரு ஹீரோ, சாதாரண மனிதனை விடத் துணிச்சலானவன் அல்ல, ஆனால் அவன் துணிவு ஐந்து நிமிடங்கள், சாதாரண மனிதர்களைவிட நீடிக்கிறது. அந்த ஐந்து நிமிடமே பேரதிசயங்களை நிகழ்த்துகிறது –  ஆல்  ரால்ப் வால்டோ எமர்சன்.

‘ஆன்டி ஹீரோக்கள், டான், தாதா மேல் மக்களுக்கு வெளியே சொல்ல முடியாத ஈர்ப்பு, ஒரே நேரத்தில் மிகவும் திகிலூட்டும் மற்றும் கவர்ந்திழுக்கும் விஷயம் என்ன?

மக்கள் தங்களால் எதையெல்லாம் செய்ய முடியாதோ, அதை இன்னொருவர் செய்யும் போது தோன்றும் பிரமிப்பு, ஆர்வமே இதற்குக் காரணம். ஒரு கணமாவது சினிமாவிலும், கதைகளிலும் அந்தக் கேரக்டர் ஆக, தன்னை நினைத்துப் பார்த்து மகிழும் மனோபாவம்…’ என்று பர்மிங்காம் நகர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியர் டேவிட் வில்சன் கூறுகிறார்.)

அத்தியாயம் 6

திருமண வேலைகளைப் பார்க்காமல், மணி தாதா, டான் பற்றி விம், சபீனா போடாத குறையாய் விளக்கோ விளக்கு என்று, ‘கிரிமினாலஜி பேராசிரியர்’  தோற்கும் வண்ணம்  தேஜ், சத்ருஜித், பரணி பற்றிக் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்க, கணவனைக் காணாமல் தேடி வந்த கவிதா, காதுகளில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தது விழுந்தது.

வெகுநேரமாய் அவரும் இந்த, ‘டான் பற்றிய ஆராய்ச்சி வகுப்பு’ நிற்கும்  என்று பொறுமையாகக் காத்து நிற்க, ‘மைக் பிடித்த அரசியல்வாதி ரேஞ்சுக்கு’ மணி பேசிக் கொண்டே போக, அங்கு எரிமலை வெடித்தது.

‘இவர்களை இப்படியே விட்டு இருந்தால் டான், தாதா பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி முனைவர் பட்டம் வாங்காமல் விட மாட்டார்கள் போலிருக்கே!… விவஸ்தை கெட்ட மனுஷன்…’ என்று காளி அவதாரம் எடுத்தார்.

மனதிற்குள் குமைந்து கொண்டிருந்த கவிதாவோ, மாபியாகளை பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த மூவரும் அறியாத ஒன்று, அந்தப் பேச்சு உண்மையில் அந்தப் பெண்களை யுத்த களத்திற்கு தயார் செய்து  கொண்டிருக்கிறது என்ற உண்மையை.

காரணம் இல்லாமல் உலகில் எதுவுமே நடப்பதில்லை. ஒன்றை நாம் படிக்கிறோம், கேட்கிறோம் என்றால், ஏதோ ஒரு சமயத்தில் அது நமக்குக் கைக்கொடுக்கப் போகிறது என்று அர்த்தம். அது தான் அங்கே நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்களின் வாழ்வையே தலை கீழாக மாற்றப்போகும், சதுரங்க ஆட்டத்தின் முக்கிய ஆட்டக்காரர்களைப் பற்றித் தான் அவர்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களே அறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பேசிக் கொண்டே இருந்த மணி, சட்டென்று  அமைதியாக  விட, திரும்பிப் பார்த்த  பெண்கள்  இருவரும்,  பக்கென்று சிரித்து விட்டார்கள்.

இடுப்பில் கை வைத்து, அங்கு எரிமலையாய் நின்றிருந்தார் கவிதா.

“ஆமா… அவனுங்க  வாழ்க்கை சரித்திரம், ராமாயணம் இல்லை மஹாபாரதம் பாருங்க… பொண்ணுங்களை நிற்க வச்சி, கதா காலட்சேபம் செய்துட்டு இருக்கீங்க. 

காதுல  கேட்டா, ஜென்ம சாபல்யம் கிடைச்சுடும் பாருங்க… புண்ணிய கதை சொல்லிட்டு இருப்பதாய் நினைப்போ!…

கொஞ்சமாவது அறிவை  யூஸ்  செய்யணும். இன்னைக்கு சம்யு  திருமணம்… நல்ல  நாள் அதுவுமாய், அந்த வீணா  போனவனுங்க கதை  தான் முக்கியமா?…

போய், உருப்படியான வேலை ஏதாவது இருந்தா  போய்ப் பாருங்க… அம்மாடி சம்யு!… நீங்க இங்கே   உட்கார்ந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுமா…”  என்றவர்   சம்யுவையும், ஹேமாவையும் அங்கே பிரகாரத்தில்    அமர வைத்து விட்டு, திருமண ஏற்பாடுகளைப் பார்க்க, மணியைக் கையோடு கூட்டி  சென்றார்.

திட்டிக்  கொண்டே கணவனை அழைத்துச் செல்லும்    கவிதாவையும், ‘வேணாம் விட்டுடு வலிக்குது…   அழுதுடுவேன்’ என்று வடிவேலு ரேஞ்சுக்கு    முகத்தை  வைத்துக்  கொண்டு,  பின்னால் சென்ற    மணியைப்  பார்த்துச்  சம்யுவும்,  ஹேமாவும் வாய்  விட்டுச்  சிரித்தனர்.

“பாவம்டீ அங்கிள்!… இன்னைக்கு முழுக்க ஆன்டி வச்சி செய்யப் போறாங்க…” என்றாள் ஹேமா புன்னகையுடன்.

சம்யுக்தா பதில் ஏதோ சொல்வதற்குள்,

“அம்மாடீ   சம்யுக்தா!….” என்றவாறு  வந்தார் கேசவ மூர்த்தி.  

கேசவ மூர்த்தி சட்டென்று பார்க்க, அந்தக் கால நடிகர், ‘சங்கராபரணம் சோமையாஜுலு’ மாதிரி முக அமைப்பில் இருந்தார்.

நெற்றியில் சந்தானம், கழுத்தில் துளசி மாலை, மந்திரம் ஓதியோதி அந்த அருளாற்றளை தன்னை சுற்றி ஒரு அலையாக வைத்திருப்பவர்.பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட தோன்றும் தெய்வீக  முகம்.

இறை சேவை என்னும் ஆனந்த சாகரத்தில் தன்னை மூழ்கடித்து  இருப்பவர் என்பதை அந்தப் பக்தி சுடர் மிளிரும் முகமே காட்டி கொடுத்து விடும். 

“சொல்லுங்க அங்கிள்….” என்றவள் எழுந்து  நிற்க, சம்யுக்தாவின் கையில் பிரசாதத்தை கொடுத்தவர், 

“நீ  சொன்ன மாதிரியே சுவாமிக்குத் திவ்யமாய் அபிஷேகம் நடத்தி, நீராஞ்சனம் முடித்துட்டேன்.

சந்தோசம் தானே  குழந்தை?… சுவாமியை நல்லா தரிசனம் செய்துக்கோ. அங்கே திருமணத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துட்டேன். மாப்பிள்ளை  வந்தா, சீக்கிரம் அழைச்சிட்டு வந்துரு…” என்றவர் சொன்னதை  கேட்டுத் தலை  அசைத்தாள்  சம்யுக்தா.

கோயில்  பிரசாதத்தை தொன்னையில் தராமல், ரெண்டு  தட்டுகளில் எடுத்து வந்திருந்தார் கேசவன்.

கேசரி, வெண் பொங்கல், புளியோதிரை, மிளகு வடை என்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்க, சற்று நேரம்,  அங்குக் கைக்கும், வாய்க்கும் மட்டுமே வேலை  இருந்தது.

கோயில்  பிரகாரத்தில் அமர்ந்து, பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருந்த இரு பெண்களையும், இரு ஜோடி கண்கள் வெவ்வேறு இடத்திலிருந்து  பார்த்துக் கொண்டிருந்ததை பெண்கள் கவனிக்க தவறினார்கள்.

ஒரு  ஜோடி கண்களில் தவிப்பும், இன்னொரு ஜோடி கண்களில் கலக்கமும்  மிக அதிகமாய் இருந்தது. இரு ஜோடி கண்களுமே கண்ணீரால் நிரம்பி இருந்தது.

இதயத்தில் எழுந்த வலி அதிகமாய் இருக்க, அந்த இருவருமே,  அவர்களே அறியாமல் தங்கள் இதயத்தைப் பிடித்துக் கொண்டார்கள்.

பயத்துடன் அவர்கள் பார்வை சுற்றும், முற்றும் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று நொடிக்கொரு தரம் சுழன்று கொண்டிருந்தது.

கலக்கம் இருந்த கண்ணுக்குச் சொந்தக்காரர், நடுங்கி கொண்டிருந்த தன் கையில் இருந்த மொபைலை பார்ப்பதும், நிமிர்ந்து சம்யுக்தாவை பார்ப்பதும் என்று  தவித்துக்கொண்டிருந்தார்.

அவர் செய்யப் போகும் செயல் ஏற்படுத்தும் செயின் ரியாக்ஷன் எத்தனை உயிர்களைப் பலி கொள்ள போகிறதோ!… 

அதற்கு அச்சாரம் இடப்போவது போல், நடுங்கும் கரத்தால் அந்த மொபைல் போனில் இருந்த நம்பர் ஒன்றை, டயல் செய்ய ஆரம்பித்தார்.

இப்படி தன்னை சுற்றி நடப்பதை உணராத சம்யுக்தாவும், ஹேமாவும் கேசவன் கொடுத்த பிரசாதத்தின் சுவையில் தங்களை தொலைத்து இருந்தார்கள்.

“சும்மா  சொல்லக்  கூடாதுடீ… அங்கிள் வைப் கைப்பக்குவதை அடிச்சுக்க ஆளே இல்லை… பசிக்கு அப்படியே  திவ்யமாய்  இறங்குது.” என்று சப்பு கொட்டி  சாப்பிட்ட,  சம்யுவை முறைத்தாள் ஹேமா.

“என்னது!…  பசினா  சொன்னே?… வீட்டிலிருந்து கிளம்பும்போது  தானேடீ, பிரட் டோஸ்ட்,  மில்க் அண்ட்  சீரல்ஸ், ஒரு  கிளாஸ்  ஜூஸ் கொடுத்தேன்!…” என்றாள் ஹேமா திகைப்புடன்.

“அது எந்த மூலைக்கு பத்தும் சொல்லு?… அது சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் ஆச்சு… நம்ம சென்னை காவல்துறை, ‘மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்… மெரினாவில் சுண்டல் வாங்கி தாறேன்…’ என்று தேஜ், பரணி வேலையால், டேக் டைவெர்சன் சொல்லியே  சென்னையை  சுற்றி காட்டியதில், பசி வந்துடுச்சுடீ…” என்றாள் சம்யு.

“யப்பா!… உனக்குச் செஞ்சி போட்டே எனக்கு ஆயுசு போய்டுமோ என்று கவலை பட்டுட்டு இருந்தேன். நல்லவேளை இன்னையோட உன் தொல்லை என்னை விட்டது… இனி  நீ  ஆச்சு, அந்த  ஈஸ்வர் லூசு  ஆச்சு. மீ நிம்மதி…” என்றாள் ஹேமா வவ்வலம் காட்டியபடி.

“இரு… எதுக்கு நீ,  இப்போ ஈஸ்வரை லூசுன்னு சொல்றே?…” என்றாள் சம்யு சந்தேகத்துடன்.  

“உன்னை மாதிரி, முழு கிறுக்கியை லவ்ஸ் செய்யும் அவன்  லூசா  இல்லாம,  ஐன்ஸ்டைன் பேரனாவா இருக்க  போறான்!…” ஹேமா நக்கலாக.

“ஹய்ய  ஜோக்கு!… சிரிப்பே வரலை.”  என்ற சம்யு, “ஆமா, எனக்கு மேரேஜ் நடப்பதற்கும், நீ எனக்குச் சமைப்பதற்கும்  என்ன  லிங்க்  செல்லம்மா?.”  என்றாள்  சம்யு.

“ஹலோ மேடம்… மேரேஜ் ஆச்சுன்னா, நீ ஈஸ்வர் கூட, அவன் வீட்டுக்கு வாழப் போகணும். அப்போ, உன் தொல்லையிலிருந்து விடுதலை தானே!… விட்டா உன் புகுந்த வீட்டிலும் வந்து சமைத்து போடச் சொல்வே போலிருக்கே!…” என்றாள் ஹேமா.

விளையாட்டுபோல், தனக்கு சம்யுக்தா திருமணம் ஆகி, இன்னொரு வீட்டிற்கு வாழச் செல்லப் போவதால், ‘தனக்கு விடுதலை, நிம்மதி’ என்று ஹேமா, வாய் வார்த்தையாகச் சொன்னாலும், சொல்லிய குரலில் இருந்த வலி, கலங்கிய கண்களை ஹேமா மறைக்க முயன்றது எதுவுமே சம்யுக்தா கண்களுக்குத் தப்பவில்லை.

கிட்டத்தட்ட நினைவு தெரிந்த நாளாய் தோழிகள் இருவருக்குள்ளும் வளர்ந்த நட்பு. நகமும் சதையும், இதயமும், ரத்த ஓட்டம் போல், இணை பிரியாமல் இருந்தவர்கள் இன்று பிரிய போகிறார்கள்.

‘பெண்களின் நட்பிற்கு ஆயுள் காலம் இவ்வளவு மட்டும் தானா?… ஆண்களுக்குத் திருமணத்திற்கு பிறகும், நட்பைத் தொடர, நினைத்த நேரத்திற்க்கு, ‘என் தோழனைப் பார்க்கப் போகிறேன்…’ என்று கிளம்பி செல்லும் அந்தச் சுதந்திரம், திருமணம் ஆன பெண்களுக்கு ஏன் இல்லை!    

ஆயிரம் தளைகள், ஆயிரம் கடமைகள், ஆயிரம் அழுத்தங்கள்…  திருமண வாழ்க்கை, குடும்பம் என்ற ஓட்டத்தில், தனக்கென்ற ஒரு குவாலிட்டி டைம் என்பதே  இல்லாத  இல்லத்தரசிகள்  இங்கே  அதிகம். பெண்ணின் திருமணத்தில் அவள் விட்டுச் செல்வது பிறந்த வீட்டை மட்டுமில்லை, தன் தோழமைகளையும்  தான்.  

எப்பொழுதோ, ‘ஒரு ஹாய்… நல்லா இருக்கீயாடீ… அப்புறம் பேசறேன் அவங்க கூப்பிடுறாங்க…’ என்று தொலை தூர வானமாய்  மாறிப் போகும் நட்பு. ஆட்டோகிராப்களிலும், புகைப்படங்களிலும், நினைவு பெட்டகங்களில் மட்டுமே மிஞ்சியிருக்கும் அந்தக் காலங்களில் எச்சங்கள்…’ என்று இங்கே பெண்களின் கனவுகள், தோழமை மட்டும் ஏன்  மாறி விடுகிறது என்ற நூற்றுக்கணக்கான விடையில்லா கேள்விகள் என்று பதில் தேடி, தேடியே போகும் வாழ்க்கை.

மனைவிக்குச் சிறந்த தோழனாய், அர்த்தனாரியாய்  தன்னில் சரி பாதி என்று மனைவியின் எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் உற்ற துணையாய் நிற்கும், ‘ஆத்ம பந்தம்’ எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை என்னும்போது, சில வீடுகளில் பெண்மைக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதையே  கிடைக்காதபோது, இந்த நட்பைத் தான் இவர்கள் வளர்த்து விடுவார்களா என்ன?…’  என்ற எண்ணம் ஹேமாவிற்கு  தோன்ற, அவளையும் அறியாத பெருமூச்சு ஒன்று எழுந்தது.      

‘உன்னை நான் அறிவேன்.’ என்று பார்வை ஒன்றை, ஹேமா பக்கம் வீசிய சம்யு, கேசரியை ஒரு கைப்பார்த்துக் கொண்டே, அடிக்கண்ணால் ஹேமாவை பார்த்து,

“யார்  சொன்னா மேரேஜ்கு பிறகு நான் ஈஸ்வரோட போகப் போறேன் என்று ?…” என்ற சம்யு கேள்வியில், ஹேமா ஒரு கணம் உறைந்தாள் என்று சொல்ல வேண்டுமோ!…

ஹேய்!… லூசா நீ?… ஒரு கணம் பக்குன்னு ஆகி போச்சு… எதில் விளையாடுவது என்று இல்லையா சம்யு?…” என்றாள் ஹேமா.

“நான்  விளையாடலை ஹேமா… சீரியஸ்ஸா தான் கேக்கிறேன்… யார் சொன்னது, மேரேஜ்க்கு பிறகு, நான் ஈஸ்வர் கூடப் போகப் போறேன் என்று?…” என்றாள் சம்யு.

சம்யுக்தா விளையாடவில்லை, சீரியஸாக தான் பேசிக்  கொண்டு  இருக்கிறாள் என்பது ஹேமாவிற்கு புரிந்து விட,  வார்த்தைகள் வராமல் ஒரு ஸ்தம்பித்த நிலையில், விழியகல  சம்யுவை பார்த்துக் கொண்டிருந்தாள். 

“சம்யு!… மேரேஜ் ஆச்சுன்னா எல்லா பெண்களும், கணவன்  வீட்டுக்குப் போய்த் தான் ஆகணும்… நீ ஒரு வீட்டில், ஈஸ்வர் ப்ரோ ஒரு வீட்டில் இருப்பது மேரேஜ்  இல்லை…” என்றாள் ஹேமா.

“யார் சொன்னது ஈஸ்வர் ஒரு வீட்டிலும், நான் ஒரு வீட்டிலும் இருக்க போவதாய்?… சரி சரி… டென்ஷன் ஆகாதே!… நான் தான் ஈஸ்வர் வீட்டுக்குப் போகப் போவதில்லை… 

ஈஸ்வரும் அவன் நண்பர்கள் மூவரும், நம்ம வீட்டிற்கு தான் வரப் போகிறார்கள். உன் அப்பா, அம்மா வெளிநாட்டில் இருக்கும்போது, உன்னைப் பார்த்துக்க, என் மம்மியும் இல்லாதபோது, உன்னை யாரும் இல்லாமல், தனியே விட்டுச் செல்வேன் என்று எப்படி நீ நினைச்சே?…

ஏற்கனவே ஈஸ்வர் கிட்டே சொல்லி இருந்தேன். ‘என் கிட்டே, நீ சிக்கி அவதிபடுவது மாதிரி, என் இனிய குட்டி  சாத்தான்  ஹேமாவுக்கு, ஒரு அப்பாவி ஜீவன் வந்து மட்டும் வரை, அவள் கழுத்தில் அந்த அப்பாவி மூன்று முடிச்சு போட்டுத், தனக்கான ஆயுள் தண்டனை பெற்று கொண்டாலும் சரி, ஹேமாவும் நானும் ஒரே வீட்டில் தான் இருப்போம் என்று…’

ஈஸ்வர் வீடு ரொம்ப சின்னது. அதுவே ரெண்டு பெட்ரூம் மட்டுமே இருக்கும். அதில் இவங்க நாலு பேரு தங்கிட்டு இருக்காங்க. இது நாள்வரை அது அவங்களுக்கு போதுமானதாய் இருந்தது. இனியும் அப்படி இருக்க முடியுமா சொல்லு.

திருமணம் ஆகாத நண்பர்களை வைத்துக் கொண்டு, எங்களுக்கென்று ப்ரைவஸிக்கு எங்கே செல்வோம்? தவிர கொஞ்சம் சத்தமாய் பேசினாலே வெளியே கேக்கும்போது, என்ன சொல்றேன் என்று புரியுது இல்லை.இதுல நான் எங்கே தங்குவேன்?…

இங்கே நம்ம வீட்டில் என்றால் மூன்று அடுக்குத் தளம். எட்டு முதல் பத்து ரூம் இருக்கு. அவங்களுக்கு முழு தளமே ஒதுக்க முடியும்.         

தவிர அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு நீ எஸ்ஸாகி விட முடியுமா ஹீமாவளி செல்லம்?… நரை விழுந்து, தள்ளாடி, கூன் போட்டு,  கடைசி மூச்சு இருக்கும் வரை  நீயும், அந்த ஈஸ்வரூம் என் கிட்டே இருந்து தப்ப  முடியாதுடீ  என்  அனகோண்டா…

வச்சி செய்வோம் பேபி… நோ எஸ்கேப்…  வாய்க்குள் கொசு போய்ட போகுது… மூடிட்டு சாப்பிடு…” என்றாள் ஹேமா.

சற்று நேரம் ஹேமா எதையும் பேசத்தவளாய் சம்யுவை பார்த்துக் கொண்டே இருக்க, “போதும்டீ என்னை ரொமான்ஸ் பார்வை பார்த்தது… சாப்பிடு…” என்றாள் சம்யு.

“சம்யு  விளையாடாதே!…” என்றாள் ஹேமா.

“இதுல விளையாட என்ன இருக்கு ஹேமா? இது கிரௌண்டும் இல்லை… விளையாடும் மூடில் நானும் இல்லை… ஷாக்க குறை… ஷாக்க குறை…

ஈஸ்வர் தன் பணத்தை போட்டு தான் அவங்களுக்கு தொழில் ஆரம்பித்து கொடுத்து இருக்கார். பேங்க் கடன், வட்டி என்று நிறைய இருக்கு. எத்தனை வருஷம் ஆகுமோ இந்த கடனை எல்லாம் அடைக்க என்று புலம்பிட்டு இருக்கான். இதுல இப்போதைக்கு புது வீடு வாங்க சொல்வது முடியாத காரியம். எப்படி நான் உன்னை விட்டு இருக்க மாட்டேனோ, அதே போல் அவனும் அவன் மூன்று நண்பர்களை விட்டு இருக்க மாட்டான் என்று உனக்கே தெரியும்.

சோ, இந்தக் கடனை எல்லாம் அவன் அடைச்சிட்டு, புது வீடு வாங்கும் வரை,  ஈஸ்வர் வீட்டோடு மாப்பிள்ளையாக, நம்ம கூடத் தான் வரப் போறான். நோ ஆர்கியுமென்ட்ஸ்…” என்றவள் மேலும் ஏதோ சொல்லப் போக, சம்யுக்தாவின் மொபைல் அலறியது.

யார் என்று எடுத்துப் பார்த்த சம்யு, ஹேமாவிற்கு அதைக் காண்பித்து, “ஸ்பீக் அபௌட் தி  ஸ்வீட் சார்மிங் டெவில்… அதுவே கால் செய்யுது…” என்றவள் புன்னைகையுடன் அழைப்பை எடுப்பதற்குள், அழைப்பு நின்று விட, சம்யு மீண்டும் அழைக்க, இப்பொழுது அழைப்பு போகவில்லை. எங்கேஜ்ட் டோன் மட்டுமே கேட்டது.

ஈஸ்வர் திரும்ப அழைக்கும் வரை, போன் கலேரியில் இருந்த, ஈஸ்வர் படத்தைப் பார்த்தவள் முகம், லட்சம் வாட்ஸ் பல்ப் மாதிரி பிரகாசிக்க ஆரம்பித்தது. 

போட்டோக்களில்  கள்ளம்  கபடம்  இல்லாமல்  சிரித்து கொண்டிருந்த, அவளின் ஈஸ்வர் முகத்தைக், காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. 

ஈஸ்வர்!… 

சம்யுக்தாவின் உயிர், சம்யுக்தாவின் சரிபாதி.  அவளின் எல்லாமும்.

 5 அடி,11 அங்குல உயர அமுல் பேபி. 

அழகான கலையான முகம் டிக்.  ✔

அலை அலையாய் காற்றில் தவழும் தலைக்கேசம் டிக்.  ✔

காதலித்தால், திருமணம் செய்ய வேண்டும் என்றால், இப்படி ஒருத்தனை தான் திருமணம் செய்யணும் என்று எண்ண எழுப்புவது டிக். ✔

சிரிக்கும் போது, முகமே ஒளிரும் வண்ணம், நம்மையும் உடன் சேர்ந்து, சிரிக்க அழைக்கும் குழந்தைத்தனமான லவர் பாய் முகம் டிக். ✔

 ஈஸ்வர் சட்டென்று பார்க்க மலையாள நடிகர், ‘உன்னி முகுந்த்’  சாயலில் இருப்பவன். 

ஒரே வார்தையால் சொல்ல வேண்டும் என்றால், ‘வளர்ந்த குழந்தை.’

குழந்தைத்தனமான அந்த முகத்தில் சிரிப்பும், சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியில், காண்பவரின் மனது, குறிப்பாகப் பெண்களின் மனது, மீட்சி தேவையில்லை என்று விரும்பியே அமிழும்.

‘என்னுடன் சேர்ந்து சிரியுங்கள்’ என்று அழைப்பு விடும். 

‘இவனை நம்பலாம்’ என்று முதல் பார்வையிலே, பார்ப்பவர் மனதில் நிச்சயம் சொல்லி  விடும்.

அக்மார்க் பச்சை மண்ணு.   

பால் ரோஸ் நிறத்தில், விளம்பர மாடல் மாதிரி இருப்பவன்.  

காதல் திரைப்படங்களுக்கு மிகவும் பொருத்தமான சாக்லேட் பாய்  முகம்.

திரைப்படத்தில் நடித்து இருந்தால், ‘அடுத்த மாதவன், அந்தக் கால ரொமான்ஸ் பட  விஜய்’ போல் நிச்சயம் கன்னிகள் மனதை  சிறை செய்து இருப்பான்.

தன்னை பார்க்கும் பெண்களை, ஏக்க பெருமூச்சு விட வைத்தே, தெருக்களில் சூறாவளி காற்றை உருவாக்க  வைப்பவன். 

கம்ப்யூட்டரில் முனைவர் பட்டம் பெற்றவன். வேலை   செய்யும் கல்லூரியில், இவன் வகுப்புகளுக்கு   என்றுமே டிமாண்ட் அதிகம். 

இப்படியொரு ஆண் அழகனிடம் பாடம் கற்க கசக்குமா என்ன?… கரும்பு தின்னக் கூலியா வேண்டும்?   

முகநூல், ட்விட்டர்  என்று  அதிக விசிறிகளுள்ள ஆசிரியன், இவனாகத் தான் இருப்பான்.

‘சினேகாவுக்கு மட்டும் தான்  ஒரு படத்தில் காதல் கடிதம், ப்ரோபோசல்கள் கொட்டுமா என்ன?…. ஆண்களுக்கும் வரும்…’ என்று புது ட்ரெண்ட் செட்   செய்தவன்.  

புத்தக புழு. படிப்பு, இசை, கார்டெனிங், டூர் போவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. வாழ்க்கையை ரசித்து வாழ்பவன்.

‘நம் வீட்டில் ஒருவன்’ என்ற எண்ணம் உடனே தோன்றும் வண்ணம், தான் இருக்கும் இடத்தைக் கலகலப்பாக வைத்துக் கொள்பவன்.   

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத அம்மாஞ்சி. சம்யுக்தாவின் செல்ல அம்பி.      

அதிர்ந்து  கூடப் பேசாதவன்.

சம்யுக்தாவை, ‘பேபி கேர்ள், சதுமா, யுகிமா, யுவா செல்லம், சமி’  என்று கொஞ்சி, கொஞ்சியே  உருக வைத்துக் கொண்டிருப்பவன்.

இப்பொழுது சில காலமாய் அவன் எடுத்திருக்கும், ‘அந்நியன் பட ரெமோ அவதாரத்தால்’ சம்யுவை சிவக்க வைத்து, நெளிய வைத்துக் கொண்டிருப்பவன்.

‘காதல் சக்ரவர்த்தி’ என்ற பட்டம் சம்யுவிடம் பெற, இவன்  செய்யும் வேலைகள், சென்சார் செய்யும் அளவுக்கு அளவையும் தாண்டிச் செல்வதால், சம்யுக்தாவின் வெட்கமே இவனிடம் வெட்கப்பட்டு கொண்டிருந்தது. 

“ஐம்பது வகையான முத்தம் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது பேபி கேர்ள். ரொம்ப கம்மியா இருக்கு .. அதை ஆயிரம் என்றாவது மாற்றவில்லை என்றால், நான் எல்லாம் என்ன ஆராய்ச்சியாளன் சொல்லு ஸ்வீட்டி?…” என்று  முத்தம் என்ற ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற முயன்று, முத்த வகையை, ஆயிரம் ஆக்கும் கடின முயற்சியில் இறங்கி, சம்யுவை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருப்பவன்

முத்தம்!…

எலும்புகளை உருக செய்து,

உயிர்களைக் கரைய செய்து,

உயிரை இடம் மாற்றும் அதிசயம்.

காலங்களை உறைய செய்து,

சுயத்தை மறைய செய்து,

தன்னிலை இழக்க வைக்கும் மாயம்

சிறு ஊற்றாக தொடங்கி,

காற்றாற்று வெள்ளமாய் மாறி,

கரைகளை உடைக்கும் வல்லமை,  

இறவா வரம் தரும் அமிழ்தம்,

மூங்கிலில் நுழையும் காற்று

மோகனத்தை உருவாக்கும் விந்தை.

நாடி, நரம்பு எங்கும் பொங்கும்

 அக்னி வேள்வியின் தீக்கு,

சுவை கூட்டும் தேன்சாறு.

சுவைக்க சுவைக்க இன்னும் வேண்டும்

என்று ஏங்க வைக்கும்

ஈடு இணையில்லா இன்பம்.

ஒரு உயிரை இன்னொன்றுக்கு

இடம் மாற்றும் அடிமை சாசனம்.’  என்று காதல் என்னும் சமுத்திரத்தில், முத்தம் என்னும் முத்தை, முக்குளித்துக் கொண்டிருப்பவன்.

சம்யுவின் அதிரடி, ஆர்ப்பாட்டத்திற்கு, குறும்பிற்கு அப்படியே எதிர் பதம்.  

 ஆக  மொத்தத்தில், சம்யுக்தா அதிரடி சரவெடி.

ஈஸ்வர் கொஞ்ச தூண்டும் பெரிய புசுபுசு பூனை குட்டி. 

அழகான  போமெரியன்  நாய் குட்டி. 

பெண்கள் உறங்கும்போது, அணைத்து கொள்ளும்  பெரிய சைஸ் டெட்டி பியர்.  

“சோ ஸ்வீட்…”   என்று அடிக்கடி சம்யுவை சொல்ல   வைப்பவன்.

நண்பர்களாய்  பழகி, அவர்களுக்கு நடுவே நட்பையும்  தாண்டி, வேறு ஏதோ இருப்பதை கண்டு  கொண்டு, துரத்திக் காதலித்து, ஈஸ்வரையும் காதலிக்க வைத்து, “ஐ லவ்யுங்க….” என்று ஈஸ்வரை, சொல்ல  வைத்தது  எல்லாமே  சம்யு  தான், ஹேமாவின் துணையோடு.  

“ஈஸ்வர்!…”  அவன்   பெயரைச் சொல்லும் போதே,  நாவில் தேனின் சுவை போல் தித்தித்தது.

ஈஸ்வரும்  தேனை விட இனிமையானவன். காதலில் வன்மையானவன், அக்கறையில் கடலைவிட ஆழமானவன்.

மொத்தத்தில் காதல் கதைகளில் வர்ணிக்கப்படும், ‘பெர்பெக்ட் காதலன்’  என்று சொல்லப்படுவதற்கு டிக்சினரி ஏதாவது இருந்தால், அதில்  ரெபரென்ஸாக இவன் பெயர் தான் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு, சம்யுக்தாவை தன் காதலில் மூழ்கடித்து கொண்டு  இருப்பவன்.      

ஈஸ்வரின்  புகைப்படத்தைக் காண, சம்யுவையும் அறியாமல் அவள் முகத்தில் மந்தகாச புன்னகை    எழுந்தது.

போட்டோவிலிருந்து கொண்டே, சம்யுவை இப்படி    வெட்கப்பட செய்யும் ஆற்றல் கொண்டவன்    அவளின் செல்ல ஈஸ்வர்.

இன்னும் சற்று நேரத்தில், தான்  ‘திருமதி. ஈஸ்வர்’ ஆகப் போகிறோம் என்ற நினைவே அவளைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தது.

இன்று  ஈஸ்வரின் பிறந்த நாள்.

‘பிறந்த நாளின் பரிசாக, இன்று அவர்கள் திருமணம்.  இன்னொரு பரிசாக அவனுக்காகத் தான்.’   என்ற எண்ணம் வர, ஏற்கனவே அழகாய் இருக்கும் சம்யுக்தாவை, பேரழகியாய்  ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தது ஈஸ்வரின் காதல். 

‘இன்று தன் பிறந்த நாளுக்குக் கோயிலில் பூஜை,   சம்யுக்தா ஏற்பாடு செய்து  இருக்கிறாள்’ என்று தான்   அங்கே வந்து கொண்டிருக்கும்  ஈஸ்வரும், அவனின் தோழர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஈஸ்வருக்கு ஒரு  சர்ப்ரைஸாக, சம்யுக்தா திருமணத்தையே ஏற்பாடு செய்து இருக்கிறாள் என்பதை வந்து கொண்டிருந்தவர்கள் அறியவில்லை.

அந்தத் தீடீர் சர்ப்ரைஸ் திருமணத்தைப் பற்றி அறிந்தவர்கள்  ஹேமா, கவிதா, மணி, கேசவன் மட்டுமே.

அது இரவோடு இரவாகச் சம்யு, இவர்களிடம் பேசி ஏற்பாட்டை நடத்தி இருக்க, சம்யுவை பின் தொடரும் விக்ரம் இதை அறியாமல் போனான்.  

பின்  தொடர்ந்து வந்த ஜெவியரும் அவன் ஆட்களும் சம்யுவை போலீஸ் கெடுபிடியில் தொலைத்து இருக்க, இந்தத் திருமண ஏற்பாடு பற்றிய விவரம், விக்ரம் காதுக்கு அந்த நொடிவரை சென்று சேரவில்லை.

சம்யுக்தாவிற்கு அன்னை இல்லாதது போல், ஈஸ்வருக்கு யாருமே இல்லை. அனாதை.

 உறவு என்று சொல்லிக்கொள்ள அவனுடன் காரில் வந்து கொண்டிருக்கும் அந்த மூன்று பேர், ‘மாமா’ என்றொருவர்,  துறவறம் வாங்கி,  தீர்த்த  யாத்திரையில்  இருப்பவரைத் தவிர  யாரும் இல்லாதவன்.

தன் சொந்த முயற்சியால் படித்து, இன்று ஒரு காலேஜ் ப்ரோபஸ்ர் ஆக இருக்கிறான்.

‘தன்னை   தானே   செதுக்கி   கொண்ட    சுயம்புவான அவனுக்கு, அவன் பிறந்த நாள் முதல், எல்லாமுமாக  இனி தான் இருக்க   வேண்டும்’ என்ற எண்ணத்தின்  விளைவே, இந்தத் திடீர் திருமண  ஏற்பாடு.

ஈஸ்வர் பற்றிய எண்ணத்தில் முகம் சிவந்து கொண்டிருந்த, சம்யுவின் எண்ணத்தைக் கலைத்தது ஈஸ்வரிடமிருந்து வந்த அழைப்பு. அப்படி நினைத்துத் தான் சம்யு அந்த அழைப்பை ஏற்றாள்.  

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், வாழ்வில் சுவாரஸ்யமே இருக்காதே!…

‘எதிர்பார்ப்பது நடப்பது என்பது  நம் வாழ்வின் ஆரம்பம் மட்டுமே. எதிர்பாராதது தான், நம் வாழ்க்கையை மாற்றுகிறது…’ என்ற கூற்றுக்கு அங்கே அந்தத் திருமண ஏற்பாடும், சம்யுவை நோக்கி வந்து கொண்டிருந்தவர்களும், இந்த அழைப்புமே உதாரணம்.

“ஹாய் பர்த்டே பேபி…  மிஸ்  யு செல்லம்…… லவ் யு எ லாட்… மிட் நைட் கொடுத்ததது எல்லாம் நேரில் கொடுன்னு திரும்பவும் ஆரம்பிக்காதே!… அதற்கான நேரம், காலம் எல்லாம் இருக்கு. 

 இது  கோயில்.  சோ  ஒன்லி, u -m-m-a ன்னு வார்த்தை தான்…. எங்கே இருக்கேடா?… இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?…”  என்றாள் சம்யு.

சற்று நேரம் எதிர் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.

அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று டிஸ்பிலே எடுத்துப் பார்த்த சம்யு, அழைப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவள்,  

“ஈஸ்வர்!….  என்ன  ஆச்சுடா  பேசு… ஹலோ!.. ஹலோ!…”  என்று ரெண்டு, மூன்று முறை அழைத்த பிறகு, எதிர்முனை,   

“நான் ஈஸ்வர் இல்லை…. அவன் பிரென்ட் செல்வம்.” என்ற  செல்வத்தின் குரலில், கடுப்பு நூறு டெஸிபிள் இருந்தது. 

செல்வத்தின் குரலைக் கேட்கும் போதெல்லாம், சம்யுக்தாவிற்கு குமுட்டி அடுப்பின் மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு  எபெக்ட் உடல் முழுவதும் தோன்றி விடும்.

சம்யுக்தா முகம் போன போக்கைப் பார்த்த ஹேமா, சைகையில் யாருன்னு கேட்க, பதில் சொல்லாத சம்யுக்தா, அழைப்பை ஸ்பீக்கர் மோடுக்கு மாற்றினாள்.    

ஈஸ்வரின் நண்பர்கள், உறவு என்று இருப்பவர்கள் இந்தச் செல்வம், ரிஷி, எமி.  

செல்வமும் எமியும்,  ஈஸ்வர், ரிஷியைவிட வயதில் மூத்தவர்கள்.

செல்வம் சட்டென்று பார்க்க, ‘நடிகர் விஜய் ஆண்டனி’ போலவும், எமி, ‘நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்’ போலவும், ரிஷி, ‘நடிகர் ஜி.வி.பிரகாஷ்’ மாதிரியும் இருப்பவர்கள்.

இவர்களைக் கண்டாலே சம்யுக்தாவிற்கு ஆகாது.

சம்யுக்தாவிற்கு ஆகாது என்பதை விட,  அவர்கள் மூவருக்கும், சம்யு என்றாலே வேப்பம்காய் தான்.  

 ‘ஒருவரின் வெறுப்பிற்கு எதனால் நாம் இலக்காகிறோம்?…’ என்று தெரியாமலே பலர் திகைத்துக் கொண்டிருப்போம்.

‘இவங்களுக்கு நாம் என்ன கெடுதல் செய்தோம்?… எதுக்கு இவர்கள் இப்படி க்ரோதத்தை வளர்க்கிறார்கள்?…’ என்பதெல்லாம் பல சமயம் புரியாத புதிராய் இருக்கும். அந்த நிலையில் தான் சம்யுக்தாவை இவர்கள் மூவரும் வைத்து இருக்கிறார்கள்.   

ஆரம்பம் முதலே, சம்யுக்தாவிற்கும் இவர்களுக்கும், ஏனோ ஏழாம் பொருத்தமாய் தான் இருந்தது.

சம்யுக்தாவின் இனிமையான குணத்திற்கும், பழகும் விதத்திற்கும் யாராய் இருந்தாலும் நட்பாகி விடுவார்கள். மற்றவர்களைக் காந்தம் போல் சம்யுக்தா இழுத்து விடுவாள்.

ஆனால், செல்வம், ரிஷி, எமி மூவரும் மட்டும் தன்னை கீழாகப் பார்ப்பது போலவும், ‘நீயெல்லாம் எங்களுக்கு இணையா?…’ என்று   என்று குத்தல் பேச்சிலும், உடல் மொழியிலும் ஒவ்வொரு முறையும் சம்யுக்தாவை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஈஸ்வரின் நண்பர்கள்  என்னும்போது சம்யுவும் பலமுறை இவர்களிடம் நட்பு பாராட்ட முயன்று கல்லில், அதுவும் பாறாங்கல்லில் மோதுவது போல் தலை வலியுடன் தான் தோற்று கொண்டு இருக்கிறாள்.

பிடிவாதமாய், ‘உன் தோழமை வேண்டாம்’ என்று சொல்பவர்களிடம் என்னவென்று பேசுவது?

‘நீ நெருங்கி வந்தால் கூட, நாங்கள் தள்ளியே இருப்போம்…’ என்பவர்களிடம் எப்படி பழகுவது என்று கூடச் சம்யுக்தாவிற்கு புரியவில்லை.   

வழக்கம்போல், இவர்களிடம் இருந்த ஏதோ ஒன்று சம்யுக்தாவை எரிச்சல் கிளப்பி இருக்க, அதைக் கோபமாய் மாற்றும் படி, 

“போன் எடுத்தா யார் என்னன்னு கூடப் பாராமல் லூசு மாதிரி உளறி வைப்பீங்களா டாக்டர்?… அறிவை யூஸ் செய்யணும் என்று நீங்கப் படித்த ஸ்கூல், காலேஜில் சொல்லிக் கொடுக்கலையா? உங்களுக்கெல்லாம் எவன் டாக்டர் பட்டம் கொடுத்தது?… 

உயிரையாவது ஒழுங்காய் காப்பாற்றுவீங்களா இல்லை, அதிலும் இப்படி தான் கேணை தனமாய் செய்து வைப்பீங்களா?…” என்றான் செல்வம் ஏளனமாக.

“போனில் எப்படி பேசணும் என்று கூட வீட்டில் சொல்லிக் கொடுத்து வளர்க்கலை போலிருக்கே!… சோ  சாட்…  பணம்  இருந்தா எப்படி பிஹேவ் செய்வது என்பது கூடவா மறந்து போகும்? 

வெளியில் இருக்கிறவங்க உங்களை வெகுகேவலமாய் பேசும் முன், உங்க ஆட்டிடுயூட் மாத்திக்கோங்கோ டாக்டர்.” என்றான் ரிஷி.

“சொல்லிக் கொடுத்து வளர்க்காமல் விட்டது இதை மட்டுமே தானா, இல்லை பெண் என்பவள் எப்படி இருக்கணும் என்பதையே சொல்லிக் கொடுக்கலையா?…”  என்ற என்றாள் எமி.

மூவரின் வார்த்தைகளும் அமிலமாய் சம்யுவையும், ஹேமாவையும் பொசுக்க முயன்றது.  

நல்ல பாம்பு  கூட்டமாய் சீறுவது போல், அவர்கள் மூவரின் பேச்சும் விஷத்தைக் கக்கி கொண்டிருந்தது.

வார்த்தைகள் அமில மழையாகப் பொழிய, சம்யுக்தா உறைந்து போனாள் என்று சொல்ல வேண்டுமோ!

ஆட்டம் தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!