NTK 9

அத்தியாயம் 9

            கதவுத்தட்டும்   சத்தத்தில் எழுந்திருந்துச் சென்றுக் கதவைத் திறந்தான் ஆனந்த்

“வா…வா…வாங்க மாமா…அம்மா அப்பா வெளியே போயிருக்காங்க…”என்று குணாவை திடிரென்று பார்த்ததில் சிறிது ஆச்சர்யப்பட்டு அவனை வரவேற்றான் ஆனந்த்

       “ஓஹ்…பரவாயில்லை இருக்கட்டும் பா…எங்கே உங்க அக்காவை காணோம்…”என்று சுற்றும்முற்றும்  கண்களால் வீட்டை சல்லடை போட்டு சளித்தவாறு கேட்டான்

      “அக்கா….அவ ரூம்ல இருக்கா…என்ன வேணும் சொல்லுங்க…”என்று நல்ல சகோதரனாக முன்னெச்சரிக்கையாக கேட்டான் ஆனந்த்

      “கூப்பிடு,…அவகிட்ட கொஞ்சம் பேசணும்…”என்று வரும் கோவத்தை அடக்கியவாறு தொடையில் தட்டிக்கொண்டே கேட்டான்

         “இல்லை…இன்னைக்கு அக்கா யார்கூடயும் பேச மாட்டா…நீங்க நாளைக்கு வாங்க…”

            “ஏன் பேசமாட்டா…உங்க அக்கா கூட மௌனவிரதம்லா இருப்பாளா…இருக்கவேண்டியது தான்…பொய்யா பேசிட்டு அலையுறதுக்கு அதான் சரி…நீ நான் வந்துஇருக்கேன்னு சொல்லு போ…நான் தப்பானவன் கிடையாது…உங்க அக்காவை கடிச்சு எல்லாம் தின்னுற போறதில்லை…போ…இது என் வாழ்கை பிரச்னை…”என்று குணா கூறவும்…இவன் பெண்பார்க்கவென வந்து தனது அக்கா பிடிக்கவில்லை என்று சொல்லியதால் திரும்பி போன கதை தெரியுமென்பதால் எழிலை அழைக்கச் சென்றான்

            ஆனந்த் பின்னாடியே சென்ற குணா அவன் கதவை தட்டுவதற்குள் இவனே தட்டி “எழில் எழில்…”என்று இருமுறை அழைத்திருந்தான்….

      குணாவின் குரல் கேட்டதாலோ என்னவோ உடனடியாக கதவை திறந்திருந்தாள் எழில்…

  திறந்தக் கதவில் கைவைத்து நின்றிருந்த எழிலை பார்த்தவன் அதிர்ந்தான் என்று தான் சொல்லவேண்டும்

     கண்கள் இரண்டும் வீங்கி சிவந்து போய் இருந்தன….முகமே அடர்சிவப்பு நிறத்தில் இருந்தது…தலையெல்லாம் களைந்து…பார்க்கவே ஏதோ ஒரு மாதிரி இருந்தாள்

     ஆனந்த் அவளை நெருக்குவதற்குள் கையாட்டி போ என்பதுபோல் சைகைசெய்தவள் குணாவை பார்த்து தலையாட்டி உள்ளே வரவழைத்துக் கதவை பூட்டினாள்…பூட்டிய கதவிற்கு வெளியே நின்றிருந்த ஆனந்த் கையாலாகாதக் கோவத்தில் போய் சோபாவில் அமர்ந்தான்

        உள்ளே வந்த குணா இன்னும் அதிர்ந்தான்…”ஏன் டி…இவன் போட்டோக்கு மாலை எல்லாம் போட்டுருக்கு…இவன் கூட தானே இருந்த போட்டோவை அன்னைக்கு என்கிட்டே காட்டுன…”என்று நம்பமுடியா அதிர்ச்சியில் கேட்டான் குணா

       ஆமாம் என்பது போல் தலையாட்டியவள் குணா கையை பிடித்து இழுத்துவந்து கட்டிலில் அமரவைத்துவிட்டு தானும் அமர்ந்தாள்

          “நான் சொன்னது பொய்னு கண்டுபிடிச்சு நீ வருவேன்னு தெரியும்…ஆனால் இன்னைக்கு வருவேன்னு தெரியாது…”என்று குளறி குளறி பேசினாள் எழில்

           “குடிச்சுருக்கியா நீ…”என்று மொத்த அதிர்ச்சியையும் உள்வாங்கி கொள்ளா முடியா குரலில் கேட்டான் குணா

            “ஆமாம்…இல்லாட்டி அவ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுவா…எப்பயும் கம்மியா தான் பேசுவா…ஆனால் இன்னைக்கு ரொம்ப பேசுவா…எரிச்சலா இருக்கும்…அதான்…”

             “யா…யாரு…”

              “ஏனையோட மனசாட்சியாம்….தப்பு பண்ணா சொல்லும்ல அது…இந்த நாள்ல நான் பெரிய தப்பு பண்ணிருக்கேன் அதான்…” என்று இருகைகளையும் விரித்து பாவமாக சொன்னாள்…அதில் அவனுக்கே அழவேண்டும் என்று தோன்றியது…மனச்சிதைவு…

           அவள் சொல்வது எதையும் புரிந்துகொள்ள முடியாமல் “என்ன டி ஆச்சு உனக்கு…ஏன் இப்படிலாம் பேசுற….கஷ்டமா இருக்கு டி…”

               “உன்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்றேன்…அப்ப தான் உனக்கு புரியும்….சரியாய்….இல்லாட்டி உனக்கு புரியாது…” என்று கைகளையும் தலையையும் ஆட்டி கூறியவள் அவனை சிறிது நெருங்கி அமர்ந்தாள்…

    “நான் உன்னை எப்ப முதமுத பார்த்தேன் தெரியுமா…இட் மின்ஸ் கொஞ்சம் வருசத்துக்கு அப்புறம் நீ என் மாமான்னு தெரியாமநாம ராஜா மாமா கல்யாணத்துல…அப்ப எனக்கு பதிமூணு வயசு…கோவிலுக்குள்ள பிரகாரம் சுத்தும்போது கால்தடுக்கி எதிரவந்த உன்மேல மோதிட்டேன்…மோதுனது யாருனு நிமிர்ந்து பார்த்தா நீ…வெள்ளை வேட்டி சட்டை போட்ருந்த…ஹா ஹா ஹா..அப்ப ஒல்லியா இருப்ப…இந்த பெரிய மீசை…”என்று அவனது மீசையை தொட்டு கையை மீசையுடன் கொண்டுசென்றவள்

             “இது சின்ன அரும்பு மீசையா இருக்கும்….என்னை பார்த்து சிரிச்சுட்டு பார்த்து போ அப்படினு சொல்லிட்டு எப்பயும் போல…”என்று சிரித்து தனது கன்னக்குழியை தொட்டு காட்டியவள் “இங்கே உன் விரலால குத்திட்டு போன…அப்ப உனக்கு நான் யாருனு தெரியாது…எனக்கும் தான்…ஏன் அப்படி பண்ண..அந்த ஒரு செயல் என்னனு விவரம் தெரியாத வயசுல என்னை பித்துக்குளி பிடிச்சு திரியவைச்சுருக்கு தெரியுமாகல்யாணத்துல முழுக்க முழுக்க உன்னை தேடுனேன்…நீ கிடைக்கவே இல்லை…அதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் பாக்குற எல்லா ஆம்பளையையும் உன் முகத்தை தேடுனேன்…நீ கிடைக்கவே இல்லைஉன்னை மறக்கவும் முடியலை…”

    “அது நீ ஆர்மிக்கு ட்ரை பண்ணிட்டு இருந்த சமயம்னு நினைக்குறேன் அதுனால நீ ஊருக்கு வரவே இல்லை…திருவிழா அப்ப நான் வயசுக்கு வந்துட்டேனு கூப்பிடுவரலை ஒரு வருஷம்…சோ என்னாலை உன்னை பார்க்க முடியலை…என்னோட பதினைஞ்சு வயசுல உன் மொத தங்கச்சியோட கல்யாணம்…அங்கையும் உன்னை தேடுனேன்…”என்றவள் மெலிதாக சிரித்துக்கொண்டு

     “அங்கே நீ வந்திருந்த…அதே மாதிரி உன்னை நான் மோதுனேன்…உன்னை பார்த்தவுடனே எனக்கு அடையாளம் தெரிச்சுருச்சு…ஆனால் உனக்கு தெரிலை…ஆனால் அப்ப உன் கண்ணுல என்னை பாக்குறப்ப ஒரு ரசிப்பு தன்மை வந்துஇருந்துச்சு…அந்த பார்வை உடம்பெல்லாம் ஏதோ பண்ண மாதிரி இருந்துச்சு உள்ளே இருந்து ஒரு நரம்பு இழுத்து மூளையை போய் தொட்டுட்டு வந்துச்சு…இருந்தாலும் எனக்கு சின்னவருத்தம் உனக்கு என்னை தெரியலைனு…ஆனால் உன் பார்வை அதை மறக்கவைச்சுருச்சு…அப்ப தான் எங்க அம்மா வந்து என்னை அவங்க பொண்ணுன்னு சொன்னவுடனே உன் பார்வை மொத்தமா மாறி அதுகுலையும் இவளவு வளந்துட்டான்னு சொல்லி விசாரிச்சு சிரிச்சுட்டு போன…”என்றவள் அவனை சிரிக்குமாறு சைகை செய்தாள்..

      .இவள் சொல்வதெல்லாம் கேட்கும் போது அவனுக்கு அழுகை தான் வருகிறமாதிரி இருந்தது…அவளுக்காக முயன்று சிரித்தான்…

   “நீ சிரிக்கும் போது உன்னோட இந்த பிரவுன் கண்ணும் சேர்ந்து சிரிக்குது பாரு…உன் கண்ணு ரொம்ப அழகு….”என்றவள் தற்போது அவனது கண்ணை வருடி கொண்டிருந்தாள்

        “ச்சி…சும்மா இரு…நான் மாமா கூட பேசிட்டு இருக்கேன்…இன்னைக்கு தான் லாஸ்ட்…இனிமேல் பேசமுடியாது…அமைதியா இரு…”என்று திடிரென்று எழில் காதைமுடி கொண்டு கத்தினாள்

        அதில் பயந்தவன் “எழில்…என்ன ஆச்சு…”

        “அது ஒன்னும் இல்லை…அவ தான்…உன்கிட்ட பேச கூடாதாம்…இவனுக்கு பண்ற துரோகமாம்…”என்று எதிரில் இருந்த புகைபடத்தை காட்டி கூறினாள் எழில்

          “இது யாரு மொத…அதை சொல்லு…”

            “நோ…நோ…அப்புறம் உனக்கு புரியாது…வரிசையா சொல்லிட்டு வரேன்ல வெயிட் பண்ணு…”என்றவாறு அவன் வலதுகையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திவைத்துக்கொண்டாள்

             “எங்கே விட்டேன்…உன் தங்கச்சி கல்யாணம்…அப்ப பொண்ணு மாப்பிளையை கோவில் கோவிலா கூட்டிட்டு போற சடங்குள எல்லார்க்கும் கலர் வாங்கி தந்த அப்ப எனக்கும் அந்த கருப்பு கலர் பேரு என்ன தெரில…அதை விடு…அந்த கலர் வாங்கிட்டு வந்த எங்க அம்மா எனக்கு பிடிக்காதுன்னு சொன்னவுடனே போய் மாசா வாங்கிட்டு வந்து தந்த…அது இன்னும் மனசுக்குள்ளையே நிக்குது தெரியுமா…”பொத்திவைத்திருந்த அவன் கையில் முத்தமிட்டாள்

         “அடுத்து ஒவ்வொரு வருசமும் உன்னை திருவிழால பார்ப்பேன்…எல்லார் கூடவும் நல்ல பேசுவா…என்கூட மட்டும் பேசமாட்ட…ஏன்…”என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவனிடம் கேட்டாள்

     அவனுக்கே தெரியாத விஷயத்தை எப்படி இவளிடம் கூறுவான்…தெரியலை என்பது போல் தலையாட்டினான்

             “ஓஹ்…சரி விடு…அப்புறம் என்னோட பதினேழு வயசுல அந்த வரப்புல நீ என்னை கீழே விழ விடாம புடிச்சது…என்கிட்டே பேசுனது…அன்னைக்கு உன் கூட பேசிட்டு எப்படி வீடு போய் சேர்ந்தேனு தெரிலை…அதனை வருசமா என்கிட்டே இருந்தது வெறும் காதல் மட்டும் தான்…இதுக்கு அப்புறம் தான் உணர்ச்சிகள் காமமும் சேர்ந்ததுனு சொல்லுவேன்…””

அதுக்கப்புறம் உன்னை நினைச்சாலே கூசி உடம்பெல்லாம் சிலுக்குற ஒரு உணர்வு வரும்அதுக்கு அப்புறம் என்னால எதுலயும் கவனம் செலுத்தவே முடில…எல்லம்மாவும் நீ தான் இருந்த…என் கற்பனை நினைவு கனவு எல்லாத்துலயும் எல்லாத்துலயும் நீ மட்டும் தான்…உன் இந்த பிரவுன் கண்ணு மட்டும் தான்…என்னுடைய மைய புள்ளியா நீ இருந்து உன்னை சுத்தி நான் சுழண்டுடு இருந்தேன்…அதோட பாரத்தை என்னால தாங்கமுடியலை அதான் சம்மந்தப்பட்ட உன்கிட்டயே சொல்லிரலாம்னு வந்தேன்…ஆனால் நீ என்ன பண்ண..இடியட்…”என்றவள் ஓங்கி அவனை ஒரு அறை அரைத்திருந்தாள்      

    “ஒரு பொண்ணு ஒருத்தன் கிட்ட தன் மனசை சொல்றானா அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா…உன்கிட்ட என் மனசுல இருக்க எல்லா ஆடையையும் விலகிட்டு நிர்வாணமா உன்கிட்ட காட்டுனேன்…நீ அதுக்கு என்ன பண்ண…என் நிர்வாணத்தை நீ ஏத்துக்கிடாடியும் பரவாயில்லை அதை நீ பொய்னு சொன்ன…பிரம்மை னு சொன்ன…உடம்பை காட்டுறது தான் நிர்வாணமா…பிடிக்காத…மனசுக்கு விரும்பாத கல்யாணத்துல கூட ஒரு பொண்ணு தன் புருஷன்கிட்ட உடல் நிர்வாணத்தை காட்டுவா…அவளோட மன நிர்வாணத்தை காட்டுறது ரொம்ப பிடிச்சா மட்டும் தான் நடக்கும்…என் காதலை நீ பொய்னு சொன்னப்ப இங்கே வலிச்சது…”என்று நெஞ்சை தொட்டு காட்டியவள் கண்களில் நீர் வடிய அழுதாள்

     “சாரி..அழுகாதே…என்னை மன்னிச்சுரு…ப்ளீஸ்…நீ நல்லா படிக்கணும்னு நினைச்சுத்தான் அப்படி பண்ணேன்…”என்று குணா அவள் கண்களை துடைத்துவிட்டான்

      “ம்ம்…எனக்கு தெரியும்…இந்த காதலால் நான் எவ்வளவு அவஸ்தை பட்டேன் தெரியுமா…உனக்கு எதுக்கு டா இதனை மாமா பொண்ணுங்க அத்தை பொண்ணுங்க…என் முன்னாடியே எல்லாரும் உன்னை யார் யாரு கூடவோ இணை வைச்சு பேசுவாளுக…அப்ப பத்திகிட்டு தான் வரும்…தெரியுமா…” 

     “என்னோட இருவது வயசுல ஒரு நாள் இடையில ஊருக்கு வந்துஇருந்தேன்…நீ அப்ப வரலாம் மாட்ட…அது நீ லீவுல வர நாள் கிடையாது..ஆனால் நீ என் பக்கத்துல இருந்த மாதிரி உணர்ந்தேன்…மனசு படபடன்னு அடிச்சுக்க ஆரம்பிச்சது…நீ இங்கே தான் இருக்கேனு சொல்லுச்சு…இங்கே வர பஸ்க்கு நின்னப்ப தாத்தா உங்க அப்பா வந்து அம்மாகூட பேசுனாரு அப்ப தான்  நீ வந்துருக்காத சொன்னாரு…அவர் சொல்லிட்டு இருக்கும் போதே பஸ் வந்துருச்சு…எனக்கு உன்னை பாக்கணும் போல இருந்துச்சு…பஸ்ல ஏறினேன்..அதை நான் உன்னை மறக்க ஒரு ஆயுதமா யூஸ் பண்ணலாம்னு நினைச்சேன் எப்படி தெரியுமா…இந்த ஊரை விட்டு போகுறதுக்குள்ள உன்னை நான் பார்க்கலைனா நான் உன்னை மறந்துறணும்…கடவுள் உன்னை மறக்க சொல்லுறார்னு அர்த்தம்…பாத்துட்டேனா நீ என் வாழ்க்கைனு அர்த்தம்…”என்று சொல்லிக்கொண்டு இருந்தவள் அவன் அருகில் மிகநெருங்கி வந்து அவன் தலையோடு தன் தலை சாய்த்து கண்ணை மூடிக்கொண்டாள்…குணாவின் கண்களும் தன்னால் மூடி கொண்டன

     “நீ என்ன நினைக்குற…நான் உன்னை பார்த்து இருப்பேனா…இல்லையா…”என்று கண்களை மூடி கொண்டே அவனிடம் விசாரித்தாள்

      “தெரியலை டி…சொல்லு…நீ என்னை பார்த்தியா இல்லையா….”

       “ஒவ்வொரு ஸ்டாப்பா பஸ் நின்னு நின்னு வந்தது நீ வரவே இல்லை…லாஸ்ட் நம்ம ஊரு ஸ்டாப் அதுக்கு அடுத்து பக்கத்துக்கு ஊரு ஆரம்பிச்சுரும்…அந்த ஸ்டாப் ல பஸ் நிக்குது…நிறைய பேர் ஏறுறாங்க…உன்னை சுத்தி சுத்தி தேடுறேன் நீ இல்லை…பஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க…நான் இனிமே உன்னை மறக்கணும் அப்படினு நினைச்சுக்கூட முடிக்கல ஸ்டார்ட் பண்ண பஸ் முன்னாடி வந்து நீ நிற்பாட்டி ஒருத்தரோட பருத்திமூட்டையை பஸ்ல போட்டுட்டு இறங்கி போன…நீ என்னை பார்க்கவே இல்லை …அன்னைக்கு ப்ளூ கலர் சட்டை போட்ருந்த…இன்னும் ஞாபகம் இருக்கு…உன் சம்மந்தப்பட்ட எதுமே எனக்கு மறக்காது…” என்று சிறிதாக சிரித்தவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்…”ஒரு நிமிஷம் இரு…”என்றவள் எழுந்து சென்று அன்று வந்தபோது அவன் எடுத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து வந்தாள்

      “இது உனக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் பிக்ஸ் ஆச்சுல்ல அப்ப உன் கல்யாணத்துக்கு கிப்ட் பண்ண வாங்குனது…அறியா பெண்ணின் அஞ்சல்…இதுல வர பொண்ணு மாதிரி தான் நானும் உன்னை பைத்தியக்கார தனமா காதலிச்சேன்…ஆனால் நீ என்னை ஒரு மனுஷியா கூட மதிக்கலை என்ன “என்றவள் அவனை சரமாரியாக அடித்தவள் குணாவின் நெஞ்சிலே சாய்ந்து கதறி அழுதாள்

      இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூன்றாவது தங்கைக்கு மாப்பிளை பார்த்தபோது பெண்கொடுத்து பெண் எடுப்பது போல் சம்மந்தம் பேசிருந்தனர் குணாவின் பெற்றோர்..இதில் தங்கையின் வாழ்வும் கலந்து இருந்ததால் குணா ஒன்றும் பேசவில்லை…ஏற்றுக்கொண்டான்…அவனுக்கு அவன் குடும்பம் தங்கைகள் தான் முக்கியம் …மறுக்க இருந்த காரணம் எழில்…ஆனால் அவள் காதலை சொன்னதற்கு பிறகு எதுவும் பெரிதாக கட்டிகொள்ளாததால் அவள் தன்னை மறந்துவிட்டால் என்று நினைத்து இதற்கு சம்மதம் சொன்னான்..இது அவனின் உள்மனம் சொன்ன சப்பை கட்டு…அவள் இன்னும் தன்னை விரும்புகிறாள் என்று அவனுக்கு தெரியும்… இருந்தாலும் இதில் எழிலை விட அவனது குடும்பம் முக்கிய இடம் பிடித்தது…

   “அப்ப எப்படி வலிச்சது தெரியுமா…இங்கே…சாகுற அளவுக்கு நான் தைரிய சாலி இல்லை…உன்னை நினைச்சுட்டு வாழுற அளவுக்கும் நான் முட்டாள் இல்லை…அறிவாளி தனமா ஒரு முடிவு எடுத்தேன்…அதான் நான் பண்ண பெரிய முட்டாள் தனம்…இவனோட ப்ரோபோசலை அக்ஸ்ப்ட் பண்ணேன்…உன்னை மறக்க இவனை நினைக்கனும்னு நினைச்சேன்…”என்று குணாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு எதிரில் புகைப்படத்தில் இருந்த பிரவீனை காட்டினாள்

       “இவன் பிரவீன்…எங்க வீட்டுக்கு எதிர் வீட்ல நான் பத்தாம் கிளாஸ் படிக்கும் போது குடிவந்தாங்க…மாலா அத்தைக்கு ஒரே பையன்…யார்கூடவும் பேச மாட்டான்…பொண்ணுங்க கூட சுத்தம்…”என்றவள் குணாவின் நெஞ்சில் இருந்து எழுந்து பிரவீனின் புகைப்படத்தை கையில் வைத்தவாறு பின்வருபவற்றை சொல்ல ஆரம்பித்தாள்

           “ஆனால் மாலா அத்தையும்…முத்து மாமாவும் ரொம்ப ஜாலி டைப்…நான் ராஜி எல்லாம் எப்பயும் இவங்க வீட்ல தான் கிடப்போம்…ஒரு நாள் ஸ்கூல் விட்டு வரும் போது என் துப்பட்டா சைக்கிள்ல மாட்டி கிழிஞ்சு…வண்டிக்குள மாட்டிகிட்டு நான் கீழே விழுந்துட்டேன்…அன்னைக்கு ராஜியும் வரல…ப்ரவீனும் எங்க ஸ்கூல் தான்…எங்களை விட ரெண்டு வருஷம் மூத்தவன்…எங்க ஸ்கூல் SPL அவன்…பொண்ணுங்க மத்தியில செம கிரேஸ்…”என்று கூறியவாறு அவனது புகைப்படத்தை அவனின் முகத்தை தடவினாள்

             “எங்கே விட்டேன்…கீழே விழுந்துட்டேன் சொன்னேன்ல…இவன் தான் வந்து தூக்கிவிட்டு அவன் சட்டையை குடுத்து பத்திரமா வீட்டுல விட்டான்…அதுக்கு அப்புறம் அவன் கூட ப்ரண்ட் ஆக ரொம்ப ட்ரை பண்ணேன்…அவனை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது…அப்படி பாக்காதே…உன்னை பிடிச்ச மாதிரி இல்லை…ஒரு தோழனா…எப்படியோ பேசவும் வைச்சுட்டேன்…என் கூட பிரண்ட் காகவும் ஆகிட்டான்…எல்லாத்தையும் என்கிட்டே சொல்லுவான்…நானும் எல்லாத்தையும் சொல்லுவேன்…உன்னை தவிர…”என்றவள் அவன் புகைப்படத்தை கீழே வைத்துவிட்டு குணாவின் அருகில் வந்து அமர்ந்தாள்

      அவனின் கண்களை விடாமல் பார்த்தாள்….”ரெண்டு வருசத்துக்கு முன்னே உனக்கு வேற பொண்ணுகூட நிச்சயம் ஆகப்போதுனு சக்தி சொன்ன அதேநாள்ல உன்கிட்டே காமிச்சேன்ல்     அந்த மோதிரத்தோட பிரவீன் என்கிட்டே வந்து அவன் காதலை சொன்னான்…நான் என்ன பண்ணிருக்கணும்னு நீ நினைக்குற…சொல்லு…”

    “அடுத்தவ புருஷனை நினைக்குற அளவுக்கு நான் தரம்தாழ்ந்து போகல…அவ்வளவு கேவலமானவளும் கிடையாது…ஒரு நாள் அவன்கிட்ட யோசிக்க டைம் வாங்கிட்டு வந்து நல்லா யோசிச்சு தான் பிரவீன் ஓட காதலை ஏத்துக்கிட்டேன்…எனக்கு உன்னை மறக்கணும் அவ்வளவு தான்…வேற எதுவும் அப்ப தெரில…அவ்வளவு சந்தோஷப்பட்டான்…”என்றவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள்

         “என்னால உன்னை மறக்க முடியலை…உன்னை தாண்டி யாராலயும் என்கிட்டே வரமுடியாதுனு அப்ப தான் புரிஞ்சது..எவ்ளவோ போராடுனேன்…உன்னை மறந்துட்டு எப்படியாச்சும் பிரவீன் காதலோடு சேரணும்னு…முடியலை…ஒரு இரண்டு வாரம் கூட என்னால தாக்கு பிடிக்க முடியலை…அவனை ஏமாத்துறேனோன்னு தோணுச்சு…உன்னால எனக்கு குடுக்க முடியாத காதலை அவன் வாரி வாரி இறைச்சான்…என்னால தான் ஏத்துக்க முடியலை…தோத்துட்டேன்னு புரிஞ்சு…உனக்கான காதல்ல என்னை தோத்துட்டேன் என் சுயமரியாதை யை தோத்துட்டேன்னு புரிஞ்சது…உணர்ந்த நொடியே பிரவீன்க்கிட்ட சொன்னேன் …இந்த காதல் சரியாய் வரும்னு தோணல…பிரிச்சுருவோம்னு…”

       “அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் அவனை நான் பார்க்கவே இல்லை…யாருமே பார்க்கலை…எல்லாரும் போன் பண்ணாங்க…எடுக்கவே இல்லை…மாலா அத்தை என்னை பேச சொன்னாங்க…இங்கே பொறுத்தவரை நான் அவனோட ஒரே தோழி…போட்டேன்…எடுத்தான்…பேசுனான்….இதே நாள்ல ரெண்டு வருசத்துக்கு முன்னாடி  போ…போ…ய்ட்டான்…”என்றவள் கட்டுப்பாடு இழந்து கதறி அழ ஆரம்பித்தாள்…குணா கல் போல் அமர்ந்திருந்தான்…தன் மேல் காதல் கொண்ட ஒரே காரணத்தால் அவள் என்ன செய்திருக்கிறாள்….

        “ஆக்சிடென்ட்….என்கிட்டே பேசிட்டு இருக்கும் போதே ஒரு லாரில விழுந்து போய்ட்டான்…இது விபத்து இல்லை தற்கொலை…நீ இல்லாம என்னால வாழமுடியாது மதி…எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்குனு சொல்லிட்டு இருக்கும்போதே போய்ட்டான்…யாருக்கும் தெரியாது….அவனை கொன்றது நான் தாணு…ஆனால் எனக்கு தெரியும்ல…இதோ இவளுக்கு தெரியும்….”

 

        “என்னை மாதிரி தானே அவனோட காதலும் இருந்துருக்கும்…அது ஏன் எனக்கு புரியாம போச்சு…சொல்லு…ஏன் எனக்கு புரியாம போச்சு…”என்ற கதறலுடன் மயங்கி விழுத்திருந்தாள்….