ithayamnanaikirathey-28

IN_profile pic-d9fc9f8c

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 28

சாம்பலும், நீலமும் கலந்த நிறத்தில் உடையணிந்து வந்த காவல் துறையினர், “நீங்கள் கூச்சல் செய்து கொண்டும், வீட்டில் குதித்து கொண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு தொந்திரவு கொடுக்கிறீர்கள் என்று கீழ் வீட்டில் உள்ளவர்களும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் புகார் கொடுத்துள்ளார்கள்” என்று அவர்கள் ஆங்கிலத்தில் சற்று கடினமாகவே கூறினர்.

“நோ இட்’ஸ் எ  ரேட்” என்று துள்ளி குதித்து முன்னே வந்து சற்று கோபமாக  கூறினாள் தியா.

காவல் துறையினர் புரியாமல் பார்க்க, “911 ஃபார் எ ரேட். ஸோ பேட்” என்று தியா பக்கத்து வீட்டின் கதவை பார்த்து வருத்தம் தெரிவித்தாள்.

விஷ்வா, இதயா இருவரும் ஆங்கிலத்தில் சூழ்நிலையை பொறுமையாக விளக்க, காவல் துறையினர் சிரித்து கொண்டனர்.

அஜய், இவர்களை அமைதியாக பார்த்து கொண்டிருக்க, “யூ ஷுட் அரெஸ்ட் தி ரேட்” என்றாள்  தியா.

“ஸோ மிஸ்ச்சிவியஸ்…” என்று அவர்கள் தியாவை கொஞ்சிவிட்டு சென்றனர்.

“என்ன இதயா ஊரு இது? ஒரு எலி அடிச்சா போலீஸ் வருது.” என்று விஷ்வா புலம்ப, “தெரிஞ்சவங்க தான், இருந்தாலும் கம்பளைண்ட் பண்ணிட்டாங்க” என்றாள் இதயா வருத்தமாக.

“போலீஸ் வந்ததும் நான் பயந்துட்டேன்” விஷ்வா கண்களை உருட்ட, “போலீசுக்கு பயபடக்கூடாது. நாம என்ன தப்பு பண்ணோம். அவங்க நமக்கு ஃபிரெண்ட்ஸ். நம்ம நல்லதுக்கு தான் வருவாங்க. எங்க ஸ்கூலில் அப்படி தான் சொல்லிருக்காங்க” என்று தியா தோள்களை குலுக்கி கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

“நீ சொன்னா சரி தான்.” கூறியபடி அவளை இடித்து கொண்டு அமர்ந்தான் விஷ்வா.

அவன் அருகே அமர்ந்ததும், தியா இறங்கி செல்ல, “எலி…” என்று விஷ்வா அலற தியா, “அப்பா…” என்று அலறிக்கொண்டு அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

தன் மகளை சேர்த்து கொண்டு, “எப்பவும் அப்பா கூட இப்படி தான் இருக்கனும் ஒகேவா?” என்று அவன் கேட்க, தியா மறுப்பாக தலை அசைக்க, “நான் நிறைய எலியை பிடிச்சி வீட்டுக்குள்ள விட்டுருவேன். விடட்டுமா?” அவன் தியாவை மிரட்ட, “சரி சரி… நான் இப்படியே இருக்கேன்” மலை இறங்கி தன் தந்தையை கட்டிக் கொண்டாள் தியா.

அன்றிரவு குழந்தைகள் உறங்கிவிட, “இதயா” என்றான் அவன் தயக்கமாக, “சொல்லு விஷ்வா” என்று அவள் மெத்தையை சரி செய்தபடியே கேட்டாள்.

“நாம நான் பார்த்திருக்க வீட்டுக்கு போய்டுவோமா? நான், நீயும் தியாவும் வருவீங்கன்னு தனி வீடா கொஞ்சம் பெரிய வீடா பார்த்தேன்.” அவன் கூற, “அவ்வளவு நம்பிக்கையா?” புருவம் உயர்த்தினாள் புன்னகையோடு.

“எதுக்கு அபார்ட்மெண்ட்ல இருந்துட்டு? போலீஸ் எல்லாம் வந்துகிட்டு?” அவன் மேலும் மேலும் விளக்க முயற்சிக்க, “எதுக்கு விஷ்வா இவ்வளவு பேசிகிட்டு? நீ வான்னு சொன்னால் நான் வர போறேன்” என்று இதயா கண்சிமிட்டினாள்.

“லீஸிங் ப்ராப்லேம் எல்லாம் இல்லையா?” அவன் சந்தேகம் கேட்க, “நீ வந்த மாசத்திலிருந்து நான் மன்த்லி லீஸ் தான் பண்றேன். நீ எப்படியும் என்னை கூட்டிட்டு போய்டுவேன்னு எனக்கு தெரியுமே” என்று இதயா தோள்களை குலுக்கினாள்.

“அவ்வளவு நம்பிக்கையா?” அவளை போலவே கேட்டு அவன் புருவம் உயர்த்தி புன்னகைத்தான்.

“எனக்கு உன்னை பத்தி தெரியாதா?” அவள் கேட்க, “தெரிய வேண்டிய நேரத்தில் தெரியாமல் போச்சே?” அவன் வருந்த, “விஷ்வா…” என்று அவன் அருகே சென்று அவன் வருந்துவது பிடிக்காமல் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

“நான் உன்கிட்ட விவாகரத்து கேட்டிருப்பேனா?” அவன் குரல் உடைய, “அன்னைக்கு… அன்னைக்கு…” அவள் விம்மினாள்.

“அன்னைக்கு என்ன தான் நடந்துச்சு?” கேட்டுவிட்டான் விஷ்வா.

‘எத்தனையோ வருடங்களுக்கு முன் கேட்க வேண்டிய கேள்வி’ அவள் மனம் சுணங்கிக்கொண்டாலும், அதை வெளிக்காட்டவில்லை.

இதயா, பழைய நிகழ்வுகளை பகிர ஆரம்பித்தாள். அவர்கள் எண்ணங்களும் அன்றைய நாட்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

அவர்களுக்கு இடையிலான பிரச்சனை சற்று வீரியமாகி இருந்தது. விஷ்வா, இதயாவின் பேச்சு முற்றிலும் குறைந்து நின்றுவிட்டது என்று கூறலாம்.

அஜயை அழைப்பதும், விட்டுச்செல்வதும் மட்டுமே விஷ்வாவிற்கும், இதயாவுக்கும் இடையிலான சம்பந்தமாக மாற, இரு வீட்டு பெற்றோர்களுக்கும் பயம் தொற்றி கொண்டது.

ஒருவருக்கு ஒருவர் சமாதானம் பேச செல்லலாம் என்று எண்ணுகையில், இதயாவும் விஷ்வாவும் தங்கள் பெற்றோரை தடுத்துவிட்டனர்.

அப்பொழுது தான், விஷ்வாவின் தாய் மாமா சுந்தரேசன் கூடே ஒருவரை அழைத்துக்கொண்டு  இதயாவின் வீட்டிற்கு சமாதானம் பேசிவந்தார்.

அன்று இதயாவின் நண்பன் நரேனும் அவர்கள் வீட்டில் தான் இருந்தான்.

‘யாரோ ஒருவர் விஷ்வாவின் வீட்டிலிருந்து வந்திருக்கிறார்களே’ என்ற சந்தோஷம் இதயாவின் பெற்றோர்களுக்கு.

இதயா, அஜயோடு அறைக்குள் அமர்ந்திருந்தாள்.

நரேனும், இதயாவின் பெற்றோர்களும் அவர் முன் அமர்ந்திருக்க, “இந்தா பாருங்க, விஷ்வா நல்ல பையன். அவனோட ஒரு பொண்ணு அனுசரிச்சு வாழ முடியலைன்னா, யார் கூடவும் வாழ முடியாது” சுந்தரேசன் நிதானமாக பேச, அங்கு அமைதி நிலவியது.

“ஏதோ, சின்ன சிறுசுக இப்படி நிக்குதுக. இதயாவை மன்னிப்பு கேட்டுட்டு அவனோட சேர்ந்து வாழ சொல்லுங்க” என்றார் அவர் பெருமிதமாக.

இதயா சுருக்கென்று எழுந்து வெளியே வர எத்தனிக்க, நரேன் அவளை கண்களால் அமைதி காக்கும் படி எச்சரித்தான்.

மீண்டும் அமைதி. இதயா வீட்டினர் எதுவும் பேசவில்லை .

“நான் என்ன சொல்றேன்னா, ஏதோ அவ படிக்கணும்னு சொல்லிட்டு தான் இதயா இங்க வந்து உட்காந்திருக்கா” சுந்தரேசன் கூற, இதயாவின் பெற்றோர் தலை அசைத்து கொண்டனர்.

“கல்யாணத்துக்கு அப்புறம் என்ன படிப்பு?” சுந்தரேசன் கேட்க, அவருக்கு ஆமோதிப்பது போல் இதயாவின் தந்தை தலை அசைக்க, இதயாவின் தாய் காபி கொடுத்தார்.

இதயாவின் பெற்றோர்கள் தலை அசைக்கவும், சுந்தரேசன் அவருக்கு இருக்கும் ஆதரவை அறிந்து கொண்டு, “விஷ்வா, அதை தான் சொல்லுறான். இதயா வரலைனா விஷ்வா வேற கல்யாணம் பண்ணிப்பான்” என்று அவர் கெத்தாக கூற, இதயா கோபமாக வெளியே வந்தாள்.

“அதுக்கு நான் சம்மதிக்கணும்.” என்று நறுக்கென்று கூறினாள் இதயா.

“என்னமா, உன் பேச்சு தொனியே சரியில்லை. மரியாதை தெரியாத பொண்ணா இருக்கியே. பெரியவங்க பேசும் பொழுது, நீயென் இப்படி குறுக்க வந்து பேசுற?” அவர் இதயாவை கண்டித்தார்.

“இதயா” இதயாவின் தாய், அவளை அடக்க, “இதுக்கு தான் லவ் கீவ்ன்னு வெளிய பொண்ணை கட்டிக் கொடுக்க வேண்டாம். என் பொண்ணு சங்கவியை கல்யாணம் செஞ்சி வைக்கலாமுன்னு சொன்னேன்” சுந்தரேசன் நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

சங்கவியோடு திருமணம் என்ற வார்த்தையில் வெகுண்ட இதயா, “நீங்க எதுவும் பேச வேண்டாம். வீட்டை விட்டு வெளிய போங்க” அவள் எகிற, அவர் கோபம் உச்சத்தை தொட்டது.

“நானும் பேச வரலை இதயா. விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க தான் வந்தேன். இது தான் உன் குணமுன்னு தெரிஞ்சி, விஷ்வா உன் கூட வாழ முடியாம  விவகாரத்து கேட்டு அனுப்பிருக்கான். நான் தான் பேசி சமாதானம் செய்யலாமுன்னு நினைச்சேன்” அவர் விவாகரத்து பத்திரத்தை நீட்டினார்.

“நோ… நான் நம்ப மாட்டேன். நம்ப மாட்டேன். விஷ்வா அப்படி சொல்லிருக்க மாட்டான்” இதயா உடைந்து வெடிக்க, “நீ நம்பினாலும், நம்பலைனாலும் இது தான் நிஜம்” என்று அவர் கூற இதயா ஸ்தம்பித்து நின்றாள்.

“விஷ்வா சம்மதம் இல்லாமல் நான் இதை எல்லாம் எடுத்துட்டு இங்க வருவேனா? இல்லை என் பொண்ணு சங்கவியை அவன் கூட சம்பந்தம் படுத்தி பேசுவேனா?” அவர் நக்கலாக கேட்டார்.

“இப்பவும் ஒன்னும் கேட்டு போகலை. உன் படிப்பு வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்முனு அவன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவன் கூட வாழு. இல்லையா, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு” அவர் நிதானமாக கூற, “விஷ்வா இப்படி சொன்னானா?” இதயா சந்தேகமாக கேட்டாள்.

“வேணுமின்னா விஷ்வாவுக்கு போன் பண்ணி தரேன். நீயே பேசு” அவர் அலைபேசியை எடுக்க, “மன்னிப்பு கேட்டுட்டு, படிப்பெல்லாம் வேண்டாம் புருஷனும், பிள்ளையும் தான் முக்கியனும்னு அவன் கிட்ட பேசு. பேசிட்டு வரியா?” அவர் கெத்தாக கேட்டார்.

“டைவோர்ஸ் பேப்பரை குடுங்க. நான் கொடுக்குறேன் டைவர்ஸ், விஷ்வாவை அவன் இஷ்டப்படி வாழ சொல்லுங்க” இதயா படபடவென்று கையெழுத்திட, அவள் பெற்றோர் அவளை தடுத்தும் இதயா கேட்கவில்லை.

நினைவுகளிலிருந்து மீண்டாள் இதயா. அவள் சற்று பதட்டமாக காணப்பட, விஷ்வா இதயாவுக்கு தண்ணீர் கொடுத்தான்.

“நீ ஏன் எனக்கு அன்னைக்கு ஒரு போன் பண்ணலை இதயா? கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி ஒரு ஃபோன் பண்ணிருக்கலாமில்லை?” அவன் அவளை கேட்க, இதயாவிடம் மௌனம்.

“கேட்குறேனில்லை” அவன் குரல் உயர, “நீ சொல்லி வேற அதை இன்னொரு தடவை கேட்கணுமான்னு தான் விஷ்வா. அவர் சொல்லி கேட்கவே எனக்கு தாங்கலை. அவ்வளவு வலிச்சுது” அவள் அவன் மேல் சாய்ந்து கொண்டு விசும்பினாள்.

அவள் முதுகை நீவியபடி, “நான் அப்படி சொல்லிருக்க மாட்டேன்னு உனக்கு தோணவே இல்லையா இதயா?” அவன் கண்ணீர் மல்க கேட்டான்.

“அன்னைக்கு உங்க மாமா அவ்வளவு உறுதியா பேசினார். அவரே ஃபோன் எல்லாம் பண்றேன்னு சொன்னாரு. நான் அப்படி தானோன்னு நம்பிட்டேன்” அவள் முகம் உயர்த்தி பரிதாபமாக கூறினாள்.

“உடனே மேடம் இது தான் சாக்குன்னு, எப்ப டைவர்ஸ் கேட்பாங்கனு கையெழுத்து போட்டு குடுத்துடீங்க?” அவன் அவளை சீண்ட, “நீ மட்டும் என்னவாம்? நான் எப்ப கையெழுத்து போடுவேன்னு பார்த்துட்டு உடனே கையெழுத்து போட்டுட்டு அடுத்த கல்யாணத்துக்கு ரெடி யாகிட்ட?” அவளும் அவனை சீண்டினாள்.

“இவ கண்டா நான் கல்யாணத்துக்கு ரெடியானதை… அப்படியே விட்டேன்னு வை தெரியும்.” என்று அவன் கோபம் கொள்ள, “விடுவ… விடுவ… நானும்  விடுவேன் திரும்பி.” அவள் முகம் சுழித்து கொள்ள, அவன் சிரித்து கொண்டான்.

அவள் தலை முடியை ஒதுக்கி, “மாமா வர விஷயமே எனக்கு தெரியாது இதயா. அங்க நடந்ததும் எனக்கு தெரியாது. அப்பா வேண்டாமுன்னு சொல்ல சொல்ல, அம்மா தான் அவங்க அண்ணனை நம்பி அனுப்பி இருக்காங்க. மாமாவுக்கு நான் சங்கவியை கட்டிக்கல்லை உன்னை லவ் பண்ணிட்டேன்னு கோபம்.“ அவன் நிறுத்த, இதயா தலை அசைத்துக் கொண்டாள்.

“அத்தோட, தான் எடுத்த காரியத்தை எப்படியாவது உன்னை டைவர்ஸ்ன்னு மிரட்டியாவது முடிக்கனுமுன்னு மிரட்டியிருக்கார். நீ மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆள் இல்லைன்னு, பாவம் அவருக்கும் தெரியலை” அவன் கேலியாக முடிக்க, அவள் அவனை முறைத்தாள்.

“தப்பு நடந்ததும் மாத்தி பேசிட்டார். நீ டைவர்ஸ் கேட்டதா தான் என் கிட்ட சொன்னாங்க. எனக்கும் அதிர்ச்சி தான். ஆனால், நீயே கேட்ட பிறகு, அப்புறம் என்னன்னு கோபத்தில் நான் டைவர்ஸ் பேபர்ஸ்ல  சைன் பண்ணேன்” அவன் கூற, “நான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணிருக்கணும். ஆனால், உங்க மாமா, அவ்வளவு உறுதியா ஃபோனை நீட்டவும் நான் நம்பிட்டேன்.” இதயா உதட்டை பிதுக்கினாள்.

“நானாவது உன் கிட்ட ஃபோன் பண்ணி பேசிருக்கலாம். பிரிஞ்சி இருக்கிற நாம பேச மாட்டோம். அப்படி பேசுறவங்க எப்படியோ பேசி சமாதானம் ஆகிருப்போமுன்னு மாமா கணிச்சிட்டார்” அவன் தன் தலையை சுவரோடு சாய்த்து கொண்டான்.

அங்கு அமைதி நிலவியது. மேலும் விஷ்வா தொடர்ந்தான்.

“நான் ஒரு நாள் வேலை விஷயமா பெங்களூர் போனப்ப தான் நரேனை ஆஃபீசில் சந்திச்சேன். நரேன் ரொம்ப வருத்தப்பட்டு, கோபப்பட்டு பேசினான். அப்ப தான் எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிது. எல்லாமே தப்பா போச்சேன்னு சரி பண்ண இங்க வரதுக்கு இத்தனை வருஷம் ஆகிருச்சு” அவன் விளக்கம் கொடுத்தான்.

“நரேன் சொல்லலைனா, நீ வந்திருக்கவே மாட்டியா விஷ்வா?” இதயா நேரடியாக கேட்டாள்.

“அஜய் உன்னை தேட ஆரம்பிச்சிட்டான்” விஷ்வா மழுப்ப, “என் நெஞ்சில் எட்டி உதைச்சி நீ அஜய்யை வாங்கின” இதயா குரலில் அத்தனை வருத்தம்.

“இதிம்மா…” அவன் குரல் வலியில் பிதற்றியது. அந்த வலி அவள் இதயத்தையும் சுட்டது.

“அப்படி சொல்லாத இதயா. என்னால தாங்க முடியலை” அவன் கண்கள் கலங்கியது.

“அன்னைக்கு என் கால் தெரியாம உன் மேல் பட்டுச்சு. அவ்வுளவு தான். நீ அழுறதை பார்க்க கூட பிடிக்கலை. அது தான் நான் திரும்பி பார்க்காம அஜயை  கூட்டிட்டு போய்ட்டேன். நீ சும்மா சும்மா இப்படி சொல்லிக்கிட்டு திரியாத” என்று வருத்தம் போல் அவளை கண்டித்தான் விஷ்வா.

அவள் பதில் பேசாமல் இருக்க, அவன் மேலும் தொடர்ந்தான்.

“நீ அன்னைக்கு அப்படி என் காலில் விழுந்து கதறும் பொழுது, என்னால் உன்னை பார்க்கவே முடியலை. அஜயை உன்கிட்ட கொடுத்துட்டு போய்டணும்னு தான் நினச்சேன்” அவன் பொறுமையாக கூற, “அது தான் பிள்ளை மேல, அம்மாவுக்கு அக்கறை இல்லைனு. எங்கயோ போறான்னு சொன்னியாக்கும்?” அவள் கோபம் கொண்டாள்.

“எனக்கு வேற வழி தெரியலை இதயா. உனக்கும், எனக்கும் இருக்கும் ஒரே பாலம் அஜய் மட்டும் தான். அதையும் நான் உன்கிட்ட கொடுத்துட்டா, எனக்கும் உனக்குமான சம்பந்தம் மொத்தமா முடிஞ்சிருமோன்னு பயந்துட்டேன். அஜய் என்கிட்டே இருந்தா, பிள்ளைக்காகவாது வருவேன்னு என் ஆழ் மனம் நம்புச்சு” அவன் கூற, அவள் எதிரே இருந்த மெத்தையில் அமர்ந்து அவனை பார்த்து புன்னகைத்தாள்.

“உனக்காகவே வராத இதயா, உன் மகனுக்காக வந்திருவாளா? அப்படி என்ன அஜய் எனக்கு விஷ்வாவை விட உசத்தி?” அவள் புருவம் உயர்த்த, “இதயா…” அவன் குரல் காதலில் கசிந்து உருகியது.

அவள் முன் மண்டியிட்டு, அவள் மடி சாய்ந்து, “தியா பிறந்தது தெரிஞ்சு, நான் தியாவை பார்க்க வந்தனைக்கு, நீ தியாவை என் கண்ணில் கூட காட்டலை” அவன் அவள் முகம் பார்த்து தன் பேச்சை நிறுத்தினான்.

“தியா உண்டானதே, எனக்கு ரொம்ப நாள் தெரியாது விஷ்வா. நான் இருந்த பிரச்சனையில் அதை கவனிக்கலை. அப்புறம் என் படிப்பு பிளானும் அந்த வருஷம் நடக்கலை. வீட்டில் பயங்கர எதிர்ப்பு. இது எல்லாத்துக்கும் இடையில் நீ தியாவை பார்க்க வந்தப்ப, எனக்கு பயங்கர சந்தோஷம். நாம, சேர மறுபடியும் ஒரு வாய்ப்புன்னு” அவள் பேச்சை நிறுத்த, ‘என் இதயா, என்னை எத்தனை தூரம் தேடி இருக்கிறாள்’ அவன் இதயம் நனைந்தது.

“நீ வெளியில் காத்திருக்க, நான் தியாவை காட்ட வரணும்னு தான் நினச்சேன். நீ என்னவோ பெரிய இவன் மாதிரி, நான் இதயாவை பார்க்க வரலை. குழந்தையை தூக்கிட்டு போக தான் வந்தேன். அப்படி, இப்படின்னு ரொம்ப பேசின” அவள் குற்றம் சட்ட, “அது அஜய் வச்சி பண்ண முடியாததை, குட்டி பாப்பா வச்சி பண்ணிடலாமுன்னு எண்ணம்” அவன் அசடு வழிந்தான்.

“அது, தான் உன் கிட்ட தியாவை காட்டவே இல்லை” அவள் உதட்டை சுழித்து கொண்டே கூறினாள்.

“மாமா நடந்துக்கிட்ட முறையில் அப்பாவுக்கு பயங்கர கோபம். மாமா நான் சும்மா மிரட்டினேன், அந்த பொண்ணு கையெழுத்து போட்டிருச்சு. அப்படி பட்ட பொண்ணு விஷ்வாவுக்கு எதுக்குன்னு… மாமா நியாயம் பேசினார்.” அவன் நடந்ததை கூறினான்.

“நான் மாமா கிட்ட எதுமே கேட்கலை. தப்பு நம்ம மேல, புருஷன் பொண்டாட்டி விஷயத்தை நாமளே பேசி தீர்க்காம, மூணாவது மனுஷனை உள்ள விட்டது நம்ம தப்பு. இதுல அவரை என்னத்த கேட்க?” அவன் கூற, இதயா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“நரேன் சொல்லலைனாலும், நான் வந்திருப்பேன். அஜய்க்கு அம்மா வேணுமுன்னு சொல்லிகிட்டாவது” அவன் நிறுத்த, “நான், இப்பவும் அஜய்க்காக வரமாட்டேன் விஷ்வா. நீ இப்ப தியா மட்டும் வேணும்னு கேட்டாலும், நான் குடுத்திருவேன். விஷ்வா கேட்டு இல்லைனு சொல்ல என்ன இருக்கு. நீ வேணுமின்னு கேட்டன்னு தெரிஞ்சவுடனே விவகாரத்தை கொடுத்தேன் தானே?” அவள் எங்கோ பார்த்தபடி கூறினாள்.

“நான் என்ன கேட்டாலும் கொடுப்பியா இதயா?” அவன் கேட்க, அவள் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

 அவன் கேட்டதில் அவள் இதயம் நனைந்தது. அவள் முகம் செவ்வானமாக சிவந்தது.

இதயம் நனையும்…