Malar – 2

images - 2020-10-26T140033.288-0929347d

அத்தியாயம் – 2

நாமக்கல் ரயில் நிலையம்..

கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் காற்றை சுவாசிப்பவளின் முகத்தில் மென்னகை பரவியது.

ஏற்கனவே வாழ்ந்த இடம் என்பதால் அங்கே வந்திருந்த பல மாற்றங்களை கண்டு வியந்தவள், “இவ்வளவு தூரம் மாறிப்போச்சே ஊரு” என்று நினைத்தபடி நடந்தவள் சிலநொடிகள் எந்த வழி என்று தடுமாறினாலும் பின்னர் விவரம்கேட்டு வந்து சேர்ந்தாள்.

நான்கு வழி சாலையின் முக்கில் அமர்ந்திருந்த புள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டவள், “உன்னை நம்பி வந்து இருக்கேன். என்னை கைவிட்டு விடாதே கணேசா” என்று வேண்டிக்கொண்டு திரும்ப வீடு வாடகைக்கு இருப்பதை பார்த்தாள்.

“தேங்க்ஸ் வழி சொல்லிட்டியே” என்று புன்னகைத்தபடி அங்கே இருப்பவர்களிடம் விசாரித்து அட்வான்ஸ் கொடுத்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஒரு சமையலறை ஒரு ஹால் என்பது போல பத்துக்கு பதினாறு என்ற அறையை பார்த்து திருப்தியாக இருந்தது. அன்று கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்தவள் மறுநாள் காலையில் வீட்டிற்கு தேவையானது வாங்கிபோட்டு அவரை சரியான இடத்தில் வைப்பதற்குள் இரண்டு வாரங்கள் சென்று இருந்தது.

அவள் ‘ஹப்பாடா’ என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆனது. நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் பெரிய பிரச்சனையே வேலைதான். செவ்வந்தியின் எண்ணம் ஈடேற முதலில் தொழில் தொடங்க மூலதனம் வேண்டும் என்று சொன்னது அவளின் மனம்.

மறுநாள் காலை சீக்கிரமே கிளம்பிய செவ்வந்தி பேங்க் செல்ல அது பத்துமணிக்கு தான் திறக்கும் என்ற காரணத்தினால் பார்க்கின் உள்ளே நுழைந்தாள். நாமக்கல் மலையின் பின்புறம் இருந்த பெரிய குளத்தின் நீர் பரவிகிடக்க அதன் கரை பகுதியில் பார்க் அழகுற அமைக்கபட்டு நேர்த்தியாக பராமரிக்கபட்டு இருந்தது.

அவள் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து தோளில் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்த நேரம் ஒரு பெண்ணின் பேச்சுக்குரல் அவளின் கவனத்தை ஈர்த்தது. அவளின் காதலனுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கோபத்தை வார்த்தைகளில் காட்டிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு கொஞ்சம் கூட வாழ்க்கை பற்றிய எண்ணமே இல்லையா?” அவளின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. அவன் மெளனமாக அங்கிருந்த குளத்தை வேடிக்கைப் பார்க்க அவளின் கோபம் அதிகரித்தது.

“காலேஜ் படிக்கும்போது இருந்த மாதிரியே இருந்தால் எப்படிதான் உன்னைப் பற்றி வீட்டில் பேச முடியும்? படிப்பு முடிச்சு அப்பா தொழிலை கையில் எடுத்தும் அது நஷ்டத்தில் முடிந்துவிட்டது. அப்புறம் அடுத்தடுத்து தொடங்கிய தொழில்கள் தோல்வியில் முடிஞ்சிபோச்சு. உங்க வீட்டில் உன்னை மனுஷனாக கூட மதிக்கல..” அவள் தொடர அவனின் பார்வை அவளின் மீது நிலைத்தது.

பார்ப்பவர்களை திறம்ப பார்க்க வைக்கும் அளவிற்கு அழகு இல்லை என்றபோதும் அவளும் அழகாகவே இருந்தாள். இடைவரை தாண்டும் கூந்தல் இல்லை என்றபோது தோளை தொட்டு செல்லும் அவளின் முடி அவளை அழகாக காட்டியது. அவளுக்கு இருபத்து ஐந்து வயது என்று அவளே சொன்னாலும் நம்பமாட்டார்கள்.

ஐந்தடி  உயரத்தில் தன் எதிரே நின்றவளின் கோபமுகம் மட்டும் அவனை வெறுக்க வைத்த வித்தை என்னவென்று தீவிரமாக யோசித்தான் அவனுக்கே விடை தெரியவில்லை.

ஜனனி கல்லூரியில் இருந்தே வெற்றியை உயிருக்கு உயிராக நேசிப்பவள். இப்போது பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள். அவளுக்கு நல்ல இடத்தில் இருந்து வரங்கள் வந்தவண்ணம் இருக்க அவளின் கோபம் மொத்தமும் அவனின் புறம் திரும்பியது.

அவள் பேசுவதில் மனம் செல்வதை கவனித்த செவ்வந்தி, ‘மனசே உனக்கு இது தேவை இல்லாத விஷயம்.. நீ என்ன வேலைக்கு வந்து இருக்கிறாயோ அதமட்டும் பாரு..’ என்று தன் கவனத்தை திசை திருப்பிவிட்டாள்.

கனலை கக்கும் பார்வையுடன்,  “உங்கூடதானே நானும் படிச்சேன் இப்போ பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கேன்” அவள் குத்தி காட்டிட அவனுக்கு சுள்ளேன்று கோபம் வந்தது.

“நீ சொல்வது எல்லாமே சரிதான் நான் எதுக்குமே ஆகமாட்டேன். நான் தொட்டது எதுவும் தொலங்காது. இன்னும் என்ன சொல்றீயோ சொல்லிட்டுப் போ” என்ற வெற்றிக்கு ஏன் பிறந்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.

என்ன முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் முடிவதை கண்டு அவன் துவண்டு போனான். அவனின் மனநிலை புரியாமல் எல்லோரும் அவனை மேலும் மேலும் காயபடுத்தி அது உண்மை என்றே நம்ப வைத்துவிட்டனர்.

எல்லோரும் அவனையும், அவனின் தோல்வியையும் கண்டு, ‘நல்ல காரியத்திற்கு வரும்போது இவனை ஏன்டா வீட்டிற்கு கூட்டிட்டு வர?’ என்று அவன் காதுபட பேசுவதை கண்டு எரிச்சலோடு நண்பர்களிடம் இருந்து விலகி நின்றான்.

இவன் பேசுவதை கவனிக்காத செவ்வந்தி கைகடிகாரத்தைப் பார்த்து, ‘இப்போ பேங்க் போனால் சரியாக இருக்கும்’ என்று அங்கிருந்து கிளம்பினாள்.

“நீ என்னவோ பண்ணு நான் கிளம்பறேன்” என்று ஹேன்ட்பேக்கை தோளில் போட்டுகொண்டு செவ்வந்தியை வேகமாக கடந்து சென்றாள்.

தன்னை கோபமாக கடந்து செல்லும் பெண்ணை பார்த்த செவ்வந்தி, ‘ஓஹோ இந்த பொண்ணுதான் கோபத்தில் பேசிட்டு இருந்தாளா? பாவம் அந்த மனுஷன் திரும்ப ஒரு வார்த்தை பேசாமல் பொறுமையாக இருக்காரு’ நினைத்தவளுக்கு ஏனோ திட்டு வாங்கிய அந்த நல்ல உள்ளத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அவள் சட்டென்று திரும்பிப் பார்க்க அவன் அவளின் எதிர்ப்புறம் திரும்பி நின்றிருந்த காரணத்தினால் அவனின் முதுகை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. தலையைக் குலுக்கிக்கொண்டு நேராக பேங்கிற்கு சென்றாள் செவ்வந்தி.

அதே நேரத்தில் ஜனனி பேசிய பேச்சில் இருந்து தன்னை மீட்டெடுக்க எண்ணிய வெற்றி அங்கேயே சிறிதுநேரம் அமர்ந்து இருந்தான். அவனின் கரங்களில் இருந்த ஃபைல் அவனை பார்த்து சிரிக்க, ‘உன்னை படிச்சிட்டு நான் அனுபவிக்கும் கொடுமை இருக்கே’ என்று நினைத்துக் கொண்டான்.

படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடினால் அது கிடைப்பதில்லை. தகுதிக்கும் குறைவான வேலையைத் தேடிக் கொண்டாளோ சுற்றி இருப்பவர்கள் மதிப்பதில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவனுக்கு அன்று ஒரு முக்கியமான இன்டர்வியூ இருந்ததால் அதில் பங்கேற்க வந்தபோது தான் எதர்ச்சியாக ஜனனியை சந்தித்துவிட அவள் மொத்த கோபத்தையும் இவனிடம் கொட்டிவிட்டு சென்றுவிட்டாள். ஓரளவு மனம் அமைதியடைந்ததும் வெற்றி அங்கிருந்து கிளம்பினான்.

அவன் கலந்து கொண்ட இண்டர்வியூயில் இருந்து சுற்று வரை தேர்வான வெற்றி கடைசியாக அவர்கள் கேட்ட டெபாசிட் பணத்தை தன்னால் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டு தோல்வியுடன் நிறுவனத்தைவிட்டு வெளியே வந்தான்.

அவன் நினைத்தால் தந்தையிடம் பணத்தை வாங்கி கட்டிவிட்டு உடனே வேலைக்கு சேர முடியும். ஆனால் அவனுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் உண்மையை சொல்லிவிட்டு நிருவனத்தைவிட்டு வெளியே வந்தான்.

அவள் டெபாசிட் பண்ணியிருந்த பணத்தை எடுத்தவள், ‘இப்போதான் பணம் கைக்கு வந்து இருக்கு. இனிமேல் மற்ற விஷயத்தை எல்லாம் தெளிவாக திட்டம் போடணும்’ என்று நினைத்தபடி அவள் பேக்கில் பணம் வைத்தபடியே வெளியே வந்தாள்.

அவள் பேங்க் உள்ளே நுழைந்த நிமிடத்தில் இருந்து கவனித்த ஒருவன் அவளின் பணத்தை பறித்துகொண்டு ஓட்டம்பிடிக்க, “ஐயோ என் பணத்தை பிடிங்கிட்டு போறானே?” என்றபடி இவள் அவனை துரத்திக்கொண்டு ஓடினாள்.

அவளின் எதிர்புறம் வந்து கொண்டிருந்த வெற்றி அவள் சொல்வதை கேட்டு, “டேய் நில்லுடா” என்று ஓடும் அவனை பிடித்து இழுக்க திருடன் அவனிடமிருந்து தப்பியோட கையை தட்டிவிட்டான். வெற்றியின் கையிலிருந்த படிப்பு சான்றிதல்கள் உள்ள ஃபைல் கீழே விழுந்தது.

அவனை துரத்திக்கொண்டு ஓடும்போது அந்த ஃபைலை எடுக்க மறந்தான். திருடனை அவன் துரத்திக்கொண்டு ஓடுவதை கவனித்த செவ்வந்தி கீழே விழுந்து கிடந்த அவனின் பைலை கையில் எடுப்பதற்குள் அவனை இழுத்துக்கொண்டு அவளின் அருகே வந்தான்.

 திருடனின் கையில் இருந்த பணப்பை பறித்து அவளின் கையில் கொடுத்தான். தன் பணம் கைக்கு கிடைத்த நிம்மதியில் அவள் சில நொடிகள் அமைதியாக நின்றுவிட, “இனிமேல் பணம் திருடுவ.. திருடுவ..” என்று அவனை அடித்தான்.

அவனின் மொத்த பலமும் கண்டு திடுக்கிட்டு போனவன், “அண்ணா என்னை விட்டுடுங்க. நான் செய்வது தவறுதான் இனிமேல் இந்த மாதிரி விஷயம் செய்ய மாட்டேன்” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு நிற்காமல் ஓடிவிட்டான்.

“தேங்க்ஸ் ஸார். இன்னைக்கு நீங்க பண்ணிய உதவியை மறக்க முடியாது. இன்னைக்கு இந்த பணம் மட்டும் தொலைந்து போயிருந்தால் என் கனவு எல்லாமே கற்பனையாகவே போயிருக்கும்” என்று நன்றியுடன் அவனை கையேடுத்து கும்பிட்டாள்.

“இவ்வளவு பணத்தை எடுக்க வரும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது இல்லையா மேடம்” என்று அவன் கேட்துவிட்டு, “உங்க பணம் சரியாக இருக்கிறதா என்று பாருங்க” என்று சொல்ல அவள் பையை திறந்து பார்த்தாள்.

எல்லாம் சரியாக இருக்கவும், “ம்ம் இருக்கிறது ஸார். நான் கவனமாக தான் இருந்தேன். இந்த ஊருக்கு நான் புதுசு. திடீரென்று இப்படி நடக்கவும் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்” என்றாள் படபடப்புடன்.

“சரி கவனமாக வீடு போய் சேருங்க” என்று சொல்லிவிட்டு அவன் நகர அவளின் குரல் அவனை தடுத்தது.

“இவ்வளவு பெரிய உதவி பண்ணிட்டு இப்படியே போனால் என்ன அர்த்தம் வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டு போலாம்” என்றாள்.

சட்டென்று அவளின் புறம் திரும்பியவன், “உங்க பணத்தை அபேஷ் பண்ண நானும், அந்த திருடனும் திட்டம்போட்டு இதை செய்துவிட்டு இப்போ நான் உங்களிடம் நல்லவனாக நடிக்கலாம் இல்லையா?” அவன் புன்முறுவலோடு சொல்ல கலகலவென்று சிரித்துவிட்டாள் செவ்வந்தி.

அவள் சிரிக்கும்போது அவளின் முகம் மலர்வது அவனின் மனதிற்குள் ஏதோ செய்ய தலையைக் குலுக்கி தன்னை நிலைபடுத்திக்கொண்டு, “ஏன் சிரிக்கிறீங்க” என்று காரணம் புரியாமல் கேட்டான்.

“இவ்வளவு திட்டம் போட்டவர் தான் தன் ஒரிஜினல் சர்டிபிகேட் அடிங்க ஃபைலை தவறவிட்டு திருடனை பிடிக்க ஓடுவாரா?”தன் இடது கையில் இருந்த ஃபைலை அவனிடம் காட்டி கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

அவனுக்கு உடனே சிரிப்பு வந்துவிட ஃபைலை வாங்க கைநீட்டிட, “என்னோடு காபி சாப்பிட வரீங்களா” என்று கேட்டாள் குறும்புடன்.

“ம்ம் வரலன்னு சொன்னால் விடவா போறீங்க” ஃபைலை அவளிடமிருந்து வாங்கிகொண்டு அவளை பின் தொடர்ந்தான். இருவரும் அருகில் இருந்த ஒரு காபி ஷாப் உள்ளே நுழைந்து, “டூ காஃபி” ஆர்டர் கொடுத்துவிட்டு ஒரு டேபிளில் அமர்ந்தனர்.

“நான் செவ்வந்தி” அவள் தன்னை தன்னை அறிமுகபடுத்திக் கொள்ள, “வெற்றி வேந்தன்” என்றான் புன்னகையுடன்.

“சூப்பர் பெயரில் வெற்றியை வெச்சு இருக்கீங்க” என்றாள்.

“அடப்போங்க பேரில் மட்டும் அது இருந்து என்ன பண்றது” என்றான் அவன் சலிப்புடன்.

“ஏங்க இப்படி எல்லாம் பேசறீங்க” என்று அவள் சொல்ல, “அதை விடுங்க” என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க, “என்ன பண்றீங்க” என்று கேட்டாள்.

“பெருமையாக சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லங்க” என்றான் அவன் மீண்டும் சலிப்புடன்.

“என்னங்க எது கேட்டலும் சலிச்சுகிறீங்க. அப்போ லவ் பெயிலியர் ஆகிடுச்சா என்ன?” அவள் சந்தேகமாக அவனை நோக்கிட பக்கென்று சிரித்தவன், “என் லவ்க்கு என்ன குறைச்சல் அது நல்லாவே இருக்கு. காலையில் கூட லவரை பார்த்துட்டு தான் இன்டர்வியூ போனேன்” என்றான்.

அவளுக்கு உடனே பார்க்கில் தன்னை கடந்து சென்ற பெண்ணின் நினைவு வர, “காலையில் பார்க்கில் ஒரு பொண்ணு அவளோட லவரை வெளுத்து வாங்கிட்டா. பாவம் அந்தப்பையன் அவளை எதிர்த்து ஒரு வார்த்தை பேசல” என்றதும் வெற்றிக்கு உடனே ஜனனின் நினைவுதான் வந்தது.

அதற்குள் காபி வந்துவிடவே அந்தப்பேச்சு அதோடு நின்றுபோனது.

இருவரும் மெளனமாக அதை பருக, “நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க” என்று கேட்டான் வெற்றி.

“நான் தொழில் தொடங்க பிளான் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொல்லவும், “சரிங்க ஆல் தி பேஸ்ட்” என்று அவன் ஃபைலை எடுத்தவன், “நீங்க வாங்கிக் கொடுத்த காஃபிக்கு தேங்க்ஸ்” என்றான்.

“என்னங்க சந்திச்சோம். உங்களைபற்றி எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறீங்க” என்று அவள் மீண்டும் அவனை வம்பிற்கு இழுக்க, “ரயில் சிநேகம் மாதிரிதாங்க நம்மளோட இந்த எதிர்பாராத சந்திப்பும். சோ அடுத்த சந்திப்பு பற்றி நான் பேசல. இப்போ நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

ஆறடி உயரத்தில் மாநிறத்தில் இருந்தான். திரண்ட தோள்களும், கட்டுகோப்பான உடலமைப்பும், அவனின் வசீகரமான முகமும் மற்றவர்களை கண்டிப்பாக வசிகரித்துவிட்டும். அலட்டல் இல்லாத பேச்சும், அசடு வழியாத அவனின் கம்பீரம் அவளை ஏதோவொரு விதத்தில் கவர்ந்தது என்றே சொல்லலாம்.

தன்னை மறந்து அவனை ஒரு நிமிடம் பார்த்தவள், ‘ஏய் நீ போற ரூட் சரியில்ல..’ என்று மனதிற்கு கடிவாளமிட்டு எழுந்து வீட்டிற்கு சென்றாள்.

மாலை வீடு திரும்பிய அண்ணனை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டிருந்தாள் ஜமுனா. அவன் சோர்வுடன் வருவதை பார்த்தும், ‘இந்த வேலையும் கிடைக்கவில்லை போல’ என்று நினைத்தவளுக்கு மனசு வருத்தமாக இருந்தது.

அதை உடனே மனதிற்குள் மறைத்துக்கொண்டு, “ஹப்பா என்னடா இன்னும் ஆளை காணலையேன்னு நினைச்சிட்டே இருந்தேன்” என்ற தங்கையை பார்த்தும் அவனுக்கு மற்ற விஷயங்கள் மறந்து போனது.

“இன்னைக்கு எதுக்கு எதிர்பார்த்து காத்திருந்த?” சந்தேகமாக அவளை ஏறிட்டான்.

“இன்னைக்கு கோதுமை மாவில் குலோப்ஜாமூன் செய்தேன் அதுதான் சாப்பிட ஆள் தேடிட்டு இருந்தேன்” என்று அவள் சிரித்தபடி கூற, “நான் என்ன எலியா என்னை வைத்து டெஸ்ட் பண்ணி பார்க்கிற” அவளோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

அந்த நாளின் நிகழ்வுகளை அவன் அதோடு மறந்துவிட, அவளும் தன் தொழிலுக்கு தேவைப்படும் கடையை தேர்வு செய்ய இடம் தேடுவதில் மும்பரமாக இறங்கினாள்.