IV18

IV18

இதய ♥ வேட்கை 18

 

செங்கோட்டை சென்றே ஆகவேண்டிய நிலையில், விஷ்வா, திலாவிடம் அதுபற்றிப் பேசினான்.

பெண்ணோ, “என்னைய விட்டுட்டா!”, என விஷ்வாவிடம் கேட்டாளே தவிர, தன்னால் அவனுடன் செல்ல இயலாத நிலையில் இருக்கிறோம் என்பதைப் பற்றி யோசிக்க முயலவில்லை.

அதற்கு பெண்ணின் உடல்நிலையும் இடங்கொடுக்கவில்லை.

“ஸ்ட்ராபெர்ரி! உன்னை கூட்டிட்டுப் போகலாம்னா…! டாக்டர் த்ரீ மன்த்ஸ் லாங்க் ட்ராவல் அவாய்ட் பண்ணச் சொல்லியிருக்காங்களேடா!”, விஷ்வா வினவ

“அந்த ஸ்ட்ராபெர்ரி எப்டி இருக்கும்? நான் சாப்பிட்டதே இல்லை”, என்றவள்

“டாக்டர்ஸ் அப்டித்தான் விச்சு! பொறுப்பில்லாம எதையாவது சொல்லுவாங்க!”, இயலாத நிலையிலும் கணவனிடம் குதர்க்கமான வார்த்தைகளைக் கூறியவளைக் கண்டவனுக்கோ சிரிப்பு தாளவில்லை.

“வாங்கித் தரேண்டா”, அன்பொழுகக் கூறியவன்,

“டாக்டர்ஸ்கு பொறுப்பில்ல,  ஆனா நீ ரொம்ப பொறுப்பு!”, என விடாமல் பெண்ணிடம் கேட்க

“பின்ன இல்லையா?”, என்றவள், “அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கனு என்னை கழட்டி விட்டுட்டுப் போனா… அவ்வளவுதான்!”, எழுந்தே அமர முடியாதபோதும் மிரட்டலோடு பேசியவளின் அருகில் சிரிப்போடு வந்தவமர்ந்தவன்

“என்னடி செய்வ?”, குதர்க்கமாக விஷ்வாவும் பெண்ணிடம் கேட்க

“அழுதுருவேன்!”, என்றவள் தலையைத் தூக்கி கணவனின் மடியில் வாகாக வைத்துக் கொண்டாள். பெண்ணின் பதிலில் பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவாறு அன்பாக தலையை வருடிக் கொடுத்தான் விஷ்வா.

கணவனது செயலில் உண்டான அக்கறையை உணர்ந்தவள், “டாக்டர் சொன்னாங்கனு என்னை இங்க தனியா விட்டுட்டு போயிறாத விச்சு!  என்னால நீயில்லாம இருக்க முடியாது!”, மனதில் உள்ளதை உள்ளவாறு உரைத்தாள் திலா.

‘ம்ஹ்ம் நம்பற மாதிரியா இருக்கு!  நாலு நாளா நான் எப்டியிருக்கேனுகூட பாக்க முடியாம படுத்திக்கிடந்துட்டு, பேசற பேச்சைப் பாரு!’, விஷ்வா

மனதில் தோன்றியதை தனக்குள் எண்ணிச் சிரித்தாலும் அதை பெண்ணிடம் காட்டாமல், “முன்ன தலை சுத்தலோட, இப்ப வாமிட்டும் வந்து அதிகமா சிரமப்படற! ட்ராவல்ல ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாண்டா!”, இதமாகத் தலையை வருடியவாறே கூற

“உனக்கு தனியா போகணும்னா போ!  அதுக்கு என்னோட ஹெல்த்தெல்லாம் சாக்கு சொல்லாத!”, மடியில் படுத்தபடி இருந்தவள் கோபத்தில் பழையபடி தலையணையைத் தேடி படுத்துக்கொண்டே பதில் கூறினாள்.

திலாவிற்கு மசக்கையில் உண்டான ஹார்மோன் தகராறு, கணவனிடம் அவ்வாறு பேசச் செய்திருந்தது.

விஷ்வாவிடம் மாலினியும் முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற விசயங்களை தெளிவாகக் கூறியே அனுப்பியிருந்தார்.

அதனால் விஷ்வாவும் பெண்ணின் நிலையை உணர்ந்தவனாக, எதையும் சீரியசாகக் கொள்ளாது, சீண்டல் பேச்சினை வளர்த்தபடி இயல்பாகவே இருந்தான்.

கணவனை விட்டுத் தன்னால் இருக்க இயலாது என்று உணர்ந்ததால், உடன் செல்ல தனக்கிசைவாகப் பேசினாள் திலா.

“மயக்கமா கிடக்கறவளுக்கு என்ன தெரியப்போதுன்னு பழைய லைனப் பிக்கப் பண்ற ஐடியால ஏதும் இருக்கியா விச்சு”, மனைவியின் விசம் கலந்து வந்த பேச்சையும், இன்றைய நிலையை உணர்ந்து, பெரிதுபடுத்தவில்லை விஷ்வா.

ஆனால் விஷ்வாவின் நமுட்டுச் சிரிப்பு, பெண்ணது கவனத்திற்குள்ளாகியிருந்தது.

இதை அறியாதவன் இயல்பாகப் பேசியிருந்தான்.

விஷ்வாவின்மீது பழிச்சொல் வரும்படி பேசினால், அதை மறுக்க, அவன் தன்னை உடன் அழைத்துச் சென்றுவிடுவான் என கடந்த சில நாள்களில் கணித்திருந்தவளாதலால், அவ்வாறு உரைத்ததோடு, அமைதியாகியிருந்தாள் திலா.

விஷ்வாவிற்கோ, திலாவை அழைத்துச் சென்றால் பெண்ணைத்தான் கவனிக்க இயலுமே தவிர, செங்கோட்டைப் பணிகளைக் கவனிக்கச் செல்லும் நோக்கம் நிறைவேற நிச்சயமாக வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தான்.

அதையும் மறையாது மனைவியிடம் கூற, “இப்பவே என்னை அவாய்ட் பண்ற விச்சு!  உன் பையனோ பொண்ணோ வந்துட்டா என்னையக் கண்டுக்குவியா இல்லை மொத்தமா மறந்துருவியா?”, படுத்தபடியே விஷ்வாவை வார்த்தைகளால் படுத்தி எடுத்தாள்.

அருகில் வந்து மனைவியோடு படுத்துக் கொண்டவன், “உன்னை வச்சுத்தானடி அடுத்தடுத்து எனக்கு எல்லா ரிலேசனுமே!  அப்டியிருக்க உன்னை நான் மறக்குறதாவது!”, உண்மை பேசினான்.

“அப்போ அது உண்மைனா என்னையும் கூட கூட்டிட்டுப் போகணும்”, தெளிவுபடுத்த வேண்டிய செய்கையைச் சொன்னதோடு, பெண்ணின் பேச்சில் மறைந்திருந்த கட்டளைத் தொனியைக் கவனித்தவன்

அதற்குமேல் வாக்குவாதம் செய்யாமல், “சரி கிளம்பு!”, என்று ஒரு மனதாகக் கூறிவிட்டு, மனம் பதற மாலினியைத் தொடர்பு கொண்டு, தனது மனதில் தோன்றிய தயக்கத்தைக் கூறி, திலாவை உடன் அழைத்துச் செல்லலாமா எனக்கேட்க,

“ரிஸ்க் வேணாமே விஷ்வா!”, மாலினியும் தயக்கத்தோடு விஷ்வாவின் மனதில் தோன்றியதையே கூறியிருந்தார்.

திலாவின் பேச்சின் தொனியை மாலினியிடம் பகிர்ந்து கொண்டவன், “அவளை விட்டுட்டுப் போனா அவளும் சிரமப்படுவா!  போற எடத்தில எனக்கும் நிம்மதியா இருக்க முடியாது ஆண்ட்டி”, விசயத்தை விளக்க

யோசித்தவர், மசக்கையில் உண்டாகும் மனஅழுத்தம் பெண்ணை அவ்வாறெல்லாம் பேசச் செய்கிறது என்பதை உணர்ந்ததோடு, அதற்குமேல் பெண்ணின் பேச்சை கண்டுகொள்ளாது விடும் நிலையில், திலாவின் மனநிலை வயிற்றுப் பிள்ளையை பாதிக்குமே என எண்ணி, “டிராவல்ல தனக்கோ, பிள்ளைக்கோ எதுவும் ஆகாதுன்னு கான்ஃபிடன்டா இருக்கான்னா கூட்டிட்டுப்போ!  விட்டுட்டுப்போனா மனசைப் போட்டு உழப்பி இன்னும் அவளைக் கஷ்டப்படுத்திப்பா!”, என மறுபதில் கூறினார் மாலினி.

மாலினிக்கு திலாவின் மனநிலையை ஓரளவு கணித்திருந்த காரணத்தால் அவ்வாறு விஷ்வாவிடம் கூறிவிட்டு, செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சில முறைமைகளையும் விஷ்வாவிடம் விளக்கினார்.

தண்ணீர் குடித்தால்கூட உடனே வாந்தி என்கிற நிலையிலும், செங்கோட்டைப் பயணத்திற்கு குஷியாக ஆயத்தமாகியிருந்தாள் திலா.

நாகம்மாளின் உடல்நலன் மற்றும் வயோதிகம் கருதி, திலாவின் உதவிக்கு, ராசாத்தியையும் உடன் அழைத்துச் செல்ல எண்ணினான் விஷ்வா.

ராசாத்தியின் வீட்டில் அவளது பிள்ளைகளுக்கு சரியான மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ராசாத்தியை திலாவின் துணைக்கு உடன் அழைத்து வந்திருந்தான் விஷ்வா.

இடையில் இரண்டு இடங்களில் நிறுத்தி, இளைப்பாறச் செய்தபிறகு மீண்டும் பயணம் என்கிற நிலையில், செங்கோட்டைப் பயணம் ஒரு நாளை விழுங்கியிருந்தது.

எப்பொழுதும் வண்டியை தானே ஓட்டி வருபவன், இந்த முறை டிரைவரையும் உடன் அழைத்து வந்திருந்தான்.

வழிநெடுகிலும் படுத்தவாறே பெரும்பாலும் வந்தாள் திலா.

உண்டாலும் உடனே வாந்தியெடுத்தவளுக்கு சுடுநீர் தந்து  அவ்வப்போது சீர்செய்து திலாவை ஒருவழியாக அழைத்துக் கொண்டு செங்கோட்டை வந்திருந்தான்.

/////////////

செங்கோட்டை வீட்டிற்கு வந்ததும், விசயம் தெரிந்த செல்லம்மாள், பெண்ணிற்கு அவள் என்ன வேண்டுமென்று கேட்கிறாளோ அதை அந்த பின்னிரவு நேரத்திலும் சிரமம் பார்க்காமல் சந்தோசமாகவே செய்து கொடுத்தார்.

இதுவரை வந்திராத ராசாத்தியை கேள்வியாக நோக்க, அனைத்தும் அந்த நேரத்திலேயே பகிரப்பட்டு, பகீரங்கமாகத் தெரிவிக்கப்பட்டதன் விளைவு.

அத்தோடு அலைச்சல் காரணமாக உண்டான அசதியில் உண்டதும் உறங்கியிருந்தாள் திலா.

உண்டதும், ஓங்கரித்து உடனே வாந்தி செய்பவள், படுத்ததோடு உறங்கியதைக் கண்டவனுக்கு, சற்றே நிம்மதியாக உணர்ந்தான்.

இன்னும் எத்தனை நாள்கள் இதுபோன்றதொரு நிலையை பெண் அனுபவிக்க வேண்டுமோ என்கிற வருத்தமும் விஷ்வாவின் மனதில் தோன்றி மறைந்தது.

பெண் உறங்க ஏதுவாக அனைத்தையும் பார்த்துச் செய்துவிட்டு உறங்கச் செல்லும்போது நள்ளிரவைக் கடந்திருந்தது.

விடிந்ததும் திலாவை பெண்களிடம் பொறுப்பாக ஒப்படைத்ததோடு, அலுவலகப் பணிகளைக் கவனிக்க அரைமனதாக சென்றான் விஷ்வா.

பிறந்தது முதல், அப்பகுதி மக்களின் சில உணவுமுறைகளை உண்டு பழகியிருந்தவள், அதைச் சார்ந்து தனது விருப்பங்களைக்கூறி, அதைச் செய்து தர செல்லம்மாளிடம் கேட்டாள் திலா.

செல்லம்மாளும், பெண்ணது எதிர்பார்ப்பிற்கு ஏற்றமாதிரியான உணவை சிரமம் பார்க்காமல் மெனக்கெடலோடு செய்து தந்தார்.

செங்கோட்டையில் பிறந்த வளர்ந்தவளுக்கு, அந்த ஊரின் பக்குவத்தோடு செய்யும் சில சமையல் உணவுகள் ஓங்கரிப்பு, வாந்தி என பெரும்பாலும் உண்டாகாது ஓரளவு ஏற்றுக் கொண்டது.

சில உணவுகள் மட்டும் ஒவ்வாமை கொண்டு, உண்ணத் துவங்கியதுமே ஓடிச் சென்று ஓங்கரித்தாள்.

உண்ணாமை காரணமாக பெரும்பாலும் சோம்பி படுத்தேயிருப்பவள், வந்த ஒரு நாளிலேயே எழுந்து அமர்வது, வீட்டிற்குள் நடப்பது என தனது இயல்பான செயல்களைத் துவங்கியிருந்தாள்.

வீட்டைச் சுற்றிலும் இருந்த தோட்டத்தில் சற்றே அமர, இளைப்பாற, அருகே கோவிலுக்கு மெதுவாக நடந்து சென்று வர என முன்பைக் காட்டிலும் சுறுசுறுப்பாகவே திலா மாறியிருந்தாள்.

இடையே திலாவின் வீட்டிற்கும் நடந்தே சென்று பார்த்து வந்தாள்.

வீட்டினருகே இருப்பவர்கள் எதாவது பேச்சுக் கொடுக்க, பெண்ணின் நிலையறிந்து பக்குவம் கூற சற்றே பெண்ணிற்கும் சங்கடமில்லாமல் சென்றது.

ராசாத்தியும் பெண்ணது முன்னேற்றம் கண்டு அதை திலாவிடமே கூறியிருந்தாள்.

‘அங்கேயிருக்கறவரை பச்சைத் தண்ணீகூட ஆகாம இருந்ததுக்கு, இங்க வந்தபின்னே எவ்ளோ தேவலம்மா’, எனக்கூறியதும் திலாவும் தனது நிலையில் வந்த முன்னேற்றத்தைப் பற்றி யோசித்தாள்.

இரவில் வந்தவனுக்கு பெண்ணே பரிமாறுவேன் என்று வந்து நிற்க, புரியாமல் பார்த்தவன், “ஏதுக்கு ரிஸ்க் எடுக்கற. நான் போட்டு சாப்பிட்டுக்குவேன்.  நீ போயி பேசாம உக்காரு”, அமைதியாகவே உரைத்தான் விஷ்வா.

அருகில் அமர்ந்தபோதும், அமைதியாக சோம்பியிராமல் அதைச் சாப்பிடலையா, இது வேணாமா என ஒவ்வொன்றாக இழுத்து, எடுத்து தன்னைக் கவனித்தவளின் மாற்றங்களை கவனித்தாலும், கவனியாததுபோல உண்டு எழுந்தான்.

அடுத்த நாள் முதல், பெண்ணது உடலில் ஏற்பட்ட நல்மாற்றம் காரணமாக யாரையும் அதிகம் சார்ந்திருக்கவில்லை.

படுக்கையை பெரும்பாலும் நாடாமல், நடையில் நாளைக் கடத்தினாள்.

முதல்நாள் சற்றே யோசனையோடு அலுவலகம் சென்று திரும்பியவன் அன்றே பெண்ணின் மாற்றத்தைக் கவனித்துதான் இருந்தான்.

அடுத்து வந்த நாள்களில் , அங்குமிங்கும் நடையோடு, வீட்டின் பராமரிப்பு, மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திய திலாவைத்தான்.

ஆச்சர்யம் உண்டானபோதும், முன்பைவிட தெளிந்து இருந்த மனைவியின் நிலை கண்டு, விஷ்வாவிற்குமே உற்சாகமாக உணர்ந்தான்.

பெண்ணது நிலையில் கண்ட மாற்றத்திற்குப் பிறகு, விஷ்வாவிற்கு எந்த இடையூறுமின்றி இலகுவாக அலுவலகம் சார்ந்த பணிகளைக் கவனித்திருந்தான்.

ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் நீண்டதொரு பயணத்தைத் தவிர்க்க எண்ணியவன், பெண்ணிடம் ஒரு வாரத்தில் மீண்டும் தான் செங்கோட்டை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு சென்னைக்கு, திரும்பியிருந்தான்.

ஆனாலும், பெண்ணால் அதை இலகுவாக ஏற்றுக் கொள்ள இயலாமல் சுணக்கம் வந்திருந்தது.

எவ்வளவு கூறியும் தன்னை விட்டுச் சென்றவனை மன்னிக்க முடியாத மனநிலையில் திலா இருந்தாள்.

சென்னை திரும்பியது முதல் திலாவின் உடல்நிலையை அவ்வப்போது அலைபேசி வாயிலாகவும் கேட்டறிந்து கொண்டான்.

முதலில் பிணக்கு கொண்டு சரியாகப் பேசாதவள், விஷ்வாவாகவே அனைத்தையும் மெனக்கெடலோடு விசாரிக்க சற்றே தெளிந்திருந்தாள்.

முன்பைக் காட்டிலும் மனைவியின் உடல்நிலையில் அதிக நல்மாற்றங்களைக் கண்டவனுக்கு, தன்னோடு சென்னைக்கு இனி அழைத்து வந்துவிடலாம் என்கிற எண்ணத்தில் செங்கோட்டை கிளம்ப தயாராகினான்.

அலுவலகம் சார்ந்த விசயத்தைக் கண்ணனிடம் பகிர எண்ணி அழைக்க, வேறொரு அழைப்பில் இருப்பதாக செய்தி வரவே கண்ணனிடம் பேசக் காத்திருந்தான் விஷ்வா.

சற்று நேரத்தில் கண்ணன் அழைக்கவே, அலுவலக விசயம் பகிர்ந்து கொண்டான் விஷ்வா.

அப்போது, தான் செங்கோட்டை செல்லவிருப்பதையும் கூறினான்.

அனைத்தையும் பேசும்வரை அமைதியாக கேட்டுக் கொண்டவன், விஷ்வா எதுவும் கேளாமலேயே, “இப்பதான் மேடம் எனக்கு போன் பண்ணாங்க. அதான் உங்க கால் அட்டெண்ட் பண்ணல சார்”, என கண்ணன் கூறியதைக் கேட்டவன், அதை பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

திலாவை அழைத்து வரும் நோக்கோடு செங்கோட்டை நோக்கி பயணமானான் விஷ்வா

//////////////

செங்கோட்டை வந்தவன், வந்தவுடன் மனைவியோடு சென்னை திரும்பியிருந்தான்.

வந்த மறுநாளே பெண் பழையபடி சோம்பித் திரிந்தாள்.

பெண்ணிடம் வந்த மாற்றத்தைக் கவனியாமல், மிகுந்த நம்பிக்கையோடு அலுவலகம் சென்று வந்தவனுக்கு பெண்ணின் நிலையைக் கண்டு வருத்தம் உண்டாகியிருந்தது.

மீண்டும் மருத்துவரைச் சந்தித்து, பெண்ணது உடல்நிலையில் உண்டான மாற்றத்தைக் கூற, அவரோ, “அவங்களுக்கு எங்க செட்டாகுதோ அங்க கொஞ்ச நாள் இருக்கட்டுமே”, என்றதோடு

“அடிக்கடி லாங்க் டிராவல் அவாய்ட் பண்ணுங்க”, என்பதையும் மறவாமல் கூறினார்.

திலாவின் உடல்நிலையில் உண்டான குழப்பத்தோடு வாரத்தைக் கடத்தியிருந்தான் விஷ்வா.

பெண்ணை மீண்டும் செங்கோட்டையில் சென்றுவிடும் நோக்கோடு அலுவலகம் சென்றவனுக்கு, பெண்ணின் உடல்நிலை மற்றும் பிறக்கப்போகும் மகவு சார்ந்தும் மனதில் ஓட நாளைக் கடத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தான்.

பிற பணிகளைக் கவனிக்க, பணிக்க வேண்டி, கண்ணனை அறைக்குள் அழைக்க, அழைப்பு மணியை அழுத்தினான்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு அறைக்குள் வந்தவன், “சாரி சார்.  நம்ம மேடந்தான் பேசிட்டு இருந்தாங்க.  அதான் உடனே வரமுடியலை”, என தாமதத்திற்கான காரணத்தைக் கூற

“யாரு திலாவா கூப்பிட்டா?”, எனக் கேட்டபடியே தனது அலைபேசியை எடுத்து தனக்கு ஏதுவும் அழைத்து, தான் எடுக்காமல்போனால் சில வேளைகளில் கண்ணனுக்கு அழைத்துப் பேசுவாள் என்பது நினைவில் வர எடுத்துப் பார்த்தான்.

தனது அலைபேசிக்கு அழைப்பு எதுவும் வராமல் இருக்கவே, வரும்போது இருந்த பெண்ணின் நிலையையும் எண்ணியவனுக்கு, மனதில் ஏதோ நெருடல் உண்டாக, தனது அலைபேசியில் நினைவகத்தில் பதியப்பட்டுள்ள திலாவின் அழைப்புகளின் சாராம்சத்தை காண, கேட்க எண்ணியவாறே வீட்டிற்கு கிளம்பியிருந்தான்.

வழியில் உண்டான நெரிசலில், நினைத்ததை மறந்து வீடு நோக்கி காரைச் செலுத்தினான் விஷ்வா.

/////////////

வந்தவன் கண்டதோ அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திலாவைத்தான்.

செங்கோட்டை செல்ல அலுவலகத்திலிருந்து கிளம்பியவன், திலாவை அழைத்து வந்து விட்டதோடு இரண்டு நாள் உடனிருந்து கருத்தாகக் கவனித்துக் கொண்டான்.

பழையவாறு பெண் சோம்பியில்லாமல் மாறவே, “ஹெல்த் இஸ்யூஸ் சரியாகறவரை செங்கோட்டையிலேயே இருந்துக்கிறியா?” திலாவிடம் விஷ்வா மெதுவாக வினவ

“ஏன்?  நான் சென்னைக்கு வந்தா உங்களுக்கு டிஸ்ட்ரப்பன்ஸா இருக்கா?”, என உள்ளொன்று வைத்துக்கேட்ட மனைவியின் பேச்சில் இருந்த நக்கல் தொனியைக் கவனிக்க மறந்தவன்

“இங்க நீ வந்ததில இருந்து நார்மலா இருக்க! ஆனா அங்க நீ வந்தா என்னால வேற எதையும் கான்சென்ட்ரேட் பண்ண முடியலை!”, செங்கோட்டையில் மனைவியின் உடல்நிலையில் உள்ள நல்மாற்றம், சென்னையில் இல்லை.

அதனால் தன்னால் இயல்பாக பணியை சென்னையில் கவனிக்க இயலவில்லை என்பதை மனதில் வைத்து விஷ்வா கூற

‘அவரு முன்ன மாதிரி திரும்பவும் பொண்ணுங்க சகவாசத்தோட இருக்கறதை என்ன ஏதுன்னு கண்டிக்க மாட்டியா திலா நீ?’, என செங்கோட்டை கிளம்பிய தினத்தன்று திலாவை அழைத்துப் பேசிய கண்ணனின் பேச்சை அசைபோட்டாள் பெண்.

அன்றும் கண்ணனது பேச்சைக் கேட்டு நம்பாதவள், “கல்யாணத்துக்கு முன்ன அவரு அப்டித்தான்னு தெரிஞ்சேதான கட்டி வச்சீங்க நீங்களும், உங்க குடும்பமும்!”, என அப்போதே கண்ணனிடம் கோபமாகச் சாடியிருந்தாள்.

அத்தோடு விடும் மனமும் இல்லை, உடல்நிலையும் அவளை உந்த, “அப்புறமும் ஒரு வருசம் நான் என்ன ஆனேன்? ஏதானேன்னு கண்டுக்காம இருந்துட்டு, இப்ப வந்து புதுசா அவருகிட்ட என்னத்தைக் கேக்கச் சொல்ற?”, என கண்ணனிடம் பேசியவள்,

“இது சம்பந்தமா பேசறதா இருந்தா, இனி எனக்குக் கால் பண்ணாத!”, என அவளாகவே அழைப்பைத் துண்டித்திருந்தாள் திலா.

திடுமென அன்று கண்ணன் தனக்கு அழைத்ததும், என்னவோ ஏதோ என்று திலா அழைப்பை எடுத்து பேசத் துவங்கியவளிடம், விஷ்வாவைப் பற்றி அவதூறு பேசியதும், அவளின் அன்றைய நிலை கண்ணனிடம் உக்கிரமாக பேசச் செய்திருந்தது.

அதன்பின், உடல்நிலையோடு, மனமும் சேர்ந்து அல்லாட, பெண் மிகவும் சோர்ந்துபோனாள்.

கண்ணனுக்கு, திலாவை, விஷ்வாவிடமிருந்து பிரிக்க எண்ணி தானாகவே கற்பனையாகப் பேசப்போக, திலா தன்னையும், தனது குடும்பத்தையும் பகடையாக்கியது வேறு கோபம் உண்டாக்கியிருந்தது.

அழைப்பைத் துண்டித்த கோபத்தோடு, திலாவின் பேச்சைக் கேட்டு, ‘எல்லாந் தெரிஞ்சுட்டே இவ்ளோ திமிரா பேசுறியா? இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த திமிருன்னு நானும் பாக்கறேன்’, என குரூரமாக எண்ணியபடியே அடுத்து என்ன செய்யலாம் என எண்ணியவன், விஷ்வா அன்று அதன்பின் அழைத்ததும், உடனே அறைக்குள் செல்லாமல் தாமதித்தான்.

அத்தோடு விஷ்வா கேளாமலேயே, திலாவிடம் தான் அழைத்துப் பேசியதாகக் கூறாமல், திலாவோடு பேசியதைப் பற்றி மட்டும் பகிர்ந்து கொண்டான்.

திலாவிற்கோ உடல்நிலை படுத்த, அத்தோடு கண்ணனது பேச்சின் வழி வந்த செய்தியைக் கேட்டதும் மனதை மிகவும் வதைக்க, அன்றே விஷ்வா செங்கோட்டை அழைத்து வந்ததும், யோசனையோடே பயணமாகியிருந்தாள்.

பெண்ணது அமைதியைக் கண்ட விஷ்வாவோ, அசதியில் பெண் அயர்ந்து காணப்படுகிறாள் என தப்புக் கணக்கிட்டு அமைதியாக வந்தான்.

வந்த இரு நாளில் கணவன் வந்து பேசிய செய்தியை முழுவதுமாகக் கேட்டவளோ, விஷ்வாவின் பேச்சினை கண்ணனது தகவலோடு தொடர்புபடுத்தி, தவறாக எடுத்துக் கொண்டாள்.

அதுவரை எதையும் சிந்தைக்குள் கொண்டு வராதவள், கண்ணனின் வார்த்தைகளைக் கேட்டதுமுதல், தான் சூலுறும் முன்பு தன்னை அடிக்கடி நாடியவன், அதன்பின் தன்னைத் தேடாதது மனக்கண்ணில் குறையாக வந்து நிற்க, ‘உண்மைதானோ’ என உள்ளத்தைக் கேள்வி கேட்டு வதைத்தது.

முன்புபோல தானும் அவனைக் கண்டு கொள்ள இயலாத நிலை கணவனை வழிதவறச் செய்துவிட்டதோ என்கிற பதைபதைப்பும் திலாவிற்குச் சேர்ந்து கொண்டது.

அத்தோடு விடாமல், “நான் இனி எங்க வீட்லயே போயி இருக்கவா?”, எனக் கேட்க

“உனக்கு எங்க பிடிக்குதோ அங்க இருடா.  கூட செல்லம்மாவையும் வச்சுக்கோ!”, என கன்னம் தட்டிக் கூறியவனின் பேச்சுக்கள் அனைத்தும் பெண்ணது மனதில் கண்ணன் பேசியதைக் கூட்டிக் காட்டி, பேதையின் மனதை வாட்டியது.

வாட்டிய மனதோடு, விஷ்வா இனித் தனக்கில்லை எனும் மன ஏக்கத்தோடு, தாயில்லாத தாய்வீடு செல்லக் கிளம்பியவள் உண்மையை உணருவாளா?

விஷ்வாவின் வேட்கையை உணருவாளா? இல்லை உணர்த்துவானா?

அடுத்த பதிவில்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!