IV21
IV21
இதய ♥ வேட்கை 21
“வீட்டு பேருல கடன் வாங்கினது எப்படி உங்களுக்குத் தெரியும்? சண்முகம் அண்ணே உங்கட்ட பணம் வந்து கேட்டாரா?”, எனக் அசாதாரணமான தொனியில் கேட்டவளின் குரலில் இருந்து இயல்பைத் தொலைத்த, ஸ்வரம் தப்பிப்போன உணர்வைக் கண்டு கொண்டான் விஷ்வா.
இருந்தாலும் தான் உணர்ந்ததை திலாவிடம் காட்டிக்கொள்ளாமல், தனது பதிலைக் கூறினான்.
கண்ணன் கூறியதாகக் கூறாமல், ‘பணமெல்லாம் கேக்கலை!’, என நிதானித்தவன், “அவரை ஒரு முறை ஏதேச்சையா பாத்துப் பேசும்போது, ‘அந்த இடம் தேவையில்லைனா விக்கறீங்களானு’ கேட்டாரு. எனக்கு அதைப்பற்றி விவரம் எதுவும் தெரியலைன்னதும், விசயத்தைச் சொல்லிக் கேட்டாரு”
“இடத்தை விக்கற ஐடியா எதுவும் இப்ப இல்லைன்னதும் அப்ப ‘அதுபேருல உள்ள கடனை கட்டிட்டு, கடன் பத்திரத்தை முடிச்சிரலாம்னா எப்பனு சொல்லுங்க தம்பி’னு கேட்டாரு”
“நான் உங்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்” ‘வீடு பெரும்பாலும் பூட்டியே இருக்குனு நிறைய பேரு வந்து வாடகைக்கு கேக்கறாங்க! அதான் வாடகைக்காவது விடலாமேனுதான் கேக்கறேன் தம்பி! எப்பவாவதுதான் உங்க வீட்டம்மா ரெண்டொரு நாள் வந்து தங்கறாதா பக்கத்துல சொன்னாங்க! என்னடா வந்து பாத்தவொடனே மாமியா வாங்கின பணத்தைக் கேக்கறேன்னு எதுவும் தப்பா எடுத்துக்க வேணாம். கமலா எங்கிட்ட மாசமாசம் பணத்தைக் கட்டி வீட்டைத் திருப்பிக்கற மாதிரிதான் சொல்லுச்சு! இப்டி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல. ஆனாலும் பணத்தை மாசமாசம் எங்கைக்கு வரமாதிரி ஏற்பாடு பண்ணிட்டு போயிருக்கு. அது இன்னும் ஒன்னரை வருசத்துல முடிஞ்சுரும்’ , என சண்முகம் விஷ்வாவிடம் கூறிய அனைத்து விசயத்தையும் திலாவிடம் பகிர்ந்திருந்தான் விஷ்வா.
கமலா மீண்டும் மெஸ்ஸைத் துவங்கி, அதன்மூலம் பணமீட்டி பணத்தைத் திருப்பிச் செலுத்தும் எண்ணத்தோடுதான் அந்தக் கடனை வாங்கியிருந்தார்.
கடன்தொகை சற்று மிகுதியானதால், அடமானப் பொருளாக எதையாவது சண்முகம் எதிர்பார்க்க, நிலங்கள் எதுவும் இல்லாத நிலையில், வீட்டை அடமானம் வைக்கும்படியான சூழ்நிலை கமலாவிற்கு.
எந்த மாதிரியான சூழலில் கடன் வாங்கப்பட்டது என்பதைப்பற்றி திலாவும் விஷ்வாவிடம் கூறவில்லை. விஷ்வாவும் தோண்டித் துருவவில்லை.
தானாகத் தேடிச் சென்று சண்முகத்தைச் சந்தித்துப் பேசியதை மறைத்து மனைவியிடம் சண்முகம் கூறியதை மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தான் விஷ்வா.
திலா, விஷ்வா தானாகச் சென்று சண்முகத்தைச் சந்தித்து அவர்களின் வீட்டுக் கடன்பற்றிப் பேசியதை விரும்பமாட்டாள். மேலும் அந்த விசயம் எப்படி விஷ்வாவிற்கு தெரிய வந்தது என்பதைப் பற்றி திலாவிடம் விளக்க பிரியமின்மையால் விஷ்வா அதைத் தவிர்த்திருந்தான்.
மேற்கொண்டு என்ன செய்யலாம் என திலாவிடமே கேட்டு, அதன்படி திலாவின் பேறுகாலத்திற்குப் பிறகு மீத பணத்தை மொத்தமாகக் கட்டிவிட்டு கடனை அடைத்தவுடன், வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.
திலாவிற்கு பெற்றோர் உடனில்லாத வெறுமையை, அந்த வீட்டிற்குச் செல்லும்போது உணராததால், சற்று நாள் பொறுக்குமாறு கணவனிடம் கேட்டுக் கொண்டாள்.
//////
திலாவிற்கு ஐந்து மாதங்கள் நிறைவடைந்ததோடு, அவளையும் அழைத்துக் கொண்டு சென்னையை நோக்கிப் பயணத்தை தொடர்ந்தான் விஷ்வா.
கண்ணனோ தனது பங்குப் பணியாக வழமைபோல விஷ்வாவிடம் எதையேனும் கூறியபடியே இருந்ததையும் குறைத்துக் கொள்ளவில்லை.
நடப்பது, நடந்தது எதையும் பற்றி முற்றிலும் அறியாது சற்றே நிம்மதியாக இருந்தவள் கணவன் அழைத்ததும் உடன் கிளம்பியிருந்தாள்.
////////////////
வேலைக்காரர்கள் கீழ்தளத்தில் பணியில் இருக்கும் நேரமென்பதால், அவர்களது வாயிற்கு அவலாகவோ, காட்சிப் பொருளாகவோ தங்களது குடும்ப விசயம் அமைந்துவிடக்கூடாது என்று கருதியவன், முதலாவது தளத்தின் ஹாலில் சந்திப்பை தீர்மானித்திருந்தான் விஷ்வா.
திருநாவுவிற்கு என்னவென்று புரியவில்லை. அவரது மனைவி, திலா கர்ப்பமாக இருப்பதை செங்கோட்டை வாழ் மனிதர்கள் வாயிலாக அலைபேசியில் வம்பு பேசும்போது அறிந்து கொண்டிருந்தார்.
திலாவிற்கு பேறுகாலம் நெருங்குவதால் அதுசார்ந்து பேச அழைக்கிறானோ என்றெண்ணி, கணவனிடம், ‘இங்க பாருங்க. நான் சொன்னதெல்லாம் நினைவுல இருக்கட்டும். அந்தப் பையன் திலாவுக்கு பேறுகாலம் பாக்கறீங்களான்னு கேட்டா, அது எங்களுக்கு தோதுப்படாதுன்னு பட்டுன்னு சொல்லிருங்க. காசு பணத்தைக் காமிச்சா ஆசைப்பட்டு சரின்னு சொல்லிறாதீங்க! நீங்க உங்க ஃபிரண்ட்டுக்காக இவ்வளவு நாளு அந்தக் குடும்பத்துக்குச் செஞ்சது போதும். அதைவிட்டுட்டு எதாவது இழுத்துட்டு வந்தீங்க.. இந்த வீட்ல உங்களுக்கு இடமில்லை. அப்டியே ஊருக்கு வண்டி ஏறிருங்க’, என மிகவும் ஸ்திரமான வார்த்தைகளைக் கூறி எச்சரித்தவாறே இருந்தார் கண்ணனின் தாய்.
திருநாவு உரிய நாளில் விஷ்வாவின் அழைப்பை ஏற்றுக் கிளம்பியபோது, உடன் கிளம்பி நின்ற மனைவியை கேள்வியோடு நோக்க, ‘உங்களை நம்ப முடியாதுங்க! தெக்குன்னா… தொக்குன்னு எதையாவது உளறி என்னை இக்கட்டுல இழுத்து விட்டுட்டு போயிருவீங்க! அதனால நானும் கூடவே வரேன்! அந்தப் பையன் எதாவது கேட்டா நானே பதில் பேசிக்குறேன். நீங்க சும்மா கூட வாங்க!’, என உடன் கிளம்பியிருந்தார் திருநாவுவின் மனைவி.
வந்தவர்களுக்கு ஏக உபசரிப்பு விஷ்வாவின் வீட்டில்.
மதிய உணவிற்குமேல் பேச ஏற்பாடு செய்திருந்தான் விஷ்வா. ஆகையால் பதினோரு மணிக்குமேல் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று, இளைப்பாறச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தான் விஷ்வா.
திலாவோடு பட்டும்படாமல் இரண்டொரு வார்த்தை பேசியதோடு அமைதியாகி விட்டிருந்தார் திருநாவுவின் மனைவி.
இடையே இருமுறை என்ன விசயம் என்று திலாவிடம் கேட்க, அவள் தனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறியிருந்தாள்.
உண்மையில் திலாவிடம் இதுபற்றி எதையும் கலந்துகொள்ளாமல் பேசும்போது தெரிந்து கொள்ளட்டும் என விட்டிருந்தான் விஷ்வா.
அதற்கும் காரணம் இருந்தது. பெண் இதுவரை தனக்கு எந்த இடையூறும் கண்ணனை இட்டு வந்ததாகச் சொல்லாதபோது எதற்கு வீணாக இதைப்பற்றி பேச வேண்டும் எனத் தவிர்த்திருந்தான் விஷ்வா.
அலுவலகம் சென்று மதியம்போல வீடு திரும்பியவன், வந்தவர்களிடம் இன்முகமாகப் பேசி வரவேற்று உபசரித்ததோடு, அடுத்த கட்ட பணியினையும் விரைவாகக் கவனித்தான்.
விஷ்வாவிடம் பேச வேண்டிய விசயம்பற்றி வினவ, ‘கொஞ்சம் வயிட் பண்ணுங்க. இன்னும் இரண்டுபேரு வரணும். வந்தபின்ன ஆரம்பிச்சிரலாம்’ என்று கூற, திருநாவு தம்பதியருக்கு குழப்பம்.
மருத்துவத் தம்பதியரில் மாலினி, அலைபேசி துறை, மற்றும் காவல்துறை நண்பர்கள் இருவரையும் சில முக்கிய தகவல்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அழைத்திருந்தான் விஷ்வா.
//////////////
திலாவை முதலாவது தளத்தின் ஹாலை ஒட்டியிருந்த அறையில் ஓய்வெடுக்குமாறு கூறினான் விஷ்வா.
அதேசமயம் தவிர்க்க இயலாத நிலையில் அங்கு வந்து திலாவின் சார்பான தகவல்களை கூறவேண்டியிருப்பின் வந்து கூறுமாறு கூறியவன், ஹாலில் மற்றவர்களோடு திருநாவு தம்பதியரையும் அமரச் செய்ததோடு, வந்திருந்த நண்பர்களையும் அறிமுகம் செய்திட, திருநாவு குடும்பத்தினருக்கு குழப்பம் கூடியிருந்தது.
அதற்குமேலும் பொறுமையை சோதிக்காமல், கண்ணனைப் பற்றிய விசயத்தை விஷ்வா கூற ஆரம்பித்திருந்தான்.
ஒவ்வொன்றிற்கும், அதற்கான உரிய தகவல்களை ஆதாரமாக இணைத்திருந்தான்.
இடையிட்ட கண்ணனின் தாயிடம், “கொஞ்சம் பொறுங்கம்மா. எல்லாம் சொல்லி அவரு முடிச்சபின்ன நீங்க பேசுங்க”, என காவல்துறை கூற, அவ்வப்போது அமைதியாகியிருந்தார்.
ஆரம்பத்தில் அசட்டையாக கேட்கத் துவங்கியிருந்த திலா மற்றும் குழப்பதோடு இருந்த திருநாவு தம்பதியர் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
கண்ணனின் தாய் மட்டும் மகனை விட்டுக்கொடுக்காமல், “அது எப்டி கண்ணன் அப்டி பண்ணான்னு அபாண்டமா பழி சொல்ற தம்பீ. உம்பொண்டாட்டிகூட எம்பையன்கிட்ட பேசியிருக்கலாம்ல? அட அப்டியே பேசியிருந்தாதான் என்ன? அதுக சின்ன வயசுல இருந்து சேர்ந்து பாத்து வளந்ததுங்க. அதனால சும்மா எப்டியிருக்குதுனு கேக்கக்கூட பேசியிருக்கலாம்ல”, என தனது சந்தேகத்தைக் கேட்டு, மகனது செயலை நியாயப்படுத்திட எண்ணி கண்ணனின் தாய் பேச
“பேசறதை நான் குறை சொல்லல! அவங்க ரெண்டு பேரும் பேசினதை இதுவரை நான் ஏன் எதுக்குன்னு கேட்டதுமில்லை. உங்க மகனாதான் எங்கிட்ட வந்து நேருல சொன்னான். அந்த ரெக்கார்டட் வாய்சையும் கேளுங்க”, என திலாவிடம் தான் பேசியதாக கண்ணன், விஷ்வாவிடம் கூறிய பல உரையாடல்களை விஷ்வா ஒவ்வொன்றாக போட்டு காண்பித்து உறுதி செய்தான்.
“சம்பந்தப்பட்டவங்க ரெண்டு பேரும் இல்லாம நீ பாட்டுக்கு கதை கட்டி விடறியா? இது எம்மகன் வாய்சே இல்ல”, என்று முதலில் மறுத்தவர் பிறகு,
“திலாவுக்கு யாரும் இல்லைனு எங்க தலையில கட்டி விரட்டி விட்டுட்டு வேறு பொண்ணைக் கட்டிக்க வேண்டி இட்டுக்கட்டிப் பேசறியா?”, என தனது பாணியில் கோபத்தோடு கேட்டார் கண்ணனின் தாய்.
திருநாவுவிற்கு மகனின் செயலில் சந்தேகம் இருந்தபடியால் அமைதியாக இருந்தார்.
கண்ணனின் தாய், தனது மகன் குற்றவாளியாக இருந்தாலும், பிறரது முன்னிலையில் அதை ஆமோதிக்க இயலாத மனம் மறுத்து வாதிட்டது.
திலாவிற்கோ நெஞ்செல்லாம் பற்றி எறிவது போன்ற உணர்வு.
மாலினி பேசாமல் நடப்பதை மட்டும் அமைதியாகக் கவனித்தபடி இருந்தார்.
‘இதுக்குத்தான் இவங்களை வரச் சொன்னாருன்னா, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேணாமா? என் சம்பந்தப்பட்ட விசயத்தை எங்கிட்ட கலந்துக்காம எப்படி இப்டி வேற்றாலுங்க முன்ன இவர் ஏற்பாடு பண்ணலாம்’, என்கிற கோபம் விஷ்வாமீது திலாவிற்கு.
வார்த்தைகள் தடித்து பேசத் துவங்கியிருந்தார் கண்ணனின் தாய். திலாவை மிகவும் தரக்குறைவாகவும் பேசினார்.
திலாவின் தாய் காதல் திருமணம் செய்ததைச் சுட்டிக்காட்டி, தாயைப்போல திலா எதாவது செய்திருப்பாள் என்கிற ரீதியில் பேசியிருந்தார் கண்ணனின் தாய்.
இதைக் கேட்ட விஷ்வாவோ, “எம்பொண்டாட்டிய பத்தின ஒப்பீனியன் கேக்க உங்களை இங்க கூப்பிடலை! எல்லாம் ஆதார பூர்வமா உங்க மகன் பண்ற தப்பை எல்லாம் ரெக்கார்ட் பண்ணிட்டுத்தான் பேசுறேன். இப்ப இதை நான் கம்ப்ளைண்ட் பண்ணா உங்க மகன் ஜெயிலுக்கு போற நிலைமைகூட வரலாம். அதைச் செய்யாம உங்களை முறையா கூப்பிட்டு எதுக்குச் சொல்றேன்னு முதல்ல புரிஞ்சுக்கங்க. உங்க மகனோட வாயில வர பொய்யினால இந்நேரம் நான் அதை உண்மைனு நம்பியிருந்தா திலாவுக்கும் எனக்குமிடையே பிரச்சனைதான் வந்திருக்கும். அதைப் புரிஞ்சிக்காம நீங்களா எங்களைப் பத்தி விமர்சனம் பண்றத முதல்ல நிப்பாட்டுங்க! அவனுக்கு மனசலவுல உள்ள பிரச்சனையை முதல்ல சரிபண்ற வழியப் பாருங்க. அதவிட்டுட்டு எங்களைக் குறை சொல்ல வந்திட்டீங்க”, என்றவன்
திருநாவுவை நோக்கி, “சார், வந்திருக்கறவங்களை யாருன்னு உங்களுக்கு அறிமுகம் செய்திட்டுதான் விசயத்தை உங்ககிட்ட கொண்டு வந்திருக்கேன். உங்க மகனுக்கு இதுவரை வேலை பாத்ததுக்கு வேண்டியதை பாத்து நான் செய்திறேன். இனி என் வயிஃப் சம்பந்தமா தத்துபித்துனு எதாவது பேசறது, இல்லைனா அவகூட பேச முயற்சி செய்யறது, அவ நேம் ஸ்பாயில் ஆகறது மாதிரியான எந்த வேலை செய்தாலும், இனி புராபர் ஆக்சன் எடுப்பேன்னு சொல்லத்தான் உங்களை இன்னிக்கு வீட்டுக்கு கூப்பிட்டேன்.
இதைச் சாதாரணமா சொன்னா கண்டிப்பா யாரும் அக்சப்ட் பண்ணிக்க மாட்டிங்கனுதான், எவிடென்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிட்டு பேசக் கூப்பிட்டேன்.
இதைச் சொல்லாம செய்திருந்தா உங்களால எதுவும் செய்திருக்க முடியாது. ஆனாலும், நீங்க திலாவுக்கும், அவங்க பேரண்ட்ஸ்கும் நிறைய செய்திருக்கீங்கங்கறதாலயும், எங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க நீங்க அப்டிங்கறதாலயும்தான் நிதானமா பண்றேன்.
உங்க மகனோட கெட்ட எண்ணத்தால, என்னோட, எங்களோட பியூச்சர் ஸ்பாயில் ஆகிறக்கூடாது. எதாவது எங்களுக்குள்ள விரிசல் வரதுக்குமுன்ன, அவனை எங்களை விட்டு அப்புறப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.
அவனுக்கு ஒன்சைட் அஃப்பயர் இருந்திருந்தா, எங்க கல்யாணத்துக்கு முன்ன பெரியவங்கட்ட சொல்லி மேரேஜ்கு பேசியிருக்கலாம். அப்பலாம் சும்மா இருந்திட்டு இப்ப எதுக்கு இப்டி கீழ்த்தரமான காரியத்துல இறங்கணும்னு எனக்கு ஒன்னும் புரியல. இல்லை வேற என்ன எதிர்பார்த்து இப்டி ஒரு ரூமரை எங்க மத்தியில கொண்டு வரான்னும் தெரியல”, என்று விசயத்தை விளக்கினான் விஷ்வா.
கண்ணனின் தாயோ, எனது மகன் அப்படிப்பட்டவன் கிடையாது. அவனையும் அழைத்து வந்து நேரில் பேசினால் மட்டுமே உண்மை நிலை என்னவென்று ஊர்ஜிதமாகும் என்று வற்புறுத்த, அடுத்த அரை மணித்தியாலத்தில் கண்ணனையும் அங்கு வருமாறு அழைக்கப்பட்டது.
நீண்ட நெடிய நாள்கள் என்பதனைவிட, மாதங்களுக்குப்பின் வீட்டிற்கு அழைக்க, யோசனையோடு வந்தவன், விசயத்தை பற்றிக் கேட்டதும் கொஞ்சமும் தயங்காமல், “மேடந்தான் எங்கூட அப்பப்போ கால்பண்ணிப் பேசுவாங்க. அவங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னேயே எம்மேல ஒரு க்ரஷ். ஆனா அது கல்யாணம்வரை போகலை. அதான்… அவங்களுக்கு எங்கிட்ட பேசாம இருக்க முடியலை”, என்று கூசாமல் பேசியிருந்தான்.
திலா அங்கில்லாததால் அவ்வாறு கூறியவனை கண்ட விஷ்வா, “உண்மையைச் சொல்லு கண்ணா. பொய்யா எதாவது சொன்னேன்னு தெரிஞ்சது அவ்ளோதான்!”, என்று மிரட்ட,
“எதுக்குசார் உங்ககிட்ட பொய் சொல்லப்போறேன். நீங்க மட்டும் எங்க வாழ்க்கைக்கு இடையில வரலனா… இந்நேரம் சந்தோசமா கல்யாணம் பண்ணிட்டு சேந்து வாழ்ந்திட்டுருப்போம்”, என்று சளைக்காது பேச
அதற்குமேல் பொறுமை இழந்தவன், மற்றவர்களிடம் “ஒரு நிமிசம்”, என்று கேட்டதோடு, ஹாலை ஒட்டியிருந்த அறைக்குள் நுழைந்து, கண்ணீரோடு அமர்ந்திருந்தவளை ஹாலுக்கு அழைத்துவர
‘இங்கேதான் இவ்வளவு நேரம் இருந்தாளா?’, என்பதுபோல கண்ணன் திலாவைப் பார்க்க
மாலினியைத் தவிர மற்றவர்களுக்கு திலா அருகில் இருந்த அறையில் இருந்தது தெரிந்திருக்கவில்லை.
சற்றுநேரம் அங்கு ஆழ்ந்த அமைதி.
திலாவின் நிலையைக் கண்டு கண்ணன் சற்றும் பின்வாங்கவில்லை.
‘முக்காடு போட்டாச்சு. கடைசிவரை அதையே மெயின்டெயின் பண்ணு’, என மனதிற்குள் முடிவெடுத்திருந்தான் கண்ணன்.
திலா அங்கு என்ன பேசுவதென்று தயங்கி நிற்கவே
விஷ்வாவின் காவல்துறை நண்பன், “நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. உங்க சார்பா என்ன பேசணுமோ அதை இங்க சொல்லுங்க”, என்று திலாவைப் பேசிடுமாறு கூற
சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்த எடுத்துக் கொண்டவள் நிதானமாக, “எனக்கும், இந்தக் குடும்பத்துக்கும் இருபது வருசத்துக்கு மேல பழக்கம். எங்க அப்பாவோட நண்பர் அப்டிங்கற முறையில திருநாவு மாமாவும், அத்தையும் நிறைய எங்க குடும்பத்துக்கு உதவி பண்ணிருக்காங்க. அந்த நன்றியுணர்வு எப்பவும் எனக்கு உண்டு. ஆனா எப்பவும் கண்ணனை, சகோதரனா மட்டுமே பாத்துருக்கேன். பேசியிருக்கேன். இதுக்குமேல எனக்கு என்ன சொல்லனு தெரியலை”, கமரிய குரலில் கூறியவள் அழுகையைத் தொடர்ந்திட, மாலினி எழுந்து சென்று திலாவைச் சமாதானம் செய்தார்.
கண்ணனின் பேச்சைக் கேட்டு குமுறிய மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்க, “அப்ப கண்ணன் சொன்னதைக் கேட்டதானமா? அதுப்பத்தி என்னம்மா சொல்ற?”, என காவல் கேட்க
அடங்காத கோபத்தோடு இருந்தவள், கண்ணனைச் சுட்டிக் காட்டி, “இந்த நாயி சொன்னதெல்லாம் நம்பாதிங்க! விஷ்வாவுக்கு கால் பண்ணி எடுக்கலைன்னா, சிலநேரம் எங்க ஆஃபீஸ் விசயமா எதாவது பேச காண்டாக்ட் பண்ணிருப்பேன். ஆனா அப்பவுமே பர்சனலா நான் எதுவும் இவங்கிட்ட பேசினதில்லை. பேச வேண்டிய அவசியமும் இதுவரை வந்ததில்லை. இவனா எதாவது பேசி கேட்டாலும், ஆஃபீஸ் விசயம்னா பதில் சொல்லுவேன். அத்தோட வச்சிருவேன். மத்தபடி இவங்கிட்ட பேச வேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை”, குரலில் சீற்றம் தெரிக்கப் பேசினாள் திலா.
மகன் பேசியதைக் கேட்டு சற்று ஆசுவாசமாக இருந்தவர், திலாவின் பேச்சைக் கேட்டு இடையில் புகுந்து பேசத்துவங்கியிருந்தார், “ஏய், என்னடீ வாயி நீளுது? என் அருமாந்திர ஆம்பிளைப் புள்ளையப் பாத்து நாயிங்கற…! யாரு நாயி?”, திலாவின் பேச்சைக் கண்டித்து இடையில் பேசிய குரலில் திரும்பி கண்ணனின் தாயை திலா முறைப்போடு நோக்க, “செஞ்சதையெல்லாம் நன்றி மறந்திட்டு பேசற நீயெல்லாம் நல்லாயிருப்பியா?”, என கண்ணனின் தாய் திலாவை நோக்கி சாபம்போல பேசத் துவங்க
“உங்கட்ட கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. தேவையில்லாம யாரையும் எதுவும் பேசாதீங்க”, என்று கட்டளையிட்ட காவலின் பேச்சிற்கு கட்டுப்பட்டு கண்ணனின் தாய் குரலில் அமைதி காக்க, மனதில் திட்டுவதைத் தொடர
அதேநேரம் கண்ணனிடம் அறிக்கைகளைக் காட்டி விளக்கம் கேட்க, “நீதான இந்த டேஸ்ல எல்லாம் கால் பண்ணியிருக்க?”, என்று வினவத் தடுமாறியவன், தனது பதிலையும், போக்கையும் மாற்றிக்கொள்ளவே இல்லை.
“அவ பேசினதையெல்லாம் அழிச்சிட்டாருபோல”, என விஷ்வாவின் மீது காவலிடம் பழிசொல்ல
“டேய். அது அவங்க ஆஃபீஸ்ல தந்த ரிப்போர்ட். அதுல நான் போயி எப்படி என்னத்தை அழிக்க முடியும்? அறிவிருக்கா?”, என்று விஷ்வா வினவ
“அது இருந்தா எதுக்கு என் ஆளை உங்கிட்ட காவு கொடுத்திட்டு இப்டி வந்து நிக்கறேன்!”, என்று பேசியவனின் குரலில் எழுந்த தெனாவெட்டான பதிலில், விஷ்வாவின் எதிரில் அமர்ந்திருந்த கண்ணனை யாரும் எதிர்பார்க்கும்முன் எழுந்து சென்று சட்டைக் காலரோடு பிடித்து எழுப்பி ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான் விஷ்வா.
“ஏண்டா நாயே. அவளே முடியாம எங்கூட ஹாஸ்பிடல் வந்திருக்கா. அப்பகூட உனக்கு போன் பண்ணதா வாயி கூசாம எங்கிட்டயே பொய் சொன்னவன்தானடா?”, என்று கேட்டபடியே அடியைத் தொடரத் துவங்க,
இடையில் வந்து தடுத்த கண்ணனின் தாய், “இப்டி வாங்கனு நடுவீட்டுல கூப்டு வச்சு மிரட்டறது, அடிக்கறது கேவலமா இல்லை உனக்கு!”, விஷ்வாவிற்கு இடையே வர
வந்திருந்தவர்களைக் கைகாட்டி, “நீ வீசுன காசுக்கு இவங்க ரெண்டு பேருனா. எங்களுக்கு நாலு பேரு வரமாட்டாங்களா? உன்னை சும்மா விடமாட்டேன். செங்கோட்டைப் பக்கம் வா. செங்க சூலைலபோட்டு எரிக்கச் சொல்றேன்”, என்று விஷ்வாவின் மீது தனதிருகைகளால் ஓங்கி ஓங்கி அடிக்க
மற்ற நண்பர்கள் இருவரும் விஷ்வாவைப் பிடித்து நிறுத்த, திலாவோ பதற, திருநாவு தலை குனிந்தபடியே அமர்ந்திருந்தார்.
கண்ணன் அடி வாங்கியும், தனது பதிலை மாற்றிக்கொள்ளவே இல்லை.
அதற்குமேல் பொறுமையிழந்தவன், தனது அலைபேசியில் இருந்த கண்ணனது அலைபேசி ரெக்கார்டட் வாய்சை கண்ணனது வாட்சப்பில் அனுப்பி, “இப்ப நான் அனுப்புனதை எடுத்துக் கேளுடா? எதுக்குடா எம்பொண்டாட்டிகிட்ட இதைச் சொன்ன?”, என்று கேட்க
அசால்டாக அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டுக் கேட்டவன், திமிராக, “உண்மையத்தான சொன்னேன். பொய்யவா சொன்னாங்க”, என்று பேச
“டேய் கொன்னுறுவேன். எப்ப நடந்ததை எப்ப வந்து சொல்லுற? அதை திலா உங்கிட்ட வந்து கேட்டாளா? எதுக்கு அதை அவளுக்கு போனைப் போட்டுச் சொன்ன?”, என்று மீண்டும் அடிக்க வர
விஷ்வாவைப் பற்றி கண்ணன் தன்னோடு பேசியது எவ்வாறு விஷ்வாவிடம் சென்றது? என்ற கேள்வியோடு சந்தேகமாகப் பார்த்திருந்த திலாவைக் கவனிக்க தவறியிருந்தனர் அனைவரும்.
ஆரம்பம் முதல் அனைத்தையும் கேட்டவாறு இருந்தவளாயிற்றே. சந்தேகம் என வந்தபிறகு அலைபேசி அலுவலக உதவியோடு கால்ஸ் யாருடைய எண்ணிலிருந்து யாருடைய எண்ணிற்கு எவ்வளவு நேரம் பேசப்பட்டது என்கிற தகவல் அறிக்கையைப் பற்றி மட்டுமே அங்கு விவாதிக்கப்பட்டிருந்தது.
மேலும், கண்ணன் விஷ்வாவின் அலைபேசிக்கு பேசியது விஷ்வாவின் அலைபேசியில் சேமிக்கப்பட்டு, இங்கு விசாரிக்கப்பட்டதையும் அறிந்திருந்தாள்.
கண்ணனின் செயலால் மனதளவில் மிகவும் சோர்ந்து காணப்பட்டவள், கணவனின் அலைபேசியில் தான் கண்ணனோடு பேசியது, அதுவும் செங்கோட்டை வருமுன்பே பேசியது எவ்வாறு சேமிக்கப்பட்டது? எனும் கேள்வி எழ அதேயோசனையில் இருந்தவாறே நடப்பதைக் கண்ணுற்றிருந்தாள்.
நண்பர்கள் இருவரும் விஷ்வாவைப் பிடித்துக் கொள்ள, மிகுந்த தைரியத்துடன், “எதுக்குச் சொல்வாங்க? எல்லாம் திலாவோட நல்லதுக்குத்தான்?”, என்று அதே தொனியில் பேசிட
“அவளுக்கு என்னைப் பத்தி எல்லாம் தெரியும். நீ சொல்லித்தான் தெரியணும்னு இல்ல. உன் வேலைய பாக்காம உனக்கெதுக்கு இந்த வேலை. இனி உனக்கு என் ஆஃபீஸ்ல இடமில்லை. இன்னொருமுறை தேவையில்லாம எங்க ரெண்டுபேருக்கிடையே எதாவது செய்யணும்னு மனசால நினைச்சாகூட உயிரோட இருக்க மாட்ட. அதச்சொல்லத்தான் உங்கப்பாவ வரச்சொன்னேன்” என்றவன்
திருநாவுவை நோக்கி, “ஆரம்பத்தில இருந்தே நீங்கதான் குழப்பம் பண்ணிட்டீங்க. திலாவைப் பெண் கேட்டு பேச ஆரம்பச்ச நேரத்திலேயே டாக்டரும், நானும் எல்லாத்தையும் உங்கட்ட சொல்லிட்டோம். அதையும் அப்ப திலா வீட்ல மறைச்சு எங்களுக்கிடையே அதையிட்டு பிரச்சனை வந்து அதை நாங்களே பேசி சரி பண்ணிட்டோம். சரி இனியாவது எந்த பிரச்சனையும் இல்லாம வாழ்க்கையத் தொடரலாம்னு ஆரம்பிச்சா உங்க மகன் அடுத்த அத்தியாத்தை ஆரம்பிச்சு அவஸ்தைய கூட்டுறான்”, என்று கூறி நிதானித்தவன்,
“எதையும் நான் பொய்யா சொல்லலை! எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்கு. உங்க மகன் குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தினதோடு, தப்பான அணுகுமுறையில என் மனைவியை தொந்திரவு செய்யறதா எனக்கு தோணுது. ஆகையால இனி உங்க மகனை கண்டிச்சு வைங்க. இல்ல நல்ல ஹாஸ்பிடல்ல சேத்து குணப்படுத்துங்க. மேற்கொண்டு எதாவது பிரச்சனைன்னா இதேபோல கூப்பிட்டு பேசமாட்டேன். என்ன செய்யணுமோ அதைச் செய்திட்டு போய்கிட்டேயிருப்பேன்”, என்றவன்
“இதை அமைதியா சொல்லி உங்க பையனை கண்டிக்கத்தான் வரச் சொன்னேன். வரச் சொன்ன இடத்தில எதிர்பாராவிதமா கைக்கலப்பு வரை போயிருச்சு. நடந்ததுக்கு என்னை மன்னிச்சிருங்க. இனிமேலாவது உங்க மகனை ஒழுங்கா கண்டிச்சு வைங்க. நான் கூப்பிட்டதும் என் வார்த்தைய மதிச்சு இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்ப நன்றி”, என்று விஷ்வா பேசிட
அத்தோடு திலாவை முறைத்தபடியே கண்ணனும், கண்ணனது தாயும் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.
திருநாவு, நியாமாக நடந்த விசயத்தை உணர்ந்து கொண்டவராதலால், “மன்னிச்சு விடுப்பா. இனி அந்த மாதிரி நடக்காம பாத்துக்கறேன்”, என்று கையெடுத்து கும்பிட்டவர்,
திலாவை நோக்கி, “நல்லாயிரும்மா. இதை உம்புருசன்கிட்ட சொன்னவ எங்கிட்ட ஒரு வார்த்தை முன்னமே சொல்லியிருந்தா நான் இந்தளவுக்கு வளர விட்ருக்க மாட்டேன். உனக்கு சரின்னு பட்டதை செஞ்சிருக்க”, விரக்தி தோய்ந்த குரலில் கூற
திருநாவுவின் பதிலில் திலா திகைக்க, திலாவை ஒதுக்கிவிட்டு முன்வந்த விஷ்வாவோ, “சாரி சார். இது எதுவும் அவளுக்கு இன்னிக்குவர தெரியாது. கண்ணன் பேசின விசயம் பத்தி எதையும் அவ எங்கிட்ட சொல்லலை. எல்லாம் உங்க மகனா வந்து சொன்னான்னுதான உங்ககிட்ட அப்போவே சொன்னேன். அப்ப வந்த சந்தேகத்திலதான் வர, போற கால்ஸ் எல்லாம் ரெக்கார்ட் பண்ணி உங்க நாலேட்ஜ்க்கு கொண்டு வந்தேன். பலநாள்கள் அவ ஹெல்த் இஸ்யூனால போன் அட்டெண்ட் பண்ண மாட்டா. பட் உங்க பையன் எதாவது போன் பண்ணி, இப்டி பேசினாங்க, அப்டிக் கேட்டாங்கனு தேவையில்லாம என்னை டைவர்ட் பண்ண முயற்சி செய்ததால, நானே இதை செய்யும்படி ஆகிட்டு. என்னோட தனிப்பட்ட முடிவுனால உங்களைக் கூப்பிட்டு பேசினேன். திலா என்னைப் புரிஞ்சிகிட்டதாலயும், நான் அவளைப் புரிஞ்சிகிட்டதாலயும் நிரந்தரப் பிரிவு அப்படிங்கறது இங்க அவாய்ட் பண்ணிருக்கோம்.
இல்லைனா என்ன ஆகியிருக்கும். இது எல்லா நேரத்திலயும் ஒரே மாதிரியா இருக்காதுல்லயா? அதான் முளையிலேயே கிள்ள நினைச்சு நாந்தான் சார் எல்லாம் பண்ணேன். அதனால அவளை நீங்க தப்பா நினைக்க எதுவுமேயில்லை”, என்று விசயத்தை விளக்கி, வழியனுப்பி வைத்தான் விஷ்வா.
/////////////
வீட்டிற்கு சென்றவர்கள் மூவரும் மூன்று திசைகளில் அமர்ந்தபடியே இருந்தனர்.
“இருந்த வேலையும் போச்சு. இனி வேலை தேடி, அது கிடைச்சு, தேவையா இது உனக்கு. நாந்தான் அவ வேணாம்னு தலையா அடிச்சிக்கிட்டேனே. அப்புறமும் எதுக்கு அவகிட்ட போயி தேவையில்லாம வாயக்குடுத்து இப்ப வாங்கிக் கட்டிட்டு வந்திருக்க?”, என கண்ணனின் தாய் துவங்க
“எல்லாம் உன்னாலதான். நான் திலாவத்தான் விரும்பறேன்னு தெரிஞ்சும், அந்த ஊர் மேஞ்சவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கற ஐடியா அப்பாவுக்கு குடுத்து, என் வாழ்க்கையை வீணடிச்சதே நீதான். உன்னைக் கொன்னிருந்தா எல்லாம் சரியாகியிருக்கும்”, என்று தனது இழப்பை எண்ணிய கோபத்தினால் தாயின் கழுத்தைப் பிடித்து நெறித்தவனை
“கொல்லு. உன்னைப் பெத்த பாவத்துக்கு ஒரு பொம்பிளைப்புள்ளயோட பாவத்தை சேத்துட்டு வாழறதுக்கு செத்துறலாம்”, என்று அந்தத்தாய் மகனிடம் வீராப்பு பேசிட
உண்மையில் குரல்வளையைப் பிடித்து நெறித்த வேதனையில், அதை எதிர்பாராத கண்ணனின் தாய் வலியில் துடிக்க, சத்தம் கேட்டு அங்கு வந்த திருநாவு, கண்ணனை விலக்க எண்ணிப் போராட, கண்ணன் கோபத்தில் தந்தையை தள்ளிவிட, திருநாவு கண்ணனின் அவசரமான தள்ளலில் வயோதிகம் காரணமாகவும், மனதின் ஓய்ந்த நிலை காரணமாகவும் கீழே விழ…
சற்றுநேரத்தில் கூச்சலும், குழப்பமுமான நிலையில், கணவர் கீழே விழுந்ததைக் கண்டவர், மகன் குரல் வளையைப் பிடித்திருந்த கைகளை தனது இருகைகளால் போராடி, எங்கிருந்தோ வந்த வேகத்தில் மகனிடம் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு கணவனின் அருகே போக, பின்மண்டையில் விழுந்த பலமான அடியால் பேச்சில்லாமல் கிடந்தார் திருநாவு.
“டேய் தூக்குடா”, என மகனை அழைக்க
“என் வாழ்க்கையையே சீரழிச்சிட்ட. நீங்க ரெண்டுபேரும் இருந்தா என்ன? செத்தா என்ன?”, என்றபடியே வெளியேறிவனைக் “கண்ணா… கண்ணா”, என்று அழைத்தும் கிளம்பிவிட்டான்.
தண்ணீரை எடுத்து வந்து கணவரின் முகத்தில் தெளித்தும் மயக்கம் தெளியாமல் கிடந்தவரைப் பார்த்து பயந்த கண்ணனின் தாய், “யாராவது வாங்களேன். கண்ணா எங்கடா போன? அவரைப் பிடிச்சு தள்ளி கொல்லவா உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளத்தேன்”, என்ற கதறலில் அருகில் இருந்தவர்கள் வந்து உதவ, திருநாவுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
///////////////
வீடு அமைதியாக இருந்தது. திலாவிற்கு நடந்த விசயங்களைக் கண்ணுற்று வருத்தம். கண்ணனது தாய், கண்ணன் பேசியதை எல்லாம் ஒதுக்கிவிட்டாள்.
வெளிநபர்கள் தன்னைப் பேசியதைவிட, தான் மிகவும் நேசிக்கும் கணவன் தானறியாமல் என்னென்னவோ செய்கிறான். ஏன் இதைப்பற்றி முன்பே கூறவில்லை என்கிற ஆதங்கம் திலாவிற்கு.
ஆனால் கணவன் தனது நலனுக்காகவே அனைத்தையும் செய்தான் என்று ஒரு மனம் கூறினாலும், அதைவிட.. தனக்கு கண்ணன் பேசியதை தான் கூறாமல், எப்படி விஷ்வாவிற்கு தெரிய வந்தது. அதைவிட விஷ்வாவின் அலைபேசியில் எப்படி தனக்கு வந்த அழைப்பு பதிவாகியிருந்தது என்ற கேள்வி? குடைந்தது.
குழப்பத்தில் இருந்தவளுக்கு, நடந்ததை எண்ணி எரிச்சலும், கோபமும் ஒருங்கே சேர்ந்திட அலைக்கழித்த மனதோடு இருந்தாள் திலா.
அனைவரையும் வழியனுப்பிவிட்டு வந்தவன், திலாவைச் சென்று அறையில் காண, அரவத்தில் திரும்பாதவளை அழைத்தும் செவிசாய்க்காமல் சிந்தனையில் இருந்தவளின் அமைதியைக் கலைக்காமல் திரும்பிவிட்டான்.
மனைவியின் மனநிலை கருதி தொந்திரவு செய்ய வேண்டாம் என ஹாலில் தனியே சென்று தொலைக்காட்சி முன்பு அமர்ந்துவிட்டான்.
மனம் அதில் லயிக்காமல், திலாவின் அமைதி சற்றே மனதில் அபஸ்வரத்தைக் கொடுக்க, அதைச் சரிசெய்யும் வழி புரியாமல் தலையைப் பிடித்தவாறு அமர்ந்தவனின் நிலை?
அடுத்த பதிவில்…