IV9

IV9

இதய ♥ வேட்கை 9

 

வீட்டிற்கு வந்தவனை தம்பதியர் இருவரும் முகம் மலர வரவேற்று உபசரித்தனர்.

அந்நேரம் அங்கு சுந்தரத்தை எதிர்பார்க்காதவன், “என்ன டாக்டர், இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்திருக்கீங்க.  இன்னிக்கு எதாவது ஸ்பெஷல் டேயா?”, என்று சுந்தரத்திடம் வினவ

“உங்க ஆண்ட்டிதான் ஏதோ முக்கியமான விசயம் விஷ்வாகிட்ட பேசணும். நீங்களும் இருந்தா எனக்கு ஹோப்பா இருக்கும்னு சொன்னா”, என்ற சுந்தரம்

பேச்சோடு மாலினியின் புறம் திரும்பி, “என்ன மேடம்”, என்று மனைவியை கிண்டலோடு நோக்கியவர்,

“விஷ்வாவை வச்சு டபுள் பிஎச்டி பண்ற ஐடியா எதும் இருக்கா”, என்று தனது பேச்சை சிரித்தபடியே தொடர

“அப்டித்தான் டாக்டர் எனக்குத் தோணுது.  ஆண்ட்டி, அல்ரெடி வாங்கின பிஎச்டி பத்தாதுன்னு நினைக்கறமாதிரி தோணுது”, என்று விஷ்வாவும் சுந்தரத்தோடு இணைந்து கொண்டான்.

“உன் வீட்டம்மா மாதிரி இன்னும் ஒரு கேஸ் பாத்தா டபுள் பிஎச்டி என்ன அதைவிட இன்னும் அதிகமாகவே பண்ணலாம் விஷ்வா”, என்று மாலினியும் விடாமல் அவர்களோடு கலகலத்தார்.

“சரி விசயத்துக்கு வா.  பய எல்லா வேலையும் முடிச்சுட்டு இம்புரூவ்மென்ட் தெரிஞ்சிட்டுபோக வந்திருக்கான்”, என்று சுந்தரம் நேரடியாக விசயத்திற்குள் வர

கடந்து போன நாள்களில், மிதிலாவின் மனநிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி கூறத் துவங்கினார் மாலதி.

“அந்தப் பொண்ணு ரொம்ப சென்சிடிவ்.  வெளிய எங்கயும், யாரையும் நம்பி போகாம, அப்பா, அம்மா அவங்களோட மட்டுமே அதிகமா இருந்திருக்கா.

அவங்க அப்பா இருந்தவரை எப்படி இருந்தாளோ, அதேபோல அவரோடு டெத்துக்கு பின்னயும், தன்னைய வருத்திகிட்டு அவங்கம்மா தன் பொண்ணை வளத்திருக்காங்க. அவங்களால முடிஞ்சவரை எந்தக் குறையுமில்லாம வளத்திருக்காங்க.”, என்று இறுதி வார்த்தையில் அழுத்தம் கொடுத்துப் பேசினார் மாலினி.

“விவரம் தெரிய ஆரம்பிச்ச பின்ன, அவங்கம்மாவுக்கு சப்போர்ட்டா அவங்களுக்கு உதவி செய்ற பழக்கத்தோட வளந்திருக்கா.

நிறைய லைஃப் ரிலேட்டட் மாரல்ஸ் சொல்லிச் சொல்லி அவங்க இவளை வளத்திருக்காங்க.

குடும்ப சூழல் தெரிஞ்சு வளந்திருந்தாலும், எதிலயும் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுப் போகிற மாதிரியான நிகழ்வுகளை தன்னோட பள்ளிப் பருவத்திலேயோ, உறவுகள் மத்தியிலயோ செய்து பழக வாய்ப்பு இல்லாம கடைசிவரை வளந்திருக்கா.

அவங்க பேரண்ட் தவிர வேறு யாரு கூடயும் அதிகமான நெருக்கமில்லாம வளந்திருக்கா. அவங்களும் லவ் மேரேஜ் பண்ணிட்டவங்க. அதனால க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ்னு யாரும் பழக்கமில்லை திலாவுக்கு.

ஹஸ்பண்ட் அன்ட் வயிஃப்கு இடையில எப்டிலாம் இருக்கணும்கறதுக்கு, அவங்க பேரண்ட்ஸை ரோல் மாடல்லா வச்சு, அவளோட விவரம் தெரிஞ்ச நாள் முதலா அவ பாத்து வளர்ந்த பேரண்ட் அவங்களோட ஆக்டிவிட்டிஸ் பதிஞ்சிருக்கு.

அவளுக்குள்ள சில விசயங்களை கற்பனை பண்ணி இப்டித்தான் லைஃப் பார்ட்னர் இருக்கணும்னு, அப்புறம் ஃபேமிலி லைஃப் இப்டி இருக்கணும்னு சில எதிர்பார்ப்புகள் இருந்திருக்கு”, என்று பேசியவாறு இருந்த மாலினியை இடைமறித்த சுந்தரம்

“கல்யாணக் கனவு இல்லாம எந்த ஜென்டரும் இருக்க மாட்டாங்க!”, என்றவர் விஷ்வாவை நோக்கியவாறே

“திலா பத்தின பழைய கதையெல்லாம் வேணுமா உனக்கு”, என்று விஷ்வாவிடம் சுந்தரம் நேரடியாக வினவ

“அவங்கதான் எதையும் ஷேர் பண்ணிக்கலையே”, என்று மாலினி விளக்க

“அதற்கான வாய்ப்பு இனி வரும்.  அதனால அதைப் பற்றி விஷ்வா திலாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கட்டுமே”, என்று தனது கருத்தைக் கூறினார் சுந்தரம்

“என்ன விஷ்வா அப்டியா?  உனக்கு இப்போ வேண்டிய அவார்னஸ் மட்டும் வழக்கம்போல கொடுத்தா போதுமா?”, என்று மாலினி நேரடியாக விஷ்வாவிடம் கேட்டார்.

அதை விஷ்வாவும் ஆமோதித்திட

“இப்ப என்னதான் திலா சொல்ல வராப்புல”, என்று நேரடி விசயத்திற்கு வா என்று கேட்டிருந்தார் சுந்தரம்.

“பேமிலி லைஃப்ல வர ஆரம்பகால இன்கன்வீனியண்ட் திலாவுக்கும் இருந்திருக்கு.  யாருகிட்டயும் ஷேர் பண்ணிக்க முடியாத அளவுல அவளோட சிச்சுவேசன் ஆகிருச்சு.  அம்மாவைத் தவிர வேற யாருகிட்டயும் ஷேர் பண்ணிப் பழக்கமில்லாம இருந்ததால, தனக்குத்தானே ஒரு முடிவுக்கு வந்திருக்கா.

தன்னால இயல்பா குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துழைக்க முடியாதுன்னு அவளே அவளைப் பற்றி நினைச்சிட்டு ஒதுங்கியிருந்திருக்கா.

நம்ம பிஸினெஸ்மேன் எதையும் கவனிக்கலை.

அதே சமயம் விஷ்வாவோட ரிப்போர்ட்ஸ் கைல எதேச்சையா கிடைச்சதும், அத விசாரிக்க வேண்டி செங்கோட்டைக்கு கிளம்பி போயிருக்கா.  தனக்கு தெரிஞ்சவங்க மூலமா எல்லா விசயமும் கேட்டு தெரிஞ்சபின்ன, இனி விஷ்வாவோட தான் வாழ வேணானு முடிவெடுத்திருக்கா.  அதனால அங்கேயே இருந்து மியூசுவல்ல டிவோர்ஸ் கேட்டு விஷ்வாவை நச்சரிச்சிருக்கா, இது நம்ம விஷ்வாவோட எஸ்டிடி ரிப்போர்ட் பாத்ததால வந்த புதுப் பிரச்சனை”, என்று நிறுத்திய மாலினி

“அதுக்கு முன்னயே தனக்கு குடும்ப வாழ்க்கை ஒத்து வராதுங்கற ஒரு எண்ணம் திலாவுக்கு இருந்திருக்குனு சொன்னா, அதை சரி செய்ய எவ்வளவு நாளாகும்”, என்று சுந்தரம் வினவ

“அது நம்ம விஷ்வா கைலதான் இருக்கு”, என்று விஷ்வாவைக் கைகாட்டினார் மாலினி.

“டிவோர்ஸ் எப்ப இருந்து கேக்கறாப்பல”, என்று வினவ

“ ரிப்போர்ட் பத்தி தெரிஞ்ச பின்னதான், டிவோர்ஸ் அப்டிங்கற முடிவுக்கு வந்திருக்கா”, என்று விஷ்வாவைப் பார்த்தபடியே கூறியவர்

“சமீபத்துல என்னோட கிளினிக் வர ஆரம்பிச்சதுல இருந்து ‘எனக்கு சீக்கிரமா மியூசுவல் டிவோர்ஸ் வாங்கித் தந்திருங்கம்மா’னு அடிக்கடி கேக்கறது ஸ்டாப் ஆகியிருக்கு.”, என்றவர்

“ட்டூ டேஸ் முன்ன நானா”, ‘என்னம்மா உன் லைஃப் பத்தி என்ன முடிவு செய்திருக்க’,னு கேட்டேன்.

‘இன்னும் கொஞ்சம் டைம் வேணும்மா’, என்று கூறியதையும் மாலினி இருவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

“நீ சொல்றதைக் கேட்டு விஷ்வா நிறைய மாறிட்டு வரான்.  இப்ப வரை அவனுக்கு ஹோப் குடுக்காம பேசினா என்ன செய்யறது?”, என்று விஷ்வாவின் பொருட்டு சுந்தரம் வினவ

“நல்லா கேளுங்க டாக்டர்”, என்று விஷ்வாவும் இணைந்து கொண்டான்.

“நான் சொன்ன மாதிரி கேட்டதால, ரெண்டு பேரும் சேந்து சாப்பிடறாங்க, பேசிக்கறாங்க, விஷ்வா செங்கோட்டை போயிருந்தப்ப, தன்னை மறந்து வந்து அவனைப் பத்தி எங்கிட்டயே கம்ளையண்ட் வாசிக்கற அளவுக்கு முன்னேறியிருக்காள்ல”, என்று மாலினி சிரித்தபடியே கூற

விஷ்வாவும் தன்னோடு சற்று நேரம் முன்பு மாலையில் தன் அறைக்குள் வந்து தர்க்கம் செய்து நியாயம் கேட்டவளை மனக்கண்ணில் பார்த்து சிரிக்கத் துவங்கினான்.

விஷ்வாவின் சிரிப்பைக் கண்ட சுந்தரம், “என்னப்பா மலையிறக்கிட்டு வந்த மாதிரி இருக்கு உன் சிரிப்பு”, என்று நையாண்டி செய்யும் குரலில் கேட்க விசயத்தை இருவரிடமும் சுருக்கமாகக் கூறினான் விஷ்வா.

“இதெல்லாம் நமக்கு பிளஸ்தான்.  ஆனா வருசக் கணக்கா விஷ்வா காத்திருக்கணுமா இல்லை, மாசக் கணக்கான்னு மட்டும் சொல்லு”,  மகிழ்ச்சியில் சுந்தரம் வினவினார்.

“அதுவும் நம்ம விஷ்வா கைலதான் இருக்கு”, என்று மாலினியும் விஷ்வாவை நோக்க

“இன்னும் கொஞ்சம் கோஆபரேட் பண்ணு விஷ்வா.  கண்டிப்பா திலா மாறி உன்னோட நீ எதிர்பார்க்கிற மாதிரியான ஒரு வாழ்க்கை கண்டிப்பா வாழுவா”, என்று உறுதி கூறினார் மாலினி.

பொதுவாக பேசக்கூடிய விசயங்களனைத்தையும் இருவரையும் வைத்துப் பேசி முடித்தவர், அடுத்து தனிப்பட்ட முறையில் அடுத்த கட்ட கவுன்சிலிங் அவரது அலுவலக அறையில் வைத்துக் கொடுப்பதாகக் கூறினார்.

சுந்தரம் தனது வாழ்த்துகளை விஷ்வாவிற்கு கூறி அனுப்பிவைத்தார்.

விஷ்வாவிற்குரிய அவனது தாம்பத்யம் சார்ந்த கவுன்சிலிங்கின்போது சுந்தரம் உடன் இருந்தால், விஷ்வாவிற்கு சங்கோஜமாக இருக்கும் என்பதாலும், ஒருவர் தனது உற்றார், உறவினராக இருப்பினும் இதுபோன்ற விசயங்களை பொதுவில் வைத்துப் பேசுவது துறை சார்ந்த நிலையில் முரண்பாடானது என்பதாலும், அது முறையாகாது என்பதாலும், மாலினி, சுந்தரம் இருவரும் முன்பே இதுபற்றி பேசி முடிவுக்கு வந்திருந்தனர்.

விஷ்வா, மாலினியின் பேச்சில் தயங்கியபோதும்,

“இது திலா அப்டிங்கற பொண்ணும் சம்பந்தப்பட்ட விசயம் விஷ்வா.  அதனால அப்டி பேச முடியாதுங்கறதைவிட, பேசக்கூடாது”,என்று கூறி அனுப்பியிருந்தார் சுந்தரம்.

///////////////

விஷ்வா இதுநாள் வரை அந்த அறைக்குள் வந்ததில்லை.

தம்பதியர் இருவருமாகச் சேர்ந்து பொதுவில் பேசி வந்த அனுபவம் மட்டுமே இருக்க,

முதன் முறையாக உள்ளே நுழைந்ததும், ஏதோ உணர்வு.  ஆனால் அது என்ன என்பதை அவனால் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

அடுத்தகட்டமாக தன்னோடு பேசப்போகும் விசயம் எது சார்ந்தது என்பது தெளிவான நிலையில், தெளியாத தயக்கம் மிச்சமிருந்தது.

“விஷ்வா, நான் உன்னோட ஆண்ட்டி அப்டிங்கறதை விட்டு, ஒரு டாக்டர் அப்டிங்கற மனநிலைக்கு நீ வந்திரணும்”, என்று ஆரம்பத்திலேயே மாலினி கூறிவிட்டார்.

பிறகு, மிகவும் மெல்லிய, தெளிவான குரலில், விஷ்வாவின் கண்ணை நோக்கியவாறு பேசத் துவங்கினார் மாலினி.

“நிறைய எதிர்பார்ப்புகளோட ஒவ்வொரு பொண்ணும் தன்னோட முதல் இரவை எதிர்கொள்ளுவாங்க.  அதேபோல திலாவும் இருந்திருக்கா”, என்று நிறுத்தியவர்

திலா பகிர்ந்து கொண்டதை கூறினார்.

//////////////

அன்றைய தினம் வாரயிறுதி நாள் என்பதாலோ, என்ன காரணம் என்று தெரியாதபோதும், கணவன் வீட்டிலிருப்பது நிறைவான சந்தோசத்தைத் தந்திருந்தது திலாவிற்கு.

சில தினங்களாகவே ஒரு புதுமணப் பெண்ணிற்குரிய எதிர்பார்ப்போடு வலம் வருபவளை அவளின் நுண்ணிய எண்ணத்தின் வலிமையால் உணர்ந்து கொண்டானோ விஷ்வா!  தெரியவில்லை!

இயல்பாகவே இருந்தான்.  பார்வையிலோ, செயலிலோ எதையும் உணர்ந்தாளில்லை திலா.

இரவு உணவிற்குப்பின், தனது அறைக்குள் படுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் திலா. அறைக்கதவினை அடைக்காமல் தாமதித்திருந்த வேளை, எதிர்பாராமல் அறைக்குள்ளே வந்தவனை பதற்றத்தோடு எதிர்கொண்டிருந்தாள் பெண்.

பதற்றமும் பெண்ணிற்கு மகிழ்வையே தந்திருந்தது.

‘வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்’, என்பதுபோல மனம் முழுவதும் நிரம்பியவனின் வருகையில், வெக்கத்தின் சாயல் வதனமெங்கும் பூசிக் கொண்டது.

மாநிற வதனத்தில் சிவந்து தெரிந்த திலாவின் கன்னத்து மேடுகளைக் கண்ட, கொண்டவனுக்கோ போதையேற்றியிருந்தது.

இதுவரை தன்னை ஏறெடுத்தோ, பேச்சிலோ நெருங்காதவன், அறைக்குள் வந்தது, முதல் அதிசயமாகிப் போயிருந்தது திலாவிற்கு.

கணவன் வந்த வேளை உணர்ந்து பெண் தன்னை நிதானப்படுத்தி, தனது பருவத்திற்கான ஆராதனையை அனுபோக நிலையில் அனுபவித்திட ஆயத்தமாக எண்ணிட,

திறந்து வந்த கதவை பூட்டாமல், பகல் போல இருந்த அறையில் பள்ளியறைக்கான பக்குவங்களை மாற்றிடாமல், பெண் மனதை மெல்லிய உணர்வால் தன் பக்கம் இழுக்க நேரம் ஒதுக்காமல், தன்னோடு ஒத்துழைக்க மனதளவில் நின்றவளை உணர்வளவில் தொடாமலேயே, தனது வந்த நோக்கத்தை நொடிப்பொழுதுகளில் நிறைவேற்றி. வந்த சுவடினை திலா உணர்ந்து, தெளியும்முன் அறையிலிருந்து வெளியேறியிருந்தான் விஷ்வா.

பசித்திருந்தவளுக்கு சுவை தெரியவில்லை. சுவை உணர்ந்தவன் நிறைவோடு சென்றிருக்க, உடல் வேதனையிலும்,  மனம் சோதனையிலும் மாறியிருக்க எழ முடியாமல் படுக்கையில் கிடந்தாள் பெண்.

தனது நிலையை உணர்ந்தாலும், ஆடை அணிமணி களைந்து கிடந்த கோலம் மறைத்திட, அறைக்கதவை எழுந்து சாத்த முடியாமல், சடலம்போல சலனமின்றி சஞ்சலத்தோடு கிடந்தாள்.

இதன் சுவை இப்படித்தானா? இல்லை மாறுபட்டாதா என்று உண்டு பார்க்கும்வரை தெரிவதில்லை.

ஆனால் கவரும் நிறங்களின் வண்ணத்தில் மயங்கி ஏமாந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

அதேபோல பெண்ணும் தன்னை எண்ணிக் கொண்டாள்.

காய்ச்சல்காரனுக்கு, கறியும் சோறும், கெட்டழிந்த நிலையில் இருக்கும் உணவும் ஒன்றே!

ஆரோக்யத்தில் ஆறு சுவைகளை அறிந்திடக்கூடியவன், அவசரத்தில் எதையும் அறிய முடியாதவனாகிறான்.

அது தெரியாமலேயே, இந்த உணவினை உட்கொண்டால் என் உடலுக்கு ஒவ்வாது என்று மனம் முழக்கமிட்டது திலாவிற்கு.

இயலாத நிலையிலும், களைந்த ஆடையைச் சரிசெய்ய இயலாமல், போர்வையை உடலோடு சுற்றிக் கொண்டு எழுந்து வந்து கதவை மூடியபோது, கண்ணிலிருந்து பீறிட்டு வெளியேறிய, வெள்ளி ரசம் சீறி வந்து தரையில் விழுந்து சிதறியது.

இரண்டு நாள்கள் அறையை விட்டே வெளிவர இயலாமல் இருந்தாள். மூன்றாம் நாள் நாகம்மாள் வந்து, “என்னம்மா என்ன உடம்புக்கு முடியலையா, ரெண்டு நாளா வெளியே வராம குடுத்துவிட்ட சாப்பாட்ட சாப்பிடாம இருக்கீங்களேம்மா”, என்று புலம்பும் வரை எழும் எண்ணமும் இல்லாமல் இருந்தாள் திலா.

அடுத்து வந்த நாள்கள் பெரும்பாலும் அடைத்திருந்த கதவுகளுக்குப் பின்னால் யோசனைகளோடும், யாரிடம் இது பற்றிக் கேட்டுத் தெளியலாம் என்று புரியாமல் நேரத்தைச் செலவிட்டாள் திலா.

இதைப்பற்றி வெளியில் பேசினால் நம்மைப் பற்றிய பிறரது எண்ணம் என்னவாக இருக்கும் என்கிற தயக்கமும் இருந்தது.

காணும்போது கிடைத்த சந்தோசம் கூட நிலைக்கவிடாது, தன் இயல்பை தொலைக்கச் செய்த தாம்பத்யம் கசப்பு சுவையானது என்கிற எண்ணம் திலாவிற்கு வந்திருந்தது.

பயனற்றது என உணரும் எந்த செயலையும் மனித இனம் செய்யத் தயங்குகிறது. 

மொத்தத்தில் தான் குடும்ப வாழ்க்கை வாழ ஏதுவானவள் இல்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தாள் திலா.

////////////////

தலை குனிந்தவனை, “தலைகுனிஞ்சு ஒன்னும் ஆகப்போறதில்லை விஷ்வா, இந்த விசயம் நானா ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி அவகிட்ட கேட்டு தெரிஞ்சிட்டேன்.  அவ சொன்னது எல்லாம் உண்மைதான”, என்று நிறுத்த

தலையை ஆட்சி ஆமோதித்தான்.

“பழகின பழக்கம் அப்டி.  அதேபோல வயிஃப்கிட்டயும் நடந்து, அவளை ஃபேமிலி லைஃப்னாலே இப்டித்தான்னு பயமுறுத்திருக்க”, என்று மாலினி கூற

மாலினி பேசுவதை மறுக்காது, கேட்டவாறு அமைதியாக இருந்தான் விஷ்வா.

“வீணையை முறையா மீட்டினாத்தான் அதுல இருந்து ஸ்வரங்களைக் கேக்க, உணர, ரசிக்க முடியும்.  தெரியாதவங்க மீட்டின நாரகாசமாத்தான் இருக்கும்.”, என்று மறைமுகமாக விளக்கியவர்

“உள்ளத்தோட சேர்க்கை நல்லா இருந்ததால, இவ்ளோ நாள் அவ உன்னை விட்டுப் போகவும் முடியாம, உன்னோட சேந்து வாழவும் முடியாம தனக்குள்ள தவிச்சு, குற்ற உணர்வோட வாழ்ந்திருக்கா.

இனி வரக்கூடிய காலங்கள்ல இந்த விசயம் அவ்வளவு அருவருக்கத் தக்கது இல்லனு நீதான் அவளுக்கு உணர்த்தனும். அத்தோட, அப்டி அவ எல்லாத்தையும் மறந்து வரும்போது, பழைய விசயத்தை எதையும் ஞாபகப்படுத்தி அவளைத் தயங்க வச்சிட்டா மீண்டும் அவளை மாத்திறது ரொம்பக் கஷ்டம்.

செக்ஸ் அப்டிங்கறது தூக்க மாத்திரை மாதிரி நிறைய ஆண்கள் நினைக்கிறீங்க. தனக்கு திருப்தி கிடைச்சதோட எதையும் பத்தி கவலைப்படாம விழுந்து தூங்கிப் போறது.  அப்டி ஆண்கள் நடந்துக்க ஆரம்பிச்சா  பெண்கள் உங்ககிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுருவாங்க.  அந்த வாழ்க்கை ரிதமா இருக்காது.

வீணையோட எல்லா தந்தியையும் மீட்டும்போது கிடைக்கற சுரங்கள் மாதிரிதான் செக்ஸும்.  அதைப் புரிந்து நிதானமா ஒருத்தொருக்கொருத்தர் செயல்படும்போதுதான் தாம்பத்யம்கிறது பூரணமா நிறைவு பெறும்.  அதுலதான் நல்ல ஆரோக்யமான மலர்கள் மலரும்.

மாறி நடக்கும்போது வரக்கூடிய எல்லாம், அதாவது உறவாகட்டும், அடுத்து வரக்கூடிய தலைமுறை ஆகட்டும் எல்லாமே வெறுப்பும், வெறியும் மிகுந்ததாக மாறிப் போயிரும்.

சிங்கம் மாதிரி, சிறுத்தை மாதிரின்னு சொல்லி மீசை முறுக்கறவங்களை எல்லாம் விட, விலங்கினம் இந்த விசயத்தில ரொம்ப நல்ல மாதிரி”, என்றதும் நிமிர்ந்து கேள்வியோடு நோக்கிய விஷ்வாவிடம்

“அதாவது தன்னோட இணை தன் வித்துவை சுமக்கறதுன்னு தெரிஞ்சபின்ன கூடல் அப்டிங்கற ஒன்னையே அவாய்ட் பண்ணிருது அனிமல்ஸ்.  ஆனா மனுசன் ஆறறிவு, ஏழாம் அறிவுனு படங்காட்ட மட்டுந்தான் லாயக்கு”, என்று தனக்குள் இருந்த ஆண்கள் பற்றிய பொதுவான கண்ணோட்டத்தையும் விஷ்வாவிடம் தனது இயல்பு மீறி பரிமாறிக் கொண்டார் மாலினி.

ஓரளவு விஷ்வாவிற்கு அவனது தவறுகள் என்ன என்பது புரிந்தது.

அதற்கான காரணமும் விளங்கியது.

மாலினிக்கும் விஷ்வாவின் நிலை புரிந்துதான் இருந்தது.

“நீ தனியாவே வளந்திட்ட, எது தப்பு, எது சரின்னு தெரியலை. குடும்பம் எப்டியிருக்கும்னு தெரியாம இருந்தவன், திலாவை விட்ருக்கூடாதுன்னு நினைக்கிறதே பெரிய விசயம்தான்.

பச்சைக் களிமண் போல இவ்வளவு நாள் இருந்த உன்னை எங்களால முடிஞ்ச அளவு சரியா வடிவமைக்க முயற்சி செய்யறோம்.  அதுவரை காய்ந்து போயி சங்கடப்படுத்தாம நீயும் எங்களோட ஒத்துழைப்பு கொடுக்கறதாலதான் இந்தளவு மாற்றங்களை திலாகிட்ட கொண்டு வர முடிஞ்சிருக்கு.  இன்னும் கொஞ்ச நாள் சிரமம் பார்க்காத”, என்று நல்வார்த்தைகள் கூறி விஷ்வாவிடமிருந்து விடைபெற்றனர் சுந்தரம், மாலினி தம்பதியர் இருவரும்.

இறுதியில் விடைபெறும் வேளையில், “திலா ட்ரெயின்ல டிராவல் பண்ணதே இல்லையாம் விஷ்வா.  அன்னிக்கு கேட்டுட்டு இருந்தா.  முடிஞ்சா எங்காது வெளியில போகும்போது போங்க”, என்று விஷ்வாவை அனுப்பி வைத்தார் மாலினி.

//////////////////

மாலினியின் வாயிலாக திலாவின்  வேட்கையை நிறைவேற்ற விழைந்தான் விஷ்வா.

மருத்துவர்களோடு, தம்பதியர் இருவரும் சேர்ந்து, நால்வருமாக செங்கோட்டை வந்திருந்தனர்.

செங்கோட்டை, கொல்லம் இரயிலில் இனியதோர் பயணத்தைத் துவங்கியிருந்தனர்.

தண்டவாளத்தில் வந்த இரயில் வண்டியின் அதிர்வில், மாலினியின் கரங்களை இறுகப் பற்றியவளை, “நானே என் பயம் போக்க உங்க அப்பாவை பிடிக்கறேன்.  இதுல நீ வந்து என்னைப் பிடிச்சா”, என்று விஷ்வாவின் புறத்தே செல்லுமாற கண்ணைக் காட்டினார் மாலினி.

பெரும்பாலும் காரில் பயணத்தை மேற்கொண்டாலும், வருடமொருமுறை முன்பு நண்பர்களோடு வந்து போன நாட்கள் நினைவில் வந்தது விஷ்வாவிற்கு.

மூவரையும் கண்டும் காணாதது போல ஓரமாக நின்றிருந்தான் விஷ்வா.

நிதானமாக வண்டியில் வேண்டிய அத்தியாவசிய பொருட்களோடு ஏறியிருந்தனர்.

கம்பார்ட்மென்ட் முழுவதையும் ரிசர்வ் செய்திருந்தான் விஷ்வா. நால்வரைத் தவிர யாருமில்லை.

சுந்தரம் மிகவும் இயல்பாக மாலினியின் தோளில் கைபோட்டு அணைத்தவாறு இயற்கையை ரசிக்கத் துவங்குவதுபோல நெருங்கி நிற்க, அதற்குமேல் மாலினியைத் தொந்திரவு செய்ய இயலாமல் மறுபுறம் வந்து முகத்தை தூக்கி வைத்தபடியே பயணத்தைத் துவங்கியிருந்தாள் திலா.

மிகவும் குதூகலத்துடன் கிளம்பியள், உம்மென்று இருப்பதைக் கண்டவன்,

“திலா”, என்றழைக்க

‘என்ன’, என்பதுபோல் பார்த்தவளிடம்

“ட்ரெயின் கொல்லம் ரீச் ஆக சிக்ஸ் ஆர்ஸ் ஆகும். இப்டி கொரில்லா மாதிரி ஃபேஸ் வச்சிட்டிருந்தா வழியில நம்மாளு போகுதுன்னு உன்னைத் தேடி வந்திரப்போகுது மங்கிஸ்”, என்று கிண்டல் மொழி கூற

“என்னைப் பாத்தா மங்கிஸ்தான் வரும்.  உங்களைப் பாத்தா காட்டுல உள்ள எல்லா அனிமல்ஸ்ஸுமுள்ள வந்திரும்.  போயி உள்ள உக்காந்துக்கங்க”, என்று அறிவுரை வேறு

“அது சரி நான் போயி உள்ள உக்காந்துக்கறேன்.  தனியா உக்கார போரடிச்சா இடையில எத்தனை குகை, பாலம், எத்தனை பெண்ட் வருதுன்னு கவுண்ட் பண்ணி கொல்லம் வந்தவுடனே சொல்லு”, என்றான் விஷ்வா.

“ஏன் நீங்க எதாவது எக்ஸாம் அப்பியராகப் போறீங்களா?”, என்று வெடுக்கென்று கேட்டவளை சிரிப்பு மாறாமல்

“அப்டித்தான்னு வச்சுக்கோயேன்.  உன் புண்ணியத்துல பாசாகிட்டுப் போறேன்,  அதனால சரியா கவுண்ட் பண்ணிச் சொல்லு”, என்றுவிட்டு சிரிப்பு மாறாது அகன்றிருந்தான் விஷ்வா.

‘உடும்புக்கு குசும்பப் பாரேன்.  கூட்டிட்டு வந்து ஹோம் வர்க் எல்லாம் குடுக்குது.  எல்லாம் என் நேரம்.  வயசான காலத்துல ரெண்டு ரொமான்ஸ் மோடுல இருக்கு.  உடும்பு குசும்பு மோடுல இருக்கு, நான் கவுண்டிங் மோடுக்கு போகணுமாம்.’ என்று மனதோடு கூறியவள்,

“இந்த அநியாயத்தைக் கேக்க இங்க யாருமில்லையா? மீ ரசிக்க வந்தேனா இல்லை கவுண்ட வந்தேனா”, என்று சத்தமாகக் கூறினாள்.

ஏசி கம்பார்ட்மெண்ட் ஆகையால் பூட்டிய கதவினை மீறி இவளது சத்தம் யாருக்கும் கேட்காது என்கிற தைரியத்தில் பேசியிருந்தாள் திலா.

புன்னகையோடு பெண்ணை கண்ணாடி கதவிற்குப் பின்னால் இருந்தபடியே பார்த்திருந்தான் விஷ்வா.

 

பயணம் இனிமையாக அமைந்ததா?

அடுத்த அத்தியாயத்தில்.

Leave a Reply

error: Content is protected !!