Jeevan Neeyamma–EPI 20

171916099_840757923178210_3424615682123961255_n-fd542f61

அத்தியாயம் 20

 

என் இதயம் கனமாய் கனக்கிறதே, ஏன் தெரியுமா? அது உன்னையும் தூக்கி சுமப்பதால்தான் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

‘உலு பெண்டுல்’-இயற்கை அன்னை தவமாய் தவமிருந்து பிரசவித்திருப்பாளோ என எண்ண வைக்கக் கூடிய அழகான வனப்பகுதி இது. இந்த வனத்துக்கு வரம் போல அமைந்திருந்தது அதன் ஊடே சலசலத்து ஓடும் ஆர்ப்பரிக்கும் நீர் வீழ்ச்சி. காடு என இருந்தால் காத்து கருப்பு இருக்காதா! இவ்விடமும் பல காத்துக் கருப்புகளை அடக்கி வைத்திருக்கிறது என அரசல் புரசலாக செய்தி வந்தாலும், இவ்வனத்தின் அழகு மக்களை கவர்ந்து இழுத்து வரவே செய்தது.

காலை பத்து மணிக்கு சர்ரென ‘உலு பெண்டுல்’லின் நுழைவுப் பகுதியில் ப்ரேக் அடித்து நின்றது அந்த பஸ். அதன் கதவு திறந்துக் கொள்ள, சலசலத்தப்படியே இறங்கினர் பல்கலைக்கழக மாணவர்கள். எல்லோரும் ஒரே மாதிரி வெள்ளை நிறத்தில் ‘தமிழ் எங்கள் மூச்சாம்!’ என கருப்பு எழுத்தில் ப்ரிண்ட் செய்திருந்த டீ ஷர்ட் போட்டிருந்தனர்.

“காய்ஸ்! ப்ளிஸ் பேச்சைக் குறைச்சிட்டு எல்லோரும் வரிசையா நில்லுங்க!” என கத்தினான் ரஹ்மான்.

அவன் பின்னால் கழகத்தின் செயற்குழுவினர் நின்றிருந்தனர். மாணவர்கள் எல்லோரும் வரிசையாய் தங்களது உடைமைகளோடு நிற்க, அவர்களை நோக்கி ரஹ்மான் உதவிக்கு அழைத்திருந்த வனத்துறை அதிகாரிகள் இருவர் வந்தனர். அந்த இரு மலாய்காரர்களும் ரஹ்மானிடம் சலாம் செய்து விட்டு, மற்ற எல்லோரையும் அப்படியே தரையில் அமர சொல்லி சைகை செய்தனர்.

ஹேமாவின் அருகே போய் அமர்ந்துக் கொண்டாள் மீனாட்சி. மற்றவர்களின் பார்வை அதிகாரிகளின் மேல் இருக்க, இவளோ திருட்டுத்தனமாக ரஹ்மானை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கருப்பு நிறத்தில் ட்ராக் ஷூட் அணிந்து, வெயிலுக்கு முகத்தை மறைக்க கேப் அணிந்திருந்தான். காலில் ஸ்போர்ட் ஷூ பளபளத்தது. நீல வர்ண ஸ்போர்ட் ஜேக்கட்டை கழட்டி இடுப்பில் அதன் இரு கைகளையும் கட்டி பின் புறம் தொங்க விட்டிருந்தான். அவனோடு லோகாவும் மற்ற ஆண் உறுப்பினர்களும் பஸ்ஸில் இருந்து கேப்பிங்கிற்கு தேவையான பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.  

“உங்கள் அனைவரையும் இந்த வனப்பகுதிக்கு வரவேற்கிறோம். நீங்க எல்லாரும் உங்க அம்மாவின் கருவறையில் எவ்ளோ பாதுகாப்பா இருந்தீங்களோ, அதே மாதிரி இந்த காடெனும் கருவறையில பல உயிரினங்கள் பாதுகாப்பா வாழ்ந்துட்டு இருக்கு. உயிரங்கள் மட்டும் இல்லாம ஸ்ப்பீரிட் என சொல்லப்படற கண்ணுக்குத் தெரியாத தேவதைகள், ஆத்மாக்கள், இவைகளும் இருக்கு. உங்க வீட்ட எப்படி சுத்தமாப் பார்த்துக்குவீங்களோ அதே மாதிரி இந்த காட்டையும் சுத்தமா வச்சிக்கனும். கண்ட இடத்துல ஒன்னுக்குப் போறது, எச்சில் துப்பறது இதெல்லாம் செஞ்சீங்கனா ஸ்ப்பீரிட்கு கோபம் வரும். அப்பூறம் உங்க மேல ஏறி உக்காந்துகிச்சுனா ஒன்னும் செய்ய முடியாது! தேவையில்லாம மரத்த காயம் செய்யறது, புல் பூண்ட புடுங்கிப் போடறதுன்னு எதையும் செய்யக் கூடாது. அந்த மூனு நாட்கள் வந்த பெண்கள் யாராவது இருந்தா, தனியா எங்கயும் போகாதீங்க! கூட்டாளிங்க கூடவே மூவ் பண்ணுங்க! உங்க பாதுகாப்புக்கு நாங்க எப்பவும் உங்க மேல ஒரு கண்ணு வச்சிருப்போம்! எஞ்சாய் யுவர் டேஸ் ஹியர்! ஹிப் ஹிப் ஹூரே!” என கடைசியாய் அவர்கள் சத்தம் கொடுக்க மாணவர்களும்,

“ஹிப் ஹிப் ஹூரே!” என கோஷமிட்டனர்.

“என்னடி இந்த பயம் காட்டறாங்க! நான் அப்பவே வரலன்னு சொன்னேன். பிடிவாதம் பிடிச்சு என்னை இழுத்துட்டு வந்துருக்க! எங்காத்தா அப்பனுக்கு நான் ஒத்தைப் புள்ள வேற! நடு ராத்திரில பேய் வந்து ஹாய் சொல்லிட்டுப் போனா நான் என்னடி செய்ய?” என மெல்லிய குரலில் புலம்பினாள் ஹேமா.

“நீயே ஜண்டா! உன்னை எந்தப் பேய் வந்து சீண்டிப் பார்க்கும்? சீண்டிப் பார்க்கற பேய சின்னாப்பின்னமாக்கிட மாட்ட!”

“இப்படி உசுப்பேத்தியே என்னை உருப்படாம பண்ணிடு” என சலித்துக் கொண்டே மற்றவர்களோடு எழுந்தாள் ஹேமா.  

அதிகாரிகளைப் பின்பற்றி காட்டின் உள்ளே நுழைந்தனர் மாணவர்கள் எல்லோரும். ரஹ்மானும் மற்ற ஆண்களும் பொருட்களைத் தூக்கிக் கொண்டு பின்னால் வந்தார்கள். தனக்கு முன்னால் நடையில் துள்ளலுடன் ஹேமாவோடு பேசி சிரித்துக் கொண்டு போகும் மீனாட்சியையே பார்த்தும் பார்க்காமல் நடந்தான் ரஹ்மான். காட்டின் நுழைவாயிலிலே சற்று மேடான பகுதியில் கேம்ப்பிங் ஸ்பாட் இருந்தது. அந்த இடத்துக்கு சற்று தள்ளி சலசலத்து ஓடும் நீர்வீழ்ச்சி இருந்தது. உள்ளே செல்ல செல்ல, மெல்ல குளிர ஆரம்பித்தது. நீர்வீழ்ச்சியிம் உபயத்தால் ஈரப்பதமான காற்று முகத்தில் மோதி புத்துணர்ச்சியைக் கொடுத்தது. காட்டுக்கே உரிய சத்தங்கள் காதை நிறைத்தன. படிப்பு, அசைண்ட்மேன், பரிட்சை என புத்தி சூடாகி இருந்தவர்களுக்கு இந்த சூழ்நிலை இறுக்கத்தைக் குறைத்து எல்லோரின் முகத்திலும் தெளிவை வரவழைத்திருந்தது.

மதிய உணவு நேரம் வரை தங்குவதற்கு கூடாரங்களை அமைப்பதற்கே நேரம் போனது இவர்களுக்கு. கேம்ப் அமைக்க உபகரணங்களை அந்த வனத்தைப் பாதுகாக்கும் அமைப்பே வாடகைக்கு வழங்கி இருக்க, அதை நிர்மாணிப்பது மட்டும் இவர்கள் வேலையானது. பெண்கள் கேம்ப்பிங் பகுதியில் இருந்து சற்று தள்ளி ஆண்கள் பகுதி இருந்தது. இரு பாலருக்கும் தனி தனியாக கழிவறைகள் ஒரு மூலையில் கட்டி இருந்தனர்.

“ஒரு டெண்ட்ல ரெண்டு பேர்தான் தங்க முடியுமாம் ஜண்டா! நீயும் நானும் ஒன்னா இருந்துப்போம்!” என்றாள் மீனாட்சி.

“ஏன்டி அம்மன், இங்க வந்தும் உன் கூடத்தான் இருக்கனுமா?”

“வேற யார் வேணும் மகாராணிக்கு? உன்னைப் பார்த்து ஈன்னு அடிக்கடி இளிக்கிறானே அந்த லோகா, அவன வேணா சேர்த்துக்கறியா?”

“வேணா அம்மன், கடுப்பு ஹேரே கெளப்பாதே! அவனும் அவன் மூஞ்சுரு மூஞ்சும்!” என கோபப்பட்டவள், டெண்டின் முனையில் ஓங்கி ஆணி அடிக்க, அதுவோ சரிந்து கீழே விழுந்தது.

மற்றவர்கள் எல்லாம் கேம்ப்பை கட்டி முடித்து விட்டு பொருட்களை அடுக்க ஆரம்பித்திருக்க, இவர்கள் இருவர் மட்டும் இன்னும் போராடிக் கொண்டிருந்தனர்.

“தள்ளு!” என முதுகின் பின்னால் நெருக்கமாய் கேட்ட குரலில் கையில் இருந்த ஹேமர் பட்டென கீழே விழ, குனிந்திருந்த மீனாட்சி எழுந்து தள்ளி நின்றுக் கொண்டாள்.

ரஹ்மானும் அவனோடு வந்திருந்த லோகாவும் இவர்களுக்கு டெண்ட்டை அமைக்க உதவினார்கள்.

“ஏம்மா ஹேமா! இந்த குட்டி வீட்டை கட்டவே இந்தப் பாடா இருக்கே உனக்கு, நீ எப்படிமா கல்யாணம் கில்யாணம் செஞ்சு பெரிய வீட்டைக் கட்டி மேய்ப்ப?”

“மேய்க்கற வேலைலாம் என்னைக் கட்டிக்கப் போற எருமை பார்த்துக்கும்! அதைப் பத்தி எந்த எடுபட்ட பயலும் கவலைப்பட வேண்டியதில்ல” என பட்டென சொன்னாள் ஹேமா.

“எருமைக்கு இன்னொரு எருமைத்தான் புருஷனா வரும்னு ஒத்துக்கிட்ட உன்னோட நேர்மைய நான் பாராட்டுறேன்! நீயும் அந்தப் பாவப்பட்ட இன்னோரு எருமையும் நெறைய  கருமையான குட்டிகள பெத்துப் போட்டு நீடுழி வாழ வாழ்த்துறேன்” என்றவனை நோக்கி கல்லை விட்டடித்தாள் அவள்.

“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என தாவி ஓடினான் லோகா.

அவர்களின் அலப்பறையில் மீனாட்சி கலகலவென சிரிக்க, தன்னையறியாமலே ரசனையுடன் அவளைப் பார்த்திருந்தான் ரஹ்மான்.

“சொக்குப்பொடி மீனாட்சி, சொக்கநாதன் நீ இல்லைடி” என சத்தமாக ஹேமா பாட்டை மாற்றிப் பாட தன்னை மீட்டுக் கொண்டவன், வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

தன்னை விட்டு விலகிப் போகும் ரஹ்மானையே மீனாட்சி பார்த்திருக்க,

“அடியே அம்மன்! வேலையைப் பாரு!” என தோழியின் கவனத்தைத் தன் புறம் திருப்பினாள் ஹேமா.

மதிய உணவும், காலை உணவும் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த சின்ன ரெஸ்டாரண்டில் ஆர்டர் கொடுத்திருந்தான் ரஹ்மான். இரவில் அவர்கள் கடை அடைத்து விடுவதால், அதை மட்டும் இவர்களே சமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான பொருட்களையும் கொண்டு வந்திருந்தார்கள். மொத்தம் முப்பது பேர் மட்டும் வந்திருப்பதால் சமாளித்து விடலாம் என எல்லாவற்றையும் சரியாக திட்டம் தீட்டி இருந்தான் ரஹ்மான்.

மதிய உணவு கொண்டு வரப்பட எல்லோரும் ஒன்று கூடினார்கள். கதைப் பேசிக் கொண்டே உணவை உட்கொண்டார்கள் அனைவரும். சாப்பாட்டு நேரம் முடிய,

“இன்னிக்கு கொஞ்சம் ரிலேக்சா இருப்போம் காய்ஸ். மூனு மணிக்கு எல்லோரும் இதே இடத்துக்கு வந்திடுங்க! பஸ்ல ஏறும் போதே உங்க எல்லோருக்கும் ஒரு துண்டு சீட்டு குடுத்தோம்! அதுல எழுதி இருக்கற குறளுக்கு பொருத்தமா ஒரு கதை சொல்லனும். பெஸ்டான மூனு கதைக்கு பரிசு இருக்கு. அதுக்குப் பிறகு அஞ்சு மணிக்கு நீர் வீழ்ச்சில ஒரு மணி நேரம் குளிக்கப் போகலாம். தென் நைட் டின்னர் ஆரம்பிக்கனும். டின்னர் முடிஞ்சதும் சாப்பிட்டு கேம்ப் பயர்ல பாட்டுப் போட்டி! பத்து மணிக்கு தூங்கப் போகனும். இன்னையோட நிகழ்ச்சி நிரல் இதுதான். என்ன கேள்வினாலும் நம்ம டீம்ல உல்ளவங்க கிட்ட கேட்டுக்கலாம்.” என்றதும் எல்லோரும் கலைந்து தங்களது டெண்ட்டுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

செயற்குழு உறுப்பினர்களை மட்டும் பின் தங்க சொல்லிய ரஹ்மான், அவர்களிடம் ஏற்கனவே சொல்லி இருந்த கட்டளைகளை மீண்டும் வலியிறுத்தினான்.

“எந்த நேரமும் உங்க கண்ணு எல்லாம் வந்திருக்கற மத்தவங்க மேல இருந்துட்டே இருக்கனும். எந்த விதமான ஒழுக்கக் கேடான விஷயமும் இங்க நடக்கக் கூடாது! லேடிஸ் கேம்ப் பக்கம் பையனுங்க போகாம பார்த்துக்க, நைட்ல நாம முழிச்சிருந்து காவல் காக்கனும். மூனு ஹவர்க்கு ரெண்டு பேர்னு, டேக் டெர்ன் எடுத்து இதை செய்யனும். இதான் டைம் டேபிள்” என ஒரு தாளைக் கொடுத்தான் ரஹ்மான்.

தனது டைம் டேபிளைப் பார்த்த மீனாட்சிக்கு மெல்லிய புன்னகை வந்தது. அடக்கிக் கொண்டு தனது டெண்டுக்குப் போனாள்.

சரியாக மூன்று மணிக்கு எல்லோரும் திரும்பவும் ஒன்றுக் கூடினார்கள். குறளுக்கு கதை நிகழ்ச்சி சிரிப்பும் கும்மாளமுமாய் போனது. ஒருவர் கதை சொல்லும் போது மற்றவர் அதை வைத்து கலாய்ப்பது, சிட்டுவேஷனுக்கு ஏற்றது போல பாடுவது என அந்த இடமே சிரிப்பால் அதிர்ந்தது. நீர் வீழ்ச்சியில் குளிக்க வந்திருந்த வெளி மக்கள், கஸ்டமென்றால் என்னவென அறியாத அவிழ்த்து விட்ட கன்றுகளைப் போல கும்மாளமடித்த மாணவர் கூட்டத்தைப் புன்னகையுடன் கடந்து சென்றனர்.

கதை நேரம் முடிந்து பரிசும் கொடுக்கப்பட,

“குளிக்கலாம், குளிக்கலாம், குளிக்கலாம்!” என கோஷமெழுப்பினர் மாணவர்கள்.

“ஏங்கடா! நீங்கலாம் ஹாஸ்டல்ல குளிக்கறதே இல்லையா?” என கலாய்த்த லோகாவை குண்டுக்கட்டாக அள்ளிக் கொண்ட பையன்கள், அவன் கதற கதற தண்ணீரில் கொண்டு போய் பொத்தென போட்டார்கள்.

ஜிலு ஜிலு நீர் ஊசியாய் உடலைத் துளைக்க, பற்கள் டைப்படிக்க,

“அடப்பாவி பரதேசிங்களா!” என கத்தினான் லோகா.

படபடவென அவன் அருகே குதித்து மீண்டும் அவனை தொப்பலாக நனைத்தனர் அந்தக் குறும்புக்கார பையன்கள்.

ரஹ்மானும் தலைவன் பொறுப்பை கரையிலேயே விட்டு விட்டு, கட்டவிழ்ந்த காளையாய் தண்ணீரில் குதித்தான். ஒருவர் மேல் ஒருவர் நீர் அடித்து, நீந்தி, கீழே இருந்து காலை இழுத்து தண்ணீரில் மூழ்க வைப்பது என அட்டகாசம் செய்தனர் அடங்காத ஆண் மக்கள்.

பெண்களோ நிதானமாக தண்ணீரில் முங்கி எழுந்து, நீர் கொட்டும் இடத்தில் தலையை நனைத்து, குளிரை விரட்ட கைகளை ஒன்றோடொன்று தேய்த்து, பேசி சிரித்து விளையாடினர். வன அதிகாரிகள் அங்கே வந்து அமர்ந்திருக்க, ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் என டிசிப்ளினாக குளித்தனர்.

நீரில் ஹேமாவோடு விளையாடிக் கொண்டிருந்த மீனாட்சிக்கு, சின்ன வயதில் தன்னைக் காப்பதற்காக நீரில் மூழ்கி சாவின் விளிம்பைத் தொட்டு வந்த ரஹ்மானின் நினைவுகளே அலைக்கழித்தது. அன்று கண்ணில் கண்ணீர் வழிந்தது போல இன்றும் வழிந்தது. சட்டென முங்கி எழுந்தவள், தன் கண்ணீரை நீர்வீழ்ச்சியின் தண்ணீரோடு கலந்தாள்.

ரஹ்மானுக்கும் அதே நினைவுகள்தான் மனதை கசக்கிப் பிழிந்தது.

“ரஹ்மானு! ரஹ்மானு!” என கதறிய குட்டி மீனாட்சியின் கண்ணீர் முகம், இன்று வரை பல நாள் இரவுகள் அவன் தூக்கத்தைக் கலைத்தது போதாதென்று இந்தப் பகல் வேளையிலும் கண் முன்னே வந்து நின்று பாடாய் படுத்தியது. அன்று அவன் கண்ட அவளது கதறலையும், துடிப்பையும், தன் பெயரை ஜபம் போல் உச்சரித்ததையும் சாகும் வரை மறக்க முடியாது அவனால் என நன்றாகவே புரிந்து வைத்திருந்தான் ரஹ்மான். ஆரம்பத்தில் அந்தக் கனவு வரும் போது பதறி எழுபவன், வளர வளர தனக்கான அவளின் கண்ணீரில் சுகமாய் நனைந்துத்தான் போனான். அடிக்கடி வரும் அந்தக் கனவே மீனாட்சியை பசுமரத்தாணி போல அவன் மனதில் பதிய வைத்திருந்தது.

அவன் பார்வை சுற்றி சுழன்று மீனாட்சியைக் கண்டுக் கொள்ள, அவ்வளவு நேரம் அவனையேப் பார்த்திருந்தவள் சட்டென வேறு புறம் திரும்பிக் கொண்டாள். பெருமூச்சுடன் இவனும் தன் நண்பர்களின் புறம் திரும்பிக் கொண்டான்.

தண்ணீரில் ஆடிக் கொண்டிருந்தவர்களை அதட்டி உருட்டித்தான் கிளப்ப முடிந்தது ரஹ்மானால். டெண்டுக்கு போய் உடை மாற்றி வந்தவர்கள், இரவு உணவை தயாரிப்பதில் இறங்கினார்கள். சிம்பிளாக மேகி நூடுல்ஸ், வெட்டி வைத்தப் பழங்கள் என இரவு உணவு முடிந்தது.

அதன் பிறகு சுள்ளிகளையும், கட்டைகளையும் போட்டு நெருப்பு மூட்டி அனைவரும் அந்த இடத்தில் குழுமினார்கள். புதிதாய் வந்திருக்கும் மாணவர்களின் ரத்தம் பிடித்துப் போக, கொசுக்கள் அவர்களையே சுற்றி வந்து காதி(த)ல் பேசியது.

லோகா கிட்டாருடன் அமர,

“நீ பாரேன் அம்மன்! இந்த லோகா, ‘என் இனிய பொன் நிலாவே’ன்னு ஆரம்பிப்பான்” என்றாள் ஹேமா.

அவள் சொல்லி வாய் மூடவில்லை அந்தப் பாடலைத்தான் பாடினான் அவன். மீனாட்சி கண்ணை விரிக்க,

“எதுக்கு இந்த அதிர்ச்சி? அந்தப் படத்துல ப்ரதாப் ஒரு சைக்கோ! அவன மாதிரி இருக்கற இந்த சைக்கோவும் அந்தப் பாட்டத்தான் பாடும்னு நெனைச்சேன்! பாடிருச்சு” என்றாள் ஜண்டா.

“ஐயோ ஜண்டா, அப்போ உன்னையும் கடத்திட்டுப் போயிடுவானா இவன்?”

“சீச்சீ! நான் இருக்கற சைஸ்சுக்கு என் விரல கூட நகர்த்த முடியாது இவனுக்கு! நானே பாவப்பட்டு அவன் கூட போனாத்தான் உண்டு! யூ டோண்ட் வோரி” என்றாள் இவள்.

“எனக்கு என்னமோ உன்னைக் கட்டிக்கிட்டு கோமாவுக்கு போக போறது இவனாத்தான் இருக்குமோன்னு ஹெவியா டவுட் வருது”

“நோ சான்ஸ்”

“பார்ப்போம், பார்ப்போம்”

லோகா பாடி முடிக்க, பாட்டுக்கு பாட்டு பாடலாம் என ஒரு மனதாய் முடிவானது. பெண்கள் ஒரு குழுவாகவும், ஆண்கள் ஒரு குழுவாகவும் போட்டியை ஆரம்பித்தனர். ஆண்கள் சைட்டில் இருந்து,

“புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது” என ஆரம்பிக்க, பெண்கள் சைட்டில் இருந்து,

“தென் மதுரை வைகை நதி தினம் பாடும்” என நிறுத்த,

அதன் பிறகு வரிசையாய் போட்டிப் போட்டுக் கொண்டு பாடினார்கள். ரஹ்மான் க வரிசையில் முடிந்த பாட்டுக்கு,

“காதலுக்கு கண்கள் இல்லை மானே

கண்ணுக்குள்ளே உன்ன வச்சேன் நானே

காதல்..” என முடிக்க,

“ராசாவே உன்னை விட மாட்டேன்

என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்” ரஹ்மான் முகத்தைப் பார்த்தப்படி பாடினாள் மீனாட்சி.

“சாலாவா(பிழையாக) பாடிட்டா உங்காளு! நாங்கத்தான் ஜெயிச்சோம்” என ஆண்கள் சைட்டில் கையடித்து குதூகலித்தார்கள்.  

பெண்கள் எல்லோரும்,

“என்ன வோர்ட்டுக்கு என்னப் பாட்டு பாடிருக்க நீ” என  தோற்றுப் போன கடுப்பில் மீனாட்சியைப் புரட்டிப் போட்டு எடுக்க, சிரிப்புடன் அடியை வாங்கிக் கொண்டாலும், சோகத்தை சுமந்திருந்த விழிகள் ரஹ்மானையே பார்த்திருந்தன.

அவள் கண்கள் காட்டிய கலக்கம் இவனையும் தாக்க, சட்டென எழுந்து அந்த இடத்தை விட்டகன்றான் ரஹ்மான். லோகா நிகழ்ச்சியை முடித்து வைத்து எல்லோரையும் படுக்க அனுப்பி வைத்தான்.

சரியாக பின்னிரவு ஒரு மணிக்குப் போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்தாள் மீனாட்சி. குளிருக்கு ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டவள், தனது டார்ச்லைட்டை எடுத்துக் கொண்டு காவல் வேலைக்கு வெளியே வந்தாள். அங்கே கேம்ப்பயரின் முன்னே அவள் வரும் பாதையைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் ரஹ்மான்.

(ஜீவன் துடிக்கும்….)

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். இதே மாதிரி காம்ப்பிங் நான் நெறையவே போய்ருக்கேன் என் சின்ன வயசுல. இப்போ என்னமோ அதெல்லாம் நெனைச்சுப் பார்த்தா நானாடா அதுன்னு இருக்கு!!! ஒரு கேம்ப்ல ஆபிசர்ஸ்  மார்ச்சிங் செய்ய எங்க எல்லாரையும் வரிசையா நிக்க வச்சாங்க. யாரும் நகரவேக் கூடாது. எனக்கு தொடைல செம்ம வலி. என்னன்னு தெரில. லேசா அசைஞ்சதுக்கு, ஒரே கத்து, சொன்னது புரியலையா, தண்ணில புடிச்சுத் தள்ளவான்னு! தாங்கிட்டே நின்னேன். மார்ச்சிங் முடிஞ்சு கேம்ப்ல போய் பார்த்தா ஒரே ரத்தம். மிஸ்டர் அட்டை உள்ள புகுந்து கடிச்சு வச்சிருக்காரு. ரத்தத்த நல்லா குடிச்சிட்டு அவரே கீழ விழுந்துட்டாரு. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு எனக்கு. நம்ம ரத்தம் அவருக்கு ரொம்ப புடிச்சிருக்கு, பரவால்ல தானமா போகட்டும்னு மனச தேத்திக்கிட்டேன்! ஹஹஹ. இப்படி நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. 

அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ்..லவ் யூ ஆல்)