Jeevan Neeyamma–EPI 22

171916099_840757923178210_3424615682123961255_n-18f0058c

Jeevan Neeyamma–EPI 22

அத்தியாயம் 22

எமன் வந்து அழைத்தால் கூட என்னவனின் முகத்தைக் கடைசியாய் ஒரு முறை பார்த்து விட அவகாசம் கேட்பேன் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

“ஏன்டி அம்மன், உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? தூக்கம் தள்ளுதுடி, மீட்டிங்க முடிச்சு விடு!” என மீனாட்சியின் அருகே அமர்ந்திருந்த ஹேமா மெல்லியக் குரலில் முனகினாள்.

அந்த வருடம், தமிழ் கழகத்தின் தலைவியாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள் மீனாட்சி. ரஹ்மான் காட்டிக் கொடுத்த பாதை வழி ஒவ்வொரு வருடமும் தமிழ் கழகத்துக்காக மட்டுமல்லாது, வேறு இயக்கங்களிலும் சேர்ந்து பாடுபட்டத்தில் இவளும் பல்கலைக்கழகத்தில் பிரபலமாகி இருந்தாள். புறப்பாட நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும், படிப்பிலும் கவனமாய் இருந்ததால், ப்ரோபெசர்களின் பேவராட் மாணவியாகவும் திகழ்ந்தாள்.

அடுத்து இவர்கள் நடத்தப் போகும் பட்டிமன்ற நிகழ்ச்சியைப் பற்றி விவாதிக்கத்தான் அந்த இரவு நேரத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தாள் மீனாட்சி.

“உன்னைப் போய் என் உதவிக்குன்னு துணை தலைவரா தேர்தெடுத்தாங்க பாரு, அவங்கள மிதிக்கனும்டி ஜண்டா.”

“என்னை மிதித்தாலும் மீண்டும் குதித்து வருவேன்! சூரியனைப் போல உதித்து வருவேன்” என அதே மெல்லியக் குரலில் முழக்கமிட்டாள் ஹேமா.

“மூடு! இன்னும் பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்” என்றவள், யாருக்கு என்ன வேலை என பிரித்துக் கொடுத்து விட்டு மீட்டிங்கை நிறைவு செய்தாள்.

“பாய் சீனியர்!” என கத்தியபடியே கிளம்பினார்கள் மற்ற பதவிகளை வகிக்கும் மாணவர்கள்.

“நாமளும் சீனியர் ஆகிட்டோம்ல அம்மன். நாட்கள் எவ்ளோ வேகமா நகருது பாரேன்!” என சொல்லியபடியே தனது கன்ச்சில்(மலேசிய கார்) காரை ஸ்டார்ட் செய்தாள் ஹேமா.

இந்த சில வருடங்களில் நாட்டிலும் சரி, மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் சரி பல முன்னேற்றங்கள் வந்திருந்தன. வைடூகே(y2k)வின் பயத்தைக் கடந்து மில்லேனியத்தில் அடி எடுத்து வைத்த பொன்னான நாட்கள் அவை. இண்டெர்நேட், இமேயில் எல்லாம் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் ஊடுருவி தனது ஆட்சியை நிலை நாட்டப் போராடிய கோல்டன் டைம் அது! அநாவாசியம் என சொல்லப்பட்ட கைத்தொலைபேசி அத்தியாவாசிய பொருளாக மாறி வந்த காலகட்டமது. மீனாட்சிக்கும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றை வாங்கித் தந்திருந்தார்கள்.

பேசி சிரித்தப்படி ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தார்கள் தோழிகள் இருவரும். மீட்டிங்குக்கு முன்னமே சாப்பிட்டிருந்ததால், ஹேமா தூங்க ஆயத்தமாக, மீனாட்சியோ படிக்க அமர்ந்தாள்.

“மனுஷன ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க விட மாட்டியா நீ?” என கடிந்தவாறே கட்டிலில் அமர்ந்தாள் ஹேமா.

“ஏன்டி ஏன்? உனக்கு டிஸ்டர்ப் ஆகக் கூடாதுன்னுதானே நான் பாட்டுக்கு டேபிள் லைட் போட்டு உட்கார்ந்துப் படிக்கறேன்.”

“அது பிரச்சனை இல்ல அம்மன்! நீ இப்படி விழுந்து விழுந்து படிச்சா, எனக்கு எப்படி தூக்கம் வரும். மைண்ட் ஃபுல்லா ஐயோ இந்த அம்மன் படிக்கறாளே, நாம தூங்கறமே! இவ நம்மள விட மார்க் ஜாஸ்தி எடுத்துருவாளேன்னு ஓடிட்டே இருக்கும்.”

“அப்போ நீயும் உட்கார்ந்துப் படி!”

“அதெல்லாம் முடியாது! நீ படிக்காம வந்து தூங்கு!”

“தூக்கம் வந்தா, தூங்க மாட்டேனாடி!” என சொன்னவளுக்கு தன்னையும் மீறி குரல் கமறியது.

எழுந்து வந்து, நாற்காலியில் அமர்ந்திருந்த தோழியை தன் வயிற்றோடு கட்டிக் கொண்டாள் ஹேமா!

“என்னைக்கும் இல்லாம இன்னிக்கு என்னமோ அவன் ஞாபகம் ரொம்பப் படுத்துதுடி! என்னை நெனைச்சிட்டே இருக்கான் போல!” என்றவளுக்கு கண்ணீர் பொல பொலவென வழிந்தது.

பல சமயங்களில் சத்தமில்லாமல் தனது துக்கத்தை கண்ணீரில் வெளியேற்றினாலும் சில சமயங்களில் தங்களின் காதலுக்கு சாட்சியான ஹேமாவின் துணையை நாடுவாள் மீனாட்சி. அவளும் தோழிக்கு ஆதரவாகவே இருப்பாள். சில வருடங்கள் கடந்திருந்தும் இன்னும் ரஹ்மானையே நினைத்து உருகி மருகிக் கிடக்கும் தோழியை நினைத்து ஹேமாவுக்கு பயம் வரவே செய்தது.  

“இன்னும் எத்தனை நாளுக்குடி இப்படியே இருப்ப?”

“இந்த உடம்புல உசுரு இருக்கற வரை!”

“பைத்தியம் மாதிரி உளறாதே அம்மன்! கஸ்டம்தான், இசையை மறக்கறது கஸ்டம்தான்! முதல் காதலை மறக்கறது கஸ்டம்தான்! அதுக்குன்னு இப்படியே இதுலயே உழண்டுட்டு இருப்பியா? மறக்க முயற்சி செய் அம்மன்.”

“சரிடி பாட்டி! கண்டிப்பா ரஹ்மான தூக்கிப் போட்டுட்டு ஒரு தேவாவ, இல்லை ஒரு வித்தியாசாகர புடிக்கறேன்” என கண்களைத் துடைத்தப்படி மெலிதாய் புன்னகைத்தாள் மீனாட்சி.

தான் இன்னும் பேசுவதை தடுக்கவே இப்படி பாதியில் பேச்சை வெட்டுகிறாள் என புரிந்துக் கொண்ட ஹேமா, பெருமூச்சுடன் தனது கட்டிலில் போய் படுத்தாள்.

நடு இரவில் மெல்லிய குரலில் பாடும் சத்தம் கேட்க, கண் விழித்துப் பார்த்தாள் ஹேமா. அங்கே ரஹ்மான் ஆரம்பத்தில் கொடுத்திருந்த கடிதத்தை நெஞ்சோடு கட்டிக் கொண்டு,

“பிரிந்தே வாழும் நதிக்கரை போல

தனித்தே வாழும் நாயகி

இணைவது எல்லாம் பிரிவதற்காக

இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக

மறந்தால்தானே நிம்மதி!!” என கண்ணீர் குரலோடு பாடிக் கொண்டிருந்தாள் மீனாட்சி. ஹேமாவுக்கும் கண்களில் கண்ணீர் வழிந்தது.(என்னமோ இந்தப் பாட்டு வரி எழுதறப்போ எனக்கும் கண்ணுல தண்ணி வந்துடுச்சு. கண்டிப்பா இந்தப் பாட்டக் கேளுங்க! குரலும் இசையும் பாடல் வரியும் அப்படியே மனசை பிசையும்.) சோகத்தில் சுகம் காணுபவளை தொல்லை செய்யாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள் ஹேமா.  

காலையில் எழுந்தவுடனே மீனாட்சிக்குப் போன் வந்தது. நம்பரைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். மனதிலும், புத்தியிலும் அழியாத சித்திரமாய் பதிந்துப் போயிருந்த எண்கள் அவை. இத்தனை வருடங்கள் இல்லாமல் ஏன் திடீரென என எண்ணியப்படியே, அட்டேண்ட் செய்து காதில் வைத்தவள் அமைதியாக இருந்தாள். அந்தப் பக்கமும் அமைதிதான்.

ஐந்து நிமிடங்கள் நீடித்த அந்த மௌனம், அந்தப் பக்கம் வந்த க்ளிக் எனும் சத்தத்தில் நின்றுப் போனது. அந்த போன் கால் நின்றவுடன், ஆறுவிடம் இருந்து போன் வந்தது இவளுக்கு. ஆறு சொன்ன செய்தியில் கட்டிலில் பொத்தென அமர்ந்தாள் மீனாட்சி. கண்ணீர் அதன் பாட்டுக்கு வழிந்தது.

“என்ன அம்மன்? என்னாச்சு?”

“மாக்ச்சிக்!!!” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.

மீனாட்சியின் போனை எடுத்து லாஸ்ட் கால் பார்த்து போன் செய்ய, ஆறுமுகம் இவளிடமும் விஷயத்தைப் பகிர்ந்துக் கொண்டான். ஒரு பெருமூச்சுடன்,

“அம்மன், கெளம்பு! நாம போகலாம்” என தன் தோழியைத் தேற்றி தனது காரிலேயே அழைத்துப் போனாள் ஹேமா.

அங்கே பகாங்கில் இருந்த ரஹ்மானுக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தது. நடக்கும் என தெரிந்த ஒரு விஷயம்தான். மனதை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தான்தான்! ஆனாலும் நிஜத்தில் நிகழும் போது மனது வலிக்கத்தானே செய்கிறது.

“ஈபூ!!!” என மெலிதாய் முனகியவன், தனது உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான் கிளம்ப.

இத்தனை நாள் மீனாட்சியின் நம்பரை ஆறுவிடமிருந்து வாங்கி வைத்திருந்தாலும் இன்றுதான் அழைத்திருந்தான். என்னவோ தனது துயரத்தை அவளிடம் கொட்டி ஒரு மூச்சு அழ வேண்டும் போல இருந்தது. ஆனாலும் பேச நா எழவில்லை. அவளும் அமைதியாய் இருக்க, அவள் மூச்சு சத்தத்தில் தன் மனம் சமன் பட்டதும் அழைப்பைத் துண்டித்து விட்டான் இவன்.

அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் லோனில் இவன் வாங்கி இரு வாரங்களோ ஆகியிருந்த ப்ரோட்டோன் ஈஸ்வரா காரைக் கிளப்பினான் ரஹ்மான். காரில் அமர்ந்தவனுக்கு மனமெல்லாம் போன தடவை ஈபூவைப் பார்த்த நிகழ்வுகளே நிறைந்திருந்தன.  

இரவு தூக்கத்திற்காக வீல்சேரில் இருந்து தனது ஈபூவைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தான் ரஹ்மான். உடலில் உள்ள சதையெல்லாம் காணாமல் போய் வெறும் எலும்புதான் துருத்திக் கொண்டிருந்தது அமீனாவுக்கு.

“அபாங்! எனக்கு தே ஓ குடிக்கனும் மாதிரி இருக்கு! போட்டுத் தரீங்களா?” என அவர் அப்துல்லாவைப் பர்த்துக் கேட்க, மனைவி மகனிடம் தனித்துப் பேச விரும்புகிறாள் என புரிந்துக் கொண்ட அப்துல்லா சரியென தலை அசைத்து ரூமில் இருந்து வெளியேறினார்.

தாயின் முகமருகே முட்டிப் போட்டு அமர்ந்திருந்த ரஹ்மானின் கையைப் பற்றி முத்தமிட்ட அமீனா,

“இன்னும் மீனாட்சிய மறக்க முடியலையா ரஹ்மான்?” என கேட்டார்.

தாயின் கேள்வியில் கண்ணீர் வழிந்தது இவன் கண்களில். மகன் படும் துன்பத்தைப் பார்த்த அமீனாவுக்கும் கண்ணீர் வந்தது.

“அழதீங்க ஈபூ!” என அவர் கண்ணீரைத் துடைத்து விட்டான் ரஹ்மான்.

வேலைக்குப் போன புதிதில் இவனைத் திருமணம் செய்ய சொல்லி கேட்க ஏதேதோ காரணம் சொல்லி மறுத்திருந்தான். மகனின் கண்ணை எட்டாத சிரிப்பும், அடிக்கடி தன் அருகாமையை நாடும் பாங்கும் அமீனாவுக்கு என்னவோ சரியில்லை என புரிந்துப் போனது. அப்துல்லா இல்லாத சமயம் அவனை அதட்டி உருட்டி விஷயத்தை வாங்கி இருந்தார் இவர்.

“காதல் யார் மேல எப்ப வரும்னே தெரியாது ரஹ்மான். மீனாட்சி இங்க வந்திருந்தப்பவே உன் பார்வை அவ மேல பதிஞ்ச விதத்தப் பார்த்தேன்! நீயே அதுல இருந்து வெளிய வந்திடுவன்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி வெளிய வந்திட்டாலும், உன் தவிப்ப என்னால புரிஞ்சுக்க முடியுதுடா ரஹ்மான். உங்க ஆயாவோட மகனான நீ இப்படி இல்லாம வேற எப்படி இருப்ப! அந்தப் பொண்ண நெனைச்சாலும் எனக்குப் பெருமையா இருக்குடா! இந்தச் சின்ன வயசுல எவ்ளோ தெளிவா முடிவெடுத்திருக்கா! இனிமே உன்னை கல்யாணத்துக்கு வற்புறுத்த மாட்டேன் கண்ணா! என் சந்தோஷத்துக்காக உன் நிம்மதியையும் இன்னோரு பொண்ணோட வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்க விரும்பல நான். திருமணம் ஒரு புனிதமான பந்தம். மனச ஒருத்திக்குக் குடுத்துட்டு உடம்ப இன்னொருத்திக்குக் குடுக்கறது பாவம் ரஹ்மான்! அந்தப் பாவத்த என் மகன் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். எப்போ உன்னால மீனாட்சிய மறக்க முடியுதோ, அப்போ நிக்காஹ் செஞ்சிப்பேன்னு வாக்குக் கொடு” என அப்பொழுதே அவனிடம் வாக்கு வாங்கி இருந்தார் அவர்.

மகனின் முகத்தை வருடியவர்,

“வாழ்க்கை எப்பவும் துன்பத்தை மட்டும் கொடுக்காது ரஹ்மான். கூடிய சீக்கிரம் உனக்கு இன்பத்தையும் கடவுள் கொடுப்பாரு. ஈபூ உனக்காக தினம் துவா செய்யறேன்! தாயோட உருக்கமான வேண்டுதல் கண்டிப்பா கடவுளோட காதுக்குப் போகும் ராஜா!” என்றவர் மகனின் கண்ணீரைத் துடைத்தார்.

“ஈபூ!” என்றவன் தாயின் கரத்தைத் தன் கண்ணீரால் கழுவினான்.

கண்கள் சொருகும் வரை அவன் தலையை வருடியபடியே இருந்தார் அவர். தூக்கம் தழுவும் முன்,

“ஆயாவா பத்திரமா பார்த்துக்கோடா கண்ணா” என மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.

நேற்றைய தினம் போனில் பேசிய போது கூட சந்தோஷமாகவே பேசினார் அமீனா. விடிகாலையில் தான் தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருந்தது. காரை செலுத்திக் கொண்டிருந்த ரஹ்மானுக்கு இப்பொழுது கூட ஈபூ தலையை வருடி விட்டதை உணர முடிந்தது.

“ஈபூ! ஈபூ!” என வாய் மெல்ல முணுமுணுத்தது.

ஆறுவும் அழகுவும் பினாங்கில் இருந்து கிளம்பி இருந்தார்கள். மீனாட்சி ரஹ்மானின் வீட்டை அடைந்த நேரம் சொந்தக்காரர்கள் சிலர் வந்திருந்தனர். ஆனால் ரஹ்மான் இன்னும் வந்திருக்கவில்லை.

இவளைப் பார்த்ததும் கண் கலங்கினார் அப்துல்லா! அவர் அருகே போய் நின்றவளுக்கோ நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

“ஜாங்கான் நாங்கிஸ் சி கெச்சிக்”(அழாதே சின்னவளே) என தன் துக்கத்தையும் மீறி அவளை சமாதானப்படுத்தினார் அப்துல்லா.

அமீனாவின் உடல் குளிப்பாட்டப்பட்டு, வெள்ளை துணியில் முழுதாய் மூடி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் சமூகத்தில் நம்மைப் போல உடலைக் காட்சிக்கு வைக்க மாட்டார்கள். ஈமக் காரியங்களை சீக்கிரமாக செய்து முடித்து விடுவார்கள். சத்தமிட்டு ஓலமிட்டு அழ மாட்டார்கள். இறப்புக்கென்று இருக்கும் வேதத்தை ஓதி இடுகாட்டுக்கு உடலை எடுத்து சென்று விடுவார்கள். மலாய்க்காரர்கள் உடலை தகனம் செய்யமாட்டார்கள். ஏழடிக்கு குழி தோண்டி புதைத்து விடுவார்கள். ஆண்கள் மட்டுமே இந்த சடங்குகளை செய்ய முடியும். நெருங்கிய சொந்தத்தினர் வேதம் ஓதி ஒவ்வொரு பிடி மண்ணாக மூன்று தடவை குழியில் கிடத்தி இருக்கும் உடலின் மீது போடுவார்கள். இறந்தவரின் உடல்  புனித தளமான மெக்காவை நோக்கி குழியில் கிடத்தப்பட்டிருக்கும். அதன் பிறகே குழி மூடப்படும். சில நாட்கள் ஆனதும் சின்னதாய் கல்லறை கட்டி அதற்கு பாத்து நிசான் (கல்லறை கல்) என சொல்லப்படும் வெள்ளை நிறக் கல்லில் மறைந்தவர் பெயர் எழுதி வைப்பார்கள்.

ரஹ்மானின் யூனிவர்சிட்டி நண்பர்களோடு லோகாவும் வந்திருந்தான். ரஹ்மான் வந்ததும் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன. தனது ஆயாவை கட்டிக் கொண்டு விசும்பினான் ரஹ்மான். அவனது முதுகை தடவிக் கொடுத்த அப்துல்லாவும் கண் கலங்கினார். தாயின் உடல் கிடத்தி இருக்கும் இடத்தின் அருகே வந்து அமர்ந்தவன், வேதங்கள் ஓத ஆரம்பித்தான். அவனோடு அப்துல்லாவும் மற்ற சொந்தக்காரர்களும் சேர்ந்துக் கொண்டார்கள். ஓதி முடித்தவன், நிமிர்ந்து எதிரில் அமர்ந்திருந்த மீனாட்சியைப் பார்த்தான். அவளைப் பார்த்ததும் கண்கள் மீண்டும் கலங்க சட்டென எழுந்துக் கொண்டான் அவன்.

அதன் பிறகு எல்லாமே வேகமாய் நடந்தேறின. இவர்கள் இடுகாட்டுக்குப் போன ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் வந்திருந்தார்கள் ஆறுவும் அழகுவும்.

வீட்டிற்கு வந்து குளித்து விட்டு வந்த ரஹ்மான், பின் கட்டின் படியிலேயே அமர்ந்து விட்டான். அப்துல்லா ஹாலில் நின்று வந்திருந்த மக்கள் தெரிவித்த இரங்கலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஹேமா! நான் பாத்ரூம் போய்ட்டு வரேன்டி! எங்க அப்பா பாக்ச்சிக் கிட்ட பேசிட்டு இருக்காரு! அவர் கேட்டா சொல்லிடு!” என சொல்லி விட்டு மடமடவென பின் கட்டுக்கு விரைந்தாள் மீனாட்சி.

எங்கேயோ வெறித்தப்படி அமர்ந்திருந்த ரஹ்மானைப் பார்த்ததும் இவளுக்கு மனதை பிசைந்தது. மெல்ல படி இறங்கி அவன் அமர்ந்திருந்த படிக்கு கீழ் படியில் உட்கார்ந்துக் கொண்டாள். அவள் வந்ததை கவனித்தவன் அமைதியாய் அமர்ந்திருந்தான். இவளும் அமைதியாய் முன்னே பார்த்தப்படி அமர்ந்திருந்தாள். சில விநாடிகளில் அவன் அருகே நகர்ந்து வருவது தெரிந்தும் அமைதியாய் இருந்தாள். அவன் முகம் தன் தோளில் பதிந்தப் பொழுதும் அதே அமைதிதான். அவன் கண்ணீர் ஆறாய் பெருகி தன் முதுகையும் மார்பையும் நனைத்தப் போதும் அதே அமைதிதான் அவளிடம்.   

தோள் கொடுப்பான் தோழன். இங்கே ரஹ்மானுக்கு தோள் கொடுத்தாள் தோழி. துணைவி எனும் பதவியை அடைய முடியாமல் சபிக்கப்பட அவனின் உயிருக்குயிரான தோழி!

 

(ஜீவன் துடிக்கும்…..)

 

(போன எபிக்கு நெறைய பேர் கமேண்ட் போட்டிருந்தீங்க..சைலண்டா இருந்தவங்க கூட வெளி வந்திருந்தீங்க! அப்பவே புரிஞ்சது எவ்ளோ கஸ்டமா இருந்திருக்கும் உங்களுக்குன்னு. எனக்குமே ரொம்ப கஸ்டமாதான் இருக்கு. ரஹ்மானும் மீனாட்சியும் என் மண்டைக்குள்ள குடையறாங்க. சரியா தூங்கக் கூட முடியல! ஆரம்பிக்கும் போதே எமோஷனல் ரோலர் கொஸ்டர்னு சொன்னேன். இன்னும் சில எபிகள் தான். ப்ளீஸ் என்னோட கைக்கோர்த்து வாங்க, ஒன்னா சமாளிக்கலாம்! நன்றி டியர்ஸ் உங்க ஆதரவுக்கு. லவ் யூ ஆல் சோ மச்!!!!!)

Leave a Reply

error: Content is protected !!