Jeevan Neeyamma–EPI 25(FINAL)

171916099_840757923178210_3424615682123961255_n-7460ca4d

Jeevan Neeyamma–EPI 25(FINAL)

அத்தியாயம் 25

கடனென்ற சொல்லே பிடிக்காது எனக்கு. நான் கொடுத்த முத்தக்கடனை வட்டியும் முதலுமாய் உடனே திருப்பிக் கொடு என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

“ரஹ்மான், நான் முதல்ல போய் பேசிட்டு உன்னைக் கூப்படறேன்! நீ அதுக்குப் பிறகு வந்தா போதும்!”

மீனாட்சியின் வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளி காரை பார்க் செய்திருந்தான் ரஹ்மான். பாரமாய் கனத்த தலையை சம்மதமாய் ஆட்டியவன், காரின் உள்ளேயே அமர்ந்துக் கொண்டான். மகனது கையைப் பற்றி அழுத்திக் கொடுத்த அப்துல்லா காரை விட்டு இறங்கினார்.

ரஹ்மான் சுட்டிக் காட்டி இருந்த வீட்டை நோக்கி நடந்தார் அப்துல்லா. கேட்டில் இருந்த பூட்டை ஆட்டி,

“அழகு!” என இவர் குரல் கொடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்தார் அழகு.

கேட்டை திறந்து விட்ட அழகு, அப்துல்லாவைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் ஜீவனில்லாததை கண்டுக் கொண்டார் இவர்.

உள்ளே வந்த அப்துல்லா, ஆறுவைத் தவிர வீட்டின் அங்கத்தினர் அனைவரும் அங்கே இருந்ததைப் பார்த்து பொதுவாய் வணக்கம் சொன்னார்.

“உக்காருங்க அண்ணா!” என உபசரித்தார் ஈஸ்வரி.

அப்துல்லாவும் அமைதியாய் அமர்ந்துக் கொண்டார். அவர் அருகே அழகுவும் அமர்ந்துக் கொண்டார். ராக்கு அப்துல்லாவைப் பார்வையால் துளைத்தப்படியே தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். தூங்கும் மகனுடன் ராதிகா ரூமில் இருக்க, முருகன் சுவரோரமாய் சாய்ந்து நின்றிருந்தான்.  

அப்துல்லாவைப் பார்த்ததும் அதிர்ச்சியானாள் மீனாட்சி. அவர் வருவதைப் பற்றி அவளுக்கு யாருமே சொல்லி இருக்கவில்லை. என்னவோ நடக்கப் போகிறது என மனம் அடித்து சொல்ல, அவள் சின்ன இதயத்தால் அந்த வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கண்கள் தானாக வாசலை நோக்கியது ரஹ்மானும் வந்திருக்கிறானா என அறிய! அவன் வந்ததற்கான அறிகுறி தென்படாததால் சமையலறைக்குப் போனாள் இவள்.

எல்லோரும் ஒருவர் முகத்தைப் ஒருவர் பார்த்தப்படி இருக்க, கையில் ஒரு கிளாஸ் ஜூசுடன் வந்தாள் மீனாட்சி. அப்துல்லாவை நெருங்கியவள், அவர் முன்னே முட்டிப் போட்டு அமர்ந்து, ஜூசை மேசையில் வைத்து விட்டு, அவர் கைப் பற்றி அவர்கள் முறையில் சலாம் செய்தாள். அவள் செய்கையை அந்தக் குடும்பமே அமைதியாய் பார்த்திருந்தது.

“நல்லா இருக்கியா சி கெச்சிக்?” என கேட்டவர் அவள் நிமிர்ந்ததும் அதிர்ந்துப் போனார்.

அவள் கன்னத்தைத் பற்றி உற்றுப் பார்த்தவருக்கு அவ்வளவு கோபம் வந்தது.

“என்னதிது அழகு? புள்ள மேல ஏன் கையை வச்சீங்க? நான் வந்ததும் பேசி தீர்த்துக்காலாம்னு சொன்னனா இல்லையா? இதென்ன பெண் பிள்ளையை அடிக்கற பழக்கம்?” என படபடவென பொரிந்தார்.

தனக்காக அப்துல்லா பேசவும், சலுகையாய் அழுகை வந்தது மீனாட்சிக்கு. கண்களில் கண்ணீர் வழிய,

“பாக்ச்சிக்” என்றவளை,

“அழாதம்மா!” என சமாதானப்படுத்தினார் அப்துல்லா.

அழகு மனைவியைப் பார்க்க, ஈஸ்வரி நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்துல்லாவின் முன் மண்டியிட்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் தனது மகளைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தார்.

அப்துல்லா ஜூசை அடுத்து மீனாட்சியிடம் கொடுத்து,

“குடிம்மா! குடிச்சிட்டு வந்து என் பக்கத்துல உட்காரு பேசலாம்” என்றார்.

வேண்டாமென தலையசைத்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து அவர் அருகே அமர்ந்துக் கொண்டாள். அப்துல்லா பேச வாயைத் திறக்க,

“நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்குப் புரியுது பாக்ச்சிக்! நீங்க பேசறதுக்கு முன்ன நான் கொஞ்சம் பேசிடறேன் ப்ளிஸ்!” என பாவமாய் அப்துல்லாவைப் பார்த்தாள் மீனாட்சி.

பேசு என்பது போல தலையசைத்தார் அவர்.

“எனக்கு எங்கப்பாவ ரொம்பப் பிடிக்கும்!” என தொண்டையடைக்க சொன்னாள் இவள்.

“அதுதான் எல்லாருக்குமே தெரியுமேம்மா” என்றார் அப்துல்லா.

“அவருக்காகத்தான் கஸ்டப்பட்டு படிச்சேன்! அவருக்காகத்தான் டீச்சரானேன்”

“சரிம்மா!”

“அவர் கேட்டா என் உசுரையும் குடுப்பேன்” என தன் தகப்பனைப் பார்த்தவாறே சொன்னாள் மீனாட்சி.

மகளின் கூற்றில் அழகுவுக்கு கண்கள் கலங்கியது.

“ஆனா அவர் கேக்கறது என் ரஹ்மானோட உயிர! அத எப்படி நான் எடுத்துக்கங்கன்னு சொல்லுவேன்?”

அனைவரும் புரியாமல் அவளைப் பார்க்க,

“நாங்க ரெண்டு பேரும் காதல் வேணாம்னு பிரிஞ்சு இருக்கல! நீங்கலாம் வேணும்னு தான் பிரிஞ்சி இருக்கோம்! எங்க காதலுல சுயநலம் இல்ல! அம்மா வேணும், அப்பா வேணும் எல்லோரும் வேணும்னு உங்களோட நலம்தான் முதல்ல இருக்கு.” என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,

“நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டா அவன் எனக்காக சந்தோஷப்படற மாதிரி காட்டிக்கிட்டாலும், மனசால மரிச்சுப் போயிடுவான். அதே மாதிரி தான் நானும்! ரஹ்மான் இன்னொருத்திய கல்யாணம் செஞ்சிக்கிட்டா என்னால தாங்கிக்கவே முடியாது! உள்ளுக்குள்ள வெந்து, நொந்து சீக்கிரமா செத்தேப் போயிடுவேன்! உங்க இனம், மதம்னு எல்லாத்தையும் நாங்க மதிக்கறோம்! அதே மாதிரி எங்களோட காதல மதிச்சி எங்கள இப்படியே விட்டுருங்க! எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு, என் ரஹ்மான கொன்னுடாதீங்க!” என்றவளுக்கு அப்படி ஒரு அழுகை.

“எப்படி ஆயா சொல்லுவேன்! எப்படி சொல்லுவேன் நான்? நான் உனக்கு வேணம்னு சொன்னதுலயே அவ பாதி செத்துட்டா! இன்னொருத்தன கட்டிக்கன்னு சொன்னா முழுசா செத்திடுவா ஆயா! என்னால அது முடியாது!” என மகன் வலியோடு சொன்னதை நினைத்துக் கொண்ட அப்துல்லாவுக்கு மனம் கனத்துப் போனது.

ஒருத்தரை ஒருத்தர் இவ்வளவு புரிந்து வைத்திருக்கும் இந்த ஜோடி சேர முடியாமல் தவிப்பதைப் பார்த்து அப்துல்லாவுக்குமே மனம் கலங்கிப் போனது.

மகளின் அழுகையை அமைதியாகவே பார்த்திருந்தார் அழகு. ஆசை ஆசையாய் சீராட்டி வளர்த்த மகள் கண்ணீரில் கரைவதை தாங்க முடியவில்லை அவரால். காலகாலமாய் ரத்ததில் ஊறிப் போயிருக்கும் மதத்தையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. மகளா மதமா என உள்ளுக்குள் போராடிக் கொண்டிருந்தார் அழகு.

அந்த நேரம் அவர்களின் பக்கத்து வீட்டுப் பையன் வெளியே இருந்து,

“முருகாண்ணா! ஆறுண்ணா யாரோ ஒருத்தர ரோட்டுல போட்டு அடிச்சிட்டு இருக்காரு” என குரல் கொடுத்தான்.

அரக்கப் பறக்க எல்லோரும் வெளியே ஓடினார்கள்.

ரஹ்மான் மண் சாலையில் கீழே கிடக்க, அவன் நெஞ்சில் அமர்ந்துக் கொண்டு அவனை சரமாரியாக வெளுத்துக் கொண்டிருந்தான் ஆறுமுகம்.

“துரோகிடா நீ, பச்சைத் துரோகி! எப்படிலாம் நாம ரெண்டுப் பேரும் உயிருக்குயிரா பழகிருப்போம்! அப்படிலாம் பழகிட்டு என் தங்கச்சிக்கு ரூட் போட உனக்கு எப்படிடா மனசு வந்தது? உன்னை நம்பி எத்தனை தடவை, பாப்பாவ பத்திரமா பார்த்துக்கடான்னு சொல்லிருப்பேன்! நீ அவள பாத்துக்கிட்ட லட்சணம் இதுதானா? உன் தங்கச்சி எப்படி இருக்கான்னு அடிக்கடி கேப்பியே, நம்ம தங்கச்சின்னு உன் வாயில இருந்து வந்ததே இல்லைன்னு இப்பத்தாண்டா எனக்குத் தெரியுது! அவ கல்யாணமே வேணான்னு நிக்கறா! இப்போ உனக்கு குளுகுளுன்னு இருக்காடா என் நண்பா?” என கேட்டுக் கேட்டு அடித்தான்.

எல்லாமே தன் தப்புதான் என்பது போல மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுகினாலும் நண்பனை தடுக்காமல் அப்படியே எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டான் ரஹ்மான்.

“மன்னிச்சிடுடா ஆறு! என்னை மன்னிச்சிடு” என முனகினானே தவிர நண்பனை எதிர்க்கவேயில்லை இவன்.

எல்லோருக்கும் முன்னே ஓடி வந்த மீனாட்சி, தன் அண்ணனைப் பிடித்து இழுத்தாள்.

“விடுண்ணா! ரஹ்மானை விடு!”

“போடி அங்கிட்டு!” என்றவன் அவளைத் தள்ளி விட, பொத்தென சாலையில் விழுந்தாள் மீனாட்சி.

எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ ரஹ்மானுக்கு! ஆறுவைப் புரட்டிக் கீழே தள்ளியவன்,

“என்னை அடி, கொல்லு! அதுக்கு எல்லா உரிமையும் உனக்கு இருக்கு! ஆனா என் மீனாம்மா மேல கைய வச்ச, கொன்னுடுவேன்டா!” என சொல்லி பளீரென ஓர் அறை வைத்தான் நண்பனுக்கு.

நண்பனைத் தள்ளி விட்டு முட்டிப் போட்டு நகர்ந்து மீனாட்சியின் பக்கம் போனவன், அவளைத் தொட்டுத் தடவி ஆராய்ந்தான்.

“எங்காச்சும் அடிப்பட்டிருச்சா மீனாம்மா? வலிக்குதா?” என பதறியவன் அவள் கை முட்டியில் கற்கள் குத்தி ரத்தம் வருவதைப் பார்த்து இன்னும் கோபமானான்.

“எருமை டேய்! ஏன்டா அவள தள்ளி விட்ட? ரத்தம் வருதுடா!!!” என மீண்டும் நண்பனை அடிக்கப் பாய, முருகன் வந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“என்னங்கடா டேய்! பாசத்தல புடிச்சாலும் ஒரேடியா புடிச்சிக்கிறீங்க. அடிச்சாலும் ஒரேடிய அடிச்சிக்கிறீங்க!’ என சத்தம் போட்டான் இருவரையும்.

அந்த குடியிருப்பில் இருந்த எல்லோரும் சண்டையைப் பார்க்க கூடி விட்டார்கள்.

“முருகா! கூட்டிட்டு வாடா ரெண்டு பேரையும் வீட்டுக்கு! அங்க வச்சுப் பேசிக்கலாம்” என கட்டளையிட்டார் அழகு.

முருகனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ரஹ்மான், பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து மீனாட்சியின் கை ரத்தத்தைத் துடைத்தான். தனது துப்பாட்டாவை வைத்து அவன் மூக்கில் வழிந்துக் கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்த முயன்றாள் இவள்.

அங்கிருந்த யாரும் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. தங்கள் துணையின் வேதனை மட்டுமே கண்ணையும் கருத்தையும் நிறைத்திருந்தது இருவருக்கும்.

தங்கள் மகளுக்காக துடிக்கும் ரஹ்மானைப் பார்த்த அழகுவுக்கு, தன் உயிர் போனாலும் பரவாயில்லை என மீனாட்சியைக் காக்க பாவாடையை விட்ட சின்ன வயது ரஹ்மான்தான் கண் முன் வந்து நின்றான்.

தன் உடலில் ரத்தம் ஆறாய் கொட்ட, அதை கூட கண்டுக் கொள்ளாமல் மீனாட்சியின் சின்ன காயத்துக்காக துடித்தவனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தார் ஈஸ்வரி.

மகளை தன் பக்கம் இழுத்துக் கொண்ட ஈஸ்வரி,

“வீட்டுக்கு வாயா ரஹ்மானு” என அவனை அழைத்தார்.

அழகுவும் அப்துல்லாவும் வீட்டுக்கு நடக்க, கீழே அமர்ந்திருந்த ஆறுவைக் கைப்பிடித்துத் தூக்கி விட்டான் ரஹ்மான்.

“விடுடா என்னை”

“முடியாதுடா!”

“இனிமே நீ யாரோ நான் யாரோடா!”

“எப்பவுமே நீ என் நண்பன் ஆறுதான்”

“தேஞ்சு போன செருப்பால அடிப்பேன், ஓடிப் போய்டு”

“அதுல நீ சாணிய முக்கி அடிச்சாலும் உன்னை விட்டுப் போக மாட்டேன்டா”

“அடேய், முடியலடா உங்களோட! வீட்டுக்கு வந்து மருந்து போடுங்கடா பக்கிங்களா!” என இருவரையும் தள்ளிக் கொண்டுப் போனான் முருகன்.

கை வைத்தியம் பார்த்து, ராதிகா போட்டுக் கொடுத்த தேநீரைக் குடிக்கும் வரை அமைதியாய் போனது நிலவரம்.

அதன் பிறகு தொண்டையை செறுமினார் அழகு. எல்லோரின் கவனமும் அவரிடம் பாய்ந்தது.

“காலம் காலமா அம்மனுக்காக அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தறவன் இந்த அழகு. என்னால சட்டுன்னு இப்படி ஒரு மாற்றத்த ஏத்துக்க முடியாது அப்துல்லா! அவ சந்தோஷம் உங்க மகன் கூடத்தான்னு நல்லாவே தெரிஞ்சிருச்சு! அதனால என் மகள மனசார உங்களுக்குத் தாரை வார்த்துக் குடுத்துடறேன்! எங்க மீனாட்சி, மினா(மலாய் பெண் பெயர்)வா எங்க கண்ணுக்குப்படாம சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும்” என்றவர் குலுங்கி அழுதார்.

கணவர் அழுகையைப் பார்த்து ஈஸ்வரிக்கும் அழுகை வந்தது. மீனாட்சி வேகமாய் போய் தன் தகப்பனின் கையைப் பற்றிக் கொண்டு கதறிவிட்டாள்.

“என்னை ஒதுக்கி வச்சிடாதிங்கப்பா! என்னால தாங்க முடியாது! வேணாப்பா” என இவள் அழ, ரஹ்மானுக்கு தாங்கவே முடியவில்லை.

“அழகு அழாதீங்க!” என அவரின் கையைப் பிடித்துக் கொண்டார் அப்துல்லா.

சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ராக்கு மெல்ல எழுந்து நின்றார்.

“ஏன்டா படுபாவி! என் பேத்திய கண் காணாம போக சொல்லுவியா நீ? அப்படி அவ என்னடா தப்பு பண்ணிட்டா? மனசுக்குப் புடிச்சவன காதலிச்சா! அது தப்பாடா அழகு? ஆரம்பத்துல இருந்து இப்படி சேர்ந்துப் பழகறது எனக்குப் புடிக்கலனு சொன்னேன்! ஆனா இந்த வீட்டுல யாரும் என் பேச்சைக் கேக்கல! நட்பு, நண்பன்னு நீயும் உன் மவனும் தலையில தூக்கி வச்சி ஆடனீங்க! அப்போலாம் அவங்க மதம், இனம், மொழிலாம் உன் கண்ணுக்குத் தெரியல! இப்போ உன் அருமை மக அந்த மதத்துக்காரன காதலிக்கறான்னு தெரிஞ்சதும் உனக்கு மதம் கண்ணு முன்னாடி வந்து நிக்கிதா? சுயநலம் புடிச்சவன்டா நீ! உன்னைப் பெத்து, வளத்து, இதான் உன் மதம், இதான் உன் மொழின்னு கத்துத் தந்தவடா நானு! இப்போ நான் சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ! என் பேத்தி அந்தப் பையன மதம் மாறி கட்டிக்கிட்டாலும் அவ இந்த வீட்டுக்கு வருவா போவா, என் பேத்தியாதான் இருப்பா! இதைத் தடுக்க இங்க யாருக்கும் உரிமை இல்ல, ஆமா!!” என்றவரைக் கட்டிக் கொண்டார் ஈஸ்வரி.

மகளை ஒதுக்கி வைப்பதாக கணவர் சொன்னதும் அவருக்கு குலையே நடுங்கிவிட்டது! பத்து மாதம் சுமந்துப் பெற்றவளுக்கல்லவா தெரியும் வலியும் வேதனையும். இப்படி ஏதும் நடந்து விடக் கூடாது எனத்தானே மகளை அதட்டி உருட்டி அறிவுரை சொல்லி என கட்டுக் கோப்பாய் வளர்க்க முயன்றார். அவள் ரஹ்மானைக் காதலிக்கிறாள் என சந்தேக விதை முளைத்த தினத்திலிருந்து மகளின் எதிர்காலத்தை நினைத்து சரியாய் உறங்கக் கூட முடியவில்லையே அந்தத் தாயால்! தாங்கள் பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து வைத்தால், காலம் முழுக்க மகளை அருகில் வைத்துக் காணலாமே எனத்தானே தூக்கில் தொங்கி விடுவதாய் மிரட்டிப் பணிய வைக்க முயன்றார். பழங்காலம் என நினைத்த தன் மாமியார் பளிச் பளிச்சென பேசி தன் மகளை தள்ளி வைப்பதை தகர்த்து விட்டதில் ஈஸ்வரிக்கு மனதே நிறைந்துப் போனது.

தன் தாயாரின் கோபத்தில் அசந்துப் போனார் அழகு. பழைய பஞ்சாங்கமான அவரால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என உணர்ந்து தன் உயிருக்குயிரான மகளை இவர் ஒதுக்க, அவரோ சுயநலவாதி என சொல்லிவிட்டாரே என அதிர்ந்துப் போனார்.

அழகுவின் அதிர்ச்சியைத் தப்பாகப் புரிந்துக் கொண்ட அப்துல்லா,

“அழகு, நிதானத்துக்கு வாங்க! நம்ம குழந்தைங்க சந்தோஷம்தான் நமக்கு முக்கியம். இப்போ என்ன, மீனாட்சி மதம் மாறக் கூடாது, அவ்வளவுதானே? சிங்கப்பூருல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க! ரெண்டு பேரும் அங்கப் போய் வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும்! இவ இவளாவே இருக்கட்டும், என் மகன் அவனாகவே இருக்கட்டும்” என முடித்து வைத்தார்.

“இப்போ என்ன சொல்ல வரீங்க ரெண்டு அப்பாவும்? ரஹ்மான் மீனாட்சி காதல ஏத்துக்கறீங்களா இல்லையா? தெளிவா சொல்லுங்க!” என கேட்டான் முருகன்.

சம்மதமென இரு அப்பாக்களும் தலையை ஆட்டினார்கள்.

“சம்மதம் குடுத்திட்டீங்கல்ல, இனி அவங்க வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கறதுன்னு வாழ போற ரெண்டுப் பேரும் பேசி தீர்த்துக்கட்டும்! இதுல நாம தலையிட வேண்டாம்” என கறாராய் சொன்னான் முருகன்.

எல்லோரின் தலையும் சம்மதமாய் ஆடியது. ரஹ்மானும் மீனாட்சியும் இன்னும் ஆனந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் தவித்தார்கள். அழகுவை நெருங்கிய ரஹ்மான்,

“நெஜமா மீனாம்மாவ என் கிட்ட கொடுத்துட சம்மதமா உங்களுக்கு?” என குரலடைக்கக் கேட்டான்.

அவனை அணைத்துக் கொண்ட அழகு,

“உன்னை விட என் மகள வேற எவன் நல்லா பார்த்துடுவான்! நீதான் அவளுக்கு ஏத்த ஜோடி” என கண் கலங்கினார்.

தனது பாக்ச்சிக்கை நெருங்கிய மீனாட்சி, கண்களில் ஆவலைத் தேக்கி வைத்து அவரைப் பார்க்க,

“என் ரஹ்மானை உன்னால மட்டும்தான் உயிர்ப்பா வச்சிக்க முடியும்டாம்மா! எனக்கு முழு சம்மதம் இதுல” என அவள் தலையை வாஞ்சையாய் தடவியபடி சொன்னார். அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள் மீனாட்சி.

“அழுததெல்லாம் போதும். நம்ம வீட்டுக்குப் போய் என்ன முடிவெடுக்கறதுன்னு பேசிட்டு வாங்க ரெண்டு பேரும்” என இருவரும் தனிமையில் சந்திக்க வழி அமைத்துக் கொடுத்தாள் ராதிகா.  

“நண்பா, வாடா” என ரஹ்மான் ஆறுவை தன்னோடு அழைக்க,

“நண்பா அன்பான்னு கூப்டே கொன்னுடுவேன் ராஸ்கல். இனிமே நீ எனக்கு வெறும் மச்சான் மட்டும்தான். அந்த கோட்ட தாண்டி நீயும் வரக் கூடாது நானும் வரமாட்டேன்” என பிகு செய்தவனை தோளோடு கைப்போட்டு வெளியே இழுத்துப் போனான் ரஹ்மான்.

“நண்பன்னு இருக்கறப்பவே ஓவரா ஆடுவானுங்க! இப்போ மச்சானா வேற ஆயிட்டானுங்க! இவனுங்க அலப்பறை தாங்காதே இனி” என வாய் விட்டுப் புலம்பினான் முருகன்.

அவன் புலம்பலைக் கேட்டு சிரித்து விட்டார்கள் பெரியவர்கள் அனைவரும்.

ஆறு, மோட்டர் பைக்கில் கொண்டு வந்து முருகனின் வீட்டின் முன்னே இறக்கி விட்டான் ரஹ்மானை. வீட்டின் உள்ளே போன ரஹ்மான் படபடக்கும் மனதுடன் தன்னவளின் வருகைக்காகக் காத்திருந்தான். பின்னால் கதவைத் திறந்துக் கொண்டு வந்தாள் மீனாட்சி. அவன் நடு ஹாலில் நின்றிருக்க அவனைப் பார்த்தப்படி கிச்சன் கதவில் சாய்ந்தப்படி நின்றாள் இவள். இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டது.

மெல்லிய புன்னகை முகம் முழுவதும் பரவ, தன் இரு கைகளையும் விரித்தான் ரஹ்மான். அதற்காகவே காத்திருந்ததைப் போல ஓடி வந்து சரண் புகுந்தாள் மீனாட்சி. இருவருக்கும் பேச்சு வார்த்தையே வரவில்லை. இது நிஜம்தானா என இன்னும் நம்ப முடியவில்லை இருவருக்கும். நிஜம்தான் என உணர்ந்துக் கொள்ள அவன் இவளை இறுக்க, இவள் அவனுள்ளேயே நுழைந்துக் கொள்வதைப் போல இன்னும் இன்னும் அவன் நெஞ்சில் ஒண்டினாள். அவள் உச்சியில் இதழ் பதித்தவன்,

“ஐ லவ் யூ மீனாம்மா!” என ஆர்ப்பரித்தான்.

“ஐ லவ் யூ, லவ் யூ, லவ் யூ!!!” என விடாமல் ஜபித்தான்.

நெஞ்சில் உள்ள நேசத்தை உளமாற தன்னவளிடம் சொல்ல எவ்வளவு தடங்கல்கள் அவனுக்கு. இன்று எல்லா தடைக் கல்லும் பொடிப்பொடியாய் போயிருக்க, விடாமல் தன் காதலை சொல்லியபடியே இருந்தான் அவன்.

அவன் கண்ணீர் தன் உச்சியை நனைக்க, நிமிர்ந்து கண்களைத் துடைத்து விட்டாள் இவள்.

“இப்பவே அழுது முடிச்சிட்டா எப்படி ராங்கிப் புடிச்ச ரஹ்மானு? இனிமே என்னை கல்யாணம் செஞ்சு நான் குடுக்கற டார்ச்சர எல்லாம் தாங்கி, என்னை மாதிரியே அராத்தா நான் பெத்துப் போடற புள்ள குட்டிங்க பின்னால ஓடின்னு நீ அழறதுக்கு நெறைய ஸ்கோப் இருக்கு! சோ இப்போ டேமை கொஞ்சம் மூடி வை” என்றவளுக்கும் கண்ணீர் வழிந்தது.

“என் மீனாம்மா! என் செல்ல சைத்தான்!” என கொஞ்சியவன் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான். அவள் கண்ணீரை முத்ததால் காய வைத்தான் ரஹ்மான்.

“இப்போ எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா ரஹ்மானு! அப்படியே மனசு பஞ்சா பறக்குது! இவ்வளவு நாள் நீ கிடைப்பியா மாட்டியான்னு நான் தவிச்ச தவிப்புக்கு முற்றுப் புள்ளி வச்சாச்சு! படபடன்னு வருதுடா ரஹ்மானு” என துவண்டவளை குழந்தையைப் போல கைகளில் அள்ளிக் கொண்டான் ரஹ்மான்.

இனி கனவில் மட்டும்தான் வாழ்க்கையோ என ஏங்கி தவித்திருந்த இருவருக்கும், நனவிலும் அது சாத்தியம் என அறிந்துக் கொண்டதில் அத்துணை ஆசுவாசம். கானல் நீர் என நினைத்த வாழ்க்கை கைக் கூடி இருக்க, கண்ணீர் கரை புரண்டு ஓடியது. எங்கே விட்டு விலகினால் பிரித்து விடுவார்களோ என்பதைப் போல அவளை சுகமாய் சுமந்தப்படி நின்றான் ரஹ்மான்.

மீதி வாழ்க்கை அவர்கள் இருவருக்கும் இன்னும் எத்தனை இன்னல்களை வைத்துக் காத்திருக்கிறதோ! எதுவாக இருந்தாலும் இருவருமே ஒத்த மனதுடன் கடந்து வருவார்கள். தங்களது காதலை கவசமாக்கி வாழ்க்கை எனும் சுனாமியை எதிர் கொண்டு கடப்பார்கள்.

தன் மீனாம்மாவை கண்ணுக்குள் வைத்து தாங்குவான் ரஹ்மான். அவளுக்கு செல்லம் கொடுத்து, கொஞ்சி, பிடிவாதத்துக்கு விட்டுக் கொடுத்து தன் ஜீவனாய் காத்துக் கொள்வான். தன் ரஹ்மானை தாயாய் நின்று அரவணைப்பாள் மீனாட்சி. மூச்சு முட்டக் காதல் செய்து, தன் அன்பால் அவனை கொலையாய் கொன்று, ஆதிக்கமாய் அவனை ஆகர்ஷித்து தன் உயிராய் காத்துக் கொள்வாள்.

இசையும் அவன் இம்சையும் இனிதாய் வாழ வாழ்த்துவோம்!

சைத்தானும் அவள் அய்த்தானும் அமோகமாய் வாழ பிரார்த்திப்போம்.

அவர்கள் வாழ்க்கை சிறக்க, யோசித்து அவர்கள் முடிவெடுக்கட்டும். எந்த முடிவெடுத்தாலும் அவர்கள் குடும்பமும் அவர்களோடு கூட வரும் எனும் சந்தோசத்தோடு ரஹ்மானுக்கும் மீனாம்மாவுக்கும் விடை கொடுப்போம்!

 

மதம் என்னும் மதம் ஓயட்டும்

தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்!!!!!!!!

 

ஜாதி, மதம் எனும் காரணங்களால் பிரிந்துப் போனாலும், எதாவது ஒரு சமயத்தில் அந்தக் காதலன் அல்லது காதலி நினைவு வரும்போது நெஞ்சம் முனுக்கென வலிக்க கண்ணீரைக் கட்டுப் படுத்தப் போராடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்!

முற்றும்.

(மதம் மாறனாங்களா, நாட்டை விட்டுப் போனாங்களான்றத அவங்க கிட்டயே விட்டுட்டேன். நானா எந்த முடிவ குடுத்தாலும் ரெண்டு சைட்டுக்கும் மன வருத்தம் வரும். சோ இதுதான் என்னால குடுக்க முடிஞ்ச பெஸ்ட் முடிவு. இந்தக் கதைக்கு ஹெப்பி எண்டிங் வர சான்ஸ் இல்ல! ஆனாலும் உங்கள் அனைவருக்காகவும்தான் ஹெப்பி எண்டிங் குடுத்தேன். ரொம்ப இன்வால்வ் ஆகி ஃபீல் செஞ்சு எழுதன கதை இது! இந்தக் கதை எப்பவும் மனசுல ஓடிட்டே இருக்கும். ஆனா என்னால ரெண்டு சைட்டும் காயம் படாம கதைய நகர்த்த முடியுமான்னு பயந்துட்டே அப்படியே விட்டுட்டேன்!

இந்தக் கதைய எழுதலைனா அது என் மைண்ட விட்டுப் போகாதுன்னு, உங்க ஆதரவ நம்பி எழுதி முடிச்சுட்டேன். பெரிய பாரத்த இறக்கி வச்ச மாதிரி, ஐ ஃபீல் சோ கால்ம் நவ்! உங்களுக்கும் இந்தக் கதை தாக்கத்த ஏற்படுத்தி இருந்தா கண்டிப்பா உங்க கருத்த ஷேர் செய்ங்க டியர்ஸ். இதோட அடுத்த கதையில சந்திப்போம். எப்பன்னு தெரில! லவ் யூ ஆல்! நீங்க குடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி..வாழ்க வளமுடன் 😊

இந்தக் கதைக்கு எபிலாக் வராது! எபிலாக்னா அவங்க வாழ்க்கை முறையைக் காட்டனும். சோ நோ எபிலாக். என்னமோ தெரில, இந்த அம்மான்னு முடியற என்னோட கதைக்கு எல்லாம் எபிலாக் வைக்க முடியாத சூழ்நிலை—ஜீவன் நீயம்மா, உள்ளுயிரே உருகுதம்மா, நீ எனக்கு உயிரம்மா!!!! ஹஹஹ)  

Leave a Reply

error: Content is protected !!