YALOVIYAM 12.2

YALOVIYAM 12.2


யாழோவியம்


அத்தியாயம் – 12

தியாகு இறந்த பின் முதல் ஐந்து நாட்கள்…

மூன்று நாட்களுக்குப் பின்னர் உறவுகள் எல்லோரும் சென்றிருந்தனர்.

தியாகுவைச் சார்ந்தே வாழ்ந்து பழகியதால், தனியாக திலோவால் ஏதும் செய்ய இயலவில்லை. மாறனும் அப்பாவின் மறைவிலிருந்து மீண்டு வரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

இருவருக்குமே ‘உண்ண, உறங்க’ ஒருவர் சொல்ல வேண்டியதாக இருந்தது.

திலோ-மாறன் நிலையைப் பார்த்து சசியும் அவனது அம்மாவும் இன்னும் இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்துவிட்டுச் செல்லலாம் என முடிவெடுத்திருந்தனர்.

இதே நேரத்தில் வெளி உலகத்தில்…

தியாகு விபத்து தொடர்பான வழக்கில் விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

மொத்த ஊடங்களில் 50% பேர் தியாகுவிற்கு நடந்தது விபத்தா? இல்லை நுழைவுத் தேர்வு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளால் திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மீதமிருந்த 50% பேரும் நுழைவுத் தேர்வு இறுதி கட்ட அறிக்கை, முறைகேட்டில் தொடர்புடைய பல்கலைக்கழக அலுவலர்கள், அமைச்சர்கள் என்பதை பேசு பொருளாக வைத்துக் கொண்டனர்.

அடுத்து பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…

செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா

ஓரளவிற்கு திலோவும் மாறனும் தங்களைத் தேற்றிக் கொண்டனர். எத்தனை நாட்கள் மற்றொருவர் இருந்து தங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம் வந்தவுடன் இருவரும் எழுந்து நடமாட ஆரம்பித்தனர்.

இருந்தும் திலோ பொட்டிக் செல்லவில்லை. ஆனால் மாறன் அன்றாட அலுவலில் ஈடுபடத் தொடங்கினான். இருவருமே உள்ளுக்குள் நிரம்ப அழுது கொண்டிருந்தனர். எனினும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

தனியாக இருக்கும் பொழுது தியாகுவின் நியாபகம் வந்தால் வீட்டு வாசலில் காஃபி கோப்பையுடன் திலோ அமர்ந்துகொள்வார். அதேபோல்தான் மாறனும் அப்புவின் நினைவு வரும்பொழுதெல்லாம் ஷட்டில் கார்க் சகிதமாக சங்கடப்பட்டுக் கொண்டிருப்பான்.

ஆனால் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரங்களில் மனதை மாற்றும் விதமாக ஏதாவது பேசிக் கொள்வார்கள். இருவரின் மாற்றம் கண்ட பிறகுதான் சசியும் அவனது அம்மாவும் கிளம்பினர்.

அலெக்ஸ் இல்லத்தில்

முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை குழுவிலிருந்து உயர்நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது. ஆனால் அவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு தொடரவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்து முடித்தாயிற்று என்றாலும், சமர்ப்பித்த அறிக்கையின் பேரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அலெக்ஸிற்கு பெரும் அதிருப்தியைத் தந்திருந்தது.

தனது அதிகாரம் என்பது அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரையே, நீதிமன்றத்தையோ அரசையோ கேள்வி கேட்க கிடையாது என்பதால் அமைதியாக இருந்தார்.

ஊடங்களில்…

வேறொரு தலைப்புச் செய்தி… மற்றொரு முக்கியச் செய்தி… அடுத்தொரு அண்மைச் செய்தி என்று அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். விவாதிக்கும் தலைப்புகள் மாறின. விவாதிப்பவர்கள் மாறினார்கள்.

வெளியுலகில்

பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்களிடம் இப்படி ஒரு முறைகேடு செய்தவர்களுக்கு ‘என்ன தண்டனை கிடைக்கும்?’ என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.

அடுத்து ஒரு இரண்டு நாட்கள் கழித்து…

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்

எவ்வளவு முயற்சி எடுத்து விசாரணை ஆணையம் வரை கொண்டு சென்ற விடயம், இன்று கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதைக் கண்டு கடுகடுவென இருந்தான்.

அக்கணம் காசி வந்து, “சார் முகாம்?” என்றதும், ஓரிரு நொடிகள் அமைதியாக இருந்தவன், “போங்க காசி! வர்றேன்” என்று கிளம்பினான்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 8 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினான்.

பல்வேறு உதவிகள் வேண்டி கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டான். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலகர்களிடம் சொன்னான்.

அதன்பின் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பியதில், ‘கவர்ன்மென்ட்-டோட எல்லா திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கிற பணியை, மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செய்யும்’ என்றான்.

மேலும் மேலும் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வருகையில், “சார்! உங்க அப்பா மரணத்துக்கும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஸ்கேம் அக்கியூஸ்ட்டு-களுக்கும் தொடர்பு இருக்கா?” என்று விவகாரமான கேள்வி வந்தது.

உடனே மாறனின் உதவியாளர்கள் கேள்வி கேட்ட நிருபரை அங்கிருந்து அகற்ற பாதுகாவலர்களிடம் சொன்னதும் அந்த இடத்தில் சிறு சலசலப்பு, பரபரப்பு ஏற்பட்டது.

‘நகரமாட்டேன்’ என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்த நிருபரைக் கண்ட மாறன், பதில் சொல்லவில்லை என்றால்தான் பிரச்சனை பெரிதாகும் என்று உணர்ந்து, “அவரை விடுங்க” என்று தனது பாதுகாவலர்களிடம் கூறினான்.

அவர்கள் நிருபரை விட்டுவிட்டு பாதுகாவலர்கள் மாறனின் பின்னே வந்து நின்ற சில நொடிகளில் அந்த இடத்தில் பரபரப்பு அடங்கி மீண்டும் சகஜ நிலைக்கு வந்தது.

அந்த நிருபர், “தேங்க்ஸ் சார்!” என்றதும், “ஸீ! கேஸ் ரெஜிஸ்டர் பண்ணி, முறையா விசாரணை நடக்குது. ஸோ இந்த சிச்சுவேஷன்-ல இப்படி ஒரு கேள்வி தேவையில்லாதது” என வழக்கை பின்தொடர்ந்து வருபவன் என்ற முறையில் பதில் சொன்னான்.

“சார்! இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஸ்கேம் வெளிவந்தது-ல உங்களுக்கு முக்கிய பங்கு இருக்கு. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” – அதே நிருபர்.

மற்ற நிருபர்கள் தங்கள் கேள்விகளை முன்வைக்கையிலே, ‘ஸ்கேம் பத்தி இங்க ஏன் பேசணும்?’ என்றுதான் மாறனுக்குத் தோன்றியது. அதேசமயத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு முறைகேடு பற்றிய கேள்வியைப் பதிலில்லாமல் விடவும் மனமில்லை.

எனவே, “சாதாரண வழக்கா பதியப்பட்டு, முறைகேடு நடந்திருக்குன்னு தெரிஞ்சதும் விசாரணை கமிஷன் அமைச்சி, முறையா விசாரணை நடந்தது நல்ல விஷயம்” என்றான்.

“இந்த வழக்கு -ல எப்ப சார் தீர்ப்பு வரும்?” என அதே நிருபர் கேட்கவும், மற்ற ஊடக நபர்கள் அவரைப் விகற்பமாகப் பார்த்தனர். மாறன் உதவியாளர்கள் ‘எதற்கு இந்தக் கேள்வி?’ என அதிருப்தியான உடல்மொழியுடன் இருந்தனர்.

தட்டிக்கழிப்பது போல் இருந்தாலும், “தீர்ப்பு-ங்கிறது கோர்ட் முடிவு பண்றது. நீங்களோ நானோ முடிவு பண்ண முடியாது” என பதவிக்குரிய பொறுப்புடன் பதில் சொல்லிவிட்டு, மாறன் கிளம்பப் பார்த்தான்.

மற்ற ஊடக நபர்கள் விலகிக் கொண்டாலும், ” சரி சார்! பட் இவங்கதான் தப்பு செஞ்சிருக்காங்கனு தெரிஞ்சப்புறமும் கவர்ன்மென்ட் சைடு-லருந்து கைது நடவடிக்கை கூட ஏன் இல்லை? நடவடிக்கை எடுக்காம அப்படியே விட்டுட்டாங்களா?” என்று அதே நிருபர் மைக்கை மாறனின் முன்னே வந்து நீட்டினார்.

“சார்! நீங்க போங்க” என்று மாறனிடம் உதவியாளர்கள் வெளிப்படியாகச் சொன்னாலும், அரசாங்கத்தைச் சாடும்படியான கேள்விக்குப் பதில் சொல்லாமல் சென்றால் நன்றாக இருக்காது என நினைத்தான். அதே நேரத்தில் தனக்குச் சாதகமாக ஏதாவது பேச முடியுமா என்றும் யோசித்தான்.

யோசித்ததின் முடிவில், “விசாரணை கமிஷன் அமைச்சவங்க, சப்மிட் பண்ண அறிக்கையின் பேர்ல நடவடிக்கை எடுக்காம இருக்கமாட்டாங்க” என அரசிற்கு ஆதரவா? அழுத்தமா? என்ற கேள்வி கொண்ட பதில் சொன்னான்.

“யார் மேலெல்லாம் நடவடிக்கை எடுப்பாங்க?” – அதே நிருபர்.

“கமிஷன் ரிப்போர்ட்-ல குற்றவாளிகள்-னு யார் பேர் இருக்கோ அவங்க மேலெல்லாம்!” என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.

“என்ன! பேர் சொல்ல பயமா?” என்று மரியாதையை இல்லாமல் கேட்டதும், மாறனின் பாதுகாவலரில் ஒருவர் அந்த நிருபரின் மைக்கை பிடிங்கி, அவரைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

மற்றொருவர் அங்கிருந்த ஏனைய ஊடக நபர்களை ஒதுங்கி நிற்கும்படி உத்தரவிட்டு, “சார்! இது ஏதோ வேணும்னே பண்ற மாதிரி இருக்கு. நீங்க போங்க சார்” என்றார்.

மேலும், “சார்! ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய் விசாரிக்கிறோம். நீங்க போங்க” என்றதும், “வாங்க சார்! போலாம்” என்று காசி வந்து மாறனை அழைத்தார்.

உடனே ஒதுங்கி நின்ற ஊடக நபர் ஒருவர், “என்ன சார்? மிரட்டிறீங்களா? கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லையா?” என கோபமாகக் கேட்டார்.

‘யாரிவன்? எதற்கிந்த கேள்விகள்?’ என்று நினைத்தாலும், ‘ஊடக சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்று விடயம் பெரிதாக வேண்டாமென நினைத்த மாறன், பாதுகாவலரைப் பார்த்து, “அவரை விடுங்க” என்றான்.

அவர், “சார்!” என்று தயங்கியதும், “விடுங்கன்னு சொல்றேன்” என்றவன், அவர்கள் விட்டதும், “மைக்கை கொடுத்திருங்க” என்றான்.

மைக்கை வாங்கிக் கொண்ட நிருபரிடம், “கேள்வி கேட்கிறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா எப்படிக் கேட்கணும்-ங்கிறதும் இருக்கில்லையா?” என்றான்.

அனைவரும் அமைதியாக நின்றார்கள். யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்படியே மாறன் சென்றிருக்கலாம். ஆனால் அவன் செல்லவில்லை.

மாறாக, “தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் ராகினி மற்றும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் லிங்கம்… இவங்கதான் இந்த முறைகேடோ-ட முக்கிய குற்றவாளிகள்.  

இதை நான் சொல்லலை. விசாரணை கமிஷன் ரிப்போர்ட்-ல இவங்கதான் குற்றவாளிகள்-னு ஆதாரத்தோடு சொல்லப்பட்டிருக்கு.

அன்ட் உங்க கேள்விக்குப் பதில்! அரசு நடவடிக்கை எடுக்காம அப்படியே விட்டுருவாங்கன்னு சொல்லாதீங்க. நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகலாம்.

போதுமா? வேற யாரும் ஏதும் கேள்வி கேட்கணுமா?” என்று கேட்ட பின்னரும் அமைதி நிலவியதால், “காசி. போகலாம்” என்று கிளம்பிவிட்டான். போகும் போதே யாழ்மாறன், அந்த நிருபரை திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.

அனைத்து ஊடங்களிலும் அப்போதைய பிரேக்கிங் நியூஸ், ‘செங்கல்பட்டு ஆட்சியரிடம் வரம்பு மீறி கேள்வி கேட்ட நிருபர். அதை பொறுமையாகக் கையாண்ட ஆட்சியர்’ என்று போடப்பட்டு, அங்கே நடந்த கேள்வி-பதில் பகுதியை முழுவதுமாக ஒளிபரப்பி விளக்கிக் கொண்டிருந்தனர்.

அதேநாள் இரவில், ‘நுழைவுத் தேர்வு முறைகேடு வழக்கின் குற்றவாளிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும்?’, ‘ஊடகத்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?’ என்று பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் இருந்தன.

சுருக்கமாக மீண்டும் முறைகேடு வழக்கு பற்றிய பேச்சுக்கள் தொடங்கின.

லிங்கம் வீடு

லதா… கணவர் ஒரு ஊழல் குற்றத்தின் முக்கிய குற்றவாளி என்று தெரிந்தது… பல பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பது… இந்த வீடு சொத்துக்கள் எல்லாம் ஊழல் செய்த பணத்தில் வந்தது… இவையெல்லாம் லதாவை வெகுவாகப் பாதித்திருந்தது.

இந்த விடயம் தெரிந்ததிலிருந்து கணவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். லிங்கமும் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. ‘நீ பேசினால், பேசு! இல்லையென்றால் எனக்கொன்றுமில்லை’ என்ற ரீதியில்தான் இருந்தார்.

வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பது, கட்சித் தலைமையைச் சரிகட்டுவது, கட்சிக்குள் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வது, அதிகாரிகளுடன் பேசிப் பார்ப்பது என்றே லிங்கம் இருந்தார்.

கணவரின் அலட்சியப்போக்கு… ‘இவ்வளவுதானா இவருக்கு நான்?’ என்ற எண்ணம்… ‘இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பொய்யா?’ என்ற கேள்வி… எல்லாம் சேர்ந்து கொண்டு லதாவின் பாதிப்பைப் பன்மடங்காக்கியது.

கூடவே, இதன்பின் வரும் நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயமும், கவலையும் இருந்தது.

சுடர்… அப்பாதான் குற்றவாளி என்பதை அறிந்ததும், ‘அப்பாவா இப்படி?’ என்று வேதனை அடைந்தாள். அழுகின்றாள். அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறாள். அப்பாவிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாள்.

மனைவியிடம் காட்டும் அலட்சியத்தை, லிங்கம் மகளிடம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் முன் சென்று ஏதேதோ பேசி, அவளைப் பேச வைக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் பேச மறுத்துக் கொண்டிருக்கிறாள்.

அப்பாவிடம் மட்டுமல்ல, லதாவைத் தவிர யாரிடமும் அவள் பேசவில்லை. மருத்துமனையில் இருந்தபோதும், வீட்டிற்கு வந்தபின்பும் ராஜா, மாறன் இருவருடனும் பேசிக் கொண்டுதான் இருந்தாள்.

ஆனால் இந்த மூன்றாம் கட்ட அறிக்கை வந்தபின்பு, மூவரின் மனநிலையும் மாறிவிட்டது. தந்தை இழப்பில் மாறன் உழன்று கொண்டிருக்கிறான். சுடரும், தன் அப்பாவின் குற்ற செயலை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாள்.

இது கூடவே, தியாகு-வின் மரணத்திற்குக் காரணம் முறைகேட்டில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற ஊடக சலசலப்புகளைக் கேட்டதிலிருந்து, சுடருக்குள் ஒரு தயக்கம் வந்திருந்தது.

மாறனிடம் பேசி, அவன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வேண்டுமென மனம் நினைத்தது. ஆனால் அந்த இழப்பை ஏற்படுத்தியது தன் அப்பவாக இருக்கலாம் என்பது, அவளைத் தடுத்தது.

இன்னும் சிறிது நாட்கள் கழித்து… வீட்டில், அலுவலகத்தில் ஓரளவு நிலைமை சமன்பட்ட பிறகு, மாறனே அழைத்துப் பேசுவான் என்று தெரியும்.

ஆனால் அதற்குமுன், தான் அழைத்துப் பேசுவதே சரியாக இருக்கும் என நினைத்தாலும், ‘எப்படி அவனிடம் பேச?’ என்று நெற்றியைப் பிடித்துக் கொண்டு விசனப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

சுருக்கமாக இரண்டக மனநிலையில் இருந்தாள்.

மாறனிடம் பேசுவதற்கு இப்படி ஒரு தயக்கம் வருமென்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றாலும், ஏற்கனவே இப்படியொரு தயக்க நிலையைக் கடந்து வந்த நாளை நோக்கி மனம் சென்றது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 11

கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. அன்றுதான் சுடரின் கடைசித் தேர்வு நடக்கும் நாள்.

சற்று முன்னதாகவே தேர்வெழுதி முடித்து, விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த சுடர், அங்கு நின்ற தோழிகளிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டுக் கிளம்பினாள்.

மெதுவாக வாகன நிறுத்துமிடம் நோக்கி நடந்தவள் நினைவினில் மாறனைப் பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன.

அன்று மாறன் அப்படிச் சொன்னபிறகு, அவனைப் பார்க்கவேயில்லை. ஆனால் ‘இங்கேதானே’ இருக்கிறான் என்ற உணர்வே இதயத்திற்கு இதமாக இருந்தது. ஆனால் இனிமேல் அது கிடையாதே என்பது இதயத்தை ஏதோ செய்தது.

அவனுக்கு இது இறுதி ஆண்டு. தேர்வு முடிந்ததும், கல்லூரியை விட்டுச் சென்றுவிடுவான். அதன்பின் பார்க்கவே முடியாது என்ற உண்மை உள்ளதை உலுக்கி எடுத்தது.

தன் வாழ்க்கைக்குள் அவன் இல்லை என்றாலும், இந்த வளாகத்திற்குள்தான் இருக்கிறான் என்பது ஒருவித அமைதியைக் கொடுத்திருந்தது. இனி, அது இருக்கப் போவதில்லை என்பது மனதை அரிக்க ஆரம்பித்தது.

அவனிடம் பேசிப் பார்த்தால் என்ன? என்று கூட தோன்றியது. ஆனால், ‘இது சரிவராது’ என்று சொன்னவனிடம் போய் ‘எப்படிப் பேச?’ என்ற தயக்கம் வந்து, அதைத் தடுத்தது.

இப்படி யோசித்துக் கொண்டே வாகனம் நிறுத்துமிடம் வந்திருந்தாள். ஓரிரு நிமிடங்கள் அப்படியே நின்றாள். கல்லூரி கட்டிடத்தைப் பார்த்தாள். அங்கே நிற்க நிற்க இதயத்தின் பாரம் ஏறிக் கொண்டே போவது போல் இருந்தது.

எனவே, அதற்கு மேல் தாமதிக்காமல் வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரியிலிருந்து கிளம்பிவிட்டாள்.

யாழோவியம் அத்தியாயம் – 12 தொடர்கிறது…

கல்லூரி நினைவிலிருந்து மீண்டவள், ஓராயிரம் முறையாக கைப்பேசியை எடுத்து வைத்துக் கொண்டு, தயக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தாள்.

ராஜா வீடு…

தன் தந்தையும் நுழைவுத் தேர்வு முறைகேட்டிற்குத் துணை போயிருக்கிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து அமைதியாக இருக்கிறான்.

கட்சித் தலைவர் அழைத்த போது, அழைப்பை ஏற்று பேசினான். அதன்பின் கட்சியின் உறுப்பினர்கள், அவன் நலன் விரும்பிகள் அழைத்தார்கள். யார் அழைப்பையும் ஏற்காமல், யாரிடமும் பேசாமல் இருக்கிறான்.

இக்கணத்தில், தன் அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த அவனும் கவியும் இருக்கும் புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.


Dears,

இந்தக் கதையில வர்ற ஊழல் குற்றம், மத்திய பிரதேசத்தில நடந்த VYAPAM SCAM-யை (வியாபம்) அடிப்படையாகக் கொண்டது.

ஊழலை மையமாகக் கொண்ட கதை எழுதணும்னு நினைச்சேன். So, இந்தியாவில நடந்த பெரிய ஊழல் குற்றங்கள் எல்லாத்தையும் search பண்ணி பார்த்தேன்.

அதுல இது பிடிச்சிருந்ததுன்னு சொல்ல முடியாது. இந்த ஊழலை முக்கிய புள்ளியாக வைத்து எழுதலாமே-ன்னு தோணிச்சி.

அதுக்கப்புறம் VYAPAM SCAM-பத்தி full study பண்ணி, story எழுதினேன்.

இருந்தும் கற்பனை கதை-ன்னு சொல்லக் காரணம், VYAPAM SCAM எல்லா government sector-லயும் நடந்திருந்தது. நுழைவுத் தேர்வு (பொறியியல், மருத்துவம்) entrance examination (both engineering and medical), மாணவர் சேர்க்கை admission and அரசாங்க பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பது (காவலர்) recruitment (ex: Police). இப்படி…

அதுலருந்து நான் எடுத்தது பொறியியல் நுழைவுத் தேர்வு மட்டும்தான். அதன்பின் கதாபாத்திரங்கள் தேர்வாக இருக்கட்டும், love track , அந்த family structure, ஊழல் நடந்ததாக குறிப்பிடப்பட்ட ஆண்டு, பதிவு செய்யப்பட்ட வழக்குகள்… எல்லாமே கற்பனைதான். ஆனால் இங்கே குறிப்பிட்ட மாணவர் மரணங்கள் அங்கேயும் உண்டு.

இதனாலதான் I could not used ‘story based on true event’ tag. But இப்படிச் சொல்லலாம், ‘உண்மைக் குற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை’. இனிமே இந்த tag line use பண்ணிக்கிறேன்.

Thank you so much friends!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!