Jeevan Neeyamma–Epi 9

171916099_840757923178210_3424615682123961255_n-409862f1

Jeevan Neeyamma–Epi 9

அத்தியாயம் 9

 

உன் மேல் வெறும் காதல் இல்லை, பெருங்காதல் என்பாள். யாரவள்? என் ஜீவனவள்!

 

காலை மணி ஐந்துக்கு, எப்பொழுதும் போல அலாரம் வைக்காமலேயே விழிப்பு வந்தது விட்டது ரஹ்மானுக்கு. மெல்ல எழுந்து அமர்ந்தவன், கைகள் இரண்டையும் தேய்த்து முகத்தில் மெல்லத் தடவி டுவா சொல்லி தன் நாளைத் துவக்கினான். பக்கத்துக் கட்டிலில் அவன் ரூம் மேட் இன்னும் உறக்கத்தில் இருந்தான்.   

“ஜோஹான்! எழுந்துக்கறியா?” என தினமும் எழுப்புவது போல இன்றும் எழுப்பினான் இவன்.

“ஹ்ம்ம்! இன்னும் கொஞ்சம் நேரம்!” என்றவன் காலை குளிருக்கு போர்வையை இழுத்து தலை வரைப் போர்த்திக் கொண்டான்.

பல்கலைகழக ஹாஸ்டலில் பெரும்பாலும் மலாய் மாணவர்களுக்கு இன்னொரு மலாய் மாணவரையே ரூம் மேட்டாக போடுவார்கள். சீனர்களும் இந்தியர்களும் ரூமை ஷேர் செய்து கொள்வார்கள். சீனர்களும், பல இந்தியர்களும் பன்றி இறைச்சி சாப்பிடுவார்கள், அதோடு தொழுகை முறையும் வேறு மாதிரி அல்லவா! அதனால் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது என்பதுதான் இதற்கு காரணம்.  

நன்றாக குறட்டை விடும் நண்பனைப் பார்த்து, தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்ட ரஹ்மான், கட்டிலுக்குக் கீழே வைத்திருக்கும் தனது பக்கெட்டை எடுத்தான். சோப்பு, ஷாம்பூ, ஷேவிங் செட், பல் ப்ரஷ், பேஸ்ட் என தேவையான பொருட்களை அதனுள்ளேயே வைத்திருப்பான். துண்டை எடுத்துக் கொண்டவன், அவர்கள் காரிடாரின் மூலையில் இருக்கும் பாத்ரூமை நோக்கி நடந்தான்.

காலையில் இவனைப் போல எழுந்து தொழுகை செய்யும் மலாய் மாணவர்கள் பலர் குளிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர். தனது பக்கெட்டை வரிசையில் இடம் பிடிப்பதற்காக கடைசியாக நின்றிருந்தவன் பின்னே வைத்து விட்டு, அவன் தோளைத் தட்டி உனக்கு அடுத்து நான் என சைகை காட்டினான் ரஹ்மான். அவன் சரி என்பது போல தலை அசைக்க, அடுத்த மூலையில் இருந்த சிங்கில் பல் துலக்கப் போனான் இவன்.   

பல் துலக்கி, இரண்டு நாளாய் மழிக்கப் படாமல் இருந்த தாடியையும் மீசையையும் முழுதாய் ஷேவ் செய்து முகத்தைக் கழுவினான். முகத்தை துண்டால் நன்றாக துடைத்து விட்டு, முடி எங்காவது விடுப்பட்டிருக்கிறதா என கண்ணாடியில் தன் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி ஆராய்ந்தான். அந்த இடைவெளியில் நாமும் அவனை ஆராய்வோம்!

தீட்சண்யமான பெரிய கண்கள், அதை பாதுகாக்கும் நீளமான இமை முடிகள், செதுக்கி வைத்தது போல மூக்கு, அழுத்தமான உதடுகள், மாநிறத்துக்கும் சற்றே குறைந்த நிறம். மற்ற மலாய்காரர்களைப் போல மஞ்சளாக இல்லாமல், பார்க்க இந்தியர்களைப் போல நிறம் குறைந்துதான் இருந்தான். நெடு நெடு உயரம், காற்பந்தாட்டக் குழுவில் ஸ்ட்ரைக்கராக விளையாடுவதால், அதற்கேற்ற திடகாத்திரமான உடல். தனது இருபத்து மூன்று வயதுக்கு பார்க்க இருபத்து ஆறு வயது இளைஞனைப் போல தோற்றம்.

“மான்! உன்னோட டர்ன்” எனும் கத்தலில், குளிக்கப் போனான் ரஹ்மான்.

குளித்து முடித்து, ‘ஆயேர் செம்பாயாங்’(தொழுகைக்கு உடல் சுத்தப்படுத்துவது) எடுத்துக் கொண்டவன், தனது ரூமுக்கு வந்தான். ‘செஜாடா’(தொழுகைக்கு போட்டுக் கொள்ளும் சின்ன கார்ப்பேட்) எடுத்து தரையில் விரித்தவன், தொழுகையை ஆரம்பித்தான். பக்கத்தில் படுத்திருக்கும் நண்பனுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் அமைதியாக தொழுது முடித்தவன், தனது கார்பேட்டை மடித்து எடுத்து வைத்தான். அப்துல்லா வாங்கிக் கொடுத்திருந்த குர்-ஆன் புத்தகத்தை எடுத்து சிறிது நேரம் வாசித்தவன், பின் தனது பாட புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

படித்துக் கொண்டே நோட்ஸ் எடுத்தவனுக்கு லேசாய் பசிக்க, பேண்ட்ரீக்கு நடந்து போய் மைலோ(சாக்லேட் பானம்) கலக்கிக் கொண்டு வந்தான். இரவே வாங்கி வைத்த பன் இருக்க, மைலோவில் அதை தொட்டு சாப்பிட்டவனின் பார்வை மேசையில் இருந்த இரண்டு படங்களின் மேல் விழுந்தது. அப்துல்லாவும் அமீனாவும் ஒரு படத்தில் இருக்க, இன்னொரு படத்தில் சிறு வயது ரஹ்மானும் ஆறுவும் கட்டிக் கொண்டு நின்றார்கள். அந்தப் படத்தில் இவர்கள் இருவர் மட்டும் போட்டோ எடுப்பது பொறுக்காமல், தலையை நீட்டி நாக்கைத் துருத்திக் காட்டிக் கொண்டு போட்டோ பாம்ப் செய்திருந்தாள் மீனாட்சி. அப்பொழுதெல்லாம் பிலிம் ரோல்தானே, எடுத்தப் படத்தை அழிக்க முடியாதே! அப்படி கழுவப்பட்டப் படம் இது. அவளை துரத்தி விட்டு இவர்கள் இருவரும் இன்னொரு படம் எடுத்திருந்தாலும், என்னவோ இந்தப் படம் தான் ரஹ்மானின் பேவரேட்! அதை ப்ரேம் போட்டு கூடவே பல்கலைக்கழகத்துக்கு தன்னோடு எடுத்து வந்திருந்தான்.

போட்டோவைக் கையில் எடுத்தவன், ஆறுவின் பிம்பத்தைத் தடவிக் கொடுத்தான். மீனாட்சியைப் பார்த்த சில நாட்களில் அவர்கள் மேல் இருந்த கோபமெல்லாம் வடிந்துப் போயிருந்தது. மித மிஞ்சிய வருத்தம் மட்டுமே நெஞ்சில் நிலைப் பெற்றிருந்தது.

‘உன் தங்கச்சியப் பார்த்துட்டேன்! வரேன்டா, உன்னைத் தேடி வரேன்! ஆனா நேருல பார்த்தேன், ரத்தக்காயம் ஆகாம விடமாட்டேன் பார்த்துக்கோ!’ என படத்தில் இருந்தவனை மிரட்டியவனின் பார்வை, மீனாட்சியிடம் நிலைத்தது.

“குட்டி சைத்தான் இப்போ அழகான பெரிய சைத்தானா மாறிடுச்சு!” என சொல்லிக் கொண்டவனுக்கு அப்படி ஒரு புன்னகை.  

மேசையில் இருந்த கடிகாரத்தில் மணி ஆறு முப்பது என காட்ட, அதன் பிறகு ஓட்டம், ஓட்டம், ஓட்டம்தான். காலை ஏழு மணிக்கு காற்பந்தாட்ட ப்ராக்டிஸ் இருக்க, அரைக்கால் பேண்ட், ஜெர்சி, பூட்ஸ் அணிந்துக் கொண்டு திடலுக்குப் புறப்பட்டான்.

“ஜோஹான், டேய் சோம்பேறி! எழுந்திரிடா! நான் கிளம்பறேன்!” என நண்பனை எழுப்பி விட்டு விட்டே கிளம்பினான் இவன்.     

இவன் திடலை அடையும் போதே கோச் வந்திருந்தார். வார்ம் ஆப் செய்தவர்கள், திடலை சுற்றி மூன்று ரவுண்ட் ஓடினார்கள். அதன் பிறகு அவர்களுக்குள்ளாகவே டீம் பிரித்து விளையாடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெயில் ஏற, வேர்த்து வழிந்தது ரஹ்மானுக்கு. ஒன்பது மணிக்கு பயிற்சி முடிய, பயிற்சியாளருக்கு நன்றி சொல்லிவிட்டு கும்பலாய் சாப்பிட போனார்கள் விளையாட்டுத் தோழர்கள் அனைவரும். வேக வேகமாக தனது உணவை முடித்த ரஹ்மான், ஹாஸ்டலுக்கு கிட்டத்தட்ட ஓடினான். பத்து மணிக்கு அவனுக்கு லெக்சர் இருந்தது. அதற்குத்தான் இந்த ஓட்டம். 

லெக்சார் ஹாலை அடைந்தப் போது, இவனுக்காக வெளியே காத்திருந்தாள் அவன் பேட்ச் மேட் சுராயா(மலாய் பெண்). அவள் சொன்ன சலாமுக்கு பதில் சலாம் கொடுத்தவன், மென்மையாக புன்னகைத்தான். அந்தப் பாடத்தின் அசைமெண்ட்டிற்கு ரஹ்மான், சுராயா மற்றும் லோகநாதன் என மூவரையும் ஒரு குரூப்பாக பிரித்திருந்தார் லெக்சரர். உள்ளே லோகா இவர்களுக்காக இடம் பிடித்து வைத்திருந்தான். மூவரும் பாடம் ஆரம்பிக்கும் முன், இதுவரை தங்களுக்குள் பிரித்துக் கொண்ட டாபிக்கில் எந்தளவுக்கு ப்ராக்ரேஸ் செய்திருக்கிறார்கள் என தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர்.

“மான்! எல்லாம் கையிலேயே எழுதி வச்சிருக்கற! இன்னிக்கு நான் கம்ப்யூட்டர் லேபுக்கு போவேன்! உன்னோடதும் சேர்த்து டைப் பண்ணிட்டு வந்திடவா?” என கேட்டாள் சுராயா.

“என்னோடதும் இன்னும் டைப் பண்ணல சூ! எனக்கும் சேர்த்து செஞ்சிடறயா?” என கிண்டலாகக் கேட்டான் லோகா.

ரஹ்மான் சின்னப் புன்னகையுடன் குனிந்துக் கொள்ள, சூ சூபத்ரகாளியாக மாறி லோகாவை முறைத்தாள்.   

சுராயா அவர்கள் டீமுக்கு வந்ததில் இருந்து ரஹ்மானுக்கு கண்களால் அனுப்பிக் கொண்டிருக்கும் காதல் மனுக்களை எல்லாம் லோகாவும் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறான். நேரிடையாக இன்னும் ப்ரோபோஸ் செய்யவில்லை, அவ்வளவுதான். மற்றப்படி ரஹ்மானுக்கு காலை உணவாக சாண்ட்வீச் எடுத்து வருவது, அசைண்ட்மெண்டில் அவனது டாபிக்குக்கும் சேர்த்து இவளே ரிசர்ச் செய்து விடுவது, மூவரும் ஸ்டே பேக் செய்து டிஸ்கஷன் செய்யும் போது தான் எடுத்து வந்திருக்கும் சிப்ஸ் பாக்கேட்டுகளை எடுத்துக் கொள்ள சொல்லி வற்புறுத்துவது என தன்னால் முடிந்த அளவுக்கு சுராயா சூசகமாக தனது மனதை திறந்துக் காட்டி இருந்தாள்.  

ரஹ்மான் அவள் கொடுக்கும் பொருட்களையும் சரி, சிக்னலையும் சரி அழகாகவே தவிர்த்து வந்தான்.

லோகா அவனிடம்,

“மான்! சூ அழகா இருக்கா, தூடோங்(மலாய் பெண்கள் தலை, கழுத்து எல்லாவற்றையும் மறைத்து முகம் மட்டும் தெரியும் அளவுக்கு துடோங் அணிந்திருப்பார்கள். உடம்பை மறைத்து தான் உடை உடுத்தி இருப்பார்கள். எல்லோரும் அப்படி இருப்பதில்லை. ஆனால் பெரும்பாலான மலாய்க்காரர்கள் இதைக் கடைப்பிடிப்பார்கள்) போட்டு பாரம்பரியமா இருக்கா, புத்திசாலியாவும் இருக்கா! அப்புறம் ஏன் நீ தள்ளிப் போற?” என கேட்க,

“காதல், கல்யாணம் பத்திலாம் நினைக்க நமக்கு இன்னும் வயசு இருக்குடா! ஒன்றரை வருஷம் படிப்பு இருக்கு. அப்புறம் எந்த இடத்துல டீச்சர் போஸ்டிங் கிடைக்கும்னு தெரியல. அங்க போய் செட்டிலாகனும். இன்னும் நாலஞ்சு வருசம் போகட்டும். அதோட சுராயாவ எனக்கு ஒரு தோழியாத்தான் பிடிக்கிது! காதலியா நெனைச்சிக் கூட பார்க்க முடியல” என்பதே அவன் பதிலாக இருக்கும்.

“மலாய் பொண்ணுங்க மட்டும் இல்லாம, சீனப் பொண்ணுங்க, தமிழ் பொண்ணுங்கன்னு உனக்கு ரூட் விடுதுங்கல்ல! அதான் தோழியா பார்க்கப் பிடிக்கிது, கோழியா பார்க்கப் பிடிக்கிதுன்னு டைலாக் அடிக்கற! உன் இடத்துல மட்டும் நான் இருந்தேன், காபி வாங்கிக் குடுக்க காவியா, லஞ்ச் வாங்கிக் குடுக்க லாவண்யா, டீ வாங்கிக் குடுக்க திவ்யா, சப்பர் வாங்கிக் குடுக்க சௌஜன்யான்னு வாழ்ந்துருப்பேன்டா” என புலம்புவான்.

“எப்படி எப்படி!!! ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவைன்னு வாழ்ந்திருப்பியா?” என நக்கலடிப்பான் ரஹ்மான்.

“உன்ன மாதிரி ஒருத்தன ப்ரேண்டா வச்சிருந்தா எங்கிருந்துடா எனக்கு நூறு வகையாவும் நூறு சுவையாவும் கிடைக்கறது? நம்மள பார்த்து ஒருத்தி சிரிக்கறாளேன்னு ஒரு செகண்ட் சந்தோஷப்பட்டா உடனே ரஹ்மான் கிட்ட கீரீம் சலாம்(விசாரித்ததாக சொல்வது) பண்ணறியான்னு கேக்குதுங்க! லோகநாதனு பேரு வச்சதுக்கு யோகநாதன்னு வச்சிருந்துருக்கலாம்! அப்பவாச்சும் யோகம் அடிச்சிருக்கும்!”

அதற்கும் அழகான ஒரு புன்னகையே லோகாவுக்குப் பரிசாகக் கிடைக்கும்.

“இப்படியே சிரிச்சே எல்லாத்தையும் சாய்ச்சுடு! அந்த சூ, ஆன்னு உன் வாயயே பார்க்கறா, கொஞ்சம் அத மூடி வைக்கறியா!” என வயிற்றெரிச்சலில் புகைவான் லோகா.

அவர்கள் இருவரும் தனிமையில் தமிழில்தான் பேசிக் கொள்வார்கள். தமிழ் கழகத்தில் ரஹ்மானும் ஒரு அங்கத்தினராக இருந்து மலேசிய பல்கலைக்கழகங்களுக்குள் நடக்கும் பேச்சுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு அடிக்கடி பரிசைத் தட்டி வருவதால் இங்கு படிக்கும் தமிழர்களின் மத்தியில் மிக பிரபல்யம் இவன். எல்லா பகுல்டி (பிரிவு/பீடம் என சொல்லலாமா? எடுகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மேனேஜ்மேண்ட், ஹியூமென் ரிசோர்ஸ் இப்படி பல வகை பகுல்டி இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில். இந்தியாவில் பகுல்டி என்பது அங்கே வேலை செய்யும் ஆட்களைக் குறிக்குமோ?) தமிழர்களும் இவனைப் எங்காவது பார்த்தால் வந்து ஒரு ஹாயாவது சொல்லி விட்டுப் போவார்கள். நம் மொழி பேசும் இன்னொரு இனத்தவனின் மேல் சுரக்கும் அன்புதான் அதற்கு காரணம்.

லெக்சரர் வர, அசைன்மெண்ட் டிஸ்கஷனை முடித்துக் கொண்டு பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள் அனைவரும். படித்துக் கொடுக்கும் போதே நன்றாக கிரகித்துக் கொள்வான் ரஹ்மான். ரூமுக்குப் போய் இன்னொரு முறை படித்துக் கொண்டால் போதும் அவனுக்கு. அப்படியே மூளையின் செல் அடுக்குகளில் போய் தங்கி விடும் படித்ததெல்லாம். கடைசி பரீட்சைக்கு நோட்ஸ்களை ஒரு முறை படித்துப் பார்த்து ஞாபகப் படுத்திக் கொள்வான், அவ்வளவுதான். மற்றவர்களைப் போல ராப்பகலாக விழுந்து எழுந்து படிக்க வேண்டிய கஸ்டத்தை எல்லாம் கடவுள் அவனுக்குக் கொடுத்திருக்கவில்லை.

படிப்பு சுலபமாய் வர, மற்ற புறப்பாட நடவடிக்கைகளில் இவனது பங்கு நிறையவே இருந்தது. தமிழ் கழகத்தின் துணைத் தலைவர் பதவி, காற்பந்தாட்ட குழுவின் காப்டன், சீலாட்(மலாய்காரர்களின் தற்காப்புக் கலை) குழுவில் ஒருத்தன், சதுரங்க கழக செயற்குழு உறுப்பினன் என பல பதவிகளை ஏற்று சிறப்பாகவும் செயல்பட்டான். அதனாலேயே இவனை விட ஒரு வருட மூத்த சீனியர்கள் இருந்தும், அவர்களுக்கு ஈடாக இவனும் மிளிர்ந்தான்.

அன்றைய கிளாஸ் முடிந்து ஹாஸ்டலுக்கு போவதற்காக பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தார்கள் தோழிகள் இருவரும்.

“என் கூட வீட்டுக்கு வாயேன்டி அம்மன்!”

“வேணா ஜண்டா! அம்மா ஹாஸ்டல விட்டு எங்கயும் போக கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என பத்தாவது முறையாக மறுத்தாள் மீனாட்சி.    

வாரக் கடைசியில் உள்ளூரிலேயே இருந்த தன் வீட்டுக்குப் போய் வர முடிவெடுத்திருந்தாள் ஹேமா. அவளது தந்தையின் பிறந்த நாளை சர்ப்ரைஸாக கொண்டாட அவளும் அவள் அம்மாவும் பல ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மீனாட்சி இங்கே ரூமில் தனியாக இருப்பாளே என தன் வீட்டுக்கு வர சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தாள் இவள்.

ஏற்கனவே ஒரு தடவை அவளைப் பார்க்க வந்த பெற்றோரிடம் மீனாட்சியை அறிமுகப்படுத்தி இருந்தாள் ஹேமா. மகள் முன் சிரித்துப் பேசினாலும், அவர்களிடம் ஒரு வித ஒதுக்கம் இருந்ததை நன்றாகவே உணர்ந்துக் கொண்டாள் மீனாட்சி. தனது எளிமையான தோற்றம், பின்புலம் எல்லாம் அவர்களுக்கு உவப்பாக இல்லையென புரிந்துப் போனது இவளுக்கு. ஆசையாக அழைக்கும் தோழியிடம் அதைப் பற்றி சொல்லாமல், பழியைத் தன் அன்னையின் மேல் தூக்கிப் போட்டாள் மீனாட்சி.

“சரி விடு! அடுத்த வீக்கேண்ட் நாம ரெண்டு பேரும் கோலாலம்பூர் சுத்திப் பார்க்கப் போகலாம்! கிளாஸ், ரூம், காண்டீன்னு இங்கயே இருக்கறது கடுப்படிக்கல? வெளிய போறோம், படம் பார்க்கறோம், நல்லா திங்கறோம், சுத்தறோம், ராத்திரி ஏழுக்குத்தான் உள்ள வரோம்! டீல் ஓக்கேவா?”

அவள் சொன்ன பிளானை கேட்டு இவளுக்கு பக்கென இருந்தது. மனதிலேயே கணக்குப் போட்டாள் மீனாட்சி! கண்டிப்பாக ஐம்பது ரிங்கிட்டாவது வேண்டும் செலவுக்கு என புரிந்தது.

‘இவ இல்லாத வெள்ளி, சனி, ஞாயிறு டின்னர கட் பண்ணா காசு மிச்சமாகும்! போய்ட்டு வரலாம்’ என நினைத்தவள்,

“ஏன்டி ஜண்டா! பினாங்ல இருந்து இங்க வந்து, முதல் முறையா கோலாலம்பூர் சுத்திப் பார்க்கப் போறேன்னு நினைக்கறப்போ சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனாலும் நெஞ்சோரம் லேசா முனுமுனுன்னு கொஞ்சம் வேதனையாவும் இருக்கு” என மொழிந்தாள்.

“ஏன், ஏன் வேதனை?”

“ஹேமான்னு ஒரு லூஸ் கூட போறதுக்கு, ராமான்னு ஒரு பாஸ் கூட போனா எவ்ளோ கிக்கா இருக்கும்?”

“ஓஹோ! கிக்கு வேணுமோ கிக்கு? இரு நான் குடுக்கறேன் கிக்கு!” என தோழியை ஹேமா துரத்த, அவளைத் திரும்பிப் பார்த்தப்படி ஓடிய மீனாட்சியை ஒரு கரம் பட்டென இழுத்தது.

தன்னை இழுத்த உருவத்தின் நெஞ்சில் நச்சென இவள் மோதி நிற்பதற்கும், அவளை லேசாக உரசியபடி ஒரு பைக் போவதற்கும் சரியாக இருந்தது. ஓடி வந்ததில் ரோட்டில் வேகமாக வந்த பைக்கை கவனிக்கவில்லை இவள். சரியான நேரத்தில் அவள் கைப்பிடித்து இழுத்து விபத்தில் இருந்து காத்திருந்தது அந்த உருவம்.

ஆபத்தில் இருந்து தப்பியதில் இதயம் படபடவென துடிக்க, மூச்சை வேக வேகமாக இழுத்து விட்டாள் மீனாட்சி. அவள் சுவாசத்தினுள் ஏறிய அத்தர் வாசத்தை இனங்கண்டு கொண்டவளுக்கு விபத்தின் படபடப்பு நீங்கி, இதயம் மெலிதாய் துடிதுடித்தது. தன் தோளைத் பாதுகாப்பாய் பிடித்திருந்த உருவத்தை மெல்ல நிமிர்ந்துப் பார்த்தாள் மீனாட்சி. அவனும் குனிந்து இவளைத்தான் பார்த்திருந்தான்.

அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவளுக்கு, கண்ணீர் பெருக்கெடுத்தது.

அழாதே என்பது போல தலையாட்டியவன்,

“மீனாம்மா! உன்னைக் காப்பாத்தி விடறதுக்காகவே என்னைப் படைச்சி விட்டுருக்காங்களோ!” என மெல்லிய சிரிப்புடன் கேட்டான்.

“ர..ரஹ்மானு! ரஹ்மானு! ரஹ்மானு! ரஹ்மானு! ரஹ்மானு!”

கதறலாய் ஆரம்பித்த ரஹ்மானு மெல்ல, மெல்ல தேம்பலாய் முடிந்துப் போனது.

 

(போன எபிக்கு லைக் கமேன்ட் போட்ட அனைவருக்கும் எனது நன்றி. லவ் யூ ஆல்)

 

(ஜீவன் துடிக்கும்…)

Leave a Reply

error: Content is protected !!