jeevanathiyaaga_nee – 19

JN_pic-b273103a
Akila Kannan

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 19

ரவியின் கோரிக்கையில் கீதா சரேலென்று விலகி நின்றாள்.  ‘என் அண்ணன் உன்னை விட சாமர்த்தியசாலி. நீ அவனிடம் தோற்றே போவாய்’ இப்படி சொல்ல வேண்டும் என்றே அவள் சிந்தை உறுமியது. ஆனால், அவள் மனம் ரவியின் பக்கம் ஊசலாடியது. அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் கண்கள் அவளை ஏக்கத்தோடு தழுவியது. ‘இவங்களை பார்த்துகிட்டு இருந்தா, நான் ஒழுங்கா சிந்திக்க மாட்டேன்.’ அவள் மடமடவென்று ஜன்னல் பக்கம் திரும்பி நின்று அந்த இரும்பு கம்பியை அழுத்தி பிடித்தாள்.

கீதாவின் முகம் அவனை பார்க்காவிட்டாலும் அவள் மனம் அவனையே சுற்ற ஆரம்பித்தது. திருமணமான முதல் நாள் இப்படியொரு கேள்வி வந்திருந்தால், ‘என் அண்ணன்… என் அண்ணன்…’ என்று நான் கதறியிருப்பேன். அவள் எண்ண ஓட்டம் வேகவேகமாக இருந்தது. ‘இப்பவும் நான் அப்படி சொல்ல முடியும். ஆனால், நான் அப்படி சொல்றதால் என்ன பிரயோஜனம்? ரவியோட அப்பாவும் அப்படி சொல்லித்தானே ரவியை காயப்படுத்தறாங்க’ கீதா நிதானித்தாள். அவள் சிந்தை ரவிக்கும் நியாயம் செய்ய விழைந்தது.

அவள் மனம் புகுந்த வீட்டை மனதில் கொண்டு சிந்திக்க, அவள் ரத்தநாடிகள் தன் பிறந்த வீட்டை  நினைவுபடுத்தி, ‘என் அண்ணன்?’ என்று கேள்வியாக அவள் முன் நிற்க, அவள் ஜன்னலின் இரும்பு கம்பிகளை இன்னும் இன்னும் அழுத்தி பிடித்தாள். ‘நான் ரவிக்கு சாதகமாக பேசி அண்ணனுக்கும் நல்லது செய்யலாம்’ அவள் இப்பொழுது சற்று சுயநலமாக யோசிக்க, ‘நான் அப்படி பேசினால், அது நியாயமா? நியாயம் இல்லாத ஒன்றை நான் செய்யலாமா?’ அவளே அவள் மனசாட்சிக்கு நீதிபதியாகி மறுப்பாக தலையசைத்தாள்.

“எங்க அண்ணன் உங்களை விட கெட்டிக்காரன்னு நான் சொல்ல மாட்டேன்.” அவள் நிதானமாக கூற, அவன் அவளை தன்பக்கம் திருப்பினான். “கீது…” அவள் முகமெங்கும் அவன் பரிசளிக்க, அவள் விலகி நின்று கொண்டாள். “நீங்களும் என் அண்ணனை விட கெட்டிக்காரன்னு நான் சொல்ல மாட்டேன்.” அவள் குரலில் பிடிவாதம் இருக்க, ‘கோபம் கொள்ள வேண்டும்…’ என்றே அவன் எண்ணினான். ஆனால், அவள் முகம் காட்டிய பாவனையில், “கீது…” என்றான் அக்கறையாக. 

அவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைக்க, அதிலிருந்த அந்த இரும்பு கம்பியின் தடங்கள் அவனை வருத்த, அவன் அதை மென்மையாக நீவிவிட்டான். “நான் உங்களுக்கு சாதகமா பதில் சொல்ல ரொம்ப நேரம் எடுக்காது.” அவள் அவன் முகம் பார்த்து கூற, அவன் விரல்கள் அவள் விரலை நீவிவிட, அவன் கண்கள் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தது.

“நான் பொய் சொல்றது என் அண்ணனுக்கு பிடிக்காது.” அவள் கூற, அவன் விரல்கள் அசையாமல் அவள் கைகளை பிடித்தபடி நிற்க, “ஒரு பொய்யை சொல்லி உங்க கிட்ட நல்ல பெயர் வாங்குறதோ… இல்லை உங்களை சந்தோஷப்படுத்துறதோ எனக்கு பிடிக்கலை. எதுவாக இருந்தாலும், நமக்குள்ள உண்மையா மட்டும் தான் இருக்கணும்னு நான் நினைக்குறேன்” அவள் கூற, அவன் அவள் கன்னம் தட்டி அவள் தலையை ஆட்டி புன்முறுவலோடு வெளியே சென்றான்.

“எதுவும் சொல்லாம போறீங்களே?” அவள் தலை சாய்த்து அவனை கேட்க, வாசல் வரை சென்றவன், அவள் பக்கம் திரும்பினான். அவன் முகத்தில் மென்மை, ‘என்ன நினைக்கிறான்…’ என்று கீதாவால் கணிக்க முடியாத முக பாவம். மீண்டும் அவள் முன் வந்து நின்றான். “என்ன சொல்லணும்?” என்றான் புருவம் உயர்த்தி. “அது…” அவள் தடுமாற, “எல்லாம் நீ தானே பேசின? அப்புறம் நான் என்ன பேச?” என்ற அவளை போலவே தலை சாய்த்து அவன் கூற, “என்னை கேலி செய்யறீங்க” அவள் அவன் மார்பில் குத்த, அவன் அவள் தீண்டலை ரசித்து, “ஏன்னு தெரியலை கீதா. ஆனால், எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…” அவன் மடமடவென்று வெளியே சென்றுவிட்டான்.

அவன் சென்ற பாதையை அவள், ‘ங…’ என்று வெறித்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

****

சில நாட்களுக்கு பின்…

ஜீவா, யோசனையோடு அமர்ந்திருந்தான். “ஜீவா, நீ உங்க வீட்டுக்கு இன்னைக்கு போகணுமுன்னு சொன்ன” தாரிணி அவன் மீது சாய்ந்தபடி அமர்ந்தாள். “போகணும் தாரிணி. எங்க அம்மாவை பார்க்கணும். அப்பாவை பார்க்கணும். நீயும் என் கூட வரணும் தாரிணி” அவன் பிடிவாதமாக கூறினான். “நான் வரலை ஜீவா” அவள் மறுப்பு தெரிவிக்க,  “தாரிணி, நாம கல்யாணம் செய்து கொண்ட முறை தப்புத்தான். ஆனால், என்னைக்காவது ஒரு நாள் நாம எல்லாரையும் பார்த்து தானே ஆகணும்? கல்யாணம் முடிந்து  நம்ம வீட்டுக்கு முதல் முறையா போகும் பொழுது, நாம சேர்ந்து போக வேண்டாமா” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“நீ சொல்றது சரி தான் ஜீவா. ஆனால், கல்யாணம் முடிந்த கையோட நாம போயிருந்தா அதில் ஒரு அர்த்தம் இருக்கு ஜீவா. இவ்வளவு நாள் கழித்து போகும் பொழுது  என்ன இருக்கு. அது மட்டுமில்லாமல், உங்க வீட்டில் உனக்கு அவமானம் தான் காத்திருக்கு. அதுவும் என்னால் ஏற்பட போகும் அவமானம். அதை பார்க்குற தைரியம் எனக்கில்லை ஜீவா” தாரிணி சற்று வருத்தத்தோடு கூற, ஜீவாவும் அவளை கட்டாயப்படுத்தவில்லை.

ஜீவா கிளம்பி தன் தாய் தந்தை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு, அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு போனான்.

முன் பக்க தோட்டத்தில் அவன் அம்மா நின்று கொண்டிருக்க, இந்த சில நாட்களில் தன் தாயிடம் தெரிந்த முதுமையில் தோய்வான தோற்றத்தில் அதிர்ந்தான் ஜீவா.

“அம்மா…” அவன் அழைக்க, “ஜீவா…” அவர் கண்களில் கண்ணீர் மல்கியது. அவன் கதவை திறந்து உள்ளே செல்ல, “ஜீவா… ஜீவா…” அவர் அவனை கட்டிக்கொண்டு அழுதார். ஜீவாவின் கண்களிலும் கண்ணீர் மல்கியது. வெளியே  தோட்டத்திலிருந்து வந்த சத்தத்தில், நீலகண்டன் வீட்டை விட்டு வெளியே வந்தார். கம்பீரமான தன் தந்தை நோய்வாய்ப்பட்டவர் போல் வந்த தோற்றத்தில் ஜீவா உடைந்தே போனான்.  “அப்பா… அப்ப்பா…” அவன் கதறினான்.

வீட்டிலிருந்த காலத்தில், அவன் தன் தந்தையிடம் சண்டையிட்ட நாட்கள் தான் அதிகம். அவன், “அப்பா…” என்று அழைத்த அழைப்புகளே குறைவு என்று சொல்லலாம். இன்று, “அப்பா…” என்ற அழைப்போடு அவர் அருகே சென்றான் ஜீவா. “யாருக்கு யார் அப்பா?” அவர் கோபமாக கேட்டார். அவன் அவரை நெருங்க, “மரகதம்…” அவன் உச்சந்தியில் கத்தினார்.

“அவனை வெளிய போக சொல்லு” அவர் வாசலை காட்ட, “என்னங்க…” மரகதம் தன் கணவனை சமாதானம் செய்யும் விதமாக அழைத்தார். “அவனை வெளிய போக சொல்லு.” அவர் கூற, “அப்பா, என் கிட்ட பேசுங்க அப்பா. நான் வெளிய போக மாட்டேன். நான் பண்ணதெல்லாம் தப்புத்தான். எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்” அவன் அவர் முன் நிற்க, “நான் யார் உனக்கு தண்டனை கொடுக்க? நீ என் மகனே இல்லைன்னு சொல்றேன். என்னை கொலைகாரனாக்காம இங்கிருந்து போய்டு. இல்லை, என் கையில் கிடைக்கிறதை வைத்து உன்னை அடித்தே கொல்லுவேன்” அவர் கூற, “அப்பா, நீங்க அடிச்சாலும் நான் வாங்குவேன். ஆனால், இங்க இருந்து இப்படியே போக மாட்டேன்” அவன் பிடிவாதமாக நிற்க, நீலகண்டனின் கோபம் எகிறியது.

அருகே இருந்த செருப்பே அவர் கண்களில் பட்டது. அதை ஆவேசமாக எடுத்து அவனை அடித்தார். “எங்க மானத்தை வாங்கிட்டு போயிட்டு, இப்ப எதுக்குடா இங்க வந்து நிக்கற?” அவர் அடிக்க, ஜீவா அசையாமல் அவர் கொடுத்த அடியை வாங்கிக் கொண்டான். “நாங்க வீட்டை காலி பண்ணிட்டு, ஊரை காலி பண்ணிட்டு இங்க வந்து இருக்கோம். என்னை விடு, என் மானத்தை வாங்கத்தான் நீ பொறந்த… உன்னை அண்ணன் அண்ணனு சொல்லி உன்னையே சுத்தி வந்தாலே அவ வாழ்க்கையையாவது நினைச்சி பார்த்தியா?” அவர் மீண்டும் அவனை பிடித்து ஆவேசமாக அடிக்க அந்த செருப்பு தான் பிய்ந்து போனது.

“வேண்டாம் ஜீவா, இங்கிருந்து போய்டு. இல்லை, நானே உன்னை கொன்னுடுவேன்.” அவர் கர்ஜிக்க, “அப்பா, உங்க கோபம் தீரும் வரைக்கும் என்னை அடிச்சிட்டு நான் சொல்றதை கேளுங்க அப்பா” அவன் தன் தந்தையின் கால்களை பிடித்து கெஞ்சினான். “என் கோபம் தீரவே தீராது ஜீவா. நீ செத்தா, இல்லை நான் செத்தா தான் என் கோபம் தீரும். இதில் யார் சாகணும்னு நீ சொல்லு?” அவர் அவனை எட்டி உதைத்தார்.

தன் கணவனை அடக்க முடியாத மரகதம், தன் மகனை கெஞ்சினார். “ஜீவா நீ எங்கையோ கண் காணாத இடத்தில நால்லாருக்கன்னு நான் நிம்மதியா இருக்கேன். நீ போய்ட்டு ஜீவா” தன் கணவன் அடித்ததில் அவனுக்கு வந்த ரத்தத்தை தன் சேலை முந்தானையால் துடைத்தபடி தன் மகனிடம் கெஞ்சினார் அந்த தாய். “அம்மா, நான் தப்பு பண்னினா, விட்டுட்டு போற பந்தமா,  அம்மா இது?” அவன் அத்தனை அடியையும் வாங்கி கொண்டு பரிதாபமாக பேசினான்.

“தப்பு பண்ணின்னா பந்தம் விட்டுப்போகாது. பந்தமே வேண்டாமுன்னு ஓடிப்போன உனக்கெல்லாம்  என்ன பேச்சு?” அவர் மரத்திலிருந்த கம்பை உடைத்து அவனை அடிக்க ஆரம்பித்தார். “உன் கூட எந்த தொடர்பும் வச்சிக்க மாட்டோமுன்னு வாக்கு கொடுத்து, நான் என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்திருக்கேன். என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்திறாத. நாங்க இங்க எப்படி இருக்கோம். இந்த வீடு யாரது? ஏதாவது உனக்கு தெரியுமா? எல்லாம் என் மாப்பிள்ளையோட தயவில். அது உனக்கு பிடிக்கலை, அதை கெடுக்க வந்திருக்க” அவர் ஆவேசமாக அவனை அடிக்க, அப்பொழுது அங்கு வந்தார்கள் கீதாவும் ரவியும்.

ரவி, அவன் கண்ட காட்சியில் உறைந்து நிற்க, “அப்பா…” அலறிக்கொண்டு உள்ளே நுழைந்த கீதா தன் சகோதரனுக்கும் தந்தைக்கும் இடையே புகுந்தாள். நீலகண்டனோ ஜீவாவை அடிக்க, அந்த அடியோ இடையே புகுந்த கீதா மேல் விழ எத்தனிக்க, அத்தனை நேரம் அடியை வாங்கி கொண்டிருந்த ஜீவா  தன் தந்தையின் கைகளை எதிர்த்து பிடித்தான் அந்த அடி தன் தங்கையின் மீது விழமாலிருக்க.

“அப்பா… அண்ணன்,” கீதா பேச ஆரம்பிக்க, “அவனை இங்க இருந்து போக சொல்லு. இல்லை என் கட்டைக்கு தீயை வச்சிட்டு போக சொல்லு. என் ஆயுசுக்கும் இவனுக்கு மன்னிப்பே கிடையாது” அவர் உறுதியாக கூற, ரவி அங்கு மௌனமாகவே நின்றான். கீதா, தலையில் அடித்து கொண்டு தன் தந்தையின் கால்களை பிடித்து கதறினாள். “அப்பா, உங்களுக்கு மகன் வேண்டாம். ஆனால், எனக்கு அண்ணன் வேணுமே அப்பா” அவள் கதற, ஜீவாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் தன் தங்கையின் தலையில் கை வைத்து அவளை ஆசுவாச படுத்தினான்.

“உனக்கு அப்பாவும், அண்ணனும் இருக்கிற பாக்கியத்தை இல்லை கீதா. அப்பா வேணுமா, இல்லை அண்ணன் வேணுமான்னு நீ முடிவு பண்ணிக்கோ கீதா.” அவர் உள்ளே செல்ல எத்தனிக்க, “என் தங்கைக்காவது அம்மா, அப்பா இருக்கட்டும்” ஜீவா மடமடவென்று வெளியே செல்ல, கீதா தலையில் அடித்து கொண்டு கதற, ரவி தன் மனைவியின் வேதனையை காண சகியாமல் தளர்ந்த நடையோடு சென்ற ஜீவாவை யோசனையாக பார்த்தான்.

நதி பாயும்…