kkavithai09

kkavithai09

கவிதை 09

திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அழகான அந்த இளங்காலைப் பொழுதில் பவித்ராவை தன் வாழ்க்கையின் சரி பாதியாக இணைத்துக் கொண்டான் ரிஷி. பாஸ்கர் தனது மூத்த மகளான பவித்ராவை ரிஷிக்கு மனைவியாகக் கொடுத்திருந்தார். கண்ணீரோடு ஒரு தந்தையாக அவர் சடங்குகளை நிறைவேற்ற ரிஷி அவரின் கரத்தைத் தட்டிக் கொடுத்தான்.

“இந்தக் கலக்கத்துக்கு அவசியமே இல்லை மாமா.”

“எனக்குத் தெரியும் மாப்பிள்ளை, ஆனாலும் பெத்த மனசில்லையா… கேட்க மாட்டேங்குது!” கண்ணீரோடு சிரித்தபடி பதில் சொன்னார் பாஸ்கர்.

சாஸ்திர சம்பிரதாயங்கள் நிறைவுற்ற கையோடு திருமணத்தைச் சட்ட ரீதியாகவும் பதிவு பண்ணினார்கள். ரிஷிக்கு பவித்ரா தனது மனைவி என்பதைச் சட்டரீதியாக உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தேவைப்பட்டதால் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தான். ஒரு மாதகால விடுமுறையில் வந்திருந்தான். அதற்குள்ளாக பவித்ராவிற்கான வீசா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும். காலதாமதம் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.

ரேணுகா முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. நிற்க நேரமில்லாமல் சுழன்றபடி வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். ரிஷிக்கு தன் மாமியாரை நினைத்த போது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு இந்தக் கல்யாணத்தில் அத்தனை விருப்பமில்லை என்பதை அன்றொரு நாள் பாஸ்கர் சொல்லக் கேட்டிருக்கிறான்.

ஆனால் அது பொய்யோ எனும் வண்ணம் அந்தக் கல்யாண வேலைகளில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார் ரேணுகா. ரிஷியோடு பாஸ்கர் சரளமாகப் பேசுவது போல ரேணுகா அத்தனைச் சுலபத்தில் பேசிவிட மாட்டார். வார்த்தைகள் மிகவும் தயக்கத்துடனேயே வரும்.

“கல்யாணத்துக்கு அப்புறமா ரிசப்ஷன் வெக்கிறதெல்லாம் நம்ம ஊர்ல… வழக்கமில்லை மாப்பிள்ளை…” இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தயங்கிய படியே ரேணுகா பேசியது இது.

“அதனால என்ன அத்தை, விட்டுறலாம்.”

“உங்களுக்குக் கண்டிப்பா வெக்கணும்னா…”

“இல்லையில்லை… உங்க வசதிப்படி மட்டும் பண்ணுங்க, எனக்கு அப்பிடியெல்லாம் எந்த எண்ணமும் இல்லை.” இப்படிச் சொல்லியவன் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று பண்ணியிருந்தான். அந்த ஊரிலேயே இப்படியொரு கல்யாணம் இதுவரை நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்குத் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

“என்னையும் ஏதாவது செலவு பண்ண விடுங்க மாப்பிள்ளை, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்!” பாஸ்கர் அழாத குறையாகக் கேட்டுப் பார்த்தார். ஆனால் ரிஷி பிடி கொடுக்கவில்லை.

“இவ்வளவு நாளும் பவிக்காக நீங்கதானே மாமா செலவு பண்ணினீங்க, இனியாவது எனக்கு அந்த வாய்ப்பைக் குடுக்கக் கூடாதா?” இப்படிச் சொல்பவனிடம் என்னவென்று பேசுவது?! நுவரெலியா வந்த நாளிலிருந்து ரிஷி பவித்ராவை பார்க்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை.

“அன்னம்மா…” அன்னபூரணியிடம் கெஞ்சிப் பார்த்தான் இளையவன்.

“ஐயையோ! இந்த விளையாட்டுக்கு நான் வரலை ரிஷி, நாலு நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்புங்கன்னு சொன்னா ரேணு என்னைச் சும்மா விட்டுருவாளா?” 

“பவியை நான் பார்த்து ஒரு மாசமாச்சு அன்னம்மா!”

“வீடியோ கால் பண்ணினேன்னு சொன்னே?!”

“அது நேர்ல பார்த்த மாதிரி இருக்குமா?”

“அதெல்லாம் போதும், போய் வேலையைப் பாரு ரிஷி.” அதற்கு மேல் அன்னபூரணி பேசவில்லை.

“சாரி மச்சான்.” இது சாரங்கன். ரிஷிக்கு அப்போது யாராலும் உதவி பண்ண முடியவில்லை.

இப்போது… தன்னருகே மங்கள பட்டுடுத்தி, அழகழகான நகைகள் அணிந்து, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்து, தலைகொள்ளாப் பூச்சூடி அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் ரிஷி. அவன் பார்வையை உணர்ந்து அவளும் திரும்பிப் பார்த்தாள். வைத்த கண் வாங்காமல் தன்னை விழுங்கிய அந்தப் பார்வையில் பெண் நாணித் தலைகுனிந்து கொண்டது.

திருமணம் முடிந்த கையோடு மண்டபத்திலேயே மதிய விருந்தும் தடபுடலாக ஏற்பாடாகியிருந்தது. எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு மணமக்கள் பெண் வீட்டிற்கு வந்திருந்தார்கள். இலங்கையில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் பெண் வீட்டிற்கு வருவதுதான் முறை என்பதால் நேராக பவித்ரா வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

ரிஷிக்கும் பவித்ராவிற்கும் தனியாக ஒரு ரூமை ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். ஏற்கனவே அது பவித்ராவும் தர்ஷினியும் உபயோகித்த ரூம் என்பதால் அதைக் குலைக்க ரிஷி விரும்பவில்லை. ஆனால் அதைச் சொன்னால் பாஸ்கர் ஏற்றுக்கொள்ள மாட்டார். தங்களுக்குத் தனிமை வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருந்தான் ரிஷி.

“மாமா… இங்கயும் சரி, அன்னம்மா வீட்டுலயும் சரி, விருந்தாளிங்க வந்தபடியே இருப்பாங்க, அதால இப்போதைக்கு நான் ஹோட்டல்ல ரூம் போட்டுக்கிறேன்.”

“சரி மாப்பிள்ளை.”

“நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கப்படாது.”

“ஐயையோ! இல்லை மாப்பிள்ளை, எனக்குப் புரியுது.” 

பெண் வீட்டில் மணமக்கள் செய்ய வேண்டிய ஒரு சில சம்பிரதாயங்களைச் செய்யச் சொல்லி ரேணுகா சொல்ல எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு ரிஷி கிளம்பிவிட்டான். இரவு உணவையும் பவித்ராவின் வீட்டிலேயே முடித்தவன் மனைவியை அழைத்துக்கொண்டு முதலில் தன் அன்னம்மா வீட்டிற்குத்தான் வந்தான்.

அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டுப் புதுமண தம்பதியர் ஹோட்டலை வந்தடைந்த போது இரவு எட்டு மணி. லேசாகக் குளிர் ஆரம்பித்திருந்தது.  ரிஷிக்கு இந்தக் குளிரெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதால் சாதாரணமாக இருந்தான். ஆனால் புடவையில் பவித்ரா லேசாக நடுங்கினாள்.

“ஹேய்! என்னாச்சு?” கணவனின் சிரிப்பில் வெட்க முறுவல் பூத்தவள் புடவைத் தலைப்பை இழுத்துத் தோளை மூடிக்கொண்டாள்.

“லேசாக் குளிருதில்லை த்தான்?” சொன்னவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தான். அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு பவித்ராவை அழைத்து வந்தான் ரிஷி. அறை நல்ல வெதுவெதுப்பாக இருந்தது. அங்கிருந்த ஹீட்டருக்கு அருகில் போன பெண் தனது கைகளை அதில் வைத்துச் சூடேற்றியது.

இருவருக்குமான தனிமை, அது முதலிரவின் முழுமையான தனிமை. அதை இனிமையாக்க ரிஷி வெகு ஆவலோடு காத்திருந்தான். ஒரு மாதத்திற்குப் பின் அவளை நேரடியாகப் பார்க்கிறான். முன்பு காதலி… இப்போது மனைவி அவனுக்கு முதுகு காட்டி ஜன்னலோரமாக இருந்த ஹீட்டரை தஞ்சமடைந்திருந்த பெண்ணைப் பின்னாலிருந்த படியே அணைத்துக் கொண்டான்.

“பவி…” அவன் வார்த்தைகள் அவனுக்கே இப்போது சங்கீதமாக ஒலித்தது. அந்த வெண் சங்குக் கழுத்தில் லேசாக அவன் முகம் புதைக்க மெதுவாகத் திரும்பியது பெண்.

“அத்தான்… நான் இன்னும்… குளிக்கலை…” அப்போதும் கல்யாணப் புடவையில் இருந்தவள் திக்கித் திணறிச் சொல்லி முடித்திருந்தாள். 

“பரவாயில்லை… இது ரொம்ப அழகா இருக்கு.” பேசிய படி அவன் மேலே முன்னேறிக் கொண்டிருந்தான். 

“அது… அத்தான்…” பவித்ரா மேலும் ஏதோ பேசப்போக இப்போது ரிஷியின் விழிகள் தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தது. அழகின் மொத்தமாக அவன் கண்ணெதிரே நின்றிருந்தவள் அவனுக்குப் போதையூட்டினாள். படபடப்போடும் ஒருவித பயத்தோடும் மருண்டு விழித்த அந்த விழிகள் அவனைப் பித்தம் கொள்ள வைத்தன.

“பேபி… என்னாச்சு? புடிக்கலையா?” அவன் குரலில் லேசான குழப்பம்.

“இல்லையில்லை, அப்பிடியில்லை.” அவசரமாக வந்தது பதில். இப்போது ரிஷி புன்னகைத்தான்.

“இனியும் காத்திருக்க முடியாது பேபி… ப்ளீஸ்டா.” அந்தக் கெஞ்சலில் மனமிரங்கியவள் கொஞ்சலுக்குக் கொஞ்சம் அனுமதி வழங்கினாள். இனியும் கஞ்சத்தனம் வேண்டாம் என்று நினைத்திருப்பாளோ?!

பெண்மைக்கு உறவு புதிது. தட்டுத் தடுமாறிக் கரை சேரத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. தனக்கிருக்கும் தடுமாற்றம் தன் இணைக்கு ஏன் இல்லாமல் போனது என்று சிந்திக்க மறந்து போனது! ஒருவேளை… தன் மந்திரக் கைகளால் மாயம் செய்தவன் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்திருந்தானோ?! 

அந்தப் பின்னிரவில் மொட்டவிழ்ந்திருந்த அந்தப் புது மலரை மீண்டுமொரு முறை முகர்ந்து பார்க்க ஆண்மை ஆவல் கொண்டது. 

“அத்தான்…” சோர்வாக வந்த அந்தக் குரல் அவன் கைகளுக்கு விலங்கிட ஆதரவாக அவள் தலையை வருடிக் கொடுத்தான் ரிஷி. பல பெண்கள், பல ஜாலங்களை அவனுக்கு இதுவரைக் காட்டி இருக்கிறார்கள். அவனறிந்திராத பல விஷயங்களைப் பல பெண்கள் சொல்லியும் கொடுத்திருக்கிறார்கள்!

ஆனால், இங்கே அவன் பார்க்கும் பெண்மை புதிது! மருண்டு, பயந்து, தவித்து, சிலிர்த்து என்று ஏதேதோ புதிய உலகங்களை அவனுக்கு அறிமுகம் செய்தது!அந்தத் தாமரை முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான் ரிஷி. பிறை நுதலில் காணாமல் போயிருந்த குங்குமம் கூட அந்த முகத்திற்குத் தனி சோபையை அளித்தது.

“ஹேய்! அவ்வளவுதானா?” ஏக்கமாக வந்தது கணவனின் குரல்.

“இன்னும் என்ன த்தான்?!” கணவனின் வார்த்தைகளுக்கான அர்த்தம் கூடப் புரியாமல் கேள்வி கேட்டது பெண். புன்னகைத்த ரிஷி அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டான். அவளின் அறியாமையை அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. 

அந்தகாரம் சூழ்ந்திருந்த இராப் பொழுது அழகாக நகர்ந்து கொண்டிருந்தது. அறைக்கு வெளியே பனிப்பொழிய, இங்கே இருதய அந்தரங்கத்துக்குள் மழை பொழிந்த குளிர்ச்சியோடு கண்ணயர்ந்தான் ரிஷி.

***

 அன்றைய காலைப்பொழுது ரிஷி தம்பதியருக்குக் கொஞ்சம் தாமதமாகவே விடிந்தது. ஹோட்டலில் முதல்முறையாகத் தங்குவதால் அங்குள்ள நடைமுறைகள் பெண்ணுக்குப் புதிதாக இருந்தன. இத்தனைக்கும் அவள்… இங்கிலாந்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் பெயர்பெற்ற ஹோட்டலை தன்னுரிமை ஆக்கியவனின் ஆருயிர் மனைவி. 

குளிருக்கு இதமாகத் தனக்குள் சுருண்டிருந்தவளின் தலையைக் கோதிக் கொடுத்தான் ரிஷி, அவன் ஏற்கனவே விழித்திருந்தான். அவளிடம் லேசான அசைவு மட்டுமே தெரிந்தது. ஒரு புன்னகையோடு ரிசப்ஷனை அழைத்துக் காலை உணவும் டீயும் வரவழைத்தான். அவன் பேச்சில் கண் விழித்த பெண் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தது.

“என்னாச்சு டா?” அவன் கேட்ட பிறகே தான் இருந்த இடம், தன் கோலம், நேற்று நடந்தது என அனைத்தும் முட்டி மோத முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள்.

“ஹேய் பேபி…” சிரிப்போடு கூடிய அவன் சரசக் குரல் இப்போது அவள் காது மடலை உரசியது. சட்டென்று விலகப் போனவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ரிஷி.

“அத்தான்…”

“அத்தானுக்கு என்ன வெச்சிருக்கீங்க நீங்க?” விடிந்தும் விடியாததுமாக அவன் காதல் பண்ண ஆரம்பித்திருந்தான்.

“குளிச்சிட்டு வந்தர்றேன் த்தான்.”

“டீ வந்திடும், குடிச்சிட்டே போகலாம்.”

“ப்ரஷ் பண்ணலையே.”

“இன்னைக்கு ஒரு நாள்தான், பரவாயில்லை.” சிரித்தான் ரிஷி.

“கஷ்டமா இருக்கும், பத்து நிமிஷத்துல வந்திடுறேன், ப்ளீஸ்.” அவசர அவசரமாகத் தன்னைச் சரி பண்ணிக் கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டது பெண். காலைக்கடன்களை அவள் துரித கதியில் முடிப்பதற்கும் வெளியே ரிஷி அவளை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

“பவீ, சீக்கிரமா வாடா, டீ வந்திடுச்சு.”

“இதோ, வந்தர்றேன்.” குரல் கொடுத்த படி முகத்தைத் துடைத்தவள் வெளியே வந்தாள்.

ரிஷி இரு கப்புகளில் டீயை ஊற்றியபடி இருந்தான். அப்போதுதான் அந்த அறையைக் கவனித்தாள் பவித்ரா. பார்க்க அத்தனை அழகாக இருந்தது. டீ கப்பை அவளிடம் நீட்டியவன் அவள் பார்வையைப் பார்த்துச் சிரித்தான்.

“என்ன டா? ரூம் புடிச்சிருக்கா?”

“ரொம்ப அழகா இருக்கு த்தான், நான் இப்பதான் முதல் வாட்டி ஹோட்டல்ல தங்குறேன்.”

“வெளியூர் போனா எங்க தங்குவீங்க?”

“வெளியூரா?! சொந்தக்காரங்க வீட்டுக்கே அம்மா போக விடமாட்டாங்க.” 

“ஹா… ஹா…” டீயை முடித்திருந்த ரிஷி மனைவியைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்.

“என்னோட மாமியாருக்குப் பயம்.”

“என்ன பயம்?!”

“இவ்வளவு அழகாப் பொண்ணுங்களைப் பெத்து வெச்சிருக்கோமே… யாராவது தூக்கிட்டுப் போயிட்டா?! அப்பிடீன்னு பயம்.”

“சும்மா போங்க த்தான், நீங்க வேற கேலி பண்ணிக்கிட்டு!” அந்த உரிமையான சிணுங்கலை ரசித்தான் கணவன்.

“அது உண்மைதானே பவி, அன்னம்மாவே ஒரு தடவை அதை எங்கிட்டச் சொன்னாங்க.” அவன் சீரியசான குரலில் சொல்லவும் இப்போது பவித்ரா சிரித்தாள்.

“வேலைன்னு ஆரம்பிச்சப்போ வெளியே போகக்கூட அவ்வளவா விடமாட்டாங்க.”

“உன்னை எப்பிடி வேலை பண்ண விட்டாங்க பவி?”

“அப்பாதான் சொன்னாங்க, பொண்ணுங்க சுயமா சம்பாதிச்சு அவங்க கால்ல நிற்கணும்னு.”

“ம்… நல்லவேளை, இந்தத் தங்க விக்கிரகத்தை யாரும் தூக்கிக்கிட்டுப் போயிடல்லை.” அவள் நெற்றியோடு தனது நெற்றியை மோதியவன் அவள் கையிலிருந்த கப்பை வாங்கி அப்பால் வைத்தான்.

“அங்க இருக்கிற ஹோட்டலும் இப்பிடித்தான் இருக்குமா த்தான்?” தயங்கிய படி கேட்டது பெண்.

“எது பவி? நம்ம ஹோட்டலா?”

“ஆமா.”

“ஒரு சிலது இதைவிட பெட்டரா இருக்கும் டா.”

“அதெல்லாம் சிட்டியில இருக்குமோ?”

“ஆமா, பெரிய சிட்டீஸ் ல இருக்கிறது எல்லாமே டூரிஸ்ட்டை டார்கெட் பண்ணி டிஸைன் பண்ணி இருக்கோம்.”

“ஓ…”

“அங்க போனதும் நாம ரெண்டு பேரும் எல்லா இடத்துக்கும் ஒரு ட்ரிப் போகலாம்.”

“ம்…” ஆர்வமாகத் தலையாட்டிவளை ஆசையோடு நெருங்கினான் ரிஷி. அந்தப் பார்வையின் அர்த்தம் பெண்ணுக்குப் புரிந்தது.

“வீட்டுக்கு… எத்தனை மணிக்குப் போறோம் அத்தான்?” என்றாள் பேச வேண்டுமே என்பதற்காக.

“போகணுமா பவி?”

“இதுக்கு மேலயும் போகலைன்னா… நல்லா இருக்காது…” அவள் தயங்கிய படியே சொல்லிய விதத்தில் சட்டென்று சிரித்த ரிஷி அதன்பிறகு தாமதிக்கவில்லை. ரூமிற்கே வரவழைத்திருந்த காலை உணவை உண்டுவிட்டு முதலில் பவித்ராவின் வீட்டிற்குப் போனார்கள்.

அங்கே இன்னும் கல்யாணக் கூட்டம் குறைந்த பாடாக இல்லை. விருந்தினர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள். ரிஷிக்கு இதுவெல்லாம் பிரமிப்பாக இருந்தது. அவன் வாழும் ஊரில் இப்படியெல்லாம் கூட்டம் கூட மாட்டார்கள். நல்லதோ கெட்டதோ… அது நடந்தேறும் முறையே வேறு.

கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தாலும் ரிஷி இதையெல்லாம் ரசித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அவனது அசௌகரியத்தை உணர்ந்து கொண்ட பெண் வீட்டார் அவனை வெகுவாகக் கவனித்துக் கொண்டார்கள். இதெல்லாம் போதாதென்று ரேணுகாவை இன்னொரு கவலை ஆட்டிப்படைத்தது. வாராது வந்த மாணிக்கம் போல தங்களுக்கு வந்து வாய்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் தங்கள் பெண்ணுக்கும் திருஷ்டி பட்டுவிடுமோ என்று பயந்து போனார்.

“அகல்யா.”

“என்னம்மா?”

“அக்காவையும் அத்தானையும் யாருக்கும் தெரியாத மாதிரி அவங்க ரூமுக்கு கூட்டிட்டுப் போ.”

“இப்போ எதுக்கும்மா?”

“சொன்னதைச் செய்!” ஒரு அதட்டல் மாத்திரமே பதிலாக வந்தது. அம்மா சொன்னதைப் பெண் செய்து முடித்த சற்று நேரத்திலேயே அம்மாவும் அங்கே வந்துவிட்டார்.

“மாப்பிள்ளை… நீங்க ரூம்லயே இருந்து ரெஸ்ட் எடுங்க, வெளியே கூட்டம் ஜாஸ்தியா இருக்கு.”

“பரவாயில்லை அத்தை, நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்குவேன்.”

“இல்லையில்லை… நீங்க இங்கேயே இருங்க.” பதட்டத்தோடு சொல்லி விட்டுப் போகும் மாமியாரை விசித்திரமாகப் பார்த்தான் ரிஷி.

“என்னாச்சு பவி உங்கம்மாக்கு?!”

“அவங்க மாப்பிள்ளைக்கு யாராவது கண்ணு வெச்சிடப் போறாங்கன்னு பயப்பிடுறாங்க.”

“அட ஆண்டவா!” சலித்துக் கொண்டவனுக்கு சட்டென்று அன்று பாஸ்கர் தன்னிடம் தனிமையில் பேசிய போது சொன்னது ஞாபகம் வந்தது.

“பவி…”

“என்ன த்தான்?”

“அத்தைக்கு இந்தக் கல்யாணத்துல அவ்வளவு இஷ்டமில்லை இல்லை?”

“அப்பிடி யாரு சொன்னா?!” திகைத்துப் போய் கேட்டாள் பெண்.

“யாரும் சொல்லலை, எனக்கே புரிஞ்சுது டா.”

“இஷ்டமில்லைன்னு இல்லை, அவங்களை விட்டு நான் தூரப் போயிடுவேனேன்னு ஒரு கவலை, அது எல்லா அம்மாமாருக்கும் இருக்கிற கவலைதானே த்தான்?”

“கண்டிப்பா.”

“அம்மாவை நீங்க தப்பா நினைக்கக் கூடாது.”

“சீச்சீ… என்ன பேச்சு இது? இன்னைக்கு அவங்களை இவ்வளவு பரபரப்பா, சந்தோஷமாப் பார்க்கிறது ரொம்ப நல்லா இருக்கு.” 

“கஷ்டமோ சந்தோஷமோ… அப்பா சட்டுன்னு தன்னோட உணர்வுகளை வெளில காட்டிடுவார், ஆனா அம்மா அப்பிடியில்லை.”

“ம்…” 

“பொண்ணுங்களைப் பெத்திருக்கோம்னு ரொம்ப நிதானமா யோசிப்பாங்க, முடிவெடுப்பாங்க.” இப்போதெல்லாம் முன்பைவிட கொஞ்சம் அதிகமாகவே தன்னிடம் பேசும் மனைவியை குறும்பாகப் பார்த்தான் ரிஷி.

“நிதானமா யோசிச்சு முடிவெடுத்துத்தான் நாலு பொண்ணுங்களைப் பெத்தாங்களா பேபி?” அந்த ‘நாலில்’ அவன் அழுத்தம் கொடுக்க பவித்ரா சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஹா… ஹா… ரொம்ப நிதானந்தான்.” மேலும் மேலும் ரிஷி பொங்கிச் சிரிக்க அவன் கையில் லேசாக ஒரு அடி வைத்தவள் வெளியே போய்விட்டாள்.

அதன் பிறகு மறுவீடு போவது, ஊரைச் சுற்றிப் பார்ப்பது, ஷாப்பிங் பண்ணுவது, இரு குடும்பத்தோடும் நேரம் செலவழிப்பது என்று ரிஷி தம்பதியருக்கு நேரம் நிற்காமல் ஓடியது. பெரும்பாலான பொழுதுகளை பவித்ராவின் வீட்டிலேயே கழித்தான் ரிஷி. இனிமையான இரவுப் பொழுதுகள் மட்டும் ஹோட்டலில் கழிந்தது. 

இனிக்க இனிக்கக் காதல் புரிந்த கணவனின் மேல் மங்கை பித்தாகிப் போனாள். அவள் இயற்கையிலேயே அழகி! இப்போது புதிதாக முளைத்த உறவில் இன்னும் மெருகேறி தங்கம் போல ஜொலித்தாள்.

ரிஷியும் அந்த ஒருமாத கால வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை உறவுகளை இதுவரை அவன் பார்த்ததே இல்லையே! புத்தம் புது மனைவி அவன் சித்தத்தைப் பித்தாக்கி நித்தம் அவளை நாட வைத்தாள். போதாததற்கு அவளைச் சார்ந்த உறவுகளும் அவனைத் தாங்கிக் கொண்டன.

அன்னபூரணி வெகுவாக மகிழ்ந்து போனார். இதுவரை ஒற்றை மரமாக நின்ற தன் தங்கை மகனைத் தாங்கிக் கொள்ள இத்தனை உறவுகள் அமைந்து போனதில் அவருக்கு அத்தனைப் பூரிப்பு! நடுவே ரிஷியும் பவித்ராவும் கொழும்பு சென்று வீசா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் முடித்துவிட்டு வந்திருந்தார்கள்.

ஒரு மாதம் பஞ்சு போலப் பறக்க ரிஷி தம்பதியர் இங்கிலாந்து கிளம்பும் நாளும் வந்து சேர்ந்தது. கண்ணீரும் கம்பலையுமாக இரு குடும்பமும் விடை கொடுக்க விமானம் ஏறினார்கள் ரிஷியும் பவித்ராவும். 

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் யூ எல் 503 விமானம் கொழும்பிலிருந்து புறப்பட்டு லண்டனை வந்து சேர்ந்தது.

வாழ்க்கையின் மேடு பள்ளங்களை இனி ஒவ்வொன்றாகப் பார்க்க ஆயத்தமாகிறார்கள் ரிஷியும் பவித்ராவும்! 

Leave a Reply

error: Content is protected !!