jeevanathiyaaga_nee – 20

JN_pic-48cd100c

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 20

ஜீவா சோர்வாக அவன் வீட்டை நோக்கி சென்றான். ‘அப்பாவுக்கு கோபம் இருக்குமுன்னு தெரியும். ஆனால், அப்பாவோட கோபம் சரியே ஆகாதோ?’ என்ற சந்தேகம் அவன் மனதில் புதிதாக எழ அவன் நடையில் இன்னும் தளர்வு வந்தமர்ந்து. மெதுவாக அவன் வீட்டிற்குள் நுழைய, “ஜீவா…” அவன் வந்த கோலத்தில், தாரிணி அதிர்ந்தேவிட்டாள். “ஜீவா…” அவள் அவன் முகத்தை வலியோடு தடவினாள்.

             ‘என்ன நடந்தது?’ அவள் விழிகள் கண்ணீரோடு, அவனை கேள்வியாக நோக்க, அவனும் நடந்ததை சுருக்கமாகச் சொன்னான். “என்ன இப்படி அடிச்சிருக்காங்க?” அவள் அவன் உடலில் சிவந்திருந்த இடத்தை பார்த்து கதறிவிட்டாள். “தாரிணி, ஒண்ணுமில்லை மா” அவன் அவள் தலையை கோதி, ஆசுவாச படுத்தி தன்மையாக கூற, “இதை எல்லாம் நாம எதிர்பார்த்தோம் தானே தாரிணி” அவன் அவளை சமாதானம் செய்தான்.

“நான் எதிர்பார்க்கலை ஜீவா. நான் இப்படி எல்லாம் உனக்கு நடக்குமுன்னு எதிர்பார்க்கலை ஜீவா” அவள் அவன் முன் மண்டியிட்டு முகத்தில் அடித்து கொண்டு அழுதாள். “ஜீவா, உனக்கு இப்படி எல்லாம் என்னால் கஷ்டம் வருமுன்னு தெரிந்திருந்தால், நான் அன்னைக்கு உன்கிட்ட வந்திருக்கவே மாட்டேன் ஜீவா. நான் எங்கையாவது போய் செ…” அவள் முடிக்குமுன், “தாரிணி…” அவன் குரல் அவளை கண்டிப்போடு அழைக்க, அவன் கைகளோ, அவளை அன்போடு உரிமையாக இறுக்கமாக அணைத்துக் கொண்டது.

“தாரிணி, நாம இதுக்காகவா காதலித்தோம்? எல்லாரை போலவும், நாம காதலித்து ஊரை சுற்றலை. பரிசுகள் கொடுத்துக்கிட்டு சினிமா தியேட்டர் போகலை. வாழ்க்கையில் தோற்றுப்போக நம்ம காதல்  விடலை பசங்க காதல் இல்லை. நாம வாழ்க்கையில் ஜெயிக்கணும். சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுக்காக, நாம தளர்ந்து போக கூடாது” அவன் நம்பிக்கையோடு பேச, “ஏன் ஜீவா, நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? நாம காதலிச்சோம். ஆனால், அதைத் தவிர வேற என்ன தப்பு பண்ணோம்.  இந்த ஒரு விஷயத்துக்காக, நம்மை ஊரை விட்டு ஓட வச்சி…” அவள் அவன் மார்பில் சாய்ந்து விம்ம, “தாரிணி, இனி நடக்க வேண்டியதை மட்டும் நாம பேசுவோம்.” அவன் அவளை சமாதானம் செய்ய முயற்சித்தான்.

அவள் அவனிடமிருந்து சற்று விலக, அவன் காயங்கள் அவள் கண்ணில்பட, அவள் அவனை மென்மையாக தடவியபடி,

“நானும் உன் கூட இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்திருக்கணும் ஜீவா” அவள் முகத்தை துடைத்தபடி விசும்ப, “நல்லவேளை நீ அங்க வரலை தாரிணி. இனி, நாம அங்க ஒருநாளும் போக வேண்டாம் தாரிணி. உனக்கு நான். எனக்கு நீ. இது தான் நம்ம வாழ்க்கை.” அவன் மௌனமாக அமர்ந்துவிட்டான். தாரிணியும் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். அவனுக்கு ஆதரவாகவும், அவளுக்கு ஆதரவு தேடியும்.

***

கீதா தன் தந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் பிறந்த வீட்டில் தோற்று தன் புகுந்த வீடு திரும்பினாள். அவளோடு சென்ற ரவி எதுவும் பேசவில்லை.  நடக்கும் அனைத்தையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தான். கீதா அழுதபடியே அவர்கள் அறைக்குள் நுழைய ரவி  அங்கு நடந்தவற்றை தன் தந்தையிடம் விளக்கினான். ஷண்முகம் முகத்தில் மெல்லிய ஏளன புன்னகை.

 ‘யார் தயவும் இல்லாமல் எப்படி  வாழுவார்கள். ஜீவாவுக்கும் அத்தனை பெரிய வேலை இல்லை. தாரிணி செல்வச்செழிப்பில் வளர்ந்தவள். எத்தனை நாளைக்கு அவளால் ஜீவாவோடு தாக்கு பிடிக்க முடியும்? காதலாவது கத்திரிக்கையாவதுன்னு என் காலில் தானே விழ வேண்டும்’ எண்ணம் தோன்ற, தன் மீசையை கம்பீரமாக தடவிக்கொண்டே  ஷண்முகம் தன் வேலையை கவனிக்க சென்றார்.

அன்றைய நாள் இரவு பொழுதை தொட்டது.

கீதா மெத்தையில் குப்புற படுத்திருந்தாள். அனைத்தையும் சரி செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம் அவளுக்கு வருத்தமாக மாறி இருந்தது.  ரவி கீதாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் காத்தான். ஜீவா மீது அவனுக்கு பல கோபங்கள் இருந்தாலும், அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு இன்று ஜீவா அடிவாங்கும் பொழுது அவனுக்கு சற்று பாவமாகவே இருந்தது. ‘ஜீவா வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தால், நான் இன்று அவனுக்கு பரிதாபப்பட்டிருப்பேனோ? ஆனால், அவன் காதலித்தது என் வீட்டுப்பெண்ணை. அவன் விலை பேசியது, என் குடும்ப மானத்தை’ அவன் நெஞ்சோரத்தில் தோன்றிய பரிதாபமும், இந்த எண்ணத்தில் வெறுப்பாகவே மாறியது.

அவன் அறையில் குறுக்கும் நெருக்கும் நடக்க, தன் மனைவியின் விசும்பல் சத்தத்தில் அவனுக்கு அவளை பார்க்க சற்று பாவமாகவே இருந்தது. ‘கீதாவை பார்க்கும் பொழுது ஜீவாவின் எண்ணம் வருவதை விடுத்து, இப்பொழுதெல்லாம் ஜீவாவை நினைத்தாலும் கீதாவின் எண்ணமே வருகிறது. கீதாவின் வருத்தம், அழுகை எல்லாம் என்னை ஏதேதோ செய்கிறதே’ அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.

அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் தவித்தவன், மெல்ல அவள் அருகே சென்று படுத்துக்கொண்டு, அவள் மீது தன் கைகளை அரணாக்கினான்.  அவன் தீண்டலில் அவள் சட்டென்று எழ எத்தனிக்க, அவன் பிடியில் அழுத்தம் கூடியது.

“என்ன பண்றீங்க?” அவள் குரலில் இப்பொழுது வருத்தம் இல்லாமல், கேள்வியின் தொனியே இருக்க, “என் மனைவி அழற மாதிரி இருந்தது. அழும் பொழுது என் மனைவி அழகா இருக்காளான்னு பக்கத்தில் வைத்து பார்க்கலாமுன்னு வந்தேன்” அவன் அவள் கவனத்தை முழுதாக தன் பக்கம் திருப்பினான்.

“என்ன நக்கலா?” அவள் திமிர, அவன் அவளை முழுதாக சுற்றி வளைத்திருந்தான். அவளிடம் பெரிதாக எதிர்ப்பு இல்லை. மாறாக அவன் தீண்டலில் அவள் தேகம் நெகிழ தொடங்க, அவன் கரங்கள் அவளை மெல்ல உணர தொடங்க, அவன் இதயத்தில் மெல்லிய சாரல்.  ‘இன்னும் எதுவும் மாறவில்லை. நான் அவசரப்பட கூடாது.’ அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். “நீங்க எதுக்கு என் கட்டிலில் படுத்திருக்கீங்க? உங்க ரூமுக்கு போங்க” அவள் சற்று அதிகாரமாகவே கூற, “உன் கட்டில்ன்னு எங்க பெயர் எழுதிருக்கு கீதா?” அவன் பயந்தவன் போல் கேட்க, அவள் முகத்தில் மெல்லிய புன்முறுவல்.

அவன் அவளை சுற்றி வளைக்க, அவள் உருண்டு அவன் மேல் சாய்ந்து அவன் மீதே பிடிமானத்தை செலுத்தினாள். “கீது, நாம நாளைக்கு எங்கையாவது வெளிய போவோமா?” அவளை முழுதாக சமாதானம் செய்யும் எண்ணத்தோடு கேட்டான். “என்னை சமாதானம் செய்யறீங்களா?” அவள் கேட்க, அகப்பட்டுக் கொண்டவன் அதை  மறைக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல், “ஏன்? நான் என் மனைவியை சமாதானம் செய்ய கூடாதா?” என்றான் அவள் முகம் பார்த்து.

காதலித்த அவன் உள்ளம் கோபம் கொண்டு விலக எத்தனித்து வழமையாக  அவள் அருகாமையில் தடுமாறும். ஆனால், இன்று அவள் தன் தந்தையின் காலடியில் கண்ணீர் வடிக்க, அவள் கண்ணீர் முத்துக்களோடு அவன் கோபமும் மாணிக்க கற்களாய் சிதற அவன் அவள் பக்கம் முழுதாக அவள் காதல் கொண்ட கணவனாக மட்டுமே சிந்தித்தான்.

அவள் மௌனிக்க, “நாம நாளைக்கு எங்கையாவது வெளிய போவோமா கீது?” அவன் அதிலே குறியாக நிற்க, “இல்லைங்க…” அவள் மறுப்பு தெரிவிக்கும் முன், அவன் மெல்ல நிமிர்ந்து அவள் நெற்றியில் இதழ் பதித்து, “ப்ளீஸ் கீது…” என்றான் கண்களை சுருக்கி. அவன் குரலும், அவன் கண்களும் அவளிடம் கெஞ்ச, ‘ரவி எதுக்கு என் கிட்ட கெஞ்சனும்?’ அவள் விழிகள் அவன் விழிகளை பார்க்க, அவன் விழிகள் அவள் பதிலுக்காக காத்து நின்றன.

அவன் சுவாசக்காற்றும், அவள் சுவாசக்காற்றும் ஒன்றை ஒன்று தீண்ட, இதழ்களோ, அவர்கள் சுவாச காற்றின் இடைவெளியோடு மௌனத்தை எடுத்துக்கொண்டன. அவன் பேசவில்லை. அருகாமையில் தன் மனைவியை ரசித்தபடி அவள் பதிலுக்காக காத்திருந்தான். அவள் இதழ்களோ பேச மறந்து, அவள் எண்ண ஓட்டத்தை கவனிக்க ஆரம்பித்தது.

‘ரவிக்கு என் மீது என்ன இவ்வளவு அக்கறை? ரவி என் மீது கோபத்தை காட்டினாலும்,  அவன் கண்கள் அதை தாண்டி ஏதோ ஒன்றை வெளிப்படுத்த ஏங்கி, அதை மறைத்துக்கொள்கிறதோ? ரவிக்கு என் மீது கோபம். அது எனக்கு  தெரியும். ஆனால், அதை எல்லாம் தாண்டி, ஏதோ ஒன்று. கோபம் மட்டுமில்லை. கோபம் மட்டும் இருந்திருந்தா, இப்படி எல்லாம் என்கிட்டே ரவியால் பேச முடியாது.’ அவள் அவனை பார்த்தபடி அவன் மீதே வாகாக தன்னை மறைந்து சாய்ந்திருக்க, அவன் அவளை திருப்பி, தான் இத்தனை நிமிடங்கள் பிடித்து வைத்த பொறுமையை காற்றில் பறக்க விட்டவன் போல், அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “உன் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. நாம நாளைக்கு வெளிய போறோம்.” உல்லாசமாக அவர்கள் அறைக்குள் இருக்கும் தன் அறைக்கு செல்ல,  தன் கணவனை யோசனையோடு பார்த்தாள் கீதா.

கீதாவின் சிந்தையில் ரவி இருக்க, ரவியின் முழு எண்ணத்தையும் ஆக்கிரமித்திருந்தாள் கீதா.

***

கீதா மறுத்தும் ரவி அவளை கட்டாயப்படுத்தி வெளியே கிளப்பினான். இருவரும் வெளியே கிளம்ப, “அப்பா, நாங்க அப்படியே வெளிய கிளம்புறோம்” அவன் செல்ல எத்தனிக்க, “ரவி, நேத்து உன் நண்பன் விக்னேஷ் அவங்க தீம் பார்க்கு டிக்கெட்ஸ் கொடுக்க வந்தான். இன்னைக்கு அங்க ஏதோ பங்க்ஷன் நிறைய கடை எல்லாம் கூட உள்ளே இருக்குமுன்னு சொன்னான். நீங்க அங்க போயிட்டு வந்திருங்களேன்” ஷண்முகம் அவன் நண்பன் கொடுத்த நுழைவுசீட்டை கொடுக்க, ரவி ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான். சட்டென்று, “வேண்டாம் அப்பா. நாங்க இன்னைக்கு அங்க போகலை” அவன் அழுத்தமாக மறுப்பு கூற, “ஏன், ரவி? விக்னேஷ் கூப்பிட்டிருக்கானில்லை. போயிட்டு வாங்க” அவன் தாயும் கூற, “போலாம்ங்க…” கீதாவும் சம்மதம் தெரிவிக்க ரவி வேறு வழி இல்லாமல் தலை அசைத்தான்.

இருவரும் அந்த தீம் பார்க் நோக்கி காரில் பயணிக்க, ரவியின் முகத்தில் குழப்ப ரேகைகள்.  ‘ஜீவாவுக்கு பிரச்சனை கொடுக்கணும்னு எல்லா வேலையையும் கெடுத்து, விக்னேஷ் மூலமா கெடுதல் செய்து ஜீவாவை அவமானம் படுத்தணுமுன்னு அவனை இங்க வேலைக்கு வரவச்சோம். ஆனால், கீதாவுக்கு ஜீவா மேல இவ்வளவு பாசமுன்னு எனக்கு தெரியாது. கீதா அழுதா எனக்கு இவ்வளவு வலிக்குமுன்னு தெரியாது. இன்னைக்கு கீதா ஜீவாவை பார்த்துட்டா… திரும்பவும் கீதா வருத்தப்படுவாளே.’ தான் உண்டாக்கிய குழப்பத்தை எண்ணி தானே நொந்து கொண்டான். ‘என்னை வேற இங்க வரவச்சிட்டாங்க கீதாவோட. இன்னைக்கு கீதா, ஜீவாவை பார்க்க கூடாது.’ ரவி வேண்டுதலோடு அங்கு நுழைய, கலகலப்பான இடம், கடல் காற்று என ஈசிஆர் சாலையில் இருந்த அந்த தீம் பார்க்கிற்குள் கீதா சற்று உற்சாகமாக நுழைந்தாள்.

அப்பொழுது அங்கு கூட்டம் கூடியிருக்க, சிறுவர்கள் அங்கு குதூகலமாக ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர். கீதா, அந்த கூட்டத்தை நோக்கி செல்ல, “இங்க ஸ்டச்சு மேன் இருப்பாங்க. எல்லாரும் பார்த்ததா சொல்லுவாங்க. வாங்க, நாமளும் பார்ப்போம்” கீதா சொல்ல, “கீதா, நீ என்ன சின்ன குழந்தையா, அதெல்லாம் பார்க்க?” ரவி கொஞ்சம் கோபமாக கேட்டான்.

“சின்ன குழந்தைன்னு இல்லைங்க. அந்த ஸ்டச்சு மேன் பாவம் இல்லையா? எப்படி இப்படி அசையாம ரொம்ப நேரம் நிற்க முடியும். அதுவும் அந்த டிரஸ் போட்டுட்டு. பாவம் இல்லையா?” அவள் கூற, ரவி அவளை அங்கு அழைத்து செல்ல, அங்கு பல கார்ட்டூன் பொம்மைகள் நடனம் ஆடியபடி செல்ல, கீதாவின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. அப்பொழுது ஒவ்வொரு பொம்மையும் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கை கொடுத்து, கீதாவுக்கு கை கொடுக்கும் பொழுது ஒரு பொம்மையின் கைகள் மட்டும் நடுங்க, அவள் உள்ளுணர்வு ஏதோ சொல்ல கீதா அங்கு அசையாமல் நின்றாள்.

“கீதா போலாம்” ரவி அவளை இழுத்து செல்ல, அவள் தன் கணவனோடு சென்றாள். அவள் சென்றதும், அதை உறுதி செய்துவிட்டு அந்த பொம்மை தன் முகமூடியை கழட்டிவிட்டு கண்ணீரை துடைக்க, சற்று தூரம் சென்ற கீதா ரவியின் கைகளை உதறிவிட்டு, ‘அந்த பொம்மையின் தீண்டலில் நான் எதையோ உணர்ந்தேன். அந்த பொம்மையின் கைகள் ஏன் நடுங்கியது? அந்த பொம்மை யார்?’ என்ற கேள்வியோடு அந்த பொம்மையை நோக்கி ஓட, ஒதுங்கி நின்று கண்ணீரை துடைத்த பொம்மையை பார்த்து ஸ்தம்பித்து நின்றாள் கீதா. அந்த பொம்மை அவளை பார்க்காதப்படி விறுவிறுவென்று ரவியை நோக்கி நடந்தாள்.

“கீதா…” ரவி எதையோ கண்டுகொண்டவன் போல் அழைக்க, “நான் என் அண்ணன் வீட்டுக்கு போகணும்” அவள் கோபமாக சொல்ல, “கீதா, அப்புறம் போகலாம்” அவன் அழுத்தமாக கூற, “நான் இப்ப போகணும்” அவள் பிடிவாதம் செய்ய, இருவரும் ஜீவாவின் வீட்டிற்கு சென்றனர்.  மடமடவென்று படியேறிய கீதா, அவர்கள் வீட்டு கதவை கோபமாக தட்ட, தாரிணி முகத்தை சுளித்தபடி கதவை திறந்தாள்.

“எங்க அண்ணன் எங்க வேலை பார்க்கிறான்? என்ன வேலை பார்க்கிறான்?” கீதா கேள்வியாக புருவத்தை உயர்த்த, “…” அவளிடம் மௌனம்.  “உனக்கு என்னமா கவலை என் அண்ணனை பத்தி? உனக்கு உன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண கூடாது. உன் காதல் தானே முக்கியம்” கீதா எகிற, ரவி இரு பெண்களையும் பார்த்துக் கொண்டிருக்க, “சும்மா இங்க வந்து கத்துற வேலை எல்லாம் வேண்டாம். என் கணவனை எனக்கு பார்த்துக்க தெரியும்.” தாரிணியும் எகிற, கீதா தாரிணியின் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தாள்.

“என்ன தெரியும் உனக்கு? என்ன தெரியும்முன்னு கேட்குறேன்? உங்க காதல், என்ன கிழிச்சிது? என் அண்ணனை எங்க அப்பா அடிச்சி வெளிய அனுப்ப காரணமா இருந்திருக்கு உங்க காதல். உன் வீட்டை கூட உனக்கு எதிர்க்க தெரியலை. உனக்கெல்லாம் எதுக்கு காதல்? தைரியமா எதிர்த்து பெத்தவங்க சம்மதம் வாங்கி கல்யாணம் செய்ய தைரியம் இல்லாத நீ எல்லாம் ஏன் காதலிக்குற?” கீதா காட்டமாக கூற, தாரிணியிடம் மௌனம்.

“என் அண்ணனுக்கு படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காம செய்திருக்கான் உன் அண்ணன். என் அண்ணன் போற எல்லா இடத்திலையும் உங்க அண்ணனும், அப்பாவும் ஏதோ ஒரு விதத்தில் வேலையை கெடுத்து  விட்டு, இன்னைக்கு என் அண்ணன் என்ன மாதிரி வேலையில் இருக்கான் உனக்கு தெரியுமா? நீயும் உன் அண்ணனும் சேர்ந்து என் அண்ணன் வாழ்க்கையை கெடுத்துடீங்க. அவசரப்பட்டு வீட்டை விட்டு ஓடிவந்து, என் அண்ணனை நடு ரோட்டில் நிறுத்திட்ட” கீதாவின் கண்களில் கண்ணீர்.

“எங்க அண்ணன், எவ்வளவு புத்திசாலி, திறமையானவன் தெரியுமா? அவன் எப்படி நல்லா படிப்பான் தெரியுமா? கடைசியில் காதல்ங்கிற பெயரில் அவனை இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டியே. என்ன இழவு காதலோ? இதுல நீ என்ன சுகம் கண்ட? என்னத்த சாதிச்சிட்ட?” கீதா அவளை கேவலமாக மேலும் கீழும் பார்த்துவிட்டு மடமடவென்று செல்ல, ‘ஜீவா ஏதோ ஆஃபிஸில் வேலை பார்குறதாகத்தானே சொன்னான். ஆனால், கீதா பேச்சு அப்படி இல்லையே. எங்கையோ தப்பு நடந்திருக்கு’ கீதாவிடம் பதில் பேசமுடியாமல் மௌனித்த தாரிணி தன் சகோதரனிடம் பாய்ந்தாள்.

“நீ என் புருஷனை பலவிதமா அடிச்சிருக்க. இப்ப உன்னால் என்னை அடிக்க முடியலைன்னு உன் மனைவியை வைத்து அடிக்கறியா அண்ணா?” தாரிணி கண்ணீரோடு கேட்க, “அவ என் மனைவியா உன்னை அடிச்சிருந்தா, நான் அவளை என்னனு கேட்டிருப்பேன் தாரிணி. ஆனால், அவ ஜீவாவின் தங்கையா அடிச்சிட்டு போறா. உன் புகுந்த வீட்டை நீ தானே சமாளிக்கணும். இப்படி ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்தது நீ தானே?” அவன் வருத்தமான குரலில் கூறிவிட்டு மடமடவென்று வெளியேறிவிட்டான்.  

‘எல்லாமே தப்பா இருக்கே. இதை இப்படியே விட கூடாது. தப்பு பண்ணிட்டோம் அதனால், பொறுமையா இருக்கணும்னு நான் நினைத்தது பெரிய தப்பு போலையே. இவங்க யாரையும் சும்மா விட கூடாது. நான் செய்ய போகும் செயலில் இவர்கள் யாரும் எங்க பக்கம் வர கூடாது.’ தாரிணியின் சிந்தை மிக வேகமாக சிந்திக்க தொடங்கியது.

நதி பாயும்…