உயிரின் ஒலி(ளி)யே 8

உயிரின் ஒலி(ளி)யே 8

விடியலின் அழகை, இருட்டில் இருந்து வந்த பின்பு தான் முழுமையாய் ரசிக்க முடியும்.

அப்படி தான் ஆதினியின் வாழ்வில் இன்று பல வருடங்களுக்கு பின்பு வந்து விழுந்த முதல் வெளிச்சத்துண்டு அவள் முகத்தை பிரகாசமாக்கி இருந்தது.

மெல்லிய புன்னகையுடன் வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தாள்.

கீழ் நடுத்தட்டு வர்க்கத்தின் வர்ணனைகளுக்கு அசல் பொருத்தமாய் அமைந்து இருந்தது அந்த வீடு.

அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே அங்கு நிறைந்திருக்க ஆடம்பர பொருட்கள், எள்ளளவும் இடத்தை அடைக்கவில்லை.

உள்ளே நுழைந்தவள் தன் கைப்பையை மேஜையின் மீது வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

அதுவரை படுக்கையில் அசைவில்லாமல் படுத்திருந்த செல்வம் ஆளரவம் கேட்டு மெதுவாக திரும்பினார்.

ஆதினியின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவர் முகத்தில் யோசனையின் நிழல்கள் விழுந்தது.

உயிர்ப்பற்ற ஓவியமாய் வலம் வந்து கொண்டிருந்த தன் பெண்ணின் இதழ்களில் பல மாதங்கள் கழித்து கசிந்த புன்னகை, அந்த தகப்பனின் உதடுகளிலும் மகிழ்ச்சியை வர வைத்தது.

“ஆதினிமா” என்று அழைத்தவரின் குரலில் தான் எத்தனை வாஞ்சை!

வேகமாய் திரும்பிப் பார்த்தவளின் முகம் தந்தையின் முகத்தைக் கண்டு எப்போதும் போல் இப்போதும் கலங்கியது.

தன் கொடிய நாக்குகளால் நோய், கொஞ்சம் கொஞ்சமாக அவரைத் தின்று முடித்துவிட்டு கறிவேப்பிலையாய் படுக்கையில் எறிந்து இருந்தது.

அவருக்கு வாகாய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவளின் குரலிலோ ஏகத்துக்கும் பதற்றம்.

“ஏதாவது பண்ணுதாபா? உடம்பு ரொம்ப முடியலையா?” அன்பின் கேள்விகளாய் திணறடித்தவளின் விரல்கள் அவர்  கேசத்துக்குள் வாஞ்சையாய் ஊடாடியது.

ஆதினியின் பரிதவிப்பைக் கண்டவரின்  விழிகளில் லேசாய் நீர் கசிவு.

“ரொம்ப வலிக்குதாபா? ஹாஸ்பிட்டல் போலாமா?” பதறியபடி அவர் நெஞ்சை நீவிவிட்டாள்.

“இல்லைடாமா, ரொம்ப நாள் கழிச்சு என் ஆதினி குட்டி சந்தோஷத்தை பார்க்கவும் அப்பாவுக்கு கண்ணு கலங்கிடுச்சு” விழிகளிலிருந்த கண்ணீர்த்தடம், இப்போது அவர் குரலிலும்.

அதுவரை பதற்றத்தில் பரிதவித்துக் கொண்டிருந்த ஆதினியின் மனது அந்த பதிலில் நிம்மதியடைய, தந்தையின் முகத்தை சந்தோஷமாய்ப் பார்த்தாள்.

“அப்பா பல மாசம் கழிச்சு இன்னைக்கு இந்த உலகத்தை எதிர்த்து நின்னேன் தெரியுமாபா” பெருமையோடு ஆரம்பித்தவள் மகிழ்ச்சி பொங்க, பேருந்தில் இன்று நடந்து முடிந்தவைகளை சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்தாள்.

நத்தையாய் இதுவரை தனக்குள்ளேயே தன்னை குறுக்கிக் கிடந்தவள், முதல் முறையாய் தன் தலை நிமிர்த்தி இந்த வாழ்வின் வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறாள்.

அவள் வாழ்க்கை முழுக்க இந்த வெளிச்சத்தின் வீச்சம் தொடர்ந்து வீசுமா?

வினா எழுந்த அடுத்த கணமே அவர் முகத்தில் வேதனை கோடுகள்.

‘கடவுளே என் பெண்ணின் முகத்தில் வீசிய இந்த நம்பிக்கை கதிர்களை அழிக்காமல் காப்பாற்றி தா’ பிரார்த்தனையின் கேவல்கள் அவர் உள்ளத்தில்.

எதுவும் பேசாமல் தன்னையே வெறித்துக் கொண்டிருந்த தகப்பனை கண் சுருக்கிப் பார்த்தாள்.

“நான் சொன்ன விஷயம் கேட்டு உங்களுக்கு சந்தோஷமே இல்லையாபா?” சுணக்கத்தோடு கேட்ட மகளை இணக்கத்தோடு பார்த்தார்.

“சந்தோஷம் தான்டா. ஆனால் குடும்ப பாரத்தை தூக்கி சுமக்க வேண்டிய நான், உன் தோளிலே எல்லா கணத்தையும் போட்டுட்டு இப்படி படுத்து கிடக்கிறதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு” ஆற்றாமையும் இயலாமையும் சமவிகிதத்தில் கலந்திருந்தது அவர் குரலில்.

“அப்படி என்ன பெரிய பாரம்பா நான் சுமக்கிறேன்? இந்த வீட்டுலே நீங்களும் நானும் மட்டும் தானே… வேற யார் நமக்குனு இருக்கா?” வெறுமையாய் கேட்டவளின் பார்வை சுவற்றில் வீற்றிருந்த அன்னையின் முகத்தில் விழுந்தது.

எப்போதும் அவரைப் பார்க்கும் போது உதிர்க்கும் கண்ணீர், இப்போதும் உதிர தயாரான நேரம் அவள் அலைப்பேசி தொடுதிரையில்  ஒளிக்கீற்று.

எடுத்துப் பார்க்க, ராஜ் பெயர் கண்களில் மின்னியது.

“ரீச்டு?” அவன் ஒற்றைக் கேள்வியில் இவள் இதழ்களில் கற்றைப் புன்னகை.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

“யெஸ்” என்று ஆதினியிடமிருந்து வந்து விழுந்த பதில் குறுஞ்செய்தியைப் பார்த்தவனின் முகத்தில் நிம்மதி பெருமூச்சு.

முகத்தில் பூத்த முறுவலுடன் நிமிரும் போது விசில் ஒலி அவன் காதை நிறைத்தது.

பேருந்து நிறுத்தப்படப் போவதற்கான அறிவிப்பு இது.

திரும்பி அதிதியைப் பார்க்க அவளும் கைப்பையை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்து போகலாம் என தலையசைத்தாள்.

பேருந்திற்கு வெளியே காலை வைத்தவனின் கேசத்தை தென்றல் காற்று தலை கோதி வரவேற்றது. அதுவரை கசகசப்பில் சுருங்கிப் போய் இருந்தவனின் முகம் விரிய, வேகமாய் தன் மேல்சட்டையை ஒருமுறை இழுத்துவிட்டான்.

குளிர்காற்று அந்த இடைவெளியில் புகுந்து அவன் மீது மேலும் படர அவன் இதழ்களில் ஆசுவாச புன்னகை.

அதைக் கண்ட அதிதி, “ஹலோ, ஃப்ரெஷ் ஆப்பிள் மேன், இனி பஸ்லே வராதீங்க… அப்புறம் உங்களை ஜுஸ்ஸாக்கி தான் அனுப்புவாங்க” என்றாள் குறும்பு குத்தகை எடுத்த குரலில்.

அவள் வார்த்தையிலிருந்த கேலி ராஜ்ஜை சடாரென நிமிர வைத்தது.

“ஏன் என்னாலே முடியாதா?” கேள்வியாய் அசைந்தது அவன் உதடுகள்.

“நோ உங்களாலே அதெல்லாம் முடியாது. காரை வெச்சு சர்க்கஸ் காமிக்க மட்டும் தான் உங்களாலே முடியும். காரை கொஞ்சமாவது ஒழுங்கா ஓட்ட தெரியுதா?”  அவனைப் பொறிந்தபடியே வீட்டின் நுழைவு வாயிலை கடந்து சென்றாள்.

அதுவரை இதழில் தேங்கியிருந்த புன்னகை, அதிதியின் வார்த்தைகளில் வற்றிப் போக, மிளகாயின் காரம் ஏறியது அவன் முகத்தில்.

“டோன்ட் கமெண்ட் மை ட்ரைவிங் ஸ்டைல்”  கோபமாய் சொன்னபடி சாவியை சட்டையிலிருந்து வெளியே எடுத்தான்.

“எடுத்த உடனே ஹெவி ஸ்பீடுலே காரு பறக்க விடுறியே, ஸ்டண்ட் மாஸ்டரா டா நீ” அவன் பேசாதே என்று சொன்னாலும் அவள் வார்த்தைகள் மீண்டும் அங்கேயே வந்து நின்றது.

“நான் வேண்டாம்னு சொன்னா அதையே வேணும்னு பண்ணனும்னு சபதம் எடுத்து இருக்கியா அதிதி. ஜஸ்ட் ஸ்டாப் இட்” என்றான் கோபமாக கதவைத் திறந்தபடி.

“நான் ஏன் பேசக்கூடாது. உங்க ஆர்டர் எல்லாம் ஆஃபிஸ்ஸோட வெச்சுக்கோங்க. இங்கே நீங்க ஒரு டென்னென்ட் நியாபகம் இருக்கட்டும்” அசட்டையாய் உரைத்தபடி முன்னோக்கி நடந்தாள்.

“ஓய் யாரைப் பார்த்து டென்னென்ட்னு சொன்ன?” அவன் கோபமாய் வாயசைக்க அவளிடமோ எந்த பதிலும் வரவில்லை.

‘இப்படி அமைதியாய் இருப்பது இவளின் குணமல்லவே!’ சிந்தனையுடன் நிமிர்ந்த பொழுது தான், அவள் எதிர்திசையில் திரும்பியிருப்பதையே கவனித்தான்.

வேகமாய் அவள் தோளைத் தொட்டு திருப்பி தன்னைப் பார்க்க வைத்தவன், “அதிதி மறந்துட்டேனு நினைக்கிறேன். இங்கே நான் தான் ஓனர். யூ ஆர் டென்னென்ட்” அழுத்தமாய் வாயசைக்க அவளிடம் அசட்டையான தோள் குலுக்கல்.

“இந்த வியாக்கியானம் எல்லாம் போய்  தீரன் கிட்டே போய் பேசுங்க. குளறுபடி இருக்கிற வீட்டை வாங்குனது மட்டுமில்லாமல் குளறுபடியோட இருக்கிற ஒருத்தன் கூடேயும் கோர்த்து விட்டுட்டான் அந்த தீரன் பையன்”

அவள் கோபமாய் யாரை திட்டிக் கொண்டிருந்தாளோ அவனே ராஜ்ஜின் அலைப்பேசி அழைப்பில் தவறான நேரத்திற்கு ஆஜர் ஆகியிருந்தான்.

அதிதி சொன்ன வார்த்தைகளில் ராஜ்ஜின் முகத்தில் கோபத்திவலைகள் வழிய அதை துடைக்கும் முனைப்பாடு இல்லாமல் வேகமாய் வீடியோ காலை அட்டென்ட் செய்தான்.

எதிர் முனையில் “ஹாய் மச்சான்” என்று சந்தோஷமாய் ஒலித்த தீரனின் குரல் ராஜ்ஜின் முகத்தைக் கண்டதும் வேகமாய் மாறியது.

“ஆர் யூ ஃபைன்?” ஆராய்ச்சி பார்வை ராஜ்ஜின் மீது வீசியபடி கேட்க, “எப்படிடா ஃபைனா இருப்பேன், ஒரு காட்டு கத்தல் ராடச்ஷியை பக்கத்துலே வெச்சுக்கிட்டு?” நொடிப்போடு வாயசைத்தவனின் முகம், எதிரில் நின்று வாட்சை கழற்றுவதில் கவனமாய் இருந்த அதிதியின் மீது சலிப்பாக விழுந்தது.

அவன் இறுதி வார்த்தைகள் கேட்டு தீரனின் முகம் புன்னகை பூத்த பூச்செண்டாய்.

“ஆனாலும் அதிதியை நீ அப்படி சொல்லியிருக்கக்கூடாதுடா” தீரன் வேண்டுமென்றே சப்தமாய் சொல்ல ராஜ்ஜோ பொறுமையாக பேசும்படி அவனிடம் செய்கை செய்தான்.

கைப்பையை எடுத்து வைத்து கொண்டிருந்த அதிதி, தீரனின் இறுதி வார்த்தையில் வேகமாய் நிமிர்ந்துப் பார்த்தாள்.

“எப்படி சொல்லியிருக்கக்கூடாது?” கூர்மையாய் அவள் கேட்க, ராஜ்ஜோ அவளை சட்டை செய்யாமல் தீரனிடம் திரும்பினான்.

“எப்படிடா போகுது அங்கே. மிதுரா எப்படி இருக்கா?” ராஜ் வழக்கமாய் கேட்கும் கேள்வியை கேட்க, தீரன் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டான்.

“மச்சான், இதுவரை நல்லா தான்டா போயிட்டு இருந்தது. ஆனால் அமெரிக்காவுலே இருந்து மிதுரா ஃப்ரெண்டு ஒருத்தன் நம்ம கம்பெனியிலே வந்து ஜாயின் பண்ணான்டா. அப்போ ஆரம்பிச்சுதுடா தலைவலி. இன்னும் எனக்கு விடலை.  ட்ரூத் ஆர் டேர் கேம் விளையாடி என்னை ரெண்டு பேரும் டெய்லி சாவடிக்கிறாங்க” அவன் வரிசையாய் குற்றப்பத்திரிக்கை வாசிக்க ராஜ்ஜின் முகத்தில் முறுவல்.

“மச்சான் என்னடா சிரிக்கிற. ப்ளீஸ்டா என்னை எப்படியாவது காப்பாத்து. நான் அவனை பெங்களூருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி வைக்கிறேன். நீ கவனிச்சுக்கிறியா?” தீரன் கெஞ்சலாய் கோரிக்கை வைக்க அதிதி, அவன் என்ன பதில் சொல்ல போகின்றான் என்று வேகமாய் திரும்பிப் பார்த்தாள்.

ராஜ் இருகைகளையும் தோளுக்கு மேலே தூக்கி சடவு முறித்தபடி, “கிறுக்குங்க கூட மல்லு கட்டுறது எனக்கு ஒன்னும் புதுசில்லையே. அவனை அனுப்பி வை இந்த வீட்டுக்கு வர இரண்டாவது கிறுக்கையும் கவனிச்சுட்டா போச்சு” நொடிப்பாக சொன்னபடி அழைப்பை துண்டித்தவனின் பார்வை எதிரில் பத்ரகாளியாய் நின்று கொண்டிருந்த அதிதியின் மீது விழுந்தது.

எதிரிலிருந்தவளின் முகபாவனைகளிலேயே அவள் தான் பேசியதை தெள்ளத்தெளிவாக படித்துவிட்டாள் என்பது புரிய வேகமாய் டைனிங் டேபிளிலிருந்து எழுந்து அறைக்கு செல்ல எத்தனித்தான்.

ஆனால் அதிதி முன்னேற விடாதபடி அவன் முன்னால் வந்து அணைப்போட்டாள்.

“யார் அந்த கிறுக்கு?” கத்தியின் கூர்மையாய் அவள் வார்த்தைகள் வந்து  விழுந்தது.

“எந்த கிறுக்கு? என்ன சொல்றேனு புரியலை அதிதி” அவனிடம் பாதரச நழுவல்.

“தெளிவா நீங்க பேசுன வார்த்தையைப் படிச்சுட்டேன் ராஜ். மழுப்பாதீங்க” அவள் விடாப்பிடியாக கேட்க ராஜ் மூக்கில் பெருமூச்சின் வெளியேற்றம்.

வீட்டிற்குள் நுழைந்த போது ஆரம்பித்த சண்டையே இன்னும் முடியாமல் இருக்கும் போது அதற்குள்ளேயே இரண்டாவது சண்டை போட அவன் உடம்பில் சுத்தமாக தெம்பு இல்லை.

தற்பொழுதிற்கு இவளிடமிருந்து தப்பிப்பதே உசிதம் எனப்பட வேகமாய் நழுவத் தொடங்கினான்.

“நான் கிறுக்குனு சொல்லலை அதிதி முறுக்குனு சொன்னேன். நீ என் வாயசைவை மாத்திப் படிச்சுட்ட” அவன் சமாளித்தபடி முன்னோக்கி நடக்க முயல அவளோ கண்களை சுருக்கி அவனைப் பார்த்தாள்.

“நோ நீ கிறுக்குனு சொன்ன” அவள் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்க அவனோ,
“நான் முறுக்கு தான் சொன்னேன்”  சலிக்காமல் பதிலுக்கு மல்லு கட்டினான்.

“கிறுக்கு ராஜ்”

“முறுக்கு அதிதி”

“கிறுக்கு”

“முறுக்கு”

“கிறுக்”

“முறுக்”

பதிலுக்கு பதில் கிறுக்கு என்று வாயாடிக் கொண்டிருந்த அதிதியை, அவன் குழப்பியடிக்க தன்னையறியாமல்  “முறுக்கு” என்றுவிட்டாள்.

வெற்றி நிழல் ராஜ்ஜின் முகத்தில் விழ, “யெஸ் அதிதி அதே தான். அதே முறுக்கு தான்” என்றபடி டைனிங் டேபிளின் மேலிருந்த முறுக்கை எடுத்து அவள் வாயில் நொந்திவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.

சில நொடிகள் வரை நடந்தது என்ன என்பதை உணராமல் நின்றிருந்த அதிதியின் இதழ்களில் முறுக்கு ஊறி அதன் சுவை உணரத் துவங்கியதும் பட்டென்று சுயம் அடைந்தாள்.

வேகமாய் தன் வாயிலிருந்த முறுக்கை எடுத்தவளுடைய பிபி சாத்தியிருந்த அவன் அறை கதவை கண்டு எகிற, “நீயெல்லாம்” என்றவள் கோபமாய் கத்த வாயெடுக்க பதிலுக்கு “மியாவ்” என்ற குரல் ஒலித்தது.

வேகமாய் திரும்பி பூனைக்குட்டியை கெஞ்சலாக பார்த்தவள், “மியாவ் குட்டி இப்படி கோபமாக திட்ட வாயெடுக்கும் போதெல்லாம், சடன் என்ட்ரி கொடுக்கக்கூடாது ஓகேவா” என்றாள் பரிதாபமாக.

அதிதியின் கெஞ்சல் பூனைக்குட்டிக்கும் புரிந்து இருக்கும் போல வேகமாய் ஆமோதித்து தலையாட்டியது.

“குட் மியாவ் நீ” அவள் ஆசையாய்  அந்த பூனையிடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் அந்த வீட்டில் சட்டென்று மின்வெட்டு ஏற்பட்டது.

அதுவரை வெளிச்சமாய் இருந்த அதிதியின் முகத்தில் சட்டென்று இருளின் நிழல்.

இது நாள் வரை பூனையை தூக்க சங்கடப்பட்டுக் கொண்டிருந்த அதிதி இன்று வேகமாய் அதை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டாள்.

கைகளில் கிளைத்த நடுக்கத்தின் நதி நரம்புகள் வழி பாய, அந்த பூனைக்குட்டியை வேகமாய் தன்னுடன் இறுக்கினாள்.

அந்த கரிய இருள் அவள் கடந்து வந்த வாழ்க்கையின் கருமை பக்கங்களை புரட்ட முயல அவள் விழிகளிலிருந்து கோடாய் நீர் இறங்கியது.

நினைவுகளின் வெம்மை கதிர்கள் அவள் இதயத்தை எரிக்கப் பார்க்க அவளுக்கோ இப்போது தேவைப்படுவது, ஆசுவாசமாய் நிற்பதற்கு ஒரு துண்டு நிழல்.

வேகமாய் திரும்பியவள் அந்த இருட்டின் கரிய ஒளிக்கதிர்களை தன் ஒலிக்கீற்று கொண்டு கலைத்தாள்.

“ராஜ் எங்கே இருக்கீங்க?”

ஆனால் எதிர் திசையிலிருந்த காற்றில் ஓசை கிழிபடவே இல்லை.

“ப்ளீஸ் ராஜ் எனக்கு இருட்டுலே தனியா நிற்க பயமா இருக்கு” அவள் குரல் மன்றாடியது.

“கேன்டில் இருந்தா கொண்டு வாங்களேன். இல்லை என் பக்கத்துலே வந்து நில்லுங்களேன்” அவளின் கோரிக்கைக்கும் எந்த பதிலும் இல்லை.

“ப்ளீஸ் ராஜ் என்னை பழி வாங்காதீங்க. ஏதாவது சொல்லுங்களேன்” அவள் பொறுமையிழந்து கத்தவும், ராஜ் அவள் கையை வந்து பிடிக்கவும் சரியாக இருந்தது.

அதுவரை பிடிமானமில்லாமல் நடுங்கி கொண்டிருந்த விரல்களில் ராஜ்ஜின் கரம் சேரவும், அதை அழுத்தமாக பிடித்துக் கொண்டவள்,

“இவ்வளவு நேரம் கத்துனேனே பதிலுக்கு வரேனு கூட உன்னாலே சொல்ல முடியாதா ராஜ்?” அவள்யோசிக்காமல்  கேட்ட நொடி போன மின்சாரம் திரும்பவும் வந்து அந்த அறையை வெளிச்சப்படுத்தியது.

ஆனால் ராஜ்ஜின் முகத்தில் மட்டும் இருளின் திட்டுக்கள்.

உணர்வுகள் ஆர்ப்பரிக்கும் கடலாய் ரத்தமென சிவந்திருந்த அவன் முகத்தை முதலில் புரியாமல் பார்த்தாள்.

ஆனால் இறுதியாக தான் பேசிய வார்த்தைகள் மனச்சுவற்றில் எதிரொலித்து அடங்கவும் வேகமாய் தலையிலடித்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

‘உன்னாலே சொல்ல முடியாதா ராஜ்’ என்ற வார்த்தைகள் அவன் இதயத்தை எத்தனை கூராய் கிழித்திருக்கும்?

அவன் இயலாமையை குத்திக் காண்பிக்கும் ஆயுதமாய் என் வார்த்தைகள் மாறியிருக்குமே!

பதற்றத்துடன் நிமிர்ந்தவள், “சாரி ராஜ். ஐ டின்ட் மீன் இட்”  தயக்கமாய் சொல்ல வந்தாள்.

வேகமாய் கை நீட்டி அவள் பேச்சை நிறுத்திய, கார்த்திக் ராஜ்ஜின் முகம் அசைக்க முடியாத பனிப்பாறையாய்.

“என்னாலே பேச முடியாது அதிதி, நான் ஊமை.ஐ யம் ப்ளடி டம்ப்… யூ காட் இட்” அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பனிக்கத்தியாய் இதயத்தில் இறங்க, மொழியற்று நின்றாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!