jeevanathiyaaga_nee-27

JN_pic-907ca52c
Akila kannan

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 27

ஜீவாவின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு, தாரிணி மௌனமாக சாப்பிட, அங்கு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தன. சில நிமிட அமைதிக்கு பின், சத்யா இயல்பாக வருணிடமும், ஜீவாவிடமும் பேசியபடியே சாப்பிட்டு அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சத்யா தன் புத்தகத்தை புரட்டினாள். அவள் சிந்தை சங்கரை விடுத்து தன் தாயிடம் சென்றது. ‘அம்மா, கேட்குறது சரி தானே? நான் அம்மா முன்னாடியே சங்கர் கிட்ட பேசிருக்கலாமே. நான் ஏன் அம்மா கிட்ட மறைக்க ட்ரை பண்றேன்?’ அவள் தலையை குலுக்கினாள்.

“அம்மா, கிட்ட என்ன சொல்றது?” அவள் இதழ்கள் முணுமுணுத்தன. ‘ஷங்கர் என்கிட்ட எதையும் தெளிவா சொல்லலை. என் கிட்ட தான் வார்த்தைகளை வாங்குறான். ஷங்கர் என்னை காதலிக்குறதா இது வரைக்கும் என்கிட்ட நேரடியா சொன்னதில்லை.’ அவள் பெருமூச்சை வெளியிட்டாள்.

‘ஷங்கர் இருக்கட்டும். நான் என்ன நினைக்குறேன்?’ அவள் சுயஅலசலில் இறங்கினாள். தன் கண்களை மூடி அமர்ந்தாள். ‘ஷங்கர் எனக்கு கொஞ்ச நாள் தான் பழக்கம். ஆனால், ஷங்கர் நல்ல மாதிரி தான். உயிரை விடும் அளவுக்கெல்லாம் காதல் இல்லை. ஆனால், ஷங்கரை எனக்கு பிடித்து தான் இருக்கிறது.’ அவள் மனமும் அறிவும் ஒரே கோட்டில் பயணித்தது.

‘ஷங்கர் ஏதாவது பேசினால், அம்மா அப்பா கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு எடுப்போம். இப்ப இது பத்தி யோசிக்க வேண்டாம். முதலில் படிப்போம். அப்புறம் எல்லா விஷயத்தையும் பாப்போம்.’ அவள் தனது புத்தகத்தில் மூழ்கினாள்.

தாரிணி சமையலறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட, வயதான பெண்மணி ஒருவர் அவளுக்கு துணையாக வேலைகளை முடிக்க, வீட்டில் மற்ற வேலைகளை பார்த்து கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

“நீங்க  ஏன் ஐயா இப்படி வேலை பார்த்துட்டே இருக்கீங்க?” ஜீவா அவரிடம் உரிமையோடு கோபித்து கொள்ள, “உனக்கு பசிக்கிறப்ப நான் கொடுத்த டீக்கும் பன்னுக்கும் நீ எனக்கு உங்க வீட்டில் இடம் கொடுத்து தங்கவச்சிருக்க” அவர் கூற, “நீங்க இங்க நம்ம வீட்டில் வேலை பார்த்திட்டு கெஸ்ட் ஹவுசில் தங்கறீங்க. அவ்வுளவு தான். நான் உங்களுக்கு ஒன்னும் பெருசா செய்யலை. நான் மனமுடைந்து நின்ன காலத்தில், உங்க நம்பிக்கை வார்த்தையும், பசியோடு நான் நின்ன நேரத்தில், நீங்க கொடுத்த உணவுக்கும் நான் கைமாறே செய்ய முடியாது ஐயா.” ஜீவா கூற,

“இதெல்லாம் உன் பெருந்தன்மை ஜீவா” அவர் கூற, “இல்லை, ஐயா. சுயநலம். எங்க அம்மா, அப்பாவை எங்களால் கூட வச்சிக்க முடியலை. நாங்க செய்த தப்பு, எங்களுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கலை. நீங்க எங்க கூட இருக்கறதில், எங்களுக்கு கொஞ்சம் நிம்மதி.” ஜீவா கூற, தாரிணி அவனை மௌனமாக பார்க்க, ‘இதற்கு மேல் ஜீவாவிடம் எதுவும் பேச முடியாது’ என்று அவர் புன்னகையோடு அவன் தோளில் தட்டி கொடுத்துவிட்டு தன் மனைவியோடு தோட்டத்தில் இருந்த அவர்கள் இல்லம் நோக்கி நடந்தார்.

தாரிணியும், ஜீவாவும் அவர்கள் அறைக்குள் சென்றனர். ஜீவா, படுத்துவிட தாரிணி தூக்கம் வராமல் அறையின் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள். அவள் முகத்தில் தீவிர சிந்தனை இருக்க, ஜீவா எழுந்து அமர்ந்து அவளை கூர்மையாக பார்த்தான். தாரிணி அவனை கண்டு கொள்ளவது போலவே தெரியவில்லை.

“தாரிணி, என்  கிட்ட சொல்லாம, ப்ரோஃபெஸ்ஸர் வேலை அலுப்பா இருக்குனு,  எதுவும் காலேஜ் வாங்க பிளான் பண்றியா?” அவன் தீவிரமாக கேட்க, “….” அவனை பார்த்து கோபமாக முறைத்து,அங்கிருந்த  தலையணையை தூக்கி அவன் மீது எறிந்தாள். அவன் அதை லாவகமாக பிடிக்க, “நான் என்ன யோசிக்குறேன்னு உங்களுக்கு தெரியாது?” அவள் கோபமாக கேட்க, “சத்யா சொல்றது சரி தான். நீ எப்ப பாரு ப்ரோஃபெஸ்ஸர் மாதிரியே நடந்துக்குற.” அவன் ஆரம்பிக்க, “அது சரி, உங்களுக்கு உங்க பொண்ணு சொல்றது தான் சரியா தெரியும்” அவள் கண்கலங்க, அவள் கைகளை பிடித்து அவளை அவன் முன்னே அமர வைத்தான்.

“சத்யா பத்தி யோசிக்குற” அவன் அவள் முகம் பார்த்து நிதானமாக கூற, “யோசிக்கலை… பயப்படுறேன்” அவள் மூச்சு வாங்கி படபடக்க, அவள் மார்ப்பு ஏறி இறங்க, அவள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, அவள் கண்கள் அவனை பரிதவிப்போடு பார்த்தன. காதல் பேசிய அவள் விழிகள், அன்பை சுரக்கும் அவள் விழிகள் மகளை பற்றிய சிந்தனையில் இன்று அச்சத்தை தாங்கி கொண்டு நிற்க, அவன் நிதானித்தான்.

வீட்டை விட்டு வெளியே வந்த நாட்களில், தன் திருமணமான புதிதில் காதலால் அவள் கண்களில் தெரிந்த அச்சத்தை மீண்டும் தன் மகளின் காதல் என்ற எண்ணத்தில் அவள் விழிகளில் காண, ஜீவா இன்னும் நிதானித்தான். தன் மனைவிக்காக அவனிடம் வந்த நிதானம், இன்று மகளுக்காக என்ற பெயரில் இன்னும் இன்னும் வந்திருக்க, ஜீவா பொறுமையாக  அவள் கைகளை பிடிக்க, அவள் அவன் கைகளை தட்டிவிட்டு, “ஜீவா…” கதறலோடு அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய,

‘இவள் இப்படி அழும் அளவுக்கு ஒன்னும் நடக்கலையே?’ என்ற எண்ணம் ஜீவாவிடம் தோன்றினாலும், “தாரிணி… தாரிணிம்மா…” அவன் அவள் அழுகையை நிறுத்தும் விதமாக அவள் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தான்.

“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி அழற தாரிணி?” அவன் அன்பாக கேட்க, “சத்யா… சத்யா யாரையோ விரும்புறானு நான் நினைக்குறேன்.” அவள் கூற, அவனிடம் மௌனம்.  “சொல்லு ஜீவா. உனக்கு அப்படி தோணலையா?” அவள் கேட்க, அவன் அவளை ஆழமாக பார்த்தான். “சொல்லு ஜீவா” அவள் கேட்க, “சரி இப்ப சத்யா லவ் பண்ணா என்ன தப்பு?” ஜீவா அவளை பார்த்து பொறுமையாக கேட்டான்.

“அப்ப, சத்யா லவ் பண்றா?” அவள் கேட்க, “லவ் பண்ணிட்டு அவ எங்கையும் ஊரெல்லாம் சுத்தலை. நம்ம பொண்ணு அப்படி எல்லாம் நம்ம கிட்ட சொல்லாம பண்ண மாட்டா. ஆனால், காதலா இல்லாயான்னு ஒரு தடுமாற்றத்தில் இருக்கா. நம்ம காலம் மாதிரி இல்லையில்லையா? மொபைல் இருக்கு. சகஜமா பேசிக்கிறாங்க.” அவன் கூற,

“இப்ப தடுமாற்றத்தில் தான் இருக்கா. நாம, சத்யா கிட்ட பேசி புரியவச்சி இந்த லவ் எல்லாம் வேண்டாமுன்னு சொல்லிடுவோம் ஜீவா” தாரிணி வேகமாக கதவை நோக்கி செல்ல எத்தனிக்க, அவள் கைகளை பிடித்து நிறுத்தினான் ஜீவா. அவன் பிடியில் அழுத்தம் இருந்தது.

“என்ன தாரிணி பண்ண போற?” அவன் கேட்க, “இந்த காதல் வேண்டாமுன்னு சொல்ல போறேன்” தாரிணி உறுதியாக கூற, “நீ காதலிக்கலாம். ஆனால், உன் பொண்ணு காதலிக்க கூடாதா?” ஜீவா புருவத்தை உயர்த்த, “இப்ப என்ன சொல்ற ஜீவா? நாம காதலிச்சிட்டோம். அதனால், நீங்களும் காதலிங்கன்னு வருண் கிட்டயும் சத்யா கிட்டயும் சொல்லுவோமா?” தாரிணி கோபமாக கேட்க, “தாரிணி” ஜீவாவின் குரலில் கோபம் இருந்தது.

“இப்ப எதுக்கு ஒண்ணுமில்லாத விஷயத்தை பெருசு பண்றனு கேட்குறேன். விதண்டாவாதம் பண்ணாம இதை அப்படியே விடு. நீ போய் அட்வைஸ் பண்ணா எல்லாம் அதிகமாகும். நம்ம கிட்ட மறைக்கனுமுனு நம் பிள்ளைங்களுக்கு தோணும்.” அவன் கூற, அவள் நிதானித்தாள். அவள் நிதானத்திற்கு வந்ததும், “உங்க அம்மா அப்பா, என் அம்மா அப்பா நமக்கு பண்ணதை நாம நம் குழந்தைகளுக்கு பண்ணிட கூடாது தாரிணி” அவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டு கூற,

“இல்லை ஜீவா. இந்த காதல் நம் குழந்தைகளுக்கு வேண்டாம் ஜீவா. நம்ம வாழ்க்கை நம் பிள்ளைகளுக்கு வந்திற கூடாதுனு நான் பயப்படுறேன். இந்த காதலால் நாம எவ்வளவு கஷ்டப்பட்டோம்? மறந்துட்டியா ஜீவா? இந்த காதலால் தானே நாம இப்படி நிற்கறோம்.இப்படி அனாதையா, இபப்டி யாரும் இல்லாமல். நம் குழந்தைகளுக்கு பாட்டி தாத்தா இல்லாமல்.  உனக்கு என் ஆதங்கம் புரியலையா ஜீவா? இந்த காதலுக்கு நீ எப்படி சரின்னு சொல்ற ஜீவா ?” அவள் பரிதாபமாக கேட்க,

“காதலை நான் எப்படி வேண்டாமுன்னு சொல்லுவேன் தாரிணி? அந்த காதல் தானே எனக்கு உன்னை தந்துச்சு. நான் காதல் கஷ்டம் இல்லைன்னு சொல்லலை. ஆனால்… ” அவன் நிறுத்த, “உனக்கும் இதுல விருப்பம் இல்லை தானே ஜீவா?” அவள் கேட்க, “…” அவன் சிரித்தான்.

“என்ன கேள்வி இது தாரிணி? எந்த அப்பாவுக்கு பொண்ணு லவ் பண்ணா பிடிக்கும்? நான் தாரிணிக்கு காதல் கணவனா இருக்கலாம். சத்யாவுக்கு அப்பா தானே? என்னால் சத்யாவுக்கு ஒரு அப்பாவா மட்டும் தான் யோசிக்க முடியும்.” அவன் அவள் முகம் பார்த்து கேட்க, தாரிணியின் முகத்தில் சிந்தனை ரேகைகள். “ஆனால், காதலை ஏத்துப்பேன் தாரிணி. என் பொண்ணுக்காக ஏத்துப்பேன். அவ பக்கம் நிற்பேன். காதலிச்ச ஒரு காரணத்துக்காக நம்ம பொண்ணை நாம கஷ்ட்டப்பட விட கூடாது.” அவன் கூற, அவள் மெத்தையில் அமைதியாக அமர்ந்தாள்.

அவள் முன் அவன் மண்டியிட்டு அமர்ந்தான். அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டு, “உனக்கு புரியும்னு நினைக்குறேன் தாரிணி. இது ஒரு விஷயமே இல்லை. நேரம் வரும் பொழுது சத்யா சொல்லுவா. நம்ம கிட்ட சொல்லாம சத்யா எதையும் செய்ய மாட்டா. நீ பதட்டப்பட்டு அவளை நம்ம கிட்ட விஷயத்தை மறைக்கிற மாதிரி பண்ணிடாத”  அவன் கூற, விருப்பமில்லாமல் ஜீவாவிற்காக தலையசைத்தாள் தாரிணி.

“அப்ப சத்யா யாரையாவது விரும்பினா, நீ சம்மதம் சொல்லிடுவ?” தாரிணி அவன் முகம் பார்த்து வருத்தத்தோடு கேட்க, “என் கைபிடித்து நீ வந்த நாளிலிருந்து நான் நீ அப்படின்னு என்னைக்கு பிரிச்சி வாழ்ந்திருக்கோம் தாரிணி?” அவன் அவள் அருகே மெத்தையில் அமர்ந்தான். அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். “நல்ல பையனா இருந்தா, நாம பேசி பார்த்துட்டு சம்மதம் சொல்லுவோம் தாரிணி. அப்படி நல்ல பையன் இல்லைன்னு தோணுச்சுனா சத்யா கிட்ட பேசி புரிய வைப்போம்.” ஜீவா அவளுக்கு புரிய வைக்க, தாரிணி தலையசைத்தாள்.

“நம்ம அம்மா, அப்பா நமக்கு பண்ணினதை நாம நம்ம பிள்ளைகளுக்கு பண்ணிட கூடாது தாரிணி.” அவன் குரலில் உறுதி இருக்க, “நான் பொறுமையா  பக்குவமா நடந்துக்குறேன் ஜீவா” அவள் கூற, “இதுதான் என் தாரிணி. ப்ரொஃபெஸர் மேடம்க்கு அப்பப்ப நான் ப்ரொஃபெஸராக இருக்க வேண்டியதிருக்கு” அவன் சிரிக்க, அவள் அவனை செல்லமாக முறைத்து பார்த்தாள்.

தன் குழந்தைகளின் மீதான நம்பிக்கை ஜீவாவை பொறுமையாக செயல் பட வைத்தது. தன் குழந்தைகளின் மீதான அன்பு தாரிணியை படபடக்க செய்தது. அனைத்தும் தன் கைகளுக்குள் இருக்கும் என்றே ஜீவா நம்பினான். அதே நம்பிக்கையை தன் மனைவிக்கு கொடுத்து அவள் படபடப்பை தான் ஏற்றுக் கொண்டான் குடும்ப தலைவனாக.

** **

மறுநாள் காலை ரவியின் வீட்டில்.

ஷங்கருக்கு வழக்கத்தை விட சற்று முன்னதாகவே விழிப்பு தட்டியது. அவன் கண்களை திறக்கும் முன் அவன் விழிகளில் அவள் முகம். “சத்யா…” அவன் இதழ்கள் முணுமுணுத்தன. அவன் நெஞ்சை நீவிக்கொண்டு எழுந்தான். ‘இது என்ன நான் இப்படி எப்பயும் அவளையே நினைக்குறேன். அப்படி என்ன பண்ணிட்டா இந்த சத்யா என்னை?’ அவன் சிந்தை காதலுக்கு எட்டி நின்று கேள்வி கேட்டாலும், அவன் மனம் அவளை பற்றிய சிந்தனையோடு துள்ளி குதித்தது.

  தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்து, தன் வேலைகளில் மூழ்கினான். டீ- ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஜாக்கிங் செல்ல புறப்பட்டான். ‘நான் நேத்து சத்யா கிட்ட பேசினது சரியா? நான் தேவை இல்லாமல் ஒரு பொண்ணு மனசில் ஆசையை வளர்க்குறேனோ? நேரடியாவும் பேசாமல், படிக்குற பெண்ணை குழப்புறேனோ?’ அவனுள் குற்ற உணர்ச்சி எழ, “இல்லை, நான் இனி இப்படி செய்ய கூடாது. சத்யாவை முதலில் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வரணும். என் ஃபிரெண்டுனு அறிமுகப்படுத்தனும். அப்புறம் அடுத்த கட்டமாக வீட்டில் விஷயத்தை சொல்லிட்டு, சத்யா கிட்ட பேசணும்” அவன் கடகடவென்று திட்டம் தீட்டினான்.

 

  படியிறங்கியபடி, திட்டம் தீட்டியவன், திட்டம் தீட்டியதும், மீண்டும் படி ஏறினான் அவன் பெற்றோர் அறையை நோக்கி. ‘இல்லை, இப்பவே சொல்ல வேண்டாம்.’ அவனுள் குழப்பம் இருக்க படி இறங்கினான். ‘இல்லை, சொல்லிடுவோம். சீக்கிரம் சத்யாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவோம்.’ எண்ணம் தோன்ற, படி ஏறினான்.

யாழினி தன் தாயோடு பேசிக்கொண்டிருக்க, “அம்மா” அவன் அழைத்துக் கொண்டே உள்ளே செல்ல, கீதா அவனை மேலும் கீழும் பார்த்தாள். “என்ன அம்மா அப்படி பார்க்கறீங்க?” ஷங்கர் கேட்க, “இல்லை, என்ன காலையிலையே காத்து இந்த பக்கம் வீசுது. எழுந்ததும் உங்க தாத்தாவை பார்க்க தானே போவ?” என்று கீதா கண்களை சுருக்க, “அம்மா…” கோபிப்பது போல் அழைத்தான் ஷங்கர்.

“தாத்தாவுக்கு பேரன் அப்படினா, உங்களுக்கு மகன் இல்லைன்னு ஆகிருமா?” ஷங்கர் கேட்க, “ஓ… அப்படி…” கீதா புருவங்களை உயர்த்த, “அம்மா, நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?” ஷங்கர் வருத்தத்தோடு கேட்டான். “உங்க கம்பனி போட்டியாளர்கள் கிட்ட நீ கோபம் கொள்றது, துவேஷம் கொள்றது எல்லாம் எனக்கு பிடிக்கலை ஷங்கர். உங்க தாத்தா அந்த காலத்து ஆளு. நீயும் அப்படி இருக்கலாமா?” கீதா கண்டிப்போடு கேட்டாள்.

“அம்மா” அவன் தன் தாயின் தாடையை பிடித்து கொஞ்சி, “என் தாத்தாவுக்கு நான் செல்லம் தான். ஆனால், என் அம்மா சொன்னால் நான் கண்டிப்பா கேட்பேன். இந்த ஜீவா இண்டஸ்ட்ரீஸ் மட்டும் தாத்தாவுக்காக… ஒரு போட்டி அவ்வளவு தான் அம்மா. அதுவும் ஜீவா சார் கிட்ட நான் எந்த வம்புக்கும் போக மாட்டேன். ஜீவா சார் எங்கயாவது மீட்டிங்ல பார்த்தா என் கிட்ட அப்பப்ப பொதுவா பேசுவாங்க.” ஷங்கர் பேச கீதாவின் உள்ளம் துடித்தது.

‘என் அண்ணனை, என் மகன் மாமா என்று உரிமையாக அழைக்கும் நாள் வராதா?’ அவள் முகம் வாட, “அம்மா, நான் தான் உங்க பேச்சு கேட்குறேனே  அம்மா. நான் வம்புக்கெல்லாம் போகலை. உங்க முகம் வாடினால் எனக்கு தாங்காது அம்மா. தாத்தா முகம் வாடினாலும் பிடிக்காது அம்மா. தாத்தாவுக்காக தொழில் முறை போட்டி அவ்வுளவு தான்” ஷங்கர் பேச, கீதா உணர்ச்சி துடைத்த முகத்தோடு இருந்தாள்.

“அம்மா, அண்ணா தான் சொல்றானில்லை.” யாழினி தன் சகோதரனுக்கு பரிந்து பேச, “கீதா…” அவர்களை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த  ரவியின் அழைப்பில் தலையசைத்து கொண்டாள் கீதா. “அம்மா, அந்த வருண், ஜீவா சார்  மகன் ரொம்ப பேசுவான். ஒன்னு விடலாமுன்னு தோணும்” ஷங்கர் கூற, ரவியும், கீதாவும் ஒரு சேர அவனை திடுக்கிட்டு பார்க்க, “ஆனால், நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் அம்மா. உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான்.” ஷங்கர் கூற, “சரி விடு. ஷங்கர். இப்ப என்ன விஷயமா வந்த?” கீதா கேட்க, அவன் சற்று தயங்கினான்.

“அப்பா, அம்மா. எனக்கு ஒரு ஃபிரெண்ட்… பொண்ணு…  நான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரட்டுமா?” ஷங்கர் தயக்கத்தோடு கேட்க,  “என்ன கேள்வி இது ஷங்கர்? நீ இதுவரைக்கும் நிறைய  ஃபிரெண்ட்ஸை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க. இப்ப என்ன புது கேள்வி? கூட்டிட்டு வா” ரவி கூற, “ஃபிரெண்ட்ஸில் அவங்க பொண்ணா? இல்லை கேர்ள் ஃபிரெண்டா?” யாழினி அதிதீவிரமாக சந்தேகம் கேட்க, ‘கேடி, என்னை மாட்டி விட்டுருவா போலையே?’ ஷங்கர் தன் தங்கையை முறைத்து பார்த்தான்.

“இல்லை, நீ அங்க தனியா பேசின. படி ஏறின. அப்புறம் படி இறங்கின. அப்புறம் இங்க வந்து அம்மாவுக்கு ஐஸ் எல்லாம் பலமா வச்ச. நீயோ ஒரு கம்பனி எம். டீ. ஆனால், ஒரே ஒரு ஆளை வீட்டுக்கு கூட்டிட்டு வர பெர்மிஸ்ஸின் கேட்குற. ரொம்ப புதுசா இல்லை. அதுவும் அந்த பெர்மிஷனை தயங்கி தயங்கி கேட்குற. எப்படி கணக்கு பார்த்தாலும், நீ லவ் பண்றியோன்னு தோணுது அண்ணா” யாழினி ஏதோ புதிருக்கு பதில் கண்டுபித்தது போல் பேச, ஷங்கர் தர்மசங்கடமாக விழித்தான்.

“ஆக, உன் ரூமில் இருந்து படிக்காம, எங்க ரூமில் புக்கை கையில் வச்சிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு, நானும் அப்பாவும் என்ன பேசுறோம். அண்ணா என்ன பண்றான்னு பார்த்துகிட்டு இருக்க?” கீதா, தன் மகளின் தலையில் தட்ட, “அப்படி கேளுங்க அம்மா” ஷங்கர் தன் தங்கையை முறைக்க, “நீ கூட்டிட்டு வா ஷங்கர். உன் ஃபிரெண்ட்க்கு நம்ம வீட்டுக்கு வர உரிமை இல்லையா?” ரவி கூற, “அதானே” என்றாள் கீதா. ஷங்கர் தன் தங்கையை பார்த்து நாக்கை துருத்திக்கொண்டு சென்றான்.

“அம்மா, அண்ணா சரியில்லை. அவன்… ” என்று யாழினி ஆரம்பிக்க, “நீ படி…” என்று கீதா கண்டிப்பான குரலில் கூற, “அம்மா, நான் பேசுவேன். ஆனால், உங்களை சிக்கலில் மாட்டிவிட மாட்டேன். ஆனால், அண்ணன் உங்களை ஏதோ சிக்கலில் மாட்டிவிட போறான். அப்புறம் உங்க இஷ்டம்” யாழினி தோளை குலுக்கி கொண்டே தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

ரவி புருவத்தை கேள்வியாக உயர்த்த, கீதா தனக்கு தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினாள்.

 

“எனக்கு யாழினி சொல்றது சரின்னு தான் தோணுது. யாருங்க அந்த பொண்ணு? உங்களுக்கு தெரியுமா?” கீதா கேள்வியாக நிறுத்த, ரவி  விரக்த்தியாக சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” கீதா கண்களை சுருக்க, “அந்த பொண்ணு யாருன்னு தெரியலை. ஆனால், விதி ஷங்கர் ரூபத்தில் என் கூட விளையாட போகுதுன்னு நினைக்குறேன். தங்கைக்காக அவள் கூட என்னால் நிற்க முடியலை. என் மனைவிக்காக இத்தனை வருஷம் என்னால் எதுவும் பண்ண முடியலை. இப்ப மகனும் அந்த வரிசையில் சேர்த்திருவானோன்னு நினச்சேன். என் நிலைமையை நினைத்து நானே சிரிக்கிறேன்” அவன் கூற, கீதா ஸ்தம்பித்து நின்றாள்.

நதி பாயும்…