நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…9

தலைக்குப் பின்னால் கைகளை கோர்த்து கொண்டு ஆதித்யரூபன் கடற்கரை மணலில் படுத்திருக்க, அவனிடமிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக அவனையே பார்த்தபடி இருந்தாள் தேஜஸ்வினி.

பால்யகால நாட்களை நினைக்கும் ஒவ்வொருவருக்கும், அந்தக் காலத்திற்கே பயணித்து தங்கிவிடத் தோன்றும். ஆனால் ஆதியின் மனதிலோ அவர்களின் இளமைப் பிராயத்தை நினைக்கும் போது வலிகளும் வேதனைகளும் சூழ்ந்து மனது பாரமேறிப் போகும்.

விழிநீரில் கண்கள் பளபளக்கத் தொடங்க, தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாமல் இயலாமையுடன் எழுந்தமர்ந்தான் ஆதி.

கணவனின் துயரமும் கண்ணீரும் மனைவியையும் கலங்க வைக்க, அவளின் கைகள் தன்னால் அவனின் தலையை தன் தோள்களில் சாய்த்து கொண்டது.

“சாரி அத்தான்! மறந்து போனதை எல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தி விட்டுட்டேன்! விஷயம் என்னனு தெரிஞ்சுகிட்டா, உங்களை புரிஞ்சு நடந்துக்கலாமேன்னு தான் வற்புறுத்தி கேட்டேன். தப்புன்னா மன்னிச்சுருங்க… நீங்க சங்கடப்படாதீங்க!” அவனது முகம் பார்த்து இறங்கிய குரலில் விளக்கம் கூற, ஆதியிடம் பலமான வருத்தப் பெருமூச்சு வெளிப்பட்டது.

“எல்லாமே கையை மீறி நடந்துடுச்சு தேஜுமா! சில வருத்தங்களை வெளியே சொன்னா, மனசு லேசாகும். சில வேதனைகளை நாம நினைச்சு பார்த்தாலே மனசும் உடம்பும் ரணமாகிப் போகும். எங்களுக்கு நடந்த கொடுமைய நினைச்சாலே எனக்கு உள்ளுக்குள்ள பத்திக்கிட்டு எரியும்!” என்றவன் வேகமாக அவளிடமிருந்து விலகினான்.

“எங்கப்பாவை மீறி எங்களால அந்தக் கதிரேசனை ஒன்னும் பண்ண முடியல. இன்னைக்கு நானும் ஆனந்தனும் எந்த இடத்திலயும், இவ்வளவு ஏன்? எங்களுக்குள்ளேயே ஒட்டாம இருக்கிறதுக்கு, அவன்… அவன் மட்டுமே காரணம்!” பல்லைக் கடித்து ஆக்ரோஷமாக கனன்றவன், கடல் மண்ணை கைகளில் அள்ளியெடுத்து ஆவேசத்துடன் விசிறியடித்தான்.

ரௌத்திரம் தாளவில்லை அவனுக்குள்… எதையாவது, யாரையாவது போட்டு உலுக்க வேண்டுமென்ற ஆவேசம் அவனை புரட்டிப் போட்டு எடுத்தது.

மனதின் ரணம் குறையாமல் அடுத்தடுத்து இவன் மணலை அள்ளி எடுத்து வீசியபடி இருக்க, அங்கு நடமாடிக் கொண்டிருந்த வெளியாட்களின் பார்வைக்கு காட்சிப் பொருளாகிப் போனான்.

“என்ன பண்றீங்க த்தான்? கொஞ்சம் அமைதியா இருங்க! இல்ல, இங்கே இருக்க வேணாம். வாங்க ரூமுக்கு போவோம்!” ஆதியின் கையைப் பிடித்து எழ வைப்பதற்கே தேஜு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டாள். அவன் ஒருவழியாக நடக்க ஆரம்பித்ததும், கோபத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது.

சில அடிகள் நடந்ததும் கடலலைகளின் ஜதிகளோடு காற்றில் மிதந்து வந்த இசையின் ரீங்காரமும் சேர்ந்து அந்த மாலைப்பொழுதினை மயக்க வைக்க, அந்த இடத்தில் சிறிதுநேரம் அமைதியாக நின்று விட்டான்.

சிறிய மெல்லிசைக் கச்சேரியாக ஒரு குழு அங்கே பல்வேறு மொழிப் பாடல்களை இசைத்தபடி இருக்க, இருவரின் கவனமும் அதில் லயித்தது.

மொழி, இடம், காலம் என எந்தத் தடையும் இல்லாமல் எங்கும் வியாபிக்கும் தன்மை கொண்டது இசை. பழமையோ புதுமையோ மனதிற்கு அமைதி தரும் இசையை அனுபவிப்பதே ஒரு ஆனந்தம்.

அந்த மெல்லிசைக் குழுவினரின் பாடல் வரிசையில் தமிழ் பாடலாக ஒரு பழைய பாடல் ஒலிக்கத் தொடங்க, உறைந்த சிலையாக நின்று அனுபவித்து கேட்கத் தொடங்கினான் ஆதித்யன்.

அன்பு மலர்களின் சோலை அது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

சொந்தங்களே பந்தங்களே

சொர்க்கம் இதுவென்று சொல்லி மகிழ்கின்ற

அன்பு மலர்களின் சோலை இது…

பாடலின் ஒவ்வொரு வரிக்கும் பல அபிநயங்களை முகத்தில் காட்டினான் ஆதி. தனது கையை அழுத்திப் பிடித்ததிலேயே கணவனது இதயச் சிலிர்ப்பினை நன்கு உணர்ந்தாள் தேஜஸ்வினி.

“உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா இந்த பாட்டு?” மெதுவாகக் கேட்க அவனிடத்தில் பதிலில்லை.

கண்ணில் தெரியுது அன்பின் எல்லை

காணும் கனவுக்கு எல்லை இல்லை

மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை

மங்கலம் பொங்கிட என்ன குறை

கண்மணியே… சிறு பொன் விளக்கே…

முழு நிலவாய்… புது மலராய்

உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்…

பாடலின் சரணத்தில் ஆழ்ந்தவனாய் கண்களில் நீர் துளிர்க்க நின்றவனைப் பார்த்து தேஜு மிரண்டு போனாள்.

‘இவனை அசைத்து வைப்பது பாடலா, இசையா!’ எனத் தெரியாத நிலையில் அவனை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வரவும் பெரிதும் தயங்கிப் நின்றாள்.

அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்

அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்

இந்தப் பொழுது எனக்கினிமை

இருந்து வாழ்வது என் கடமை

வாழும் வரை… வாழ்ந்திருப்பேன்

வாழ்பவரை, வாழ்த்திச் செல்வேன்

பாடல் முடிந்தும் அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றான். கணவனின் மோனநிலையை அறிந்தவளாய்,

“மொபைல்ல இந்த சாங் போடவா த்தான்?” தேஜூ கேட்க, வேண்டாமென்று தலையசைத்து மறுத்தவன், ஆனந்தச் சிலிர்ப்பில் தலை உலுக்கிக் கொண்டான். 

“இந்த பாட்டு என் சிறுபிள்ளைத் தனத்தை எல்லாம் உரசிப் பார்க்குதுடா!” கனிவாக வந்த ஆதியின் வார்த்தையில் தேஜுவின் மனமும் நிம்மதி அடைந்தது.

பாட்டுக்கொரு கதையைச் சொல்லி சுபம் போடுவதை சினிமா, நாடகங்களில் கண்டிருக்கிறாள். சாதாரணமாய் நினைக்கும் ஒரு பாடலுக்கு இத்தனை உயிர்ப்பு இருக்குமா என்பதை கணவனின் சிலிர்ப்பில், சிலாகிப்பில் நேரிலே கண்டு அறிந்து கொண்டவளுக்கு மிகுந்த ஆச்சரியமாகிப் போனது.

“அப்பா பாக்கற நாளை நமதே படம் மாதிரியே இருக்கே!” தனக்குள் தேஜு முணுமுணுத்துக் கொண்டதை கண்டுகொண்டவனாக பெரிதாக சிரித்தான் ஆதி.

“இது எங்கம்மாவோட ஆல் டைம் பேவரைட் சாங் தேஜு! இதை கேக்காம அவங்களுக்கு ஒரு பொழுதும் நகராது. எங்களை தூங்க வைக்கிற நேரமும் இதே பாட்டுதான் பாடுவாங்க!” தாயின் நினைவில் மலர்ந்தவனின் முகத்தில் மீண்டும் துயரத்தின் சாயல் கூடிப் போனது.

“சொந்தபந்தம், உறவுகள் மேல அம்மாவும் அப்பாவும் அசையாத நம்பிக்கை வைச்சிருந்தாங்க! ஆனா, அதுவே அவங்களோட இறுதி முடிவுக்கு காரணமாயிடுச்சு!” என்றவன் கண்ணீரை அடக்க பெரும் பாடுபட்டான்.

“ஐ அம் ரியலி வெரி சாரி அத்தான்! பீ ரிலாக்ஸ்! போதும், இதுக்கு மேல எதுவும் நீங்க சொல்ல வேணாம். உங்க ஃப்ரண்ட் இல்லன்னா உங்க தம்பி கூட பேசுறீங்களா?” கணவனை மடைமாற்றும் முயற்சியில் மனைவி இறங்க, அவளையே இமைக்காமல் பார்த்தான் ஆதி.

வேதனையின் உறுமலில், களையிழந்த முகத்தோடு கண்களும் நாசியும் சிவந்திருக்க, அவன் நின்ற தோற்றத்தில் மனைவியின் மனம் பாகாய் உருகிப் போனது.

“கமான் ஆதி பையா!! நீ இப்படியே மூக்கு சிந்திட்டு இருந்தா, உன் ஆசை பொண்டாட்டிக்கும் அழுகை வரும். அந்த அழுமூஞ்சிய பார்த்து நீ பயந்து போயிடுவ பெரியவனே!” விளையாட்டாய் கண்டித்தவளின் பாவனையில் மெலிதாக இதழ் பிரித்தான்.

“வாவ்… இப்படிதான் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் சிரிங்க எஜமான்!” குறும்புடன் ஊக்குவிக்க, மென்சிரிப்பை உதிர்த்து மனைவியின் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான் ஆதி.

“உப்பு சப்பில்லாம சமாதானம் பண்றடி!” முகம் சுருக்கிக் கொண்டவனை புரியாமல் பார்த்தாள் தேஜு.

“ஒரு டைட் ஹக், டீப் கிஸ்ஸுக்கு எப்பவும் உன்கிட்ட பஞ்சப்பாட்டுதான்!” குறைபாட்டு படித்தவனாக, பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க, காரப்பார்வையில் கோபக்குடை விரித்தாள் மனைவி.

“நான் பக்கத்துல இருக்கும்போது ஸ்மோக் பண்ண மாட்டேன்னு பிராமிஸ் பண்ணி இருக்கீங்க த்தான்!” விழிகளை உருட்டி நினைவூட்ட,

“யாரு இல்லன்னு சொன்னா? நீ தானே டார்லிங் ரிலாக்ஸ் பண்ணிக்கச் சொன்னே! சோ… சம் டைம்ஸ் ரூல்ஸ் பிரேக் பண்ணலாம். தப்பில்லடி செல்லம்!” இலகுவாக பேசிக்கொண்டே, பற்ற வைத்துக் கொள்ள பிடுங்கி எறிந்தாள் தேஜஸ்வினி.

“இட்ஸ் டூ பேட் தேஜு! கொஞ்சநேரம் என்னை, என் போக்குல விடு!” ஆதி கோபமாக சொல்ல,

“இந்த கருமத்தை நீங்க அடியோட நிறுத்தணும்னு நான் மந்திரம் ஓதிட்டு இருக்கேன். என் முன்னாடியே ரூல்ஸ் பிரேக் பண்ணுவீங்களா? எந்தச் சூழ்நிலையா இருந்தாலும் என் முன்னாடி இதை தொடக்கூடாது.” வெடித்துப் பேசினாள்.

“நீ சொல்ற மாதிரி எல்லாம் பெர்ஃபெக்சனா இருக்க என்னால முடியாதுடி! இவ்வளவு சொல்றவ, எனக்கு இந்த நினைப்பு வராம இருக்க என்ன செய்யணுமோ அதை செய், இப்ப ரிலாக்ஸ் பண்ண விடு!” என்றவன் மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

“சிறப்பாவே செய்யுறேன் அத்தானே!” என்றவாறே வேகமாக சிகரெட்டை தூக்கி எறிந்தவள், அவனது கன்னத்தில் பலமாக கடித்துவிட்டு, “இந்த கவனிப்பு போதுமா? இதுல மறந்து போகுமா!” நமட்டுச் சிரிப்புடன் கேள்வியை பாட்டாகவே படித்து ஓட்டம் பிடித்தாள்,

“அடிக் கிராதகி! உன்னை…” பல்லைக் கடித்துக் கொண்டே அவளை துரத்த ஆரம்பிக்க, விரும்பியே வகையாய் கணவன் கைகளில் அகப்பட்டுக் கொண்டாள்.

உல்லாசக் கடற்கரையில் இருந்த அனைவருமே தேனிலவு ஜோடிகளின் பாவனையில் இருக்க, இவர்களின் வம்பு விளையாட்டை கண்டு கொள்வார் யாருமில்லை.

சுற்றுப்புறம் மறந்து மனைவியின் இரண்டு கன்னங்களையும் வலிக்கும்படி கடித்து வைத்த ஆதி, மாறாத வன்மையுடன் முத்தப் பரிசளித்து பழி தீர்த்துக் கொண்டான்.

இணையான தண்டனை, இளைப்பாறுவதற்கும் இதமாகிப் போக, இருவரின் மனநிலையிலும் தேனிலவின் தூறல் பொழிந்தது.

“என் செல்ல அத்தான் இல்ல… ப்ளீஸ், இது வேணாம்!”

“இதை மறக்க வைக்கிற எதையாவது ஒன்னை எனக்கு பழக்கப்படுத்து, நான் மாத்திக்கிறேன். அதுவரைக்கும் சாரி மை டியர் பியூட்டி!” என்றிவன் விடாக்கண்டனாக பற்ற வைக்கப் போக, சட்டென்று அவன் இதழில் மென்மையின் ஸ்பரிசம் தீண்டிச் சென்றது.

நடந்தை உணரும் முன்பே மனைவி விலகியிருக்க, “பாதியில விடக்கூடாது தேஜுமா, கண்டினியூ பண்ணுடா!” ஆசையுடன் மனைவியை இவன் அருகில் இழுக்க,

“மாட்டேன்… மாட்டேன்!” நாணத்தின் குழைவில் தலைகுனிந்து சிரித்தாள் தேஜு.

“ஆசைகாட்டி மோசம் பண்றடி! கிளம்பு நீ, வசூல் பண்ணாம விடமாட்டேன்!” மனைவியை தூக்கிச் சுமக்காத குறையாக அறைக்கு அழைத்து வந்தவன், மீண்டும் தனது தேவைக்கு அடிபோட, தேஜூ பிடிவாதமாக மறுத்தாள்.

“நீங்க ஸ்மோக் பண்ணாம இருக்க பிளே பண்ணேன். தட்ஸ் ஆல்!”

“வாட்? பிளேயிங் வித் மீ!” கோபத்தில் கடுகடுத்தவன் வன்மையாக அவள் இதழில் இளைப்பாறியே சமாதானம் அடைந்தான்.

“இந்த கேம் நல்லா இருக்கு தேஜுகண்ணா! இதை கண்டினியூ பண்ணுவோமா?” புருவம் உயர்த்திக் கேட்டவனைப் பார்த்தே, ஏதோ ஒரு ஏடாகூடத்தை அரங்கேற்ற பார்க்கிறான் என்பது அவளுக்கும் தெளிவாகப் புரிந்து போனது

ஆனாலும் கணவனுக்கு சளைக்காமல், ‘புரியல’ என பாவனையுடன் மறுக்க,

“நான் சொல்றதை நீ செஞ்சா… நான் ஸ்மோக் பண்றதை விட்டுறேன்டா!”

“இஸ் இட்! என்ன பண்ணனும் அத்தான்?” மனைவி விழி விரித்து கேட்க, முத்தப் பரிசொன்றை தந்து மடியில் அமர்த்திக் கொண்டான்.

“ரொம்ப சிம்பிள் தேஜுமா! என் லிப்ஸ் ஃபில்டர் கேக்குற நேரத்துல எல்லாம், உன் லிப்ஸ எனக்கு கடன் குடு! நானும் இந்த பேட் ஹாபிட்டை மறந்து, உனக்கான குட் ஹப்பியா மாறிடுறேன். டீல் ஓகேயா… கமிட் பண்ணிப்போமா?” உல்லாசப் பார்வையில் சில்மிஷத்துடன் கூறி முடித்தான் ஆதி.

இமை தட்டாமல் கணவனின் விதிமுறைகளை கேட்டவள், அவன் மார்பில் சராமாரியாக தாக்குதல் நடத்தி கோபத்தை வெளிப்படுத்த, அவளின் கைகளைப் பற்றியவன்,

“கூல் டவுன் பேபி! ஒரு தவுசண்ட் கிஸ் டார்கெட் வைச்சுப்போம்! சமாதானம், சமாதானம்!” தொடர் சீண்டலில் இறங்க, சண்டை சங்கமத்தில் முடிந்து, இதழ் ஆலாபனையில் ஒய்வு கொண்டது.

“ரோஸ்மில்க் கிளாஸ்ல, வோட்கா, ஸ்காட்ச் குடிக்கிற அடாவடியா இருக்கியே பேட்பாய்!” கணவனின் மார்பில் சாய்ந்தபடி, செல்லமாக அவன் கன்னத்தில் இடித்தாள் தேஜு.

“பெட்டுல இருந்துட்டு பேட்பாயா பெர்ஃபார்ம் பண்ணலைன்னா வரலாறு தப்பா பேசும் தேஜுமா!” கன்னத்தோடு கன்னம் இழைத்தே தேய்த்துக் கொண்டான் கொண்டான் ஆதி.

“இந்த அப்பாவிப் புள்ளைய வரலாறு தப்பா பேசிட்டாலும் உலகம் அழிஞ்சு போயிடும்தான். சரியான அப்பாடக்கர் பார்ட்டி, இந்த அம்மா பிள்ளை!” நொடித்துக் கொண்டவள், சட்டென்று நாக்கினை கடித்துக் கொண்டாள்.

‘ரொம்ப பேசிட்டோமோ! எங்க குடும்பத்துல இப்படியெல்லாம் பேசி பழக்கமில்லன்னு சொல்லிடுவாரோ!’ உள்ளுக்குள் எண்ணிய பதட்டத்துடன் கணவனைப் பார்க்க, அவன் முகம் மலர்ந்து சிரித்தான்.

“என்கிட்டே பேசும்போது உனக்கு எந்தவித தயக்கமும் பயமும் இருக்கக்கூடாதுன்னு சொன்னதை மறந்துட்டியா?” நினைவூட்டியவன், மறதிக்கு தண்டணையாக நெற்றியில் முட்டி பிள்ளை முத்தமும் வைக்க,

“ச்சோ ஸ்வீட் அத்தான்!” மனைவியின் கொஞ்சல் பாராட்டையும் வாங்கிக் கொண்டான்.

“நீ சொல்லலைன்னாலும் நான் எப்பவும் அம்மா பிள்ளைதான்டி! என் பத்து வயசு வரைக்கும் அவங்க கைக்குள்ள தான் நான் அடங்கி இருந்தேன். அவங்க இருக்கிற வரை, நான் பில்லோல தூங்கின ஞாபகம் எனக்கில்ல!” என்றவன் மீண்டும் ஆழ்ந்து பேசத் தொடங்கினான்.

“அஞ்சு வயசு வரைக்கும் அம்மா மடிக்கு நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுப்போம். சின்னவன் சித்தி வீட்டுக்கு போன பிறகு, தன் பொருளை பத்திரப்படுத்திக்கணும்னு அம்மா நினைச்சாங்களோ என்னவோ, அவ்வளவு அக்கறையா கண்ணுகுள்ளேயே வச்சு என்னைத் தாங்கிகிட்டாங்க!” ஏக்கப் பெருமூச்சுடன் நிறுத்தினான் ஆதி.

“பெத்த பிள்ளையை தெரிஞ்சே அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்கிறதெல்லாம் ரொம்ப கொடுமை. அத்தை ரொம்ப பாவம்!” தேஜுவும் கவலையில் கூற ஆமென்று ஆமோதித்தான் ஆதி.

“அம்மாவோட ஏக்கமும் கவலையும், எங்கப்பாவுக்கு புரிய வரும்போது எங்களுக்கு பத்து வயசு முடிஞ்சிருந்தது. அந்த கால கட்டத்துல ஆனந்தன்கிட்ட மூர்க்கத்தனமும் பிடிவாதமும் ஆழமா வேர்விட்டு வளர்ந்து எல்லார்கிட்டயும் கடுமையா நடந்துக்க ஆரம்பிச்சான். தனக்கு என்ன தேவைன்னு எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும் சொல்ல மாட்டான். சகஜமா பேசுறதைக் கூட மறந்து போயிருந்தான்.

அவன் வளர்ற விதம் சரியில்லாம இருக்குன்னு கவலைப்பட்ட எங்கப்பா இனியும் அவனை சித்தி வீட்டுல வளர விடுறது நல்லதில்லங்கிற முடிவுக்கு வந்தாரு!” உணர்ச்சிவசத்தில் ஆதியின் குரல் கரகரப்பதை கவலையுடன் பார்த்தாள் தேஜு.

“எவ்வளவு சொல்லியும் ஆனந்தனை மறுபடியும் எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க மறுத்துட்டான் அந்த கதிரேசன். கடைசி முயற்சியா படிப்பை காரணம் காட்டியாவது அவனை அங்கே இருந்து கூட்டிட்டு வர அப்பா முயற்சி பண்ணினார்.

எங்க ரெண்டு பேரையும் சென்னையில பெரிய போர்டிங் ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைக்கப் போறதால, தன்னோட அனுப்பி வைச்சே ஆகணும்னு உறுதியா சொல்லிட்டார். எப்பவும் அமைதியா பேசுறவர் கண்டிப்பா சத்தம் போட்டு ஆர்டரா சொல்லவும் அவர் பேச்சை மீற முடியாம கதிரேசனும் சித்தியும் சம்மதம் சொல்லிட்டாங்க!”

“அச்சோ… அத்தைக்கு இது இன்னும் ரொம்ப கஷ்டமா போயிருக்குமே! உங்க ரெண்டு பேரையும் விட்டு பிரிஞ்சு இருக்க அவங்க சம்மதிச்சாங்களா அத்தான்?” தவிப்புடனே கேட்டாள் தேஜு.

“எங்களை ஹாஸ்டல்ல விட்டாலும் அம்மாவும் அப்பாவும் அங்கேயே வீடெடுத்து தங்கி வாராவாரம் வந்து பார்த்துட்டு போறதா பிளான் பண்ணியிருந்தாங்க. அப்பாவுக்கும் தொழிலை சென்னைக்கு மாத்தி டெவலப் பண்ணிக்கனும்னு ஐடியா இருந்தது.

வீட்டுப் பெரியவங்ககிட்ட இந்த யோசனையை சொன்னா, எப்படியும் தடை சொல்வாங்கன்னு கணக்கு போட்டுத்தான், எங்களுக்கு ஹாஸ்டல்ல சேர்க்கிற வேலையை மொதல்ல கையில எடுத்தார்.” என்றவன் நொடிநேரம் மௌனமாகி கண்களை மூடிக்கொண்டு அமைதி காத்தான்.

அதற்கடுத்த நிமிடங்கள் அவன் முகம் கலவரத்தை தத்தெடுத்துக் கொண்டது. பெரும் பிரயளத்தை உள்வாங்கிக் கொண்டவனாக தனது வேதனைகளை எல்லாம் மொத்தமாக கொட்டத் தொடங்கினான்.

“எங்களை ஹாஸ்டல்ல விடுறதுக்காக, குடும்பமா சென்னைக்கு வேன்ல புறப்பட்டோம். எங்க குடும்பத்தோட  அருணாச்சலம் ஐயாவும் துணைக்கு வந்தாரு! போற வழியில பாதிக்கு மேல கரடுமுரடான பாதை. அங்கே தொடர்ந்து ரோடு போடுற வேலை நடந்திட்டு இருந்தது. அதனாலயே எல்லா வண்டியும் ரொம்ப மெதுவா மூவ் ஆகிட்டு இருந்தது.

அந்த நேரம், தார் ஜல்லியை ஏத்திட்டு வந்த தார் வண்டி ரோடு ரோலர் மேல மோதிடுச்சு. அப்படி மோதினதுல, பத்தடி பின்னாடி தள்ளி நின்னுட்டு இருந்த எங்க வேன் மேல ரோடு ரோலர் ஏறினதுல, எங்க வேனுக்கு பக்கத்துல நின்னுட்டு இருந்த கார் மேல எங்க வேன் கவுந்து ரெண்டு வண்டியும் ஒன்னோட ஒன்னு நசுங்கி விழுந்துடுச்சு! எல்லாரையும் வெளியே கொண்டு வர முயற்சி பண்ணின நேரத்துல காரும் வேனும் தீ பிடிச்சு எரிய ஆரம்பிச்சிடுச்சு!” என்றவன் பெருங்குரலெடுத்தே அழ ஆரம்பித்தான்.

அவனது அழுகுரலில் நடந்த விபத்தை அறிந்து கொண்டவளுக்கு மூச்சு விடவும் மறந்து போனது. ‘இத்தனை பயங்கரத்தை நேரில் கண்டவனின் மனம் எந்த அளவிற்கு பயந்திருக்கும். அதிலும் விவரம் தெரியாத சிறு வயதில் அனுபவிப்பதென்றால் கொடுமையின் உச்சம் அல்லவா அவர்களின் நிலைமை!’ நினைக்க நினைக்க தேஜூவின் மனமும் விக்கித்துப் போனது.

‘கண்டிப்பும் பொறுப்பும் கலந்த அன்பானவனாக இருப்பவன், தன் முன்னால் வளர்ந்த குழந்தையாக அழுது துடிக்கிறானே!’ என அவளுமே உள்ளுக்குள் துடித்துப் போனாள்.

“வேண்டாமே அத்தான்… உங்களை வருத்திக்காதீங்க!” என அவள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனதில் உள்ளதை கொட்டத் தொடங்கினான் ஆதி.

“திடீர்னு வண்டி புகைய ஆரம்பிச்சதில முன்னாடி உக்காந்திருந்த அம்மாவும் அப்பாவும் அங்கேயே கருகிப் போயிட்டாங்க. தீயை அணைக்கிற அளவுக்கு அந்த இடத்துல தண்ணியும் இல்லாம போனது எங்க துரதிர்ஷ்டம். அம்மாவையும் அப்பாவையும் இழுக்க நான் முயற்சி பண்ணினதுல என்னோட ஒரு பக்க முகத்தை நெருப்பு சூட்டு பொசுக்கிடுச்சு! பின்னாடி உக்காந்திருந்த அருணாச்சலம் ஐயாவுக்கும் ஆனந்தனுக்கும் கால்லதான் ரொம்ப பலமான அடி. ஜன்னல் ஓரத்துல ஆனந்தன் உக்காந்து வந்ததுல அவனோட இடதுகால், சீட்டுக்கடியில மாட்டி, முட்டிக்கு கீழே முழுசா நசுங்கிப் போச்சு!”

இதயத்தில் புதைத்து வைக்கப்பட்ட துக்கம், வளரும் வயதில் அன்பும் பாசமும் பறிக்கப்பட்ட சோகம் என எல்லாம் சேர்ந்து ஆதியின் மனதை அழுத்தி வைக்க கதறலுடன் வேதனைகளை வடிக்க ஆரம்பித்தான்.

தேஜஸ்வினிக்கு அவனை ஆற்றுப்படுத்தும் வழி யாதென்று தெரியவில்லை. ‘யாரிடமும் சொல்லி அழக்கூட வகையின்றி கண்ணீரில் தன்னைத்தானே குளிப்பாட்டிக் கொள்கிறான். எத்தனை வருடங்கள் அடைபட்டுக் கிடந்த இதயப் புழக்கமோ? கடவுளே!’ ஆதுரமிகுதியில் அவன் முகத்தை வேகமாக தன் இதயத்தில் பதுக்கிக் கொண்டாள் தேஜு.

‘இப்படி கதறியழும் குழந்தையின் துக்கத்தை எவ்வாறு போக்குவது?’ கேள்வியோடு அவளது விரல்கள் கணவனின் சிகையில் கோதி தாலாட்டுப் பாடின.

“அந்த கதிரேசன் மட்டும் எங்கப்பா பேச்சை கேட்டு, என் தம்பியை மறுபடியும் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுருந்தா, எங்களை சென்னைக்கு அனுப்பி படிக்க வைக்கிற முடிவையே எங்கப்பா எடுத்திருக்க மாட்டாரு! அந்த ஒருத்தனோட வக்கிரமான எண்ணத்துக்கு எங்க குடும்பமே பலி ஆகிடுச்சு!” அழுகை கலந்த வன்மத்துடன் கூறி முடித்தான் ஆதி.

“இப்ப உங்க சித்தப்பா, சித்தி, அத்தை எல்லாம் எங்கே இருக்காங்க அத்தான்? கல்யாணத்துக்கு கூட வந்த மாதிரி தெரியலையே!” தேஜு கேட்க, கசப்பான புன்னகை புரிந்தான் ஆதி.

“அவங்களை உறவுமுறை வச்சு கூப்பிடாதே தேஜு! அவங்களுக்கான தண்டனையை கடவுள் சீக்கிரமாவே கொடுத்திட்டார்.” வெறுப்புடன் நடந்தவைகளை கூறத் தொடங்கினான்.

“எங்களுக்கு விபத்து நடந்த ஏழு வருசத்துலேயே சிந்தாமணியும் கலாவதியும் அடுத்தடுத்து தவறிப் போனாங்க… அவங்க இறந்து போன கொஞ்சநாள்ல, ஃபோர்ஜரி கேஸ், பொண்ணுங்க விசயத்துலன்னு வகையா மாட்டி கதிரேசன் ஜெயிலுக்கு போயிட்டான். அவன் போன பிறகுதான் நானும் ஆனந்தனும் ஒரே வீட்டுல இருக்க ஆரம்பிச்சோம்!” விளக்கியவனை புரியாமல் பார்த்தாள் தேஜு.

“அப்போ உங்க பேரண்ட்ஸ் தவறின அப்புறமும் உங்க தம்பி உங்ககூட வந்து இருக்கலையா அத்தான்?” மனைவியின் கேள்வியில் மீண்டும் உடைந்து போனான் ஆதித்யன்.

“அந்தக் கொடுமையை சொல்லவும் எனக்கு பதறிப் போகுது தேஜு! என் முகத்துக்கு டிரீட்மெண்ட் பண்ணணும்னு கம்பெல் பண்ணியே என்னை தனியா கேரளா பஞ்சகர்மா சென்டர்ல தங்க வச்சுட்டான் ஆனந்தன்.

நெருப்பு பட்டதுல இடது கண் பார்வையும் பறி போயிருந்தது எனக்கு. பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சா கண் நரம்பு பாதிக்கப்படும்னு டாக்டர்ஸ் சொன்னதால முழுக்க கேரளா பஞ்சகர்மா டிரீட்மெண்ட் மட்டுமே எனக்கு நடந்தது. தீப்புண் ஆறின பிறகு அடுத்தவரோட கண்ணை எனக்கு பொருத்தி, நான் வெளி உலகத்தை பார்க்கும்போது ரெண்டு வருஷம் முழுசா போயிடுச்சு!

அந்த சமயத்துல தனக்கு நடந்த பல கஷ்டங்களை என்கிட்டே சொல்ல ஆனந்தன் மறுத்துட்டான். இன்னைக்கு வரைக்கும் சொல்லாம மறைச்சிட்டு இருக்கான். ரொம்ப வற்புறுத்தி கேட்டா, நீ தாங்கமாட்ட ஆதின்னு சொல்லிச் சொல்லியே, பல விசயங்களை என் கண் பார்வைக்கு வர முடியாதபடி பண்ணிட்டான்!” இடைவிடாமல் பேசி மூச்சு வாங்கினான் ஆதித்யன்.

கணவனின் வார்த்தைகளை கேட்டு தேஜுவால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. ‘ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை ஆனந்தன் மூடி மறைக்கிறானோ!’ என அவன் மேல் சந்தேகத்தின் சாயல் படிந்து போனது.

“எந்த நேரமும் நான் நல்லா இருக்கணும்னு நினைச்சே, என்னை இப்பவரைக்கும் ஆனந்தன் தள்ளி நிறுத்தி பாக்கறான். கேரளாவை விட்டு வந்த பிறகு நான் ஹாஸ்டல்லயும் அவன் சித்தி வீட்டுலயும் தான் தங்கி இருந்தோம்.

அந்த நேரத்துல எங்க சொத்துக்களை யார் பராமரிச்சது? சின்னாபின்னமான எங்கப்பா தொழில்களை எல்லாம் எப்படி யார் மீட்டுக் கொண்டு வந்தாங்கங்கிற விசயமெல்லாம் தெரிஞ்ச ஒரே ஆள் ஆனந்தன் மட்டுமே! அருணாச்சலம் ஐயாக்கு கூட பாதிதான் தெரியும். இருக்கிற எல்லா பாரத்தையும் தன் தோள் மேல போட்டுக்கிட்டு வலம் வர்றான் ஆனந்தன்.

எப்பவும் ஜாக்கிரதையா இரு! எங்கேயும் அசட்டுத்தனமான பழக்கம் வச்சுக்காதேன்னு அடிக்கடி எனக்கு சொல்லிட்டே இருக்கான். அவனை ஏறெடுத்து பார்க்க முடியாத கடைஞ்செடுத்த சுயநலவாதியா மட்டுமே நான் இருக்கேன்! என்னை நானே கேவலமா நினைச்சு காறித் துப்பிக்காத நாளில்லை!” படபடப்பாக கூறி முடித்தான் ஆதி.

“இந்த தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு தேவையில்லாதது அத்தான். நீங்களும் அவருக்காகவும் குடும்பத்துக்காகவும் எவ்வளவோ செய்றீங்க தானே! பின்ன எதுக்கு இவ்வளவு வருத்தப்படுறீங்க?” ஆறுதல் வார்த்தைகளை தேஜு, இன்னமும் மனம் கசந்தான் ஆதி. 

“என் மனசுலயும் மூளையிலயும் எங்கம்மா கத்துக் கொடுத்த அன்பும் இரக்கமும் மட்டுமே நிறைஞ்சு இருக்கு தேஜுமா! நான் கல் நெஞ்சக்காரன் இல்ல. ஆனா என்னைப் போலவே ஆனந்தனை எடை போட்டா அது பெரிய தப்பு.

அந்தக் கதிரேசன் விடுதலையாகி திரும்பவும் எங்களைத் தேடி வந்தா அவனை கொலை பண்ணவும் ஆனந்தன் தயங்க மாட்டான். அந்தளவுக்கு அவன் மேல வன்மத்தை வளர்த்து வச்சுட்டு நடமாடிட்டு இருக்கான்!” தம்பியின் சுபாவத்தில் பாதியை தனக்குள் ஒளித்து வைத்திருந்த ஆதியும் அடக்கப்பட்ட கோபத்தில் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!