jeevanathiyaaga_nee-9

JN_pic-29d1bf9c

jeevanathiyaaga_nee-9

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 9

காலை நேரம். சூரியன் அப்பொழுது தான் விடியலை தழுவி இருந்தான். ரவியின் வீட்டு தொலைபேசி சத்தத்தை எழுப்ப, அவர்கள் அறையில் இருந்த கார்ட்லெஸ் ஃபோனை காதில் வைத்தபடி திரும்பி படுத்தான் ரவி.

    எதிர்முனை பேச்சில் அவன் பெருங்குரலில் சிரித்தான். “குட்…நான் வரேன்” கூறிக்கொண்டு, சீட்டியடித்தபடி குளியலறைக்குள் நுழைந்தான். குளித்து முடித்து பேண்ட் அணிந்தவன், தன் தலையை துவட்டியபடி அறையை விட்டு வெளியே வந்தான்.

“கீதா, காபி” அவன் குரலில் அந்த வீடே அதிர்ந்தது.

‘இது என்ன அக்மார்க் புருஷன் மாதிரி என் கிட்ட உரிமையா காபி கேட்குறான்?’  அவன் குரல் வந்த திசையில் திரும்பினாள் கீதா.

காலையில் குளித்து, தலையை விரித்து போட்டு, அடி நுனியில் சின்னதாக ஒரு   முடிச்சிட்டிருந்தாள். பெரிதாக பூ போட்ட நைலான் சேலை கட்டியிருந்தாள்.

வீட்டில் வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். புஷ்பவல்லி, அவர்களுக்கு உத்தரவிட்டபடி கொஞ்சம் வேலை செய்து கொண்டிருந்தார்.

கீதவுக்கு அங்கு ஒரு வேலையும் இல்லை. அவள் தன் மாமியாரோடு அங்கு நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகனின் குரலில், “கீதா ரவி கூப்பிடுறான். உனக்கு வேலை வந்திருச்சு. ஓடு… ஓடு…” அவர் காபியை கொடுத்து தன் மருமகளை விரட்டினார். அவர் முகத்தில், அவர் செய்கையில் தன் மகனின் வாழ்வாது நல்லாருக்க வேண்டும் என்ற பேராவல் வெளிப்பட்டது.

கீதா தன் மாமியாரை ஒரு நொடி ஆழமாக பார்த்துவிட்டு, நிதானமாக படி ஏறினாள்.

சட்டென்று அவள் அறைக்குள் நுழைந்ததில், அவன் பரந்த மார்பின் மீது துண்டை போர்த்தி கொண்டு, தலை துவட்டிய காட்சியில் நாணம் கொண்டு கீதா தலையை குனிந்து கொண்டு,  நுழைந்த இடத்திலே ஆணியடித்தார் போல் நின்றாள்.

அவள் கொலுசொலியில் அவன் அவள் பக்கம் திரும்பி இருக்கவே, செம்மை படர்ந்த அவள் நாணத்தின் காரணம் புரியாமல் அவளை பார்த்தான்.

அந்த நாணத்திலும் அவள் முகத்தில் இருந்த சிடுசிடுப்பு அவனுக்கு பிடித்திருந்தது.

“காபி அங்க இருந்து பறந்து வருமா?” அவன் கேள்வியாக நிறுத்த, “பறந்து வரணுமுன்னு நீங்க ஆசைப்பட்டா வரும்” அவள் தன் நாணம் மறந்து விழுக்கென்று நிமிர்ந்து கூறினாள்.

“நான் ஆசைப்பட்ட எல்லாமே வருமா?” அவனும் விடாக்கொண்டனாய் கேட்டான்.

அவள் மடமடவென்று அவன் அருகே வந்தாள். அவன் நின்ற கோலம் மறந்தாள்.

“என்ன ஆசை?” அவள் முறைக்க, “என் ஆசை நிறைவேறிடுச்சு. காபியைத் தான் சொன்னேன்” அவன் ‘தான்’ என்ற சொல்லில் கேலி நிறைந்த அழுத்தத்தை  கொடுத்து அவள் அருகாமையை குறித்தபடி கூற, காபியை டொமென்று வைத்துவிட்டு அவள் திரும்பி செல்ல எத்தனித்தாள்.

அவள் கைகளை பிடித்து அவன் அவளை நிறுத்த எத்தனிக்க, அவள் அவன் மார்பில் சாய்ந்து மோதி நிற்க, அவன் கோலத்தை மனதில் கொண்டு அவள் நாணம் அவள்  கோபத்தை மிஞ்ச மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

அப்பொழுது தான் அவள் செய்கையின் காரணம் புரிந்தவன் போல் தன்னை குனிந்து பார்த்துக்கொண்டான் ரவி.

“ஹா…. ஹா…” என்று அவன் பெருங்குரலில் சிரித்தான். அவன் கைகள் அவளை அழுந்த பற்றி இருந்ததில், அவளால் கிஞ்சித்தும் அசைய முடியவில்லை.

“நான் இப்படி நின்னா நீ பேச மாட்டியா?” அவன் ஒற்றை விரலால் அவள் முகத்தை உயர்த்தி கேட்டான்.

அவன் கேட்ட பாவனையில் அவன் கண்கள் அவள் கண்களோடு உரசிக் கொண்டன. அவன் சுவாசமும், அவள் சுவாசமும் சம்பாஷித்துக் கொண்டன.

‘இது என்ன புது புருஷன் புதுப்பொண்டாட்டி மாதிரி’ அவள் இதய துடிப்பு ஏறி இறங்கியது.

‘எனக்கு இந்த ரவியை சுத்தமா பிடிக்கலை. இவனுக்கு என்னையும் பிடிக்காது. என் அண்ணனையும் பிடிக்காது.இந்த லட்சணத்தில் இவனுக்கு ஒரு முன்னாள் காதலி வேற.’ அவள் இமைகள் படபடத்தன.

“நான் கேட்ட கேள்விக்கு பதில். நான் இப்படி நின்னா பிடிக்கலையா?” அவன் கேட்க, “இல்லை, ரொம்ப பிடிச்சிருக்கு.” அவள் கடுப்பாக முணுமுணுக்க,

“ஆ…” அவன் அதிசயம் போல் வாயை பிளந்து பரிகாசம் செய்ய, அவள் அவனை கூர்மையாக பார்த்தாள்.

அவனோ, அவள் பார்வையை கிரகித்துக் கொண்டு காபியை பருக ஆரம்பித்தான்.

“எங்க அண்ணன் இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சோ?” அவள் கேள்வியில், அவன் திடுக்கிட்ட போக, “என்ன ஆச்சரியமா இருக்கா? உங்க அளவுக்கு அதிகமான உற்சாகம் சொல்லுது” அவள் அசட்டையாக கூறினாள்.

“ம்… உங்க அண்ணன் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சாச்சு. என் மனைவி புத்திசாலின்னு எனக்கு தெரியுமே. அதுல எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், இப்படி ஒரு புத்திசாலி தங்கைக்கு முட்டாள் அண்ணன்னு யோசிக்கும் பொழுது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.” ரவி, சூள் கொட்டினான்.

அவனை பார்த்து இப்பொழுது நக்கலாக சிரித்தாள் கீதா. அவனை பார்ப்பதில் அவளுக்கு இப்பொழுது எந்த சங்கோஜமும் இல்லை.

‘அண்ணன் பேச்சு வந்தால் இவள் எல்லாத்தையும் மறந்திருவாளோ?’ அவன் அவளை பார்க்க, “நீங்க என் அண்ணனை கண்டுபிடிக்கலை. நீங்க கண்டுபிடிக்குற இடத்துக்கு என் அண்ணன் வந்திருக்கான்.” அவள் நிறுத்த அவனிடம் மௌனம்.

“புரியலை? நீ கண்டுபிடிக்கனுமுனு தான் வந்திருக்கான். எத்தனை நாள் தான், மறைந்து வாழறதுன்னு யோசிச்சிருப்பான். அநேகமா, உங்க தங்கையை கல்யாணம் செய்து ரிஜிஸ்டர் பண்ணிருப்பான்னு நினைக்குறேன். இனி வரலாமுன்னு வந்திருப்பான்.” அவள் கூற, அவன் கண்கள் சுருங்கியது.

“என் அண்ணனும் புத்திசாலி தான். ஆனால், ஆச்சரியம் என்ன தெரியுமா? இப்படி புத்திசாலி அண்ணனை உங்க தங்கைக்கு எப்படி பிடிச்சதுன்னு தான்?” தன் ஆள் காட்டி விரலை நாடியில் வைத்து சிந்தித்து தன் உதட்டை பிதுக்கினாள் கீதா.

“ஒருவேளை நம்ம வீட்டில் அறிவும் இல்லை. அன்புமில்லை. அந்த ரெண்டுமே எங்க அண்ணன் கிட்ட இருக்குனு உங்க தங்கைக்கு பிடிச்சிருக்குமோ?” அவள் கேட்க, அவன் அவளை சுவரோடு சாய்த்தான்.

ஒரு பக்கம் சுவர், மறுபக்கம் அவன் இடது கை, தன் வலது கையிலிருந்த காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

“நான் போகணும்.” அவள் கூற, “உங்க அண்ணனை பார்க்கத்தானே?” அவன் கேட்க, “அவசியமில்லை” அவள் உடல் மொழியில் அசட்டை.

“நீ பேசுனது தப்புனு சொல்லு விடறேன்.” அவன் கூற, “நான் எதுவும் தப்பா பேசலை.” அவள் அழுத்தமாக கூற,

“எனக்கு காபி கூட பிஸ்கேட் வேணும்” அவன் கூற, “நான் போய் எடுத்திட்டு வரேன்.” அவள் கூற, “அதுக்கு நீ பேசினது தப்புனு  ஒத்துக்கணுமே.” அவன் கூற, அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

“தப்புனு ஒத்துக்கோ. பிஸ்கேட் எடுத்திட்டு வரலாம்.” அவன் கூற, “எனக்கா பிஸ்கேட் வேணும். உங்களுக்கு தானே. நான் ஏன் ஒதுக்கணும்?” அவள் நியாயம் பேச,

“சரி தான். உனக்கா பிஸ்கெட் வேணும். எனக்கு தானே?” அவன் கூறி கொண்டு, அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“என்ன பண்றீங்க?” அவள் அலற, “உஷ்…” அவன் தன் ஆள் காட்டி விரலால், அவள் இதழ்களை மூடினான்.

“சத்தம் வரக்கூடாது.” அவன் அவளை மிரட்ட, “மிரட்டினா….நான்…” அவள் மீண்டும் சத்தம் கொடுக்க எத்தனிக்க, அவள் இதழ்களை தன்வசமாக்கினான்.

அவன் காலை வைத்து கதவை தள்ள, அது தானாக மூடிக் கொண்டது.

அந்த நீண்ட நேர அவன் சுவாசத்தில் கீதாவின் கண்களில் மிரட்சி. அவளை விடுவித்து, ஒரு மடக் காபியை பருகினான்.

அவள் அசைவில்லாமல் நிற்க, அவன் விலகி கொண்டான்.

அவள் செல்ல எத்தனிக்க, “எனக்கு இப்ப பிஸ்கேட் வேண்டாம்” அவன் கூற, “நான் போறேன்” அவள் முணுமுணுக்க, “நான் உன்னை போக சொல்லவே இல்லையே?” அவன் புருவம் உயர்த்தினான்.

“எனக்கு இப்ப பிஸ்கேட் வேண்டாம். ஆனால் நீ வேணும்.” அவன் ஒரு மிடறு குடித்துவிட்டு அவள் மற்றோரு கன்னத்தில் இதழ் பதிக்க, அவள் இப்பொழுது சத்தம் செய்யவில்லை.

அவன் சென்று முறை செய்தது நினைவு வர, திறந்த வாயை இறுக மூடிக்கொண்டாள்.

அவன் ஆள் காட்டி விரலால் அவள் இதழை தீண்டி, “குட்…” அவள் கன்னத்தை மெச்சுதலாக தட்டினான்.

“நான் சொன்னதை கேட்கலைன்னா, நான் இப்படித்தான் தண்டனை கொடுப்பேன்” அவன் கூற, ‘இவனும் இவன் தண்டனையும்.’ அவனை முறைத்து பார்த்தாள் கீதா.

குடித்தவன், “சூடு ஆறிடுச்சு” உதட்டை அப்பாவியாக பிதுக்கினான்.

“நான் சூடு பண்ணி கொண்டு வரேன்” அவள் அங்கிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை சிந்தித்தாள்.

“நான் உன்னை சூடு பண்ண சொல்லவே இல்லையே?” அவன் அவளை நெருங்க, “நான் அத்தை கிட்ட சொல்லுவேன்” அவள் முணுமுணுக்க,

“என்னனு? நான் உன்னை அடிச்சேன்னா? இல்லை கொடுமை படுத்தினேன்னா?” அவன் கேலியில் இறங்கிய படியே, அவள் முகத்தின் அருகாமையில் தன் முகம் வைத்து அவன் விரலை அருகே கொண்டு சென்று அவளை தீண்டாமல் புருவம் உயர்த்தினான்.

“என்ன சொல்லுவ?” அவள் அருகே நின்று கொண்டு அவள் இதய துடிப்பை கேட்டபடி, அவள் சுவாச காற்றை அனுபவித்தபடி, காபியின் அடுத்த மிடறை அருந்தினான்.

“என்ன சொல்லுவ?” அவன் குரல் கர்ஜிக்க, “காபி ஆறிடும்” அவள் அவன் காபியே  முக்கியம் என்பது போல் பேசினாள்.

அவள் இதழுக்கு மீண்டும் தண்டனை கொடுத்து, “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும். இப்படி இடக்கு மடக்கா பதில் சொல்ல கூடாது. சொன்னால், இது தான் என் பதில்.” அவன் கூற,

‘இவனை சமாளிப்பது கஷ்டமோ? இவன் என்ன ரொமான்டிக் வில்லன் மாதிரி நடந்துக்குறான்.’ அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“காபி ஆறினாலும், இட்ஸ் ஹாட்” அவன் அவள் இதழ்களை பார்த்தபடி கூற, அவள் பற்களை நறநறத்தாள்.

அவள் செய்கையில், அவன் அவளை பின்னோடு  சுற்றி வளைத்தான்.

“நான் முட்டாளா?” அவள் தோளில் தன் தாடையை அழுத்தினான். அவள் முகம் வலியில் சுருங்கியது.

“நான் முட்டாள், உங்க அண்ணன் புத்திசாலியா?” அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்து அழுத்தியது.

“நான் முட்டாளா?” அவன் அழுத்தம் கூடியது.

“நீ பேசினது தப்புன்னு மன்னிப்பு கேளு” அவள் தோளில் அவன் தாடையின் அழுத்தமும், அவள் இடையில் அவன் கைகளும் அழுத்தத்தை கூட்ட, அவன் செயலில் அவள் தேகம் கன்னி சிவக்க, அவள் எத்தனை அடக்க முயன்றும் அவள் கண்கள் கண்ணீரை சொரிய அவள் விழி நீர் இடையை தழுவிக் கொண்டிருந்த அவன் கைகளை நனைக்க, அவன் தன் கண்களை இறுக மூடி அவன் பிடியை சற்று தளர்த்தினான்.

அத்தனை நேரம் அவன் உள்ளத்தில் இருந்த உல்லாசம் அவள் விழிநீரில் வடிந்தது. அவள் கண்ணீரை துடைக்க, அவன் கைகள் பரபரத்தது. பின்னோடு  அணைத்திருந்த அவளை முன் பக்கம் திருப்பி அவள் முகமெங்கும் இதழ் பதித்து ஆறுதல் கூற அவன் மனம் பரபரத்தது.

அவன் பிடியை தளர்த்த அவன் கைவளவிற்குள் நின்றாள் அவள். அவன்  பிடிமானம் சற்று இளகிருக்க, வலியில் துவண்ட அவள் தேகம் பிடிமானமின்றி அவள் பார்க்க நாணம் கொண்ட தேகத்தின் மீதே சரிந்து நின்றது.

அவள் அருகாமையில், அவள் கண்ணீரில் அவன் உள்ளம் அழுதது.

‘நான் கீதாவை அழ வைக்க கூடாது. கீதாவை வைத்து, அந்த ஜீவாவை தான் அழ வைக்க வேண்டும்.’ அவன் சிந்தை உறுதிமொழி எடுக்க, அவன் மனமோ, தன் மனைவியின் ஸ்பரிசத்தில் நிலை குழைய ஆரம்பிக்க, அவன் கைகள் அழுத்தத்தை விடுத்து அவளை மென்மையாக தீண்ட அவள் உடல் இப்பொழுது நடுங்க ஆரம்பித்தது.

“உங்க முன்னாள் காதலி கோபப்படப்போறாங்க” அவள் சமாதானமாகவே விலக முயன்றாள்.

“பராவலை… நான் பேசி சமாளிச்சிக்குறேன்.” அவன் இதழ்களும், கைகளும் எல்லை மீற, “நான் மன்னிப்பு கேட்குறேன். நான் பேசினது…” அவள் குரல் அவள் கம்பீரம் தொலைத்து தயக்கமாக வெளி வர சட்டென்று அவளை விலக்கி நிறுத்தினான் அவன்.

அவளை பட்டென்று முன் பக்கமாக திருப்பினான். “நீ என் மனைவி. நீ என் கிட்ட கூட இறங்கி வரது எனக்கு பிடிக்கலை. இத்தனை நேரமா பிடிவாதமா நின்ன கீதாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது”

அவள் அவனை புரியாமல் பார்க்க, “எனக்கு உன் அண்ணன் விரோதி. எனக்கு அவனை எப்பவும் பிடிக்காது. இப்ப சுத்தமா பிடிக்காது. உன்னையும் நான் விரும்பி கல்யாணம் செய்யலை.” அவன் ஆழ மூச்செடுத்துக்கொண்டான்.

உண்மையாக ஆரம்பித்த அவன் உண்மையாக முடித்தானா இல்லை, பொய்யோடு முடித்தானா என்று அவனுக்கே விளங்கவில்லை.

“ஆனால், நீ என் மனைவி.” அவன் அழுத்தமாக கூறிவிட்டு அவளிடமிருந்து விலகி அவர்கள் அறையோடு ஒட்டி இருக்கும் தன் அறைக்குள் சென்றான்.

சென்றவன் மீண்டும் வெளியே வந்து, “கிளம்பு, உங்க அண்ணனை பார்க்க போறோம்” கூறிவிட்டு மடமடவென்று கிளம்பினான் ரவி. 

‘எதுக்கு இப்ப அண்ணனை பார்க்க போகணும்? என்ன பிரச்சனை பண்ண போறாங்க?’ கீதா தன் நெற்றியை தடவியபடி யோசித்தாள்.

சட்டென்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி வந்தான் ரவி.

வந்தவன் அவளை பார்த்தான். “சேலை நல்லாருக்கு. அதுவும் உனக்கு ரொம்ப நல்லாருக்கு.”

என்னவோ காலையில் எழுந்து இப்பொழுது தான் அவளை பார்ப்பவன் போல் சிலாகித்தான்.

அவள் அவனை கடுப்பாக பார்க்க, “இப்படியே உங்க அண்ணனை பார்க்க கிளம்பலாம்”

“தலை முடியை விரிச்சி போட்டிருந்தாலும், அதுவும் உனக்கு ஸ்டைலா தான் இருக்கு…” அவன் அடுக்கி கொண்டே போக, “என்கிட்டே எல்லாம் அழகா இருக்குனு எனக்கே தெரியும். நீங்க சொல்றதுக்கு வெட்கப்பட்டுட்டு கன்னம் சிவந்து காலை தரையில் தேச்சிகிட்டு நிப்பேன்னு நினைசீங்களா?” அவள் துடுக்காக கேட்டாள்.

“சட்டையை போட்டுட்டு வந்தா ரொம்ப பேசறியே. பனிஷ்மென்ட் வேணுமா?” அவன் குறுஞ்சிரிப்போடு கேட்க, “எதுக்கு எங்க அண்ணனை பார்க்க போகணும்?” அவள் சற்று விலகி நின்று கொண்டு கேட்டாள்.

“முன்ன நின்ன இடத்தில் நின்னு கேளு” அவன் வம்பிழுக்க, அவள் பெருமூச்சை வெளியேற்றி, அசையாமல் நின்றாள்.

அவன் அவள் அருகே சென்று, “மனைவி கேட்டா சொல்லணும். ஆசை பட்டத்தை செய்யணும். இது தான் என் கொள்கை. நான் ஒரு பொண்டாட்டி தாசன்” அவன் பெரிதாக முறுவலித்தான்.

‘இவன் நேற்று போல் இன்று இல்லை. ஒரு மார்க்கமா தான் இருக்கான்’ அவள் சிந்திக்க, தன் சட்டை பையிலிருந்த சிகரட்டை பற்ற வைத்தான்.

“உங்க அண்ணனை கதற விடணும். நம்ம கல்யாண விஷயம் தெரிஞ்சாலே உங்க அண்ணன் கதறுவான். அவன் முன்னாடி உன்னை…” அவன் நிறுத்தினான்.

“அங்க தான் கொஞ்சம் இடிக்குது. உன்னை கஷ்டப்படுத்தத்தான் மனசு வரலை.”  அவன் புகையை ஊத, அவள் வெறுப்பாய் நகர்ந்து கொண்டாள்.

“எனக்கு மனசு சரி இல்லைனா நான் சிகரெட் பிடிப்பேன். உன்னை நினச்சா தான் எனக்கு உன்னை கஷ்டப்படுத்த மனசு வராது. ஆனால், உன் அண்ணனை நினச்சா நான் என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேன்.  நேத்து உனக்காக தூக்கி எறிந்த சிகரெட்டை, உன் அண்ணன் பெயரை சொன்னதும் உன் மேலயே ஊதுறனே அந்த மாதிரி.” அவன் புகையை ஊத,

அந்த சிகரெட்டை இழுத்து கீழே போட்டு, தன் கால்களாலே அதை அணைத்தாள் கீதா.

“ஏய், என்ன பண்ற? கால் சுடப்போகுது. அவன் அவளை தள்ள,  உங்க சிகரெட்டை மட்டுமில்லை. என் அண்ணனுக்கு பிரச்சனை கொடுக்கிற ஆளை கூட இப்படி நசுக்குவேன்.” கூறிவிட்டு மடமடவென்று அறையை விட்டு வெளியேறினாள் கீதா.

“கிழிப்ப… இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க அண்ணன் வீட்டில் வெடிக்க போற பிரச்சனையை பார்க்கத்தானே நாமளே அங்க போறோம்” அவன் அறையில் தனக்கு தானே முணுமுணுத்து மீசையை தடவி கம்பீரமாக புன்னகைத்தான் ரவி.

நதி பாயும்…                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!