Uyir Vangum ROjave–EPI 5

ROSE-7b984661

அத்தியாயம் 5

நீங்க வேணும்னா ரெக்கோர்ட் பண்ணுறதுக்கும்

வேணான்னா அழிக்கிறதுக்கும்,

காதல் ஒன்னும் டேப் ரேக்கோடர்ல போடுற கேசட் இல்ல…

(உன்னை நினைத்து – சூர்யா)

 

மயக்கத்தில் இருந்த வேந்தனுக்கு தன்னை சுற்றி நடப்பது ஒன்றும் தெரியவில்லை. தேவி அவன் கையைப் பிடித்துக் கொண்டே ஸ்ட்ரெச்சருடன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள். அவளை தொடர்ந்து அவன் குடும்பத்தினரும் கார்த்திக்கும் சென்றனர். அது ஒரு பர்ஸ்ட் க்ளாஸ் ரூம். ஹோட்டல் அறையே தோற்றுவிடும் அளவுக்கு இருந்தது. மகனை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்து திருப்தியான இந்து கார்த்திக்கிடம்,

“யப்பா கார்த்திக், ஹோட்டல் கணக்கா இருக்கே இந்த ரூம், நமக்கு கட்டுப்படியாவாதுப்பா. இவனே மயக்கம் தெளிஞ்சு எழுந்தா சத்தம் போடுவான். நோர்மல் வார்டுக்கு மாத்த சொல்லுப்பா.”

“அதெல்லாம் கம்பேனி கட்டிக்கும்மா. நீங்க கவலைப் படாதீங்க.”

வேந்தனின் வலது பக்கத்தில் தேவி நாற்காலியை தள்ளி போட்டு கொண்டு அமர்ந்து விட்டாள். இடது புறத்தில் இவர்கள் நின்று கொண்டார்கள். கார்த்திக் அவன் கால் மட்டில் நின்று கொண்டிருந்தான்.

எல்லோரும் அவன் விழிப்பதற்காக காத்திருந்தனர். அதற்குள் சர்ஜரி செய்த டாக்டர் ரூமுக்குள் வந்தார். வந்தவர் நேராக தேவியிடம் சென்றார் அப்டேட் கொடுப்பதற்காக. அதைப் பார்த்த லாவண்யா,

“டாக்டர், நாங்க தான் அவரோட பேமிலி. அவங்க இவரோட போஸ் மட்டும்தான். ஏதா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லுங்க” என்றாள்.

டாக்டர் தேவியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர்களிடமே சொல்லுமாறு சைகை செய்து விட்டு மீண்டும் வேந்தனின் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டாள் அவள்.

டாக்டர் இந்துவிடம்,

“பேஷன்ட் கால்ல இருந்த கண்ணாடி சில்லையேல்லாம் ரிமூவ் பண்ணிட்டோம். ஒரு வாரம் போல இங்கயே இருக்கட்டும். டேய்லி டிரெஸ்சிங் செய்வோம். அதுக்கு தான் தங்க சொல்லுறது”

“ட்ரெஸ்சிங்னா சட்டை போடறது தானே? கால்ல தானே டாக்டர் அடி, கை நல்லா இருக்கே. சட்டையே அவனே போட்டுக்குவான். முடியாட்டி நான் போட்டு விடறேன். அதுக்கு எதுக்கு ஒரு வாரம் இங்க தங்கனும்?” என கேட்டார் இந்து.

டாக்டர் பேய் முழி முழிக்க, கார்த்திக் சிரிப்பை அடக்க முடியாமல் சட்டென திரும்பி நின்று கொண்டான். கார்த்திக்கைப் பார்த்து பல்லைக் கடித்த லாவண்யா,

“அம்மா, கொஞ்ச நேரம் சும்மா இருங்க. நான் பேசிக்கிறேன்” என இந்துவை இன்னொரு நாற்காலியில் உட்கார வைக்குமாறு அனுவிடம் சைகை காட்டினாள். அனு அம்மாவை இழுத்து சென்று உட்கார வைத்தாள்.

‘நாம கொஞ்சம் புத்திசாலித்தனமா பேசுனா இதுங்களுக்கு பிடிக்காதே.’ முனகியவாறே உட்கார்ந்து கொண்டார் இந்து.

“நீங்க சொல்லுங்க டாக்டர்” என அவரை பேச சொன்னாள் லாவண்யா.

“வேற ஒன்னும் பிரச்சனை இல்லைமா. ரெண்டு மூனு நாள்ல நடக்க ஆரம்பிக்கலாம். ஆனா ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாம பார்த்துக்குங்க. இது விஐபி ரூமுங்கிறதுனால யாராவது ஒருத்தர் கூட தங்கிக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும். நான் அப்புறமா வந்து பார்க்குறேன்” என மெடிக்கல் ரிப்போர்டை மேசை மேல் வைத்து விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாகவே இருந்தனர். மேலும் அரை மணி நேரம் அவர்களை காக்க வைத்து விட்டு கண்களை மலர்த்தினான் மலர்வேந்தன்.

“அம்மா!!” அவன் முதலில் தேடியது தாயைத்தான். மற்றவர்கள் யாரும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை.

அவன் அருகே சென்ற இந்து,

“வேந்தா! எப்படிப்பா இருக்க?” என கலக்கமாக கேட்டார்.

“வலிக்குதுமா” அவர் கையைப் பிடித்துக் கொண்டு பத்து வயது சிறுவன் போல் உதட்டைப் பிதுக்கினான் அவன்.

தங்கைகளும் அவன் அருகில் வந்து நின்று கண் கலங்கினர். அவர்களின் கண்ணீரைக் கண்டு சட்டென முகத்தை நோர்மலாக்கியவன்,

“ஒன்னும் இல்லடா. கொஞ்சம் வலிதான். உங்களை பாத்தவுடனே அதுவும் நல்லா போச்சு” என சிரித்தான்.

‘யப்பா ராசா! இந்த தங்கச்சி சென்டிமென்டெல்லாம் நாங்க சமுத்திரம் படத்தில வர ‘அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை’ பாட்டுலயே பார்த்துட்டோம்டா சாமி. அடச்சே, இவங்க கூட சேர்ந்து நமக்கும் சிட்டுவேசன் சோங் தானா வருதே. முடியலைப்பா’ கார்த்திக்கின் மன்ட் வாய்ஸ் தான் இது.

இந்து கட்டிலில் ஏறி உட்கார்ந்து மகனின் தலையை தன் மடியில் இருத்திக் கொண்டார். வலது பக்கம் உட்கார்ந்திருந்த தேவியையோ அவள் அருகே நின்றிருந்த கார்த்திக்கையோ அவன் கவனிக்கவில்லை. அம்மாவின் மடியில் சுகமாக தலை வைத்து கண் மூடிக் கொண்டான்.

மகனின் தலையைக் கோதிக் கொடுத்த இந்துவும், சிட்டுவேஷன் சோங் ஒன்றை எடுத்திவிட்டார்.

“ஆராரிரோ பாடியதாரோ

தூங்கி போனதாரோ

யாரோ யாரோ எனக்காரோ யாரோ

என் தெய்வமே இது பொய் தூக்கமா

நான் தூங்கவே இனி நாள் ஆகுமா”

பதறி எழுந்து அமர்ந்த வேந்தன்,

“மா!!! நான் உயிரோட இருக்கும் போதே எனக்கு ஒப்பாரி சோங் பாடுற பார்த்தியா. வேற பாட்டே கிடைக்கலியா? போம்மா” என கோபித்துக் கொண்டு அந்த புறம் திரும்பியவன் அப்பொழுதுதான் இவர்களைப் பார்த்தான்.

தேவி கண்ணில் சிரிப்புடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மேடம், நீங்க இன்னும் கிளம்பலையா?” ஆச்சரியமாக கேட்டான்.

“நீங்க எழறதுக்கு தான் வேய்ட் பண்ணோம் வேந்தன். இப்ப கிளம்பிருவோம்” கார்த்திக் தான் பதில் தந்தான்.

“மேடம் சொன்னாங்க என்ன நடந்ததுன்னு. அவங்கள காப்பாத்தனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் வேந்தன்” தேவியின் முன்னிலையில் மரியாதையாக தான் பேசுவான் கார்த்திக்.

“தேங்க்ஸ்லாம் வேணாமே. அந்த இடத்துல்ல  யார் இருந்திருந்தாலும் கண்டிப்பா அதை நான் செஞ்சிருப்பேன் கார்த்திக்” மறைமுகமாக தேவிக்கு தன்னிலையை விளக்க முயன்றான் வேந்தன். அவன் சொன்னது அவளுக்கு புரிந்தது என்பதை போல தேவியின் முகம் லேசாக சுருங்கி பின் இயல்புக்கு திரும்பியது. எழுந்து கொண்டவள் அவன் அருகில் வந்து,

“இப்ப போறேன் மலர். அப்புறமா கண்டிப்பா வருவேன்” என அவன் கன்னத்தைத் தடவி விட்டு சென்றாள். லட்டுவைத் தவிர மற்றவர்களிடம் தலையை ஆட்டிவிட்டு அவள் பின்னால் விரைந்தான் கார்த்திக். வேந்தன் ஒரு பக்கம் அதிர்ச்சியில் இருந்தான் என்றால், லாவண்யா மறுபக்கம் செம்ம காண்டில் இருந்தாள்.

அவர்கள் இருவரையும் இந்துவின் பாடல் தான் சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

“கன்னத்தில் என்னடா காயம் ம்ம்..ம்ம்..ம்ம்..
இது வண்ணக்கிளி செய்த மாயம்..ம்ம்..ம்ம்.. “

அவர் பாட்டை மாற்றி பாடிய விதத்தில், டென்ஷனில் இருந்த வேந்தனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரிப்பதைப் பார்த்து அவர்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

வெளியேறிய கார்த்திக்கின் காதில் அவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டது.

‘சரியான லூசு குடும்பம். எப்படிதான் அதுல வாக்கப்பட்டு நான் குப்பைய கொட்டப் போறனோ தெரியலை’ முனகிக் கொண்டே நடந்தான்.

சிரித்து முடித்தவர்கள் , ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மீண்டும் சிரித்தனர்.

“ஏன்டா வேந்தா, இந்த சுனாமிய எப்படிடா சமாளிக்க போறே?” முகத்தில் லேசாக கவலைப் படிய கேட்டார் இந்து.

“இதெல்லாம் பாசிங் க்லவுட் மா. திடீருனு நடந்த சம்பவத்துனால அதிர்ச்சியில இருந்துருப்பாங்க. அதோட ரியாக்சன் தான் இதெல்லாம். வீட்டுக்கு போறதுக்குள்ள அதெல்லாம் தெளிஞ்சிரும். நமக்கும் அவங்களுக்கும் பத்து ஏணி வைச்சா கூட எட்டாது. அதை எல்லாம் அவங்களே புரிஞ்சுக்குவாங்க. இருந்தாலும் எதுக்குமா வம்பு. சீக்கிரமா வேற வேலை தேட வேண்டி தான்.”

“நீ சொல்லுறதும் சரிதான். அவங்க கலர் என்ன உன் கலர் என்ன?”

“யம்மோ! இந்த கலர் வேறுபாடு மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுமா? அதுக்கும் மேல படிப்பு, பணம், அந்தஸ்த்து இதெல்லாம் தெரியாதா?” கடுப்பானான் வேந்தன்.

“என் கண்ணுக்கு என்ன தெரியுதோ அதை தானடா என்னால சொல்ல முடியும். என்ன சொல்லு, சரியான அழகுடா அந்த பொண்ணு. என்னாலயே கண்ண அவ முகத்த விட்டு எடுக்க முடியலைனா பார்த்துக்கயேன்”

“மா, அழகு அழகுன்னு ஓவரா தூக்கி வைச்சு பேசாதே. மனுஷனா இருந்தா ஒரு மரியாதை வேணா? என்னையும் அனுவையும் ஒரு ஈ, காக்கா லெவலுக்கு கூட மதிக்கலமா. நாங்க என்ன அப்படி குறைஞ்சி போய்ட்டோம்” சிடுசிடுத்தாள் லாவண்யா.

“உங்க ரெண்டு பேரையும் கண்டுக்கலியா? என்ன பார்த்து தலை ஆட்டுனாங்களே. எனக்கு தலை ஆட்டுனா, உங்களுக்கும் ஆட்டுன மாதிரி தானே. இதுக்கெல்லாமா மூஞ்சிய தூக்குவ. பாவம்டி அவங்க, அடிக்கடி தலை அசைச்சா கழுத்து வலிக்காது?” தேவிக்கு சப்போர்ட்டுக்கு வந்தார் இந்து.

“ம்மா, விட்டா இத்தாலிக்கு கோவிலே கட்டுவ போல இருக்கு. அண்ணா நல்லா கேட்டுக்கோ, உன்னை உங்க அம்மாவே குண்டு கட்டா தூக்கிட்டு போய் அவங்களுக்கு கட்டி வைக்க போறாங்க. பார்த்து சூதனமா நடந்துக்க”

“நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க. அண்ணா நீ ரெஸ்ட் எடுணா. அப்புறம் பேசலாம்” என பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அனு.

இரு பெண்களையும் வீட்டில் தனியாக விடமுடியாது என்பதால், இன்று இரவு லாவண்யா அண்ணனுடன் தங்குவதாகவும் மற்ற இருவரும் வீட்டுக்கு செல்வதாகவும் ஏற்பாடு ஆகியது. அம்மாவும் அனுவும் வீட்டிற்கு சென்றவுடன் அண்ணனும் தங்கையும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது வந்த டாக்டர் வேந்தனின் ரத்த அழுத்தத்தயும் காலில் இருந்த காயத்தையும் செக் செய்தார். அவருக்காக தான் அண்ணனும் தங்கையும் காத்திருந்தனர்.

“டாக்டர், கால்ல அடின்னு சர்ஜரிக்கு வந்த எனக்கு எதுக்கு எச்ஐவி டெஸ்ட், எம்அர்ஐ டெஸ்ட், கொலெஸ்ட்ரோல் டெஸ்ட் இன்னும் லொட்டு லொசுக்கு டெஸ்டெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க? படிச்ச எங்களையே இப்படி ஏமாத்துனா படிக்காத ஏழைபாளைங்கள என்ன பாடு படுத்துவீங்க” என கோபமாக கேட்டான் வேந்தன். டாக்டர் மேசையில் விட்டு சென்றிருந்த மெடிக்கல் ரிப்போர்டை கவனித்துப் பார்த்து விட்டு தான் இப்படி கேள்வி கேட்டான் அவன்.

அந்த டாக்டர் முகத்தில் புன்னகையுடன்,

“சில படங்கள்ல காட்டுறத மாதிரி எல்லா டாக்டரையும், ஹாஸ்பிட்டலையும் தப்பா நினைச்சிறாதீங்க சார். எங்களை மாதிரி கொஞ்சம் நல்லவங்களும் இன்னும் இந்த பீல்ட்ல இருக்கத்தான் செய்யுறோம். இந்த டெஸ்ட் எல்லாம் உங்க எம்ப்லோயர் தான் செய்ய சொன்னாங்க. உங்கள கோம்ப்லீட்டா ஒரு செக் பண்ணிற சொன்னாங்க. இதுக்கு சம்மதமான்னு உங்க கிட்ட ஒரு போர்ம் குடுத்து பீல் பண்ண சொன்னமே. நீங்களும் சைன் பண்ணி குடுத்தீங்களே மிஸ்டர் மலர்வேந்தன். நீங்க சம்மதம்னு சைன் செய்து கொடுக்கவும் தான் தேர்ட் பார்ட்டிக்கு உங்க டீடெய்ல்ஸ் எல்லாம் ரிவீள் பண்ணோம். இல்லைனா கண்டிப்பா செய்து இருக்க மாட்டோம்.””

அவனுக்கு இருந்த பதட்டத்தில் கொடுத்த பாரத்தில் எல்லாம் சைன் செய்து கொடுத்திருந்தான். அதில் இப்படி ஒரு உள்குத்து இருக்கும் என அவன் அறியவில்லை.

“இந்த ரிசால்ட் எல்லாம் வந்த கையோட ஒரு கோப்பி அவங்களுக்கு பேக்ஸ் பண்ண சொல்லி இருந்தாங்க, நாங்களும் பண்ணிட்டோம். அதோட உங்க பில் எல்லாம் முன் கூட்டியே செட்டல் பண்ணிட்டாங்க.” என விளக்கினார் அவர்.

“சோரி டாக்டர். பதட்டத்துல சைன் செஞ்சு குடுத்தது இப்பத்தான் ஞாபகம் வருது.” என மன்னிப்பு கேட்டான் வேந்தன்.

டாக்டர் வெளியேறியதும்,

“அண்ணா! என்ன நடக்குது?” பயத்துடன் கேட்டாள் லாவண்யா.

“எனக்கும் தெரியலை லட்டு. இன்னிக்கு முழுக்க என்னை ஒரு மாதிரியா தான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் அதிர்ச்சியா இருக்கும்னு பெருசா எடுத்துக்கல. என்னோட புல் மெடிக்கல் ரிப்போர்ட் கலேக்ட் பண்ணியிருக்காங்கனா எனக்கே பயமாதான் இருக்குடா. என்ன நோக்கத்துல இப்படி செய்யுறாங்கன்னு தெரியலையே”

“டோன்ட் வோரி அண்ணா. அந்த வெள்ள எலி திட்டம் எதுவா இருந்தாலும் நாம முறியடிச்சறலாம். அவளா இல்ல நம்பளான்னு பார்த்துறலாம்” இரு கைகளையும் நம்பியார் போல் தேய்த்துக் கொண்டாள் லாவண்யா.

“லட்டு அவங்கள எலி, அவ, இவன்னு மரியாதை இல்லாம பேசாதம்மா. என்ன இருந்தாலும் அவங்க என் முதலாளி”

‘அடேய் அண்ணா. உன்னை நம்பி இந்த எந்த காரியத்துலயும் இறங்க முடியாது போல இருக்கே. கடைசியில நீயே என்னை கவுத்துருவ போல.’ மனதில் புலம்பியவள் வெளியில் அமைதியாக இருந்தாள்.

அதே நேரம் வீட்டுக்குள் நுழைந்த தேவி, நேரே ரூமுக்குள் போகாது ஹாலில் அமர்ந்திருந்த ராகவனின் எதிரில் அமர்ந்தாள். கார்த்திக் அவள் பின்னோடு வந்து பக்கத்தில் நின்று கொண்டான்.

“டாட்” அதிசயமாக மகளைப் பார்த்தார் ராகவன். அவளுக்கு விவரம் தெரிந்தது முதல் தேவி அவரை அப்பா என அழைத்ததே இல்லை.

“சொல்லுமா” பாசத்துடன் கேட்டார் அவர்.

அவர் முன்னே ஒரு பைலை தூக்கி போட்டவள்,

“எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்க. இது தான் மாப்பிள்ளை டீடேய்ல்ஸ். இன்னும் டூ வீக்ல வெட்டிங் முடிஞ்சு அவர் இந்த வீட்டோட மாப்பிள்ளையா வரணும்.” அவ்வளவுதான் என்பது போல் அவள் பாட்டுக்கு மாடி ஏறி சென்று விட்டாள்.

ராகவன் திறந்த வாய் மூடாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்.

கார்திக்கோ,

‘வீட்டோட மாப்பிள்ளையா? வேந்தா, அடிச்சடா வெளிநாட்டு பம்பர் குலுக்கல். இவன் இந்த வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டா, அவங்கள யாரு பார்த்துக்குவா? விடு, நாம அவங்களுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போயிற வேண்டி தான். ப்ராப்லம் சால்வ்ட். இவரு வேற வாயில டெங்கு கொசு போனா கூட தெரியாத அளவுக்கு வாயைப் பிளந்து உட்கார்ந்து இருக்காரு. இவர முதல்ல கவனிப்போம்’

“சார்!!!”