JTE-1
JTE-1
தமிழ் மொழி பேசுகின்ற, செழிப்பான, எழிலான ஒரு மலைப்பிரதேசம்…
மறைபனியால் மூடப்பட்டிருந்த மலை முகடுகள். வாடைக் காற்று வானிலை, தாங்க முடியாமல் கடந்து செல்லும் மேகங்கள். முகில் சென்றதும் முகம் காட்டிடும் சூரியன். அந்த இளஞ்சூடு கண்டு, விலகிட்ட மூடுபனி. இந்த விலகலால் தெரியப்படுத்தப் படுகின்ற மலைப்பரப்பின் பசுமை மற்றும் காட்டு மரங்கள்.
கண்களுக்கு விருந்து படைக்கும் இயற்கையின் அழகு. நாசியைத் துளைத்துச் சென்றிடும் பரிசுத்தமானக் காற்றின் நறுமணம்.
காற்றுக்கு நிறம் கிடையாது என்று யார் சொன்னது? மிதந்து வரும், இங்குள்ள பனிக்காற்று, பச்சை நிறம் கொண்டவை. ஏனெனில் சுற்றியுள்ள பசுமை அப்படி இருந்தது!!
வருடம் முழுவதும் மிதமான வெப்பம் மட்டுமே உணரப்படும் வானிலை. அந்த மிதமான வெப்பம் கூட ஒரு இனிமையான குளிர் காற்றுடனே உடலைத் தீண்டிடும்.
மலைச் சரிவில் சுற்றிச் சுற்றிப் போடப் பட்டிருந்தச் சாலைகள். அதில் அவ்வவ்போது சென்று கொண்டிருந்த வாகனங்கள்.
சிறியது பெரியது என, மலைச் சரிவுகளில் கட்டப்பட்டிருந்த ஓட்டு வீடுகள். சரிவு நிலப்பரப்பிலிருந்து அப்படியே மேலேயேறி வந்தால் சம நிலப்பரப்பு இருந்தது.
சாலைகள் என்று சொல்ல முடியாத, சற்றே பெரிய பாதைகள். அதுவும் பாதைகளின் இரு ஓரங்களிலும் ஒன்றிரண்டு மரங்கள் மற்றும் பச்சைப் புல்வெளி நிலப்பரப்பு.
சம நிலப்பரப்பு என்பதால் கொஞ்சம் பெரிய பெரிய வீடுகள் இருந்தன. வீடுகளின் வடிவங்களில், கொஞ்சம் மெனக்கெடல் இருந்தது. ஆனால் பெரும் இடைவெளிக்கு இடையிலே வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
அப்படி ஒரு வீட்டின் முன்பு, ஐந்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவ்வீட்டின் அமைப்பு, கீழே நடுத்தரக் குடும்பத்திற்கு ஏற்றாற் போல் இருந்தது. வீட்டின் மேலே ஒரு சிறிய அறை தெரிந்தது.
விளையாட்டு மும்முரத்தில் பந்து அந்த வீட்டினுள் சென்றுவிடுவதும்… அதைப் போய் ஒரு உரிமையுடன் எடுத்து வருவதும்… திரும்ப விளையாட்டைத் தொடங்குவதும்… என்று அந்தச் சிறுவர்கள் விடுமுறையைச் செவ்வனேச் செலவழித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டின் முன்வாசலில் அமர்ந்து, விளையாட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார், ஒரு பெண்மணி.
சற்றே வயதான பெண்மணிதான். வீடு, அவருக்குச் சொந்தமானதுதான். அவர் தனியாக வசித்துவருகிறார்.
அந்தப் பெண்மணியின் பெயர் வள்ளி. சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி ‘வள்ளிம்மா’ என்று, அவரை அழைப்பார்கள். இவரின் வாரிசுகள் அயல் நாட்டின் பணமதிப்புடன் வாழ்வதால், இவர் இங்கே தனிமையுடன் வாழ்ந்து வருகிறார்.
வள்ளிம்மா, வளவளவென்று பேசும் பழக்கம் இல்லாதவர். நறுக்கென்று நியாயமாகப் பேசுபவர்.
விளையாட்டுத் தொடர்கிறது…
சிறிது நேரத்திற்குப் பின், வயதின் காரணமாக, வள்ளிம்மா வாசலில் அமர்ந்திருக்க முடியாமல், வீட்டின் உள்ளே சென்று விட்டார்.
சிறுவர்களுக்கு விடுமுறை தினம் என்பதால், இன்னும் விளையாட்டுத் தொடர்ந்தது.
கடிகாரத்தின் நொடி முட்கள், சற்று தூரம் பயணித்தப் பின்…
“வள்ளிம்மா, வள்ளிம்மா” என்ற குரல்களுடன், வீட்டின் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.
அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்தான் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்தார் வள்ளிம்மா.
சிறுவர்கள் ஏதோ ‘வேண்டி’ நிற்பது போல் தெரிந்தது.
“என்ன வேணும்?” என்றார் கதவை நன்றாகத் திறந்து கொண்டு, வெளியே வந்த வள்ளிம்மா.
“பால்கனியில பந்து விழிந்திருச்சு” – இந்த வசனம் ஒரு சிறுவனிடமிருந்து.
இதுவும் வழக்கம்தான். இவர்கள் விளையாடுவதும், பந்து வீட்டின் பால்கனியில் சென்று விழுவதும்… வள்ளிம்மா மேல் வீட்டின் சாவியைத் தருவதும்… பந்தினை எடுத்து வந்து, விளையாட்டைத் தொடர்வதும்…
“சாவி தாங்க” என்று ஒரே குரலில் கத்த ஆரம்பித்தனர், சிறுவர்கள்.
“ஐயையோ!! பந்து மேல விழுந்திருச்சா. இன்னைக்கு யார் அடிச்சா?” என்று பேச்சை வளர்த்து, தன் தனிமைக்கு, அவர்களிடத்து தீர்வு காண விழைந்தார்.
“நான் அடிக்கல, இவன்தான்” – ஒரு சிறுவன்.
“வள்ளிம்மா, சீக்கிரமா சாவியைத் தாங்க” – பொறுமை இல்லமால், மற்றொரு சிறுவன்.
சிறுவர்கள் விளையாடும் மனநிலையில் இருந்ததால், வேறு பதில் தர மாட்டார்கள் என்று புரிந்தது.
“பசங்களா, மேல் வீட்டுக்கு ஆள் வந்தாச்சு. நீங்க அங்கே போய் வாங்கிக்கோங்க” என்று சொல்லிக் கொண்டே, வெளி வாசலில் அமர்ந்து விட்டார்.
வாசலின், முன்புறத்தில் இருந்துதான் மாடிக்குச் செல்வதற்கானப் படிக்கட்டுகள் இருந்தன.
“தேங்க்ஸ் வள்ளிம்மா” என்று சொல்லியவாறு, சிறுவர்கள் படியேறி மாடிக்குச் சென்றனர்.
அந்த வீட்டின் மாடி அறை. கீழ் உள்ளது போல் பெரியது கிடையாது. ஒரே ஒரு சின்ன அறை மட்டுமே. குளியலறை வசதிகூட, அறையின் வெளியே, மாடியின் மற்றொரு ஓரத்தில்தான் இருந்தது.
கதவு பூட்டியிருந்தது.
வீட்டின் கதவு, ஒருமுறை தட்டப்பட்டது.
திறக்கப்படவில்லை.
மறுமுறையும் தட்டினர், சிறுவர்கள்.
இம்முறை கதவு திறக்கப்பட்டது.
ஒரு மனிதன் நின்றிருந்தான். அந்த மலைப் பிரதேசத்துக்குப் புதிய மனிதன் அல்லவா! ஆதலால் சிறுவர்கள், அவனைப் பார்வையிட ஆரம்பித்தனர்.
மிருதுவான பாத அணிகள் பாதத்தை மூடியிருந்தன. மிகவும் சாதாரணமாகக் காட்டும் ஒரு பேண்ட் மற்றும் காலர் வைத்தச் சட்டை. மேல் சட்டையின் முதலிரண்டு பொத்தான்கள் போடப்படவே இல்லை.
இது, இன்று மட்டுமா? இல்லை, என்றுமே இப்படித்தானா?? நாளையும் இவனைப் பின் தொடர்ந்தால், நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம்!
புருவங்கள் சுருங்கிய நிலையிலே இருந்தன. முகத்தில் ஒரு கடினத் தன்மைத் தெரிந்தது. காலணியின் மிருதுத் தன்மையில் ஒரு பத்து சதவீதம் இருந்தாலும், முகத் தோற்றம் இலகுவாக இருக்குமோ?? என்றாவது கனிவான முகம் காட்டும் போது, கண்டறிந்து கொள்வோம்!!
மணிக்கட்டைக் கவ்விக் கொண்டிருந்தக் கைக்கடிகாரம் வேறு, ஒருவித இறுகு தன்மையை உணர்த்தியது.
மேலே கூறியவை, உருவத்தைப் பற்றியக் கேள்விக்கானப் பதில். இனி
உள்ளத்தைப் பற்றிய வினாக்கள் வருகின்றன.
இந்த வினாவைப் பத்து மதிப்பெண் வினா என்று நினைத்து, விரிவான விடை எழுத வேண்டாம். அது ஒரு இரண்டு மதிப்பெண் கேள்விதான்.
அமீபா அளவில் கூட தன் வாழ்வில் உறவை விரும்பாத உள்ளம். நன்றாகப் பேசுவான். ஆனால், என்றுமே உதட்டிலிருந்து பேசுபவன். உள்ளத்திலிருந்து பேச மாட்டான்.
பின் குறிப்பு : உதடுகள் சிரிக்கப் பழகவில்லை.
அவ்வளவே பதில்!
இப்போது சிறுவர்கள் அறையைச் சோதிக்க ஆரம்பித்தனர். இதுவரை காலியாக இருந்தது அல்லவா! இப்பொழுது எவ்வாறு உள்ளது என்று அறிய ஆவல்!
ஆனால் அதற்குள்ளாக, அவர்கள் முன்னே ஒரு சொடுக்குச் சத்தம் கேட்டது. நிமிர்ந்து அந்த மனிதனைப் பார்த்தனர்.
‘என்ன வேணும்?’ என்ற கேள்வியை, அவன் முகத்தின் ‘பாவம்’ கேட்டது. திரும்பவும் பிள்ளைகள் அறைக்குள் தலையை விட்டனர்.
“ப்ச், என்ன வேணும்?’ என்று வாய் வார்த்தையாகவேக் கேட்டு விட்டான்.
“அண்ணா” என்று ஒரு சிறுவன் குழைவாக ஆரம்பித்தான்…
“ச் ச்ஞ்… என் பேரு ஜீவன்.” என்று புதியவன் சொல்லி முடிக்கும் முன்பே…
“ஓ! ஜீவன் அண்ணா… அங்” என்று மற்றொரு சிறுவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னே…
ஜீவன் குறுக்கிட்டான்…
“வெயிட்… என் பேரு ஜீவன். நீங்க ஜீவன் சாருன்னு கூப்பிடுங்க. இல்லைன்னா வெறும் சாருன்னு கூப்பிடுங்க”
‘ஜீவன் சாரின்’ எதிரில் நின்றவர்கள், அவனை உர்ரென்று உற்று நோக்கினார்கள்.
உண்மை என்னவென்றால், ஜீவனின் பார்வை முதலிருந்தே, அப்படித்தான் இருந்தது.
“நீங்க ஸ்கூல்ல வேலை பார்க்க வந்திருக்கீங்களா??” – இது ஒரு சிறுவனின் கேள்வி. முகத்தில் முறுவலுடனே கேட்டான்.
“ப்ச், இல்லை. என்ன வேணும்னு சொல்லுங்க?” – ஜீவனின் கேள்வி.
“பந்து பால்கனியில விழுந்திடிச்சு. அதை எடுத்துத்தாங்க சார்”
ஜீவன், திரும்பிப் பார்த்தான். நேரெதிரே எதுவும் கிடப்பதைப் போல் தெரியவில்லை.
“சார், அந்தப் பக்கம் இருக்கும்” என்று அவனுக்கு இடம் சொன்னான் ஒரு சிறுவன்.
மெதுவாக நடந்து சென்று, பந்தை எடுத்து வந்தான், ஜீவன். அதற்குள் சிறுவர்கள் உள்ளே வந்திருந்தனர். அறையைப் பார்வையிட்டனர்.
இதற்கு முன்னே இருந்ததிற்கும், இப்பொழுது இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
அறையின் ஒரு மூலையில், மரத்தாலான திவான் இருந்தது. இப்படியொரு நீளமில்லா இடத்தில், இவ்வளவு உயரமான மனிதன் எப்படிப் படுத்துறங்க முடியும்??
பிள்ளைகளுக்குத் தோன்றியது இது!
மற்றொரு இடத்தில், ஒரு மிகச்சிறிய குளிர்சாதனப்பெட்டி. திறந்து பார்த்தனர். அதிக அளவில், தேநீர் பைகள் இருந்தன. ‘தேநீர், இவனது இஷ்ட பானம்’ என்று நினைத்தனர்.
சிறார்களின் முடிவு இது!
மற்றொரு ஓரத்தில் ஒரு எழுது மேசை, அதன் மேல் ஒரு மடிக்கணினி மற்றும் இரவு விளக்கு. அதனருகில் ஒரு முக்காலி கிடந்தது. இப்படி ஒரு வலுவான தேகத்தை, இந்த முக்காலி எப்படித் தாங்கும்??
சிறுவர்களின் சந்தேகம் இது!
ஒரே ஒரு ‘சூட்கேஸ்’ தெரிந்தது. இவ்வளவுதானா துணிமணிகள்?? மிகவும் எழிலான, எளிமையான மனிதன் போல!
பிள்ளைகளின் கணிப்பு இது!
பின் ஒரு பெரிய புத்தக அலமாரி இருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தனர். முழுதும் பொருளாதாரம் பற்றியப் புத்தகங்கள். அந்த அறையில், அவனை விட உயரமாக மற்றும் அகலமாக இருந்த பொருள், அது ஒன்றுதான்.
மேல் மாடிக்கு குடிவந்தவனின், மேல் மாடி படு ‘ஸடிராங்க்’ போல?
சிறார்களின் சிலாகிப்பு இது!!
“பார்த்தாச்சா??” – ஜீவன்.
“ஜீவன் சார், திங்க்ஸ் எல்லாம் இனிமேதான் வருமா??” – சிறுவன்.
“ப்ச்!! அவ்ளோதான்” – ஜீவன்.
இவ்வளவு கம்மியாகவா ஒருவனின் அன்றாடத் தேவை? இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமோ?
இருக்கலாம்!! அதை அவனாகவே சொல்லுவான் என்று நம்புவோமாக!
“சரி சார், பந்தைக் கொடுங்க”
“கொடுக்கிறேன், வெளியே வாங்க” என்று சொல்லி, அறையின் வெளியேச் சென்றான்.
சிறுவர்களும் அவனைப் பின்தொடர்ந்து, வெளியே வந்தனர்.
அறையின் கதவைத் தாழிட்டான்.
“ஜீவன் சார், பந்தைக் கொடுங்க”
“கொடுக்கிறேன், பட் என்கூட ஒரு கேம் விளையாடனும்.”
‘இது என்ன விதிமுறை?? ‘ என்பது போன்ற கேள்வி, சிறுவர்களின் முகத் தோற்றத்தில்.
“எங்களுக்கு கிடைச்சிருக்கிற டைம் ரொம்பக் கம்மிதான். இதுல நீங்க வேற. ப்ளீஸ் அண்ணா பந்தைக் கொடுங்க” – சிறுவன்.
“ப்ளீஸ் ‘என்னது’ ??” என்று கேட்டான், ஜீவன்.
“சாரி சார். ப்ளீஸ் சார். போதுமா? ”
“ஜஸ்ட் ஒன் கேம்தான்” – ஜீவன்.
விளையாடாவிட்டால், பந்தைத் தர மாட்டான் என்று சிறுவர்களுக்குத் தெரிந்தது. பின், அவர்களுக்குள் பேசத் தொடங்கினர். பேச்சின் முடிவில்,
“ஓகே சார்” என்றான் சிறுவன் ஒருவன்.
“கிழ வாங்க, ஒரு ஓவர் தாறோம்” – மற்றொரு சிறுவன்.
“கிரிக்கெட் வேண்டாம். நான் சொல்ற கேம் விளையாடலாம்” – ஜீவன்.
‘இது வேறயா??’ என்ற மனநிலையில் பிள்ளைகள்.
“சரி, சொல்லுங்க சார்” – சிறுவன்.
“கேம் நேம் – அப் அண்ட் டவுன்” – ஜீவன்.
“அப் அண்ட் டவுனா… அப்படின்னா??” – ஒரே குரலில் சிறுவர்கள்.
“நான் அப்புன்னு சொன்னா, அந்தப் பிளேஸ்தான் சேஃப். ஸோ எல்லாரும் இங்க எதிலயாவது ஏறி நிக்கணும் ” என்று சுற்றி இருந்த திண்டு, ஏணி, கதவுகளைக் கை காட்டினான்.
ஜீவனின் கை சென்ற பாதைகளின் வழியே, சிறுவர்களின் பார்வைகள் சென்று வந்தது.
“டவுன்னு சொன்னா…”
“டவுன்தான் சேஃப். ஸோ கிழதான் நிக்கணும். அதான?” – விளையாட்டை முதலில் புரிந்து கொண்ட, சிறுவன்.
“கரெக்ட்” – ஜீவன்.
“சார்!! வேண்டாம். கிழ வாங்க சார், கிரிக்கெட்டே விளையாடலாமே?” – ‘இதெல்லாம் ஒரு விளையாட்டா?’ என்ற எண்ணம் கொண்ட சிறுவன்.
‘முடியாது’ என்பது போல, தலையசைத்துப் பதில் எழுதினான்.
“வேணா ரெண்டு ஓவர் தாறோம்” – கொஞ்சம் தாராள மனம் கொண்ட சிறுவன்.
“பந்து வேணும்னா அப் அண்ட் டவுன் கேம் விளையாடனும்” என்றான் ஜீவன் கராராக.
வேறு வழியில்லாமல், விளையாட ஆரம்பித்தனர். ஜீவன் ‘அப், டவுன்’ என்று சொல்வதற்கு ஏற்ப, மேலே ஏறியும், கீழே இறங்கியும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். அப்படிச் செய்யாமல் நிற்பவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிறு பொழுதுகள் கழிந்தப் பின்னர், ஜீவன் கீழே செல்லப் படியிறங்க ஆரம்பித்தான்.
“ஜீவன் சார்… ஜீவன் சார்…” என்று கூவியபடி, அவனின் பின்னையே ஓடிவர ஆரம்பித்தனர்.
நான்கைந்து படிகள் சிறுவர்களை விட முன்னே சென்றவன், திரும்பி நின்றான். சிறுவர்களும் நின்றார்கள்.
அவர்களைப் பார்த்து “கேட்ச்” என்று சொல்லி, கிரிக்கெட் பவுலிங் போடும் பாணியில் பந்தினைத் தூக்கி எறிந்துவிட்டு, திரும்பவும் இறங்க ஆரம்பித்தான்.
ஜீவன் செய்த விதத்தைப் பார்க்கும் பொழுது, அத்தனை ‘ஸ்டைலாக’ இருந்தது.
இதுவும் கூட சிறுவர்களுக்குத் தோன்றியதுதான்!!
ஒரு சிறுவன் பந்தினைச் சரியாக பிடித்துக்கொண்டான். எனினும் ஜீவன் மேல் சிறுவர்களுக்குக் கோபம் வந்தது. விளையாட்டு நேரத்தை வீணடித்துவிட்டான் என்றதால் வந்த கோபம்!! வேகமாகக் கீழிறங்கி வந்தார்கள்.
“அண்ணா தேங்க்ஸ்” என்று இரண்டு சிறுவர்கள் சொல்லியபடி, அவனை இடித்துக் கொண்டுச் சென்றனர்.
“ப்ச்” – இது ஜீவன்.
“ஜீவன் அண்ணா தேங்க்ஸ்” – இது இன்னும் இரு சிறுவர்கள் சொல்லிச் சென்றது.
“ப்ச்” – ஜீவன்.
“ஜீவன் அங்கிள் பை” – கடைசியாக் கடுங் கோபத்துடன் வந்த பையன் சொல்லி விட்டு, மற்றவர்கள் போல ஓடிப் போய் விட்டான்.
ஜீவன், “ஏய்! சொன்னேன்ல மரியாதை கொடுத்துப் பேசணும்னு. ஒரு தடவைச் சொன்னா புரியாதா??” என்று ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டார்கள் போல, முகத்தில் அத்தனை பெரிதானக் கோபத்தைக் காண்பித்தான்.
ஏன்? அண்ணன், அங்கிள்.. இவையும் மரியாதை தரும் அழைப்புகள் தானே? இதற்கு ஏன் கோபம்?? ஏனென்றால் அவை உறவைக் குறிக்கும் அழைப்பு! அது அவனுக்குத் தேவையில்லை.
ஆதுபோல, ‘ஜீவன்’ என்றும் அழைக்கக் கூடாது. ஏனெனில் அது அழைப்பவருக்கு அவனிடத்து, சற்று உரிமையைத் தந்துவிடும்!! எனவே அதுவும் கூடாது.
வள்ளிம்மா வாசலில்தான் இருந்தார். ஜீவனின் கோபத்தைக் கண்டதும், எழுந்து நின்று கொண்டார்.
கடைசிப்படி வந்த பின்தான், ஜீவன் வள்ளிம்மா இருப்பதைக் கண்டான்.
அவர் கண்களில், பயமும் பரிதாபமும் சரிவிகிதத்தில் தெரிவது போல் இருந்ததோ?? ஏன்? தன் பின்புலம் ஓரளவிற்குத் தெரிந்ததாலோ?? உடனே இப்படியெல்லாம் ஐயம் கொண்டு நினைக்க ஆரம்பித்தான்.
ஆனால் நிஜத்தில், வள்ளிம்மா சாதரணமாகவே பார்த்திருந்தார். அவர், மற்றவர்கள் போல அல்ல என்று, அவனுக்குத் தெரியவில்லை.
சட்டென்று எதுவும் பிடிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறி வீதியில் நடக்கத் தொடங்கினான், ஜீவன்.
இங்குதான் செல்ல வேண்டும் என்று எந்த இலக்கும் இல்லை என்பதால், இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி, இஷ்டத்திற்கு நடந்தான். ஒரு பதினைந்து நிமிட நடைப் பயணத்திற்குப் பிறகு, சமதளப் பரப்பைத் தாண்டி, மலைச் சரிவு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
சுற்றிலும் விழிகளைச் சுழல விட்டான்.
ஒரு புறத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் நிறைந்த பள்ளத்தாக்கு. மறுபுறத்தில், சாலையிலிருந்து சற்றே உயரத்தில் இருந்த, மரங்கள் நிறைந்த பகுதி. மிக அருகில், தவழ்ந்து செல்கின்ற வெள்ளை மேகங்கள். தூரத்தில் தேயிலைத் தோட்டங்கள்.
இருபுறத்திற்கும் இடையில் சென்று கொண்டிருந்தக் கொஞ்சம் குறுகலானப் பாதையில் நடப்பது, அத்தனை உற்சாகம் தந்தது.
அடுத்து ஒரு பத்து நிமிட நடைக்குப் பின், ஜீவன் கண்களுக்கு அது தெரிந்தது.
அது, ஒரு மஞ்சள் வர்ணம் தீட்டப்பட்ட கல் இருக்கை. கொஞ்சம் எட்டி நடை போட்டு, அதன் அருகில் சென்றான். நெருங்கி வந்த பின்தான் தெரிந்தது, அது கொஞ்சம் பாழடைந்த இருக்கை என்று!
இப்பொழுது, இங்கிருந்தபடி விழிப் பார்வையைச் சுழலச் செய்தான்.
இந்த இடத்திலிருந்து பார்க்கும் பொழுது, பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வீடுகள் தெரியவில்லை. எதிர்புறம் மரங்கள், பின்னே செடி கொடிகள் மண்டிக் கிடக்கும் பள்ளத்தாக்கு. அந்த இடமே, இருள் பரவிய மாலை நேரப் பொழுது போல் இருந்தது. நன்றாகவே குளுமைத் தெரிந்தது.
அந்தக் கல் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டான். பின்னோக்கித் தலைச் சாய்ந்து, கண்களை இறுக்க மூடினான்.
இதயம், இயற்கையுடன் சேர்ந்து கொள்ள ஆரம்பித்தது. தனிமை அத்தனை சுகமானதாக இருந்தது. தன் ஆயுளின் இறுதி வரை, இந்தத் தனிமை மட்டும், அருகாண்மையில் இருந்தால் போதும் என்று நினைத்தான்.
‘தனிமை’ மற்றும் தன்னைச் சுற்றி, இயற்கைத் தந்தருளியப் பசுமை, என இரண்டையும் ரசிக்கத் தொடங்கினான். இதயம் ரசனைக் கொண்டது. ஆனால் முகம், அதைப் பிரதிபலிக்கவில்லை.
கைக்கடிகாரத்தின் பெரிய முள், ஒரு அறுபது முறை நகர்ந்திருந்தது.
திடீரென்று ஒரு விம்மல் சத்தம். கண்களை மெதுவாகத் திறந்தான். எங்கே என்று திரும்பிப் பார்த்தான்.
அதே கல் இருக்கையின் மற்றொரு புறத்தில், ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
அந்தப் பெண் பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். பிரம்மன் பிரத்யேக பிரயத்தனம் கொண்டு படைத்திருக்கிறான். ஒரே ஒரு குறை கொஞ்சம் மெலிவான தோற்றம். அழும் பொழுது, கழுத்து எலும்புகள் தெரிந்தன.
இவள், இங்குள்ள இயற்கைக்கும் இருக்கைக்கும் பழக்கப்பட்டவள் என்பதால், இந்த ஒற்றை வரி நமக்காக!
ஆங்!! ‘ஜீவன் சார்’… இல்லை, அவர் கருத்திற்கும் கவனத்திற்கும் இவ்வரி செல்லவில்லை!!
புறங்கையாலும், சேலையின் முந்தானையாலும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். அழுகை சற்றே மட்டுப்பட்டது.
ஜீவன் திரும்பவும் கண்களை மூடிக்கொண்டான். சுற்றியிருந்த உயரமான மரங்களில் வசிக்கும் புள்ளினங்களின் ‘கீச் கீச்’ சத்தம் கேட்டது. அந்த ஓசைக்கேற்ப மரங்கள் அசைவதைக் கூட மனம் உணர்ந்து. அதனுடன் லேசான தூரலும் சேர்ந்து கொண்டது.
பசுமை…
பனிக்காற்று…
பகல் பொழுதின் தூரல்…
வேறென்ன வேண்டும்!!
இந்தப் பெண் மட்டும், தன் அருகில் இல்லையென்றால், இதைவிட அழகான ரம்மியமான சூழல் கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
கைக் கடிகாரத்தின், முட்கள் வெகு தூரம் ஓடிய பிறகு, திரும்பவும் அழுகுரல் கேட்க ஆரம்பித்தது.
ஜீவன், “ப்ச்” என்று சற்று சத்தமாகவே சொல்லிக் கண் திறந்தான்.
ஒருநாளில் எத்தனை முறை ‘ப்ச்’ என்று சொல்வீர்கள், ‘ஜீவன் சார்’. குறைத்துக் கொள்ளுங்கள்.
அவனின் ‘ப்ச்’ என்ற சொல்லைக் கேட்டதால், திரும்பிப் பார்த்தாள் அந்தப் பெண்.
‘இவருக்கும், தான் இடைஞ்சலாக இருக்கிறோமா?’ என்று நினைத்தவள், “ஸாரி சார்” என்று சொன்னாள்.
‘ஜீவன் சாரின்’ தனிமைத் தரணியை அசைக்கப் போகும் பெண்ணின் குரலை, முதல் முறையாகக் கேட்டான், ஜீவன்.