Manmo14

கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள் மித்ரமதி. பக்கத்தில் அம்மா தேவகி. விமானம் தரையிறங்க இன்னும் பத்து நிமிடங்களே மீதமிருந்தது.

சென்னையின் தட்பவெப்பம், நேரம் என அனைத்தையும் துணை விமானி அறிவித்தபடி இருக்க காபின் க்ரூ அவரவர் பணிகளில் திறம்பட இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

விமானம் தரையை நோக்கி இறங்க இறங்க மித்ரமதியின் தலையை ஏதோ பண்ணியது. புது இடம், புது வாழ்க்கை… எல்லாமே அவளைக் கொஞ்சம் தலைகீழாகத் தான் ஆக்கி இருந்தது.

அன்று ரிச்சர்ட்டின் தோள் சாய்ந்து கதறியதுதான் அவள் சிந்திய கடைசிக் கண்ணீர்த் துளி. அதன் பிறகு அவள் அழவே இல்லை.

‘ரிச்சர்ட்! நானும் அம்மாவும் இன்டியா போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.’

‘வெரிகுட் மேடம். கொஞ்ச நாள் அங்க போய்த் தங்குங்க. அப்போ தான் உங்களுக்கும் மனசுக்கு ஆறுதலா இருக்கும்.’

‘கொஞ்ச நாள் இல்லை ரிச்சர்ட். அங்கேயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நீ இங்க இருக்கிற வீட்டை விக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணு.’

‘மேடம்! அவசரப்படாதீங்க. எத்தனை நாளைக்கு உங்களால இன்டியால சமாளிக்க முடியும்னு தெரியலை. அந்த வெயிலை உங்க உடம்பால ஏத்துக்க முடியாது. போய்க் கொஞ்ச நாள் இருந்து பாருங்க. ஓகே ன்னா அதுக்கப்புறமா வீட்டை விக்கலாம்.’

‘……………’

‘இதுல யோசிக்க ஒன்னுமே இல்லை மேடம். அவசரப்படாதீங்க. இது உங்க வாழ்க்கை. அதுக்குள்ள ஒரு தகுதியில்லாத மனுஷன் வர நானும் காரணமாகிட்டேன்.’

‘நீ என்ன பண்ணினே ரிச்சர்ட்?’

‘கார்த்திக் உங்களுக்குப் பொருத்தமா இருப்பார்னு நானும் தானே சொன்னேன்.’

‘லூசு மாதிரிப் பேசாத ரிச்சர்ட். நீ என் நல்லதுக்குத் தானே சொன்னே? கார்த்திக்கை உன்னால புகுந்து பார்க்க முடியுமா என்ன? மனசுல பட்டதைச் சொன்னே.’

‘அந்த மனுஷனைப் பத்தின பேச்சு நமக்குள்ள வேணாம் மேடம்.’ ரிச்சர்ட்டின் கசப்பான குரலில் மித்ரமதியும் புன்னகைத்தாள்.

விமானம் தரையைத் தொட்டிருக்க அம்மாவும் மகளும் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு வெளியே வந்திருந்தார்கள். பாட்டி வீட்டு அம்பாசிடர் இவர்களுக்காகக் காத்திருந்தது.

பாட்டி சாவித்திரி.‌ சந்திரசேகரின் அம்மா. கணவரையும் மகனையும் பறிகொடுத்து விட்டு தன்னந்தனியே வாழும் பெண்மணி.‌

வசதி வாய்ப்புகளுக்கு எந்தக் குறைவும் இல்லாததால் அவருக்கு வாழ்க்கை வளமாகத்தான் போனது.

சந்திரசேகரின் குடும்பம் நல்ல வசதியானது. அதனால்தான் நண்பர்கள் இங்கிலாந்து அழைத்த போது பெரு முதலோடு அவரால் பயணப்பட முடிந்தது.

மகன் தவறியது முதலே சாவித்திரி மருமகளையும் பேத்தியையும் இந்தியா அழைப்பதுண்டு. வரப் பிரியப் பட்டாலும் அங்கும் தொழில் இருந்ததால் மித்ரமதியால் அசைய முடியவில்லை.

அம்மாவைத் தனியாகப் போய்வரச் சொல்லி மித்ரமதி சொல்வதுண்டு. ஆனால் தேவகி நகரமாட்டார். பெண் பிள்ளையைத் தனியே விட்டுச் செல்ல அவர் மனம் இடம் கொடுக்காது.

கார் வீட்டை நெருங்கி இருந்தது. சென்னையின் ஓரளவு பிரதானமான இடத்தில் அமைந்திருந்தது வீடு. பிரதானமான இடம் என்றாலும் சந்தடிகளற்ற இடம்.

வாசலிலேயே காத்திருந்தார் சாவித்திரி. மருமகளையும், தன் மகனே உருவாக வந்திறங்கிய பேத்தியையும் பார்த்த போது கண்கள் குளமாகியது அந்த முதியவருக்கு.

கூட மாட ஒத்தாசைக்கு இருக்கும் பெண் ராசாத்தி ஆரத்தி எடுக்க பேத்தியை அணைத்துக் கொண்டார் சாவித்திரி.

“ராசாத்தி… சுடுதண்ணியை பதமா ரெடி பண்ணு. தேவகியும் மித்ராவும் முதல்ல குளிக்கட்டும்.” சொன்னபடியே உள்ளே வந்த சாவித்திரி இருவரையும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்கு அழைத்துச் சென்றார்.

நல்ல பெரிய தொட்டிக்கட்டு வீடு. நடுவில் நிலா முற்றம், அதிலொரு துளசி மாடம். கீழே சமையற்கட்டு, பூஜையறை, அது தவிர இன்னும் இரண்டு ரூம்கள். அதிலொன்றை சாவித்திரி உபயோகப்படுத்த மற்றையது தேவகிக்கு.

மித்ரா மாடிக்குப் போய்விட்டாள். மேலேயும் நான்கைந்து அறைகள். அவள் வந்தால் எப்போதும் தங்கும் ரூமிற்குள் போனவள் முதலில் அலுப்புத் தீரக் குளித்தாள். இதமான வெந்நீர் மேனிக்கு சுகமாக இருந்தது.

எதுவும் உண்ணக்கூட மனமில்லாமல் அப்படியே கட்டிலில் சரிந்து விட்டாள் பெண். எங்கோ ஓடிக்களைத்தாற் போல அப்படியொரு உறக்கம். காலையில் வீடு வந்தவள் சாயங்காலம் வரை அடித்துப் போட்டாற்போல உறங்கினாள்.

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த தேவகி மகளைத் தேடினார்.

“எங்க அத்தை மித்ரா?”

“அவ நல்லாத் தூங்கிறா தேவகி.”

“சாப்பிடல்லையே அத்தை?”

“சாப்பாட்டை விட இப்போ அவளுக்குத் தூக்கமும் நிம்மதியும் தான் வேணும். அப்புறம் சாப்பிடட்டும் விடு.” மாமியாரின் பேச்சில் தேவகியின் கண்கள் லேசாகக் கலங்கியது.

“இங்கப்பாரு தேவகி. எங்கேயோ தவறு நடந்து போச்சு. இல்லேங்கலை. ஆனா அதுக்காக எம் பேத்தி முன்னாடி இனி இப்படிக் கண் கலங்காத.‌” கண்களைத் துடைத்துக் கொண்டார் மருமகள்.

“எல்லாருக்கும் வருத்தம் தான். அதையும் நான் மறுக்கலை. அதுக்காக மூலையில உக்காந்துக்கிட்டு ஒப்பாரி வெக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை. மித்ராவைத் தூக்கி நிறுத்தணும். அது மட்டும் தான் இப்போ முக்கியம். உனக்கும் எனக்கும் அழணும்னு தோணிச்சுன்னா பாத்ரூம்ல போய் அழலாம்.”

“புரியுது அத்தை.”

“ம்… புருஷோத்தமனை ஞாபகம் இருக்கா உனக்கு?”

“யாரு அத்தை?”

“நம்ம சந்ரு வோட ஃப்ரெண்ட். உங்க கல்யாணத்துல எல்லாம் நின்னு ரொம்ப கலாட்டா பண்ணினானே?”

“மறந்து போச்சு அத்தை. பார்த்தா ஞாபகம் வரும்.”

“சிங்கப்பூர்ல இருந்தவன் இப்போ திரும்பவும் சென்னைக்கே வந்திட்டான். பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சு நடத்துறான். அவங்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். மித்ரா கொஞ்ச நாளைக்கு அங்க போகட்டும். ஒரு மாறுதலா இருக்கும். மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்.”

“சரி அத்தை.”

“தைரியமா இரு. என்ன? புருஷன் கொஞ்சம் சரியில்லை, அவ்வளவு தான். மத்தபடி நம்ம பொண்ணுக்கு எதுவும் பாதகமாப் போயிடல்லை. முந்தாநாத்து வந்த புருஷன் தானே? என்னதான் நடக்குதுன்னு பார்த்திடலாம். கவலையை விடு. அதுதான் அத்தை மலைபோல இருக்கேனில்லை?”

“ம்… சரி அத்தை.”

***

கார்த்திக் வேலையில் படு பிஸியாக இருந்தான். ஒரு மாதம் ஓடிப்போனதே தெரியவில்லை. ஜெனியையும் வேலையில் சேர்த்துக் கொண்டான்.

குறை சொல்ல முடியாத அளவு பெண்ணும் வேலையில் நல்ல திறமைசாலியாக இருந்தாள். வேலைக்குப் புதிது. ஆனால் அதைத்தான் கார்த்திக் எப்போதும் விரும்புவான்.

தன்னிடம் வேலை பார்ப்பவர்களத் தெரிவு செய்யும் போது அனுபவமின்மையைப் பெரிதும் வரவேற்பான். அவன் பாணியில் அவனிடம் வேலை கற்றுக் கொள்பவர்களைத் தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் திணறினாலும் பிற்பாடு சமாளித்துக் கொள்வார்கள்.

ஏனோ மித்ராவின் ஞாபகம் அவனுக்கு அப்போது வந்தது. ஆரம்பத்தில் தன் வேகத்திற்கு ஈடுகொடுக்கத் திணறிய அந்த மென்மை இப்போதும் இனித்தது அவனுக்கு.

கண்களை மூடி அந்தச் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அவளை நினைக்க விடாத படி இந்த இடைப்பட்ட காலத்தில் வேலைப்பளு அவனைச் சூழ்ந்து கொண்டது. புதிதாகக் கிடைத்திருந்த அந்த சூப்பர் மார்க்கெட் உடனான ஒப்பந்தம்.

திறம்படச் செய்து முடிக்கவேண்டும் என்பதில் கார்த்திக் நூறு சதவிகிதம் உறுதியாக இருந்தான். தன்னிடம் வேலை செய்பவர்களையும் சாறு பிழிந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அம்மாவும் அப்பாவும் அவனிடம் பேசுவதே இல்லை. அப்பாவாவது பரவாயில்லை. அம்மா அவன் இருக்கும் திசைப்பக்கமே திரும்புவதில்லை.

வீட்டில் அவனுக்காக இப்போது அவர் சமைப்பதும் இல்லை. சக்ரதேவ் அதற்காகக் கொஞ்சம் வருத்தப்பட்ட போதும் பத்மா அதைக் கணக்கில் கொள்ளவில்லை.

கார்த்திக் ஹோட்டலில் தான் சாப்பிட்டான். வீட்டிற்குப் போகாமல் ஹோட்டலிலேயே தங்கத்தான் முதலில் அவன் மனம் முடிவு செய்தது. ஆனால்… அதற்கும் அம்மா வேறு அர்த்தம் கற்பித்துக் கொள்வார் என்பதால் ராத்தங்கல் எப்போதும் இப்போதெல்லாம் வீட்டில் தான்.

அது கூட அவனுக்குச் சுகமாகத்தான் இருந்தது. அவள் வாசத்தோடு, அவள் படுத்திருந்த இடத்தில் தலை சாய்க்கும் போது அப்படியொரு சுகம். அடித்துப் போட்டாற் போலத் தூங்குவான் கார்த்திக்.

ஒருமுறை சக்திவேல் கூட அழைத்துப் பேசி இருந்தார். மனைவி பாதுகாப்பாகப் போய் லண்டன் சேர்ந்து விட்டாளா என்று உறுதிப் படுத்திக் கொண்டதோடு வேலையில் இறங்கி விட்டான் கார்த்திக்.

ஆனால் அதைக் குலைத்துக் கொண்டு வந்தது லண்டன் ஃபோன் கால். தேவகியாக இருக்கும் என்று நினைத்துத் தான் ஆன்ஸர் பண்ணினான். ஆனால் பேசியது சக்திவேல்.

‘சொல்லுங்க அங்கிள்.’

‘என்ன கார்த்திக்… மித்ரா என்னென்னமோ சொல்றா?’ குரல் வெகுவாகக் கலங்கி இருந்தது.

‘அங்கிள்! அது எனக்கும் மித்ராக்குமான பிரச்சினை. நீங்க எல்லாரும் ஏன் இதுல மூக்கை நுழைக்கிறீங்க?’ விஷயம் அவர்கள் வரை போன கோபம் அவன் குரலில்.

‘இந்தக் கல்யாணத்துக்கு மித்ரா சம்மதிக்கலை. நீங்க எங்கிட்டத் தானே இதைப் பத்திப் பேசினீங்க கார்த்திக்? நீங்க தானே மித்ராவை இதுக்கு சம்மதிக்க வெக்கச் சொன்னீங்க? அப்போ நீங்க எனக்குப் பதில் சொல்லித்தானே ஆகணும்?’

‘அங்கிள்! அது கல்யாணத்துக்கு முன்னாடி. இப்போ எனக்கும் என் வொய்ஃபுக்கும் இடையில நடக்கிறதுக்கு எல்லாம் என்னால உங்களுக்கு விளக்கம் குடுக்க முடியாது.’

‘…………..!’

‘ஆனாலும் ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோங்க. அவளைக் காயப்படுத்தணும்னு நினைச்சுத் தான் கல்யாணம் பண்ணினேன். ஆனாக் கழட்டி விடணும்னு நினைக்கலை. ஏதோ ஒரு கோபத்துல போயிருக்கா. வருவா. நீங்க கவலைப் படாதீங்க.’

‘உங்களுக்கு இன்னும் மித்ராவைப் பத்திச் சரியாத் தெரியலை கார்த்திக்.’

‘எல்லாம் தெரியும் அங்கிள். யூ டோண்ட் வொர்ரி. நான் பார்த்துக்கிறேன்.’ ஒரு புன்னகையோடு தான் லைனைக் கட் பண்ணி இருந்தான் அன்று.

மனைவியை நினைத்த போது இப்போதும் ஒரு இள நகை கார்த்திக்கின் முகத்தில். தன் காலிலெல்லாம் மனைவி விழுவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவள் நிமிர்வின் அளவு தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே! அதைத் தான் ஏற்கனவே அவள் காட்டியிருந்தாளே!

ஆனால் அழுவாள் என்று அவன் நிறையவே எதிர்பார்த்தான்.

அவள் கண்ணீரை அவன் ஆவலாக எதிர்பார்த்திருக்க, அவளோ அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருந்தாள். அதுவும் அவன் அம்மா அப்பா முன்பாக.

கார்த்திக்கிற்கு அப்போதுதான் மித்ராவின் மேல் கோபம் வந்தது. என்ன இவள்? சிறுபிள்ளை போல நடந்து கொள்கிறாள் என்று எரிச்சல் வந்தது.

‘மேடம் என்னைக் காதலித்து விட்டார்களாம்! இல்லாவிட்டால் சந்தி சிரித்திருக்குமாம்!’ அன்று அவள் சொன்ன விதத்தை நினைத்த போது இப்போதும் சிரிப்பு வந்தது கார்த்திக்கிற்கு. தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான்.

இப்போது அவளைத் தன் முன் உட்கார வைத்து ஒரு பாக்கெட் சிகரெட்டைப் பிடித்தால் எப்படி இருக்கும் என்று தோணியது!

முகம் ஜிவு ஜிவுவெனச் சிவக்க… தன்னை ஒரு அறை அறைந்தாலும் அறைவாள்.

இவன் புன்னகைத்தபடி அமர்ந்திருக்க மார்க் உள்ளே நுழைந்தான்.

“சொல்லு மார்க்? அந்த கன்ஸ்ட்ரக்ஷன் பத்தி விசாரிச்சியா?”

“ஆமா சார். மிஸ்டர்.புருஷோத்தமன் தான் கம்பெரியோட ஓனர். ரொம்ப காலமா சிங்கப்பூர்ல தொழில் பண்ணிட்டு லாஸ்ட் ஃபைவ் இயர்ஸ் ஆத்தான் சென்னைல தொழில் பண்ணுறார். பிஸினஸ் நல்லாவே போகுது.”

“ம்…”

“மேடம் அங்க அடிக்கடி போறதைப் பார்த்தா…”

“லண்டன் திரும்புற ஐடியா இல்லையோன்னு தோணுதா?”

“ஆமா சார். கொஞ்சம் அந்த இடத்துல உரிமையாப் பழகிற மாதிரித்தான் தெரியுது.”

“அவங்க தாத்தா இல்லைன்னா அப்பாக்குத் தெரிஞ்சவங்களா இருக்கும்.”

“ஓ… ஆனா ஓனருக்கு ஒரு பையன் இருக்கான்…” மார்க் மேலே சொல்லத் தயங்கினான்.

“சொல்லு மார்க்.” தன் முதலாளி இதைச் சொன்னால் கோபப்படுவாரோ என்று நினைத்தான் மார்க். ஆனாலும் கார்த்திக்கின் முகத்தில் புன்னகை மட்டுமே இருந்தது.

“மேடம் அவாய்ட் பண்ணுறாங்க. ஆனா பையன் தான்…”

“அப்போ அவனுக்கு அடி நிச்சயம்.”

“நாம அடிக்கிறோமா சார்?”

“நாமளா? அது எதுக்கு? அதை உங்க மேடமே பார்த்துப்பா.” சுலபமாகச் சொன்னவன் வேலையில் மூழ்கி விட்டான். மார்க் தான் குழம்பிப் போனான்.

***

அந்த ரிசப்ஷனில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் மித்ரமதி. வாழ்க்கை கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியா வரும் போது இருந்த குழப்பமோ கவலையோ எதுவுமே இப்போது அவள் மனதில் இல்லை.

பாட்டியின் தொல்லை தாங்க முடியாமல் தான் புருஷோத்தமன் அங்கிளைப் போய்ப் பார்த்தாள். ஆனால் மனிதர் இவளைப் பார்த்ததும் மகிழ்ந்து போனார்.

சந்திரசேகரின் மகள் என்ற ஒரு அடையாளம் மட்டுமே அவளை நிறையப் பேருக்கு இனங்காட்டியது. அப்பா பணத்தை மட்டுமல்லாது நிறைய நல்ல மனிதர்களையும் தனக்காகச் சேர்த்து வைத்திருக்கிறார் என்று நினைத்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு வாரம் முழுதாக ஓய்வெடுத்த பின்பு அவர் கம்பெனியில் போய் இணைந்து கொண்டாள். சிறிது காலம் வேலை பார்க்கிறேன். பிடித்தால் தொடர்கிறேன், இல்லையென்றால் விட்டு விடுவேன் என்ற ஒப்பந்தத்தில் தான் கிளம்பிப் போயிருந்தாள்.

புருஷோத்தமன் எல்லாவற்றிற்குமே தலையை ஆட்டினார். ஏதோ மித்ரமதி அவர் பக்கத்தில் இருப்பது தன் நண்பனே இருப்பதைப் போல உணர்ந்தார் போலும்!

“ஹாய்!” குரலில் கவனம் கலையத் திரும்பினாள் மித்ரா. எதிரே ஒரு பெண் நின்றிருந்தாள். பார்க்கக் கொள்ளை அழகு.

“நான் தான் பார்கவி.” அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளப் புன்னகையோடு எழுந்தாள் மித்ரா. தென்றல் வானொலியின் காரியாலயத்தில் தான் அமர்ந்திருந்தாள்.

“ஹாய் பார்கவி! நான் மித்ரா. உங்க ஃபேன்.” இவள் சொல்ல அந்தப் பெண் அழகாகப் புன்னகைத்தாள்.

“குரல் தான் ஸ்வீட் ன்னு நினைச்சேன். ஆளும் ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க?”

“அப்படியா? தான்க் யூ மித்ரா.”

“ரொம்ப அருமையா விஷயங்களைத் தேடித் தேடிப் பேசுறீங்க பார்கவி. ஆக்சுவலா எனக்கு மார்னிங் தான் உங்க ப்ரோக்ராம் வரும். இருந்தாலும் மோஸ்ட்லி மிஸ் பண்ண மாட்டேன்.”

“ஓ… நீங்க எந்த கன்ட்ரி ல இருந்து வர்றீங்க?”

“யூ கே.”

“ஓ… ரொம்ப சந்தோஷம். எனக்கு யூ கே ல எல்லாம் ஃபேன்ஸ் இருக்காங்களா?”கண்களை உருட்டி சிரித்துக் கொண்டே பார்கவி சொல்ல மித்ராவும் சிரித்தாள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பார்கவியின் ஃபோன் அவளை அழைத்தது.‌

“ஒரு நிமிஷம் மித்ரா.” சொன்னவள் ஃபோனைக் காதிற்குக் கொடுத்தாள்.

“சொல்லுங்க நந்தா.”

“…………”

“ரெக்கார்ட்டிங் முடிஞ்சுது. வீட்டுக்குத்தான் கிளம்பப் போறேன்.”

“………..”

“அப்படியா? வாங்களேன், சேர்ந்தே போகலாம்.” இன்னும் சில நொடிகள் பேசியவள் அழைப்பைத் துண்டித்தாள்.

“ஸாரி மித்ரா. என் ஹஸ்பென்ட் தான். இங்க வந்து என்னோட ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க.”

“ஓ… அம்புஜம் மாமி புண்ணியத்துல எங்களுக்கெல்லாம் உங்க கல்யாணம் தெரிய வந்தது. இல்லைன்னா தெரிஞ்சிருக்காது.”

“ஆமா… ஸ்வீட் லேடி. ரொம்ப உரிமையாப் பேசுவாங்க. அன்னைக்கு பேசிக்கிட்டு இருக்கும் போது திடீர்னு அப்படிக் கேப்பாங்கன்னு நான் யோசிக்கவே இல்லை. எப்படியோ ஸ்மெல் பண்ணிட்டாங்க.”

“ஆமா. அவங்க கால் பண்ணினாலே ப்ரோக்ராம் களை கட்டிடும்.” பெண்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

தூரத்தில் நந்தகுமார் வருவது தெரிந்ததும் பார்கவி எழுந்து கொண்டாள். அவளையே பின் தொடர்ந்த மித்ரமதியின் கண்கள் நிலைகுத்திப் போனது.

தன் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிய அதே நந்தகுமார். பார்ப்பதற்கு அன்று பார்த்தது போலவே இருந்தாலும் அந்தக் கண்கள் அசையாமல் ஓரிடத்திலேயே நின்றிருந்தது. கையில் ஒரு வெள்ளைப் பிரம்பு.

மித்ரமதியின் நெஞ்சை யாரோ ஓங்கி அடித்தாற் போல வலித்தது. கணவனின் கோபம் நிறைந்த முகம் சட்டென்று ஞாபகம் வந்தது பெண்ணுக்கு. அவனுக்கும் இப்படித்தான் வலித்திருக்குமோ!

கார்த்திக்கின் தம்பி. அவனைப் போல இல்லை என்றாலும் அவனுக்குச் சளைக்காத தோற்றம்.

எப்போதும் போல நேர்த்தியான உடை. உடையிலேயே தெரியும் அவன் பணக்காரத் தோரணை. பார்கவியின் குரல் கேட்டதும் அவன் முகமே சிரித்தது.

அன்று பார்கவியைப் பற்றிப் பேச்சு வந்த போது கார்த்திக் மர்மமாகப் புன்னகைத்தது ஏனென்று இப்போது பிடிபட்டது மித்ராவிற்கு.

சித்தி பையன் கல்யாணத்திற்கு இந்தியா போகிறேன். நீயும் வா. பார்கவியைப் பார்க்கலாம் என்றானே! அப்போதே அவனுக்கு எல்லாம் கேலியாகத் தான் இருந்திருக்கிறது.

பார்கவியை உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டபோது, இந்தப் ப்ரோக்ராம் கேட்டிருக்கிறேன் என்று சொன்னதெல்லாம் பொய். பத்மா கூட நந்தகுமார் கல்யாணம் பண்ணி இருக்கும் பெண்ணின் பெயர் பார்கவி என்று தானே சொன்னார். நான் தான் அன்றைய நிலையில் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை போல.

அவன் வரை சென்ற பெண்ணும் கலகலத்தபடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தது. பேச அவளுக்குச் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

“நந்தா! இவங்க மித்ரா. யூ கே ல இருந்து வந்திருக்காங்க. என்னோட ஃபேனாம்.” அவள் கலகலத்துச் சொல்ல நந்தகுமார் முகத்திலும் ஒரு புன்னகை.

“ஹாய் மித்ரா.” இது நந்தகுமார்.

“ஹா…ய்!” அவளுக்குத் தொண்டை அடைத்தது.

“நீங்க லண்டனா மித்ரா? எனக்கும் லண்டன் ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.” இதைச் சொல்லும் போது லேசாக நந்தகுமாரின் நெற்றி சுருங்கியது.

“ஆமா… நான் லண்டன்… தான்.” தடுமாறினாள் மித்ரா.

“பேசுங்க மித்ரா… உங்க வாய்ஸ் எனக்கு ஃபேமிலியரா இருக்கு.”

“…………” ஆனால் மௌனம் மட்டுமே அவள் பதிலாக இருந்தது. தான் பேசினால் நந்தகுமார் தன்னைக் கண்டு கொள்வானோ என்று அவள் மனம் அஞ்சியது.

“மித்ரமதி… சந்திரசேகர்!” சட்டென்று கேட்டான் நந்தகுமார். மித்ரமதி திகைத்துப் போனாள். உலகம் இத்தனை சிறியது என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

“மித்ரா… நீங்களா?” நந்தகுமாரின் குரல் பரபரத்தது. அவள் மௌனம் அங்கே அவள் தான் மித்ரமதி சந்திரசேகர் என்று அங்கிருந்த இருவருக்கும் சொல்லாமற் சொன்னது.

“நந்தா… அவங்களா இவங்க?” அந்தக் கேள்வியில் மித்ரா கண்களை இறுக மூடிக் கொண்டாள். முகத்தில் வலி தெரிந்தது.

“நந்தா!”

“சொல்லுடா?”

“உங்க ஃப்ரெண்ட் முகத்துல நிறைய சங்கடம் தெரியுதே?”

“அவசியமில்லையே பாகீ…”

“அதை நீங்களே சொல்லுங்களேன் நந்தா.”

பார்கவி தான் நந்தகுமாரின் மனைவி என்றால்…‌ அவளுக்கு மித்ராதான் கார்த்திக்கின் மனைவி என்று தெரியாதா? கார்த்திக் நிச்சயம் தன் சித்திக்கு மனைவியின் ஃபோட்டோவை அனுப்பி இருப்பானே? ஆனால் பார்கவிக்குத் தான் யார் என்று தெரியவில்லையே!

இவர்கள் திருமணம் நடந்த போது வேலை விஷயமாக பார்கவி வெளியூர் போயிருந்தாள். ஊரில் இருக்கவில்லை. அவள் திரும்பி வந்த போது அப்படி இப்படியென்று அந்த ஃபோட்டோ அவள் பார்வையில் படவில்லை.

ஆனால் அது மித்ராவிற்குத் தெரியாதே! குழம்பிப் போனாள்.

“மித்ரா! நடந்தது, நடக்கிறது எதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை. நீங்க வருத்தப்படுறதுல எந்த நியாயமும் இல்லை.” நந்தகுமார் சொல்லவும் மித்ரமதியின் கண்களில் கண்ணீர் திரண்டது.

அந்த நியாயம் உனக்குப் புரிகிறது. ஆனால் புரிய வேண்டியவனுக்குப் புரியவில்லையே! அவனே அவளை எதிர்த்தால் அவள் என்னதான் செய்வாள்.

“இங்கப்பாருங்க மித்ரா! ஒரு வகையில பார்த்தா நடந்தது எல்லாமே நல்லதுக்குத் தான். இல்லைன்னா இந்த நந்தா எனக்கு டிமிக்கி குடுத்துட்டுப் போயிட்டே இருந்திருப்பார். இல்லை நந்தா?” பார்கவி குறும்பாய் கேட்டுக் கொண்டு நந்தாவின் தோளில் சாய, “ஏய்! சான்ஸ் கிடைச்சதும் என்னையே வாருற பார்த்தியா?” என்றான் நந்தகுமார்.

அந்த அன்னியோன்யம் மித்ரமதிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மனதில் இருந்த பாரம் ஒன்று இறங்கினாற் போல உணர்ந்தாள்.

கார்த்திக்கின் முகம் ஏனோ மனக்கண்ணில் தோன்றி மறைந்தது