Jte – 11

அதே மரங்கள் நிறைந்த பகுதி, சற்று சூரியன் ஒளி கம்மிக் கொண்டிருந்த தருணத்தில்…

“சொல்லுங்க ஜீவன் சார். கேட்கிறேன்” – பவானி.

ஜீவனின் மனப்பிரதேசம் முதல் ஏமாற்றத்தை உணரச் செய்த, பவானியின் வார்த்தைகள்.

“என்ன சொல்ல?” – ஜீவனின் குரலில் பயம் மேலோங்கி இருந்தது.

“ஏதோ சொல்லணும்னு சொன்னீங்கள, அதைச் சொல்லுங்க.”

“நான் சொன்னதுக்கு, அப்புறமா முடிவு எடுக்கப் போறியா??”

பதில்கள் எழுத இயலா கேள்வி என்பதால், மௌனமாய் இருந்தாள். ஜீவன், பவானி மௌனத்தைச் சம்மதம் என்று எடுத்துக் கொண்டான்.

“சரி, உன் இஷ்டம்” – ஜீவன்.

‘உன் இஷ்டம்’ என்று சொன்னவன், அதற்கு மேல் பேச முடியாமல் கஷ்டப்பட்டு நின்றான்.

“உங்க அம்மா அப்பாவை பத்திச் சொல்லப் போறீங்களா?” என்று பவானியே ஆரம்பித்து வைத்தாள்.

“ப்ச், அந்த மாதிரியெல்லாம் என் லைஃப்ல கிடையாது”

“அப்புறம்”

“பவானி, எனக்கு யாரும் கிடையாது. பர்ஸ்ட் அதைத் தெரிஞ்சிக்கோ” என்றவன் ஒரு பெருமூச்சு விட்டுக் கண்கள் மூடித் திறந்தான்.

ஜீவன் விழியில் வலி தெரிந்தது.

“சரி, சொல்லுங்க” – பவானி.

“எனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கற வயசுல, நான் ஒரு பிளாட்பார்ம்ல இருந்தேன்.”

இதைச் சொல்லிவிட்டு, ஜீவன் விழிகள், பவானியைப் பார்த்தன. அவள் முகம் உணர்வின்மை கொண்டிருந்தது.

“என்னோட சேர்ந்து மூணு… இல்லை நாலு பசங்க இருந்தாங்க.”

“உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?”

“என்னை மாதிரியே அவங்களும். அவ்வளவுதான்”

“சரி, சொல்லுங்க”

“அந்தப் பிளாட்பார்ம்தான், எங்க வாழ்க்கை. சாப்பிடறது, தூங்கிறது… எல்லாமே அங்கதான்.”

ஜீவன் நிமிர்ந்து, பவானியைப் பார்த்தான். அவள் விழிகள், அவன் மேல் நிலைத்திருந்தன.

“மழைனாலும் சரி, வெயில்னாலும் சரி… அங்கேதான் இருப்போம்… சிம்பிளா சொன்னா, எங்களுக்கு அதுதான் வீடு”

“இருப்போம்னா?? யார் கூட??”

“யார் கூடனா?? எங்களை மாதிரி வீடு இல்லாதவங்க கொஞ்ச பேர் அங்கே இருந்தாங்க. அவங்களோட… ”

“பார்க்கிறதுக்கு யாரும் இல்லைன்னா?? சாப்பாடு எப்படி?”

“சாப்பாடு.. இதைப் பத்திக் கண்டிப்பா சொல்லணும். அந்த வயசுல எங்க போய் என்ன சம்பாதிக்க முடியும் சொல்லு??

“….”

“அதே பிளாட்பார்ம்ல ஒரு தாத்தா இருந்தார். அவர்தான் டெய்லி எங்களுக்குச் சாப்பாடு கொடுப்பார்.”

“அவர் உங்களுக்கு ரிலேட்டிவா?? அவர்கிட்ட உங்க அம்மா அப்பா பத்திக் கேட்ருக்கலாமே?”

“ப்ச், அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. ஏதோ எங்களைப் பார்த்துப் பாவப்பட்டு சாப்பாடு போட்டுக்கிட்டு இருந்தாரு.”

“அப்போ அதுக்கு…” – பவானியின் கேள்வியை, ஜீவன் முடிக்க விடாமல் கீழே உள்ள வசனம் பேசினான்… இல்லை கத்தினான்.

“அதுக்கு முன்னே அந்தப் பாவத்தை யாரு பார்த்தாங்கன்னு சத்தியமா தெரியலை”

“சரி சொல்லுங்க” – பவானியின் குரல் சாந்தமாய் வந்தது.

“ம்ம்ம், காலையில டீயும் பன்னும் வாங்கிக் கொடுப்பாரு. சாப்பிடுவோம். ஆனா, பேச மாட்டாரு. வாங்கி வச்சிட்டு, வேலைக்கு போய்கிட்டே இருப்பாரு”

“….”

“நான் இப்போ நிறைய டீ குடிக்கிறேன்ல, அதுக்கு அதான் காரணமோ பவானி?” என்று கேட்டான்.

“வேற எதுவும் சாப்பிட மாட்டிங்களா??” – பவானியின் ஒவ்வொரு வார்த்தையும் அக்கறையின் மற்றொரு வடிவமாக இருந்தது.

“என்னமோ சாப்பாடு இருந்து சாப்பிடாத மாதிரி கேட்கிற??” – ஜீவனிடமிருந்து அசட்டையாகப் பதில் வந்தது.

எத்தனை வினா எழுப்புகிறாள்? ஒரு விடைகூட தான் சரியாக எழுத இயலவில்லையோ? என்று ஜீவனின் மனப்பிரதேசம் தனக்குள் கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்ட தருணங்கள் – இவை.

“சரி, சொல்லுங்க” – பவானி.

“காலையில அதைச் சாப்பிட்டுட்டு , அந்த பிளாட்பார்ம்ல கிடப்போம். அப்புறமா, அந்த தாத்தா நைட் வேலை முடிஞ்சு வரப்போ, திரும்பியும் சாப்பாடு வாங்கிட்டு வருவாரு.”

சாதரண காலை உணவுக்குப் பின், முழுநாளும் இரவு உணவிற்காகக் காத்துக் கொண்டிருந்த நாட்கள், ஜீவனின் மனப்பிரதேசத்திற்கு ஞாபகம் வந்த தருணங்கள் – இவை.

ஞாபகத்தைத் தூக்கி எறிந்து விட்டு, நிகழும் தருணங்களுக்கு வந்து கீழ்கண்ட வசனம் பேசினான்.

“இதுதான் அந்த வயசுல என்னோட வாழ்க்கை. ஒரு டீ , பிளாட்பாரம்… நைட் சாப்பாடு. அப்புறம் அப்பப்போ அந்த ரோட்ல பைக்ல கார்ல போறவங்க, ஏதாவது கொடுத்தா, அதையும் சாப்பிடுவோம்.”

ஜீவன், பவானியை விழி மட்டும் உயர்த்திப் பார்த்தான். அவள் குனிந்து கொண்டாள்.

“ஏன் பவானி?? ஒரு மாதிரி பீல் பண்றியா??” என்று கேள்வி எழுதி நீட்டினான்.

பவானி “இல்லை” என்று பதிலை எழுதினாள்.

“ஆனா எனக்கு இருக்கே, பவானி. எப்பவுமே அது இருக்கும்!! மறக்கவே முடியாது” – ஜீவனின் மனப்பிரதேசத்தின் மனச்சுமை இது.

“அப்புறம் என்னாச்சு?” என்ற கேள்வி கேட்டு, அவன் மனதை மாற்றினாள்.

“அதுவும் போச்சு!!”

“புரியலை”

“ஒரு நாள், அந்த தாத்தாவும் இறந்திட்டாரு.”

“ஐய்யோ”

“நீ எதுக்கு ஐயோன்னு சொல்ற. அவர் இறந்ததுக்கா?? இல்லை எனக்கு எப்படி சாப்பாடு கிடைக்கும்னு நினைச்சா?”

என்றோ ஆறிப்போனக் காயத்தை இன்று எதற்காகக் கிளறிக் கொண்டு இருக்கிறீர்கள் ஜீவன் சார்?? – நாம்.

“சரி, சொல்லுங்க” – பவானி.

“நிஜமா பவானி. எனக்கு அதுக்கப்புறம் சாப்பாடு கிடைக்கல.”

“எப்படிச் சமாளிச்சீங்க?? ”

“அந்த பிளாட்பார்ம்ல இருக்கிற, மத்த ஆளுங்ககிட்ட கேட்டோம். பர்ஸ்ட் கொடுத்தாங்க. அப்புறம் அதுவும் இல்லை”

“….”

“ஸோ, முதல் தடவையா, அந்த பிளாட்பார்ம் தாண்டி நடக்க ஆரம்பிச்சோம்”

பவானி ஒரு கேள்வியுடன் குறுக்கிட முற்பட்டாள்.

“கேளு” என்று குறுக்கீட்டை ஏற்றான்.

“யார்கிட்டயாவது கேட்டு, ஆசிரமம்… இல்லைன்னா அந்தமாதிரி வேற ஏதாவது சேஃப் பிளேஸ்ல போய்ச் சேர்ந்திருக்கலாமே”

“யார்கிட்ட கேட்க?? சொல்லு யார்கிட்ட கேட்க?? முதல இதெல்லாம் பத்தி, அந்த வயசுல தெரியுமா?? ” – ஜீவனின் குரல் இயாலாமையின் மொத்தத்தையும் காட்டியது.

இத்தனை அறிவுறை தருகிறாளே! இவள் எப்படி தன் ஆசையை ஏற்பாள் என்று ஜீவன் மனப்பிரதேசம் அச்சம் கொண்ட தருணங்கள். – இவை.

அச்சத்தைத் தவிர்த்து விட்டு, தன் ஆதங்கத்தைச் சொல்ல நினைத்துக் கீழே உள்ள வசனம் பேசினான்.

“தயவுசெஞ்சி… இப்படி பண்ணிருக்கலாமே, அப்படி பண்ணிருக்கலாமே சொல்லாத. எதையும் மாத்த முடியாது” – கண்டனக் குரலில் ஜீவன்.

“சரி, சொல்லலை. நீங்க சொல்லுங்க”

“உனக்கு என்னோட கஷ்டம் புரியவே இல்லை. அதான் அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்க” – ஜீவனின் கண்டனக் குரல், கவலைக் குரலாக மாறி இருந்தது.

“புரியுது சார், சொல்லுங்க”

“என்ன சொல்ல? ரோட்ல இறங்கி நடக்க ஆரம்பிச்சோம். பசி… பசி.. பசி.. அன்னைக்கு அதைத் தவிர வேற எதுவுமே எனக்குத் தெரியாது.”

“….”

“யாராவது ஏதாவது சாப்பிட கொடுத்திட மாட்டாங்களான்னு மனசு ஏங்கும்? யாரும் கொடுக்கலை??”

“… ”

“அந்த ரோட்ல இருக்கிற கடையில… கடைக்கு வர்றவங்ககிட்ட… அந்த சைடு போறவங்ககிட்ட… பாவமா நின்னு கேட்டப்போ, பரிதாபப்பட்டுக் கொடுத்தாங்க… அப்படியே கொஞ்ச நாள் போச்சு. புரியுதா?”

“புரியுது. சொல்லுங்க”

ஏன் பவானி? இதற்கு மேலும், அவரைச் சொல்லச் சொல்லிக் கவல் கொள்ள வைக்கிறீர்கள். – நாம்.

“பட் அதுவும் ஒரு நாள் ஸ்டாப் ஆச்சு. எத்தனை நாளுதான் கேட்கக் கேட்கக் கொடுப்பாங்க சொல்லு??”

“ம்ம்ம்”

“திரும்பவும் பட்டினி”

ஜீவன் அமைதியானான்.

சூழல் அமைதியாக இல்லை. கொஞ்சம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருவதற்கான அறிகுறியாகக் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

“சரி, சொல்லுங்க”

“இப்படியே கொஞ்ச நாள் போச்சு. அப்புறம் திடிர்னு ஒரு நாள், கூட இருந்த பசங்களும், ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்ட்டாங்க. ” – ஜீவனின் குரலில் அதிர்ச்சி இருந்தது.

“எங்க போயிட்டாங்க? எதாவது வேலைக்கா? நீங்களும் அவங்ககூட வேலைக்குப் போயிருக்கலாமே?”

“தெரியலையே பவானி”

“சரி சொல்லுங்க”

“ஆங்! நீ வேலை பத்திக் கேட்டேல. நாங்களும் நிறைய இடத்தில வேலை கேட்டிருக்கோம். ஆனா, சின்னப் பசங்கள வேலைக்கு வச்சா பிரச்சனை வரும்னு யாரும் வேலை கொடுக்கலை”

“ம்ம்ம்”

“அன்னைக்குத் தனியா நிக்க ஆரம்பிச்சேன்.” என்று சொல்லி இலக்கற்று பார்த்தான்.

“ம்ம்ம்”

“இந்த நிமிஷம் வரைக்கும் தனியாதான் நிக்கிறேன்” என்று சொல்லி எதிரில் இருப்பவளைப் பார்த்தான்.

“சரி, சொல்லுங்க”

“அப்படி தனியா நின்னுகிட்டு இருக்கிறப்போதான், அந்த ஏரியால இருக்கிற ஒரு கேங் என்னைய கூட்டிட்டுப் போனாங்க”

“கேங்னா??”

“ஒரு நாலைஞ்சு பேரு. அந்த வயசுல, அவங்களைப் பார்க்கவே பயமா இருந்திச்சு. லோக்கல்ல பிக் பாக்கெட் அடிக்கிறவங்க”

“வர மாட்டேன்னு சொல்லியிருக்கலாமே?”

“என்னமோ என்கிட்ட கேட்டுக் கூட்டிட்டுப் போன மாதிரி கேள்வி கேட்கிற? யாருமில்லாம சுத்திக்கிட்டு இருந்தவனை இழுத்துட்டுப் போனாங்க”

“சரி, சொல்லுங்க”

“அந்த ஏரியா சிக்கனல்ல நிக்கிற பைக்ல, பஸ் ஸ்டாப்ல நிக்கிறவங்ககிட்ட சின்னப் பசங்கள வச்சிப் பிக் பாக்கெட் அடிக்கிறதுதான், அந்த கேங்கோட வேலை”

“பிக் பாக்கெட்டா?? அதுவும் சின்னப் பசங்கள வச்சா?”

“ம்ம்ம், அவங்க என்ன சொல்லி அனுப்புறாங்களோ, அதை அப்படியே போய் செஞ்சிட்டு வரணும். மூணு வேளையும் சாப்பாடு தருவாங்க. ” என்று தன் தவறைக் கொஞ்சம் மறைமுகமாகக் கூறினான்.

“தப்பிச்சு போயிருக்கலாமே?”

“தோணலை. ஏன்னா? உயிர் போற அளவு பசி”

அன்றைய நாளில் பட்டினியாக, அந்தப் பகுதிகளில் பரிதவித்து அலைந்தது, ஜீவனின் மனப்பிரதேசத்தின் வேதனைகளைக் கூட்டியது.

“சரி, சொல்லுங்க”

“நான் தெரியாம செய்யலை பவானி. என்ன செய்றேன்னு தெரிஞ்சுதான் செஞ்சேன். தப்புதான்… திருடறது தப்புதான். இல்லைன்னு சொல்லலை. வேற வழி இ.. ” என்று நிறுத்தினான்.

தன் சிறுவயது தவறை நியாயப்படுத்த முடியாத நிலையில், ஜீவன் சிதறிப் போய் நிலை குலைந்து நின்ற தருணங்கள் – இவை.

“யார்கிட்டயும் மாட்ட மாட்டிங்களா?”

“நல்லா கேட்ட போ. மாட்டுவோம். சில நேரம் பப்ளிக் பிடிச்சு அடிப்பாங்க. சில நேரம் பப்ளிக் பிடிச்சு போலீஸ்கிட்ட கொடுப்பாங்க”

“… ”

“பட், போலீஸ் கொஞ்ச நேரம் வச்சிருப்பாங்க. கேங்கில இருந்து யாராவது வந்தா மாமூல் வாங்கிட்டு, விட்ருவாங்க”

“ம்ம்ம்”

“பப்ளிக்கிட்ட மாட்டினா, அந்த இடத்திலே அடி விழும். போலீஸ்கிட்ட மாட்டினா, அந்த கேங்கல இருக்கிறவங்க அடிப்பாங்க. இப்படித்தான் கொஞ்ச நாள் வாழ்க்கைப் போச்சு”

“….”

“ஆனா கடைசியா மாட்டினப்போ, அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாறிட்டாரு. அவரு மாமூல் வாங்க மாட்டார் போல. ஸோ எப்ஐஆர் போட்டு, அட்வைஸ் பண்ணி.. கோர்ட்ல கொண்டு போய் நிறுத்திட்டாரு.”

“ரொம்ப நல்லவரு…”

“அவர் நல்லவர்தான். ஆனா, கோர்ட்ல சின்ன வயசிங்கிறதால, சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிட்டாங்க.”

“நல்ல விஷயம்”

“எது நல்லது? சீர்திருத்தப் பள்ளிக்குப் போனதா?

“ஆமா”

“எப்படிச் சொல்ல பவானி?? நான் திருடிட்டு மட்டும் உள்ளே போனேன். ஆனா அங்கே கொலை பண்ணவன்ல இருந்து…சாதாரண தப்பு பண்ணவங்கன்னு எல்லாரும் ஒரே இடத்தில இருப்பாங்க. எல்லோரோட மனநிலையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு உள்ளே இருக்கிறது ரொம்பக் கஷ்டம்”

“… ”

“கவுன்ஸ்லிங் வேற நடக்கும். ஒருத்தர் ரெகுலரா வந்து அட்வைஸ் பண்ணுவாரு”

“ம்ம்ம்”

“அப்போ வாழ்கையைப் பத்தி அவர் சொன்ன பல விஷயம், நான் பார்த்த எல்லா கஷ்டத்தையும் தாண்டி என்னோட மனசுக்குள்ள போயிருச்சு”

“நல்லது” – இது நாமும் பவானியும்.

“சொசைட்டில எப்படி வாழணும்னு புரிஞ்சது”

“….. ”

“ஆனா, உள்ளே இருந்த வரைக்கும், அவர் சொன்ன மாதிரி வாழ முடியல.”

“ஏன்?”

“பவானி, எல்லாரும் சின்னப் பசங்க. சின்ன வயசுலே பெரிய பெரிய தப்பு பண்ணிட்டு வந்திருக்காங்க. அவங்க மனநிலை எப்படி இருக்கும் சொல்லு? திடீர்னு கோபப்பட்டுப் பேசுவாங்க. திடீர்னு அடிப்பாங்க. அப்போ நானும் திருப்பி அடிச்சிருக்கேன்”

“அடிப்பீங்களா?”

“ம்ம்ம், அடிக்க வந்தா பார்த்துகிட்டா இருக்க முடியுமா? ”

“சில நேரம் ரெண்டு குருப் பசங்களுக்கு இடையில சண்டை வரும். பேச்சுல ஆரம்பிச்சு, அடிதடியில் போய் முடியும். கடைசியில ரெண்டு குருப்பும் சேர்ந்து மாட்டிக்கிட்டு, அடி வாங்குவோம்”

“அடிப்பாங்களா? ”

“ம்ம்ம்… இப்படி சண்டை போட்டு அடிவாங்குவோம், அப்புறம் தப்பிக்க டிரை பண்ணி அடிவாங்குவோம்… ”

அன்றைய நாளின் அடிகள், தாங்க முடியாத வலிகள், தடமாகிப் போனக் காயங்கள் எல்லாம் ஜீவனின் மனப்பிரதேசத்தை மலை போல் கனக்கச் செய்தது!

“சரி, சொல்லுங்க”

“அங்கே இருக்கிறப்போ நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். சரியான சாப்பாடு கிடைக்காமக் கஷ்டம். சில பேருக்கு அவுங்க அம்மா அப்பா சாப்பாடு கொண்டு வர்றதைப் பார்த்து ஏக்கம்… எப்போடா வெளியே போய் நல்லவனா வாழ்வோம்னு ஆசை… இப்படித்தான் அதை நான் கடந்து வந்தேன்…”

“…”

“அதுலயும் ஒரு நல்ல விஷயம் படிச்சேன்… கொஞ்சம் படிச்சேன்…”

“ஓ! ”

“கடைசியா ஒரு நாள் வெளியே விட்டாங்க. அவ்வளவு கனவோடு வெளியே வந்தேன். ஏதாவது வேலைப் பார்த்து வாழணும்… இன்னும் படிக்கணும்.. இப்படி நிறைய…”

“கனவெல்லாம் நிறைவேறிச்சா? ” – இது நாமும் பவானியும்.

“இல்லை. எங்க போனாலும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன்கிற பேரு, எல்லாத்தையும் சிதைச்சிருச்சி”

“ஜெயிலா?? சீர்திருத்தப் பள்ளிதான?? ”

“உங்க அப்பாவே, இப்படித்தான் சொன்னாரு” என்று வெறுமை வார்த்தையை, சலிப்புச் சிரிப்புடன் கூறினான்.

“சரி, சொல்லுங்க”

“சில இடத்தில வேலை கிடைக்கும். ஆனா என்னைய பத்தித் தெரிஞ்ச பிறகு… எதையும் திருடிருவேன்னு நினைச்சி வெளியே அனுப்பிருவாங்க”

“… ”

“கஷ்ட்டப்பட்டு படிச்சு முடிச்சாலும் வேலை கிடைக்குமான்னு சந்தேகம் வந்தது. ஆனாலும் நல்ல வழியில வாழணும்னு நினைச்சேன். அதான் கிடைக்கிற வேலையைப் பார்த்துப் படிக்க ஆரம்பிச்சேன். ”

“… ”

“வேலையை விட்டு அனுப்பிட்டா, வேற வேலை தேடிக்குவேன். இப்படியே படிச்சு முடிச்சேன்”

“… ”

“ஆனா, நான் நினைச்ச மாதிரி வேலை கிடைக்கலை. ஏன் வீடுகூட தரமாட்டாங்க”

“வீடு தரலையா?? ஏன்?”

“வீடு கொடுப்பாங்க பவானி. ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல சந்தேக லிஸ்ட்ல என்னோட பேரு இருக்கும். ஸோ எங்க திருடு போனாலும், பர்ஸ்ட் என்னை மாதிரி இருக்கிறவங்ககிட்ட வந்துதான் விசாரிப்பாங்க.”

“இது வேறயா!??” – இது நாமும் பவானியும்.

“போலீஸ் விசாரிச்சப் பிறகு, யாரு என்னைய நம்பி வீட்ல இருக்க விடுவாங்க?? ”

சந்தேகத்தின் பேரில் விசாரித்தப் பின், சூழ இருந்தோரின் விகற்பப் பார்வை… ஜீவன் விழிமுன் தெரிந்த தருணங்கள் – இவை.

“சரி, சொல்லுங்க”

“ப்ச், அது நிம்மதியே இல்லாம ஆக்கிருச்சு. வாழ்க்கையே வெறுத்தப் போயிருச்சு” என்று இடைவெளி விட்டான்.

“திரும்பவும் தப்பு..” என்று இடையில் விட்டாள்.

“இப்போல்லாம் எத்தனை நாள் பசியில இருந்தாலும் தப்பு பண்ண மாட்டேன். அவ்ளோதான் சொல்ல முடியும் பவானி”

“ஸாரி. சரி, சொல்லுங்க”

“ஸோ ஆன்லைன்ல வேலை பார்க்க ஆரம்பிச்சேன். புடிச்சிருந்துச்சு. பெருசா நம்மளப் பத்தி டீடெயில்ஸ் கொடுக்க வேண்டியதில்லை. அப்புறம் நிறைய செர்டிபிகேட் கோர்ஸ் பண்ணேன். இப்போ ஷேர் பிசினஸ் பண்றேன்”

“ம்ம்ம்”

“அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சமுதாயத்து மேல வெறுப்பு வந்திடுச்சு. ”

“ஏன்?”

“நான் பசின்னு சொல்றப்போ சாப்பாடு கொடுத்திருக்கலாம்… நான் பர்ஸ்ட் டைம் போலீஸ்கிட்ட மாட்டினப்பவே, என்னய ஏதாவது ஒரு ஆசிரமத்தில சேர்த்து விட்ருக்கலாம், இல்லை… சீர்திருத்தப் பள்ளிலயாவது நல்ல விஷயம் நடந்திருக்கலாம்… ”

“… ”

“எதுவுமே இல்லைனாலும் நான் வெளியே வந்து திருந்தி வாழணும்னு நினைக்கிறப்போ, என்னைக் கொஞ்சம் மரியாதையா நடத்திருக்கலாம் பவானி.”

ஜீவன் சாரின் நியாயமான ஆசை!! – நாம்.

“நான் திருடறதுக்கு ஆயிரம் சான்ஸ் கொடுத்த சமுதாயம், நான் திருந்தி வாழறேன்னு சொன்னப்போ ஒரு சான்ஸ் கூட கொடுக்கலையே பவானி.”

சமுதாயத்தின் மீது, ஜீவன் சாரின் நியாயமான ஆதங்கம்! – நாம்.

“சரி, சொல்லுங்க”

“அதான், நானே ஒதுங்கிக்கிட்டேன். முதல அந்த ஊரிலிருந்து வேற ஊருக்கு மாத்திட்டு வந்தேன். உண்மையைச் சொல்லி வீடு கேட்பேன். சிலர் கொடுத்தாங்க. பட் என்னைய பத்தி தெரியும் போது சுத்தி இருக்கிறவங்க பார்வை மாறும். உடனே, வேற ஊருக்கு மாறிடுவேன். இது நாலாவது ஊரு”

ஓ! எளிதில் ஊர் மாற்றிக் கொள்ளவே, ஜீவன் சாரின் வீட்டில் பொருட்களின் அளவு குறைவாக இருக்கின்றது என்று நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.

“ஜீவன்னு உரிமையா கூப்பிட யாரும் இல்லை. அதான் இனிமே யாரும் கூப்பிட வேண்டாம்னு முடிவு பண்ணேன். அப்படி வந்ததுதான் ஜீவன் சாருன்னு மரியாதையா கூப்பிடணும்னு சொல்றது”

“….”

“சின்ன வயசுல விளையாடினதே கிடையாது. அதான் இப்போ சான்ஸ் கிடைக்கிறப்போ விளையாடுவேன். அதுல ஏதோ ஒரு திருப்தி”

“…”

“நான் அன்பை எதிர்பார்த்தப்போ கிடைக்கல. அதான் இப்போ யாராவது அன்பா, ஏதாவது செஞ்சா பிடிக்காது.”

“…”

“நன் கஷ்டப்படுறப்போ யாரும் அழல… அதனால நானும் யாருக்காகவும் அழுதது கிடையாது.”

“…”

“சிரிச்சதும் கிடையாது”

தான் வாழ்வது ஓர் அர்த்தமற்ற வாழ்க்கை என்று புரிந்ததால், ஜீவன் அமைதியாக அழுத தருணங்கள் – இவை.

“பவானி”

“ம்ம்ம்”

“நான் சிரிச்சதே உனக்கு முன்னாடிதான். அன்பை, அக்கறைய உணர்ந்ததே , நீ அன்னைக்கு ஹாஸ்ப்பிட்டல சாப்பாடு கொடுத்தயே அப்போதான்.”

“….”

” ‘நீ என் பொண்ணுக்குக்கு வேண்டாம்னு’ நாதன் சார் சொன்னப்போ உனக்காக அழுதேன் பவானி”

“… ”

“இதுதான் நான்…இவ்வளோதான் நான்…”

ஜீவன் சார், அவரைப் பற்றிய விவரங்களை, ஒரு நாள் பவானியிடம்
சொல்வார் என்று நம்பிக்கை கொண்டோமே! அது நடந்துவிட்டது!!

“பவானி, இன்னொரு முக்கியமான விஷயம். ”

“சொல்லுங்க”

“இது என்னோட அவமானம். உனக்குத் தெரியணும்னு சொன்னேன். வேற யாருக்கும் தெரியக் கூடாது. அப்படித் தெரிஞ்சா, நான் உன்னைய மன்னிக்கவே மாட்டேன்” – ஜீவனின் குரலில் நிச்சயத்தன்மை இருந்தது.

“ம்ம்ம், யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்”

“நாதன் சார்கிட்ட வேணும்னா சொல்லிக்கோ.”

“ம்ம்ம்”

குளிர் காற்றின் சில்லென்ற சத்தம், இருள் சூழப் போவதால் கூட்டைத் தேடிப் பறந்து போகும் பறவைச் சிறகின் சத்தம்… இவை மட்டும் கேட்டத் தருணங்கள் – இவை.

“பவானி”

“ம்ம்ம்”

“இதெல்லாம் உன்னால சகிச்சிக்க முடிஞ்சா…”என்று யாசித்தவன், “இல்லைன்னா??” என்று யோசித்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

அமைதி நிலவியது.

“நீ முடிவெடு பவானி” என்று சொல்லி கண்ணீர் துடைக்க, இடக்கரத்தைத் தூக்கினான்…

ஜீவனின் கரம் பவானியின் கைக்குள் இருந்தது. கண்கள் கலங்க பவானியைப் பார்த்தான்.

பவானி, சாந்தமான பார்வை பார்த்தாள்.

புரியாத பார்வைகளாக, ஜீவனின் மனப்பிரதேசம் மாறி இருந்தது!!

மலைப்பிரதேசத்தின் வானிலைக் கொஞ்சம் மாறியிருந்தது. முற்றிலுமாக சூரியன் மறைந்து, கரிய மேகங்கள் திரண்டன. அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மாறியது!

“பவானி”

“ம்ம்ம்”

“கைய எடுக்கவே இல்லையா??”

‘இல்லை’ என்று தீர்க்கமான தலையாட்டல். – பவானி.

“பயமா இருக்குன்னு சொன்னேன்ல, அப்போ பிடிச்சதா? விடவேயில்லையா??”

‘ஆமாம்! விடவேயில்லை’ என்பது போல் ஒரு தலையசைப்பு, ஒரு சிறு முறுவல் தந்தாள்.

ஜீவனின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்ததால், பவானியை, நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம் போல!!

பவானியின் முகம் ஜீவனுக்கான அக்கறையக், அன்பைப் பூசிக்கொண்டிருந்தது. அவளின் கரங்கள் ஒரு உரிமையுடன் ஜீவனின் கரத்தைப் பற்றியிருந்தது.

பவானி, ஜீவனைப் ஆழமான பார்வை பார்த்துப் புன்னகை சிந்தினாள்.
ஜீவனும் அழுத்தமான புன்னகை புரிந்து, தலை திருப்பிக் கொண்டான்.

குளிர் காற்றினால் ஜீவனின் கேசம் இங்கே அங்கே என அலைபாய்ந்தன. ஜீவனின் மனப்பிரதேசத்தில் அலை அடித்துக் கொண்டிருந்தது. கழுத்து நரம்புகள் புடைக்க, மட்டியைக் கடித்துக் கொண்டிருந்தான்.

அக்கணம் ஓர் அழகிய அழைப்பு!

“ஜீவன்” – பவானி.

ஜீவன் பெயரை உரிமையுடன் அழைக்கப் போகும், உறவின் குரல்தான், சற்று முன் ஒலித்த பவானியின் குரல்!

அழைப்பைக் கேட்டுத் திரும்பியவன் முகத்தில் ஆனந்தம் குடி கொண்டிருந்தது.

ஜீவன் முகத்தில் இருந்த கண்ணீர் கோடுகளைத் துடைத்தாள். அவள் அனுமதி கோரவும் இல்லை… அவள் செய்தது அணிச்சைச் செயலும் அல்ல.

அதைச் செய்ய பரிசுத்தமான அன்பே போதும்! அது அவளிடம் நிரம்ப உள்ளது.

பவானியின் அந்தச் செயல், ஜீவன் மனப்பிரதேசம் முழுவதும் மழைச்சாரல் விழுகின்ற உணர்வைத் தந்தது.

“ஜீவன்” – பவானியின் குரல். உயிரின் குரல். ஜீவனின் உயிராய்ப் போனவளின் குரல்.

முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
சிரிக்கவும் இல்லை… சிரிக்காமல் இல்லை.
கண்கள் கலங்கின மாதிரியும் இருந்தது…கலங்காத மாதிரியும் இருந்தது.
ஒற்றை விரல் கொண்டு நெற்றியில் கோடு போட்டுக் கொண்டிருந்தான்.

என்னாச்சு ஜீவன் சாருக்கு?? ஓ! ஜீவன் சார் வெட்கப்படுகிறார்!! – நாம்.