ஜீவன் கையில் பிடித்திருந்தக் குடை நழுவியது.
அன்று மலைப்பிரதேசம் கன மழைப் பொழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது.
நாதன் குடையினைக் கையில் வைத்துக்கொண்டு, மனம் முழுவதும் குமுறலை ஏந்திக்கொண்டு இருந்தார்.
ஜீவன் படிக்கட்டுகளில் பரிதவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர், அவனுக்கும் சேர்த்துக் குடைப் பிடித்தார்.
“எப்ப இருந்து?” – ஜீவனின் குரலில் வருத்தங்கள் மேலோங்கி, வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலித்தது.
“காலையிலருந்து” – நாதன் குரல் தழுதழுத்தது.
“அப்பவே சொல்லிருக்கலாம்ல”
“தேடிகிட்டு இருந்தேன்…”
“தேடியும் கிடைக்கலையா??”
“இல்லை. அந்த பெஞ்சு… அப்புறமா அதைச் சுத்தியிருக்கிற இடத்தில தேடினேன்”
“….”
“அதுக்கு மேல என்னால முடியில…”
“பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொன்னேன்ல?? அப்புறம் எப்படி?”
இருவரின் இயலாமையின் நிசப்தம்!
“பாலா பொண்டாட்டி பிள்ளையோட இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்தான். அவன்கிட்ட கேட்டதுக்கு, இப்ப முடியாது. அப்புறம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு சொல்றான்” – நாதன்.
“… “
“அதான் உங்ககிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன். “
“ம்ம்ம்”
“இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்படி? கொஞ்சம் பவானியைத் தேடுங்களேன்” – வள்ளிம்மா.
“எங்கன்னு போய் தேடுவேன்?” என்று சொல்லிக் கொண்டே எழுந்து, மாடிக்குச் சென்று ஜீப் சாவியை எடுத்து வந்தான்.
வானமே கிழிந்து கொண்டது போல் மழைக் கொட்டிக் கொண்டிருந்தது.
ஜீவன் நனைந்தபடியே ஜீப்பை நோக்கிச் சென்றான்.
“ஜீவன் சார், நானும் வரவா?” – நாதன்.
“வேண்டாம். நானே … நானே…”
“…”
“நாதன் சார், ஆனா பவானி கிடைச்சா??… உங்ககிட்ட கொடுப்பேன்னு கனவிலையும் நினைக்காதீங்க.” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுத் தேடலைத் தொடங்கினான்.
பவானி காணாமல் போயிருந்தாள். ஜீவன், அவளைத் தேடிச் செல்கிறான்.
*****
மழைப் பொழியும் மலைப் பிரதேசதத்தின் வளைவுகளில் மனப் பிரதேசத்தின் வலிகளுடன், ஜீவன் பயணிக்க ஆரம்பித்தான்.
சாலைகளின் இரு ஓரங்களிலும், ஜீவன் விழியின் தேடல்கள் தொடர்ந்தன. ஒவ்வொரு தேடலிலும் தோற்றுப் போய் வந்து நின்ற மனதை, தேற்றுவதற்கு ஆளில்லாமல் தனிமையில் தவித்தான்.
அக்கணம்தான், நாதன் சாரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமோ என்று மனம் ஏங்கியது.
அடுத்தக் கணமே, அந்த வயதான மனிதரால், அதுவும் இரண்டு முறை மாரடைப்பு வந்தவரால் எப்படி முடியும்?? என்று தோன்றியது.
ஜீவன் சார்!! இந்தப் பக்குவம், நாதன் சார் பவானியைப் பார்த்துக் கொள்வார், நான் விலகிக் கொள்கிறேன் என்று முடிவு எடுக்கும் பொழுது, ஏன் இல்லை?? – நாம்.
ஜீவன், குண்டூசி வளைவுகளில் கூட, குறையாத வேகத்தில் வண்டியைச் செலுத்தினான்.
மலைப் பாதைகளின் ஓரிடத்தில் மக்கள் நடமாட்டம் இருந்ததால், சட்டென ‘கிரீச்’ என்ற சத்தத்துடன் வண்டியை நிறுத்தினான்.
இறங்கி ஓடியவன், அந்தச் சிறு பகுதிகளின் பாதைகளில் அரக்கப் பரக்க, அக்கம்பக்கம் பவானியைத் தேடிக் கொண்டே ஓடினான்.
ஒவ்வொரு பக்கங்களிலும் விழி மோதி, வெறுமையுடன் திரும்பி வந்ததில், பாறையில் மோதிய அலையென மனம் உடைந்துச் சிதறியது.
தேடுதலில் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியதால், திரும்பி வந்து ஜீப்பில் ஏறிக் கொண்டான்.
திரும்பவும் தேடல்…
மலைப் பிரதேசத்தில் அடைமழைக் கொட்டிக் கொண்டிருந்தது. ஜீவனின் மனப் பிரதேசம் அனலென எரிந்து கொண்டிருந்தது.
இதுவரை அனுபவித்த வலிகளிலே, இது கொடியதாய் தோன்றியது.
ஒரு சில இடங்களில் பயணத்தை நிறுத்தி, கண்களால் பவானியைத் தேடினான். கண்டு பிடிக்க முடியாமல் போனதால், அவள் நினைவுகளில் வாடினான். சில பல கண்ணீர் துளிகள் சிந்தி, பின் பயணத்தைத் தொடர்ந்தான்.
தேடுதல் பயணத்தின் போது,
தன் இஷ்டமானவளை நினைத்து, ஜீவன் இமைகள் தாண்டி விழுகின்ற விழி நீரை, இயற்கை கொடையாய் தந்த மழை நீர் மறைத்தது.
தன் நெஞ்சிற்கினியவளின் நினைவுகளால், ஜீவன் உள்ளமானது, கண்ணுக்குள் விழுந்த மண் துகளாய் உறுத்தியது.
தன் அன்பிற்குரியவளின் அன்பு இல்லாமல், ஜீவனின் மனப்பிரதேசம், திருவிழா முடிந்த கோவில் தெரு போல் வெறுமை கொண்டது.
ஆக மொத்தத்தில்,
ஜீவனின் வாழ்க்கைக் கடல் என்பது, பவானி என்ற பாசப்பள்ளத்தில் தேங்கி நிற்கத் துடிக்கும் நீராக மாறியது.
சாலையின் ஓரத்தில் இருந்த தேநீர் கடையோரம் தேடலை நிறுத்தினான். கூரை வேயப்பட்ட சிறு தேநீர் கடைதான், அது. நாலைந்து பேர் நின்றனர். அவனும் தேநீர் கேட்டுவிட்டு, அவர்களுடன் நின்று கொண்டான்.
ஆனால் விழியின் தேடல் நிற்கவில்லை. இதயத்தின் நான்கு அறைகளும், விழி வழியே சென்று நாலா பக்கமும் தேடியது.
சாலையின் மறுபுறம்,
ஒரு பெண்!!
ஜீவன் கண்களில் தெரிந்தது, ஒரு தேடலின் முடிவு!
அந்தப் பின்னல்கள்..
அந்த உயரம்…
அவன் தேடலின் தேவதைக் கிடைத்து விட்டாளோ??
சட்டென சாலையைக் கடந்து செல்ல, இரண்டு எட்டுக் காலடி எடுத்து வைக்கும் வேளையில்…
மலைப் பகுதிகளின் சரிவுகளில் காற்றைக் கிழித்துக் கொண்டு, வேகத்துடன் வந்த பெரிய வாகனம் ஒன்று, ஒலி எழுப்பிக் கொண்டே, அந்தச் சாலையை அசுர வேகத்தில் கடந்து சென்றது.
அவனை இடித்துத் தள்ளிவிட்டு போயிருக்கும்! அந்தத் தேநீர் கடையில் நின்ற ஆட்கள், அவனை இழுத்திராமல் இருந்திருந்தால்!!
அவர்கள் இழுத்த வேகத்திற்கு, அவனைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. அப்படியே விட்டு விட்டனர். பின்னோக்கித் தரையில் வீழ்ந்தான். பெரிய பெரிய கற்களும், மண்ணும் சேர்த்து அமைந்த தரை. ஆதலால் முழங்கையில் லேசான ரத்தக் காயமும், சில பல சிராய்ப்புகளும் ஏற்பட்டது.
அனைவரும் சேர்ந்து, ஜீவனை எழச் சொல்லி, அருகில் இருந்த பெஞ்சில் அமர வைத்தனர். வாகனம் கடந்த வேகத்திலிருந்தும், கிழே விழுந்த அதிர்ச்சியிலிருந்தும் மீண்டதும், ஜீவன் எழுந்தான்.
கண்கள் சாலையின் எதிர்பக்கம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியது.
“என்னாச்சு? யாரையும் தேடுறீங்களா??” – கடையில் நின்ற ஒருவர்.
“ம்ம்ம், ” என்ற சொன்ன ஜீவனின் பார்வை முழுவதும், தன் சகலமானவளைக் சாலையின் ஆராய்ந்து கொண்டிருந்தது.
ஆனால் இப்பொழுது எந்தப் பெண்ணும் அங்கே நிற்கவில்லை.
ஜீவன் சார்! இது பிரம்மை!! நெஞ்சத்தின் நேயங்கள் அதிகமானதால் வந்த மாயங்கள் – நாம்.
“யாரைத் தேடுறீங்க?” – கடையில் நின்றவர்.
“பவானி… பவானி” என்று அதரங்களில் தன் அனைத்துமானாவளின் பெயரைச் சொல்லி, சாலையின் அடுத்தப் பாகத்தை நோக்கி ஆள்காட்டி விறல் நீட்டி, ஆசையாகப் பார்த்தான்.
“அங்கே யாரும் இல்லை.” – கடையில் நின்ற ஒருவர்.
“டீ குடிங்க” – கடையில் நின்ற மற்றொருவர்.
“வேண்டாம்” – ஜீவன்.
“நீங்க ஆர்டர் பண்ணதுதான்” என்று அவன் கைகளில் கண்ணாடி டம்ளர் கொடுத்து, பெஞ்சில் அமரச் செய்தார் ஒருவர்.
ஜீவன் தேநீர் குடிக்க முற்பட்டான்.
‘ஜீவன், டீ குடிச்சு ரொம்ப நாளாச்சு’ என்று செவிக்குள் சர்வமுமானவளின் குரல் வந்து போனது.
அப்படியே இருக்கையில், தேநீரை வைத்து விட்டுக் கிளம்பினான். கடையில் நின்றவர்கள் கூப்பிட்டுப் பார்த்தும், அவன் நிற்கவில்லை.
“பார்த்துப் போங்க” – இது நாமும் கடையில் இருந்தவர்களும்.
திரும்பவும் தேடல்….
ஜீவன் மனப் பிரதேசம் படும் பாட்டைக் கண்டு, மலைப் பிரதேசத்தின் மழைப் பொழிவு தூறலாகக் குறைந்தது.
முடிந்த அளவு மலைப் பிரதேசத்தின் இறங்கு பாதைகள், அடிவாரப் பகுதிகள் முழுவதும் தேடி முடித்திருந்தான். அதற்கு மேல் எங்கே எப்படித் தேட என்று தெரியவில்லை.
தனக்கான உயிரின் தேடலில், தன்னின் இயலாமையை நினைத்து தனக்குள் துடித்தான்.
தன் மீதும், பவானியைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் கோபங்கள் கொண்டான். தன் கோபத்தை யாரிடமாவது கொட்ட வேண்டும் நினைத்தான். யாரிடம் என்ற கேள்விக்கு விடை பாலாவாக இருந்தான்.
அவன் மட்டும் அன்று வீட்டின் முன்பு வந்து கத்தவில்லை என்றால், பிரச்சனை இத்தனை விஸ்வரூபம் எடுத்திருக்காது என்று நம்பினான்.
பாலாவின் மீது கொண்ட கட்டுக்கடங்காதக் கோபத்தால், ஜீவனின் பயணம் காற்றைக் கிழிக்கும் வேகத்துடன் இருந்தது.
பவானி வீடு…
ஜீவன் ஜீப்பை தன் வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு, பவானி வீட்டு முன்பு வந்து நின்றான்.
நாதன் வீடு வாசலில் அமர்ந்து இருந்தார். அவரும் தேடியிருப்பார் போல, அயர்ந்து தெரிந்தார்.
ஜீவனைக் கண்டதும், எழுந்து வந்தார். ஜீவனின் தோற்றமே சொல்லியது, அவர் கேட்கப் போகும் கேள்விக்கான விடை என்ன என்று? இருந்தும் கேட்டார்.
“பவானி??” என்றவருக்கு, அதற்கே மேல் முடியவில்லை.
ஜீவன் தலையை இருபுறமும் அசைத்தான்.
“உங்க பையன் எங்க சார்?” – ஜீவனின் குரல் தேய்ந்து போய் வந்தது.
“உள்ளேதான் இருக்கான். இன்னைக்குத்தான மருமக வந்திருக்கா, அதான் எஸ்டேட் போகல…”
ஜீவன், அவர் சொல்லி முடிக்கும் முன்னே வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.
பாலா, தன் மகனிற்கு விளையாட்டுக் காட்டியபடியே வரவேற்பறையில் அமர்ந்திருந்தான். உள்ளே வந்த ஜீவனுக்கு, இதைக் கண்டதும் கோபம் ஆங்காரமாய் உரு மாறியது.
நாதனும் ஜீவன் பின்னே வந்திருந்தார்.
“ஏய்! நீ ஏன் இங்க வந்த?” – பாலா.
ஜீவன் உடல் முழுவதும் நனைந்து இருந்தது, உயிர் முழுதும் எரிந்து கொண்டிருந்தது. அப்படி ஒரு கோபம்!
“அப்பா! இவனெல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள வீடுறீங்க??” என்று கத்திக் கேட்டபடி பாலா எழுந்தான்.
“உன்னால எப்படி இப்படி இருக்க முடியுது பாலா” என்று ஜீவனும் ஆரம்பித்தான்.
“ஏய்! மரியாதையா வெளியே போ” என்று பாலா அதிகாரமாய் கூறினான்.
“ச்சே! காணாமப் போனது உன் தங்கச்சியும்தான?? கொஞ்சம் கூட பதட்டம் இல்லாம இருக்க!! எப்படி??” என்று பாலாவை, ஜீவன் அருவருப்பாகப் பார்த்தான்.
“ஏய்! நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற?? வெளியே போடா” என்றவன் தன் பையனை மனைவியிடம் கொடுத்துவிட்டு, ஜீவன் முன்பு வந்துநின்றான்.
“ப்ச், மரியாதையா பேசு பாலா” – ஜீவன்.
“வெளியே போண்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்… இன்னும் என்னடா பேசிக்கிட்டே நிக்கிற…” என்று ஜீவனைப் பிடித்து இழுத்தான்.
மல்லுக்கட்டிக் கொண்டே ஜீவனும் பாலாவும் வெளியே வந்தனர். நாதனும், அவர் மருமகளும் பதட்டத்துடன் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தனர்.
நாதன், இருவரையும் விலக்கி விட்டார்.
“இந்த வீட்ல உன்னாலதான் இவ்வளவு பிரச்சனை. மரியாதையா ஊரைவிட்டு போயிடு” – பாலா.
“நான் என்ன பண்ணேன்?” – ஜீவன்.
“ஒழுங்கா என் பேச்சக் கேட்டுகிட்டு இருந்தவளை மாத்திட்டேல!!. அந்தக் கோபம் எனக்கு”
“….”
“மதன்கூட வாழ மாட்டலாம். பவானி சொல்றா? எங்கிருந்துடா வந்திச்சு அவளுக்கு இந்த தைரியம்” என்று கத்தினான்.
“திரும்பவும் சொல்றேன், மரியாதையா பேசு பாலா”
“பாலா ஏன்டா கத்திக் கூட்டத்தைக் கூட்டுற” – இது நாதன்.
ஆம்! அருகிலிருந்த வீட்டிலிருந்து ஆட்கள் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.
“உன்னாலதான்… நீதான்… பவானி வீட்டை விட்டுப் போனதுக்கு காரணமே நீதான்” – பாலா.
“நான் கிடையாது. அவளுக்குப் பிடிக்காத வாழ்க்கையை வாழச் சொல்ற, நீதான் காரணம்”
“எனக்கென்னமோ உன் மேலதான் சந்தேகமா இருக்கு” – பாலாவின் குரலில் குரூரம் இருந்தது.
“பாலா, என்னடா பேசுற??” – நாதன்.
“சும்மா இருங்கப்பா. பவானி காணும்னு போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்திட்டேன்.”
“….”
“அதுக்குக் காரணம் நீதான்னு சொல்லவா??.”
“ச்சே, நீயெல்லாம்… ” – ஜீவன்.
“நீ திரும்பியும் ஜெயிலுக்குப் போறது உறுதி”
அவ்ளோதான்!! அதற்கு மேல் இருவருக்கும் வார்த்தை பேசவில்லை.
ஒருவரது சட்டையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு, வேண்டுமளவிற்கு வெறுப்பைக் காட்டிக் கொண்டு, சண்டை போட்டுக் கொண்டும்.. தடுமாறிக் கொண்டும் வந்தனர்.
ஆனால் ஏதோ ஒரு நொடியில் பாலாவின் பலம் இறங்கி, ஜீவனின் கரம் ஓங்கி… பாலாவை அடித்திருந்தது.
என்றோ கிடைக்க வேண்டியது! இன்று கிடைக்கப் பெற்றது!! – நாம்.
“ஜீவன் சார், ஏன் இப்படி??” – அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நாதனின் குரல்.
மறுபடியும் நாதன் பிரித்து விட்டார்.
“முடியல சார். ரொம்பப் பேசறான். ச்சே” – மூச்சு வாங்கிக் கொண்டதற்கு இடையில் ஜீவன் குரல் வந்தது.
வாசற் படியில் மனைவியின் பார்வை, சுற்றிலும் அக்கம்பக்கத்தினர் பார்வை என அனைத்தையும் அடிவாங்கிய பாலா பார்த்தான்.
பாலா, தன் கோபத்தைக் காண்பிக்க மறுபடியும் ஜீவனை நோக்கி வந்தான்.
ஆனால் அவனை நாதன் பிடித்து நிறுத்தி, “கூட்டிட்டு போமா” என்று மருமகளிடம் கேட்டுக் கொண்டார்.
பாலாவின் கைப்பிடித்துக் கொண்டு, ஏதேதோ அறிவுரைகள் கூறியபடி, அவன் மனைவி வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள்.
நாதன், ஜீவனை அழைத்துக் கொண்டு இருக்கையை நோக்கிச் சென்றார்.
சுற்றியுள்ள வீட்டில் உள்ளவர்கள், தன் மனைவி முன்பு நடந்த இச்சம்பவம் பாலா மனதில் ஜீவனிற்கான பகையை உண்டு பண்ணியிருந்தது.
****
ஜீவனும் நாதனும் கல் இருக்கையின் இரு ஓரங்களில்… மழை முற்றிலும் நின்றுவிட்டது… மலைகள், மரம், செடி, கொடிகள் இருளைப் போர்த்திக் கொண்டு உறங்கச் செல்லப் போகும் நேரம்!
“ஜீவன் சார்”
“சொல்லுங்க சார்”
“கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. நேத்து பவானிகிட்ட பேசுனீங்களோ?” – தயக்கத்துடன் நாதன் குரல் ஒலித்தது.
கோபப்பட்டீங்களா? என்ற கேள்வி புதைந்து போயிருக்கும் தயக்கத்தில் நாதனும், என்ன பதில் சொல்ல?? என்று தயக்கப்பட்டு ஜீவனும்… வார்த்தை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தருணங்கள் – இவை.
“நாதன் சார்”
“சொல்லுங்க”
“நான் எடுத்த முடிவைப் புரிய வைக்கப் பார்த்தேன், சார். ஆனா அவ அவளோட முடிவுல தெளிவா இருந்தா. ப்ச்.. ரொம்பத் தெளிவான பொண்ணு சார், பவானி”
பவானியைப் பற்றிக் கூறுகையில் மதனும் பாலாவும் பயன்படுத்தும் வார்த்தைகளையே கேட்டவருக்கு, ஜீவனின் ‘தெளிவு’ என்ற வார்த்தைப் பயன்பாடு ஆச்சிரியங்கள் கொள்ளச் செய்தது.
“முடியாதுன்னு சொல்லிடீங்களா?? அதான் இப்படிப் பண்ணிட்டாளோ??” – நாதன்.
“இல்லை சார். பர்ஸ்ட் நான் பவானியை, எனக்காக உங்ககிட்ட பேசச் சொன்னேன்”
“சரி”
“முடியாதுன்னு சொல்லி, அழுதா”
“அழுதாளா?.”
“ம்ம்ம், அதான் எனக்கு கொஞ்சம் எரிச்சல் வந்திருச்சு. ஏதேதோ பேசினேன்… ”
ஜீவன், நேற்றைய தினத்தின் கருத்தற்ற பேச்சை நினைத்து, இன்றைய பொழுதில் வருத்தம் கொண்டான்.
“ஓ! அதான் பிரச்சனையா?? அதுக்குத்தான் இப்படி பண்ணியிருக்காளா??” – நாதன்.
“இல்லை சார். இந்த பாலா ஏதோ நான் ஏமாத்திருவேன்னு சொன்னானமே?? அதுலதான் எங்களுக்குள்ள பிரச்சனை”
“பாலாவா?? பாலாவும் நானும்தான்… பேசிகிட்டு இருந்தோம். அப்போ பவானி தூங்கலயா?? முழிச்சி எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்தாளா? … ஐயோ…”
“ஏன் என்னாச்சு??”
“இல்லை ஜீவன் சார். அவ மதன் வீட்டுக்குப் போகப் பயந்துகிட்டுதான். இந்த மாதிரி செஞ்சிருக்கா”
“எப்படிச் சொல்றீங்க?”
“ஏன்னா?? பாலா நேத்து சொன்னான். இன்னைக்கு காலையில பவானியை மதன் வீட்டுல கொண்டு போய் விட்டுடணும்னு. அதான் இப்படிப் பண்ணியிருக்கா.”
“…”
“பிடிக்கலைன்னு சொல்றவன் வீட்டுக்கு நான் எப்படி அனுப்புவேன் சார்? பவானி என்னைய புரிஞ்சிக்கிலயே?
“ப்ச், எனக்கு அதெல்லாம் தெரியாது சார். ஆனா நான் அவளைப் புரிஞ்சிக்கல. ” என்று சொல்லி எழுந்து நாதன் முன்னே நின்றான்.
நாதன் ‘எதற்காக?’ என்பது போல் பார்த்தார்.
“நாதன் சார்”
“சொல்லுங்க”
“நான், இனிமே நீங்க சொல்றதைக் கேட்கப் போறதில்லை சார்”
ஜீவன் குரலில், நாதன் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்று தன் மீது வருத்தமும், இவர் பேச்சைக் கேட்டதால் பவானிக்காக ஒரு தெளிவான முடிவை எடுக்கவில்லை என்று தன் மீது கோபம் சரிவிகிதத்தில் இருந்தது.
‘ஏன்??’ என்ற ஒற்றைப் புருவ சுளிப்புகள் மட்டுமே, நாதனிடம்.
“சார், பவானிக்கு என்னைய பிடிக்கும். அதை நேரடியா சொல்லவும் செஞ்சிருக்கா… ”
இதைக் கூறியவன் உடல் மொழியில், தன் உயிரிலானவளின் நேசத்தை நினைத்து, கோடி ஆசைகள் ஓடிக் கொண்டிருந்தது.
நாதன் பார்த்தார்.
“ரெண்டு தடவைக் கர்ச்சீப் கொடுத்தா… ஒரு தடவ வாங்கலை.. அப்புறம் வாங்கனதையும் திருப்பிக் கொடுத்திட்டேன்”
ஜீவன் விழியில், நேசத்தை முறித்துக் கொண்ட நேரத்தை நினைத்து நீர் கோர்த்தது.
நாதன், தன் பெண், அவளால் முடிகின்ற தருணங்களில் எல்லாம் தைத்துக் கொண்டிருந்தது, தன் முடிவைச் சொல்லத்தானோ?? என்று நினைத்தார்.
“சார், நேத்து கேட்டா சார்… ‘என்னையும் எங்க அப்பாவையும் எங்கயாவது கூட்டிட்டுப் போங்களேன்னு’ ” என்றான்.
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க? ” என்று தயக்கத்துடன் கேட்டார்.
அன்புடன் அரவணைக்க வந்தவளை, அணைக்கட்டித் தாழிட்டது அர்த்தமற்றதாய் தோன்றியது! இக்கணத்தில்!!
இருவரின் நிசப்தம்!!
” ‘நான் உங்க கூட சந்தோசமா வாழணும்னு ஆசையா இருக்குன்னு’ சொன்னா… ” என்றான் ஜீவன்.
“…”
“என்ன?? அவ சொல்லிட்டா… நான் சொல்லலை… அவ்வளவுதான்” என்று தன் வெறுமையைப் பொறுமையாகச் சொன்னான்.
“… “
“நான் எதையுமே சொல்லலை? அவளை, எனக்குப் பிடிக்கும்னு கூட சொல்லலையே சார்”
பவானி இல்லாத, ஜீவனின் மனப்பிரதேசம் வெற்றிடத்தின் தனிமை போல் காட்சி அளித்தது.
அதை நாதன் பார்த்தார்.
“ஆனா, எனக்கு பவானியை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் சார்”
ஜீவன், பவானி வாழும் தன் மனப்பிரதேசத்தின் பகுதிகளை நாதனுக்குச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான்.
நாதன் பார்த்தார்.
“அவளை விட்டா எனக்கு வேற யாரும் இல்லைன்னு இதைச் சொல்லலை.
அவளை விட்டுட்டு நான் நானா இல்லைன்னு சொல்றேன்”
ஜீவன், தன் நேசப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கங்களையும் நாதனுக்கும் படித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.
நாதன் கேட்கிறார்.
“நம்பிக்கை இல்லை… இல்லைன்னு சொன்னா?? எங்கே போய், எப்படி இருக்காளோ??” என்று மீண்டும் அழ ஆரம்பித்தான்.
“… “
“திரும்ப வந்தாலும் என்னைய எப்படி நம்புவா? நம்ப மாட்டா! நம்பவே மாட்டா!! கர்சீஃப் கொடுக்கவும் மாட்டா” என்று அழுது புலம்பினான்.
“…”
“சார், உங்க வீட்ல தெரிஞ்சா பிரச்சனைன்னு நினைச்சேன். அதான் மதன்கிட்டாதான் பேசணும்னு முடிவு பண்ணியிருந்தேன்.”
“…. “
“ஆனா அதுக்குள்ள பாலா வந்து… எல்லாத்தையும் பாழக்கிட்டான்” என்றவனுக்கு கண்ணீரும் கோபமும் சரிவிகிதத்தில் இருந்தது.
“ஜீவன் சார் போதும். நீங்க ஏற்கனவே மலையில நனைஞ்சி இருக்கீங்க. இன்னும் இப்படியே இருந்தா நல்லதில்லை”
“பவானியும் இப்படித்தானா எங்கயாவது இருப்பா.. ” என்றவன், ” பவானி இருக்கணும்” என்று ஏக்கங்கள் கொண்டு முடித்தான்.
“சரி, வீட்டுக்குப் போங்க. முதல சாப்பிட்டீங்களா??”
“இல்லை! முடியலை சார்” என்று மீண்டும் அமர்ந்து கொண்டான்.
“அப்படிச் சொல்லாதீங்க, வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்க.”
“….”
“நானும் கிளம்புறேன். ஏன்னா பாலா என்ன நிலைமையில இருப்பானோ??” என்று சொல்லி எழுந்தார்.
ஆனால் ஜீவன் இன்னும் அங்கேயே அமர்ந்திருந்தான். நாதனுக்கும் என்ன செய்யவென்று தெரியவில்லை. நடக்க ஆரம்பிக்கும் பொழுது….
“நாதன் சார்”
“சொல்லுங்க”
“கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம் என்கூட.. இங்க இருக்கீங்களா?? வீட்டுக்குப் போனா தனியா இருக்கணும். அது ஒரு மாதிரி.. அதான் கேட்கிறேன்..” என்று யாசித்தான்.
சட்டென நாதன் வந்து அமர்ந்து கொண்டார். நாதன் ஜீவனைப் பார்த்தார். காலையில் பார்த்த முகமா இது?? என்பது போல், அத்தனைக் கலையிழந்து கிடந்தது.
கண்கள் முழுவதும் அழுது அழுது வீங்கியிருந்தது. முற்றிலும் நனைந்த ஆடை, அதில் ஆங்காங்கே மழையின் காரணமாகச் சகதிகள்.
முழங்கையில் சிறிது ரத்தக் கசிவு… கைகளில் கொஞ்சம் சிராய்ப்புகள். – இது நாதனுக்குத் தெரியவில்லை, ஆதலால் நாம்.
“ஜீவன் சார்”
“சொல்லுங்க சார்”
“கொஞ்ச நேரம் இங்கயே படுத்துக்கிறீங்களா??” என்று ஜீவன் சோர்வு கண்டு, மெதுவாகக் கேட்டுப் பார்த்தார்.
“ம்ம்ம்”
ஜீவன் சம்மதித்தவுடன், நாதன் எழுந்து கொண்டார். இருந்தும், அவன் இன்னும் படுக்காமல் இருந்தான்.
நாதன் ஜீவனைப் பார்த்தார்.
ஜீவன் நாதனைப் பார்த்தான்.
இருவரும் தலை குனிந்து கொண்டனர்.
மீண்டும் இப்படியே..
இருவருக்கும் அர்த்தங்கள் பொதிந்த, புரிந்த பார்வை பரிமாற்றங்கள்.
“நாதன் சார்”
“இதோ உட்காரேன்” என்று நாதன் ஓடி வந்து அமர்ந்து கொண்டார்.
ஜீவன், நாதன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
கால்களைச் சுருக்கிக் கொண்டான். கண்கள் கண்ணீர் சிந்த ஆரம்பித்தன.
ஜீவன், இதுவரைப் பயணித்து வந்த அகவைகளில், பார்த்து வருந்திய அல்லல்களுக்கு கிடைக்காத ஆறுதல், இன்றைய அன்பின் பிரிவிற்குக் கிடைத்தது.
ஜீவன், நாதனிடம் அண்டி ஒண்டிக் கொண்டான்.
சற்று நேரத்துக்குப் பின்…
நாதன், ஜீவனை அவனது வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார்.
நாளைக்கு காலையில் மீண்டும் தேடுகிறேன், கிடைக்கவில்லை என்றால் காவல்நிலையம் செல்லலாம் என்று வாக்குத் தந்தான், ஜீவன்.
****
ஜீவன் அறை…
ஜீவன் உறக்கத்திலும், பவானியின் உறங்காத நினைவுகளோடு இருந்தான்.
அதிகாலை ஐந்து மணியளவில் விழிப்பு வந்தது. மீண்டும் பவானியுடன் பேசிய பேச்சுக்களை நினைத்துப் பார்த்தான்.
முதலில் அழுதுக்கலாம் என்று சொன்னது… தேநீர் வாங்கிக் கொடுத்தது… நடைப் பயிற்சி நாட்கள்… அடுத்து, முதன் முதலாக நம்மைப் பற்றி யோசிக்கலாம் என்று கேட்டது.
அன்று அவளிடம்…
“சும்மா, அப்டியே எங்கயாவது தனியா போய் இருந்திட்டு வருவேன்”
“தனியாவா? தனியா எங்க போறீங்க? பயமா இருக்காதா? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?”
.
.
.
“எங்கனாவது சொல்லுங்களேன்??”
.
.
“ப்ச், அப்படியில்ல. சரி சொல்றேன். இந்த ரோட்ல, ஒரு அரை மணி நேரம் நடந்தா… ரைட் சைடுல.. ம்ம்… பாறையில சின்ன சின்ன படிக்கட்டு மாதிரி இருக்கும்”
“….”
“அதுல ஏறிப் போனா… ஒரு… ஒரு மணி நேரம் செம்மண்ல நடக்கணும். அதுக்கப்புறம்… பயங்கிற காடு, மரம், செடி… அப்படியே நடந்தா, மலைக்கு அந்தப் பக்கம் கூட இறங்கலாம்”
இது நியாபகம் வந்த நொடியில், நேற்று பேசிய பேச்சு நியாபகத்தில் வந்தது.
‘தனியா உட்கார்ந்து.. யோசிச்சிப் பாரு பவானி’ என்று தான் கூறியது…
அப்போ! பவானி அங்கதான் போயிருப்பாளோ?? என்று சந்தேகம் எழுந்தது. அடுத்த நொடி வீட்டைவிட்டு வெளியேறினான்.
மழை நன்றாக விட்டிருந்தது. ஆனால் பாதைகளில் நீர் தேங்கி இருந்தது. ஜீப்பை எடுத்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரைச் சென்றான். அதற்கு மேல் ஜீப் செல்ல முடியாததால், வலப் பக்கம் இருந்தப் படிக்கட்டுகளில் ஏறினான்.
வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருளை விழுங்கி வெளிச்சத்தைக் காண்பிக்க ஆரம்பித்தது.
மரங்களுக்கு இடையே… மழையில் நனைந்த செம்மண் தரையில்… கைகளில் அலைபேசி டார்ச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினான்.
மரங்களில் இடித்துக் கொண்டான், மண் தரையில் இடறி விழுந்தான்.
ஒரு முக்கால் மணி நேர ஓட்டத்திற்குப் பிறகு, காலைப் பொழுதின் அறிகுறியான சூரியன் வர ஆரம்பித்தது.
இதற்குப் பின் இயற்கையின் வெளிச்சத்தில், இதயத்தின் துடிப்பு எகிறும் வேகத்தில் ஓடினான்.
அங்கே இங்கே… அப்பக்கம் இப்பக்கம்… வலது இடது… இவை கண்கள் சென்ற பாதைகள். இல்லை! எங்கும் பவானி இல்லை!!
சரி இன்னும் சற்று தூரம் சென்று பார்ப்போம் எனப் பார்த்தான்.
அதன் பின்னர்…
அங்கே…
ஜீவனின் கண் பார்வை விழுகின்ற தூரத்தில், ஒரு மரத்தின் அடியில்…
ஜீவனின் ரகசிய அதிசயம்..
தனிமைத் தரணியைத் தரைமட்டமாக்கிய தாரிகை…
மனப் பிரதேசதைக் கட்டி ஆட்சி செய்யும் மங்கை.. இருந்தாள்.
மூச்சிரைக்க நின்றான்…
‘அப்பாடி’ என்பது போல் முகத் தோற்றமும்… உடல் தோற்றமும் கூற, அருகில் இருந்த மரத்தில் ஓய்ந்து போய் சாய்ந்து நின்று கொண்டு, நேசத்தில் தோய்த்து எடுத்தப் பார்வை பார்த்தான்.