UUP–EPI 13

அத்தியாயம் 13

ப்ரோலக்டின்(prolactin) எனப்படும் ஹார்மோன் தான் பால் சுரக்க உதவும் ஹார்மோனாகும். பிறந்த பிள்ளை தாயின் மார்பில் வாய் வைத்து பாலருந்த முயலும் போது இந்த ஹார்மோன் வெளிவருகிறது.

அன்று

“கதிரு டேய்!”

“என்னடி?”

நண்பர்களுடன் பெட்டிக் கடையில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நண்பனை அழைத்தாள் சண்மு. அவள் அருகில் வந்தவன்,

“இங்கலாம் ஏன் வர சம்மு?” என கடிந்துக் கொண்டான்.

“உன் கிட்ட பேசனும்டா! ஆலமரத்துக்கு வரியா?”

“எ..என்ன பேசனும்?” தடுமாறினான் கதிர். தான் பொத்தி பாதுகாப்பாய் வைத்திருக்கும் காதல் மலர்ந்து மணம் வீசி தன்னைக் காட்டிக் கொடுத்து விட்டதோ என பயந்தான் அவன்.

“அங்க வா, பேசலாம்!” என சொல்லியவள் விடுவிடுவென நடந்து விட்டாள்.

உள்ளங்கை திடீரென வேர்க்க, கையை பேண்டில் அழுத்தித் துடைத்துக் கொண்டான் கதிர். அவ்விடத்தை விட்டுக் கிளம்பும் முன் சண்முவுக்குப் பிடித்த சாக்லேட்டை வாங்க தவறவில்லை அவன்.

மரத்தடியில் அமர்ந்திருந்தவள் அருகே தொப்பென அமர்ந்தான் கதிர். அவன் அமர்ந்தது அறிந்தும் அமைதியாக இருந்தாள் சண்மு.

“என்ன சம்மு? எதுக்கு கூப்புட்ட?”

“நீயே சொல்லேன் பார்ப்போம்!”

“இப்படி திடீர்னு கேட்டா, நான் என்ன சொல்ல” மழுப்பினான் இவன்.

அவன் கையில் இருந்த சாக்லேட்டைப் பிடிங்கிக் கொண்டவள், பாதியாக உடைத்து அவனுக்கு மறுபாதியைக் கொடுத்தாள். சாக்லேட்டை மெல்லும் அவள் உதட்டையே திருட்டுப் பார்வை பார்த்திருந்தான் கதிர்.

“என்னடா?”

“சாக்லேட் ஒட்டிருக்கு உதட்டுல”  

“ஓ!” என்றவள் புறங்கையால் தன் உதட்டைத் துடைத்துக் கொண்டாள்.

“சரி சொல்லு சம்மு! எனக்கு வேலைக் கிடக்கு”

“உனக்கு எப்போத்தான் வேலை இல்லாம இருந்துச்சு! பைக் வந்ததுல இருந்து ஒரே ரவுண்டுதான்! ஊர்ல உள்ளவ எல்லாம் கதிர் மாமா, கதிர் மச்சான்னு முறை வச்சு வழியாறாளுங்கல்ல, அந்த மிதப்பு!”

“யார் வழிஞ்சு என்ன பண்ண! நீ மட்டும் என்னைக் கல்லையும் மண்ணையும் பார்க்கற மாதிரில பார்க்கற” என முனகினான்.

“என்னடா வாய்க்குள்ளயே திட்டற? என் மேல வர வர உனக்கு பயம் விட்டுப் போச்சுல்ல! பூரானைப் புடிச்சிற வேண்டிதான்!”

“பூரானுக்குப் பயந்த காலமேல்லாம் ஓடிப்போச்சு சம்மு! இப்ப நான் பயப்படறதே வேற விஷயங்களுக்குத்தான்”

“என்ன? என்ன பயம்? சொல்லு நான் விரட்டி அடிக்கறேன் அந்தப் பயத்த!”

‘உன் கெண்ட மீன் விழியப் பார்த்து பயம், கெண்டைக் கால பார்த்து பயம், மலர் செண்டா இருக்கற மேனியப் பார்த்து பயம், தூக்கி சொறுகிருக்கற கொண்டையப் பார்த்து பயம்! மண்டு மாதிரி ஏடாகூடாம எதையாச்சும் செஞ்சு உன்னைக் காண்டாக்கி நான் கண்டமாகிருவேனோன்னு பயமோ பயம்! மொத்தத்துல உன்னைப் பார்த்தாலே பயம்!’

“இந்த வருஷம் பரிட்சை இருக்குல்ல! அத நெனைச்சு லேசா பயம் சம்மு” என சமாளித்தான்.

“நடிக்காதடா! படிக்கவே இல்லைன்னு சொல்லிட்டு, பரிட்சை ஹாலுல எக்ஸ்ட்ரா பேப்பர் கேக்கற ஆளுதானே நீ! உனக்கு பயமா?”

“அத விடு சம்மு! இப்ப எதுக்குப் கூப்புட்ட என்னை?”

“இன்னிக்குக் கடைக்குப் போனப்போ உங்கம்மா ஊர் வம்பு பேசறது கேட்டுச்சுடா”

“என்ன? உன்னைப் பத்தி எதாச்சும் சொன்னாங்களா?” லேசாக கோபம் எட்டிப் பார்த்தது அவன் பேச்சில்.

“இல்லடா!”

“அப்புறம் என்ன சம்மு?”

“கிருஷ்ண ஜெயந்தி வருதுல!”

“ஆமா! அதுக்கு என்ன இப்போ?” அலர்ட்டாக கேட்டான் கதிர்.

“இந்த வருஷம் உன் கிட்ட வழுக்கு மரம் ஏற சொல்லிக் கேட்டாங்களாம்”

“ஓஹோ! ஆமாடி கேட்டாங்க! நான் அதெல்லாம் வேணாமான்னு சொல்லிட்டேன்”

“ஏன் வேணா? இல்லை ஏன் வேணாங்கறேன்? மாடு மாதிரி வளந்துட்டத்தானே! இனிமே நீ ஏறுனா என்ன?”

வாரியங்காவலில் கிருஷ்ண ஜெயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். கிருஷ்ணர் வேடம் போட்டு கோயிலுக்குப் போவது, வில்லெடுப்பது, காவடி எடுத்து ஊரை சுற்றி வருவது என தடபுடல்படும். இந்த விழாவின் முக்கிய அங்கமே வழுக்கு மரம் ஏறுவதுதான்.

வழுக்கு மரம் ஏற்பாடு செய்வதற்கென்றே ஒரு தாத்தா இருக்கிறார் இந்த ஊரில். விழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னமே மரத்தை ரெடி செய்து, எண்ணெயில் ஊர வைத்து மொழு மொழு என்று வைத்திருப்பார். இந்த வழுக்கு மரத்தை எல்லோரும் ஏறி விட முடியாது. ஒருத்தர் குடும்பத்துக்கே அந்த மரியாதை. அப்பா, அவருக்குப் பின், மகன், பேரன் இப்படி அவர்கள் குடும்பம் தான் தொடர்ந்து ஏறுவார்கள்.

பரமு தண்ணீரில் மூழ்கி தள்ளாடும் வரை அவரே அதில் ஏறி உச்சியில் இருக்கும் அந்த முடிப்பை எடுப்பார். சுத்தபத்தமாக இருந்து, விரதம் பூண்டு தான் அந்த மரம் ஏற முடியும். அவரால் முடியாமல் போனதில் இருந்து, அவரின் நெருங்கிய சொந்தத்தில் உள்ளவர்கள் ஏறுவது வழக்கமாகியது. கதிரும் சிறுவனாக இருந்ததால் அதுவே வருடா வருடம் தொடர்ந்தது.

“இந்த வருஷம் உன் ஒன்னு விட்ட சித்தப்பா ஏற கூடாது! நீ தான் ஏறுற! உங்கம்மா பாவம்டா! அப்பாத்தான் அப்படி ஆகிட்டாரு! உன்னாலயாச்சும் மறுபடி ஊர்ல மரியாதை கிடைக்கனும்னு நினைக்கறாங்க! செய்யேன்டா!”

“சம்மு வேணான்டி! அதுக்கு விரதமெல்லாம் எடுக்கனும்டி! என்னால கோழி சாப்பிடாம இருக்க முடியாதுன்னு உனக்குத் தெரியும் தானே! அந்தப் பாவபட்ட ஜீவனுக்கு நான் தானே ஆதரவு!”

அவனை முறைத்தவள்,

“விரதம் இருந்து வழுக்கு மரம் ஏறினா, கடவுள் கிட்ட கேட்டது கிடைக்குமாம்டா! நீ நல்லா வேண்டிக்கோ ப்ளஸ் டூல ஸ்டேட் பர்ஸ்ட் வரனும்னு. கண்டிப்பா நடக்கும்!” என அவனை சம்மதிக்க வைக்க வாயில் வந்ததை எல்லாம் புழுகினாள் சண்மு.

“கேட்டதெல்லாம் கிடைக்குமா சம்மு?”

“கண்டிப்பா கிடைக்கும்டா”

“உன்னக் கேட்டாக் கூடவா?”

“என்னாது?”

“உண்ண! சாப்பிட! நான் சாப்பிட எது கேட்டாலும் கிடைக்குமான்னு கேட்டேன்!”

“தீனிபண்டரமாடா நீ? நீ மட்டும் ஏறி உன் குடும்பத்துக்கு நல்ல பேரு எடுத்துக் குடு! என் கையாலயே சமைச்சுக் குடுக்கறேன் ஒரு வாரத்துக்கு!”

“சரிடி! ஏறறேன், தட்டித் தூக்கறேன்!”

‘உன்னையும்தான்’ என மனதுக்குள் சேர்த்து சொல்லிக் கொண்டான் கதிர்வேலன்.

கிருஷ்ண ஜெயந்தியும் வந்தது. அந்த ஊரில் இருந்த கிருஷ்ணர் மடம் கோலாகலமாகியது. கதிரும் மனதை அடக்கி, நாவை அடக்கி விரதம் இருந்து வழுக்கு மரம் ஏற தயாரானான். கூட்டத்தில் இருந்தவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு துணி முடிப்பில் கட்டப்பட்டது. பின் அந்த முடிப்போடு சேர்த்து கவரில் போடப்பட்ட திண்பண்டங்களும் நிறைய வழுக்கு மரத்தில் கட்டப்பட்டது.

கூட்டம் ஆரவாரம் செய்ய வழுக்கு மரம் ஏறும் நிகழ்வும் ஆரம்பித்தது. வேட்டியை மட்டும் மடித்துக் கட்டிக் கொண்டு வெற்றுடம்போடு ஏற ரெடியாகினான் கதிர்வேலன். பரமுவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஆல்கோஹால் நரம்பு தளர்ச்சி ஏற்படுத்தி இருந்ததால் அவரால் ஏற முடியாமல் போனாலும், மகனுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருந்தார். அவன் ஏறும் முன்னே மரத்தை சுற்றி சுற்றி வந்து,

“யாழு புள்ள அவன் என்னோட புள்ள

ஜாங்கு ஜக்கா ஜக ஜஞ்ஜக ஜக்கா” என மகனைக் சுட்டிக் காட்டிப் பாடி ஒரே ஆர்ப்பாட்டம் பரமுவுக்கு. பார்வதிக்கும் பெருமைப் பிடிபடவில்லை. சந்தோஷமாக கூட்டத்தின் முன்னே நின்றிருந்தார்.

ஏறும் முன்னே இவன் சண்முவைப் பார்க்க தம்ப்ஸ் ஆப் காட்டி சிரித்தாள் அவள். கண்ணை மூடி அந்த மாயக்கண்ணனை வேண்டிக் கொண்டே அந்த வழுக்கு மரத்தை ஏற ஆரம்பித்தான் கதிர். பல முறை வழுக்கி விட்டது அவனை. கீழே விழுந்து மீண்டும் மனம் தளராமல் ஏறினான். அவன் ஒவ்வொரு தடவை விழுந்து எழுந்து மறுபடி ஏறும் போதும் மக்கள் கூட்டம் கோஷமெழுப்பி அவனை ஆதரித்தது. பல தடவை விழுந்து எழுந்தவனுக்குக் களைத்துப் போனது. விட்டு விடலாமா என நினைத்த நொடி, கூட்டத்தின் கத்தலில் சண்முவின் ‘கதிரு’ மட்டும் தனித்துக் கேட்டது. பாதி மரத்தில் கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டவன், மடமடவென ஏறி உச்சியைத் தொட்டுவிட்டான்.

கீழே இருந்தவர்கள்,

“இங்க, இங்க! இங்கடா கதிரு” என திண்பண்டத்துக்காக குரல் கொடுக்க, இவனும் அதையெல்லாம் அவிழ்த்து தனக்கு தெரிந்தவர்கள் நிற்கும் திசைக்கு வீசினான். சண்முவும்

“எனக்குடா கதிரு!” என கேட்ட அவளுக்கு மட்டும் எதையும் போடவில்லை அவன். கடைசியாக பணமுடிச்சை எடுத்துக் கொண்டு அவன் இறங்க ஆர்ப்பாட்டம் முடிந்து மக்கள் எல்லோரும் கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

தன் தம்பியுடன் நடையைக் கட்டிய சண்முவை,

“சம்மு” என அழைத்துக் கொண்டே ஓடி வந்தான் கதிர்.

“போடா டேய்! தீனியெல்லாம் உன் சொந்தத்துக்கே தூக்கி வீசிட்டு இப்ப என்ன சம்மு வேண்டி கிடக்கு” என கோபித்துக் கொண்டாள் அவள்.

“கைய நீட்டுடி” என அவன் சொல்ல இவளும் நீட்டினாள்.

பணமுடிப்பை அவள் கையில் போட்டவன், கண்ணனிடம் முறுக்கு பாக்கேட்டைத் திணித்து விட்டு தன் அம்மாவைத் தேடி ஓடிவிட்டான். கஸ்டப்பட்டு வழுக்கி, வழுக்கி ஏறி, உடம்பில் அங்கங்கே லேசாய் சிராய்த்துக் கொண்டு, கீழே விழுந்ததால் உடம்பெல்லாம் அங்கங்கே சிவந்திருக்க, பாடுபட்டு எடுத்த பண முடிப்பை தன்னிடம் கொடுத்து விட்டுப் போனவனை புன்னகையுடன் பார்த்திருந்தாள் சண்மு.

“கதிரு, என் ப்ரேண்டு கதிரு!”

(சகோ ஒருவரிடம் கேட்டு இந்த வழுக்கு மரம் ஏறுவதை பற்றி எழுதினேன். அவருக்கு பிக் தேங்க்ஸ்! ஒரு ஊரப் பத்தி எழுதறப்போ எதாச்சும் ஒரு சின்ன விஷயமாவது அதப் பத்தி சொல்லனும்கற எண்ணத்துல எழுதனது. தப்பு தவறு எதாச்சும் இருந்தா மன்னிக்கனும்!)

இன்று

கன்னத்தில் கைத்தாங்கி நின்ற சண்முவுக்கு கண்கள் தணல் போல் ஜொலித்தன. அவளை அறைந்திருந்த தவமங்கையோ,

“இந்த அறை, என் வேல என் கிட்ட இருந்துப் பறிச்சுக்கிட்டதுக்கு!” என்றவள் பின் நெருங்கி சண்முவை அணைத்துக் கொண்டாள்.

“இந்த ஹக், என் லைப்ப காப்பாத்திக் குடுத்ததுக்கு!”

அணைத்து நின்ற மங்கையை தள்ளி நிறுத்திய சண்மு,

“எவ்ளோ தெனாவெட்டு இருந்திருந்தா என் மேலயே கை வச்சிருப்ப? கை நீட்டுனாலே நடுங்கிப் போன சண்மு செத்துப் போயிட்டா! இவ சம்மு, அடங்காப்பிடாரி சம்மு” என சொல்லியவள் எதிரே நின்றிருந்தவளுக்கு ஓங்கி ஓர் அறை விட்டிருந்தாள். இப்பொழுது கன்னத்தைப் பிடித்தப்படி நிற்பது மங்கையின் முறையானது.  

“ஷப்பா என்னா ஒரு அறை! போலீஸ்கார் நிலமையை நினைச்சாப் பாவமால்ல இருக்கு” என சொன்னவள் நடந்துப் போய் கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.

“வாங்க சண்மு! நீங்களும் வந்து உட்காருங்க!” என அழைத்தாள்.

அவள் பக்கத்தில் போய் அமர்ந்த சண்மு,

“நான் இங்க இருக்கறது எப்படித் தெரியும்? எதுக்கு இங்க வந்துருக்க? இப்ப என்னன்னமோ உளறனியே, அதெல்லாம் என்ன?” சரமாரியாக கேள்விக்கணைகளை அடுக்கினாள்.

“வேய்ட், வேய்ட்! எதுக்கு இங்க வந்தென்னு மட்டும் சொல்றேன்! மத்ததெல்லாம் எதுக்குங்க?”

“ஹ்ம்ம் சொல்லு!”

“என்னங்க என்னை ங்க போட்டு மரியாதையா பேசுவீங்க! இப்போ அது மிஸ்சிங்!”

“என்ன ஏதுன்னு கேக்காம கைய நீட்டற உனகெல்லாம் என்ன புடலங்காய் மரியாதை! என் கதிரோட வைப்பாக போறியேன்னு சின்ன புள்ள உன்னைலாம் மரியாதையா நடத்துனேன்! அதுக்குத்தான் பளிச்சுன்னு கன்னத்துல ஒன்னு குடுத்துட்டியே!”

“இதுதான் பிரச்சனை உங்க கிட்ட!”

“எது?”

“என் கதிர்னு சொல்லறது! அப்படி சொல்லற நீங்க அவர் கல்யாணம் பண்ணிக்க கேட்டா மட்டும் முடியாதுன்னு சொல்லறீங்களாம்”

தவமங்கையை மேலும் கீழும் பார்த்த சண்மு,

“இப்போ நீ என்ன வேலை செஞ்சுட்டு இருக்கன்னு தெரியுதா மங்கை? என் வேல், என் வேல்னு சொல்லிட்டு அந்த வேலை தூக்கி என் முதுகுல சொறியற நீ!”

சண்மு சொன்னதைக் கேட்டு வாய் விட்டு சிரித்த மங்கை,

“இப்போ புரியுது வேல் ஏன் உங்கல இன்னும் மறக்காம இத்தனை வருஷமா நெஞ்சுக்குள்ளயே வச்சிருக்காருன்னு! யூ ஆர் சான்ஸ்லெஸ்” என சொல்லி இன்னும் நகைத்தாள். பின் சீரியசாகி,

“ஏன் அடிக்கடி அத சொல்லறேன்னு நீங்க யோசிச்சதுண்டா சண்மு? இவர் எனக்குத்தான் சொந்தம்னு எனக்கு நானே நினைவுப்படுத்திக்கறேன் என் வேல், என் வேல்னு சொல்லி சொல்லி! சின்ன பிள்ளைங்க தன் உரிமைய நிலைநாட்ட என் அம்மா, என் அப்பா, என் பொம்மைன்னு நொடிக்கொரு தரம் சொல்லறாங்களே அது மாதிரிதான் இதுவும். ஆழ் மனசுல வேல் எப்படியும் என்னை நெருங்கி வர மாட்டார்னு ஒரு பீலீங் இருந்துட்டே இருந்துச்சு. ஆனாலும் அதை நான் தலைதட்டி அடக்கி வச்சிருந்தேன்” என சொல்லி பெருமூச்சொன்றை விட்டாள் மங்கை.

“இங்க பாரு மங்கை! நான் இப்பவும் சொல்லறேன் கதிர் உனக்குத்தான்! அவன் தான் உளறிட்டு இருக்கான்னா நீயும் ஏன் அவன் சொல்லறதுக்கு தாளம் போடற! அவன் என்னிக்குமே எனக்கு பிரண்டா மட்டும்தான் இருக்க முடியும்”

“நீங்க அவர பிரண்டா பாருங்க இல்ல ஷாக்கடிக்கும் கரண்டா கூட பாருங்க! அது உங்க ரெண்டு பேரு பிரச்சனை! இனிமே இந்த முக்கோண காவியத்துல இருந்து என்னை கழட்டி விட்டுருங்க”

“உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆகிருச்சு மங்கை”

“நிச்சயம் ஆனா கல்யாணத்துல தான் முடியும்னு இல்லைங்க. அபிஷேக் பச்சனும் கரிஷ்மாவும் கூடதான் நிச்சயம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா அவர் கட்டிக்கிட்டது ஐஸ்வர்யாவதானே! மேல ஒருத்தன் நம்ம வாழ்கையில நூல் கட்டி விளையாடறான்! அவன் இசைக்கற பாட்டுக்கு நாம ஆடிக்கிட்டு இருக்கோம்! அவ்ளோதான்! வேல் ஆரம்பத்துலயே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கல! எல்லா அம்மாவையும் போல அத்தையும் தற்கொலை ஆப்சன வச்சித்தான் அவர லாக் பண்ணாங்க. அப்படியும் என் கிட்ட வந்து பேசனாரு!”

“என்னன்னு?”

“ஒரு பொண்ண உயிருக்குயிராய் காதலிச்சேன்! அவ இப்போ என் லைப்ல இல்ல! ஆனாலும் அவ விட்டு போன நினைவுகள் என் கிட்ட பத்திரமா இருக்கு! என்னால ஒரு காதல் கணவனா உனக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுக் குடுக்க முடியுமான்னு தெரியலன்னு வெளிப்படையா சொன்னாரு!”

“ஓ!”

“ஹ்ம்ம்! நமக்குத்தான் யாரவது இப்படி சென்டிமெண்டா பேசிட்டா உடனே சைத்தான் முழிச்சுக்குமே! விட்டுட்டுப் போனவளையே இப்படி நினைச்சு உருகுறாரே, நம்மல கல்யாணம் செஞ்சு காதலிக்கவும் செஞ்சிட்டா இன்னும் எப்படி உருகுவாருன்னு ஒரு நினைப்பு! அதோட நம்மள வேணாம்னு சொல்லறவர வேணும் வேணும்னு நம்ம பின்னாடி சுத்த வைக்கறது ஒரு சேலஞ்சிங்கான விஷயமாச்சே! அதுல கிடைக்கப்போற த்ரீல்! இப்படித்தான் யோசிச்சனே தவிர, படத்துல வர மாதிரி, நாவல்ல வர மாதிரி ரெண்டாவதா வர காதலிய, மனைவிய உருகி உருகி லவ் பண்ணறதெல்லாம் சாத்தியமான்னு யோசிக்கல சண்மு! நாம பெத்த பொண்ணுக்கு, நம்ம புருஷன் முன்னால் காதலி பேரு வச்சு கூப்பிடறத எவளால தாங்கிக்க முடியும்னு யோசிச்சுப் பார்க்கல!”

தலையைப் பிடித்துக் கொண்டாள் சண்மு.

“இங்க பாருங்க சண்மு! கதிர் இந்தக் கல்யாணம் இனி நடக்காதுன்னு சொல்லிட்டாங்க. பாருங்களேன் அவர் எனக்கு வேணாம்னு முடிவு பண்ணதும் என் வாய் கூட ஆட்டோமடிக்கா வேல எடுத்துட்டு கதிர்னு சொல்லுது!” என சொல்லி புன்னகைத்தவள்,

“நீங்க ரெண்டு பேரும் இனிமே கட்டிக்கறீங்களோ இல்ல வெட்டிக்கறீங்களோ, என் முடிவு என்னன்னு நான் சொல்லிட்டேன். கதிர் என்னை நினைச்சு நீங்க ரொம்ப வருத்தப்படறீங்கன்னு சொல்லவும் தான் இங்க வந்தேன்! இனிமே கதிர் வாழ்க்கையில என் பார்ட் முடிஞ்சுப் போச்சு!” என சொன்னவள் எழுந்து பாத்ரூம் போனாள். லேசாக கலங்கி இருந்த கண்களைப் பார்த்தவள் முகத்தை தண்ணிர் ஊற்றிக் கழுவினாள். அதோடு சேர்த்து மனதில் ஒட்டி இருந்த கொஞ்ச நஞ்ச கதிரின் நினைவுகளையும் கழுவினாள். இவளிடம் பேச்சு வாக்கில் பார்வதி சொன்ன விஷயம், அசரீரியாக அவள் காதில் ஒலிப்பது போல இருந்தது மங்கைக்கு.

“உங்க மாமாவ ஏன் திட்டறேன், ஒதுக்கறேன்னு கேக்கறியேம்மா! மனசு வெறுத்துப் போச்சும்மா! தண்ணி போடறவனோட கூட வாழ்ந்துறலாம்! இன்னொருத்திய மனசுல வச்சிருக்கறவன் கூட எப்படிம்மா வாழறது? ஏழையா நான் பொறந்துருக்கலாம்! ஆனா தன்மானம் இருக்கும்மா எனக்கு! இந்தக் கதிரு கூட அந்த விஷயம் எனக்குத் தெரியற முன்னுக்குப் பொறந்தவன்மா! என் வாழ்க்கையின் ஆதாரம் அவன் ஒருத்தன் தான்மா மங்கை”

“என்னை மன்னிச்சிருங்க அத்தை! கல்யாணம் வேணான்னு சொன்னதுக்கு என்னை மன்னிச்சிருங்க! என்னால உங்கள மாதிரி சாமியாரா வாழ முடியாதுத்த! எனக்கு காதல் வேணும்! அதோட இணைஞ்சு வர காமம் வேணும்! சோ, எனக்கு உங்க மகன் வேணா!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் ஃபிரஸ்சாக வெளியே வந்தாள்.

“சீக்கிரமே கல்யாண சாப்பாடு போட்டுருவீங்க சண்மு!”

“என்ன உளறல் இது?”

ரூமின் அழைப்பு மணி மீண்டும் அடித்தது. சண்மு மங்கையின் முகத்தைப் பார்க்க, அவளோ நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

மெல்ல எழுந்துப் போய் பீப் ஹோலில் பார்த்து, பெருமூச்சுடன் கதவைத் திறந்தாள் சண்மு.

உள்ளே வந்த பரமு,

“மம்மவளே!” என வாயை மட்டும் அசைத்தார்.

அவர் பின்னோடு பார்வதி நுழைய, பாருவின் பின்னால் கோபத்துடன் மீனாட்சி வர, அவர் பின்னால் புன்னகை முகமாக உள்ளே நுழைந்தான் கதிர்வேலன்.

(உயிர் போகும்…)