Jte-17
Jte-17
ஜீவன், பவானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். பவானியை பரிசோதித்த மனநல மருத்துவர், இது எப்போதும் ஏற்படுகின்ற மனஅழுத்தப் பகுதிதான், இருந்தும் ஒரு நான்கு நாட்கள் ஆலோசனை வழங்குவதற்காக மருத்துவமனையில் தங்கச் சொன்னார்.
முதல் நாளில் பவானி யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஆலோசனைகளும், மருந்துகளும் தொடர்ந்து வழங்கப்பட்டது.
இரண்டாவது நாளில் பவானி ஆலோசகர்களிடம் பேச ஆரம்பித்தாள். அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொன்னாள். அன்றே தன்னிடமும் பேசுவாள் என்று ஜீவன் எதிர்பார்த்தான். ஆனால் பவானி பேசவில்லை.
முழுநேரமும், ஜீவன் கவனித்துக் கொண்டான். அவன், அவளிடம் உண்பதற்கு, மருந்துகள் உட்கொள்வதற்கு எனப் பேசிக்கொண்டுதான் இருந்தான்.
நாதன் ஒரு நாளில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.
மூன்றாவது நாள்…
நாதன் வந்திருந்தார். ஜீவனை மருத்துவர் அழைத்திருந்தால், நாதன் அறைக்குள் நுழைகையில் ஜீவன் அங்கில்லை.
பவானி விழித்திருந்தாள். நாதன், “பவானி” என்று அழைத்துக் கொண்டு, அவள் அருகில் வந்து அமர்ந்தார்.
அந்த அழைப்பைக் கேட்டுத் திரும்பியவள், “அப்பா” என்று சொல்லி மெதுவாக எழுந்து தலையணையில் சாய்ந்து அமர்ந்தாள்.
நேற்றைய நாட்களை விட, இன்று பவானி முகத்தில் தெளிவு தெரிந்தது. ஆதலால் நாதனின் முகத்தில் நிம்மதி வந்தது.
“இப்போ எப்படி இருக்கு பவானி??” – நாதனின் குரலில் பரிவு இருந்தது.
“ம்ம்ம், பரவால்லப்பா. ஆனா, கொஞ்சம் டயர்டா இருக்கு”
“அது சரியாயிரும்” என்று சொல்லி, அறையில் பார்த்துவிட்டு, “ஆமா, ஜீவன் சார் எங்கம்மா??” என்று கேட்டார்.
“டாக்டர் கூப்பிடறாங்கன்னு சொல்லிட்டுப் போனாங்கப்பா”
“ஓ! அப்டியா”
“அப்பா”
“என்னம்மா?”
“பாலாண்ணா பல்லவி நல்லா இருக்காங்களா??”
பவானி பற்றிய விடயங்கள் கூட வீட்டில் பேசக்கூடாது என்று பாலா சொல்லியது நாதனின் நினைவில் வந்ததால் பதில் இல்லா தருணங்கள் – இவை.
“பவானிம்மா, ஏன் இப்படிப் பண்ண?”
“…. “
“அன்னைக்கு ஜீவன் சார் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு.”
பவானியின் கண்கள் வலப்பக்கம் இடப்பக்கம் போய் வந்து, அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தன.
“நீ… நீ வீட்ல இல்லைன்னு சொன்னதும்… உன்னைக் காணும்னு தெரிஞ்சதும்… துடிச்சுப் போய்ட்டாரு”
“ஓ”
“அந்த மழையிலயும் அவர்தான் உன்னைய அங்க இங்கன்னு தேடி அலைஞ்சாரு”
“பாலாண்ணா பல்லவி தேடலையாப்பா??”
“இல்லைம்மா”
தன் உடன்பிறந்த உறவுகளின் நிலைப்பாடு என்ன என்று பவானி யோசிக்க ஆரம்பித்தாள்.
“எதையும் நீ யோசிக்கக் கூடாது பவானி” – நாதன்.
“ம்ம்ம்” என்று அரை மனதோடு சொன்னாள்.
“அவ்வளவு தேடியும் நீ கிடைக்கலைனதும், ரொம்ப மனசு உடைஞ்சி போய்ட்டாரு”
“ஓ”
“பவானி, ஜீவன் சார்கூட பேசிறியா??”
பவானி மௌனம் பேசினாள். நாதனுக்கு, பவானி மௌனத்தின் அர்த்தம் புரிந்தது.
“பேசுமா. அன்னைக்கு நீ பேசலைன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு”
“என்னப்பா, வந்ததிலிருந்து அவங்களை பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்க”
நாதன் சிரித்தார்.
“அன்னைக்கு நீ சொன்னது சரிதான் பவானி. அவர் நல்லவர்… அப்பா அவரைப் புரிஞ்சிக்கிட்டேன். நீயும் புரிஞ்சுக்கோ. சரியா?”
இப்பொழுது சிரிப்பது பவானியின் முறையாக இருந்தது.
அப்டியே இருவரும் பேச ஆரம்பித்து… வீட்டு நிலவரங்கள், பாலாவின் மகன், பல்லவி , மருமகளின் சமையல் என்று பேச்சுக்கள் போய்க் கொண்டேயிருந்தது.
மருத்துவர் அறையில்…
ஜீவன் அறைக் கதவைத் தட்டியதும்…
“யெஸ் கம் இன்” என்ற குரல் வந்து, அவனை உள்ளே வர அனுமதி அளித்தது.
ஜீவன் உள்ளே நுழைந்ததும்…
“உட்காருங்க” என்றவர் சற்று யோசித்து, “பவானியோட அட்டெண்டர்… கரெக்டா??”
“ம்ம்ம்” என்று ஜீவன் நின்று கொண்டே இருந்தான்.
“பர்ஸ்ட் உட்காருங்க”
ஜீவனும் எதிரில் இருந்த இருக்கையில் அமரந்தான்.
“சாரி உங்க பேரு மறந்திருச்சி??”
“ஜீவன்”
“ஓகே! உங்களுக்கு பவானியோட ஹெல்த் கண்டிஷன் பத்தித் தெரியும்ல??”
“ம்ம்ம், தெரியும். அவங்க அப்பா சொல்லிருக்காங்க”
“தட்ஸ் பைன். லாஸ்ட் டைம் வரும்போது நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருந்தது. பட் திஸ் டைம்… உங்களுக்கே தெரியும்…”
“….”
“அப்போ என்னென்ன பாலோவ் பண்ணீங்களோ, அதே அப்படியே கன்டினியூ பண்ணுங்களேன்… லைக் வாக்கிங்…ஸ்ட்ரீட்ச்சிங்..”
“ஸூயர்”
“இந்த மாதிரி டிப்ரெஸ்ஸன் எபிசோட்ஸ் அடிக்கடி வரும்… போகும். அந்த நேரத்தில கொஞ்சம் கஷ்டப்படுவாங்க… மத்த நேரத்தில நார்மலாதான் இருப்பாங்க. ஸோ டோன்ட் வொரி”
“ம்ம்ம் சரி”
“பவானிக்கு பைபோலார் இருக்குன்னு டயக்னோஸ் பண்ணி ஜஸ்ட் ஒரு எயிட் நயன் மந்த்ஸ்தான் ஆகுது. ஸோ நிறைய கவுன்சலிங் தேவை. உங்களுக்கு மணி ப்ராப்ளம் இல்லைன்னா, கொஞ்சம் அடிக்கடி கவுன்சலிங் கூட்டிட்டு வாங்க”
“கண்டிப்பா டாக்டர்”
“நிறைய பேசுங்க… நம்பிக்கை கொடுங்க…”
“ம்ம்ம்”
“பெட்டர் மேக் எ பிளான். அதாவது… அவங்களோட டெய்லி ரொட்டின்ஸ். காலையில எக்சசைஸ்… தூங்கிறதுக்கு நேரம் ஒதுக்கிறது … ம்ம்ம் அப்புறம் சத்தான உணவுகள்… இப்படி…”
“ஓகே டாக்டர்”
“அதே மாதிரி டிப்ரெஸ்ஸன் எபிசோட்ஸ் அவங்களோட மிஸ்டேக்ஸ, நார்மலா மாறின பிறகு சொல்லிக்காட்டாதீங்க. அது அவங்களை ரொம்ப அஃபக்ட் பண்ணும்”
“ம்ம்ம், ஓகே”
“சப்போஸ் எதுவும் முடியலைன்னு சொன்னாங்கனா… எந்த வேலைனாலும்… விட்டுடுங்க.. போர்ஸ் பண்ணக் கூடாது”
“சரி”
“ம்ம்ம், வேற… முடிஞ்சா, கொஞ்ச நாளைக்கு லோகேஷன் சேஞ்ச் பண்ணிப் பாருங்களேன். அல்ரெடி பவானி அப்பாகிட்ட சொன்னேன். பட் அவரால முடியலை. ஸோ உங்களால முடிஞ்சா பண்ணுங்க”
“பவானிகிட்ட கேட்டுப் பார்க்கிறேன் டாக்டர்”
“ஓகே. தட்ஸ் இட்… வேறெதுவும் கேட்கணுமா?? “
“டாக்டர், டிஸ்சார்ஜ் எப்போ?”
“அதைப் பத்தி, அப்புறம் மத்த டீடெயில்ஸ் எல்லாம் அந்த வார்ட்ல இருக்கிற நர்ஸ் வந்து சொல்லுவாங்க”
“தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லி எழுந்து, விடைபெற்றுக் கொண்டான்.
ஜீவன் மருத்துவர் அறையை விட்டு, வெளியே வந்து பவானி அறையை நோக்கி நடந்தான்.
****
பவானி அறையின் அருகே சென்றதும், ஒரு நடுத்தர வயது செவிலியர் வந்து புன்னகையுடன் நின்றார்.
“என்ன?” என்று ஜீவன் கேட்டான்.
“ஜீவன், நீங்க பவானி டிஸ்சார்ஜ் பத்தி டாக்டர்கிட்ட கேட்டிருந்தீங்களா??”
“ஆமாம்”
“நாளைக்கு காலையில ஒரு கவுன்சலிங் செஷன் இருக்கு. அப்புறம் மத்தியானம் சில டெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிருக்காங்க. ஸோ நாளை மறுநாள் டிஸ்சார்ஜ்… ஓகே”
“ஓகே… பட்” என்று இழுத்தான்.
“சொல்லுங்க”
“என் பேரு ஜீவன். ஆனா நீங்க ஜீவன் சாருன்னு கூப்பிடுங்க, இல்லைன்னா வெறும் சாருன்னு கூப்பிடுங்க”
“!?!?!?”- இது நாமும் செவிலியரும்.
செவிலியருக்கு நன்றிகள்! ஜீவன் சாரின் இந்த வசனத்தை, நாங்கள் கேட்டு எத்தனை நாளாயிற்று தெரியுமா?? – இதுவும் நாம்.
அப்போ! ஜீவன் என்கின்ற அழைப்பு பவானிக்கு மட்டும் கிடைத்திருக்கும் சிறப்பு சலுகை போல!!! – இதுகூட நாம்தான்.
செவிலியர் ஒரு மாதிரி முக பாவனைகளுடன் சென்று விட்டார்.
அந்தநொடி நாதன், பவானி அறையிலிருந்து வெளியே வந்தார்.
ஜீவனும் நாதனும் ஒரு புதிய உறவுக்கான புன்னகையை பகிர்ந்து கொண்டனர்.
“எப்போ வந்தீங்க??” – ஜீவன்.
“கொஞ்ச நேரம் முன்னாடிதான்.”
“சரி, உள்ளே வாங்க.”
“இல்லை… இவ்ளோ நேரம் பவானிகிட்ட பேசிட்டுதான் வரேன்”
இன்று காலையிலிருந்தே பவானி மற்றவர்களிடம் சாதாரணமாகப் பேச ஆரம்பித்துவிட்டாள் என்று ஜீவனுக்குத் தெரியும். தன்னுடன் மட்டும் இன்னும் பேசவில்லையே என்று மனப் பிரதேசம் அழுகின்ற தருணங்கள் – இவை.
“ஜீவன் சார்”
“சொல்லுங்க”
“நிச்சயமா பவானி உங்ககூட பேசுவா. கவலைப்படாதீங்க”
“அவளுக்கு என் மேல கோபம் சார்” என்று மனம் திறந்துபேசினான்.
“ச்சே… ச்சே… பவானிக்கு கோபப்படவே தெரியாது. கோபப்படவும் மாட்டா”
“ஓ! “
“யாரையும் கஷ்டப்படுத்தவே மாட்டா”
“…..”
“யாரையும் அழ வைக்கவும் தெரியாது, சார்”
இது போன்ற வசனங்களை, பவானியின் வாயிலாக ஏற்கனவே கேட்டிருக்கிறோமோ?? ஆம்! அப்பாவும் பெண்ணும் ஒரே மாதிரி பேசுகிறார்கள்!! – இது நாமும் ஜீவனும்.
“விடுங்க நாதன் சார்… பார்த்துக்கலாம்” – ஜீவன்.
“சரி சார். எப்போ டிஸ்சார்ஜ்??”
“நாளைக் கழிச்சிக் காலையில சொல்லியிருக்காங்க”
“அப்படியா” என்று நாதன் யோசித்தார்.
“நானே பார்த்துகிறேன். ஒண்ணும் பிரச்சனையில்லை”
“சரி சார். அப்போ நான் கிளம்புறேன்” என்று சொல்லி, நாதன் ஜீவனிடம் விடைபெற்று, அங்கிருந்து கிளம்பினார்.
ஜீவன் அறையின் உள்ளே வரும்பொழுது, பவானி படுத்திருந்தாள். அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, அவன் எதுவும் பேசவில்லை.
******
அடுத்த நாள், மருத்துவர் சொன்னபடி பவானிக்கு ஆலோசனைகளும் சோதனைகளும் நடந்தன. எல்லாம் முடிந்து பின் அன்றைய இரவில்…
பவானி விழி மூடாமல் விழித்திருந்தாள். ஜீவனும் உறக்கம் வராததால், அலைபேசியில் அலசிக் கொண்டிருந்தான்.
ஜீவனின் அலைபேசியில் இருந்து வரும் அறிவித்தல் ஒலி சத்தம் மட்டுமே கேட்கும் அமைதி நிலவிய தருணங்கள் – இவை.
பவானி படுத்திருந்ததால், அறையின் விளக்கினை ஒளிரச் செய்யாமல்… அறைக் கதவைப் பாதி திறந்து வைத்திருந்தான். நடைக்கூடத்தின் விளக்கினால் அறையில் மெல்லிய வெளிச்சம் பரவியது.
“தூங்கலையா??” என்று கேட்டு, அந்த அறையின் அமைதியை பவானி அழித்தாள்.
அவளின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன், ‘இல்லை’ என்பது போல் லேசாகத் தலையசைத்து விட்டு, திரும்பவும் அலைபேசியில் அமிழ்ந்தான்.
“தூக்கம் வரலையா?” – பவானி.
அவள் கேள்வியைக் கேட்டு, ஒரு பெருமூச்சு விட்டவன் “ஆமாம்” என்று பதில் கூறினான்.
இந்தநொடி பவானி எழுந்து அமர்ந்து விட்டாள். ஜீவனையே பார்த்திருந்தாள்.
“கொஞ்ச நேரம் பேசலாமா??” – பவானி.
“ம்ன்??” என்று கேள்வியாகக் கேட்டவன், பின் ‘சரி’ என்று தலை ஆட்டினான்.
கட்டிலிலிருந்து எழுந்து வரப் போனவளிடம், “நான் அங்கே வரவா??” எனக் கேட்டான்.
‘வேண்டாம்’ எனத் தலையசைத்துவிட்டு, பவானி ஜீவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
“இரு லைட் போடறேன்” என்று எழப் போனவனை, “வேண்டாம், இப்படியே இருக்கட்டும்” என்ற பவானியின் குரல் தடுத்தது.
“ம்ம்ம் சரி” என்று விட்டுவிட்டான்.
பவானி, ஜீவன் கையிலிருந்த அலைபேசியை உருவி, அருகிலிருந்த மேசையில் வைத்தள்.
நான்கைந்து நாட்கள் மௌன மொட்டுக்கள் மட்டும் பூக்கும் நேசச் செடியில், சட்டென்று அதைப பறித்து வார்த்தைச் சரமாகக் கோர்க்க முடியாத தருணங்கள் – இவை.
“பேசமாட்டீங்களா?? என்மேல கோபமா??” – பவானி.
“இது, நான் கேட்க வேண்டிய கேள்வி”
நேசங்களின் மௌன மொட்டுகள் விரிய ஆரம்பிக்கும் ஓசை மட்டும் கேட்கின்ற தருணங்கள் – இவை.
“சொல்லு பவானி, உனக்கு என்மேல கோபமா?”
“ம்ம்ம் ரொம்ப”
“எதனால??”
“அன்னைக்கு ‘நான் வேண்டாம்ன்னு’.. நீங்க சொன்னது … அப்புறம் நிம்மதியில்லைன்னு சொன்னது… அதெல்லாம் பிடிக்கலை” என்று தொண்டைக் கமிறி சொல்லிவிட்டு, பவானி வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
ஜீவன், பவானியின் நாடியைப் பிடித்து தன்புறமாகத் திருப்பினான்.
வலி அம்புகள் எய்தி, இருவரின் விழிகளும் சந்தித்தன.
அந்த அறையின் கைக்கடிகாரத்தின் வினாடி முள் இரண்டு முறை நகர்ந்த பின்பு… வலி பேசிய விழிகள், விருப்பங்களைப் பேச ஆரம்பித்தன. இருவரின் விழிகளிலும் ஒரு விருப்பமான புன்னகையுடன் பார்த்தன.
“என்ன அப்படிப் பார்க்கிறீங்க?” – பவானி.
“ப்ச், அழறியோன்னு நினைச்சேன்”
“நான் அழுதாதான், உங்களுக்குப் பிடிக்காதே. அதனால அழ மாட்டேன்” என்று குரலில் புன்னகை இழைந்து மொழிந்தாள்.
“நல்ல முடிவு” என்று முறுவலித்துக் கொண்டே ஜீவன் சொன்னான்.
நிசப்தம் நிலவியது!
“பவானி”
“சொல்லுங்க ஜீவன் சார்”
“நீ ஜீவன்னு கூப்பிடலைன்னாலும் பரவால்ல, தயவுசெஞ்சி இப்படிக் கூப்பிடாத. சரியா?”
“சரி சொல்லுங்க”
“நீ ஏன் இப்படிப் பண்ண?”
“எப்படி?”
“ப்ச் தெரியாத மாதிரி கேட்காத. அதான் இப்படித் தனியா போய்…”
“அன்னைக்கு நீங்க அப்படிச் சொல்லிட்டுப் போனீங்கள… அதுக்கு அடுத்த நாள் காலையில டீ குடிக்கிறதுக்காக பெஞ்சில வந்து வெயிட் பண்ணேன்”
“சரி”
“ஆனா, நீங்க வரலை… திரும்பவும் கோபம் வந்தது”
‘வெயிட் பண்ண வைக்கிறதுப் பிடிக்காது’ என்று பவானி சொன்னது, ஜீவனுக்கு நியாபகம் வந்தது.
“சரி, நீங்க சொன்ன மாதிரி தனியா உட்கார்ந்து யோசிச்சுப் பார்க்கலமேனு நினைச்சேன். அதான் அங்கே போனேன்”
“ஓ”
“பட் அதுக்கு அப்புறம்… தனியா இருந்தது… மழை… காடு… நீங்களும் கூட இல்லையா… எல்லாம் சேர்ந்து பயமா இருந்துச்சு… மனசு ஒரு மாதிரி…” என்றவள் வார்த்தைகள் பிறழ ஆரம்பித்தன.
“அது எதுக்கு பவானி?? அதெல்லாம் வேண்டாம். விட்ருவோம்” என்று சொல்லி, ஜீவன் தன் கைவளைவுகளுக்குள் பவானியைக் கொண்டு வந்து, அவள் தோள்களில் ஒரு சிறு அழுத்தம் கொடுத்து விடுவித்தான்.
நேசத்தின் பரிதவிப்புகள் பகிரப் படும்போது, பாசங்கள் பன்மடங்காகுமோ?? இங்கே அது நடந்தது.
“நீங்க ஏன் டீ குடிக்க வரலை??” – பவானி.
“தூங்கிட்டேன் பவானி”
“எப்படி இப்படிச் சொல்ல முடியுது??”
“ப்ச்… நைட்டு புஃல்லா உன்னை நினைச்சிக்கிட்டே இருந்தேனா… ஸோ தூக்கமே வரலை. அதான் காலையில தூங்கிட்டேன்.”
பவானி கண்கள் சுருக்கிக் கோபத்துடன், ஜீவனைப் பார்த்தாள்.
“பட் எந்திரிச்சவுடனே உன்னைய பார்க்கத்தான் வந்தேன். அதுக்குள்ள நீ…”
பவானியின் கண்கள் ஜீவனின் பதிலை நம்பவில்லை என்று தெரிந்தது.
“நிஜமா பவானி. நீ வேணா உங்க அப்பாவைக் கேட்டுப் பாரு”
நாதன் சொல்லிய விடயங்கள் நினைவில் வந்ததால், பவானியின் கண்களில் கோபம் குறைய ஆரம்பித்தது.
“ஆமா, தனியா உட்கார்ந்து என்ன யோசிச்ச?” – ஜீவன்.
“என்னைப் பத்தி”
“ஓ! “
“உங்களைப் பத்தி”
“ம்ம்ம்”
“நம்மளைப் பத்தி”
“யோசிச்சு என்ன முடிவு எடுத்த?”
“யோசிச்சு, யோசிச்சு முடிவ மாத்திற விஷயம் இல்லை இது. என்னால மாற முடியலை” என்று இலக்கற்ற பார்வைகளில் சொன்னவள், “என்ன பண்ண?” என்று ஜீவன் விழிகளைப் பார்த்து, அவன் இதயத்திடம் கேட்டாள்.
“நானே என்னோட முடிவை மாத்திக்கிறேன்”
“திரும்பவும் இந்த முடிவுல இருந்து மாற மாட்டிங்கள?”
பவானியின் கரத்தைப் பிடித்து, அவள் உள்ளங்கையில் தன் கையை வைத்து சத்தியம் செய்து, “சத்தியமா மாற மாட்டேன்” என்று சொன்னான்.
அக்கணம் பவானியின் பார்வை, ஜீவனின் கைகளில் படர்ந்தன. பின், அவனது கையினை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள்.
“கையில என்னாச்சு?” – பவானியின் குரலில் பதற்றம் இருந்தது.
“ப்ச், அது உன்னயத் தேடிப் போகிறப்போ அடிபட்டிருச்சி”
“பார்த்துப் போயிருக்கலாமே”
“அந்த நேரத்தில எதுவுமே தோணலை பவானிம்மா. நீ கிடைச்சா போதும்னு இருந்திச்சு”
“மருந்து எதுவும்?”
“ஆங், இங்க வந்தப்போ நர்ஸ் ஆயின்மென்ட் கொடுத்தாங்க”
“இப்போ போட்டீங்களா??”
‘இல்லை’ என உடல் மொழியால் பதில் வரைந்தான்.
“எங்க இருக்கு?”
ஜீவன் கண்களால் மேசையின் மீதிருக்கும் களிம்பினைக் காட்டினான்.
எம்பி அதை எடுத்தவள், அவன் கைகளில் சிராய்ப்புகள் இருக்கும் இடமெல்லாம் மென்மையாக மருந்தினைப் போட்டு விட்டாள். பின் கீழே உள்ள வாக்குறுதி தந்தாள்.
“இனிமே இப்படிப் போக மாட்டேன். சரியா??”
“ம்ம்ம்”
“அதேமாதிரி நீங்களும்… நீங்களும்” என்று உணர்ச்சிவசப்பட்டு வாக்கியத்தை முடிக்க முடியாமல் நிறுத்தி விட்டாள்.
“சாரி பவானி. நான் அப்படிப் பேசியிருக்க கூடாது. இப்ப சொல்றேன்… உன்னைய விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். போகவும் முடியாது” என்ற தன் வாழ்க்கைகான முடிவைத் தெரிவித்தான்.
அகமகிழ்ந்து, மென் கீற்றாய் புன்னகை சிந்தி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பவானி, ஜீவனின் விழிகளைப் பார்த்துக் கொண்டே, காயங்களில் மருந்து போடா ஆரம்பித்தாள்.
“பவானி”
“சொல்லுங்க”
“காயத்தை தவிர, கைல மத்த எல்லா இடத்திலயும் மருந்து போடற” என்று அவளின் நேசத்தின் மோன நிலையை நய்யாண்டி செய்தான்.
சட்டென பவானியின் கண்கள், ஜீவன் கைகள் நோக்கிச் சென்றன.
பவானி, “ச்சே” என்று சொல்லி எழுந்து, களிம்பினை மேசையின் மீது வைத்துவிட்டு, கை கழுவிவிட்டு வந்தாள்.
“ஏன் பவானி? இதான் உங்க ஊர்ல கோபமா இருக்கிறதா?” என்று அவள் மருந்து போட்டுவிட்டக் காயங்களைக் காட்டினான்.
“ஜீவன் சார்” என்ற அழைப்பைச் சொல்லி மிரட்டினாள்.
“வேண்டாம் பவானி. நான் எதுவும் சொல்லலை” என்று நய்யாண்டி செய்வதிலிருந்து நழுவிக் கொண்டான்.
மறுபடியும் பவானி, ஜீவன் அருகில் வந்து அமர்ந்தாள். ஜீவனுக்கு மருத்துவர் சொல்லிய இடமாற்றம் நியாபகத்தில் வந்தது. எனவே கீழே உள்ள கேள்வியைக் கேட்டான்.
“பவானி, நாம ரெண்டு பேரும் வேற ஊருக்குப் போகலாமா?”
“ம்ம்ம் போகலாம். ஆனா… ” என்று தயங்கினாள்.
“என்ன ‘ஆனா’??”
“டிவோர்ஸ் முடிஞ்சதுக்கப்புறம் போகலாம். சரியா?”
“சரி”
“ஏன்னா?” என்று கேள்வியாய் ஆரம்பித்தவளிடம்…
“சரின்னு சொன்னா விடு பவானி” என்று முடித்தான்.
“நான்தான் உங்க மேல கோபமா இருக்கேன். நீங்க கிடையாது”
“அடிக்கடி சொல்லிக்கோ… இல்லைன்னா மறந்திடப் போற” என்று சொல்லிச் சிரித்தான்.
பவானியும் சிரித்தாள்.
புத்துயிர் பெற்ற நேசத்தை நினைத்து அடிக்கடி சிரிக்கிறார்கள் போல!! – நாம்.
“எனக்கு ஒண்ணு தெரியணும்” – பவானி.
“என்ன?” – ஜீவன்.
“என்மேல இருக்கிறது பரிதாபம் இல்லைல” என்று தயக்கம், வருத்தம், ஏக்கம், ஆசை என அத்தனை உணர்வுகளில் குவியலுடன் பவானியின் குரல் இருந்தது.
“இன்னும் இந்த சந்தேகம் இருக்கா??” – ஜீவனின் குரலில் ஆச்சிரியம் இருந்தது.
“ஆமா, அது தெரியலைன்னா… ஒரு மாதிரி குழப்பமா…மனசு… எப்படிச் சொல்றதுன்னு தெரியல”
“ஓகே, நீ ரிலாக்ஸா இல்லைன்னு தெரியுது. ஸோ பவானி…” என்று ஆரம்பித்தவனிடம்…
“வேண்டாம்… நீங்க இந்த ஜோக் கேம் அப்டின்னு ஏதாவது சொல்லக் கூடாது” என்று முடித்தாள்.
“இது வேற பவானிம்மா”
“வேறயா??”
“ம்ம்ம்”
“என்னது??”
“டங் ட்விஸ்ட்டர் தெரியும்ல”
“தெரியும். அதுவா?”
“இல்லை. அதுமாதிரி ஒண்ணு”
“ஓ”
“நான் சொல்வேன். அதுலே உனக்குத் தெரிஞ்சிடும், நான் உன் மேல வச்சிருக்கிறது பரிதாபமா?? இல்லை…இல்லை…” என்று இதயத்தைப் பற்றிச் சொல்லாமல் இழுத்தான்.
“போதும் சொல்லுங்க”
“பட் ஒரு கண்டிஷன்”
“என்ன?”
“நான் சொன்னதுக்கு அப்புறமா நீயும் சொல்லணும்”
“அதெல்லாம் முடியாது”
“கண்டிப்பா சொல்லணும். ஓகே ஸ்டார்ட் பண்றேன்” என்றவன் ஒரு முறை கண்கள் மூடித் திறந்து கொண்டான்.
பவானியின் வலக்கரம் எடுத்து, தன் இடப்புறம் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு…
“அனர்த்தம் என்ற சொல்லில் இருக்கும் அர்த்தமாய்
எனக்குள் நீ…
அசௌகரியம் என்ற சொல்லில் இருக்கும் சௌகரியமாய் உனக்குள் நான்” என்று ஜீவன் சொன்னான்.
ஜீவன் சொன்னதன் பொருள் புரிந்து, பவானி மௌனம் காத்தாள்.
ஜீவனின் இதயத்துடிப்பை பவானியின் கை விரல்களும், பவானியின் நாடித் துடிப்பை ஜீவனின் இதய அறைகளும் கேட்கும் தருணங்கள் – இவை.
“புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறன். இப்ப நீ சொல்லு”
சட்டென்று கையை உருவிக் கொண்டு, “அதெல்லாம் புரியலை” என்று உள்ளம் உணர்ந்தும் கள்ளம் உரைத்தாள்.
“ஏன்?”
“ஏன்னா?? ஏன்னா??” என்று யோசித்தாள்.
“ஓ! நீ பி ஏ இங்கிலிஷ்ல!! அதனால இருக்குமோ??”
“ஆங், அப்படியும் இருக்கலாம்” என்று தலையை நன்றாக ஆட்டினாள்.
“நம்பிட்டேன் பவானி”
நேயத்தின் புதுச்சேதி உரைத்திட்ட மகிழ்ச்சியின் ஜீவனின் உள்ளமும், அச்சேதி கேட்டு ஊஞ்சலாடும் பவானியின் உள்ளமும்… துள்ளிக் கொண்டிருக்கும் தருணங்கள் – இவை.
“டீ குடிக்கலாமா??” – பவானி.
“பேச்சை மாத்திற”
“அப்படியெல்லாம் இல்லை, ரொம்ப நாளாச்சு. அதான் கேட்டேன்”
“ஆனா இப்பவா??”
“ம்ம்ம்”
“சரி நான் போய் வாங்கிட்டு வாரேன்” என்று எழுந்தான்.
“ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி எழுந்தவள், தன் கட்டிலில் அருகே இருந்த மேசையிலிருந்து பன்னிரண்டு ரூபாய் எடுத்து வந்தாள்.
“இந்தாங்க” என்று நீட்டினாள்.
“இப்போ எதுக்கு இது??” என்று ஜீவன் வாங்க மறுத்தான்.
“என்னமோ புதுசா வாங்கிற மாதிரி பீல் பண்ணறீங்க” என்று சொல்லி, அவன் கையினுள் திணித்தாள்.
“ஓ! நீ என் மேல கோபமா இருக்கிற. அதான் இப்படி!! கரெக்டா?”
“ஆங், ஆமாம்”
“இதுவும் நல்லாயிருக்கு” என்று சிரித்தவன், “வெயிட் பண்ணு, வாங்கிட்டு வரேன்” என்று திரும்பி நடந்தான்.
ஜீவன் பாசத்திற்கான அடையாளமாய் சொன்னதை நினைத்து, பவானி சிரித்துக் கொண்டாள்.
வாசல் வரைச் சென்றவன்…”பவானி” என்று அழைத்தான்.
“என்ன?” என்று சிரிப்பைத் துடைத்து விட்டுக் கேட்டாள்.
“என்னைக்காவது, நான் சொன்னதை நீ சொல்லியே ஆகணும்” என்று அன்பின் குரலில் ஆணையிட்டான்.
ஏனோ! பவானி மனதில் நேயத்தின் கூச்சங்கள் அதிகமாயின.
ஜீவன் தேநீர் வாங்கி வந்தான். வெகு நாட்களுக்குப் பிறகு, இருவரும் அருகருகே அமர்ந்து தேநீர் பருகினர்.
அறைக் கதவின் வழியே வந்த, அரை ஒளி வெளிச்சத்தில் அந்தக் காட்சி அருமந்த அழகு – நாம்.
*****
அடுத்த நாள், பவானி மருத்துவமனையில் இருந்து மலைப்பிரதேசம் நோக்கிப் புறப்பட்டாள்.