UUP–EPI 15

அத்தியாயம் 15

ப்ரோஸ்தாக்ளான்டின்ஸ் (prostaglandins) எனப்படும் ஹார்மோன் தான் நமக்கு காயமோ, உடல் சரி இல்லாமல் போனாலோ குணமடைய உதவுகிறது. உடலின் டிஷூ பழுதடையும் போது இந்த ஹார்மோன் நமக்கு வலி வர வைத்து, காய்ச்சலை ஏற்படுத்தி சீக்கிரமாக காயம்பட்ட இடத்தை குணமடைய வைக்கிறது.

அன்று

பரிட்சை ரிசால்ட் வந்திருந்தது. கதிர் பள்ளியின் எதிர்பார்ப்பை ஏமாற்றி ஸ்டேட் செகண்ட் வந்திருந்தான். சண்முவை உருகி உருகி சைட் அடிக்காமல் இருந்திருந்தால் ஃபர்ஸ்டாக வந்திருப்பானோ என்னவோ! சண்முவோ எல்லோரும் எதிர்பார்த்தப்படி ஃபெயில் ஆகாமல், பார்டரில் பாஸ் ஆகி இருந்தாள்.

இத்தனை வருடங்களில் கதிர்தான் இந்தளவு மார்க் எடுத்து ஊரின் பெயரை பெருமை அடைய செய்தவனாவான். அதனால் ஊரே அவனை கொண்டாட, பார்வதியைக் கையில் பிடிக்க முடியவில்லை. ஊருக்கே லட்டு வாங்கி கொடுத்து தடபுடல் பண்ணி விட்டார் அவர். பரமுவோ இன்னும் ஒரு படி மேலே போய், பார்வதி சந்தோஷத்தில் ஏமாந்திருந்த சமயம் பார்த்து பீரோவில் ஒரு கட்டு பணத்தை அடித்து தாஸ்மாக் மக்களுக்கு ஃப்ரீ ப்ளோ சரக்கு, ஊறுகாய் பாக்கேட்டோடு கொடுத்து அதகளம் செய்து விட்டார். 

ஃபர்ஸ்ட் வர முடியவில்லை என இவன் கொஞ்சம் சோகமாக இருக்க, சண்முவோ தான் பாஸ் ஆகி விட்டதை நினைத்து குதூகலமாக இருந்தாள். எப்படியும் இனி படிக்க போக முடியாது என அவளுக்குத் தெரியும். ஆனாலும் இவ்வளவு வேலை பளுவுக்கு நடுவில் பாஸ் ஆகி இருந்ததே அவளுக்கு போதுமானதாக இருந்தது. பகுதி நேரமாக கண்டிப்பாக படிக்க வேண்டும் என மனதில் உறுதி பூண்டிருந்தவள் வருவது வரட்டும் என வாழ்க்கையை எதிர் நோக்க ஆயத்தமாகி இருந்தாள்.

நண்பன் பாஸ் ஆனதை கொண்டாட, தன் கையாலேயே கோதுமை அல்வா செய்து எடுத்துக் கொண்டு ஆலமரத்தடி நாடிப் போனாள். ஏற்கனவே இன்று சந்திக்கலாம் என பேசி வைத்திருந்தார்கள் இருவரும். இவள் அவ்விடத்தை அடையும் முன்னே, கதிர் வந்து காத்திருந்தான். இவளைப் பார்த்ததும் பெரிதாக புன்னகைத்தான் அவன்.

அவள் வாய் திறந்து வாழ்த்தும் முன்னே இவன் வாழ்த்தி இருந்தான் சண்முவை.

“காங்கிராட்ஸ்டி பாஸ் பண்ணதுக்கு!”

“அட போடா ஸ்டேட் செகண்ட்! வெறும் பாஸ்க்கு போய் வாழ்த்தா?” என சிரித்தாள் சண்மு.

“நான் நல்ல மார்க் வாங்கனது எல்லாம் மேட்டரே இல்லடி! முதுகு ஒடிய தோட்டத்துலயும் வேலைப் பார்த்து, வீட்டு வேலையும் செஞ்சு, ஸ்கூல் பாடமும் படிக்கற உன்ன மாதிரி பொண்ணுங்க ஜஸ்ட் பாஸ் ஆகறது கூட பெரிய சாதனைதான்! நீ கிரேட் சம்மு”

“ஹ்கும் போடா! என்னைய விடு! உன் விஷயத்துக்கு வரலாம்! மை பெஸ்ட் ப்ரேண்ட் ஒன்ரைகண்ணன் கதிருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்! இதே போல வாழ்க்கையில எல்லாமே உனக்கு சக்சஸா அமையனும்! ஆஹா ஒஹோன்னு நீ வாழனும்! இப்ப வாயத் திறடா கதிரு”

எடுத்து வந்திருந்த அல்வாவை தன் கையாலேயே ஊட்டி விட்டாள் சண்மு. அதை ஆசையாய் சாப்பிட்டான் கதிர்.

“நீயும் ஆ காட்டு!” என சொல்லி இவனும் அவளுக்கு ஊட்டி விட்டான். அமைதியாக சாப்பிட்டார்கள் இருவரும்.

கதிரின் மனதிலோ வெற்றி அடைந்ததில் ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், இனி தங்கள் வாழ்க்கைப் பயணம் எப்படி போகும் என ஒரு பக்கம் பயமும் இருந்தது.

சம்முவிடம் காதல் சொல்ல வந்து மனம் கணக்க திரும்பிப் போன தினம் கண் முன்னே நிழலாடி அவனை கலக்கமடைய வைத்தது.

“சம்மு என் ப்ரெண்ட் ரகுராம உனக்குத் தெரியும்தானே?”

“யாருடா? சோடாபுட்டி ஒருத்தன், எலும்புக்கூடுக்கு சட்டை மாட்டி விட்ட மாதிரி இருப்பானே அவனா?”

“ஆமா அவன் தான்! என் சைஸ்ல இருக்கற அவன் எலும்புக் கூடுன்னா, என்னை என்னடி சொல்லுவ?”

“சேச்சே! நீ அவன் மாதிரி எலும்புக் கூடு இல்லடா கதிரு! நல்லா சதை போட்டு திடகாத்திரமா நடிகர் சரத்குமார்கு சித்தப்பா மகன் மாதிரி இருக்க!”

“நெஜமாவாடி?”

“எங்காத்தா ஜெவப்பாயி மேல ஜத்தியமாடா!” என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள் சண்மு.

“போடி! எங்கப்பாவ கலாய்க்கலனா உனக்கு தூக்கம் வராதே! சரி நான் சொல்ல வந்த விஷயத்தக் கேளு!”

“சட்டு புட்டுன்னு சொல்லு கதிரு! வீட்டுல வேலைக் கிடக்கு.”

“ஹ்ம்ம் சரி! ரகுராம் இருக்கான்ல அவனும் என் கிளாஸ்ல படிக்கற இன்னொரு பொண்ணும் பெஸ்ட் ப்ரேண்ட்ஸ்! போக போக எப்படியோ நட்பு காதலா மாறிடுச்சாம்! அந்தப் பொண்ணு கிட்ட பயப்படாம லவ்வ சொல்லிட்டான்! அவளும் அக்செப்ட் பண்ணிகிட்டா சம்மு. இப்போ ரகுராம்,  

காதல் காதல் காதல்

என் கண்ணில் மின்னல் மோதல்னு

பாடிட்டு திரியறான்! எனக்கு இந்தக் காதல் சமாச்சாரம்லாம் என்னன்னு கூட தெரியாதுடி சம்மு! காதல பத்தி கதை கதையா சொல்லுறான் ரகுராம். நானும் ஒன்னுமே புரியாம பேக்கு மாதிரி கேட்டுட்டு இருக்கேன்! உனக்கு காதல பத்தி தெரியுமா சம்மு? சொல்லேன் காதல்னா என்ன?”

காதலைப் பற்றி அவன் பேச ஆரம்பித்ததில் இருந்தே முகம் மாறி இருந்தவள் வெறுப்புடன், அவர்கள் கழட்டிப் போட்டிருந்த செறுப்பை சுட்டிக் காட்டி,

“காதல்னா செருப்புடா கதிரு!” என சொன்னாள்.

கதிருக்கு ரகுராம் என ஒரு நண்பன் இருந்தான் தான். ஆனால் அவனுக்கு இட்லிக்குத் தொட்டுக் கொள்ள கார சட்னி ஓகேவா, அல்லது தேங்காய் சட்னி ஓகேவா எனும் ரேஞ்சுக்கு தான் சிந்தனை இருக்கும். அந்த அப்பாவியை காதல் மன்னன் ரேஞ்சுக்கு கதை ஜோடித்து, சண்முவின் மனதில் காதலைப் பற்றிய அபிப்பிராயம் என்ன என அறிந்துக் கொள்ள முயன்றான் கதிர். கட்டுக்கதை புனைந்தவனுக்கு அவள் பதில் பேரதிர்ச்சியாக இருந்தது. பேவென விழித்த கதிர் எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.

“ஏன்டி அப்படி சொல்லற?”

“என்னத்த சொல்லிட்டாங்க?”

“ரகுராம் என்னடான்னா காதல் கற்பக்கிரகத்துல இருக்கற சாமி சிலை மாதிரி தெய்வீகம்னு பேசறான்! நீ என்னடானா கோயில் வாசல்ல கழட்டிப் ஓடற செருப்பு மாதிரின்னு சொல்லற!”

சற்று நேரம் அமைதியாக காற்றில் ஆடும் மரத்தின் இலைகளை வேடிக்கைப் பார்த்தவள்,

“கதிரு! நாம புதுசா ஒரு செருப்பு வாங்கறப்போ சந்தோசமாத்தான்டா அதைப் போட்டுட்டு சுத்துவோம்! அந்த செருப்பும் நாள்தோறும் போட்டு நடக்க தேஞ்சி போயிரும். உடனே அத கழட்டிப் போட்டுட்டு இன்னொன்னு வாங்கிடுவோம்! அதே மாதிரிதான் காதலும். அது வரப்போ சந்தோஷமாத்தான் இருக்கும். செருப்பு போட்டு நடக்க நடக்க தேஞ்சு போகிற மாதிரி காதலும் செய்ய செய்ய தேஞ்சி மறைஞ்சு போயிரும்டா! அதுக்கு அப்புறம் அடுத்த செருப்பு வாங்க போய்டுவாங்க”

“சீச்சீ! என்னடி கன்றாவி விளக்கம் இது?”

“என்ன கன்றாவி? எனக்கு யாரையும் காதலிச்ச அனுபவம் இல்லைனாலும், காதலிச்சவங்க கூட தினம் தினம் வாழ்ந்து அவங்க பட்ட கஸ்டத்தப் பார்த்த அனுபவம் இருக்குடா! எங்கம்மாவும் ஓடிப் போன எங்கப்பாவும் காதலிச்சவங்கதான்! விஷயம் வீட்டுல தெரிஞ்சு பெரியவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வச்சாங்க! எங்கம்மா வீட்டுல கஸ்ட ஜீவனமா இருந்தாலும் மக ஆசைப்பட்டுட்டான்னு கடனவுடன வாங்கி முடிஞ்ச அளவுக்கு எல்லாம் செஞ்சு தான் கட்டிக் குடுத்தாங்க! அந்த தெய்வீக காதல் எங்க போச்சு? எங்கம்மா ரெண்டு குட்டிப் போட்டதும் பறந்துப் போச்சு!” என கையை விமானம் பறப்பது போல செய்து காட்டியவள் விரக்தியாக சிரித்தாள்.

“தினம் ராத்திரி வாயப் பொத்திக்கிட்டு, எங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு அவங்க மௌனமா அழறத பார்க்கற கொடுமை இருக்கே! அதெல்லாம் சொல்லி புரியாதுடா கதிரு! அனுபவிச்சுப் பார்க்கறவங்களுத்தான் புரியும்! காதலாம் கத்திரிக்காயாம்! நான் ஒன்னு சொல்லறேன் கேப்பியாடா?”

“ஹ்ம்ம் சொல்லு!”

“அந்த பரதேசி ரகுராம் ப்ரென்ஷிப்ப கட் பண்ணு முதல்ல! இல்லைனா நீயும் அந்த டாக் மாதிரி உருப்படாம போய்ருவ! பெஸ்ட் ப்ரெண்ட லவ்வறானாமா? அதுக்கு அவளும் ஒத்துக்கிட்டாளாமா? எடு அந்த தேஞ்சு போன செருப்ப! ப்ரெண்ட்ஷிப்னா நம்ம மாதிரி இருக்கனும்டா! அதுங்களது எல்லாம் நட்பு இல்ல! நட்புன்ற பேருல வேற என்னமோ கர்மம்!”

தோழி தங்கள் நட்பு மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து மனம் கூசிப் போனான் கதிர். அவள் நட்பாய் இருக்க, தான் மட்டும் எங்கே தவறினோம் என மனம் அடித்துக் கொண்டது. திருத்திக் கொள்ள கூடிய தவறா இது? மனம் அவளை நாடி விட்டதே! காதல் வேண்டாம், இனி நட்பு மட்டும் போதும் என பழைய படி யூ டர்ன் அடிக்க முடியுமா? சத்தியமாக முடியாது என மனம் கூக்குரலிட்டது!

“அப்போ நீ யாரையும் லவ் பண்ண மாட்டியாடி?”

“மாட்டேன்! எங்கம்மா யார கல்யாணம் செய்ய சொல்றாங்களோ அவன கட்டிக்குவேன்! எனக்கு துணையா வரப் போறவன் மேல எனக்கு பெரிய எதிர்ப்பார்ப்புலாம் இல்லடா! நிலையான வேலையில இருக்கனும்! இன்னொருத்திய தேடி போக கூடாது! அது போதும்டா எனக்கு” தனது அப்பாவின் துரோகம் ஏற்படுத்திய ரணம் சண்முவை அப்படி பேச வைத்தது.

அமைதியாகவே அவள் முகத்தைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் கதிர்.

மெல்ல புன்னகைத்தவள்,

“இன்னும் ஒன்னு இருக்கு!” என்றாள்.

“என்ன சம்மு?”

“எனக்கு வர போறவன உனக்கும் பிடிக்கனும்! யார் எனக்கு பொருத்தமா இருப்பான்னு உன்னைத் தவிர வேற யாருக்கு நல்ல தெரிஞ்சிற போகுது!” என சொல்லி கள்ளமில்லாமல் சிரித்தாள் சண்மு.

அப்பொழுது முடிவெடுத்தான் கதிர், தான் சொந்தக் காலில் நிற்கும் வரை காதலை மனதில் பூட்டி வைப்பது என.

தனது நினைவலைகளில் இருந்து மீண்டவன், டப்பாவை மூடி எழுந்து நின்றிருந்த சண்முவைப் பார்த்தான்.

“கிளம்பிட்டியாடி?”

“ஹ்ம்ம் ஆமா!”

“நான் வேணும்னா மீனாம்மா கிட்ட வந்து மறுபடியும் பேசி பார்க்கவாடி?”

“எத்தனை தடவைத்தான் வந்து சம்முவ படிக்க வைங்கன்னு கெஞ்சுவடா நீ? பணம் இருந்தா படிக்க வைக்க மாட்டாங்களா அவங்க! விடுடா டேய்! எனக்கு எழுதி வச்சப்படி நடக்கட்டும்”

பார்வதியிடம் சண்முவைப் படிக்க வைக்க பணம் கேட்டு பயங்கரமாக வாங்கிக் கட்டி இருந்தான் கதிர். தோழியைப் படிக்க வைக்க அவனும் பணத்துக்கு எங்குதான் போவான்! நல்ல மார்க் எடுத்திருந்தாலாவது எதாவது ஸ்காலர்ஷிப்கு ட்ரை செய்யலாம். அதோடு படிக்க வைக்க யாராவது முன் வந்தாலும், மீனாட்சி அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே. சண்முவை வேலைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க முடிவெடுத்திருந்தவர் அதில் நிலையாய் நின்றார்.

“என் கிட்ட காசு இருந்தா உன்னை கஸ்டப்படவே விடமாட்டேன்டி!”

“இப்போ எதுக்கு இந்த பீலிங்ஸ்? நீயும் என்னை மாதிரி அம்மா நிழலுல தான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்க! அவங்க ஆசைப்படற மாதிரி சென்னைக்குப் போய் ஒழுங்கா ஒரு டிகிரிய முடி! அப்புறம் நீ ஆசைப்படற மாதிரி போலிஸ் ஆகற வழிய பாரு! இங்கிருந்து நீ போய்ட்டா, கண்டிப்பா நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேண்டா கதிரு!”

திடமாக ஆரம்பித்தவள், மெல்ல விசும்பினாள்.

அவளை நெருங்கி பட்டும் படாமல் அணைத்துக் கொண்டான் கதிர்.

“என் கஸ்டத்த, என்னோட இஸ்டத்த, உள் மனசின் கவலைய, சந்தோசத்த, கோபத்த, கட்டுக்கடங்காத ஆனந்தத்த இப்படி எல்லாத்தையும் நான் ஷேர் பண்ணிக்க நீ ஒருந்தன் கூடவே இருக்கவும் தான் இத்தனை வருஷத்த நான் கடந்து வந்துருக்கேன்! இனிமே கொஞ்சம் கஸ்டம்தான். ஆனாலும் கடந்துதான் ஆகனும்! உன் முன்னேற்றத்துக்கு தடையா என் நட்பு நடுவுல வரக்கூடதுடா! வரவும் விட மாட்டேன்! நல்ல படியா படிச்சு முடிச்சு போலிஸ் ஆபிசரா என் முன்ன வா!” என சொல்லியவள் அவனை விட்டு விலகி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

இவனுக்கும் துக்கத்தில் தொண்டைக் கட்டிக் கொண்டது.

“சம்மு! நான் கொஞ்ச நாளுல படிக்க போயிட்டா பத்திரமா இருந்துப்பியா?”

“இருந்துப்பேன்”

“உடம்ப நல்ல பார்த்துப்ப்பியா?”

“பார்த்துப்பேன்”

“கரெக்டா சாப்பிடுவியா?”

“சாப்டுப்பேன், ரெண்டு வேளை பல்ல வெளக்கிப்பேன், தவறாம சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சி குளிச்சிப்பேன், நைட் கண்டிப்பா தூங்கிப்பேன்! இன்னும் எதாச்சும் விட்டுட்டேனா?” என சூழ்நிலையை சகஜமாக்க கிண்டலில் இறங்கினாள் சண்மு.

“போடி! நல்லதுக்கு சொன்னா கிண்டல் அடிக்கற!”

“சும்மாடா கதிரு! நான் நல்லபடி இருந்துப்பேன். என் கூட எல்லாரும் இருக்காங்க! நீதான் தனியா போக போற! தண்ணி, சிகரேட், சைட்டடிக்கறது இப்படிலாம் இறங்காம நல்லா படி! புரியுதா?”

“ஹ்ம்ம்! சம்மு!”

“என்னடா?”

“எனக்குத் தெரியாம உன் வாழ்க்கையில எதுவும் நடக்கக்கூடாது! அதாவது பெரிய விஷயத்திலெல்லாம் என் கிட்ட சொல்லாம முடிவு எடுக்கக்கூடாது! சரியா?”

“புரியல!”

“ஹ்ம்ம்! கல்யாண மேட்டர்டி! நான் மாப்பிள்ளைய ஓகே பண்ணற வரை கல்யாணம் செஞ்சிக்க மாட்டல்ல சம்மு?”

“மாட்டேன்டா”

“சத்தியமா?” கையை நீட்டினான்.

“சத்தியமாடா!” என அவன் கையில் அடித்து உறுதி கொடுத்தாள் சண்மு.

அவனுக்குத் தெரிந்த அளவில் தன் தோழி மாற்றான் மனைவியாக ஆகாமல் இருக்க வழி செய்து விட்டு, சில மாதங்களில் எஞ்சினியெரிங் படிக்க ஆபர் வர சென்னைக்குப் புறப்பட்டான் கதிர்.

இன்று

அந்த திடீர் திருமணத்தில் வாயடைத்துப் போய் நின்றிருந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் ஆக்ரோஷமாகி இருக்க மற்றவர் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தார்.

மீனாட்சி கோபத்தில் கண்ட மாதிரி கத்த,

“அத்தை! இதுக்கு முன்ன என்னன்னவோ வார்த்தைங்கள வச்சி சம்முவ திட்டுனீங்க! உங்க மகளாச்சேன்னு கோபத்தை அடக்கிப் பொறுத்துக்கிட்டேன்! இப்போ நீங்க திட்டறது உங்க மகள இல்ல, என்னோட மனைவிய! இனிமேலும் இதெல்லாம் என்னால பொறுத்துக்க முடியாது! ட்ராவல்ல கார் அரேஞ் பண்ணியிருக்கேன்! ஹோட்டல் எண்ட்ரண்ஸ்ல காத்துட்டு இருக்கு! நீங்க கிளம்பி ஊர பார்க்க போங்க! நாங்க ஓன் வீக் கழிச்சுத்தான் வருவோம்! அப்போவாவது கூல் ஆகி எங்கள ஏத்துக்கறீங்களா பார்ப்போம்!” என சொன்னான் கதிர்.

“ஒரு வாரம் என்ன ஒரு வருஷம் டைம் குடுத்தாலும் என் மனசு மாறாது! இனிமே எனக்கு இருக்கிறது ஒரே மகன் தான்! எப்ப என் கிட்டயே உன்னைக் கட்டிப்பேன்னு சவால் விட்டாளோ அப்பவே என் மக செத்துட்டா! இங்க நிக்கறது உன் பொண்டாட்டி மட்டும்தான்!” என சொன்னவர் கிளம்பிப் போய் விட்டார்.

ஒற்றை மகனை நம்பி, அவனுக்காகவே வாழ்ந்த பார்வதிக்கோ கண்ணீர் நிற்கவேயில்லை.

“என் மகனுக்கு ஊரைக் கூட்டி எப்படி எப்படிலாம் கல்யாணம் செய்யனும்னு கனவு கண்டு வச்சிருந்தேன்! கடைசியிலே நீயும் என் கனவ கலைச்சிட்டல்லடா! எனக்கு மட்டும் ஆம்பள ராசியே இல்ல போல! கட்டனது தான் சரியில்லாம போச்சு, பெத்ததாச்சும் நம்ம மனம் குளிர நடந்துக்கும்னு பார்த்தா எனக்கே விபூதி அடிச்சிட்டல்ல! போதும்டா நான் ஆம்பளைங்கள நம்பனது! எங்க இருந்தாலும் சந்தோஷமா இருங்க! ஆனா என் வீட்டுப் பக்கம் மட்டும் வந்திடாதீங்க!” என மகனைப் பார்த்து சொன்னவர், பரமுவைப் பார்த்து,

“யோவ்! புதுசா வந்த அத்தைக்கே உன் மகன் கார் ஏற்பாடு பண்ணி குடுத்துருக்கான்! பெத்த நமக்கும் எதாச்சும் ஏற்பாடு பண்ணிருப்பான்! வாயா போலாம்!” என அழைத்தார்.

வேட்டியை நன்றாகக் கட்டிக் கொண்ட பரமு மகன் அருகே போய்,

“எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்! ஜீக்கிரம் ஜரியா போய்ரும்! உங்கம்மா ஒன்ன உட்டுட்டு இழ்க்க மாட்டா லாஜா! கோவத்துல என்னைக் கழ்ட்டி வுட்டுட்டு போய்டுவாளோன்னு பாழ்த்தேன். பாழுக்கு எம்மேல பாஜம் இருக்கு! நான் கெள்ம்பரேன். வரேன் லாஜாத்தி. மன்ச போட்டு உழப்பாம ஜந்தோஷமா இருக்கனும் மம்மவளே” என மெல்லிய குரலில் சொன்னார்.

“இன்னும் என்னய்யா அங்க குசுகுசு?”

“வந்துட்டேன் பாழும்மா”   

எல்லோரும் கிளம்பி சென்றிருக்க அங்கே அடைமழை ஓய்ந்தது போல அமைதியாக இருந்தது.

சண்மு கதிரைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மெல்ல நடந்து போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள். கம்போர்டரை இழுத்து தலை வரை மூடிக் கொண்டவள் அதற்கு மேல் அசையவேயில்லை. அரை மணி நேரம் காத்திருந்த கதிர், அவள் மூச்சு விட சிரமப்படாமல் இருக்க கம்போர்டரை முகம் தெரியும் அளவுக்கு விலக்கி விட்டான். அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தவளை கண் இமைக்காமல் சற்று நேரம் பார்த்திருந்தான்.

சின்ன வயதில் ஒரு நாள் தன் அறை மெத்தையில் தூங்கிவளுக்கும், இப்பொழுது தூங்கிக் கொண்டிருந்தவளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை எண்ணி மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

“அப்போ நீ சொறி சம்மு

இப்போ நீ என் சகி சம்மு!”

மூன்று மணி நேரமாகியும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் சண்மு. மன உளைச்சலில் இருக்கிறாள், தூங்கட்டும் என விட்டு விட்டவன், இன்னும் ஒரு மணி நேரம் ஆனதும் ரூம் சர்வீசில் டீக்கு ஆர்டர் செய்தான். அப்படியே இலகு உணவாக இட்லியும் எடுத்து வர சொன்னான்.

கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தவன்,

“சம்மு, சம்மும்மா! எழுந்திருடா!” என மெல்லிய குரலில் எழுப்பினான்.

அவன் குரலுக்கு மெல்ல புரண்டவள், மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.

“சம்மு!” கொஞ்சம் அழுத்தமாக கூப்பிட்டான்.

“ஹ்ம்ம்” என பதில் சொன்னவளுக்கு கண்ணை மட்டும் பிரிக்க முடியவில்லை. எத்தனை வருடங்களாய் தூங்காத தூக்கத்தை எல்லாம் சேர்த்து தூங்கினாளோ, அவளால் எழவே முடியவில்லை. இங்கே அவளை எழுப்ப கதிர் போராட, ரூம் சர்விஸ் பெல் அடித்தது. போய் உணவைப் பெற்றுக் கொண்டு கதவை பூட்டி விட்டு வந்தான் கதிர்.

டேபிளில் இருந்த டிஷீவை தண்ணீரில் நனைத்து சண்முவின் அருகில் நெருங்கி அவள் கண்களில் மெல்ல ஒற்றினான்.

“சம்மு எழுந்துக்கோ! சாப்பிடலாம்”

கண்கள் குளிர்ச்சியாக மெல்ல இமைகளை மலர்த்தினாள் சண்மு. அருகில் தன் நண்பனைப் பார்த்தவள் அழகாக புன்னகைத்தாள். மெல்ல நடந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வர, மலர்ந்த முகம் வாடி, பின் கோபத்தைப் பூசிக் கொண்டது.

“தள்ளிப்போ!”

அவள் அருகில் இருந்து விலகிக் கொண்டான் கதிர். எழுந்து வந்தவள், தன் லக்கேஜில் இருந்து துணியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள்.

பாத்ரூம் கண்ணாடியில் தன் சட்டைக்கு மேலாக தெரிந்த மாங்கல்யத்தை கையில் எடுத்துப் பார்த்தாள் சண்மு. கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது! முதன் முதலில் தன் கழுத்தில் தாலி ஏறிய நிமிடங்கள் மனதில் ஓட இன்னும் அழுகை பொங்கியது.

‘அழமாட்டேன்! நான் அழுதது எல்லாம் போதும்! இனி என் பக்கத்துல கதிர் இருக்கான். என் நண்பன் கதிர் இருக்கான்’ என நினைத்து அழுகையை நிறுத்த முயன்றாள். ஆனால் அவள் மனமோ.

‘சம்மு! இனி அவன் வெறும் நண்பன் இல்லடி! உனக்கு புருஷன்!’ என நினைவுறுத்தியது.

“யாரு அவன முந்திரிக்கொட்டை மாதிரி தாலிய கட்ட சொன்னா! எல்லாம் அவன் வச்ச சட்டமா? நான் என்ன நினைக்கறேன், எனக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தைக் கேட்டானா? என்னை வெறுத்துறாதேன்னு ஒத்த வார்த்தைய சொல்லி பொசுக்குன்னு தாலிய கட்டிட்டான். இவ்வளவு நாளா என்னை ஜாலியான தோழியா தானே பார்த்தான்! இனி ஜோலிய முடிக்கப்போற ராட்சசியா பார்க்கப் போறான்! குடுக்கற குடுப்புல இவள ஏன்டா கட்டனோம்னு தெறிச்சுட்டு ஓடனும் இந்த ஏசிபி”  

குளித்து விட்டு வாசமாக வந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தப்படி இருந்தான் கதிர். அமைதியாக நடந்துப் போய் துவட்டிய துண்டை நாற்காலியின் மேல் காய வைத்தாள் சண்மு. அங்கே ஒருத்தன் இருப்பதை கண்டு கொள்ளாமல், ட்ரெசிங் டேபிளில் வைத்திருந்த லோஷனை கொஞ்சமாக எடுத்து இரு கைக்கும் பூசிக் கொண்டாள். இப்பொழுது நேராகவே அவளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான் கதிர்.

“உன் ஒன்ரைக்கண்ண கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்புறியா? நான் காலுக்கு லோஷன் போடனும்”

எழுந்து வந்ததும் சண்டைப் போடுவாள், அழுவாள், ஆர்ப்பாட்டம் செய்வாள் என இவன் எதிர்பார்த்திருக்க அவளோ திருமணத்தைப் பற்றி எதுவும் பேசாமல் கூலாக லோஷன் தடவிக் கொண்டிருந்தது இவனுக்கு எச்சரிக்கை மணியை அடித்தது.

‘என்னமோ ப்ளான் போட்டுட்டா! பயப்படாதேடா கதிரு! நீ ஒன்னும் குட்டிப்பையன் கதிரு இல்ல! வளந்து கெத்தா நிக்கற ஏசிபி’ என தன்னையே தேற்றிக் கொண்டவன், பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

சன் மீயூசிகில் ஓடிக் கொண்டிருந்த பாட்டு சத்தம் மட்டும்தான் அந்த அறையில் ஒலித்தது.

“சாப்பிடவா சம்மு! பசிச்சிருக்கும்” என மெல்ல நூல் விட்டுப் பார்த்தான் கதிர்.

“தட்டுல போட்டு வை! அப்படியே காபி ஊத்தி வை வரேன்”

“டீ தான் ஆர்டர் பண்ணேன் சம்மு”

“எனக்கு காபி தான் வேணும்!”

“சரி இரு! ஆர்டர் செய்யறேன்” என சொல்லியவன், மறுபடியும் ரூம் சர்வீசுக்கு அழைத்தான்.

காபி வரவும் இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தனர். அவள் கட்டிலில் போய் அமர்ந்துக் கொள்ள, இவனும் கட்டிலில் போய் கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்.

“சம்மு!” என பேச ஆரம்பித்தவனை,

“ஒன்னும் பேச வேணா! உன் கதையக் கேக்க இன்னும் ஒரு இருபது முப்பது வருஷம் டைம் இருக்கு எனக்கு! சோ இப்போ கொஞ்சம் வாய மூடிட்டு இரு” என அவனை ஆப் செய்தாள் சண்மு. தோளைக் குலுக்கிக் கொண்டவன், அமைதியாக டிவியைப் பார்க்க ஆரம்பித்தான்.

அந்த நேரம் பார்த்து தோழியா என் காதலியா என சன்மியூசிக்காரன் சிட்டுவேஷன் சாங்கை போட்டுத் தாக்கினான்.

இவனோ,

“ஏனடி எனை கொல்கிறாய்

உயிர் வரை சென்று தின்கிறாய்

மெழுகு போல் நான் உருகினேன்

என் கவிதையே என்னை காதல் செய்வாய்” என மெல்ல பாடினான்.

அடுத்த நிமிடம் அடி இடி போல விழ ஆரம்பித்தது கதிருக்கு.

“காதல் செய்யனுமா? இப்போ கொலை செய்யறேன் பாரு!” என அடியைக் கிளப்பி அஃபிசியலாக மனைவியின் கடமையை ஆரம்பித்து வைத்தாள் சண்மு.

மறுநாள் தனி ரூம் எடுத்துக் கொண்டவளை அவள் இஸ்டப்படி விட்டவன், சூட்டோடு சூடாக தன்னுடைய பதவியின் பலத்தை வைத்து ஹோட்டலில் நடந்த திருமணத்தை பதிவும் செய்தான். சம்பிரதாயப்படி மட்டுமில்லாமல் சட்டப்படியும் சண்முவை தன் சரி பாதி ஆக்கிக் கொண்டு தான் ஊர் திரும்பினான் கதிர்.

பெற்ற இருவரும் வீட்டுக்குள்ளேயே விடாமல் ஒதுக்கி வைக்க நடுரோட்டில் நின்றார்கள் இருவரும்.

(உயிர் போகும்….)