Jte – 18

ஓர் விடயம்! 

நாதனும் ஜீவனும் சேர்ந்து எல்லா பிரச்சனைகளையும் கடந்து வருவார்கள் என்று நம்பிக்கை கொண்டோமே! அது நடந்து விட்டது! 

மகிழ்ச்சி கொள்வோமாக!! 

பவானி, ஜீவன் இருவரின் நாட்கள் மிக அழகாக நகர்ந்தன.

மலைப் பிரதேசத்தின் அதிகாலைப் பொழுதில் நடைப்பயணத்தின் போதே இருவரின் நேசங்கள் பரிமாறல் ஆரம்பமாகிவிடும். 

ஜீவனுடன் பேசிக்கொண்டே நடப்பது பவானியின் விருப்பம்.

பவானி, தன் எண்ணத்தில் எண்ணிய ஜீவனுக்கான நேசத்தைப் பேசப் பேச, ஜீவனின் இதயம் எண்ணிக்கை கணக்கில்லாமல் துடிக்கும்.

மலைப்பிரதேசத்தின் ஒவ்வொரு வானிலைக்கும் ஏற்றவாறு, இருவரும் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டு நடப்பார்கள்.

மலைப் பிரதேசத்தில் மழைச் சாரல் வானிலை நிலவினால், இவர்கள் இருவரும் இதழ்களில் ஒரு புன்னகை ஏந்திக் கொண்டு, இரு கைகளும் கோர்த்துக் கொண்டு நடந்தபடி,  அன்றைய நாள் இதயங்களை நேசச் சாரலில் நனைத்தபடி ஆரம்பமாகும்.

மலைப் பிரதேசத்தின் வானம் மேக  மூட்டத்துடன் இருந்தால், இவர்கள் இருவரும் மோன நிலையுடன் நடந்தபடி, அன்றைய நாள் மந்தமாக ஆரம்பமாகும்.

மலைப்பிரதேசம் முழுவதும் குளிர் காற்று நிரம்பி வழிந்தால், இவர்கள் இருவரும் கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நடந்தபடி, அன்றைய நாள் சில்லென்று ஆரம்பமாகும். 

மலைப்பிரதேசத்தில் மழைப் பொழியும் வானிலை இருந்தால், இவர்கள் இருவரும் ஒரு குடையின் கீழ் நடந்தபடி, அன்றைய நாள் ரசனையுடன் ஆரம்பமாகும்.

மலைப்பிரதேசத்தில் விடிகாலைப் பொழுது  சூரியக் கீற்றுகளுடன் ஆரம்பித்தால், அன்று இவர்கள் இருவரின் நாள் சுறுசுறுப்புடன் கூடிய நடைப் பயணத்துடன் ஆரம்பமாகும்.

ஜீவன் சாரின் மனம், இப்போதெல்லாம் வெற்றுக் கூடு அல்ல!! வேடந்தாங்கல்!! – நாம்.

பவானியின் நேரங்களைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டி, நூல் வேலைப்பாட்டை ஒரு சிறு தொழில் அளவிற்கு, ஜீவன் செய்யச் சொல்லியிருந்தான். 

பவானியும் முடிந்த அளவு முயற்சி எடுத்துச் செய்தாள். செய்தவற்றை விற்பனைக்காக, மலை அடிவாரத்திலுள்ள சிறு சிறு கடைகளில் சென்று கொடுத்து வந்தான். 

இதில் நாதனுக்கு பெருமகிழ்ச்சி. பாலாவிடம், அவன் மனைவியிடம்… அவன் மனைவி வீட்டாரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.

பவானிக்கு, அதில் கிடைத்தது மிகச் சிறிய வருமானம்தான். ஆனால் நம்பிக்கை அளப்பரியது. 

பகல் பொழுது இவ்வாறு கழிவதால், இரவில் சற்று அதிக நேரம் பவானியால் உறங்க முடிந்தது. அதையும் தாண்டி உளப் பிரச்சனையால் இரவின் விழிப்புகளும் இருந்தன. 

பவானியின் மன அழுத்தப் பகுதிகளை, ஜீவன் தன் மனப் பிரதேசத்தின் பாசங்கள் கொண்டு சமாளித்தான்.

அதுபோக, அடிக்கடி ஆலோசனைக்காக மருத்துவமனைக் கூட்டிச் சென்றான். 

மேலும், கடைகள், கண்காட்சிகள் என்று நிறைய பொது இடங்களுக்கு அழைத்துச் சென்றான். 

இவையெல்லாம் ஜீவன், பவானி மீது கொண்ட நேசத்திற்காகச் செய்தது.

பவானி நேசம் பற்றி…

ஒன்று மட்டுமே செய்தாள்! 

அது, 

அவள் ஜீவனிற்காகச் சமைத்தாள்.

ஜீவன் பசியாற, விதவிதமாகச் சமையல் செய்தாள்.

ஜீவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சளைக்காமல் சமைத்தாள்.

அதைப் பாசத்துடன் பரிமாறவும் செய்தாள்.

உடல்நிலை ஒத்துழைப்பு தராவிட்டாலும் முயன்று சமைப்பாள். மனநிலை ஒத்துழைக்காத நாட்களில், ஜீவனுக்காகச் சமைக்க முடியாததை நினைத்துச் சங்கடப்பாடுவாள்! 

வெகு நாட்களுக்குப் பிறகு பவானி முதன் முதலாக சமைத்த நாளில், தந்தையையும் சாப்பிட அழைத்திருந்தாள்.

ஜீவன் நாதன் இருவருமே அன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர்.

இத்தனை நாட்கள் கழித்து, இன்றுதான் பவானி சமைத்த சாப்பாட்டை உண்ணும் ஆனந்தத்தில் நாதனும், இத்தனை வருட வாழ்வில் இப்படி உண்பது இதுவே முதல் முறை என்று பேரானந்தத்தில் ஜீவனும் இருந்தனர்.

இப்பொழுதெல்லாம் ஜீவன்-பவானி இருவரைப் பற்றி, கீழ் கண்டவாறுதான் சொல்ல முடியும்.

இனிமை தேடிடும் உயிர்கள்… 

இன்பஊஞ்சல் ஆடிடும் உள்ளங்கள்… 

விருப்பம் பேசிடும் விழிகள்…

விரிந்து சிரித்திடும் இதழ்கள்….

மவுனம் புரிந்திடும் மனங்கள்… 

மகிழ்ச்சி பொங்கிடும் இதயங்கள்…  

— நாம்.

மற்றொன்று, ஜீவன் தன் தேவதைக்காக, தன் தேவைக்கு அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தான்.

அதுதான், ஜீவன் சாரின் மேல்மாடி ‘ஸ்டிராங்’ ஆயிற்றே!! – நாம். 

காலச் சக்கரம் உருண்டன! 

பாலா, அவன் மனைவி, பல்லவி இவர்களிடம் எந்த மாற்றங்களும் இல்லை. 

ஆறேழு மாதங்கள் சென்ற நிலையில் பவானிக்கு விவாகரத்துக் கிடைத்தது. 

பின், ஓரிரு நாட்களில் ஜீவன்-பவானி இருவரும்  நெடுநாள் கரம் கோர்த்துப் பயணிக்கப் போகும் வாழ்வைப் பதிவு செய்து கொண்டனர். 

ஒரு இரண்டு நாட்கள் கழித்து மலைப் பிரதேசத்திலிருந்து கிளம்ப முடிவு செய்தனர். 

மருத்துவரின் பரிந்துரை என்பதால் நாதன் மனப்பூர்வமாகச் சம்மதம் சொல்லியிருந்தார். 

*****

கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவில் மஞ்சள் கல் இருக்கையில் இருவரும்…

மலைப் பிரதேசத்தின் பனிப் பொழியும் இரவுப் பொழுதில், முழு நிலவின் ஒளி வெளிச்சத்தில் ஜீவனும்  பவானியும் நடக்க ஆரம்பித்தனர். 

மொழிகள் தொலைந்த மோன நிலையே அதிகமா இருந்தது. வாட்டும் குளிரில் இருவரும் வெகு நேரம் நடந்து கொண்டிருந்தனர்.

“குளிருதா பவானி?” – ஜீவன்.

“ம்ம்ம், ரொம்ப” 

“சரி, கொஞ்ச நேரம் பெஞ்சுல உட்காரு”

“எதுக்கு??”

“உட்காரேன்”

சரி என்று சம்மதம் சொல்லும் விதமாக இருக்கையில் சென்று அமர்ந்தாள். 

ஜீவன், அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து, உள்ளங்கைகள், பாதங்கள் என அழுத்தித் தேய்த்துவிட்டான்.

“இப்போ பரவாயில்லையா??” – ஜீவன்.

“ம்ம்ம், போதும். நீங்க மேல ஏறி உட்காருங்க”

ஜீவன், பவானி அருகில் அமர்ந்து கொண்டான். நிலவு லேசாக மேகத்திற்குள் மறைந்ததால், தன் அலைபேசியின் டார்ச்சை ஒளிரச் செய்தான்.

“இந்தக் குளிர்ல கண்டிப்பா இப்படி நடக்கணுமா??” – ஜீவன். 

மௌனமாக இருந்தாள். ஏனெனில் இது பவானியின் ஆசை! இந்த நேரங்களை, இப்படி இருக்கையில் செலவிட வேண்டும் என்று!! 

“எதுவும் பேசணுமா பவானி?” – ஜீவன். 

“ம்ம்ம்”

“சரி பேசு”

“உங்களுக்கு ஒண்ணு கொடுக்கணும்” என்று சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்த கைக்குட்டையை எடுத்து ஆசையாக நீட்டினாள்.  

அதைக் கொடுக்கையில் பவானி முகம் முழுவதும் சந்தோசத்தின் சாயல்கள்.

ஆனால் ஜீவன் வாங்கவேயில்லை.

“என்னாச்சு?? வாங்கிக்கோங்க” – பவானி. 

‘வேண்டாம்’ என்பது போல் மறுப்பாய் தலை அசைத்தான்.

“ஏன்?”

“இதைக் கொடுக்க உனக்கு இத்தனை நாளாச்சா?”

“அது, அது… “

“ஸோ, இவ்ளோ நாளும் என் மேல கோபமா இருந்திருக்க?” என்று சலித்துக் கொண்டான்.

“அப்படியெல்லாம் இல்லை. வாங்கிக்கோங்க”

“அப்புறம் வேறென்ன??”

“பெருசா ஒரு காரணமும் இல்லை. வாங்குங்க” – பவானி குரலில் அடம் இருந்தது. 

“ஆமா, இதை வீட்ல வச்சே கொடுத்திருக்கலாமே”

“இங்கதான நம்ம பர்ஸ்ட் பர்ஸ்ட்டு மீட் பண்ணோம். அதான்… “

“ஓ! லாஜிக்” 

“இல்லை சென்டிமெண்ட்”

“ப்ச், என்னவோ!! ஆனா வாங்க மாட்டேன்” 

“இப்ப என்னதான் செய்ய??”

“இத்தனை நாள் கழிச்சிக் கொடுக்கிறலே, அதான் எனக்கு கோபம்”

“அதுக்கு” 

“என் கோபம் குறைஞ்சி, நானா கர்ச்சீப் வாங்கனும். அதுக்கு என்ன செய்யலாம்னு யோசி…” 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. பிடிங்க” என்று கைக்குட்டையை நீட்டினாள்.

“ம்கும். யோசி பவானி” என்று 

“ஏன்டா கொடுக்கிறோம்னு நினைக்க வைக்கிறீங்க? ப்ளீஸ் வாங்கிக்கோங்க” என்று மன்றாடினாள். 

“முடியாது. நீ யோசிக்க ஆரம்பி”

“ச்சே”

“பேசாம யோசி” என்று எழுந்து திரும்பவும் நடக்கத் தொடங்கினான்.

பவானி சற்று நேரம் யோசித்தபின்…

“ஒரு ஜோக் சொல்லவா?? ” – பவானி. 

“எனக்கே ஜோக்கா?? வேற யோசி பவானிம்மா” என்றான் நடந்து கொண்டே… 

மீண்டும் யோசித்தாள்… 

“சரி, ஒரு கேம் விளையாடலாமா??” – பவானி. 

நடந்து கொண்டிருந்தவன் நின்றான். 

“இந்த நேரத்தில போய் கேம் விளையாடச் சொல்ற” – ஜீவன். 

“பரவால்ல வாங்க விளையாடலாம்”

“சரி, என்ன கேம்??” என்று கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான்.

“பிரீஸ் அண்ட் ரிலீஸ்… விளையாடத் தெரியுமா?”

“அதெல்லாம் தெரியும்”

“ம்ம்ம்… அப்ப நீங்க பிரீஸ்…” என்று சொல்லி, ஜீவனை அசையாமல் இருக்கச் சொன்னாள். 

“ப்ச்… பவானி” என்று எழப் போனவனை…

“நான் பிரீஸ் சொல்லிட்டேன்… இது கேம்” என்று பிடித்து அமர வைத்தாள்.

‘சரி சரி’ என்பது போல ஜீவன் அசையாமல் இருந்தான்.

பவானி, ஜீவனின் அருகே நதர்ந்து அமர்ந்தாள். அவனின் இடக்கரத்தை தூக்கி, இருக்கையின் சாய்வின் மீது பக்கவாட்டில் கிடத்தினாள். 

என்ன செய்யப் போகிறாள் என்று புரியவும் முடியாம‌ல், அசையவும் முடியாமல் ஜீவன் தவித்தான். 

பவானி தன் கையிலிருந்த கைக்குட்டையை எடுத்து, ஜீவனின் சட்டைப் பைக்குள் வைத்தாள்.

‘இதுக்குத்தானா கேம்’ என்பது போல் ஜீவன், பவானியைப் பார்த்தான்.

‘ஆமாம்’ என்பது போல் பவானி, ஜீவனைப் பார்த்து மெல்லிய முறுவல் செய்தாள்.

பின், இன்னும் ஜீவனை நெருங்கி அமர்ந்து, வாகாக அவள் வாழும் அவன் நெஞ்சத்தில் தலை சாய்த்துக் கொண்டாள். 

சில நொடிகள் நிசப்தம் மட்டுமே!! 

“ஒண்ணு சொல்லப் போறேன். நல்லா கேட்டுக்கோங்க” என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள். 

மீண்டும் ஒரு நொடிப் பொழுது நிசப்தம்! 

“அனர்த்தம் என்ற சொல்லில் இருக்கும் அர்த்தமாய்

ஜீவனுக்குள் நான்… 

அசௌகரியம் என்ற சொல்லில் இருக்கும் சௌகரியமாய் 

எனக்குள் ஜீவன்…” என்று தன் நேசத்தைச் சொல்லி முடித்தாள். 

மங்கிய நிலவொளியில், அலைபேசியிலிருந்து வரும் ஒளிக்கற்றையில்… நிசப்தம் நிலவும் நிலவொளியில் ஜீவனின் இதயத்துடிப்பு மட்டும் கேட்கும் தருணங்கள் – இவை.  

தன் உள்ளம் துள்ளும் அளவிற்கு, ஜீவனின் இதயம் துடிக்கும் இசையினைக் கேட்டாள்.

நேசத்தின் சின்னமாக, ஜீவன் இதயம் இருக்கும் இடத்தில, பவானி தன் இதழ்களின் அச்சை இதமாகப் பதித்தாள். 

சில நொடிகளில், மெதுவாக தலையை நிமிர்த்தி ஜீவன் விழிகளைச் சந்தித்தவாறே, பவானி மெல்ல விலகினாள்.

பின், “நான் வீட்டுக்குப் போறேன்” என்று சொல்லி, எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

ஜீவன் சிறிதும் அசையாமல், ‘ரிலீஸ் சொல்லாம போற’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பவானி நான்கு எட்டுகள் எடுத்து வைத்தப் பின், திரும்பிப் பார்த்து, “ஜீவன் ரிலீஸ்” என்ற சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஜீவன் எழுந்து, வேகமான நடையுடன் அவள் முன்னே வந்து நின்றான்.

சிரித்துக் கொண்டிருந்த இருவரின் விழிகளும் சந்தித்தன. 

பவானியின் முகத்தில் மலர்ச்சி இருந்தது. இதழில் மென்னகை தெரிந்தது.

“அன்னைக்கு சொன்னதை… இத்தனை நாள் கழிச்சி மறக்காம சொல்ற”

“ம்ம்ம்” 

“அப்போ அன்னைக்கே புரிஞ்சிருக்கு” 

“மே பீ” 

“ஓ! பீ ஏ இங்கிலீஷ்” 

“யெஸ்” 

“அடி வாங்கப் போற” என்று ஆனந்தத்தில் சொல்லி, ஜீவன் பவானியை அரவணைக்க வந்தான்.

“ஜீவன் ரிலாக்ஸ்” என்று தடுத்து நிறுத்தினாள்.

“உன் ரிலாக்ஸ தூக்கி டஸ்பின்ல போடு” என்று சொல்லி, ஜீவன் பவானியை அள்ளி, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்தான்.

இருவரும் சற்று நேரம் அப்படியே இருந்தனர்.

நிகழ்கணத்தின் நிலை… 

இருக்கையில் வைக்கப்பட்ட அலைபேசியிலிருந்து வரும் ஒளி வெள்ளம் ஒருபுறம், இயற்கை அள்ளி இறைக்கும் இருள் வெள்ளம் ஒருபுறம்…

இதற்கிடையே, தங்கள் முதல் சந்திப்பு ஏற்பட்ட இடத்திலே… முதல் அணைப்பும்!!

மஞ்சள் இருக்கையின் முன், நேசத்தில் நெஞ்சங்கள் அணைத்தபடி நின்றனர்.

பவானியை, லேசாக விலக்கி நிறுத்த, அவள் இரு விழியில் வழியும் அன்பினைப் பார்த்தான். 

பின் தன் இதயத்தில் இருக்கும் அன்பின் அடையாளமாக, ஜீவன் பவானியின் உச்சிநெற்றியில் தன் உதடுகளின் அச்சியை அழுந்தப் பதித்தான். 

சில நொடிகள் நிசப்தம் மட்டுமே! 

“பவானி, ஒண்ணு சொல்லப் போறேன். நல்லா கேட்டுக்கோ” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான். 

பவானி புரியாமல் பார்த்தாள். 

பின்னர், “பவானிய ஜீவனுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பவானி கூட சந்தோஷமா ரொம்ப நாள் வாழணும்னு, ஜீவனுக்கு ஆசை” என்று தன் நேசத்தைப் பிரகடனப் படுத்தினான். 

அவனின் ஆசை கேட்டு, ஆனந்தம் கொண்டு அங்கனை விழிகள் கலங்கின. 

மீண்டும், பவானி உச்சிநெற்றியில் ஜீவனின் உதடு அழுத்தம்! 

இம்முறை பவானி ஜீவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். 

மீண்டும் நிசப்தம்! 

சில வினாடிகள் கழித்து, இருவரும் விலகிக் கொண்டனர். 

“வா கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பேசிட்டுப் போகலாம்” – ஜீவன். 

“ம்ம்ம்”

இருவரும் இருக்கையில் வந்து அமர்ந்தனர். புரிந்த அன்பினைப் பகிர்ந்த பின்பு, அமைதி நிலவியது. 

ஆதலால் உறைபனிக் குளிரிருலும் உடலின் உயிர் உருகிக் கொண்டிருந்தது. 

“ஜீவன்” – பவானியின் குரல் எட்டாவது சுரமாக ஒலித்தது. 

“சொல்லு”

“ஒண்ணுமில்லை”

நள்ளிரவு நிலவொளியில், பிரியங்கள் எழுதி எழுதி ஓய்ந்து போன நெஞ்சத்தை, இருவரும் ஓய்வெடுக்க வைத்த தருணங்கள் – இவை. 

“ஜீவன்” – பதினேழாம் செல்வமாய், பவானியின் குரல் ஒலித்தது. 

“சொல்லு பவானி”

“தூக்கம் வருது”

“சரி வா, வீட்டுக்குப் போகலாம்”

“ம்கும்…வேண்டாம்”

“அப்புறம்”

“இங்கயே தூங்கிறேன்” என்றாள்.

“இங்கேயா??” என்று கேட்டு முடிப்பதற்குள், பவானி ஜீவன் மடியில் தலை சாய்த்திருந்தாள்.

ஜீவனுக்கு நியாபகம் வந்தது. அன்றொரு நாள், இதே இருக்கையில் இதயத்தின் மனக் கஷ்டங்களோடு இப்படி உறங்க நினைத்து இயலாமல் போனது. 

இன்று அதே இடத்தில் இதயம் முழுதும் இஷ்டங்கள் மட்டும் கொண்டு அது நிறைவேயிருக்கிறது.

“பவானி”

“சொல்லுங்க”

“ப்ச்”

“சரி, சொல்லுங்க ஜீவன்”

“அன்னைக்கே இப்படித் தூங்கணும்னு நினைச்சியா??”

“ம்ம்ம் ரொம்ப. நீங்களும் நினைச்சீங்களா??”

“ம்ம்ம், நீ சொல்லியிருக்கலாமே”

“சொல்லியிருந்தா… பவானி ரிலாக்ஸ்ன்னு ஏதாவது சொல்லியிருப்பீங்க”

அந்த அல் பொழுதின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் ஜீவன் சிரித்தான்.

“ஜீவன்” – பவானியின் குரல் எட்டாவது அதிசயமாக ஒலித்தது. 

“சொல்லு”

“இன்னும் பாலாண்ணா பல்லவி அண்ணி யாரும் பேசவே மாட்டிக்காங்க.” என்று அடிமனதில் இருக்கும் ஆசையைச் சொன்னாள். 

“அதுக்கென்ன??”

“அவங்களுக்கெல்லாம் என்னைய பிடிக்கலை போல??”

“பவானி… யாருக்கு உன்னைய பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் எனக்குப் பிடிக்கும். சரியா?? பேசாம தூங்கு”

“ம்ம்ம்” என்று சொல்லி, அவனை அண்டி ஒண்டி தூங்கினாள்.

மேகத்திலிருந்து நன்றாக வெளிவந்த நிலவு ஒளியில், சுற்றியுள்ள மரங்கள் வீசுகின்ற கடுங்குளிர் காற்றில்…

ஜீவன் ஒரு கையால் பவானியின் அலை அலையான கேசத்தை கோதிக்கொண்டு, மறுகையால் அலைபேசியில் அலசிக் கொண்டிருந்த அழகிய தருணங்கள் – இவை.

சற்று முன்பிருந்து, இப்பொழுது வரை நடந்த காட்சிகள் அனைத்தும் அசையும் ஓவியம் போன்றிருந்தது. – நாம்.

****

அடுத்த நாள் காலையில் மலைப் பிரதேசத்திலிருந்து கிளம்புவதற்குத் தயாராயினர். இன்று வானம் பூ பூவாய் தூவிக் கொண்டிருந்தது. 

பவானியும் நாதனும் ஜீப் அருகிலிருந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜீவன், சில அட்டைப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு, மாடியிலிருந்து இறங்கி வந்தான்.

ஜீவன் அருகில் வந்தவுடன், நாதன் புன்னகைகித்தார். 

அவனது புத்தகங்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகளை ஜீப்பில் ஏற்ற ஆரம்பித்தான்.

“அப்பா”

ஜீவனின் பார்வை பவானியின் மேல் விழுந்தது.

“என்ன பவானி?”

“நீங்களும் வாங்கப்பா”

ஜீவன் எதிர்பார்த்ததுதான். ஆதலால் எவ்வித எதிர்வினையுமின்றி தன் வேலையைச் செய்தான்.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன் பவானி, வர முடியாதுன்னு”

“ப்ளீஸ்ப்பா”  என்று கெஞ்சினாள்.

அவள் கெஞ்சுவதை பார்த்த ஜீவன், “நீங்களும் வந்தா பவானி சந்தோசமா இருப்பா சார்” என்று சொன்னான்.

“இல்லை சார். பல்லவி என்ன செய்வா?? அவளைப் பத்தி நான் யோசிக்கணும். அவ என்னைய விட்டுட்டு இருக்க மாட்டா. பாலா பார்த்துக்கிட்டாலும், அவளுக்கு நான் செய்ய வேண்டிய கடமை இருக்கு” என்று தான் வருவதற்கு மறுக்கும்  காரணத்தைச் சொன்னார்.

“ம்ம் சரி சார்” – ஜீவன்.

“புரியுதா பவானி” – நாதன்.

“ம்ம்ம், சரிப்பா” என்று தன்  பெட்டிகளை எடுத்து வர மாடிக்குச் சென்று விட்டாள்.

பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தவன் அருகில் சென்ற நாதன்…

“ஜீவன் சார்”

“சொல்லுங்க சார்”

“உங்ககிட்ட சொல்லத் தேவையில்லை. இருந்தாலும் சொல்றேன்…” என்று தயங்கினார்…

“கண்டிப்பா பவானியை நல்லா பார்த்துப்பேன் சார். நீங்க நிம்மதியா இருங்க”

“சரி சார்”

பவானி தன் உடமைகளை எடுத்து வந்தபின், அனைத்துப் பொருட்களும் ஏற்றப்பட்டது.

ஜீவனும் பவானியும் நாதனிடம் விடை பெற வந்தனர்.

“அப்பா”

“பவானிம்மா”

“பேசாம இங்கயே இருக்கட்டுமா??” – பவானி.

“எனக்கும் அதான் தோணுதும்மா” – நாதன்.

ஜீவனுக்கு மனம் பதறியது. ஆதலால் கீழுள்ள வசனம் பேசினான். 

“என்னது? அங்க வீடெல்லாம் பார்த்தாச்சு. இப்ப வந்து ரெண்டு பேரும் இப்படிச் சொல்றீங்க”

“இல்லை ஜீவன், தீடிர்னு மனசு மாறுது” – பவானி.

ஜீவன் மனதின் பதற்றம் அதிகரித்தது. 

“எனக்கும்தான் ஜீவன் சார்” – நாதன்.

நாதன் இப்படிச் சொல்லி, ஜீவன் மனதில் மேலும் பதற்றம் ஏற்றினார். 

“அப்பா” 

“பவானி”

வழமையை விட அதிகமாக இருக்கிறதே அப்பா பெண் பாசம் என்று, ஜீவன் யோசித்தான். 

பவானி சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் சிரிப்பதைக் பார்த்து, “எதுக்கு சிரிக்கிற?” என்று ஜீவன் கேட்டான். 

“நாங்கெல்லாம் முடிவு எடுத்தா மாற மாட்டோம். இல்லையாப்பா??” என்று சொல்லி மேலும் சிரித்தாள்.

“பவானி சும்மா இரு” என்று நாதன் கண்டித்தார்.

“அப்பாவும் பொண்ணும் சேர்ந்து என் மனச…” என்று சற்று சத்தமாகச் சொல்லியவன், அவர்கள் இருவரின் முகம் செல்லும் போக்கைக் கண்டு, வசனத்தைக் கீழுள்ள படி மாற்றிப் பேசினான்.

“எனக்கு மனசுன்னு ஒண்ணு  இருக்குன்னு தெரிஞ்சதே உங்களாலத்தான்” என்று சாந்தமாகச் சொன்னான். 

நாதன் சந்தோசமாக சிரித்தார். எப்பொழுதும் சமாளிப்பதற்காக சிரிக்கும் தந்தை,  இப்படிச் சந்தோஷத்துடன் சிரிப்பதைக் கண்டு பவானி முகத்தில் மலர்ச்சி வந்த தருணங்கள் – இவை.

வீட்டிற்குள் இருந்து, பவானியை வள்ளிம்மா அழைக்கும் சத்தம் கேட்டது. 

“இருங்கப்பா வரேன்” என்று சொல்லி, அங்கிருந்து சென்றாள். 

அவள் சென்றவுடன்… 

“ஜீவன் சார்” – நாதன். 

“சொல்லுங்க சார்”

“சாரி சார். தப்பா எடுத்துக்காதீங்க. பவானிதான் இப்படிப் பேசச் சொன்னா…” 

“ஐயோ புரியுது சார். இதுக்கு எதுக்கு சாரி. விடுங்க” 

“சும்மா விளையாட்டா…”

“தெரியும் சார்”

இப்படியே சிறிது வினாடிகள் பேச்சு சென்றது. பின், வள்ளிம்மா பவானி வெளியே வந்தனர். 

“கிளம்றோம் சார்” என்று ஜீவன் விடை பெற்றான். 

ஜீவன் சென்று, வாசலில் நின்ற வள்ளிம்மாவிடம் சொல்லிவிட்டு, பவானியை அழைத்துக் கொண்டு, ஜீப் அருகே வந்தான். 

ஜீவனும் பவானியும் ஜீப்பில் ஏறிக் கொண்டனர். நாதன் பவானியின் புறமாக வந்து நின்றார். 

“அப்பா, நீங்க அடிக்கடி அங்கே வரணும்” என்று அன்புக் கட்டளை இட்டாள். 

“சரிம்மா” என்று சிரித்தார். 

“முடிஞ்சா, பாலாண்ணா, அண்ணி, பல்லவி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க” என்று ஆசையைக் கூறினாள். 

“சரி. அங்க போயும் நீ தைக்கிறதை விடக் கூடாது. சரியா?” என்று நாதனும் பவானிக்கு ஒரு கோரிக்கை வைத்தார். 

“கண்டிப்பா” என்று சிரித்தாள். 

“சரி, லேட்டாகுது கிளம்புங்க” 

“சரிப்பா, போயிட்டு வரேன்” என்று பவானி சொல்லியதும், “வரேன் சார்” என்று சொல்லி ஜீவன் ஜீப்பைக் கிளப்பினான்.

ஜீப் சென்றுவிட்டது! 

மருத்துவரின் பரிந்துரை தெரியும் என்பதாலும், பொறுப்பான ஒருவரிடம் பவானியின் எதிர்காலம் ஒப்படைத்ததாலும் நாதன் மனம் மகிழ்ச்சியில் நிரம்பி, முகத்தில் ஒரு நிம்மதி வந்தது! 

*****

சற்று தூரம் சென்றதும், ஜீவன் பவானியைத் திரும்பிப் பார்த்தான். பவானியும் பார்த்தாள். 

பவானி மெல்லிய புன் முறுவலோடு ஜீவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். ஜீவன் முகத்திலும் முறுவல் வந்தது. 

மெல்லிய தூரலில், இருபுறமும் அடர்ந்து நிற்கும் மரங்கள் நிறைந்த மலைப் பாதை வளைவுகளின் வழியே பயணிக்க ஆரம்பித்தனர். 

புறக்கணிப்புகளைப் புறந்தள்ளி விட்டு, புன்னகை புரியவும் ஆரம்பித்து விட்டனர்.

ஜீவன், ஜீவனின் துணை எழுத்தின் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது! 

Me and you we could make the whole world Jealous! – ஜீவனும் பவானியும்.

“வாழ்க வளமுடன்” – நாம்.

நாம் இதுவரை பவானி ஜீவன் நேசத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளெல்லாம் நிறைவேறி, மனம் ஆனந்த சந்தோஷத்தில் இருப்பதால், விடை பெற்றுக் கொள்வோமாக!!