கனவு – 9

அம்ரிதா தங்கள் அறையினுள் புகுந்து கதவினை அடைத்தவுடன் விரைந்து சமையலறைக்கு சென்ற ஆஷ்ரிதா பொன்னம்மாவின் அருகில் சென்று “அய்யோ பொன்னம்மா.. நல்ல காரியம் செய்ய பார்த்தீங்க.. அம்முகிட்ட எந்த விஷயத்தையும் சொல்லிடாதீங்க.. நான் அழுதது அவ விஷயமாக தான். அவளுக்கு எதுவும் தெரிய கூடாது உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன் –ல” என்று கிசுகிசுத்த குரலில் கூறினாள்.

“ஆமா பாப்பா.. ஏதோ பதட்டத்துல புத்திய கடன் கொடுத்துட்டேன்.. இனி ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கறேன்..” என்ற பொன்னாம்மாவின் தோளை அணைத்து அன்பை தெரிவித்தாள் ஆஷ்ரிதா.

பொன்னம்மாவும் ஆஷ்ரிதாவும் தேனீருடன் உணவு மேஜையை அடைய அம்ரிதாவும் ஒரு குளியல் போட்டுவிட்டு உடையை மாற்றிக்கொண்டு வந்திருந்தாள்.

“அச்சு.. எஸ்டேட்-ல இருந்து கால் வந்திருந்தது. நாம சொல்லிவச்ச காட்டேஜ் சேலுக்கு வருதாம். ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி வரை வரும்னு நினைக்கிறேன். முடிச்சிடலாமா எப்படி..?” – அம்ரிதா ஆஷ்ரிதாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே பொன்னம்மா தொலைக்காட்சியை உயிர்பிக்க,

“பொன்னம்மா.. நியூஸ் சேனல் வைங்க.. ஏற்காடு எஸ்டேட் சேல்ஸ் பத்தி நியூஸ் இருக்குனு சொன்னாங்க.. என்ன வருதுனு பார்ப்போம்” என்றாள் ஆஷ்ரிதா.

“போங்க மா.. இப்ப நான் என் சீரியல் பார்க்குற நேரம்.. நீங்க உங்க கையில உள்ள டப்பால பாருங்க” என்றார் பொன்னம்மா.

“பொன்னம்மா.. டப்பானு சொல்லாதீங்கனு எத்தனை முறை சொல்லியிருகேன்” என ஆஷ்ரிதா செல்லமாய் கோபித்துக்கொள்ள “எனக்கு அது தான் மா ஈசியா வருது” என்றார் பொன்னம்மா.

“ஆமா.. ஆமா.. வரும்..” என்றவாறு தனது அலைபேசியை எடுத்த ஆஷ்ரிதா அதில் தவறி இருந்த திரவியத்தின் தொடர் அழைப்புகளை கண்டு “என்னவாம் இவனுக்கு.. அப்படி பேசிட்டு எதுக்கு கால் பண்ணனும்? ச்சே” என்று எரிச்சலானவள் கைபேசியை மீண்டும் சோஃபாவின் மீதே விட்டெறிந்தாள்.

“ஹேய்.. என்ன டி ஆச்சு..? எதுக்கு இப்படி தூக்கி வீசுற?” என அம்ரிதா கேட்கவும் ‘பொன்னம்மாவ சொல்லிட்டு இப்ப நானே அம்முகிட்ட காட்டிக் கொடுத்திடுவேன் போலயே’ என தன் செயலை நொந்துக்கொண்டவள் என்ன சொல்வதென அலைபேசி கிடந்த கிடப்பை பார்த்து விழிக்க, அப்போது அவள் கண்ணில் பட்டது பேட்டரி வார்னிங் மெசேஜ்.

‘ஐ.. ஐடியா..’ என மனதினுள் துள்ளாட்டம் போட்டவள் “சார்ஜ் போட மறந்துட்டேன் டி.. மொபைல் டெத் ஆக போகுது” என்றாள்.

“அதுக்கு சார்ஜர் –ல போடனும் மா.. இப்படி விட்டெறிஞ்ச தூக்கிட்டு போய் பாடை கட்ட வேண்டியதுதான்” என்று சொல்லி அம்ரிதா சிரித்துக்கொண்டிருக்க

“சரி சரி.. ரொம்ப பண்ணாம உன் மொபைல் எடு.. என்ன செய்தினு பார்க்கலாம்” என கூறிய ஆஷ்ரிதா தன் மொபைலை சார்ஜரில் மாட்டிவிட்டு அம்ரிதாவுடன் இணைந்துக்கொண்டாள்.

இருவரும் ஒரே சோஃபாவில் லாவகமாக அமர்ந்துக்கொண்டு அம்ரிதாவின் கைபேசியில் செய்திகளுக்கான செயலி ஒன்றை எடுத்துப்பார்க்க, அதில் முதலில் தோன்றிய செய்தியினை கண்டு ஒரு நிமிடம் ஆடிப்போயினர் இருவரும்.

“என்ன டி இது.. உன் மேனேஜர் செத்துட்டாரா..??” – அதிர்ச்சியே உருவாய் கேட்டாள் ஆஷ்ரிதா. அதே அதிர்ச்சியில் இருந்த அம்ரிதாவுக்கு நடப்பவை என்ன என யோசிப்பது கூட முடியாத காரியமாய் இருந்தது.

“இன்னைக்கு தானே டி நான் உன் ஆஃபீஸ் –க்கு வந்தேன். நான் கூட பார்த்தனே இவனை” என்று மீண்டும் ஆஷ்ரிதா கேள்வியை எழுப்ப மோகன் இறந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க, தான் நினைத்த காரியம் ஈடேறாமல் போய்விட்டதே என உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தாள் அம்ரிதா.

“ஹேய்.. உன்ன தான் டி கேட்குறேன்” என அம்ரிதாவின் தலையில் ஆஷ்ரிதா ஒரு போடு போட “என்ன டி இது.. நான் ஆப்பு வைக்கறதுக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டான்.. இனி நான் யாருக்கு ஆப்பு வைக்குறது..?” என கேட்டாள் அம்ரிதா.

“அடியேய்.. இவ வேற நேரம் கெட்ட நேரத்துல.. முதல்ல அவன் எப்படி செத்தான்னு கேளு டி.. உன் ஆபீஸ் –ல இருந்து இன்னும் ஏன் உனக்கு எந்த தகவலும் வரலை.?” – ஆஷ்ரிதா.

“இன்னைக்கு வரும் போது ஒரு ஃபைலோட டேட்டால ஒரு தில்லுமுல்லு பண்ணி வச்சிட்டு வந்தேன்.. இந்த முறை கண்டிப்பா மிஸ் ஆகாது அந்த காண்டாமிருகம் மாட்டிடுவான்னு சந்தோஷமா இருந்தேன். இறைவா நீ கூட அவனுக்கு தான் சப்போர்ட்டா? இப்படி அவனை எஸ்கேப் பண்ணி கூட்டிகிட்டு போய்ட?!” என குழந்தை போல சிணுங்கியபடி கூறிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

“என்னது.. எஸ்கேப் பண்ணி கூட்டிட்டு போய்ட்டாரா? ஹேய்.. பைத்தியம் எதுவும் புடிச்சிட்டா டி உனக்கு? நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லுற” – ஆஷ்ரிதா.

“இல்லை டி.. அவனுங்க மாத்தி மாத்தி கால் பண்ண கூடாதுனு ஆபீஸ் சிம்- அ கழட்டி வச்சிட்டேன். நான் தான் பர்சனல் நம்பர் யாருக்கும் கொடுக்கலையே.. அதனால தான் இப்ப வரை நமக்கு நியூஸ் வரல போல” – அம்ரிதா.

“உன்ன எல்லாம்.. சீக்கிரம் சிம்-அ மாட்டி யாருகிட்டயாவது என்ன விவரம்னு கேளு” என ஆஷ்ரிதா தன் அக்காள் தோரணையை காட்ட அம்ரிதாவும் அவள் அக்கா கூறியதை செயலாக்கினாள்.

“ஹலோ.. மனோஜ்..” – அம்ரிதா.

“மேம்.. என்ன மேம்.. ரொம்ப நேரமா ட்ரை பண்ணுறேன் உங்க மொபைல் –க்கு. கால் ரீச் ஆகவே இல்லை” – மனோஜ்

“பேட்டரி டை மனோஜ்.. என்னாச்சு மோகன் சார் –க்கு” – அம்ரிதா.

“ஏதோ ஃபயர் ஆக்சிடெண்ட் –னு சொன்னாங்க.. இன்னும் நான் சாரோட வீட்டுக்கு ரீச் ஆகல.. போய் பார்த்துட்டு உங்களுக்கு விவரம் சொல்லுறேன் மேம்” – மனோஜ்.

“ஆக்சிடண்ட் நடந்திருக்கிறது வீட்டுல இல்லையே” – அம்ரிதா.

“ஆமா மேம்.. அண்ணா நகர் பக்கத்துல ஒரு அப்பார்ட்மெண்ட்” – மனோஜ்.

“தென் எதுக்கு வீட்டுக்கு போறீங்க.? நேரா அந்த அப்பார்ட்மெண்ட் போங்க” – அம்ரிதா.

“இல்லை மேம். பாடி க்ளியர் பண்ணியாச்சி. இப்ப அங்க போன எப்படியும் யூஸ்ஃபுல்-ஆ ஒன்னும் நடக்காது. சார் விட்டு ஆளுங்க எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க. எந்த செய்தியா இருந்தாலும் வீட்டுக்கு தான் வரும்” – மனோஜ்.

“ஓகே மனோஜ்.. சாரி.. கோ அஹெட்.. நான் நாளைக்கு காலை –ல வர்றேன். பாடி எப்ப எடுப்பாங்கனு மட்டும் கேட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணிடு” – அம்ரிதா.

“ஓகே மேம்.. ஸ்யூர்..” – மனோஜ்.

“தேங்க்ஸ் மனோஜ்” – அம்ரிதா.

இருவரின் உரையாடல் முடிந்து அம்ரிதா அலைபேசியை துண்டிக்கவும் “என்ன டி ஆச்சாம்” பரபரப்பு குறையா குரலில் கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஃபயர் ஆக்சிடண்ட் –ஆம்” – ஆஷ்ரிதா.

“ஆமா.. இன்னும் முழுசா ஒரு டீடெயில்ஸும் தெரியலை.. மனோஜ் இன்னும் ரீச் ஆகலையாம்.. விசாரிச்சிட்டு சொல்லுறேன்னு சொல்லிருக்கான்.. ஆனால் இந்த நியூஸ்-ல காட்டியிருக்கற அப்பார்ட்மெண்ட்.. அதுதான் யோசனையா இருக்கு” என்றாள் அம்ரிதா.

“இதுல என்ன டி யோசனை” – ஆஷ்ரிதா.

“இவனுக்கும் இந்த அப்பார்ட்மெண்ட் –க்கும் என்ன சம்பந்தம். இதுவரை இந்த இடம் பத்தி இவன் பேசி நான் கேட்டதே இல்லை” – அம்ரிதா.

“ஹேய்.. அவனுக்கு பெர்சனல்னு எதும் இருக்காதா.? வேலை பார்க்கற எம்ப்லாயிகிட்ட எல்லாத்தையும் சொல்லிகிட்டா இருப்பாங்க” – ஆஷ்ரிதா.

“இல்லை எனக்கு என்னவோ சரியா படல.. சரி நாளைக்கு பார்த்துக்கலாம்.. வா போய் டின்னர் செய்யலாம்” – அம்ரிதா.

அம்ரிதாவும் ஆஷ்ரிதாவும் எழுந்து சமயலறைக்கு செல்ல தடார் என எழுந்து ஓடி வந்தார் பொன்னம்மா. “என்ன பாப்பா.. நீங்க ஏன் செய்யறீங்க.. நான் செஞ்சி தர்றேன்.. போய் உட்காருங்க” என்றார்.

“பாத்தியா அம்மு நம்ம பொன்னம்மா-வ.. சீரியலுக்கு உள்ளே போய்ட்டா வீட்டுல என்ன நடக்குதுனு கூட கவனிக்கறது இல்லை.. இவ்வளவு நேரம் நாம என்ன பேசிகிட்டு இருந்தோம்னு கேளு.. எதுவும் தெரியாது அவங்களுக்கு..” என சப்பாத்திக்கு மாவு பிசைந்துக் கொண்டே கேலியாக கூறினாள் அம்ரிதா.

சிரித்துக்கொண்டே “போங்க பாப்பா.. வயசான காலத்துல இந்த சீரியல தவிர வேற என்ன இருக்கு எங்களுக்கு.. அதுவும் அவன் போடுற நேரம் தான் பார்க்க முடியும்.. நாங்க நினைச்ச நேரம் நினைச்சத பார்க்க முடியுது.. உங்கள போல டப்பா –வா இருக்கு எனக்கு.. இல்ல இருந்தாலும் எதுக்கு.. எனக்கு அத எப்படி கையில புடிக்கனும்னு கூட தெரியாது” என்றார் பொன்னம்மா.

பொன்னம்மா மீண்டும் டப்பா என்று சொன்னதில் சூடான ஆஷ்ரிதா “பொன்னம்மா……” என்கவும் “ஹாஹா.. சரி சரி விடு அச்சு” என கூறிய அம்ரிதா மோகன் விஷயத்தை பொன்னம்மாவிடம் கூறினாள்.

“என்ன சின்ன பாப்பா சொல்லுறீங்க.. நிசமாவா” – பொன்னம்மா வாயை பிளந்தார்.

“இதுல யாராவது பொய் சொல்லுவாங்களா பொன்னம்மா” – ஆஷ்ரிதா.

“அட அப்படி கேட்கல மா.. சரி.. அந்த கிரகம் புடிச்சவன் தான் போய் சேர்ந்துட்டானே.. இனி நீங்க அங்க வேலைக்கு போக மாட்டீங்கல?” என கேட்டார் பொன்னம்மா.

மோகன் இறந்துவிட்டான் என்பதை விட அம்ரிதா இன்னும் வேலை வேலை என தன் உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ள கூடாது என்பதே ஆஷ்ரிதா மட்டும் பொன்னம்மா ஆகிய இருவர் மனதிலும் பிரதானமாய் இருந்தது. அவளது பிரச்சனை என்ன என்பது அவளுக்கு தான் தெரியாது. இவர்களுக்கு தெரியும் அல்லவா?

‘வேலைக்கு போகமாட்டீங்க –ல?’ என பொன்னம்மா அம்ரிதாவிடம் கேட்டதும் “சூப்பர் பொன்னம்மா.. இதையே தான் நானும் நினைச்சேன்” என்றாள் ஆஷ்ரிதா.

ஏற்கனவே அம்ரிதாவுக்கு ஏற்படும் உணர்வு சிதறல்களை எண்ணி பயந்த ஆஷ்ரிதா இவளை வேலையில் இருந்து நிறுத்தி எவ்வாறு தன்னுடனே வைத்துக் கொள்வது என்ற யோசனையில் இருந்தாள். அதற்கு வழிவகுக்கும் விதமாய் நிகழ்ந்த மோகனின் மரணத்தை ஆண்டவன் தனக்கு அளித்த வாய்ப்பாகவே கருதினாள் அவள்.

“வேலைய விடுறத பத்தி நான் இன்னும் யோசிக்கலை பொன்னம்மா.. பார்ப்போம்” என்றாள் அம்ரிதா.

“என்னது பார்ப்போமா? ஹேய்.. அவன் அங்க இருக்கறதால தானே நீ அங்க வேலைக்கு போயே தீருவேன்னு இருந்த? இப்பதான் அவன் இல்லையே பிறகு என்ன?” என்று சிடுசிடுத்தாள் ஆஷ்ரிதா.

“ஓ.. அப்படீங்களா மேடம்.. சரி.. அந்த மோகம் என்ன படாத பாடு படுத்தறான்னு தானே அந்த வேலையை விட சொன்னீங்க ரெண்டு பேரும்? இப்ப தான் அவன் போய் சேர்ந்துட்டானே.. இனி என்ன உங்களுக்கு?” என்று புன்முறுவலுடன் கேட்டாள் அம்ரிதா.

“லூசா டி நீ.. நம்மகிட்ட நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவு சொத்து இருக்கு. ஏவனோ ஒருத்தன் நடத்துற கம்பெனியில போய் நீ இப்படி மாடு மாதிரி உழைக்கனுமா?” – கொஞ்சம் வலியுடனே வார்த்தைகள் வந்தது ஆஷ்ரிதாவிடம் இருந்து.

“அச்சு.. இப்ப எதுக்கு இவ்வளவு அவசரப்படுற.. இத பத்தி மெதுவா பேசிக்கலாம். இப்ப வா சாப்பிடலாம்” என்றாள் அம்ரிதா.

இவர்கள் இந்த பேச்சை பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சப்பாத்தி தயார் செய்து முடித்த பொன்னம்மா இருவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டார். வயிறார உண்டு முடித்து மூவரும் படுக்கைக்கு சென்றனர்.

உண்ட மயக்கத்தில் பொன்னம்மா ஆழ்ந்து உறங்கிப்போக, இரட்டை சகோதரிகளுக்கு தூக்கம் வரவில்லை. இருவரும் படுக்கையில் உருண்டுக்கொண்டே இருக்க

“அச்சு” என்று மெல்லமாக அழைத்தாள் அம்ரிதா.

“என்ன டி” – கண்களை திறக்காமலேயே கேட்டாள் ஆஷ்ரிதா.

“தூக்கமே வர மாட்டேங்குது டி” பாவமாய் கூறினாள் அம்ரிதா.

“எனக்கும் தான் டி” – ஆஷ்ரிதா இன்னும் கண்களை திறப்பதாய் இல்லை.

“நீ எனக்கு அந்த தோட்டத்து ரோஜா கதை சொல்லுவியே அத சொல்லுறியா நான் தூங்குறேன்” – அம்ரிதா.

“தோட்டத்து ரோஜா கதையா?” – ஆஷ்ரிதா புரியாமல் கேட்டாள்.

எதிரில் பதில் எதுவும் இல்லை.

“உன்ன தான் டி கேட்குறேன்” – மீண்டும் ஆஷ்ரிதா கேட்க அப்பொழுதும் அம்ரிதாவிடம் இருந்து பதில் வரவில்லை.

கண்களை திறந்துக்கொண்ட ஆஷ்ரிதா அம்ரிதாவை திரும்பிப் பார்க்க, அவளோ கண்களை மூடியவண்ணம் தலையை ஆட்டிக் கொண்டே கதை கேட்பது போலவே செய்கை செய்துக்கொண்டிருந்தாள். அவளது நடவடிக்கையின் மாறுதலை கற்பூரமென புரிந்துக்கொண்ட ஆஷ்ரிதா தனது அலைபேசியை எடுத்து வீடியோ பதிவு செய்ய எண்ணி அருகில் இருக்கும் மேசையை தடவினாள். அலைபேசி அவளது கைகளில் தட்டுப்படவில்லை. அப்பொழுதுதான் சார்ஜரில் போட்ட நியாபகம் வந்தது அவளுக்கு. மெதுவாக கட்டிலில் இருந்து எழுந்துக்கொண்டவள் வீட்டின் வரவேற்பு அறைக்கு சென்று சார்ஜரில் இருந்த அலைபேசியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

சத்தம் ஏதும் எழும்பாதவாறு அம்ரிதாவின் அருகே வந்தவள் அலைபேசியை அம்ரிதாவின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று கேமராவை செயலாக்கினாள். அதில் இருந்து வெளிப்பட்ட ஃப்ளாஷ் லைட்டின் வெளிச்சம் அம்ரிதாவின் முகத்தில் ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்த, அதில் சிணுங்கிய அம்ரிதா “முகத்துல டார்ச் அடிக்காதனு எத்தனை தடவ சொல்லிருக்கேன் அர்ஜுன்.. போடா” என ஆஷ்ரிதாவின் கையில் இருந்த அலைபேசியை தட்டிவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

அம்ரிதா அலைபேசியை தட்டிவிட்ட வேகத்தில் பதறிப்போன ஆஷ்ரிதா தனது கைகளால் வாயை பொத்திக்கொண்டு கட்டிலுக்கு கீழா சட்டென அமர்ந்துவிட்டாள். மேனி எங்கும் படபடக்க மெதுவாக நிமிர்ந்து அம்ரிதாவை காண, அவளோ ஆழமான துயில் கொண்டு அசையாதிருந்தாள். தற்பொழுது ஒரு பெருமூச்சு விட்ட ஆஷ்ரிதா கட்டிலுக்கு கீழேயே கால் நீட்டி அமர்ந்துக்கொண்டாள்.

“அர்ஜுன்.. அப்படி தானே சொன்னா அம்மு.? யார் அது அர்ஜுன்.. அப்போ அனேகன் சொன்னது உண்மைதானே.. முன் ஜென்மத்துல அம்முவுக்கு அர்ஜுன் –னு யாரையோ தெரியும். கரெக்ட்.” என எண்ணியவள் மீண்டும் அம்ரிதாவை வாஞ்சையாக பார்த்தாள்.

“நீ போன ஜென்மத்துல யாரா வேணும்னாலும் இருந்துக்கோ அம்மு.. அடுத்த ஜென்மத்துல கூட வேற யாராவது உனக்கு அக்காவா இருந்துக்கட்டும்.. இப்ப இந்த ஜென்மத்துல நீ எனக்கு வேணும்.. முழுசா என் தங்கச்சி அம்முவா வேணும்.. என்னால நீ இல்லாம இருக்க முடியாது அம்மு.. உன்ன யாருக்கும் நான் விட்டு தரமாட்டேன்..” என்றவள் தன் கண்ணில் துளிர்த்த துளிகளை துடைக்கவும் மறந்தவாறு அன்பு தங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ எப்பொழுது உறங்கிப்போனாளோ தெரியாது. காலை பொழுது விடியும் வேளையில் வெறும் தரையில் படுத்துக்கிடந்த ஆஷ்ரிதாவை அம்ரிதா தான் எழுப்பினாள்.

“அடியேய் எரும?! என்ன டி இங்க படுத்திருக்குற? எழுந்திரு டி” – அம்ரிதா.

காலை சோம்பலுடன் கண்விழித்த ஆஷ்ரிதா, தான் தரையில் கிடப்பதை மெல்ல மெல்ல உணர, முந்தைய நாள் இரவு நடந்தவை அனைத்தும் அவள் மனத்திரையில் வரிசையாய் காட்சியாகின.

‘அய்யோ நமக்கு முன்னாடி இவ எழுந்துட்டாளா? ஏன் இங்க படுத்து இருக்கேன்னு கேட்டா எப்படி சமாளிக்கிறது?’ என மனதினுள் யோசித்தவாறு எழுந்து அமர்ந்தாள் ஆஷ்ரிதா.

“என்ன டி நீ? எதுக்கு கீழ படுத்திருக்க” அம்ரிதா கேட்க திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“ஹாஹா” என அடக்க முடியாமல் சிரித்த அம்ரிதா “வழக்கம் போல தூக்கத்துல உன்ன மிதிச்சு கீழ தள்ளிட்டேனா?” என்றாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்த ஆஷ்ரிதா தப்பிக்கும் நோக்கத்துடன் ‘ஆமாம்’ என தலையாட்டி வைக்க, மீண்டும் ஒரு குபீர் சிரிப்பு சிரித்த அம்ரிதா எழுந்து பல் துலக்க சென்றுவிட்டாள்.

தரையில் இருந்து கட்டிலுக்கு இடம் மாறி அமர்ந்த ஆஷ்ரிதா சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து முந்தைய நாள் நடந்தவற்றை தன் மனதிற்குள் அசைப்போட்டுக் கொண்டிருந்தாள்.

“சீக்கிரமே அனேகனை பார்க்கனும்.. அம்ரிதா மோகன் வீட்டுக்கு போகட்டும். அந்த நேரம் நாம அனேகன் வீட்டுக்கு போகலாம். வரும்போது சி.சி.டி.வி. கேமரா விஷயமா பேசிட்டு வந்திடலாம்” என்று முடிவெடுத்துவிட்டு காலை வேலைகளை கவனிக்கலானாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)

error: Content is protected !!