JTE-2
JTE-2
“ஸாரி சார்” என்று அந்தப் பெண் சொன்னவுடன், அவளைத் திரும்பிப் பார்த்தான்.
என்ன நினைத்தாரோ ‘ஜீவன் சார்’ “பரவாயில்லை” என்று சொன்னார்.
அந்தப் பெண் திரும்பவும் அழ ஆரம்பித்தாள். அவளின் செய்கை சாதாரணப் பெண்ணிற்கானச் செயலாகத் தோன்றவில்லை. ஏதோ ஒரு விகற்பம் தெரிந்தது.
அத்தோடு மட்டுமில்லாமல், அப்பெண்ணின் அழுகை, ஜீவனுக்கு இடைஞ்சலாக இருந்தது.
இனிமேல் இயற்கையுடன் இணைய முடியாததால், இணையத்துடன் இணைந்து கொண்டான், ஜீவன்.
தூரலும் நின்று போயிருந்தது. ஆனால், இன்னும் அந்தப் பெண் அழுதுகொண்டே இருந்தாள். ஒரே ஒரு மாற்றம், இப்பொழுது ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே அழுதாள்.
‘லேசாகக் காதைமட்டும் கொடுத்துப் பார்த்தால் என்ன??’ என்று தோன்றியது, ஜீவனுக்கு.
அவனது செவிகள் சென்றுவிட்டு வந்து சொன்ன சேதி, “பாலண்ணா, பல்லவி சொல்றமாதிரி, நான் அந்த வீட்டுக்குப் போக மாட்டேன்” என்றதுதான்.
இந்த ஒரே வசனத்தைதான், அந்தப் பெண் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
நன்றாக, அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தான்.
இன்னும் அப்பெண், அதே வசனத்தை அழுகையின் ஊடே சொல்லிக் கொண்டே இருந்தாள்.
ஜீவன்தான் நன்றாகப் பேசுவானே, எனவே “எதுக்கு அழற?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
ஆனால், ஜீவனின் வினாவிற்கு, அந்தப் பெண் விடையேதும் எழுதவில்லை. மாறாக, வினா எழுப்பியவன் இருக்கும் திசையில் முகத்தைத் திருப்பினாள்.
இருக்கையின் மற்றொரு ஓரத்தில், இருந்த ஜீவனும் பார்த்தான். அவள், கண்களிரண்டும் கண்ணீரைத் தவிர இன்னுமொன்றைக் காட்டின, அது சோகம்.
அதைக் கண்டவனின் உள்ளம் ஏதோ… “ப்ச்” என்று சொல்லித் தலையை ஆட்டிக் கொண்டான். “ம்ம்ம், எதுக்கு அழற?” என்று திரும்பவும் கேட்டான்.
“பாலண்ணா…” என்று ஆரம்பிக்கப் போனவளை…
ஜீவன், “வெயிட்” என்று சொல்லி, நிறுத்தினான்.
கழுத்து எலும்புகள் புடைக்க, மீண்டும் அழ ஆரம்பிக்கப் போனாள்.
“பாலண்ணா??” என்று கேள்வியாகக் கேட்டு விட்டு, கைகளால் ‘யாரு?’ என்பது போல் சைகை செய்தான்.
“பாலாண்ணா… என் அண்ணா” என்றாள், கன்னத்தில் வழிந்தோடியக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
“ம்ம்ம் அப்புறம்” என்று யோசித்தவன், “ஆங்… பல்லவி யாரு??” என்றான்.
“பல்லவி… என் தங்கச்சி” என்றவளின் அழுகை ஓரளவிற்கு நின்றிருந்தது.
அழுகை நின்றிருந்தாலும், அந்தக் குரல் மட்டும், மெய்யெழுத்தின் மெல்லின வகையறா போன்றே இருந்தது. அப்பெண்ணின் குரல் சோகத்தை மட்டுமே பிரதிபலித்தது.
“அந்த வீடுன்னு சொன்னேல, அது யாரோட வீடு?” – இது ஜீவனின் கேள்வி.
முதலில், மட்டியைக் கடித்துக் கொண்டாள். பின் மூக்கை நன்றாக உறிஞ்சி கொண்டாள். கடைசியில் கண்கள் கண்ணீரைச் சுரக்கத் தயாராயின.
“அழாம சொல்லு, அந்த வீடுன்னா??”
“ம.. மத.. மதன் வீடு” – அந்தப் பெண்ணின் வார்த்தைகள் பிறழியது.
“ஓ! மதன். நைஸ் நேம். ம்ம்ம்.. சரி, மதன் யாரு?”
“ம்ன்” என்று, விழிகள் விரித்துக் கேள்வி கேட்டாள்.
“மதன் யாருன்னு கேட்டேன்?” என்று தெளிவாகச் சொன்னான்.
“மதன்… மதன் என்னோட ஹஸ்பண்டு”
“ஓகே ஓகே. ஸோ, மதன் வீட்டுக்குப் போகப் பிடிக்கல. கரெக்டா??” என்று மீண்டும் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டே கேட்டான்.
“ம்ம்ம்… ஆனா” என்று சொல்லி நிறுத்தி, இன்னும் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகளைச் சிதற விட்டாள்.
ஜீவன், “ஓகே கன்டின்யூ” என்று மொட்டையாகச் சொன்னான்.
அந்தப் பெண்ணிற்குப் புரியவில்லை. எனவே, “என்ன கன்டின்யூ??” என்று ஜீவனைப் பார்த்துக் கேட்டாள்.
“கான்வெர்ஷேசன் ஓவர். ஸோ நீ அழதுக்கலாம். அதான் கன்டின்யூ சொன்னேன். ஓகேவா” என்று சொல்லிவிட்டு, வலைதள வலையில் சிக்கிக் கொண்டான்.
ஆனால் அப்பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். புற உணர்வு ஏதோ ஒன்றைப் புரிய வைத்தது ஜீவனுக்கு. ஆதலால் மறுமுறையும் அப்பெண்ணின் முகம் பார்த்தான்.
‘வேறு ஏதாவது பேச முடியுமா??’ என்று அப்பெண் கேட்பது போல தெரிந்தது.
‘ப்ச், வேறென்ன கேட்க’ என்று யோசித்து விட்டு… “வீட்ல வேற யார் இருக்காங்க??” என்று கேட்டு வைத்தான் ஜீவன்.
“என் அப்பா”
“அம்மா??” – இது ஜீவனின் கேள்வி.
இல்லை என்று தலை மட்டும் அசைத்துப் பதில் எழுதினாள்.
மத்தியானப் பொழுதை நோக்கிப் பகல் பொழுது சென்று கொண்டிருந்தது. வானமும், மேகமும் மற்றும் மலைகளும் வரைந்து வைத்தச் சித்திரம் போன்று பளிச்சென்றுக் காட்சியளித்தது.
அந்த நேரத்தில், அவ்வழியே ஒரு தேநீர் வண்டி வந்தது. ஒரு நடுத்தர வயது மனிதர்தான் தேநீர் விற்றுக் கொண்டு வந்தார். ஜீவன் சைகை செய்து, அந்த மனிதரை நிற்கச் சொன்னான்.
வியாபாரம் ஆயிற்றே! அவரும் நின்றார்.
ஜீவன், “டீ குடிக்கலாமா??” என்று அப்பெண்ணிடம் கேட்டான்.
மறுப்பாகாகத் தலையசைத்தாள்.
“தூரல் நின்னிடுச்சு. இந்த நேரத்தில டீ குடிச்சா சூப்பரா இருக்கும்.” – ஜீவன்.
‘முடியாது’ என்று மறுத்து விட்டாள்.
ஜீவனும் ‘குடிக்கலைன்னா, நோ ப்ராப்ளம்’ என்பது போல் உடல் மொழியால் பதில் கொடுத்து விட்டுத் தேநீர் வண்டி நோக்கிச் சென்றான்.
ஒரு தேநீர் வாங்கிக் கொண்டவன், அதற்குரிய விலையைக் கேட்டான். விலை சில்லறையுடன் கொடுக்கும் மதிப்பில் இருந்ததால், தேநீரை எடுத்துக் கொண்டு, இருக்கையின் அருகில் வந்தான்.
இருக்கையின் நடுவே தேநீர் கோப்பையை வைத்துவிட்டு, தனது வாலெட்டிலிருந்து சில்லறையைத் துழாவினான்.
சரியானச் சில்லறைக் கிடைத்ததும், மீண்டும் தேநீர் வண்டியை நோக்கிச் சென்றான்.
பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பியவன், “ப்ச்” என்று சொன்னான்.
‘ப்ச்’ என்று சொன்னதற்குக் காரணம், அந்தப் பெண் தேநீரை எடுத்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.
வேறு வழியில்லாமல், மறுமுறை தேநீர் வாங்கிக் கொண்டு வந்தவன், இருக்கையின் ஓரத்திலே அமர்ந்து கொண்டான்.
முழுதும் குடித்து முடித்தப் பின்னரே, அவள் ஜீவன் இருக்கும் திசைக்குத் திரும்பினாள்.
மறுபடியும் அழ ஆரம்பிப்பது போல் அப் பெண்ணின், முகத் தோற்றம் தெரிந்தது.
‘வேறு ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமே!! இல்லாவிட்டால் இவள் மறுபடியும் கண்ணீர் சிந்துவாள்’ என நினைத்தான்.
‘என்ன கேள்வி கேட்க?? என்ன கேள்வி கேட்க மறந்தோம்?’ என்று மனதுக்குள் யோசித்தவன்… சட்டென ‘ஆங்! இதைக் கேட்கவே இல்லையே’ என நினைத்து, அவள் புறமாகத் திரும்பினான்.
“உன் பேர் என்ன??” என்று கேட்டான்.
அப்பெண் வாய்திறந்து பெயரினைச் சொல்வதற்கு முன்…” பவானி” என்று சத்தம் கேட்டுத் திரும்பினாள்.
ஜீவனும், பின்னாடித் திரும்பிப் பார்த்தான். பின்புறம் இருந்த செடி கொடிகளின் வழியாக, ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார்.
“யாரு?” என்று அவளிடம் கேட்டான்.
“அப்பா” என்றாள்.
“பவானிதான் உன் பேரா??”
“ஆமா”
“அப்பா பேரென்ன??”
“நாதன்”
“நைஸ் நேம்”
இப்போது, அந்தப் பெண் ஜீவனைப் பார்த்தாள். அவனும் பார்த்தான்.
என்ன தோன்றியதோ, அவளின் பார்வையில், “பவானியும் நைஸ் நேம்தான்” என்றான் ஜீவன்.
புன்னகை புரிவாள் என்று எண்ணினான். ஆனால் அவள் இதழ் விரியவில்லை.
மேட்டில் ஏறிக் கொண்டு, அவள் இருந்த இடம் நோக்கி வந்தார், பவானியின் தந்தை. நல்ல வயதான மனிதர்தான். நரைத்திருந்த மீசை மற்றும் தலை முடிகள். தளர்ந்த உடல். தொள தொளவென்று ஒரு பேண்ட் மற்றும் குளிரைத் தாங்கும் வண்ணம் ஸ்வெட்டர் அணிந்திருந்தார்.
மூக்குக் கண்ணாடி வேறு, அவரை மிகச் சாதாரணமாகக் காட்டியது.
இருக்கை அருகில் வந்ததும் “அப்பா” என்றாள், பவானி.
இந்த இடத்தில், ஒன்று சொல்லியே ஆக வேண்டும். அது, பவானியின் ‘அப்பா’ என்ற அழைப்பு. எத்தனை சோகம் வந்து, வார்த்தைகள் பிறழினாலும், ‘அப்பா’ என்று சொல்வது, அத்தனை அழகாக இருக்கும். மேலும் உச்சரிப்பின் போது, இரு உதடுகள் தொடுகையில் ஒரு அழுத்தம் கொடுப்பாள். கேட்பதற்கு, ஆகா! என்றிருக்கும்!!
“எவ்வளவு நேரம் இங்கேயே இருப்பம்மா?? வா வீட்டுக்குப் போகலாம்” என்றார், பரிவாக.
“அப்பா, மதன் அங்கே இருப்பாங்க, அதனால நான் வர மாட்டேன்”
“மதனும், அவங்க அம்மாவும் போயாச்சு பவானிம்மா. வா, அப்பா சொல்றேன்ல”
“இல்லைப்பா. பாலாண்ணா, பல்லவி திட்டுவாங்க.”
“அவங்க யாரும் உன்னையத் திட்ட மாட்டாங்க”
“ம்கூம்”
“இங்கப்பாரும்மா, பாலா பேக்டரி போகணும். பல்லவிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குது. இப்போ ரெண்டு பேரும் கிளம்பிருவாங்க. நீ வந்து அப்பா கூட இரும்மா”
“நான் வர மாட்டேன். இங்கேயே இருக்கிறேனே?? மதன் வீட்டுக்குப் போகவும் மாட்டேன்” என்று
“நீ எங்கயும் போக வேண்டாம். நம்ம வீட்டுக்கு வாம்மா” என்றார்.
திரும்பவும், பவானி அழ ஆரம்பித்தாள். ‘அவளைக் கட்டாயப் படுத்தக் கூடாது’ என்று மருத்துவர் அறிவுரை நினைவில் வந்ததால், நாதன் அமைதியானர்.
எதற்கிந்த அதிகப்படியான அழுகை என்று ஜீவனுக்குப் புரியவில்லை.
என்ன செய்வது என்று தெரியாமல், நாதன் ஜீவனைப் பார்த்தார். அவன் எழுந்து நின்றான்.
ஜீவன், “அவ ரொம்ப நேரமா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கா” என்று தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நுழைந்தான்.
பவானியின் தந்தை, ‘யார் இவன்?’ என்பது போல் பார்த்தார். பின்னரே அவன் சொன்ன விடயம் சுருக்கென்று தைத்தது. பெரியவர் அமைதி காத்தார்.
‘இவ்வளவு அமைதி, எதற்கு?’ என்று யோசித்த ஜீவன்… “ரொம்ப அழவும் செய்றா” என்றான்.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கைகளைப் பிசைந்து கொண்டு நின்றார்.
பின்னர், “அவளுக்கு மனசு கொஞ்சம் சரியில்லை” என்று உத்தேசமாகச் சொன்னார்.
“நானும் நினைச்சேன். கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சது” – ஜீவன்.
“அப்படியெல்லாம் இல்லை. அது.. அது ஒரு ஆறு மாசம் முன்னாடிதான். இப்… இப்போ… என் பொண்ணு…” என்று நிறுத்தினார்.
அதற்கு மேல், தன் பெண்ணின் உள நிலைப் பற்றிப் புதியவனிடம் சொல்லத் தோன்றவில்லை.
ஆனால் எதிர்வரும் நாட்களில், ஓர் நாள்! இவனிடம்தான், இந்தப் புதியவனிடம்தான், பவானியைப் பற்றி முழுதாகச் சொல்லப் போகிறார்… என்று நம்புவோமாக!!
நாதன் பேச்சை மாற்றுவதற்காக, “நான் உங்களை இங்கே பார்த்ததே இல்லையே” என்று கேட்டார்.
“ம்ம்ம். இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கேன்”
“ஓஹோ! எந்த வீடு??”
“இங்கிருந்து ஸ்ட்ரெயிட்டா நடந்தா, ஒரு ரோஸ் கலர் பில்டிங் வருமே?”
“ஓ! அது வள்ளிம்மா வீடாச்சே? அவங்களோட வீட்டுக்குத்தான் குடி வந்திருக்கீங்களா??”
“ம்ம்ம்”
“ரெண்டு நாள் முன்னாடி, இந்தப் பக்கமா வர்றப்போ… வள்ளிம்மா வீட்டுக்கு வெளியில, திறந்து கிடக்கிற ஜீப் நிக்கிறதைப் பார்த்தேன். அப்பவே நினைச்சேன். யாரோ புதுசா வந்திருக்காங்கன்னு. அது நீங்கதானா??” என்று ஒரு சிரிப்புடன் கேள்வியையும் பதில் போல் தந்தார்.
ஜீவனுக்கு கோபம் வந்தது. எத்தனை ஆசையாக வாங்கிய ஜீப்பை, இந்த மனிதர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று!
அதனால், “அது திறந்து கிடக்கிற ஜீப் இல்லை. ஓபன் ஜீப் மாடல்” என்று அவரைத் திருத்தினான்.
“சரி.. சரி… தம்பி” என்றார் சிரித்துக் கொண்டே!
இப்பொழுது அதை விடக் கோபம் வந்தது, ஜீவன் சாருக்கு.
“ப்ச், என் பேரு ஜீவன்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே…
“சரி. ஜீவன் தம்பி. அது ஓபன் ஜீப். போதுமா” என்றார், பவானியின் தந்தை.
“வெயிட் நாதன் சார். என் பேரு ஜீவன். ஜீவன் சாருன்னு கூப்பிடுங்க. இல்லைன்னா சாருன்னு கூப்பிடுங்க” என்றான் கண்டிப்பான குரலில்.
எதிரில் நின்ற மனிதர், ஜீவனை விகற்பமாகப் பார்த்தார்.
இதைக் கேட்பது, அவருக்கு இதுவே முதல் முறை. ஆனால், நாமும்.. இந்த மலைப் பிரதேசமும்… இன்னும் எத்தனை முறை இதைக் கேட்கப் போகிறமோ??
ஜீவன் சாருக்கே வெளிச்சம்!!
எதிரில் நின்றவருக்கு, இன்னும் ஒன்று உருத்தியது. அது என்னவென்றால் ‘தன் பெயர், இந்த சாருக்கு எப்படித் தெரியும் என்று?’
“ஜீவன் சார், என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்??”
“பவானிதான் சொன்னா” என்று, அமைதியாக இருந்தவளைக் கை காட்டினான்.
ஆம்! பவானியிடம் ஒரு மாற்றம். அழுகையை நிறுத்தி அமைதியாகி விட்டாள்.
வானிலையிலும் ஒரு சிறிய மாற்றம். கார் மேகங்கள் சூழ ஆரம்பித்தன.
நாதனுக்கு, ‘என்ன இவன்? புதிதாய் பார்த்தப் பெண்ணை மரியாதை இல்லாமல் அழைக்கிறான்’ என்று தோன்றியது. அவருக்கு இன்னும் ஒன்று தோன்றியது. அதனால் பின்வரும் கேள்வியைக் கேட்டார்.
“இவ பேரு பவானின்னு… எப்படித் தெரியும்?? ”
“நீங்க வர்றப்போ, அப்படித்தான சொல்லிக் கூப்பிட்டீங்க” என்றான்.
“ஆமா ஜீவன் சார். மறந்திருச்சு.” என்று சிரித்தார்.
ஜீவன் சிரிக்கவில்லை.
“சார், என்ன வேலை பார்க்கிறீங்க?” – நாதன்.
இவருக்கு எதற்குத் தன்னைப் பற்றிய விளக்கம் என்று எரிச்சல் வந்தது. ‘என்னைப் பற்றித் தெரிய வரும் போது, உங்கள் பார்வையும் பழகும் முறையும் மாறிவிடும்’ என்ற எண்ணம் வந்து சென்றது.
ஜீவனின் அமைதியை, நாதன் வேறு விதமாக எடுத்துக் கொண்டார். ஆதலால், கீழே உள்ள கேள்வியைக் கேட்டார்.
“வேலை இல்லைன்னா சொல்லுங்க ஜீவன் சார். என் பையன் பாலா, எஸ்டேட்ல சூப்பர்வைசரா இருக்கான். அவன்கிட்ட சொல்லி, ஏதாவது வேலை வாங்கித் தரச் சொல்றேன்”
“இல்லை நாதன் சார்! வேண்டாம். நான் ஆன்லைன்ல ஜாப் பண்றேன்”
நாதனுக்குப் புரியவில்லை.
அவருக்கு தன் வேலையை விளக்கும் பொருட்டு, “ஷேர் மார்க்கெட் இருக்குதுல்ல.” என்றான் ஜீவன்.
“ம்ம்ம்” – நாதன்.
“ஆன்லைன் ஷேர் டிரேடிங் பண்றேன். சில கம்பெனியோட ஷேர் வாங்கவும், விக்கவும் செய்வேன். இதான் என் வேலை நாதன் சார்”
“இதுல, வருமானம் எப்படி ஜீவன் சார்?? ” என்று சாதரணமாகக் கேட்டார் நாதன்.
ஆனால் ஜீவன், அவர் இளக்காரத் தொணியில் கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டான்.
எனவே, “நாதன் சார், நீங்க சொன்னீங்கள அந்த திறந்து கிடக்கிற ஜீப்பு…” என்று இழுத்தான்.
“ஆமா ”
“அது, இந்த வேலையில வந்த வருமானத்திலதான் வாங்கினது” என்று அழுத்திச் சொன்னான்.
‘இதற்கு மேல், இவனிடம் பேச வேண்டாம்’ என்று முடிவெடுத்துக், கிளம்ப நினைத்தார் நாதன்.
“பவானி, வாம்மா போலாம். ரொம்ப லேட்டாகுது. உனக்குப் பசிக்கும் பாரு” என்று இதமாக நாதன் சொன்னார்.
“இல்லைப்பா. ஜீவன் சார் எனக்கு டீ வாங்கித் தந்தாங்க” என்றாள், பவானி.
“அப்படியா??” என்று கேள்வியாகப் பவானியிடம் கேட்டுவிட்டு… “ரொம்ப நன்றி ஜீவன் சார்” என்றார் ஜீவனைப் பார்த்து.
“ப்ச்” என்று சொல்லி, ஜீவன் தலையை மறுப்பாக ஆட்டினான்.
“என்னாச்சு சார்?”
“இல்லை நாதன் சார். நான் எனக்காக வாங்கி வச்சிருந்த டீயைத்தான், பவானி எடுத்துக்கிட்டா”
நாதனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“ஏன் பவானிம்மா??” என்று வெளிப்படையாகக் கேட்டவரது மனம் வேறொன்றை யோசித்தது.
அது, ‘ஆறுமாத காலமாகத் தன்னிடம் மட்டுமே பேசுபவள், தேவையைக் கேட்பவள்… எப்படிப் புதியவனான இவனிடம் பேசினாள்’ என்றுதான்!
இதற்கிடையில் வானிலையில் ஒரு மாற்றம். லேசாகத் தூர ஆரம்பித்தது.
“ஸாரிப்பா” – பவானி.
“சும்மா இரும்மா” என்று மிகவும் லேசாகக் கடிந்து கொண்டார், நாதன்.
அதற்கு மேல், தனது செல்ல மகளைக் கடிந்து கொள்ள முடியாது.
மெதுவாக நிமிர்ந்து, “ஜீவன் சார்” என்று சொல்லி ஜீவனைப் பார்த்துச் சிரித்தார் நாதன்.
ஜீவன் சார் சிரிக்கவில்லை.
மாறாக, “டீ பன்னிரண்டு ரூபாய் நாதன் சார்” என்றான் ஜீவன்.
இப்பொழுது நாதனுக்கு, இன்னும் ஒரு மாதிரிப் போனது.
எனவே, “சரி ஜீவன் சார்” என்று சொல்லி தன் சட்டைப் பையிலிருந்து, பன்னிரண்டு ரூபாய் எடுத்துக்கொடுத்தார்.
ஜீவன் சார் வாங்கிக் கொண்டார்.
“பவானி, வா கிளம்பலாம்” – இது நாதன்.
“இன்னும் கொஞ்சம் நேரம் இங்கேயே இருக்கலாம்ப்பா ” என்று கெஞ்சிக் கேட்டாள் பவானி.
“இல்லை பவானிம்மா. போகலாம்”
“அவளுக்குப் பிடிச்ச இடத்திலயே இருக்கட்டுமே நாதன் சார்?” என்று வெகு சாதரணமாகச் சொன்னான் ஜீவன்.
இதனைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
‘இவனுக்கு என்ன தெரியும், என்று இப்படிச் சொல்கிறான்?’ என்று நாதன் எண்ணினார்.
‘தந்தையைப் போலத் தனக்காக யோசிக்கும், இன்னொரு ஜீவன்’ என்ற கோணத்தில், எண்ணத் தொடங்கினாள் பவானி.
ஆனால் ஜீவனுக்கோ, ‘இது வெறும் வாய் வாக்கியம்’ மட்டுமே!!
நாதன்தான் சுதாரித்துக் கொண்டு, “இல்லை ஜீவன் சார். அவளுக்கு மருந்து மாத்திரை கொடுக்கணும்” என்று சொல்லிக் கைப் பிடித்துப் பவானியை எழுப்பினார்.
பவானியும் எழுந்து கொண்டாள்.
இப்பொழுது தூரல் வலுத்திருந்தது.
“நான் கிளம்புறேன், சார்” என்று சம்பிரதாயத்திற்குச் சொல்லி நாதன் புறப்பட்டார்.
ஒற்றைத் தலையசைப்புக் கொடுத்து, நாதனை வழி அனுப்பினான்.
நாதன், பவானியை அரவணைத்து அழைத்துச் சென்றார்.
“ஜீவன் சார் வரேன்” என்று சொல்லித் தந்தையுடன் கிளம்பினாள்.
அவள் கூறிச் சென்றதைக் கவனிக்க கூட மறந்து விட்டான்.
திரும்பவும், அந்தக் கல் இருக்கையில் அமர்ந்து கொண்டான். பின் நோக்கி தலை சாய்த்துக் கொண்டு, கண்களை இறுக மூடினான்.
மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. கைக் கடிகாரத்தின் மேல் மழைத் துளிகள் வீழ்ந்து மணித்துளிகள் கரைய ஆரம்பித்தன.
ஜீவன், முகத்தின் மேல் விழுந்த மழைத்துளிகளை வாங்கிக்கொண்டும், தலை சிலுப்பி மலைத்துளிகளைக் கீழே வீழ்த்திக் கொண்டும்… சற்று நேரத்திற்கு முன் தான் விரும்பிய தனிமைக் கிடைத்ததை ரசிக்க ஆரம்பித்தான்.
தந்தையின் கைப்பிடியில் சென்று கொண்டிருந்த பவானி, திரும்பித் திரும்பி ‘ஜீவன் சார்’ இருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.