MT 12

MT 12

                                                      மாடிவீடு – 12

இன்று ஏழாவது திருவிழா,ஆலமரத்தான் சார்பாக திரைப்படம் போடப்பட்டிருந்தது. ஆறு மணிக்கே முதல் இடத்தை பிடிக்க எல்லாரும் போர்வை, பாய், தண்ணீர், கொறிக்க கடலை என்று கையில் எடுத்து செல்ல ஆரம்பித்தனர்.

ஏதாவது தின்னுக் கொண்டே ஊர் படம் பார்க்கும் சுகமே தனி தான். காலை முழுவதும் கோவிலை சுற்றி வந்து கொறிக்க தேவையான எல்லாம் வாங்கிக் கொண்டனர்.

எப்பொழுதும் ஆலமரத்தான் ஆட்களுக்கு தான் முன்னுரிமை உண்டும்.ஆலமரத்தான் குடும்பத்தார்களுக்கு நாற்காலியும், அவ சமூக ஆட்களுக்கு முதல் வரிசையும் ஒதுக்கப் பட்டிருக்கும். அவர்களுக்கு அடுத்து முதல் இடத்தை பிடிக்க வேகமாக எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள் அன்பு.

“அண்ணே! நான் உனக்கு இடம் போட்டு வச்சிருப்பேன், சீக்கிரமா ஐயாவையும், அம்மணியையும் கொண்டு விட்டுட்டு என்கிட்ட வந்திருக்கோணும்?” கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள் தங்கை.

“சரி சீக்கிரமா வரப்பாக்கிறேன்”

“அதென்ன வரபாக்கிறேன், கட்டாயம் வரோணும்”

“சரி வரேன்” என்றவன் வேகமாக ஆலமரத்தான் வீட்டை நோக்கி ஓடினான்.

இன்று தமிழ் புடவை உடுத்தி இருந்தாள். அவளின் திருமணத்திற்கென, ஆலமரத்தான் சேர்த்து வைத்திருந்த நகைகள் அணிந்து, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து, வானத்து தேவதையென ஜொலித்தாள் அவள்.

அவளை திருவிழாவுக்கு, அழைக்க வந்த அழகு, அவள் அழகில் ஒரு நிமிடம் சொக்கித் தான் போனான். இன்று தான் முதல் முறையாக, கண்டாங்கி மாடலில் புடவை அணிந்து அவளை வித்தியாசமாக அவன் பார்க்கிறான்.

ஐயாவும், அம்மாவும் முதலிலேயே கோவிலுக்கு செல்ல, தமிழை அழைத்து வரும் பொறுப்பை அழகுவிடம் கொடுத்திருந்தனர்.

புதிதாக கட்டியிருந்ததால் புடவை அவிழ்ந்து விடுமோ என்று பயந்து, பயந்து அன்னநடையிட்டு வந்தாள் தமிழ். அவன் அருகில் வந்தவள், “நான் எப்படி இருக்கேன் அழகு” அங்கும், இங்கும் தன்னை திருப்பி காட்டியபடி அவன் முன் நின்றாள்.

அவளை அசையாமல் பார்த்திருந்தான் அழகு. அவனின் அசையாப் பார்வையை கண்டவள் “என்ன அழகு எனக்கு இந்த புடவை நல்லா இல்லையா?”இப்படி பாக்குற,

எப்பவும் போல, தாவணி கட்டட்டுமா?” அவனிடம் மீண்டும் தன்னை திருப்பிக் காட்டியவாறுக் கேட்டாள்.

ஏனோ மிகவும் அழகாக தெரிந்தாள் அவள். அவனின் பார்வை மாற்றத்தைக் கண்டவள்,

“அழகு” என அழைத்தாள்.

மானசீகமாக தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டான். மிக பெரிய தவறு செய்வதாக தோன்றியது.

“புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு தமிழ்” மிகவும் தயங்கி தயங்கி தான் கூறினான். பின்னே இது மட்டும் யார் காதிலையாவது விழுந்தது அவன் உயிர் அவனுக்கில்லை.

“அம்மணி கொஞ்ச இங்கனையே நில்லுங்க?”  வேகமாக பின் வாசல் பக்கமாக ஓடினான்.

எங்க அழகு போற?”

“நில்லு தமிழ்” தேங்காய் எடுத்து வந்து,

அவளை கிழக்கு பக்கமாய் நிற்க கூறியவன்,அவளுக்கு திருஷ்டி கழித்தவன், அவளை அழைத்துக் கொண்டு, கோவில் நோக்கி சென்றான்.

அவன் கண்ணே பட்டிடும் போல் இருந்தது. அத்தனை அழகாக ஜொலித்தாள். இல்லை அப்படி அவன் கண்களுக்கு தெரிந்தாள்.

அத்தனை கூட்டமாக இருந்தது கோவில். பெரிய திரைக் கட்டி படம் போடுவதற்கு தயாராக இருந்தது.

ஆலமரத்தான் அருகில் தமிழுக்காய் சேர் போடப்பட்டிருக்க அதில் அமர்ந்துக் கொண்டாள்.

அன்பு, செல்வி, லிங்கம் அமர்ந்திருக்க அவன் அருகில் தன் அண்ணனுக்காய் ஒரு இடத்தை போட்டு வைத்திருந்தாள் அன்பு.

“நான் அங்க பசங்க கூட நிக்குறேன் அன்பு” தங்கையிடம் கூறியவன், கையோடு லிங்கத்தையும் அழைத்து சென்றான்.

எம்.ஜி.ஆர் படம் போட்டிருந்தார். இரண்டு வேடத்தில் எம்.ஜி.ஆர் தன் நடிப்பால் எல்லாரையும் கட்டிப் போட்டிருந்தார்.

தூரத்தில் நின்று தமிழ் முகத்தில் தோன்றிய உணர்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகு.

அவள் சிரிக்க, அவன் முகமும் மெல்லிய சிரிப்பை காட்டியது.

எதேச்சையாக திரும்பிய தமிழ் அவனை பார்த்து விட்டாள்.

ஆனாலும், அவன் இவளை தான் பார்கிறானா என்ற சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள்.

இப்பொழுதோ அவன், அவளைப் பார்க்கவில்லை.

அவள் பார்க்கும் பொழுது அவன் திரும்புவதும், அவள் பார்க்காத நேரம் இவன் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

பொறுத்து பொறுத்து பார்த்தவள், அந்த இடத்தை விட்டு கொஞ்சமாய் நகர்ந்து விட்டாள்.

அவன் யாரைப் பார்கிறான் என்று அவளுக்கு அறிய வேண்டி இருந்தது.

கொஞ்ச நேரத்தில் அவன் பார்வை இவள் பக்கமாய் திரும்ப, அவள் இல்லை என்றதும் ஒரு நிமிடம் ஜெர்க்கானவன், எங்கும் பார்வையை சுழற்றி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவளை தேட ஆரம்பித்து விட்டான்.

அவளுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது. அவன் மனதில் நான் இருக்கிறேன். இது போதும்… இது மட்டும் போதும், அவள் மனம் குதுகலிக்க. தன்னை மீறி கைகளை தட்டி இருந்தாள்.

ஆலமரத்தான் அவளை சந்தேகமாகப் பார்க்க எம்.ஜி. ஆரை ரசிப்பதுப் போல் முகத்தை மாற்றி இருந்தாள்.

அதன் பிறகு தமிழ் பார்வை திரையையே பார்க்க, அழகு கண்களோ தமிழையே பார்த்தது.

அவன் மனம் என்ன நினைக்கிறதென்று அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் தமிழின் காதல், அவள் கண்ணீர் அவனை கொஞ்சமாய் உருக்கி விட்டதென்னவோ உண்மை.

தான் ஏன் இப்படி மாறிபோனேன் இதற்கு விடையாகவும் அழகு கண்கள் தமிழைத் தான் பார்த்தன.  இத்தனை நாள் மறைத்து வைத்த காதல் அவனை மீறி கண்கள் வழியே கசிந்தன!

அவனின் எல்லா கேள்விக்கும் பதில் தமிழாக தான் இருந்தாள். இது காதல் இல்லாமல் வேறென்ன? காதலே தான்!

ஐயா வீட்டில் அவர்களை இறக்கி விட, ஆலமரத்தானும், அமுதாவும் முன்னே சென்றிருந்தனர்.

கோவில் படம் முடிந்ததும், சிறு பூஜைக்கு பின் திருநீர் கொடுக்க, பத்திரமாக கையில் கொண்டு வந்தாள் தமிழ்.

வண்டியை விட்டு இறங்கவும்“உன் பார்வை நானறிவேன் கண்ணா” என்றபடியே அழகுவுக்கு திருநீரை பூசி சென்றாள் தமிழ்.

அவளை பார்த்து சிரித்தபடி நின்றான் அழகு. இடையில் கட்டியிருந்த டவலை எடுத்து உதறி கழுத்தில் இருபக்கமும் போட்டபடி மெல்லிய சீட்டிகையுடன் வீட்டுக்கு சென்றான். 

தமிழின் தலைக்கு மேல் மின் விசிறி சுழன்றுக் கொண்டிருந்தது.

கண்ணுக்கு எதிரே அழுக்கு பையனாக அழகு கண்களில் தோன்றினான்!

ஊரில் எத்தனை பேரை பார்த்திருக்கிறாள். அவர்கள் யாருமே அவளை கவரவில்லை.

அவள் இன ஆண்கள் எத்தனை பேருக்கு படிப்பும், அழகும் இருக்கிறது அவர்களை கூட பிடிக்கவில்லையே?

ஆனால், அழகு உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டானே.

அன்பு, அக்கறை, பாசம், பொறுப்பு எல்லாம் ஒருங்கே பெற்ற முழு ஆண் மகன் அவன். அவனை வெறுக்க யாருக்கு மனசு வரும். ஏன்? தன்அப்பாவால் கூட அவனை வெறுக்க முடியாது.

அவள் கண்ணுக்குள் வந்து புன்னகைத்தான் அழகு! அப்படியே கண்ணயர்ந்தாள் தமிழ்.

 ################

அந்த பாயில் படுத்திருந்தான் அழகு. கண்களோ விட்டத்தையே பார்த்திருந்தது.

‘நான் அழகா இருக்கனா அழகு?’ கண்ணுக்குள் தமிழ் வந்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அழகுக்கு ஆச்சரியமாக இருந்தது!

நானா இப்படி நடந்துக் கொண்டேன்.

நினைத்துப் பார்க்க கூசியது. நெஞ்சம் இனித்தது.

கைகளைக் கொண்டு கண்ணை மறைத்துக் கொண்டு படுத்திருந்தான். கண்களில் தோன்றிய தமிழ் மறையவே இல்லை.

இன்று உறக்கம் வரும் போல் தெரியவில்லை. எழுந்து உலாத்திக் கொண்டிருந்தான்.

############

காலையில் அழகு வேலைக்கு செல்லவில்லை. அப்படியே பாயில் படுத்திருந்தான்.

“அண்ணே என்னாச்சு, ஐயா வீட்டுக்கு வரலியா?”

“இல்லம்மா… நீ போ அண்ணே கொஞ்சம் பொறுத்து வாறேன்”

அவனை பார்த்தபடி ஐயா வீட்டை நோக்கி நடந்தாள் அன்பு.

அந்த குளத்தில் நீந்திக் கொண்டிருந்தான் அழகு.

மனம் மிகவும் குழம்பி இருக்க, வயலை நோக்கி நடந்தான். தண்ணீரைப் பார்த்ததும் உள்ளே குதித்து விட்டான்.

தண்ணீர் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக நீந்திக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கே தமிழ் வந்தாள். குளத்தில் நீந்திக் கொண்டிருந்த அழகுவைக் காணவும் அவனிடம் விளையாட ஆசை வந்தது.

கண்களை எங்கும் சுழல விட்டாள். சுற்று வட்டாரத்தில் யாரும் அவள் கண்ணில் படவில்லை.

அவள் குளத்தில் குளித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், அழகு இருக்கும் தைரியத்தில் உள்ளே இறங்க எண்ணினாள்.

மெல்ல அவன் பின் பக்கமாய் சென்று, மெல்ல குளத்தில் இறங்கி அவனை நோக்கி சென்றாள்.

குளத்துக்குள் இறங்கும் வரை தான் குளிர் அவளை வாட்டியது, உள்ளே இறங்க இறங்க குளிரவில்லை. மெல்லஅவனை நோக்கி நடந்தாள்.

எதையும் நினைக்காமல் அவன் நீந்திக் கொண்டிருந்தான். மனம் அப்படி ஒரு அமைதியில் இருந்தது.

அவன் நீந்திக் கொண்டிருக்க, பின்னால் இருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவன் மனதில் தான் தமிழ் இருகிறாளே? அந்த தைரியம் தான்.

 டக்கென்று அழகு காலை இழுத்து, பின்னால்  திரும்ப, அவனை அணைத்துக் கொண்டு தண்ணீருக்குள் மூழ்கினாள் தமிழ்.

தண்ணீருக்குள் மூழ்கின பிறகு தான் தெரிந்தது அது தமிழ் என்று, ஒரு நிமிடம் தவித்து தான் போனான்.

“நீ எப்போ வந்த தமிழ்? இங்க என்ன பண்ணுற? கரைக்கு போ யாருனா பாத்தா பிரச்னை ஆகப் போகுது”

“பார்க்கட்டும் அழகு”

“என்ன பேசுற நீ?”

“ஏன் அழகு புரியாத மாதிரியே இருக்க. என் காதல் உனக்கு புரியவே இல்லையா? இல்லை அப்படி நடிக்கிறியா?”

“நான் இப்போ எதையும் புரிஞ்சுக்கிற நிலையில் இல்ல தமிழ்”

“நீ எதையும் புரிஞ்சுக்க வேண்டாம் அழகு, நான் உன் மனசில் இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும், அப்புறம் ஏன் மீண்டும் மீண்டும் என்னை காயப்படுத்துற?”

“உனக்கு எப்படி புரியவைக்க தமிழ்… என்னால் உன்னை எப்பவும் காயபடுத்த முடியாது தமிழ்”

“அப்போ சொல்லு உன் மனசுல நான் இருக்கனா இல்லையா? அதை மட்டும் நீ சொல்லு போதும்”

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ்… ஐயா எப்படி எனக்கு உயிரோ அதே போலத்தேன் நீயும்.”

‘இது இது தான் அவளுக்கு வேண்டும்’ அப்படியே அணைத்துக் கொண்டாள்.

இதற்கு மேல் என்ன வேண்டும் அவளுக்கு, தான் காதலிக்கும், காதலன் வாயில் இருந்து காதலை பெற்றுக் கொண்டாயிற்று. அப்படியே இறுக்க அணைத்துக் கொண்டாள்.

‘இவள் ஏன் தன் மேல் இத்தனை காதலை வைத்திருக்கிறாள்? நான் ஏன் இவள் கண்ணீரில் கலங்கிப் போகிறேன்?’ விடை தெரியாத கேள்வி அவனிடம்.

இனியும் அவளிடம் இருந்து மறைக்க தோன்றவில்லை. அன்று குடிசையிலே அவளை கண்டு தவித்து தான் விலகி சென்றான்.

தவிப்பு காதலாக மாறுமோ என்ற பயத்தில் தான் மீண்டும் மீண்டும் விலகினான். ஆனால் அவளின் நெருக்கம், அவளின் காதல் இனியும் அவனை விலக்கி வைப்பது போல் தோன்றவில்லை?

தன்னை மீறி அணைத்திருந்தான். தன்னலமற்ற அன்பு. எதற்கோ யாருக்கோ செலுத்தும் அன்பை, தன்னை நேசிக்கும் இவளுக்கு கொடுக்கலாமே?

என்றோ? எப்படியோ? செல்லும் உயிர் இவள் காதலுக்காய் செல்லட்டும். கள்ளம் கபடமில்லா இவள் காதலுக்கு இவன் கொடுப்பது அவனின் உயிர்!

தன் மேல் அத்தனை காதல் இவள் வைத்திருக்கும் பொழுது யாருக்கு ஏன் பயப்படவேண்டும்.

யார் வந்தாலும் எதிர்க்க தோன்றியது. இவள் காதலுக்காய். தன் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான அன்புக்காய் எதிர்க்க தோன்றியது.

வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். காதல் கொடுத்த குருட்டு தைரியம் இருவரிடமும். தமிழிடம் அது அளவுக்கதிகமாவே இருந்தது.

இருவருக்கும் இடையில் காதல் மட்டுமே நின்றது. காதலுக்கு கண்ணில்லை அது சாதி, மதம் பார்க்காது. அத்தகைய காதல் இவர்களது. எதிர்த்து நிற்க தோன்றியது. இனம், மதம், மொழி தாண்டி காதலில் நிற்க தோன்றியது.

பார்க்கலாம் யார் என்ன செய்துவிடுவார்கள்? காதல் கொடுத்தது அத்தகைய நம்பிக்கையை.

இருவரும் கரைக்கு வந்தனர். ஈர உடை. துவட்டிக் கொள்ளவும் தோன்றவில்லை. குளிர்ந்த காற்று சுகமாய் வீசி சென்றது.

வெகு நேரம் தண்ணீரில் நின்றதால் தமிழுக்கு பற்கள் தந்தி அடிக்க. உணர்வு வந்தது!

தன்னுடைய ஈர டவலை நன்றாக பிழிந்து, உதறி அவளிடம் கொடுத்தான்.

இருவரையும் இரு ஜோடி கண்கள் தவிப்புடன் பார்த்து விலகின. .கண்களோ பயத்தை கொஞ்சமாய் காட்டியது.

அழகுவை, அணைப்பதுப் போல் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

அத்தனை சந்தோசமாக இருந்தது. அவளின் ஆசை இன்று நிறைவேறி விட்டது. அவளின் அழகு அவளுக்கு கிடைத்துவிட்டான்.

‘இனி என்ன வேண்டும். அவனுக்காய் உயிரையும் கொடுக்கலாம்’ மனம் உறுதிக் கொண்டது.

இரு நெஞ்சங்களுக்கும் காதல் மட்டும் போதுமானதாய் இருந்தது. இப்பொழுது அதுவும் கிடைத்து விட்டது. இனி உயிர் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தன்னைப் போல் இருவருக்கும் வந்தது. காலம் தொட்டு அவர்கள் காதல் வாழும்.

##########

அழகுவுக்கு தூக்கம் என்பது கொஞ்சமும் வரவில்லை. காதல் வந்தால் எல்லாம் தியாகம் செய்ய வேண்டும் போல், அவனே கூறிக் கொண்டான்.

கண்ணுக்குள் தமிழ் வந்து சிரித்தாள். கண்களை மூடிக் கொண்டான். வெட்கம் வந்தது.

அட! அழுக்கு பையனுக்கும் ஒரு பெண்ணைக் கண்டு வெட்கம் வந்ததே? அவனே கூறிக் கொண்டான்.

நானா இப்படி மாறிப்போனேன்? தமிழை தொடவா செய்தேன்?

தொட்டானா? கட்டி அணைக்க அல்லவா செய்தேன்.

நான்எப்படி இப்படி ஆனேன்?

இப்பொழுதும் அணைக்க வேண்டும் போல் இருந்தது. தலைகாணியை எடுத்து அணைத்துக் கொண்டான்.

அட… இது கூட சுகமாய் தான் இருக்கிறது.

நாம் காதலிக்கிறதை விட, தான் காதலிக்க படுவது அத்தனை ஆனந்தமாக இருந்தது.

தன் உயிரை விட மேலாக காதலிக்கப்படும் பொழுது பேரானந்தமாக இருந்தது.

என்ன சுகம் இது?

பெண்மையில் உண்டான சுகம். அவள் காதலில் கிடைத்த சுகம்!

 

error: Content is protected !!