தேநீர் வாங்கிக்கொண்டு வந்தவன், அவளின் அருகில் வைத்தான். இருவரும் பருக ஆரம்பித்தனர்.
காலக்கடிகாரத்தின் ஒவ்வொரு நொடியும் நகரும் சத்தம் கேட்கம் அளவிற்கு அமைதி நிலவிய தருணங்கள் – இவை.
அப்பொழுது, அப்பக்கமாக முதல் தினம் நாம் சந்தித்த சிறுவர்கள் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். ஜீவன் இருப்பதைக் கண்டதும், தங்களுக்குள் ஏதோ ரகசியமாகப் பேசினர். பின் அவன் அருகே வந்ததும், முதலிரண்டு பையன்கள்..
“குட் மார்னிங் அண்ணா” என்று சொல்லி விரைவாகச் சென்றனர்.
“ப்ச்” என்று இருக்கையில் இருந்து எழுந்தான்.
அடுத்து வந்த இருவரும், “ஹலோ ஜீவன் அண்ணா” என்று சொல்லிச் சென்றனர்.
“ப்ச்” என்று சொல்லி சாலைக்கு வந்தவன், அடுத்து வந்த பையனைப் பிடித்துக் கொண்டான்.
‘மாட்டிவிட்டோமே’ என்ற எண்ணம், அந்தச் சிறுவன் முகத்தில் தெரிந்தது.
“சொல்லு, நீயும் சொல்லிட்டு போ” என்றான் ஜீவன்.
“ஸாரி, ஜீவன் சார்” – சிறுவன்.
“ஓ! ஸாரி. அதெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு கேம் விளையாடலாம். போனவங்களையும் கூப்பிடு”
“சார். கேமெல்லாம் வேண்டாம். ப்ளீஸ் சார்” – அன்று விளையாடி விளையாட்டு நியாபகம் வந்ததால், சிறுவனிடமிருந்து இந்தப் பதில்.
ஜீவன், ‘விளையாடமா விட முடியாது’ என்பது போல் பார்த்தான்.
அகப்பட்டச் சிறுவன், சற்று தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த மற்ற சிறுவர்களையும் அழைத்தான்.
இப்பொழுது ஜீவனைச் சுற்றி அனைவரும் நின்றனர்.
“என்ன கேம் சார்??” – சிறுவன்.
“ரெட் சிக்னல் அண்ட் கிரீன் சிக்னல்”
“எப்படின்னு சொல்லுங்க ஜீவன் சார்?” – சிறுவர்கள் மொத்தமாகக் கத்தினார்கள்.
“ஒரு லைன் ட்ரா பண்ணிக்கணும். அந்தக் கோட்டில நீங்க எல்லாரும் நிக்கணும். நான் கிரீன் சிக்கனல்னு சொல்றப்போ எல்லாரும் நடந்து வரணும். நான் ரெட் சிக்கனல்னு சொல்றப்போ..” – ஜீவன்.
“எல்லாரும் நிக்கணும். கரெக்ட்டா??” – விளையாட்டைப் புரிந்து கொண்ட சிறுவன்.
“கரெக்ட்”
“சார், நீங்க வேணா சைக்கிள்ல ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனா இந்தக் கேம் வேண்டாம்.” – அகப்பட்டச் சிறுவன்.
“முடியாது” என்று சொல்லிவிட்டு, சைக்கிளை இருக்கையின் அருகே நிறுத்தி விட்டு வந்தான்.
“சார் நீங்க கூட பெடல் பண்ண வேண்டாம். நான் பண்றேன். நீங்க பின்னால உட்கார்ந்து வாங்க” – சைக்கிள் பறிகொடுத்தச் சிறுவன்.
ஜீவன், “விளையாடினா சைக்கிள் கிடைக்கும். கம் ஆன்” என்று சற்று தூரத்தில் ஒரு கோடு வரைந்தான்.
வேறுவழியில்லாமல், சற்று நேரம் ஜீவன் சொன்னபடி விளையாடினர். பின்னர் சைக்கிளை வாங்கிக் கொண்டு ஓடி விட்டனர்.
ஜீவனின் செயல்கள், பவானிக்கு விசித்திரமானதாகத் தோன்றியது.
அவர்கள் சென்ற பின்னர், இருக்கையின் ஓரத்தில் வந்து அமர்ந்தான்.
“பவானி, இந்தப் பசங்கள உனக்குத் தெரியுமா?”
“ம்ம்”
“அப்போ நீயும் எங்ககூட வந்து விளையாடிருக்கலாமே??”
“ச்சே ச்சே, நான் எப்படி?”
“எப்போலெல்லாம் குழந்தையா மாற சான்ஸ் கிடைக்கோ, அப்பெல்லாம் மாறிடணும்”
“ம்ம்ம்”
“இந்த மாதிரி பண்ணா, மனசு ரிலாக்ஸாயிடும். உனக்கும் நல்லா இருக்கும்ல”
“ம்ம்ம்”
“பச், என்ன ம்ம்ம்? அட்லீஸ்ட் வாக்கிங்காவது போவியா??”
திடீரென்று எதற்கு இதைப் பற்றியப் பேச்சு என்பது போல் பார்த்தாள்.
“இல்லை வாக்கிங் வந்தா நல்லது தான. ஜென்ரலா சொன்னேன்”
“டாக்டரும் சொல்லிருக்காங்க. ஆனா அப்பா இந்த பெஞ்ச் வரைக்கும் வர்றதுக்குதான் அலோவ் பண்ணுவாங்க”
“ஓ, அப்போ நாதன் சாரையும் கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே”
“இல்ல அப்பாவுக்கு முடியாது”
“ஏன் ??”
“அப்பாக்கு ரெண்டு தடவ ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. ஸோ…” என்று நிறுத்தினாள்.
“அப்போ, பர்ஸ்ட் அவர்தான் வாக்கிங் வரணும்”
பவானி கண்களைச் சுருக்கி கோபமாக, ஜீவனைப் பார்த்தாள்.
“சாரி. நாதன் சார் பத்திச் சொன்னா உனக்கு கோபம் வருமில்லையா??”
“எனக்கும் தோணும் சார்…” என்று இழுத்தாள்.
“என்ன தோணும்?”
“அப்பா வாக்கிங் வந்தா… அவர் உடம்புக்கும் நல்லதுன்னு. பட், நைட் பார்ட் டைம் ஜாப்புக்கு போவாரு. அதனால காலையில எந்திரிக்கிறது கஷ்டம்”
“ஓ! மணி ப்ராப்ளம் இருக்கா?”
“ம்ம்”
“சரி, நீ மட்டும் போலாம்ல”
“தனியா போகக் கொஞ்சம் பயமா இருக்கு ஜீவன் சார்”
“ஓ”
ஜீவனின் கைக் கடிகாரத்தின் ஓசைகள் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவிய தருணங்கள் – இவை.
“பவானி ஒரு ஐடியா!! நான் டெய்லி சிக்ஸ்க்கு ஜாக்கிங் முடிச்சுட்டு வருவேன்.”
“ம்ம்ம்”
“அந்த டைம்க்கு நீயும் வந்திரு. நான் துணைக்கு இருக்கேன். நீ பயப்படாம வாக்கிங் போ”
அவள் யோசித்தாள்.
“ப்ச், யோசிக்காத பவானி. உனக்கு ரிலாக்ஸா இருக்கும்”
“ம்ம்ம்”
“குட். ஓகே பை. நான் கிளம்புறேன்” என்று சொல்லி எழுந்தான்.
அச்சமயம், பவானியை அழைத்துச் செல்ல நாதன் வந்தார்.
ஜீவனைப் பார்த்ததும், “வணக்கம் சார்” என்றார் நாதன்.
“வணக்கம்” என்று ஒரு சிறு தலையசைப்புடன் பதில் தந்துவிட்டுச் சென்றான்.
நாதனும் பாவனியைக் கூட்டிக் கொண்டு வீடு சென்றார்.
*****
மலைப்பிரதேசத்தில் இரவுப்பொழுது.
சுற்றிலும் கருமை படர்ந்த பசுமை மலைகள். ஊசியாக நெடுநெடுவென வளர்ந்திருந்த மரங்கள். இவைகளால் இரவில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனைவரும் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்திருந்தனர்.
பவானியின் வீடு, ஒற்றைக் குண்டு பல்ப் தந்த வெளிச்சத்தை வாங்கிக் கொண்டிருந்தது. பவானி, வீட்டின் வாயிற் படியில அமர்த்திருந்தாள்.
சமையல் முடித்துவிட்டு, நாதனும் வாயிற்படிக்கு வந்தார்.
“பவானி, ஏன்மா இப்படிக் குளிர்ல உட்கார்ந்திருக்க??”
“சும்மாதான்ப்பா. நீங்களும் உட்காருங்களேன். உங்ககிட்ட ஒன்னு பேசணும்” என்றாள்.
காலையில், ஜீவன் சொன்ன விடயத்திற்காக, தந்தையிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று நினைத்தாள்.
பவானி சொன்னவுடன், நாதனும் மேற் படியில் அமர்ந்தார்.
“சொல்லும்மா?”
பவானி சொல்ல ஆரம்பிப்பதற்குள், எஸ்டேட்டில் இருந்து வேலை முடிந்து பாலா வந்தான்.
“வாடா. என்ன இன்னைக்கு லேட்?” – நாதன்.
“பையனப் பார்க்கப் போயிருந்தேன்” – பாலா.
“நல்லாயிருக்கானா??”
“அது இருக்கட்டும், மதன் போஃன் பண்ணாரா??”
“ம்ம்ம். பண்ணாரு. காலையில, நீ போனதும் பண்ணிட்டாரு”
“இவ பேசினாளா?”
“பேசிட்டா பாலா”
“என்ன சொன்னாரு?”
“புதுசா என்னடா சொல்லுவாரு. அவருக்குத் தேவை விவாகரத்து”
“ம்ம்ம். நீ சைன் போடறேன்னு சொல்லலைல” – இப்படி பவானியிடம் கேட்டான் பாலா.
‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தாள், பவானி.
“பாலா, வந்ததும்.. இதான் கேட்பியா?? போ…போய்ச் சாப்பிடு” – நாதன்.
“அப்பா.. மதன் வீட்ல, அவருக்கு வேற பொண்ணு பார்க்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன்.”
“அப்படியா!? தெரியலே பாலா”
“உன்கிட்ட ஏதாவது அதைப் பத்திச் சொன்னாரா?” – இது பவானிக்கு பாலாவின் கேள்வி.
‘ம்மம்’ என்பது போல் தலை அசைத்தாள், பவானி.
“பாருங்கப்பா. அவருக்கு எவ்ளோ தைரியம். நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது”
“… ” – நாதனும் பவானியும்.
“இவளை இப்படி அம்போன்னு விட்டுட்டு, அவர் வேற கல்யாணம் பண்ணிடுவாரா?”
“…..” – நாதனும் பவானியும்.
“நீ மட்டும் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போட்ட, இந்த வீட்ல இருக்க முடியாது” – இது பவானிக்கு பாலாவின் எச்சரிக்கை.
“போதும் பாலா, முதல நீ உள்ளே போடா” என்று பாலாவை உள்ளே அனுப்பினார், நாதன்.
பாலா சென்றவுடன்…
பவானி அமைதியாக இருந்தாள்.
“பவானி சொல்லுமா. ஏதோ சொல்ல வந்தேல?”
“ஆங் அப்பா, நாளையிலருந்து நான் வாக்கிங் போகட்டா??”
“என்னம்மா திடீர்னு??” என்று சிரித்தார்.
“அப்பா, டாக்டர் சொன்னதுதான?”
“ஆமா. ஆனா நீதான், பயமா இருக்கு வேண்டாம்னு சொன்னியே”
“சொன்னேன் ப்பா. ஆனா, இப்போ ஜீவன் சார் துணைக்கு இருக்கேன்னு சொன்னாங்க. அதான் …”
மறுநொடியே “அது எதுக்கும்மா?? அவருக்குத் தொந்தரவு. வேண்டாம்” என்று மறுத்தார்.
“இல்லப்பா. ஜீவன் சார் அப்படி நினைக்க மாட்டாங்க. அப்படி அவங்க நினைச்சிருந்தா, என்கிட்ட சொல்லியிருக்கவே மாட்டாங்க”
“பவானிம்மா, உனக்கு வாக்கிங் போகணும்னா, அப்பா கூட்டிட்டுப் போறேன்”
“அப்ப எதுவுமே வேண்டாம் ப்பா” என்று சொல்லி முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.
ஒரு தந்தையாக, கண்டிப்பாக இதற்கு அவர் மனம் ஒப்பவில்லை. ஆனால், இந்த ஆறு மாதத்தங்களில், இதுவே முதல் முறை பவானி தனக்கென்று ஒன்றைக் கேட்பது. ‘ஆனால், எது அவளை இப்படிக் கேட்க வைத்தது’ என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
அவர் யோசிப்பதைப் பார்த்தவள், ” அப்பா, நான் ஜீவன் சார் சொல்ற மாதிரி கேட்கட்டா??” என்று கேட்டாள்.
பவானியின் பேச்சைக் கேட்டவருக்கு ஆச்சிரியமாக இருந்தது.
“அப்பா… சொல்லுங்கப்பா. நான் ஜீவன் சார் சொல்றமாதிரி கேட்கிறேனே??” என்று கெஞ்சினாள்.
திடீரென்று பாவானிக்குள் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கின்றாரா? முதன் முதலாக, நாதனுக்கு ‘ஜீவன் யார்? எங்கிருந்து வந்தார்? எப்படிப்பட்டவர்?’ என்று அறிய, அவர் மனம் அரிக்கத் தொடங்கியது.
எனினும், அவள் மனம் நினைப்பதை மறுத்துக் கூறுவது நல்லதல்ல, என்று நினைத்தவர், “சரிம்மா. பார்த்துப் போ” என்று அரை மனதாகச் சம்மதித்தார்.
“ம்ம் சரிப்பா” என்றாள்.
“சரி வாம்மா. சாப்பிடலாம். அப்பா வேலைக்குப் போகணும்” என்று தானும் எழுந்து, அவளையும் எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றார்.
*****
மலைப் பிரதேசத்தின் நாட்காட்டியில் மற்றொரு நாள் ஆரம்பமானது..
தெளிவாய், இயற்கையைக் காண முடியாதபடி, பனி சூழ்ந்திருந்தது. காலை ஆறு மணி என்று கடிகாரம் உணர்த்தினாலும், அது காட்டும் நேரம் தவறோ என்பது போல், இருள் பிரிய மறுக்கும் காலைப் பொழுது உணர்த்தியது.
அங்கங்கே வீடுகளில் தெரிந்த விளக்கொளியின் உதவியுடன், பவானி மஞ்சள் வர்ண கல் இருக்கைக்கு வந்து சேர்ந்தாள்.
இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். அவள் நடைப் பயிற்சிக்காகக் காத்திருக்கின்றாள் என்றால், அது உண்மையல்ல.
ஆனால், அவளின் அன்றையக் காத்திருப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. அடுத்தடுத்து வந்த நாட்களிலும் இதே ஏமாற்றத்தை உணர வைத்தான் ஜீவன்.
நான்காவது நாளில்…
அன்று கொஞ்சம் வெளிச்சம் பரவிய, அதிகாலைப் பொழுது…
ஓட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தவனின் பார்வைக்குள், இருக்கையில் அமர்ந்திருந்தவள் தெரிந்தாள். அப்பொழுதான் நியாபகம் வந்தது, அவளுக்குக் கொடுத்த நம்பிக்கை.
மூச்சிரைக்க, லேசான வியர்வை அரும்பிய நிலையில், அவள் முன்னே சென்று நின்றான்.
“பவானி”
கடந்த மூன்று நாட்களாய், கிடைத்த நிராசையால், நிமிர்ந்து பார்க்கும் நிலையில் இல்லை, பவானி.
இன்னும், அவள் முன்னேயே நின்றான்.
“பவானி, டெய்லி வந்து வெயிட் பண்ணியா??”
“…..”
“சாரி பவானி. உன்கிட்ட சொன்னது மறந்து போச்சு.”
“…..”
“சாரி பவானி” என்று திரும்பவும் சொன்னான்.
அவளின், அன்றையக் காத்திருப்பை ‘தேவையில்லா காத்திருப்பு’ என்று சொன்னவன், இன்றைய அவளின் காத்திருப்பின் தோல்விக்கு மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு வந்திருந்தான்.
ஆனால், பவானி மன்னிப்பை ஏற்கும் நிலையில் இல்லை.
சட்டென்று “பவானிம்மா” என்றான்.
நிமிர்ந்து பார்த்தாள். விளையாட்டாய் சொல்லி, அவள் விருப்பங்களைச் சேகரிக்க ஆரம்பித்தான்.
“அப்படித்தான நாதன் சார் சொல்லிக் கெஞ்சுவாரு” என்று அழைப்பிற்கு காரணம் வேறு கற்பித்தான்.
பவானியின் அப்பா பெயரைச் சொல்லி விளையாடுவதே, ஜீவன் சாருக்கு வேலையாய் போயிற்று!
“ப்ச், நிமிர்ந்து பார்த்திட்ட. ஸோ கோபம் போயிருச்சுன்னு அர்த்தம். இனிமே ஸாரி கேட்க முடியாது பவானி” என்று கைகளை ஆட்டியபடிச் சொன்னான்.
அவள் சிரிப்பாள் என்று நினைத்துச் சொன்னான். அவள் சிரிக்கவில்லை. ஆனால் அவன் சொல்லிய விதம், நாமும் சிரித்துப் பார்த்தால் என்ன?? என்று தோன்ற வைத்தது.
“பவானி”
“ம்ம்ம்” என்று சமாதானமானாள்.
“சரி, கெட் ரெடி. இன்னைக்கிலிருந்து ஸ்டார்ட் பண்ணலாம். ஓகேவா” என்று உற்சாகம் நிறைந்த குரலில் பேசினான்.
“ம்ம்ம்”
“வா” என்று சொல்லி சாலையின் புறமாகச் சென்றான்.
“பவானி, இங்கிருந்து ஸ்ட்ரெயிட்டா ரோடு தெரியுதுல்ல”
“ம்ம்ம்”
“அப்படியே நடந்து போகணும்”
“நான் இங்கதான் நிப்பேன். ஸோ பயப்படாம போயிட்டு வா. சரியா”
‘சரி’ என்பது போல் தலையாட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
பவானியின் நடைப்பயிற்சி நாட்காட்டியில்…
முதல் நாள்…
பவானி, ஜீவனின் விழிப் பார்வை விழுகின்ற தூரத்திற்குள், நடக்க ஆரம்பித்தாள்.
பவானி சென்றபின்… ஜீவன்…
அவள் திரும்பி வரும் வரை, என்ன செய்வது?? என்று தெரியாமல், கைப்பேசியில் இணையத்திடம் கேள்வி கேட்டுப் பார்த்து, பொழுதைக் கழித்தான்.
பவானி திரும்பி வரும்போது, ஜீவன் அதே இடத்தில நிற்பதைப் பார்த்தாள்.
ஜீவனின் பாதுகாப்பு வலைக்குள், சுற்றித் திரியும் பட்டாம்பூச்சி போல் பவானியின் மனம் இருந்தது.
இருக்கைக்குச் சென்று சற்று நேரம் அமர்ந்திருந்து, பின்னர் இருவரும் விடைபெற்றுக் கொண்டனர்.
இரண்டாம் நாள்…
அன்றைய நாள், கருமை விலகா காலை விடியலாக இருந்தது. ஜீவன் ஓட்டம் முடித்து வருவதற்கு முன்னே, பவானி வந்து காத்திருந்தாள்.
சிறிய பொழுதுகள் சென்ற பின், ஜீவன் வந்தான்.
சாலையின் ஓரத்தில் நின்றவாறே, “குட் மார்னிங் பவானி.” என்று சொன்னான்.
“குட் மார்னிங்”
“ரெடியா??” என்று கேட்டு ‘எழுந்து வரும்ப்படி’ சைகை செய்தான்.
“ம்ம்ம்” என்றவள், அவள் இருந்த இடத்திலிருந்து முன்னேறி, ஜீவன் நிற்கும் இடத்திற்கு வந்தாள்.
நேற்று எந்த இடத்தில நின்றானோ, அதே இடத்திலே இன்றும் நின்று கொண்டு, “ஸ்டார்ட் பண்ணு” என்று சொல்லி, ஒற்றை விரலைச் சாலையை நோக்கி நீட்டினான்.
அவள் ஆரம்பிக்கும் பொழுது…
ஜீவன், “ப்ச், பவானி வெயிட்” என்று சொல்லி, அவள் அருகில் வந்தான்.
“என்ன சார்?”
“ம்ம், ரொம்ப இருட்டா இருக்கிதுல்ல. ஸோ, என்னோட மொபைல் எடுத்துட்டுப் போ” என்று கைப்பேசி டார்ச்சை ஒளிரச் செய்தான்.
“ஜீவன் சார், உங்களுக்கு போரிங்கா இருக்காதா?”
“இருக்கும். பட் அதைவிட, உன்னோட சேப்டீ முக்கியமில்லையா?”
ஜீவன், பவானியின் பாதுகாப்பைப் பற்றிப் பேசி, அவள் மனதின் பக்கம் வந்தான்.
“இல்லைன்னா, நாதன் சாருக்கு நான்தான பதில் சொல்லணும்”
பக்கம் பக்கமாக, பவானியின் பாதுகாப்பைப் பற்றி பேசினாலும்… ஜீவன் சாருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது! இதுதான் சொல்ல முடியும்!!
“சரி, கொடுங்க” என்று வாங்கிச் சென்றாள்.
பவானி சென்றபின்… ஜீவன்…
இன்று இணையத்திடம் கேள்விகள் கேட்க முடியாது என்பதால், இதயத்திடம் கேள்விகள் கேட்டுப் பார்த்தான். முதல் கேள்வி கீழே.
“நான் ஏன் இந்தப் பெண்ணிற்காக இப்படி? இங்கே? நிற்க வேண்டும்?”
இருதயம் பதில் எழுத முடியாமல், இழுத்தடிக்க ஆரம்பித்தது. ஆதலால் அடுத்தக் கேள்விக்கே வழியில்லாமல் போயிற்று!!
அவள் வந்தவுடன்…
இன்று தேநீர் பருகல்களுடன், இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.
மூன்றாவது நாள்…
லேசானத் தூறலுடன் காலை விடியல் இருந்தது…
பவானி, நேற்று எந்த இடத்திற்கு முன்னேறி வந்தாளோ, அதே இடத்தில் நின்று கொண்டு, இன்று காத்திருந்தாள்.
ஜீவனும் வந்தான்.
எவ்வித உரையாடலும் இன்றி, பவானி நடக்கத் தொடங்கினாள்.
“பவானி” என்ற ஜீவனின் குரல் கேட்டு நின்றாள்.
இன்று, பவானி நிற்கும் இடத்திற்கு, ஜீவன் முன்னேறி வந்தான்.
“என்ன ஜீவன் சார்?”
“ம்ம்ம், நானும் உன்கூட வரேன்” என்று சொல்லி, ‘நடக்க ஆரம்பி’ என்று சைகை செய்தான். ஜீவனும் பவானியுடன் நடக்க ஆரம்பித்தான்.
ஜீவனுடன் நடைப்பயணம், பவானி மனதை நடமாடும் தேன்கூடு போன்று ஆக்கியது.
“ஜீவன் சார்” என்று மென்மையாக கூப்பிட்டாள்.
அவளுடன் நடந்தவாறே, “ம்ம்ம் சொல்லு” என்றவனின் கண்கள் கைப்பேசியிடம் இருந்தது.
“ஏன் என்கூட நடந்து வர்றீங்க?” என்றவள் குரல் அத்தனை மெலிதாக ஒலித்தது.
“ப்ச், தூறல் விழுதுல்ல பவானி. ஸோ ஒரே இடத்தில நின்னா ரொம்ப நனைஞ்சிடுவேன். அதான் இப்படி நடக்கிறேன்”
ஜீவன் சாரின் மனம் ஒரு வெற்றுக் கூடு! வேறென்ன சொல்ல!!!
நடை முடிந்து திரும்பியவர்கள், ஒரிரு நொடிகள் பேசிவிட்டு விடை பெற்றனர்.
நான்காவது நாள் …
அன்றைய தினம் காலைப் பொழுது கடுங் குளிரோடு ஆரம்பமானது.
பவானி வருவதற்கு தாமதமானது. ஆதலால் ஜீவன், இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து காத்திருந்தான்.
முதல் காத்திருப்பு.
கடிகாரத்தின் வினாடி முள் ஒரு ஐந்து முறை நகன்றிருக்கும், பவானி வந்தாள். எந்த ஒரு முகமனும் இல்லாமல், இருக்கையின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன லேட்?? போலாமா??” என்று வினா எழுப்பினான் ஜீவன்.
பவானி, “வேண்டாம்” என்று விடை எழுதினாள்.
“ஏன்??”
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், பவானியின் முகம் எரிச்சலைக் காட்டியது. அவள் அன்று அசாதாரணமாகத் தெரிந்தாள். எதிலும் கவனம் இல்லாமல் இருந்தாள்.
“என்னாச்சு பவானி??”
“ஒண்ணுமில்ல. வாக்கிங் போக வேண்டாம் ” என்றவளின் இமைகள் படபடவென, வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தன.
அவளின் முகத் தோற்றத்தைப் பார்த்தவன், “ஓகே, ஓகே… கூல்” என்றான்.
ஏதோ அவள் மனம் சரியில்லை என்று நினைத்தான். அதன் போக்கை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து, “பவானி உன்னோட ஹாபி என்ன?” என்று கேட்டான்.
பவானி கவனிக்கவேயில்லை.
“பவானி”
“ம்ம்”
“உன்னோட ஹாபி என்னன்னு கேட்டேன்?”
“ம்ம்ம்..” ன்று யோசித்தவள், “கிளாத்ல திரட் ஒர்க் பண்ணுவேன்” என்றாள்.
“இப்பவும் பண்ணுவியா??”
ஏற்கனவே இருந்த மனநிலையில், முந்தைய வாழ்வையும், தற்பொழுது வாழ்வையும் ஒத்துப் பார்க்க ஆரம்பித்தாள். அதனால் மேலும் அவளுக்கு எரிச்சல் வந்தது.
எரிச்சலாக உணர்வது, எதிலும் கவனமில்லாமல் இருப்பது மற்றும் கத்திப் பேசுவது, அவள் உள நோயின் பாதிப்பின் ஒரு பகுதிதான்.
“பவானி”
“ம்ம்”
“நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லல”
எரிச்சலுடன் எழுந்தவள், “எல்லா கேள்விக்கும், எப்பவும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது ஜீவன் சார்.” என்று சத்தமாகக் கத்திவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
பின்னேயே சென்றான், ஜீவன்.
கடகடவெவென, பவானி மலைச் சரிவில் இறங்கினாள். அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகளால், ஜீவனின் மனது சுமை ஏறுவது போல் உணர்ந்தது.
சற்று நேரத்தில் மனச் சுமை அதிகமானதால், உள்ளம் கனக்க ஆரம்பித்தது. அந்தக்கணம், தனக்கும் உள்ளம் என்ற ஒன்று இருப்பதாய் உணர்ந்தான், ஜீவன்.
அவன் உள்ளம் உணர்ந்ததை, உதடு உதிர்ததது. ‘பவானி’ என்று உச்சரித்துப் பார்த்தான்.
*****
நாதனும், பாலாவும் உறக்கத்தில் இருந்தனர். பல்லவி மட்டும் விழித்திருந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்த, பவானி நேராகச் சென்று, கட்டிலில் அமர்ந்து கொண்டாள். இன்னும் அதே தோற்றம்தான். அதே நிலைதான்.
“பவானி, கொஞ்சம் எழுந்திரு, என்னோட ரெகார்ட் நோட், இங்கே இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன் ” – பல்லவி.
“பவானி”
“கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா??” என்று பயங்கரமாகக் கத்த ஆரம்பித்தாள்.
அவளின் கத்தலைக் கேட்டு, வரவேற்பறையில் தூங்கிக் கொண்டிருந்த நாதன் எழுந்தார்.
“என்னாச்சு பல்லவி?” – நாதன்.
“அப்பா.. அவ அப்நார்மலா இருக்கா” என்று தந்தையின் அருகே வந்தாள், பல்லவி.
“இரு அப்பா பார்க்கிறேன்” என்று பாவனியிடம் சென்றார்.
“பவானிம்மா, என்னாச்சு??”
“பேசாம இருங்கப்பா” என்று கத்திக் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா என் ரெக்கார்ட் நோட்டை தரச் சொல்லுங்க. அவ பக்கத்தில இருக்குதுப்பா” – பல்லவி.
அதைக் கேட்ட பவானி, தன் அருகில் இருந்த நோட்டை எடுத்து எறிந்தாள்.
“ஏய்! அது ரெக்கார்ட் நோட்” என்று பல்லவி கத்தினாள்.
அந்தக் கத்தலில், உள்ளறையில் உறங்கி கொண்டிருந்த பாலா எழுந்து வந்தான்.
“என்ன பல்லவி?” என்று கேட்டான் தூக்கக் கலக்கத்தில் இருந்த பாலா.
பல்லவி பதில் சொல்லாமல், பவானியைப் பார்த்தாள். பாலாவும் பார்த்தான். அவனுக்குப் புரிந்தது.
இப்போது எதுவும் செய்ய முடியாது என்பதால், பாலாவும், பல்லவியும் அமைதியாக நின்றனர். இது அவர்களுக்குப் பழக்கமான ஒன்றுதான்.
நாதன்தான் பவானியைச் சரி செய்யும் முயற்சியில் இருந்தார்.
“பல்லவி, அக்காவோட மாத்திரையை எடுத்திட்டு வாம்மா” – நாதன்.
“ம்ம்ம் சரிப்பா” என்று சொல்லி, மருந்து எடுத்து வந்து, தன் அப்பாவிடம் தந்தாள்.
பெரிய போராட்டத்திற்குப் பின்னே, பவானி மருந்தை எடுத்துக் கொண்டாள். அவ்வளவு நேரக் கத்தலினால், பவானி சோர்வு அடைந்தாள். நாதன்தான் படாதபாடு பட்டு, பவானியை உறங்க வைத்தார்.
அடுத்தடுத்து வந்த நான்கு நாட்களிலும், பவானியின் உளநிலை இப்படியே இருந்தது. அந்த நான்கு நாட்களும், நாதனை ஒரு வழிப் பண்ணிவிட்டாள். அவளின் எல்லா உணர்வுகளையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப மருந்துகள் கொடுத்து, அவள் அருகேயே இருந்துப் பார்த்துக் கொண்டார், நாதன்.
ஐந்தாவது நாள் காலையில்தான், கொஞ்சம் உளநிலை சரியாகி உறங்க ஆரம்பித்தாள், பவானி.
பல்லவி பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்று விட்டாள். பாலா, எஸ்டேட் செல்லவதற்கு ஆயத்தமானான். போகும்முன்,
“அப்பா, இன்னைக்கு மதனும், அவங்க அம்மாவும் வர்றாங்களாம்”
“எதுக்கு பாலா?? பவானி இப்பதான கொஞ்சம் சரியாயிருக்கா”
“அத அவர்கிட்ட சொல்ல முடியுமா?? வரட்டும். சமாளிங்க”
“சமாளிக்கவா? எப்படி??”
“எப்படியாவது”
“சரி, எதுக்கு வர்றாங்களாம்??”
“தெரியலைப்பா. ஆனா டிவோர்ஸ் பத்திப் பேசினா, முடியாதுன்னு சொல்லிடுங்க”
“பாலா, இன்னைக்கு வேண்டாம். இன்னொரு நாள் வரச் சொல்லு ”
“அப்பா, அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை. அப்படியெல்லாம் சொல்ல முடியாது. என்ன நடந்தாலும், அவர்தான் பவானி புருஷன்” என்று எரிந்து விழுந்தான்.
“அதுக்கில்ல பாலா.. ”
“அவர் வர்றதே பெரிய விஷயம். நீங்க ஏன் இப்படிப் பேசறீங்க??” என்று கோபப்பட்டான்.
“சரிப்பா விடு” என்று சொல்லி, பாலாவை அனுப்பிவைத்தார்.
பவானி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தார், நாதன். இந்த நான்கு நாட்களில், நாதனின் மனம் மிகுந்த மன வேதனையை அனுபவித்தது. பாலாவிடமோ, பல்லவியிடமோ பகிர்ந்து கொள்ள முடியாததால், தனக்குள்ளே பூட்டி வைத்துப் பரிதவித்தார். யாரிடமாவது சொல்லி அழலாம் போன்றிருந்தது.
யாரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நினைத்தவருக்கு, மனதை விட்டுப் போனவர்கள் வருகை உவகையைத் தரவில்லை.
கடிகாரத்தின் சிறிய முள் கொஞ்சம் நகர்ந்திருந்தது. அக்கணம் வீட்டின் கதவு தட்டப்பட்டது.
‘அதற்குள் மருமகன் வந்து விட்டாரா??’ என்கின்ற கேள்வியை மனதிற்குள் கேட்டுக் கொண்டே சென்று கதவைத் திறந்தார்.
அங்கே, ஜீவன் சார் நின்றிருந்தார்.
இவர் எதற்காக இங்கே வந்தார்?? என்ன காரணம்?? இந்தக் கேள்வி நமக்கும் நாதனுக்கும் தோன்றும்.
ஆனால் பதில் நமக்கு மட்டும்!!
பதில் தெரிய, இந்த நான்கு நாட்கள் ஜீவனின் உலகம் எப்படி இருந்தது?? என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்…
ஜீவனின் காத்திருப்பு நாட்காட்டியில்…
முதல் நாள்…
அன்றைய வானிலை :
மலைப் பிரதேசத்தின் வானம் தெளிவில்லாமல், முழுவதும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
ஜீவன், பவானியின் நடைப் பயிற்சி நேரத்திற்காகக் காத்திருந்தான். அன்றைய அவனின் காத்திருப்பு, வெறும் காத்திருப்பாய் முடிந்தது.
ஜீவனின் மனநிலை :
மனப்பிரதேசத்தின் ஒரு ஓரத்தில், தெளிவான ஏமாற்றம் உணரப்பட்டது.
இரண்டாவது நாள்…
அன்றைய வானிலை :
மலைப் பிரதேசத்தின் ஒட்டு மொத்த பகுதியும், மழைச் சாரலால் நனைந்து கொண்டிருந்தது.
இந்த நாள், ஜீவன் பவானிக்காகக் காத்திருந்தான். அவள் எரிச்சலுடன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது.
ஒருவேளை பவானி முறையாகத் தன்னிடம் சொல்லிச் சென்றிருந்தால், இத்தனை முறை நினைத்திருக்க மாட்டோமோ?? என்ற எண்ணம், ஜீவனுக்கு வந்தது.
ஜீவனின் மனநிலை :
மனப்பிரதேசத்தின் ஒரு பகுதி, பவானியின் நினைவுச் சாரலால் நனைந்து கொண்டிருந்தது.
மூன்றாவது நாள்…
அன்றைய வானிலை :
மலைப்பிரதேசம் முழுவதும் குளிர் காற்று நிரம்பியதாய் இருந்தது.
இன்று, ஜீவனின் மனம் பவானியைத் தேடத் தொடங்கியது. எனினும் காலநிலை அழகாய் இருப்பதால், அதை ரசிக்கலாம் என்று நினைத்து, இருக்கையில் அமர்ந்து பின்னோக்கி தலை சாய்த்து, கண் மூடினான். குளிர்ந்தக் காற்று வருடிச் சென்றது.
அன்றைய குளிர் காற்றில், பவானி சில்லிட்டு, அதைத் தொடர்ந்து அவளது நடவடிக்கைகள் நியாபகத்திற்கு வந்தது. சட்டென்று கண் திறந்து பார்க்க ஆரம்பித்தான்.
ஜீவனின் மனநிலை :
மனப்பிரதேசத்தின் தனிமை என்னும் ரசனைக்குள் ரகசியமாய் நிரம்பி விட்டாளோ?? என்று எண்ணத் தொடங்கியது.
நான்காவது நாள்…
அன்றைய வானிலை :
மலைப்பிரதேசம் பல பகுதிகள் தூறல் இல்லாமல், மழைச் சாரல் இல்லாமல் மற்றும் குளிர் காற்று இல்லாமல், பாதை ஓரங்களில் வரண்டு காணப்பட்டது.
இருக்கைக்குச் சென்றால்தானே, பவானி நியாபகம் வரும் என்று, இல்லத்திலே ஜீவன் இருந்தான். விரும்பிப் படித்தப் பொருளாதாரப் புத்தகத்துக்குள் புதையப் பார்த்தான்.
ஜீவனின் மனநிலை :
மனப்பிரதேசத்தின் பல பகுதிகள், தனக்குரிய விருப்பங்களுடன் உடன்பட மறுத்ததால், உள்ளத்தின் ஓரங்கள் வருத்தங்கள் கொண்டு வரண்டு போக ஆரம்பித்தன.
ஐந்தாவது நாள்…
அன்றைய வானிலை :
மலைப்பிரதேசத்தின் காலநிலை என்னவென்று கணிக்க முடியாமல் இருந்தது…
ஜீவனுக்கு, தான் கட்டிப் பாதுகாத்த மனதை, பவானி எட்டிப் பார்ப்பது போல் உணர்வு வந்தது.
ஜீவனின் மனநிலை :
தன் மனப்பிரதேசத்தின் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தான்.
ஆதலால், அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்து, இங்குவந்து நிற்கிறான், ஜீவன்.
நாதன் நின்றவனைக் கண்டார்.
அன்றைய தினத்திற்கான முதல் அதிச்சியை நாதன் அடைந்திருந்தார்.
இன்னும் அவருக்குப் பற்பல அதிர்ச்சிகள் உண்டு!!