Kumizhi-8

மௌனம் – 8

நடப்பது என்னவென்று யாருக்கும் பிடிபடவில்லை, செங்கமலத்தின் அழுகை வேறு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்த, அவரை அமைதிப்படுத்துவதே பெரிய வேலையாகிப் போனது. ஒரு தாயின் மனநிலையில் செங்கமலம் பேசிய பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை பாண்டியன்.

“தம்பி, அவங்கள சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிட்டு வா, பேசுவோம்” சொல்லிவிட்டு அங்கே உள்ள அதிகாரி தன் வேலையை செய்ய தொடங்கினார்.

“சிவாம்மா இங்கே நாங்க பார்த்துக்குறோம், நீங்க மொதல்ல வீட்டுக்கு கிளம்புங்க” – ரவி

“நீயும் கூட போயிட்டு நான் வர்ற வரைக்கும் அங்கேயே இரு ரவி… இன்னைக்கு இந்த பிரச்சனைய முடிச்சிட்டு வர்றேன்”  பாண்டியன் தீர்மானமாக பேசினான்.

“இல்லடா… நானும் கூட இருக்கேன்டா” என ரவி சொல்ல

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்… கதிர் கூட இருக்கான் அது போதும் எனக்கு, நான் வர்ற வரைக்கும் நீ இவங்க கூட போய் இரு” ஒரே முடிவாய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

முகநூலில் வந்திருந்த விளம்பரம் வேறு பலவித சங்கடத்தை தந்து, இவர்களை எப்படி எதிர் கொள்வது என்ற யோசனையில் இருந்தவனுக்கு, தாயும் மகளும் காவல் நிலையம் வரை வந்து தன்னை அந்நியப்படுத்தி வைத்தது, மீண்டும் சிவனியாவின் மீது கோபத்தை வர வைத்தது.

அடங்காத கோபம் மனதிற்குள் கனன்று கொண்டிருக்க, அதன் வெளிப்பாடாய் இவன் முகமும் இறுகிப்போய், அனைவரையும் தன் முறைப்பால் தூர நிறுத்தி வைத்தான்.

தன் தாய் பேசிய பேச்சில் சற்றே சங்கடமடைந்த சிவனியாவும் அவனை ஏறிட்டு பார்க்கவில்லை. அதுவுமே பாண்டியனை இன்னும் வெறுப்படையச் செய்தது.

“வாய தொறந்து ஒரு வார்த்தை பேசுறாளா பாரு… எல்லாம் என் நேரம், இவ கிட்ட எல்லாம் தள்ளி நின்னு, இவ முகத்தை பார்த்து வைக்க வேண்டி இருக்கு. இவ்ளோ தூரம் வந்து கம்ப்ளைன்ட் குடுக்க தெரியுது, என்கிட்டே ஒரு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சு போயிடுவாளா இவ?” முன்தினம் இரவு நடந்தவைகளை மறந்து விட்டு இவள் பேசாததே பெரும் குறையாக பட, அதற்கும் மனதில் அவளை திட்டி வைத்தான்.

பெண்களை ரவியுடன் அனுப்பி விட்டு காவல் அதிகாரிகளுடன் சைபர்கிரைம் அலுவலகத்திற்க்கு விரைந்தனர் பாண்டியனும், கதிரும்.  Cctv கேமரா மூலம் பேருந்து நிலையத்தில் கைபேசியை எடுத்தவனை பார்த்து சைபர்கிரைம்-ல் தெரிவிக்கும் படி, மற்றவர்களுக்கு உத்தரவு இடப்பட்டது.

ஒரு மணிநேரம் இணைய அதிகாரிகள் அலசிய அலசலில் சிவனியாவிற்கு வந்த அழைப்புகள் அனைத்தும் ஒரே கைப்பேசியில் இருந்து அழைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் சர்வதேச கைபேசி அடையாளம் அதாவது IMEIஎண்(International Mobile Equipment Identity)  கதிரின் காணமல் போன கைபேசியின் IMEIஎண்ணாக காட்டியது.

அந்த கைபேசியை பாண்டியன் தனது அடையாள அட்டையையும், முகவரியையும் கொடுத்து வாங்கிய காரணத்தால், அதன் உரிமையாளராய் அவனை அடையாளம் காட்டியது.

“அந்த பொண்ணோட மொபைலுக்கு பேசினதும், பேஷ்புக்ல அந்த போஸ்டர் ஷேர் செஞ்சதும் ஒரே மொபைல்ல இருந்து தான். நிச்சயமா இது உங்களுக்கு தெரிஞ்சவங்க தான் செஞ்சுருக்க முடியும் பாண்டியன். அந்த பொண்ணு ரெகார்ட்(record) பண்ணின வாய்ஸ் கால்(call) கேட்டு பாருங்க, அதுல யாரையாவது அடையாளம் தெரிஞ்சா அவனை கூட்டிட்டு வந்து விசாரிக்கலாம். கால்(call) வந்த நம்பர்ஸ் எல்லாம் இப்போ சுவிட்ச் ஆஃப்ல இருக்கு. சிம் கழட்டி வெளியே இருந்தா லோகேசன் கேட்ச்(catch) பண்ணறது கஷ்டம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம், திரும்ப யாரவது அந்த பொண்ணு நம்பருக்கு பேச ட்ரை பண்ணினா ட்ராக் பண்ணி ஈசியா கண்டுபிடிச்சுரலாம்.” என விவரங்களை தொகுத்து சொல்லி முடித்தார்கள் இணைய அதிகாரிகள்.

அவர்கள் கூறியபடியே பதிவு செய்யப்பட்ட குரல் பதிவை(ரெகார்ட் வாய்ஸ்) இருவரும் கேட்டும் சரியாய் அடையாளம் காண முடியாமல் போக, மீண்டும் அழைப்பு வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தனர்.

அங்கே உள்ளவர்களால் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் எதையும் காது கொடுத்து கேட்க முடியவில்லை, தங்களுக்கே இந்த நிலை என்றால் ஒன்றும் அறியா சிறு பெண் இந்த பேச்சுக்களை எல்லாம் கேட்டு எவ்வாறு வேதனைப் பட்டிருப்பாளோ என்று எண்ணி வருத்தம் கொண்டான் பாண்டியன்.

பாண்டியனின் மேல் முன்விரோதம் கொண்ட கும்பலில் இருந்த ஒருவன் தான் கதிரின் கைப்பேசியை எடுத்துச் சென்றது என பேருந்து நிலையத்தில் உள்ள cctv கேமரா மூலம் ஊர்ஜிதப் படுத்தப் பட்ட தகவலும் அந்த சமயத்தில் வந்து சேர்ந்தது.

பேருந்து நிலையத்தில் வழிப்பறிகளை செய்தும், போதை மருந்துகளை மறைமுகமாக விற்றும், பெண்களிடம் தகாத செயல்களையும், எந்நேரமும் அராஜகங்களையும் செய்து கொண்டிருக்கும் கும்பல் ஒன்றை கடிவாளம் போட்டு பிடித்துக் கொடுத்ததில் பாண்டியனின் பங்கு அதிகமாக இருந்தது. அந்த கும்பல் தான் தற்பொழுது கைவரிசையை காட்டி இருப்பது தெரிய வந்தது.

இப்பொழுது கதிரிடம் தங்கள் விசாரணையை மேற்கொண்டனர் காவல்துறை அதிகாரிகள்.

“எப்போ இருந்து இந்த ஃபோன் யூஸ் பண்ணிட்டு இருக்கே தம்பி?”

“ரெண்டு மாசமா சார்”

“யாரெல்லாம் யூஸ் பண்ணுவாங்க?”

“எங்க வீட்டுல இருக்குற ஒரே ஃபோன் இது தான். அதனால நான், எங்க அம்மா, தங்கச்சி எல்லாரும் யூஸ் பண்ணுவோம், அடுத்து என்னோட ஃப்ரண்ட்ஸ் அப்பப்போ யூஸ் பண்ணுவாங்க சார்.”

“அப்டி மத்தவங்க யூஸ் பண்ணும் போது எப்படி ஃபோன்ல லாக்(lock) எடுப்பாங்க?”

“அம்மாக்கு ஈசியா இருக்கட்டும்னு லாக் போட்டு வைக்கல சார்”

“ஒண்ணுக்கு பத்து லாக் வைக்குற சிஸ்டம் தான் இருக்கே! அதுல நம்பர் லாக் வச்சு உங்க அம்மாக்கு சொல்லிட்டு, மத்தவங்க யூஸ் பண்ணும் போது, உன்னோட பிங்கர்(விரல் ரேகை) லாக் இல்ல பேஸ்(முகம்) பார்த்தோ ஓபன் ஆகுற மாதிரி லாக் வச்சுருக்காலமே தம்பி, ஏன் செய்யல?”

“அந்த மாதிரி இது வரைக்கும் யோசிக்கல சார்?”

“சரி, உன் ஃபோன்ல பேஸ்புக், வாட்ஸ்சப் அக்கௌன்ட் எல்லாம் எப்படி லாக் பண்ணி இருக்குமா? இல்ல அதுவும் ஓபன்ல இருக்குமா?”

“மூணு ஃப்ரெண்ட்ஸ் என்னோட இன்னொரு ஃபோன் நம்பர தான், அவங்க நம்பர்ன்னு குடுத்து யூஸ் பண்ணிட்டு இருக்காங்க சார், பேஸ்புக் ஐடி, வாட்ச்சப் கூட அப்படித்தான் யூஸ் பண்றோம் சார். அதனால எப்போவும் எல்லாமே ஓபன்ல தான் இருக்கும். லாக்அவுட் செய்ய மாட்டேன் சார்”

“ஏன் அப்படி செய்றீங்க? தனித்தனியா மொபைல் இல்லையா அவங்களுக்கு?”

“நாங்க எல்லாம் கொஞ்சம் கஷ்டபடுற குடும்பம் சார்… அடிக்கடி நெட்ல தான் போர்சன்ஸ்(பாடங்கள்) எடுக்க வேண்டி இருக்குனு அண்ணன் தான் இந்த ஃபோன் வாங்கி குடுத்தாரு” – கதிர்

“ஏண்டா ஒரு பாஸ்வேர்ட் போட்டு ஒவ்வொரு தடவையும் ஓபன் பண்ண உங்களுக்கு சோம்பேறித்தனமா?, இப்படி எல்லாத்தையும் ஒபன்ல வச்சு, தப்பு செய்றவங்களுக்கு, இல்லீகல் ஆக்டிவிடீஸ் செய்ய நீயே உன்னோட ஐடிய(id) தானம் பண்ணியிருக்க…” கோபமாய் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

“அது இப்படியெல்லாம் ஆகும்னு நினைச்சு பாக்கல சார்’

“பதில் பேசாதே! அந்த பொண்ணு ஃபோட்டோ எப்படி உன்னோட ஃபோன்ல வந்துச்சு?” இப்பொழுது அதட்டலுடனே கேள்விகள் வந்தன.

“போன வாரம் அக்கா தான் ஃபோன் பார்த்துட்டே ஒரு செல்பி எடுத்து, அவங்க நம்பரை சேவ்(save) பண்ணி, அந்த ஃபோட்டோவ டீபி(DP)யா வச்சாங்க” பயத்துடன் பதில் வர ஆரம்பித்திருந்தது கதிருக்கு.

“இது ஒண்ணு இருக்குடா இப்போ எல்லார்கிட்டயும், யார் என்னன்னு பாக்கறதில்ல? ஆளைப் பார்த்து பேசிட்டா உடனே ஒரு போட்டோ எடுத்து, மொபைல்ல சேவ்(save) பண்ணிக்கிறது. அதுலயும் கான்டாக்ட்ஸ்(contactஸ்)க்கு கூட அந்த போட்டோவ செட் பண்ணிட்டு, அப்புறம் “என்னோட நம்பர மிஸ்யூஸ் பண்ணறாங்க”ன்னு எங்ககிட்ட வந்து புலம்புறது, நடுகடல்ல, பாறைமேல நின்னு செல்ஃபி எடுத்து செத்து போறவன் பேர் தான் வெளியே வருது, செல்ஃபி எடுத்து, சிக்கல்ல சிக்கி சின்னாபின்னமாகுறவங்க பேர் வெளியே வர்றதில்ல. தப்பு செய்ய நீங்களே ஈசியா ரூட் போட்டு குடுத்துட்டு, பின்னாடி புலம்பி என்ன பிரயோசனம்? நாங்க எந்த ஒரு தப்பையும் கவனிச்சு சரி பண்றதில்லன்னு எங்க மேல தப்பான அபிப்ராயத்தையும் சேர்த்து வர வைக்கிறீங்க?” பாண்டியன், கதிர் இருவரையும் பார்த்து கேட்டு வைக்க அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

“உங்க அண்ணன் அந்த பொண்ணு கூட நிக்கிற போட்டோ எப்போ எடுத்தே?”

“சார் அந்த போட்டோ நான் எடுக்கல? மொபைல் வாங்கும் போது நான் தான் அண்ணன தனியா நிக்க வச்சு ஒரு போட்டோ எடுத்தேன், அதையும், அக்கா என் கூட நிக்கிற போட்டோவையும் மெர்ஜ்(சேர்த்து) பண்ணி அந்த போஸ்டர்ல போட்டுருக்காங்க சார்”

“எல்லாத்தையும் அவன் கையில தூக்கி குடுத்து தப்பு பண்ணுங்கடான்னு அவங்கயும் உற்சாகப்படுத்தி வேலை வாங்கியிருக்கீங்க… உங்க விசயத்துல அது தான் நடந்திருக்கு, இன்டர்நெட்ல நாகரிகமும், நல்ல விசயமும் வளருதோ இல்லையோ தவறுகள் நிறைய வளருது. ஒரு பக்கம் நாம போய் அடைச்சு வச்சா இன்னொரு பக்கம் அது பத்து மடங்கா பரவுது, கண்ட்ரோல் பண்ண முடியல எங்களால. எல்லோருக்கும் சுயகட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் வந்தாலொழிய இத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம்” அவரின் ஆதங்கத்தை சொல்லிட,

“இப்போ அந்த பேஸ்புக் விளம்பர போஸ்டர்ஸ் பிளாக் பண்ணியாச்சு பாண்டியன், இனிமே அத ஷேர் பண்ண முடியாது. ஆனா இப்போ நாம சேஃப் ஆயிட்டோம்னு சொல்லவும் முடியாது. ஏன்னா இத எங்கெங்கே இவனுக அனுப்பி அத யாரெல்லாம் ஸ்க்ரீன்சாட்(screenshot) எடுத்து வச்சுருக்கானோ தெரியாது. இந்த போஸ்டரால இனிமே அந்த பொண்ணுக்கு வெளி ஆட்களால பாதிப்பு வர்றதுக்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கு. அதனால முடிஞ்ச வரைக்கும் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்குறது தான் நல்லது. முக்கியமா அந்த பொண்ணுகிட்ட இத சொல்லி வைங்க. அவளோட இந்த நம்பர டீஆக்டிவேட்(deactivate) பண்ணிடுங்க, இந்த பையன் நம்பரும் அப்படி செஞ்சா நல்லது. நேத்துல இருந்து அதுல வேற என்ன செஞ்சு வச்சாங்களோ அத பாக்கணும், அந்த நம்பர் பிளாக் பண்ண ஏதும் கம்ப்ளைன்ட் குடுத்திருக்கா?”

இதனை முற்றிலும் மறந்து போன பாண்டியனுக்கு இப்பொழுது பதில் சொல்ல முடியவில்லை.

“இல்ல சார் ஃபோன்க்கு குடுக்கும் போது சேர்த்து குடுப்போம்ன்னு இருந்தேன்” – பாண்டியன்

“உங்க பேர்ல இருக்கிற ஃபோன்ல இருந்து தான் அந்த பொண்ணுக்கு கால்ஸ்(calls) எல்லாம் போயிருக்கு, தப்பு செஞ்சது யாருன்னு தெரியாத வரைக்கும், உங்கள தான் எல்லோரும் குற்றவாளியா கை காட்டுவாங்க… அந்த பொண்ணு உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா நிச்சயமா உங்க மேல தான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். இந்த மாதிரி கேஸ்ல தப்பிக்க முடியாத அளவுக்கு இப்போ ரூல்ஸ் கொண்டு வந்துட்டாங்க. இந்த விளம்பர கம்பனி கூட பொய்யாத் தான் இருக்கணும், எங்க நெட்வொர்க்ல பார்த்த வரைக்கும் கம்பனி பத்தின டீடைல்ஸ் எதுவும் இல்ல” என அவர் சொல்லும் நேரத்தில் சிவனியாவின் கைப்பேசியில் அழைப்பு ஒன்று வந்திட அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராயினர்.

ஒரு பெண் அதிகாரியை பேச வைத்து, அழைப்பினை பதிவு செய்யும்போது அது வந்த இடத்தினையும் ட்ராக்(track) செய்தனர்.

“சார் லோகேஷன்(location) கள்ளிக்குடி காமிக்குது, அது இங்கே இருந்து 51கி.மீ போகணும், ஒன்றை மணிநேரம் ஆகும் சார்.. அதுக்குள்ள அவங்க எஸ்கேப் ஆகமா இருக்கணும்” என இணைய அதிகாரிகளுள் ஒருவர் கூறிட

“அப்போ பக்கத்துல இருக்குற ஸ்டேஷன்க்கு லோகேஷன்(location) ஷேர் பண்ணி, அங்கே இருக்கறவங்கள அனுப்பி வைப்போம், நாம அங்கே போய் சேரும் போது ஒரு வேலை அவங்கள பிடிச்சாலும் பிடிச்சுட முடியும், வர்ற கால்ஸ்(calls) அட்டென்ட் பண்ணிகிட்டே இருங்க, அப்போதான் அவங்க வேற ரூட் மாறினாலும் நாம ஃபாலோ பண்ண வசதியா இருக்கும்” மேலும் பல தகவல்களை அங்கே உள்ளவர்களுக்கு கூறிவிட்டு காவல்துறை அதிகாரிகள் போலீஸ் ஜீப்பிலும்,  பாண்டியனும், கதிரும் தங்கள் இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.

அந்த பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் விவரங்களை சொல்லி, அங்கே உள்ள காவலர்களும் குற்றவாளிகளை நெருங்கும் சமயத்தில், அவர்கள் தப்பி ஓட, சற்றே பதட்டமான சூழ்நிலையில், துரத்தி பிடிக்கவென காவலர்களும் துரத்தும் போது, எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த பாண்டியன் வாகனத்தில் தானாய் ஒருவன் வந்து விழுந்தான்.

விழுந்தவனை நன்றாய் அடையாளம் தெரிந்தது பாண்டியனுக்கு. அன்று பிடித்து கொடுத்த கயவர்களில் ஒருவன் தான், பாண்டியன் முன்பு விழுந்து மாட்டினான்.

“டேய் நீ அன்னைக்கு என் கையால அடிவாங்கினவன் தானே? நீங்க இன்னும் திருந்தலையாடா? சொல்லுடா என்னென்ன செஞ்சு வச்சுருக்கீங்க? எத்தன பேர் இருக்கீங்க இதுல?” ஆக்ரோசத்துடன் அவனை கீழே தள்ளி, கரடு முரடான சாலையில் உரசியபடியே அவனை இழுத்துச் சென்றான். அங்கிருந்த சுவரில் ஒட்டியபடியே நிற்க வைத்தவன், கழுத்தை நெறித்து மேலே தூக்கியும், அவன் வயிற்றுப் பகுதியில் காலால் எட்டி உதைத்தும், உயிர் போகும் வலியை அனுபவிக்க வைத்தான் பாண்டியன். நெடுநேரமாய் அடக்கி வைக்கப்பட்ட கோபங்கள் அனைத்தும் வெளிப்பட்டது.

அவனது சிறப்பான கவனிப்பில் அடி வாங்கியவனும், அவனுடைய மற்ற கூட்டாளிகள் இருக்கும் இடத்தை தப்பாமல் சொல்லிவிட, காவலர்களின் துணையோடு அங்கேயும் சென்று தன் அதிரடியில் அனைவரையும் அலற வைத்து, அந்த இடத்திலேயே அவர்கள் செய்த தவறுகளை, அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து விட்டான்.

அவனது கண்களின் சிவப்பும், இறுகிய முகமும், ஆக்ரோசமான கோபங்களும் அவனை ருத்ர மூர்த்தியாய் காட்டிக் கொண்டிருந்தன. அடங்காத சினத்துடன் ஒவ்வொருவரையும் புரட்டி போட்டு அடித்தவனை, தடுக்கும் வழி தெரியாமல் நின்றனர் உடன் வந்தவர்கள். இருபக்கமும் இரண்டு பேர் சேர்த்து பிடித்தும் கூட திமிறிக்கொண்டு தாக்க முன்னேறியவனை, தடுப்பதற்கு காவலர்கள் பெரும் பாடு பட்டனர்.

“பாண்டியா!! நீ அடிக்கிற அடியில எவனாவது மண்டைய போட்டா அந்த பழி உன் மேல தான் விழும், கொஞ்ச நேரம் அமைதியா இரு, நாங்க பார்த்துக்குறோம், திரும்பவும் நீ அடிக்கத் தான் செய்வேன்னா நாங்க உன்னையும் பிடிச்சு போக வேண்டி வரும் கொஞ்சம் அடங்கு” என ஏட்டையா அவனை எச்சரிக்க

“என்னையும் இவனுங்க கூட சேர்த்து உள்ளே போடுங்க சார், அப்போதான் ஒட்டு மொத்தமா இவனுகள ஒரே இடத்துல கொன்னு போட முடியும். இவ்ளோ நாள் வாழ்ந்ததுக்கு ஒரு நல்ல காரியம் செஞ்ச திருப்தியில, வாழ்நாள் முழுக்க உள்ளேயே கூட இருக்கேன். இவங்க முடிவை பார்த்துட்டு அடுத்து இந்த மாதிரி தப்பு செய்ய, மறந்தும் கூட ஒருத்தன் யோசிக்க கூடாது. அந்த பயத்தை இவனுகளுக்கு காமிக்கணும்” அவனுடைய சீற்றத்தை கண்கூடாக கண்டவர்களுக்கு, அவனை அமைதிப்படுத்துவது எப்படி என்று முழி பிதுங்கி நின்றனர்.

“எப்பா கதிரு… கொஞ்சம் உன் அண்ணனுக்கு எடுத்து சொல்லு, இப்படி இவன் அடங்கமா எல்லோரையும் கொன்னு போடறேன்னு, தாண்டவம் ஆடிட்டு இருந்தா சரி வராது, மேல் அதிகாரிங்க கிட்ட என்னை தலைகுனிய வைச்சுராதீங்கப்பா, இவன் மேல நல்ல அபிமானம் இருக்கப் போய் தான் இவ்ளோ சீக்கிரம் இந்த பிரச்னைய முடிக்க உதவி பண்ணிருக்காங்க… கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க” என ஏட்டையா, பாண்டியனை சமாதானப்படுத்தும் பொறுப்பை கதிரிடம் ஒப்படைத்துவிட்டு மேற்கொண்டு காரியங்களை கவனிக்க நகர்ந்தனர்.

பாண்டியனுக்கோ கோபம் அடங்கவில்லை. கதிரையும் பிடித்து தள்ளி விட்டு எதிராளியை அடிக்க விரைந்தான்.

“கொஞ்சம் நில்லுன்னே… அவங்க என்ன சொல்லறாங்கன்னு கேட்டுட்டு அப்புறம் அவங்கள அடிக்கப் போ… யார் சொல்றதையும் கேக்காம உன் இஷ்டத்துக்கு பேசப் போயி தான் நேத்து அக்காவ எல்லார் முன்னாடியும் அடிச்சு வைச்சே, அதுல தான் என் ஃபோனும் மிஸ்ஸாகி, இப்போ இங்கே வந்து நிக்கிறோம். கொஞ்சம் யோசிச்சுப் பாருண்ணே…” – கதிர்

“அதுக்காக இவங்கள சும்மா விடச் சொல்றீயாடா?” – பாண்டியன்

“நீ கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா இந்த பிரச்சனையெல்லாம் வந்திருக்க வாய்ப்பே இல்ல… இப்போ இவங்களையும் அடிச்சு இன்னும் சிக்கல்ல மாட்டிக்க  ஆசைப்பட்டேன்னா போ போய் அடிச்சுட்டு வா…” என கதிரும் கோபத்துடன் பேசிட, பாண்டியனும் கோபம் அடங்கி பெரும் குழப்பங்களுடனும், யோசனைகளுடனும் சற்றே அமைதி ஆனான்.

ஒரு வழியாய் அனைத்து களேபரங்களும் முடிந்து கோதை இல்லத்தை இருவரும் அடையும் போது விடிந்திருந்தது. அந்த நேரத்திலேயே அனைவரையும் வைத்துக்கொண்டு நடந்த அனைத்தையும் சொல்லி, இனி எந்தவொரு பிரச்னையும் இல்லை என கூறி சூழ்நிலையை அமைதியாக்க முயன்றான் பாண்டியன்.

முன்தினம் செங்ககமலத்தின் அழுகையில், நடந்த விபரீதங்களை ரவியின் மூலம் அறிந்திருந்த இரு பெரியவர்களுக்கும் சற்றே மனம் அமைதி பட்டது அந்த நேரத்தில் மட்டுமே.

“நாங்க இனியும் இருக்க விரும்பல அண்ணி… தனியா போயிறோம்… நேத்து ராத்திரியே ரவி மூலமா உத்தங்குடியில வீடு பாக்க சொல்லி வச்சாச்சு அவனும் கனி வீடு பக்கத்துல ஒண்ணு பேசி வைக்குறேன்னு சொல்லியிருக்கான்” செங்கமலம் தன் முடிவை சொல்ல

“இனி எந்த பிரச்சனையும் வராது அத்த… எங்கேயும் போக வேண்டாம் இங்கேயே இருங்க…” பாண்டியன் சொல்ல, அவனை தொடர்ந்து அனைவருமே தடுக்க, செங்கமலம் தன் பிடிவாதத்தில் நின்றார்.

“பேச்சு வந்துருச்சு.. இதுக்கும் மேல இங்கே இருந்தா அது என் பொண்ணுக்கு மட்டுமில்ல பாண்டியனுக்கும் சேர்த்து தான் பாதிப்பு வரும். நாங்க தனியா போறது தான் சரி வரும்” செங்ககமலம்.

தன் முடிவில் நிலையாய் நிற்பவரை என்ன சொல்லி தடுக்க முடியும் என்ற யோசனையில் அனைவரும் இருந்த வேலையில், கவிதராணியின் தந்தை சடகோபன் அங்கே வந்து சேர்ந்தார்.

மாலையில் திருமண நிச்சயத்தை வைத்துகொண்டு, காலை வேளையில் இவர் இங்கே வந்தது கோதைநாயகிக்கு மனம் இவர் என்ன சொல்ல வந்திருக்கிறாரோ என்று தான் எண்ணத் தோன்றியது.

முகநூல் பதிவு மற்றும் பேருந்து நிலையத்தில் நடந்த பேச்சுக்கள் என அனைத்தையும் சொன்னவர், தற்போது சூழ்நிலை சரி இல்லாததால் சிறிது காலம் பொறுத்தே நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, பதில் என்ன சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை.

கோதை நாயகியும், பாண்டியனும் தங்கள் தரப்பு விவரங்களை சொல்லி விட்டு, யார் மீதும் தவறு இல்லை என்று சொன்னாலும் சடகோபன் தன் அதிருப்தியை காட்டினார்.

“யார் பக்கமும் தப்பு இல்லன்னு நீங்க சொன்னாலும், அந்த பொண்ணு பஸ் ஸ்டாண்ட்ல சொன்னது உண்மைதானே? முன்னாடியே கவிதாவும் என்கிட்டே சொன்னா… இவங்க ரெண்டு பேரும் பழகுறது சரியில்லன்னு… நான்தான் எல்லாம் முடிஞ்ச பிறகு இதுக்கு ஒரு முடிவு எடுப்போம்னு பேசாம இருந்தேன். நேத்து அந்த விளம்பரம் வந்ததும் உண்மை தானே? அது இல்லன்னு அழிக்க முடியுமா? இன்னொரு பொண்ணு கூட சேர்த்து வைச்சு பேசின பிறகும் எப்படி நான் என் பொண்ண கட்டி குடுக்க முடியும்.” தன் நிலைப்பாட்டை தெரிவிக்க

“என்மேல நம்பிக்கை இல்லாதவங்க இனியும் ஏன் கொஞ்ச நாள் பொறுத்துன்னு சொல்லி வார்த்தைய விடனும், வந்து விவரம் சொன்னதுக்கு சந்தோசம் கிளம்புங்க…’ என தன் நிச்சயத்தை தானே நிறுத்தி விட்டு அவரை அனுப்பி வைத்தான் பாண்டியன். வந்தவருக்கும் தன் வேலை சுலபமாய் முடிந்ததில் எந்தவொரு தர்க்கப் பேச்சும் பேசாமல் சென்றார்.

சிறிது நேரம் எல்லோரும் அமைதியாய் இருக்க ராமலிங்கம் தான் பேச்சை ஆரம்பித்தார்.

“நல்லதோ கெட்டதோ ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு எல்லோரும் பேசிட்டாங்க… எங்கே போனாலும் எப்போவும் இது மாறப் போறதில்ல… ரெண்டு பேருக்கும் காலம் பூரா சங்கடம் தான். நீங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணி, இந்த பேச்ச மறக்க வைக்கலாம் பாண்டியா… என்ன சொல்ற?”

“கல்யாணம் பண்ணிட்டு எல்லோரும் சொல்றத உண்மையாக்க சொல்றீங்களா? சிவனி எங்க வீட்டுல வளந்த பொண்ண எப்படி நானே கல்யாணம் பண்ணிக்க முடியும்?” பாண்டியன் மறுக்க

“ரெண்டு வருஷம் தான் உங்க வீட்டுல இருந்திருக்கா… அடுத்து ஹாஸ்டல் தானே பாண்டியா? அவங்க அம்மா தானே அவ தேவைகளை இன்னைக்கு வரைக்கும் கவனிக்கிறா? பின்னே எப்படி உன் வீட்டுல வளந்த பொண்ணுன்னு நீ சொல்லுவே? உறவு முறையில அவளுக்கு நீ முறைமாமன் தானே? கல்யாணம் நடந்தா பேசுறவங்க வாய மூடலாம். கொஞ்சம் யோசனை பண்ணுங்க” என எல்லோருக்கும் பொதுவாய் பேசிட

“முடியாதுப்பா… இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் பொண்ணா இருக்கும் போதே ரோட்ல வச்சு அடிச்சவன், பொண்டாட்டி ஆன பிறகு எப்ப என் பொண்ண என்ன செய்வானோன்னு என்னால தவிச்சுட்டு இருக்க முடியாது. இவனோட முரட்டுத் தனத்துக்கு என் பொண்ண பலி கொடுக்க நான் தயாரா இல்ல” என செங்கமலம் பேசிய பேச்சு கோதை நாயகிக்கு கோபத்தை வர வைத்தது. இரவில் இருந்தே தன் மகன் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை கேட்டு மனம் நொந்தவர் இப்போது தன் ஆதங்கத்தை கொட்டி விட்டார்.

“போதும் கமலம்… கொஞ்சம் வார்த்தைய அளந்து பேசு… என் பையன குத்தம் சொல்றதுக்கு முன்னாடி உன் பொண்ணு பண்ணி வச்ச காரியத்தை கொஞ்சம் நினைச்சு பாரு… அவ ஃபோன்ல போட்டோ பிடிக்கமா இருந்திருந்தா இன்னைக்கு இந்த நிலைம இல்ல, ஊரெல்லாம் உறுத்து பாக்குற மாதிரி இவ என் பையன் கூட பேசி சிரிச்சத தானே காரணமா சொல்லி இப்போ கல்யாணமே நின்னு போச்சு… எந்த நேரமும் ஏதாவது அடாவடித் தனம் பண்ற பொண்ணு எனக்கு மருமகளா வர வேணாம்” தன் மகனுக்கு அவர் வக்காலத்து வாங்க, வாக்குவாதம் வளர ஆரம்பித்தது.

“கொஞ்ச நேரம் அமைதியா இருங்கம்மா… நடந்தத பேசிட்டே இருந்தா மட்டும் மனக்கஷ்டம் தீரப் போகுதா என்ன? கல்யாணம் ரெண்டு பேரையும் மாத்தி வைக்கும். சிவாம்மா நீயாவது கொஞ்சம் யோசனை பண்ணி பாரேன்ம்மா… தாத்தா உன்னோட நல்லதுக்கு சொல்றேன்.” ராமலிங்கம் சிவனியாவிடம் கேட்டு வைக்க,

“எனக்கு இவங்க சொல்ற எல்லாமே சரியான்னு தெரியல தாத்தா… காலம் முழுக்க சந்தோசமா இருக்கத்தானே கல்யாணம் பண்ணிக்கிறோம். நான் என்னோட வாழ்க்கைய கடைசிவரைக்கும் சந்தோசமா வாழ ஆசைப்படறேன். நீங்க சொல்ற மாதிரி இப்போ இந்த கல்யாணம் நடந்தா வாழ்க்கை சங்கடத்துல ஆரம்பிச்ச மாதிரி தான் இருக்கும். எப்படியாவது எனக்கு நடந்த இந்த கெட்டதை நான் மறந்து கடந்து வந்துருவேன். அதுக்கு தீர்வு என்னோட கல்யாணமா இருக்குறத நான் விரும்பல. கொஞ்ச நாள் கழிச்சு இந்த பாதிப்பு எதுவுமே பெருசா தெரியாம போகலாம். அப்போ இந்த சின்ன விசயத்துக்காக கல்யாணம் பண்ணி வாழ்க்கை முழுக்க தண்டனை அனுபவிக்கிறோம்ன்னு ஒரு சலிப்பு எங்க ரெண்டு பேருக்கும் வந்திரக் கூடாது தாத்தா… எனக்கு இப்போ இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. உங்க பேச்சை மீறி நான் என் முடிவுல நிக்கிறதுக்கு என்னை மன்னிச்சிருங்க. என்னை கட்டாயப்படுத்தாதீங்க தாத்தா…” என தன் முடிவை சொல்லி, அன்றைய நாளின் முடிவில் தன் அன்னையுடன் உத்தங்குடிக்கு இருப்பிடத்தை மாற்றிகொண்டாள்.