JTE-6

JTE-6

அப்புறம் ஒரு விடயம்! முதன் முதலில் ஜீவன் சாரை, நாம் சந்தித்த பொழுது, ஒரு நம்பிக்கை கொண்டோமே! அதான் நாதனே, பவானியின் பிரச்சினைகளை எல்லாம் ஜீவனிடம் சொல்வார் என்று!

நம் நம்பிக்கை சற்று நேரத்திற்கு முன்பு நிறைவேறியது. சந்தோஷம் கொள்வோமாக!!

இனி…

ஜீவன் அவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றதும், சற்று நேரம் ‘என்ன செய்வது??’ என்றே தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டவாரு எழுந்து சென்று கதவினை அடைத்தார்.

திரும்பவும் வீட்டு வேளைகளில் ஈடுபட்டார்.

நாதனின் சிந்திப்பின் ஆக்கிரமிப்பு முழுதும் ஜீவனே நிறைந்திருந்தான். பன்னிரெண்டு ரூபாய் கேட்டு வாங்கினவன், இன்று இத்தகைய பேச்சு பேசக் காரணம் என்னவென்று குழம்பினார்.

நாதனின் குழப்பத்துடனே கடிகார நேரங்கள் கழிந்த தருணங்கள் – இவை.

சிறிது நேரங்கள் கடந்த பின், பவானி எழுந்தாள். நாதன், பவானி அருகில் வந்து அமர்ந்தார்.

“இப்போ எப்படி இருக்கு?” – நாதன்.

பவானியால் முதலில் பதில் சொல்ல இயலவில்லை.

“சொல்லு பவானி, எப்படி இருக்கு?? ஹாஸ்பிட்டல் போகணுமா?”

“வேண்டாம், டயர்டா இருக்குப்பா”

“சரியாயிடும். போ.. போய் குளிச்சுட்டு வா. சாப்பிடலாம்.”

பவானி எழுந்து உள்ளறைக்குச் சென்றாள். குளித்து முடித்து வரும்போது, நாதன் கையில் உணவு, மருந்துகள் சகிதமாக காத்திருந்தார்.

“வாம்மா , வந்து சாப்பிடு”

அவளும் வந்து, கட்டிலில் அமர்ந்து, சாப்பிட ஆரம்பித்தாள். அப்போது நாதனின் கைப்பேசி அழைத்தது.

அழைப்பின் எதிர்முனையில் பாலா.

“சொல்லு பாலா. என்னடா?? இந்த டைம்ல போஃன் பண்ணியிருக்க?” – நாதன்.

“அப்பா, மதன் வந்தாச்சா??”

“இன்னும் இல்லடா”

“கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லச் சொன்னாரு”

“ம்ம்ம், சரிடா”

“அப்பா, மதன் டிவோர்ஸ் பத்திக் எதுவும் கேட்டாருன்னா, பாலாதான் முடிவெடுப்பான்னு சொல்லிருங்க”

“சரிடா”

“பவானிகிட்டயும் சொல்லியிருங்க. ‘பாலாண்ணா முடிவு எடுப்பாரு, நான் ஒன்னும் சொல்ல முடியாதுன்னு’ சொல்லச் சொல்லிருங்க”

“பாலா, பவானி மதன்கிட்ட பேசவே மாட்டா. போதும் வை போஃன” என்று அழைப்பைத் துண்டித்தார்.

பவானி சாப்பிட்டு முடித்து, கை கழுவிவிட்டு வந்தாள்.

பவானி அலைபேசி உரையாடலைக் கேட்டதால், “என்னப்பா? மதன் வர்றாரா?” என்றாள். இன்று பவானி குரல் வழமையை விட சோர்வை ஏந்தி வந்தன.

“ஆமாம்மா… மதனும் அவுங்க அம்மாவும்”

“ம்ம்ம்”

“அப்புறம் பவானி, இது ஜீவன் சார் வாங்கிட்டு வந்தது” என்று, ஜீவன் வாங்கித் தந்திருந்த பையினைக் கொடுத்தார்.

“என்னது அப்பா?”

“ஏதோ திரேட் அது இதுன்னு.. இதை நீதான் கேட்டியா பவானி?” என்று மெதுவாகக் கேள்வி கேட்டார்.

“இல்லப்பா. ஹாபி என்னன்னு கேட்டாங்க. சொன்னேன்?”

“ஓ! சரி, அப்புறமா அவரைப் பார்க்கிறப்போ இதுக்கு எவ்வளவு ஆச்சுன்னு கேட்டுச் சொல்லு, அப்பா கொடுத்திருவேன்”

“ம்ம்ம் சரிப்பா” என்றவள், ஜீவன் கொண்டு வந்த பையை எடுத்துக் பார்க்கப் போனாள்.

சற்று நேரம் பவானியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

“பவானிம்மா, மதன் வர்றதுக்கு லேட் ஆகுமாம். அப்பாவுக்கு வெளியே ஒரு வேலை இருக்கு. பார்த்திட்டு ஒரு அரை மணி நேரத்துல வந்திடுவேன்”

“அப்பா… ” என்ற அழைப்பே ஏதோ அவள் வேண்டுவது போல் இருந்தது.

“என்னம்மா?? உனக்கு உடம்புக்கு நல்லா இருக்கில்ல பவானி. தனியா இருந்துக்குவியா??”

“எனக்கு ஒன்னுமில்லைப்பா. ஆனா.. ஆனா.. ” என்று இழுத்தாள்.

“என்னம்மா?”

“ஏன்ப்பா? மதன் வந்திட்டுப் போனப்புறம் போகலாம்ல? ”

“இல்லை பவானி. ரொம்ப நேரம்லாம் ஆகாது. மதன் வர்றதுக்குள்ள அப்பா ஓடியே வந்திருவேன். சரியா?”

“சரிப்பா”

“அவரு வந்தாலும் உள்ளே உட்காரச் சொல்லும்மா”

“…..” – பதிலேதும் சொல்லவில்லை.

“பவானி, கதவை மூடிக்கோ” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

எழுந்து சென்று கதவை மூடிவிட்டு வந்து, திரும்பவும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

ஜீவன் தனக்காக வாங்கி வந்திருந்த பொருட்களையெல்லாம் எடுத்துப் பார்த்தாள். ஒவ்வொன்றையும் ஆசையாகப் பார்த்தாள். அந்த ஆசை நொடிகள் மிகுந்த தருணங்கள் – இவை.

அடுத்த நொடியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

‘அப்பா வந்தாச்சா’ என்று எண்ணம் கொண்டு, எழுந்து சென்று, “அப்பா” என்று சொல்லியபடியே கதவைத் திறந்தாள்.

மதன் நின்று கொண்டிருந்தான்.

பவானி, ‘இவன், எப்படி இவ்வளவு சீக்கிரமாக வந்தான்’ என்று நினைத்துப் பயந்து விட்டாள்.

மதன், இவனைப் பற்றி என்ன சொல்ல?? கரம் பிடித்தவளின் கஷ்டம் கண்டு, கடந்து செல்ல நினைப்பவன். அவ்வளவு மட்டுமே!!

மதனுக்கு பவானியைப் பிடிக்காது என்று எல்லோருக்கும் தெரியும்.

பிடிக்காது என்று சொல்வது விட, பவானியின் உள நோய், அது சார்ந்து அவள் அனுபவிக்கும் வேதனைகளை மதனால் கையாள இயலவில்லை.

அவனது பேச்சு முழுவதும் அதைக் காரணம் காட்டிப் பவானியைத் திட்டுவதிலோ அல்லது விவாகரத்து கேட்பதிலோ இருக்கும்.

மதன் வீட்டிற்கு வரும்போதெல்லாம், அவனின் பேச்சுக்களைக் கேட்க முடியாமல், பவானி வெளியே சென்று விடுவாள்.

மலைப்பிரதேசத்தில், இன்று கொஞ்சம் மழைச்சாரல் இருந்தது போல… மதன் லேசாக நனைந்து காணப்பட்டான்.

மதன் புருவங்களை உயர்த்தியபடியே “உள்ளே வாங்கன்னு சொல்ல மாட்டியா?? ” எனக் கேட்டான்.

“….”

உரிமையுடன், “நீ, வாங்கன்னு கூப்பிடலனாலும் நான் வருவேன்” என்று உள்ளே நுழைந்தான்.

ஒதுங்கி வழிவிட்டு விட்டாள், பவானி.

நேராகச் சென்று, ‘இந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை’ என்ற தோரணையில் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

இன்னும் கதவருகே நின்றவளைப் பார்த்து, “பவானி வா, வந்து உட்காரு, பேசணும்” என்றான், மதன்.

என்ன செய்வது என்று தெரியாமல், பவானி நடந்து வந்து, கட்டிலின் அருகே கிடந்த நாற்காலியை எடுத்தாள். அதனைச் சற்றுத் தள்ளி இழுத்துப் போட்டுக் கொண்டு, மதனிற்கு எதிரேஅமர்ந்தாள்.

பவானியை ஒரு அளவிடும் பார்வைப் பார்த்தான். பின், “அப்புறம் சொல்லு” என்றான்.

“..” – பவானி நிமிர்ந்து பார்க்காததால், அவளுக்கு மதனின் பார்வை தெரிய வாய்ப்பு இல்லை.

“உன்னையப் பார்த்தாலே தெரியுது, ஏதோ சரியில்லைன்னு??”

“….” – அவன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் அசௌகரியமாக உணர ஆரம்பித்தாள்.

“இன்னும் அதே பிரச்சனைதானா??”

“….” – பவானிக்கு ‘ஆமாம்’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

“என்னைப் பார்க்கிறப்பெல்லாம், உன் அண்ணன், ‘என் தங்கச்சிக்கு சரியாயிருச்சுன்னு’ சொல்றான்?”

“…”

“எல்லாம் பொய்?? அப்படித்தான”

“….”

“மேடம்… என்ன யோசிக்கிறீங்க?”

“….”

“உனக்கும், என் மேல அக்கறை கிடையாது. எனக்கும் அப்படித்தான்”

“….”

“எப்படின்னு கேட்கிறியா??”

“…” – ‘நான் எதுவும் கேட்கல, பேசாம வெளியே போ’ என்று எண்ணினாள்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரியுது. ஆனாலும் அதைப்பத்தி எனக்கு கொஞ்சம் கூட கவலைப்படத் தோணலை.”

“…. ”

“அதேமாதிரி, நான் இப்படி நனைஞ்சி வந்திருக்கேன். ஒரு துண்டு எடுத்துக் கொடுத்து, நல்லா சூடா டீ போட்டுக் கொடுக்கத் தோணிச்சா??”

“…”

“இப்போவாது எதுவும் சமையல் செய்றீயா?? இல்லை எங்க வீட்ல இருந்தமாதிரி சாப்பிடறது மட்டும் தானா??” என்று நக்கலாகச் சொல்லிச் சிரித்தான்.

பவானி நன்றாகத்தான் சமைப்பாள். ஆனால் மதனின் வீட்டில் இருந்த கால கட்டத்தில், உளநிலை உணர்வு உச்சத்தில் இருந்ததால், சமையல் உட்பட, எந்தவொரு வேலையும் சரியாகச் செய்ய இயலாது.

“சரி, அதை விடு. நீ வேலைபாரு. இல்லைன்னா பார்க்காம போ. எனக்கென்ன.??” என்று சொல்லிக் கொண்டே தனது அலைபேசியை எடுத்தான்.

முகப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து பவானியிடம் காட்டினான்.

“என்னன்னு பார்க்கிறயா?? நான் அன்னைக்கே சொன்னேன்ல, எங்க அம்மா எனக்காகப் பொண்ணு பார்க்கிறாங்கன்னு.”

“…..”

“இப்போ பார்த்தாச்சு. இதுதான் அந்தப் பொண்ணோட போட்டோ” என்றான் பெருமையாக.

“….”

“எப்படி இருக்கு?”

“…”

“அந்தப்பொண்ணு வீட்ல உன்னைப் பத்திச் சொல்லியாச்சு. அவங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை.”

“…” – பவானிக்கு ‘நல்லது’ என்று தோன்றியது.

“சரி எதுக்கு வெட்டியா பேசிக்கிட்டு, எப்போ டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போடப் போற?” என்று தன் தேவை பற்றிப் பேச ஆரம்பித்தான்.

“……”

“நீ சைன் மட்டும் போட்டா போதும்.”

“….”

“உண்மையா சொல்லட்டா பவானி?? நீ சைன் போடலானாலும், நான் கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா உங்க அண்ணன் டேரைக்டா போலீஸ் ஸ்டேஷன் போய் நிப்பான். அதான்.. ” என்றவன் குரல் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தது.

“…” – பவானியின் மனம் கொஞ்சம் பயம் கண்டது.

அவளின் மௌனத்தைக் கண்டவன், “அதுக்காகத்தான்… உன்கிட்ட இவ்ளோ கெஞ்சிறேன்” என்றான்.

எத்தனைக் கேள்வி கேட்டும், பதில் சொல்லாமல் இருக்கின்றவளைப் பார்த்து மேலும் கோபம் அதிகமானது.

“வாயைத் திறந்துதான் பேசேன்” என்று எழுந்து நின்று கத்தினான்.

“….” – பவானிக்கு உள்ளுக்குள் பயம் அதிகமானது. உடலில் நடுக்கம் வந்தது.

“இப்படி என் உயிரை வாங்கிற?” என்று குனிந்து வந்து தன் கோப முகத்தை அவளிடம் காட்டினான்.

“….” – பயம் மேலோங்கி, பவானி அழ ஆரம்பித்தாள்.

மதன், பவானியின் கண்ணீரைச் சற்றும் பொருட்படுத்தவில்லை.

“அழ ஆரம்பிச்சிட்டியா?? இனிமே நிறுத்தவே மாட்டியே” என்று கோபம் அதிகமான தொணியில் சலித்துக் கொண்டான்.

“இப்படி அழுகிறது. இல்லைன்னா தூங்கிறது. அதுவும் இல்லையா…. தனியா போய் உட்காரது.” என்று அவள் கையை அழுந்தப் பிடித்து எழ வைத்தான்.

“….” – தன் கைகளை கரம்பிடித்தவன் கைகளிலிருந்து உருவிக் கொள்ள போராடினாள்.

மதனின் கோபம் எல்லையைக் கடந்திருந்தது.

“இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” என்று தன் பலம் கொண்ட மட்டும், பவானியின் கைகளை அழுத்திப் பிடித்தான்.

“….. ” – எதுவும் செய்ய இயலவில்லை என்பதால் அழ மட்டும் செய்தாள்.

“உனக்குதான் வாழ்க்கையில்லை… ஏன் என் வாழ்க்கையை சேர்த்துக் கெடுக்கிற.ச்சே” என்று சொல்லி, ஒரு வேகத்துடன் அவளது கைகளை விடுவித்தான்.

முதலில் தடுமாறியவள், பின்னர் சுதாரித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தாள். கொஞ்சம் சத்தம் வரும் வண்ணமே அழுதாள்.

அக்கணம், திறந்து கிடக்கும் வாசல் கதவு சத்தம் கேட்டது.

பவானியும் மதனும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே ஜீவன் நின்றான்.
ஜீவனும் பார்த்தான்.
நான்கு நாட்கள் கழித்து இருவரும் பார்க்கிறார்கள்.

பவானியின் கண்கள் கண்ணீர் சிந்திய நிலையில் சோர்வு, சோகம் இரண்டும் சேர்த்துக் காட்டியது.

ஜீவன், ஒரு சிறு பெருமூச்சி விட்டான். உடல் அசைந்தாலும், ஜீவனின் கண்கள் பவானியை விட்டு துளியும் அசையவில்லை.

வாய் ஓயாமல் பேசுபவன், ஒரு மிக லேசான தலையசைப்பு… ஒரு சிறு விழி மூடித்திறப்பு… பவானி புரிந்து கொண்டாள்.

ஜீவனுக்குப் புரிகிறதா? – இது நாம் இடையே புகுந்து கொண்டு!

“இவர் யாரு?” – மதன்.

“ஜீவன் சார்.” என்று அழுகையின் ஊடே பவானி சொன்னாள்.

மதனுக்கு ஆச்சிரியம். எட்டு மாதம் கழித்து, தான் கேட்டக் கேள்விக்குப் பதில் தருகிறாள் என்று.

இவையெல்லாம், ஒரு ஓரிரு வினாடிக்குள் நடந்து முடிந்தது.

“உங்க அப்பாவுக்கு தெரிஞ்சவரா?” என்று கேட்டு, திரும்பவும் கட்டிலில் அமர்ந்து கொண்டான், மதன்.

“….”

மதன், “ம்ம்ம், இவளோட அப்பா வெளியே போயிருக்காரு. போயிட்டு அப்புறமா வாங்க” என்று வீட்டின் உரிமையாளன் போலச் சொன்னான்.

ஆனால் ஜீவன் சாரின் பார்வையோ பவானியிடம் கேட்டது ‘என்ன செய்ய?’ என்று.

பவானியும் பார்வையாலே ‘போக வேண்டாம்’ என்றாள்.

அவர்களது உரையாடலை ஜீவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
இருந்தும், கண்களால் பவானியை ‘இங்கே வா’ என்று அழைத்தான்.

வலுவில்லாத கால்கள் கொண்டு எழுந்து, மதனைக் கடந்து சென்று, ஜீவனின் அருகே வந்து காலூன்றி நின்றாள்.

எதுவும் புரியாமல் மதனும் எழுந்து, அவர்கள் இருவரும் நிற்கும் இடத்திற்கு வந்தான், “ஜீவன்.. நீங்க… ??” என்றான்.

“வெயிட். என் பேரு ஜீவன். பட் ஜீவன் சாருன்னு கூப்பிடுங்க. இல்லைன்னா வெறும் சாருன்னு கூப்பிடுங்க”

‘எத்தனை நாட்களாயிற்று, இந்த வசனத்தைக் கேட்டு?’ – நாம் கேட்டுவிட்டோம்! மலைப் பிரதேசம்?? இன்று வாய்ப்பில்லை!!

‘ஏன்?? எதற்காக இப்படி?’ – இது மதனின் நினைப்பு.

“நீங்க எங்க வேலை பார்க்கிறீங்க? எந்த எஸ்டேட்ல??” – மதன்.

“ஆன்லைன்ல ஜாப் பார்க்கிறேன்.”

“ஓ” – என்று சொன்ன மதனின் அலைபேசி அழைத்தது. அவன் தாயார்தான்.

அழைப்பை ஏற்றுக்கொண்டவன், பவானியப் பார்த்து, “எங்கேயும் போகாத. இப்போ வந்துருவேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

மதனுக்குப் பவானியின் மீது பெரிய அக்கறை, அன்பு என்று எதுவும் கிடையாது என்று நமக்குத் தெரியும். ஆதலால் அவனுக்கு
ஜீவன் யார்?
பவானிக்கு ஜீவன் யார்?
என்ற கேள்விகள் எழவேயில்லை.

*****
பவானியும்… ஜீவனும்…

என்னமோ ஜீவனுக்கு, பவானியைப் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் புன்னகை புரியவில்லை.

“பவானி, எப்படி இருக்க?” என்று ஜீவன் உள்ளம் திறந்து கேட்டான்.

ஒரே ஒருமுறை தலை அசைத்தாள். இன்னும் அழுகிறாள்.

“பவானி, அழாத சரியா. கண்ணைத் துடைச்சிக்கோ” என்றான் கரிசனம் நிறைந்த குரலில்.

‘அவள் அழக்கூடாது என்று தனக்கு ஏன் இத்தனை அக்கறை?’ என்று ஜீவன் சார் நினைப்பதாலும்,
தனது கண்களைப் புடவையின் முந்தானைக் கொண்டு துடைத்துக் கொண்டிருப்பதால், பவானியும் மௌனமாக நகரும் தருணங்கள் – இவை.

‘அழுதுக்கோ!’ என்று சொன்ன ஜீவன் சார், இன்று ‘அழாதே’ என்று சொல்லும் அளவிற்கு மாறியுள்ளார். நல்ல மாற்றம்!! – இது நாம்.

“பவானி”

“சொல்லுங்க சார்”

‘ஒன்றுமில்லை, விடு’ என்பது போல் தலையாட்டியவன், தன் கையில் வைத்திருந்த நூற்கண்டை, அவளிடம் நீட்டினான்.

‘என்ன’ என்பது போல் பார்வையால் கேட்டாள்.

“இது ஜீப்ல விழுந்திருச்சிப் போல. அதான் பார்த்ததும் எடுத்திட்டு வந்தேன்.”

“அப்புறமா பெஞ்சுக்கு வர்றப்போ கொடுத்திருக்கலாமே சார்? இவ்ளோ நனைஞ்சிருக்கீங்க?” என்று அவனின் மீது அக்கறையுடன் கேட்டாள்.

ஆம் வெளியே மழைப் பொழிவு, சற்று அதிகமாயிருந்தது. வீட்டின் உள்ளே கூட குளிரை உணர முடிந்தது.

“அதைவிடு. சமாதானம் ஆயாச்சோ??” என்று ஜீவன் சம்பந்தம் இல்லாமல் கேட்டான்.

“புரியல ஜீவன் சார்.”

“ப்ச், மதனும் நீயும் சமாதானதுக்கு வந்துட்டீங்களா? ”

“இல்லை சார். இப்பக் கூட டிவோர்ஸ் வேணும்னுதான் கேட்டாரு”

“ஓ! ”

“நீ என்ன சொன்ன??”

“பாலாண்ணா எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க”

‘தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாதா?’ என்று பவானியும், ‘தான் என்ன செய்ய?? ‘ என்று ஜீவன் சாரும் தங்களுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்ட தருணங்கள் – இவை.

“பவானி”

“ம்ம்ம்”

“அன்னைக்கு எங்கிட்ட ஒரு விஷயம் கேட்டேலே?”

“என்னது ஜீவன் சார்??”

“ப்ச், மதன் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லன்னு?”

“ஆமாம்”

“அதுக்கு நான்கூட ஒரு பதில் சொன்னேன்ல.”

“ஆமாம்”

“அது ஞாபகம் இருக்கா??”

“இருக்கு சார்”

“அதை இப்போ மதன்கிட்ட சொல்லு.”

“ம்கும் முடியாது. பாலாண்ணாவுக்கு தெரிஞ்சா? அவ்ளோதான்”

“அப்போ அன்னைக்கு சும்மாதான் கேட்டியா?”

“அப்படி இல்லை சார்”‘

“அப்போ சொல்லு.”

“வேண்டாம் சார்”

“அப்போ! இனி எதுவும் என்கிட்ட கேட்காத.” என்றான் கோபமாக.

“ஏன் இப்படிச் சொல்றீங்க? ”

“வேறென்ன சொல்ல” என்றான் இன்னும் கோபம் அதிகமாகி!

‘இவள் தன் சொல்லை கேட்கவில்லை என்றால் தனக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது?’ என்று ஜீவனும்,’ தந்தை சொல்லலை எப்படி மீறுவது?’ என்று பவானியும் யோசிப்பதால், அமைதி நிலவிய தருணங்கள். – இவை.

“சார், ஜீவன் சார்”

“ப்ச், சொல்லு”

“எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு”

“பவானி, அன்னைக்கு வாக்கிங் போகறதுக்கும் இப்படித்தான பயந்து சொன்ன. ஆனா போனேல ”

“அன்னைக்கு நீங்க கூட நின்னீங்க. அதான் பயமில்லை”

“இப்பவும் உன்கூடதான் நிக்கிறேன். ஸோ பயமில்லா நான் சொன்னதைச் சொல்லு”

“ம்ம்” என்றாள் நம்பிக்கையில்லாமல்.

“பவானி…இங்க பாரு. நான் உன்கூட நிக்கிறேன். தைரியமா சொல்லு”

“சரி ஜீவன் சார்”

“என்ன சொன்னேன் தெரியுமா?”

“ம்ம்ம், எனக்குக் குழப்பமா இருக்கு, தெளிவானதுக்கு அப்புறம் முடிவு எடுக்கிறேன்”

“ம்ம்ம் குட்”

“ஜீவன் சார், இனிமே என்னைக்குமே எதாவது பிரச்சனைன்னா உங்ககிட்ட கேட்கலாமா?” என்று அர்த்தங்கள் நிறைந்த கேள்வி கேட்டாள்.

“ப்ச், பவானி, அதை எதுக்கு இப்பவே யோசிக்கிற? வர்றப்ப பாத்துக்கலாம்” என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்லி விட்டான்.

‘தான் என்ன முடிவில் நிற்கிறோம்’ என்று குழம்புவதால் ஜீவன் சாரும், ‘ஒரு நல்ல முடிவு எடுத்தாயிற்று’ என்று நம்புவதால் பவானியும் அமைதியாக நிற்கும் தருணங்கள் – இவை.

இதற்கு சில நொடிக்களுக்குப் பின் வெளியே…

நாதன் தன் வேலை முடிந்து வந்து கொண்டிருந்தார். மதனும் அலைபேசி அழைப்பை முடித்திருந்தான்.

நாதன், “வாங்க மாப்பிள்ளை” என்று சொல்லிக் கொண்டே, மதனின் அருகே வந்தார்

உரிமையாய் உறவைச் சொல்லி அழைத்ததில், மதனுக்கு உடன்பாடு இல்லை என்பதை அவனின் உடல்மொழி வரைந்து காட்டியது.

“மாப்பிள்ளை வெளியே நிக்கிறீங்க. உள்ளே உட்கார்ந்து இருக்கலாமே”

“பவானிகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போதுதான் போஃன் வந்திச்சு. அதான் வெளியே வந்தேன்”

நாதன், ‘இவன் பவானியிடம் பேசினானா?? பேசியே, அவளைக் கலங்கடித்திருப்பானே?’ என்ற கவல் நினைவில் கலங்கினார்.

இருந்தும் நாதன், “சரி. சரி… உள்ளே வாங்க” என்று சொல்லி, மதனைக் கூட்டிக் கொண்டு உள்ளே வந்தார்.

அங்கே, அவர் கண்ட காட்சி, ஜீவனும் பவானியும் பேசிக் கொண்டிருந்தனர். ‘இங்கே என்ன நடக்கிறது?’ என்று பதறினார்.

நாதன், “என்ன ஜீவன் சார், நீங்க ஏன் திரும்பி வந்தீங்க??” என்று கொஞ்சம் அழத்தமாகவே கேட்டார்.

“அது ஒரு திரெட் மிஸ்ஸாகியிருச்சு. அதான் கொடுத்திட்டுப் போலாம்னு வந்தேன்” – ஜீவன்.

“கொடுத்திட்டிங்கல, நீங்க போங்க ஜீவன் சார்” என்றார், நாதன்.

ஜீவன் ஒரு மில்லிமீட்டர் கூட, தான் நிற்கின்ற இடத்தில் இருந்து நகரவே இல்லை.

‘ஏன், இன்று இவர் இப்படி?’ என்று நாதனுக்கு எரிச்சல் வந்தது.

“நீங்க உட்காருங்க மாப்பிள்ளை” – இது நாதன்.

“இப்படிக் கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டேன்” – சுள்ளென்று பதில் தந்தான் மதன்.

எனினும் நாதன், “சரி.. உட்காருங்க” என்று சமாளித்தார்.

“அம்மா வரலையா?” – நாதன்.

“நான் என்ன?? பொண்ணா பார்க்க வந்திருக்கேன்?? கட்டின பொண்ண வேண்டாம்னு சொல்ல வந்தேன். அதுக்கு எதுக்கு அம்மா?? ” – மதன்.

பாலாவிடம், மதனால் இவ்வாறு எடுத்தெறிந்து பேச முடியாது. எனவே, அதற்கும் சேர்த்து வைத்து பவானியிடமும் நாதனிடம் பேசுவான். பவானி அழுவாள். நாதன் சிரித்துச் சமாளிப்பார்.

“வீட்ல அம்மா, தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்காங்களா?” – நாதன்.

“அது தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?” – மதன்.

ஜீவனின் முன்பு, மதனின் இந்த அடாவடிச் செயலால்… தன் வீடுதான் என்ற பொழுதும் சங்கோஜமாக உணர்ந்தார், நாதன்.

“பவானி, நீ இங்க வந்து உட்காரு” என்று மகளாவது சொன்ன சொல் கேட்பாள் என்று நினைத்தார்.

ஆனால் பவானியும் கேட்கவில்லை. அவள் ஜீவனின் அருகிலேயே நின்றாள்.

ஆகமொத்தத்தில், அந்த நேரத்தில் நாதனின் பேச்சிற்கு யாருமே மதிப்பு கொடுக்கவில்லை.

“இங்க பாருங்க, உங்ககூட பேசறதுக்கு ஒன்னும் இல்லை. உங்க பொண்ண டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போடச் சொல்லுங்க??”

“பாலாதான் முடிவெடுப்பான். நீங்க அவன்கிட்ட பேசிக்கோங்க. ”

“ச்சே. யார்கிட்டயும் பேச முடியாது. உங்க பொண்ணுக்கு பிரச்சனை இருக்கிதுன்னு தெரிஞ்சும், அதை மறைச்சிக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க… ”

“மா..சத்தியமா இல்லை. உங்களுக்கு என்னைக்குத் தெரிஞ்சததோ, அன்னைக்குத்தான் எங்களுக்கும் தெரியும்” என்று உண்மையைச் சொன்னார்.

“இதை என்னைய நம்பச் சொல்றீங்களா??”

“இல்லை மாப்… எனக்குத் தெரியவே தெரியாது.. தெரிஞ்சிருந்தா.. ”

“தெரிஞ்சா??” என்று சொல்லி நாதனை நோக்கிச் சென்றவன், ” தெரிஞ்சா, கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டீங்களா??” என்றான்.

“அப்படி இல்லை.. ”

“பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி வச்சதே தப்பு. இதுல காலம் முழுசும், இவளோட என்னைய மல்லுக்கட்டச் சொல்றீங்களா??”

“… ”

“உங்க வீட்டுச் சுமையை, என் தலையில இறக்கி வச்சிட்டு, நீங்க நிம்மதியா இருக்க திட்டம். சரிதான நான் சொல்றது?”

” போதும் நிறுத்துங்க.. ” – நாதன்.

“என்ன உண்மையைச் சொன்னா.. ” என்று ஆரம்பித்தான் மதன்…

இன்னும் இன்னும் நாதனுக்கு வசை மழை விழுந்தது. ஆனால், நாதனுக்கு அதை கவனிக்க இயலவில்லை. காரணம். ஜீவனின் அருகில் நின்ற பவானி மட்டுமே கருத்தில் நிற்கிறது!

“இப்போ சொல்லு பவானி” – ஜீவன்.

பவானி, “மதன்” என்று எட்டு மாதத்திற்குப் பின் அவன் பெயரைச் சொன்னாள்.

மதனுக்கும் நாதனுக்கும் அதிர்ச்சி ஒரே அளவில் இருந்தது.

மதன் திரும்பிப் பார்த்தான். “என்ன?” என்று கேட்டபடியே பவானி அருகில் வந்தான்.

“மதன்” என்று பவானி அழைத்தாள்.

“ம்ம்ம் என்னென்னு சொல்லு” – மதன்.

“… ” – பவானி உடல் நடுங்கியது.

“ஏய்! நீ பேசுவேன்னு நினைச்சி வந்தேன் பாரு? ”

“…..”

“நீதான் என்கூட பேசவே மாட்டியே! இப்போ என்ன??”

“அது…எ”

“ஓ, உங்க அப்பாவைத் திட்டினதும் கோபம் வந்திருச்சா?? நல்ல குடும்பம் ??” என்று சொல்லி, மதன் நாதனின் அருகில் சென்று, மீண்டும் கத்த ஆரம்பித்தான்.

மதனின் கத்தலையும் தாண்டி, நாதனின் மனம் முழுவதும் பவானி ஜீவன் அருகிலே இருந்தது.

இன்னும் பவானியின் பயம் போகவில்லை…

சட்டென்று என்ன நினைத்தானோ ஜீவன், “பவானி, இனி எப்பவுமே எந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் என்கிட்ட சொல்லு. நான்.. நான்… ப்ச்.. நான் பார்த்துக்கிறேன்” என்று சிறிய குரலில் பெரிய அர்த்தம் நிறைந்த வார்த்தைப் பேசினான்.

இலட்சம் சந்தேகக் கேள்விகளுடன், பவானி ஜீவனைப் பார்த்தாள்.

என்ன பதில் என்றே புரியாத பார்வையுடன், ஜீவன் பவானியைப் பார்த்தான்.

ஜீவன் சார்!! பவானிக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை தருகிறீர்கள் என்று தெரியுமா?
இடையில் இதனைக் காப்பாற்ற முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?? சரி காப்பாற்றுவார் என்று நம்புவோமாக!

“மதன்..” – பவானி.

மதன், “என்ன?” என்று எரிச்சலுடன் கேட்டு, பவானி அருகில் வந்தான்

“நான் கொ.. கொஞ்சம்.. கோ.. குழப்பத்தில இரு… இருக்கேன். தெளிவானதுக்கு அப்புறமா, ஒரு முடிவு எடுக்கிறேன்”

“நிஜமாவா” என்று அதிர்ச்சி நிறைந்த குரலில் கேட்டான், மதன்.

“ம்ம்ம்”

“நம்பலாமா??”

நாதன், “பவானி என்ன சொல்றன்னு புரிஞ்சுதான் சொல்றியா?” என்று கேட்டுகொண்டே பவானி அருகே வந்தார்.

“ஏன்? அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு” – மதன்.

“இல்லை பாலா… ” – நாதன்.

“என்ன பாலா?? எனக்கு என்னோட பொண்டாட்டியைப் பிடிக்கலை. அவளுக்கும் என்னைய பிடிக்கலை. டிவோர்ஸ் பண்ணப் போறோம். நீங்களும் உங்க பையனும் சும்மா இருங்க”

“இல்…” – நாதன்.

“என்ன இவ்ளோ நம்பிக்கையா சொல்றேன்னு பார்க்கிறீங்களா?? எனக்குத் தெரியாதா என்னோட பொண்டாட்டி பத்தி?”

மதனைச் சுற்றியிருந்த அனைவரும் அமைதி காத்தனர்.

“கண்டிப்பா பவானி டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போடுவா! ஏன்னா என் பொண்டாட்டிக்கு என்கூட வாழ சுத்தமா ஆசையில்லை. சரிதான பவானி” என்று மதன் சிரித்தான்.

“டிவோர்ஸ்தான பண்ணப் போறீங்க.” என்று சுற்றியிருந்த அமைதியைக் கலைத்தான் ஜீவன்.

“ஆமா” – மதன்.

“அப்புறம் எதுக்குத் தேவையில்லாத பேச்சு??” – ஜீவன்.

‘மதன், என்ன தேவையில்லாத பேச்சு பேசினான், ஜீவன் சார்?’ – நம் சார்பில் ஜீவனிடம் கேட்க வேண்டிய கேள்வி!

“என்ன தேவை… ச்ச்சே நீங்க யாரு?” – மதன்.

“அது நான் சொல்றேன்..” – நாதன்.

“போதும்… எனக்குத் தேவையில்லை. யாரா வேணா இருக்கட்டும். நான் சந்தோஷமா கிளம்புறேன். நல்ல முடிவா எடு பவானி.” என்று சொல்லிவிட்டு, மதன் வெளியே கிளம்பினான்.

நாதன் ‘இது சரியல்ல’ என்றவாரு தலையை இடமும் வலமும் அசைத்துக் கொண்டே நடந்து சென்று கட்டிலில் அமர்ந்தார். ஓரே நாளில் எத்தனை மாற்றம் என்பது போல் முகத் தோற்றம் அவருக்கு!

ஜீவனும் பவானியும்…

“பவானி” என்று மிகுந்த சந்தேகம் கொண்டு அழைத்தான்.

“ம்ம்ம்”

ஜீவன் ஏதோ கேட்கத் தயங்கினான்.

“பெஞ்சிக்கு வருவீங்களா?” என்று தயங்காமல் கேட்டாள்.

இந்த விடயத்தில் ஜீவனை விட பவானி தெளிவாக இருக்கிறாளோ?

“நான் அங்க வெயிட் பண்றேன்” – ஜீவன்.

“அப்பாகிட்ட சொல்லிட்டு வரேன் சார்”

ஜீவன், “நான் கிளம்புறேன் நாதன் சார் ” என்றான்.

ஒரு தலையசைப்பு மட்டும் கொடுத்து, அமைதியாக இருந்தார்.

“வரேன் பவானி”

“போயிட்டு வாங்க சார்” என்று சொல்லி வழி அனுப்பினாள்.

முதல் நாளிலும் சரி! இன்றைய நாளிலும் சரி!! பவானியிடம் மாற்றம் இல்லை. ஆனால் ஜீவன் சாரிடமும் நாதனிடமும் மாற்றம் வந்திருக்கிறது.

ஜீவன் சென்றதும்… பவானி, அவன் தந்த பைகளை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். சற்று நேரத்திற்கு முன்பு இருந்ததை விட, இப்போது தெம்பு வந்தது போல் தெரிந்தாள்.

நாதன், அவளையே பார்த்திருந்தார். இவள் எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தாள். இது யாருடைய முடிவு? முடிவை ஜீவன் எடுத்திருப்பாரோ?

ஜீவன் யார்?? அவனைப் பற்றிய ஒன்றுமே தெரியாதே! எப்படித் தெரிந்து கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

வள்ளிம்மா! அவருக்குத் தெரிய வாய்ப்பிருக்கு!! அவரிடம் கேட்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

அன்றைய தினத்திற்கான கடைசி அதிர்ச்சி, நாதனை வரவேற்கக் காத்துக் கொண்டு நிற்கின்றது!!

*********

நோயினைப் பற்றிச் பற்றிச் சில தகவல்கள்.

இது பைபோலார் டிசார்டர்.

இது ஒரு உள நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் உணர்வது, உள்ளம் மிகுந்த உணர்ச்சி நிலையில் இருப்பது. இது தமிழில் பித்து (manic, hypomanic episodes) என்று அழைக்கப்படும். இது அடிக்கடி வருவதில்லை.

சில நேரங்களில் அதீத உற்சாக நிலையில் இருப்பர். சில நேரங்களில் சோர்வாக உணர்வார்கள்.

கீழே உள்ள இரண்டு மன நிலைகள்(depression episodes) மாறி மாறி வரும்…

அதீத உற்சாக நிலை…

அதிக மகிழ்ச்சி, அதிக நம்பிக்கை.
சுருசுருப்பாக இருப்பர். தூக்கம் குறைவாக இருக்கும்.
படகடவென்ற பேச்சு. கவனமின்மை.
சந்தோஷ மனநிலையில் இருந்து கோபத்திற்கு மாறுவது.
குடிப்பழக்கம்

தளர்வான நிலை

சோகம்
நம்பிக்கையின்மை
தவறான முடிவுகள்
அதீத அழுகை
அதிக தூக்கம்
தற்கொலை எண்ணம்

அதீத உற்சாக நிலையும் தளர்வான மனநிலையும் மாறி மாறி வரும். அது விரைவுச் சுழற்சி(mood swing) எனப்படும்.

இந்த இரண்டு நிலைகளும் இல்லாத நிலையில் வழமையான மனநிலையில்(normal) இருப்பார்கள்.

இந்த மனநிலைகளில் எவையெவை கதையின் போக்கோடு ஒத்து வருகிறதோ அந்தந்த மனநிலைகள் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது.

error: Content is protected !!