கீதாஞ்சலி – 11

சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்த மெர்சிடீஸ் பென்ஸ். வழக்கம் போல காரோட்டும் பொறுப்பில் கௌஷிக் இருக்க, அருகில் அமர்ந்திருந்தான் ராகுல்ரவிவர்மன்.

பின் இருக்கையில் குழந்தைகளோடு அமர்ந்திருந்தனர் சத்யவதியும் அமிர்தவர்ஷினியும். அமிர்தாவை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகராமல், பற்றிய அவள் கையை விடாமல் பிடித்த வண்ணம் அருகில் அமர்ந்திருந்தான் சந்தோஷ்.

அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது சந்தோஷின் முகத்தில். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவனுக்குக் கிடைத்த இந்தப் புது உறவை விட்டுக் கிஞ்சித்தும் நகரும் விருப்பமில்லை சந்தோஷுக்கு. இனி அமிர்தாவும் நிலா பாப்பாவும் அவன் கூடவே இருக்கப் போவதாக சத்யவதி சொன்ன போது அகமகிழ்ந்து போனான் பையன்.

நிலா சத்யவதியின் மடியில் உறங்கிப் போயிருக்க சந்தோஷும் கண்ணயர்ந்தவுடன் சற்றுத் தளர்வாக அமர்ந்து கார் கதவின் பக்கமாகத் தலை சாய்த்துக் கொண்டாள் அமிர்தா. கைகள் கழுத்தை வருடிக் கொடுத்தது. மஞ்சள் வாசனை நாசியைத் தீண்ட கைகள் அதன் ஈரத்தை ஸ்பரிசித்து உணர்ந்தது.

கண்கள் தாமாக அந்தத் திருமாங்கல்ய சரடின் சொந்தக்காரனைக் காரின் ரியர் வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தது. இவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல ‘என்ன’வென்று பதிலுக்குக் கண்களாலேயே வினவினான் ராகுல்ரவிவர்மன். ஒன்றுமில்லை என்பதாக அமிர்தா தலையசைக்கக் கண்களை மூடிக் காட்டித் தூங்குமாறு மறுபடியும் கண்களாலேயே பேசினான். அவன் கண்கள் பேசிய நயன பாஷையைப் புரிந்து கொண்டவள் போல அடுத்த நொடி இமை தாழ்த்தி இருந்தாள்.

எப்போதிருந்து இப்படிக் கண்களால் பேசிக் கொள்ளத் துவங்கினோம்? நினைக்கும் போதே சிரிப்பு தான் வந்தது அமிர்தாவிற்கு. மூடிய கண்களுக்குள் நடந்தவை அனைத்தும் காட்சியாக விரிந்தது.

அமிர்தா கூறியது போல் அன்றிரவே ஜீவாவின் சித்தப்பா, அந்தப் பெரிய மனிதரின் தம்பி என்று கூறிக் கொண்டு ஒரு ஆள் வெள்ளை வேட்டி சட்டையில் அடியாட்களோடு வந்து இறங்கினார்.

அமிர்தாவை அந்த மனிதரின் கண்ணில் கூட காட்டாமல் சத்யவதி வீட்டின் ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு மற்ற மூவரும் தான் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ரூமிற்குள் இருந்தாலும் அங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் அமிர்தா. அவர் பேசிய பேச்சில் ஒரு கட்டத்தில் நாமே பேசாமல் எழுந்து வெளியில் சென்று அவர் முன் நின்றுவிடலாம் என்று கூடத் தோன்றியது அபலைக்கு.

எதற்கும் இறங்கி வராமல் ஆதியோடு அந்தமாக வேரறுத்தால் தான் அண்ணனின் போன மானம் திரும்ப வரும் என்று கூறி விடாமல் கத்திக் கொண்டிருப்பவரிடம் என்ன பேசுவது?

“என்னை மீறித் தொட்டுப் பாருங்கடா பார்ப்போம்” என்று ஒரு ருத்ர தாண்டவமே ஆடி விட்டான் ராகுல்ரவிவர்மன். சத்யவதி தான் ஒருவழியாக ராகுலை அடக்கி வைத்தார்.

அமிர்தாவுக்கும் ராகுலுக்கும் திருமணம் செய்யப் போவதாகவும், குழந்தையையும் ராகுல் சட்டப்படி தத்தெடுத்துக் கொள்வான் என்று சத்யவதி கூறிய போது அந்த மனிதரின் முகம் கொஞ்சம் யோசனையைக் காட்டியது.

கௌஷிக் வந்த மனிதரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் முதலில் பேசினான். சற்று நேரத்திலேயே கௌஷிக் வந்து ராகுலின் காதைக் கடிக்க இவனும் எழுந்து போனான். என்ன பேசினார்களோ திரும்பி வந்ததும் அந்த மனிதர்,

“இங்க பாருங்கம்மா, சொன்னபடி ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிடணும். வாக்கு தவறக் கூடாது சொல்லிட்டேன் ஆமா” என்று கொஞ்சம் மிரட்டலாகவே கூறிவிட்டுத் தன்னுடைய பரிவாரங்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் கிளம்பியதும் அமிர்தாவையும் அழைத்துப் பேசினார் சத்யவதி.

“என்ன முடிவு பண்ணியிருக்க அமிர்தா?” சத்யவதி கேட்க,

“கௌஷிக் அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா? எனக்கு எங்கேயாவது வெளி நாட்டுல வேலை வாங்கித் தர்றீங்களா? இன்டியால இருந்தா தானே இந்தப் பிரச்சனை எல்லாம். நான் அவங்க யார் கண்ணுலயும் படாம தூரமா எங்காவது போய் என் பொண்ணை வளர்த்துக்கிறேன்” சத்யவதி கேட்ட கேள்விக்குப் பதிலாகக் கௌஷிக்கிடம் கேட்டாள் அமிர்தா.

“வெளி நாட்டுல வேலை வாங்கலாம் தான். ஆனா அதுக்கெல்லாம் கொஞ்ச நாளாச்சும் டைம் வேணும் அமிர்தா. எடுத்த எடுப்புல எப்படி விசா எல்லாம் ரெடி பண்ண முடியும்? வேலை, விசா எல்லாம் ரெடியாகுற வரைக்கும் உனக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகாம இருக்கணுமே, அதுக்கு என்ன பண்றது? சொல்லு” கௌஷிக் வினவ,

“நாங்க உனக்கு நல்லது தான் பண்ணுவோங்கிற நம்பிக்கை உனக்கு இல்லையா அமிர்தா?” சத்யவதி கேட்க பதறிப் போனாள் பெண்.

“அப்படி எல்லாம் இல்ல அத்தை. நீங்க எப்படி எனக்காகப் பார்க்குறீங்களோ அதே மாதிரி என்னால உங்க யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்திடக் கூடாதுன்னு நானும் நினைக்கிறேன் அத்தை. அதனால தான் தூரமா எங்கேயாவது போயிடலாமின்னு பார்க்குறேன்.”

“நான் பிரச்சனையை முடிக்க வழி சொல்றேன். நீ அதை தற்காலிகமா தள்ளி வைக்கப் பார்க்குற. நீயே சொல்லு. எது நல்லது? பிரச்சனையை முடிக்கிறதா இல்ல தள்ளி வைக்கிறதா?”

“கல்யாணம் பண்ணா மட்டும் அவங்க பிரச்சனை பண்ண மாட்டாங்கன்னு எந்த உத்திரவாதமும் இல்ல அத்தை.”

“அந்த மனுஷன் பேசினதைக் கேட்டுக்கிட்டு தானே இருந்த. தெளிவாத்தானே சொல்லிட்டுப் போனாரு. கல்யாணம் முடிச்சுக் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்துட்டா எந்தப் பிரச்சனையும் பண்ண மாட்டோமின்னு.”

“……….”

“அமிர்தா, இது வெறும் ஒரு அப்பாவோட ஜாதிவெறி மட்டுமில்ல. அதையும் தாண்டி அந்த வாரிசில்லாத பணக்கார அப்பாவைச் சுத்தி இருக்குறவங்களைப் பத்தியும் நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு.” கௌஷிக் ஏதோ பூடகமாக சொல்ல திகைத்து விழித்தாள் அமிர்தா.

“நிலா அந்த சொத்துக்கு வாரிசா வந்துடக் கூடாதுங்குறது மட்டுந்தான் அவங்களுக்கு வேணும். புரியுதா? அது வரைக்கும் அந்த ஜீவாவோட அப்பாவே இந்த விஷயத்தை விட்டாலும் இவங்க யாரும் விட மாட்டாங்க. இதுக்கு ஒரே வழி நீ ராகுலை சட்டப்படிக் கல்யாணம் பண்ணி நிலாவை உங்க ரெண்டு பேரோட பொண்ணா சட்டப்படி மாத்துறது தான்.”

கௌஷிக் தீர்மானமாக சொல்ல இப்பொழுது கொஞ்சம் விஷயம் புரிந்தது அமிர்தாவிற்கு. ‘சொத்து விவகாரம் வேறயா’ என்று தான் முதலில் எண்ணத் தோன்றியது அவளுக்கு. திருமணம் முடித்தால் மட்டும் நிலா அவர்கள் வீட்டின் வாரிசில்லை என்றாகிவிடுமா என்ன? குழப்பமாக இருந்தது அமிர்தாவிற்கு.

“கல்யாணம் முடிச்சா மட்டும் நிலா அவங்க வீட்டு வாரிசு இல்லைன்னு ஆயிடுமா அண்ணா?” சந்தேகத்தைக் கௌஷிக்கிடம் கேட்டும் விட்டாள்.

“அதைப் பத்தி லாயர்கிட்ட டிஸ்கஸ் பண்ணணும் அமிர்தா. சட்டத்துக்கு இந்தக் கல்யாணம் போதுமோ இல்லையோ ஆனா இந்த முட்டாப் பசங்க வாயை அடக்கக் கண்டிப்பா இந்தக் கல்யாணம் போதும்.”

கௌஷிக்கின் பதிலில் அமிர்தாவின் கண்கள் ராகுலை வட்டமிட்டது. தங்களுக்காக மட்டுமே யோசித்து ராகுலையும் இதில் சிக்க வைக்க அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அவளின் பார்வை புரிந்தவராக சத்யவதிதான் பேசினார்.

“இது உனக்காக மட்டும் எடுத்த முடிவில்ல அமிர்தா. ராகுல் அப்புறம் சந்தோஷுக்காகவும் தான். இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தா சந்தோஷ், நிலா ரெண்டு பேருக்குமே அப்பா, அம்மா ரெண்டு பேருமே கிடைப்பாங்க இல்லையா? கொஞ்சம் யோசிச்சுப் பாருடா” அமிர்தாவின் கரம் பற்றிக் கொஞ்சம் கெஞ்சுதலாகக் கேட்டார் சத்யவதி.

அப்போதும் அமிர்தாவின் கண்கள் ராகுலையே கேள்வியாகப் பார்த்திருக்க,

“அவன் அந்தாள் இங்க இருக்குறப்பவே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான்ம்மா” இது கௌஷிக்.

இதை கௌஷிக் சொல்லும் போது மட்டும் ராகுலின் கண்களும் நிமிர்ந்து அமிர்தாவின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தது. பின் அதே கண்கள் அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷையும் நிலாவையும் ஆதுரத்தோடுப் பார்த்தது.

ராகுலின் கண்களைப் பின் தொடர்ந்தவளுக்கும் அவன் விழி வழி வந்த செய்தி புரிய சத்யவதியைப் பார்த்து சம்மதமாகத் தலையசைத்தாள்.

“அமிர்தா நிஜமாத்தான் சொல்றியாடா? உனக்கு சம்மதமா? என் தங்கம்” சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது சத்யவதிக்கு. அமிர்தாவின் கன்னம் வழித்து முத்தம் வைத்தார் சத்யவதி.

சட்டென்று ஒரு சந்தோஷப் பரபரப்பு தொற்றிக் கொண்டது அவ்வீட்டில். அது வரை இருந்த இறுக்கமான சூழ்நிலை மாயமாக மறைந்திருந்தது.

“சத்யாம்மா, எங்க ரெண்டு பேருக்குமே இது முதல் கல்யாணம் கிடையாது. அதனால ரொம்ப கிரான்டா எல்லாம் வேண்டாம். சிம்பிளா எதாவது கோவில்ல வைச்சுப் பண்ணினா போதும். ப்ளீஸ் சத்யாம்மா” அதுவரையில் மௌனமாக அமர்ந்திருந்த ராகுல் அப்பொழுது தான் வாய் திறந்தான்.

“சரிப்பா, சரிப்பா. நீ எப்படி சொல்றியோ அப்படியே செஞ்சுடலாம்ப்பா” ராகுல் என்ன சொன்னாலும் தலை ஆட்டும் மனநிலையில் தான் இருந்தார் சத்யவதி.

“நீங்க டேட் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி வைங்க சத்யாம்மா. நான் அதுக்குள்ள சென்னைக்குப் போயிட்டு வந்துடறேன். கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. அது வரைக்கும் கௌஷிக் இங்க உங்களுக்குத் துணைக்கு இருக்கட்டும்.”

ராகுல் சொல்ல சத்யவதிக்கு ஏனோ அது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. அவர் கையோடு இவர்கள் திருமணத்தை முடித்து வைக்கவே விரும்பினார்.

இப்போது தான் அந்த ஜீவாவின் சித்தப்பா என்று சொல்லிக் கொண்டு ஒருவன் வந்து ஆடிவிட்டுப் போய் இருக்கிறான். அடுத்ததாக மாமன், அண்ணன் என்று வேறு யாராவது புதிதாக முளைத்துக் குட்டையைக் குழப்பாமல் இருக்க வேண்டுமே. அதற்குள் இந்தத் திருமணத்தை முடித்து விட்டால் நல்லது என்று தோன்றியது சத்யவதிக்கு.

ராகுலிடம் எதுவும் மறுத்துப் பேசாமல் தலையாட்டிக் கொண்டவர் திருமண நாள் குறிக்கும் பொழுது தனது விருப்பத்தைக் கோவில் ஐயர் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். அன்றிலிருந்து எண்ணி இரண்டாவது நாளே திருமணத்திற்கான நாளாகக் குறித்து விட்டு வந்தார் சத்யவதி. நடுவில் ஒரு நாள் மட்டுமே முழுதாக இருந்தது.

எனவே ராகுல் சென்னை செல்லும் பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது. ஒரேடியாக திருமணத்தை முடித்து விட்டு அன்றே கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள் கௌஷிக்கும் சத்யவதியும். எல்லா வேலைகளையும் ஒரே நாளில் பார்க்க வேண்டி இருந்ததால் அவசர அவசரமாகக் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் இவர்கள் இருவருமாகவே செய்து கொண்டிருந்தார்கள்.

ராகுலையோ அமிர்தாவையோ முடிந்த அளவு எதற்கும் தொல்லை செய்யாமல் பார்த்துக் கொண்டார்கள். ராகுல் மாடியே கதியென்று இருக்க, அமிர்தாவோ குழந்தைகளே கதியென்று இருந்தாள். இவர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில் இருப்பதைப் பார்த்த சத்யவதி,

“அமிர்தா, போம்மா. வீட்டுக்குப் போய் உனக்குத் தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வைச்சிடு. கல்யாணம் முடிஞ்சு சீக்கிரமா கிளம்பினா தான் இருட்டுறதுக்குள்ள நாம சென்னை போய் சேர முடியும். அப்போ போய் இந்த பேக்கிங் வேலை எல்லாம் பண்ணா லேட் ஆகிடும்.”

என்று சொல்லி அமிர்தாவை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டுப் பின்னோடு ராகுலையும் அனுப்பி வைப்பதற்காக,

“ராகுல்… ராகுல் கண்ணா” மாடியை நோக்கி சத்யவதி குரல் கொடுக்க அங்கிருந்து வந்ததோ கௌஷிக்.

“என்னம்மா எதுக்குக் கூப்பிட்டீங்க?”

“அமிர்தாவை அவ வீட்டுக்குப் போய் ஊருக்குப் போறதுக்குத் தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ண சொல்லி அனுப்பி இருக்கேன். தனியா இருப்பா. அதான் துணைக்காக ராகுலைக் கூப்பிட்டேன்.”

“அவ்வளவு தானே. இருங்க நான் போயிட்டு வரேன்.” கௌஷிக் சொல்ல அவனைப் பார்த்துப் பற்களை நறநறவென்றுக் கடித்தார் சத்யவதி.

“உன் பேரு ராகுலா டா? அவனைக் கூப்பிட்டா நீ எதுக்கு வர்ற? ஆள் மட்டுந்தான் வளர்ந்திருக்க” சத்யவதி சத்தம் வராமல் புலம்ப,

“அமிர்தா துணைக்குத் தானேம்மா. அது நான் போனா என்ன? அவன் போனா என்ன? இதுக்குப் போய் இந்த முறை முறைக்கிறீங்க?” அப்பொழுதும் கௌஷிக் புரியாமல் பேச,

“வேண்டாம் டா. அப்புறம் என் வாயில நல்லா வந்துடும். அதுங்க ரெண்டும் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசிக்க மாட்டேங்குதுங்களே, சரி ரெண்டு பேரையும் தனியா விட்டா பேசிப்பாங்களேன்னு சொன்னா இவன் போறானாம். உன்னை எல்லாம் வைச்சுக்கிட்டு…”

சத்யவதி வெளிப்படையாகவே பல்லைக் கடிக்க அசடு வழிந்தான் கௌஷிக்.

“ஹி…ஹி… அப்படித் தெளிவா சொன்னா தானே புரியும். இப்பப் பாரு ஐயாவோட பெர்ஃபார்மென்சை” என்று சொல்லி,

“டேய் ராகுல், ராகுல்” என்று ராகுலை அழைத்தான் கௌஷிக். சத்யவதி தலையில் அடித்துக் கொண்டு,

“என்னமோ பண்ணு. ஆனா நீ போயிடாதே. அவனை அனுப்பு. புரிஞ்சுதா” சொல்லியபடியே சத்யவதி அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டார்.

கௌஷிக்கின் குரல் கேட்டு ராகுல் கீழே இறங்கி வர,

“டேய் அம்மா உள்ளே வேலையா இருக்காங்க. அமிர்தா அவங்க வீட்டுல திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்காளாம். நீ கொஞ்சம் துணைக்குப் போய் இருக்கியா? நான் கொஞ்சம் வெளியில போற வேலை இருக்கு டா. இல்லைன்னா நானே போயிடுவேன்.”

“இந்த நேரத்துல இவ எதுக்கு டா தனியா போனா?” கேட்டுக் கொண்டே வாசலை நோக்கி நடந்திருந்தான் ராகுல் ரவிவர்மன்.

சென்ற முறை சுவர் ஏறிக் குதித்திருந்தவன் இம்முறை கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

“அமிர்தா”

“அமிர்தா”

திரும்பத் திரும்ப அழைத்தும் எந்தப் பதிலும் இல்லாமல் போக வேறு வழியில்லாமல் வீட்டின் உள்ளே சென்றான் ராகுல். அங்கு ஏதோ ஒரு போட்டோவை நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி சுவரில் தலை சாய்த்துத் தரையில் அமர்ந்திருந்தாள் அமிர்தா.

அவளின் அந்த ஓய்ந்து போனத் தோற்றம் ராகுலை என்னவோ செய்தது. கையில் ஏதோ ஃபோட்டோ வைத்திருப்பதைப் பார்த்தவன், ‘ஒருவேளை ஜீவாவை நினைச்சு ஃபீல பண்றாளோ? இருக்கும், லவ் மேரேஜ்னு சொன்னாளே! அதான் ஃபீல் பண்றா போல’ என்று எண்ணிக் கொண்டான்.

“அமிர்தா” இப்பொழுது கொஞ்சம் சத்தமாக அழைக்க கண் திறந்துப் பார்த்தாள் அமிர்தவர்ஷினி. ராகுலைக் கண்டதும் சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்று “வாங்க ர… ராகுல்” என்றாள்.

அவளின் இந்த ரவிக்கும் ராகுலுக்குமானப் போராட்டம் ஒரு சிறு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது ராகுலுக்கு. இரண்டுமே நான்தானே, பின் எதற்கு இந்தப் பெண் இப்படி மருகுகின்றாள் என்று எண்ணிக் கொண்டான்.

“ஹ்ம்ம்” என்றவன் அன்று அவசரத்தில் சரியாகக் கவனிக்காத வீட்டை இப்பொழுது கண்களைச் சுழற்றி ஆராய்ந்தான்.

சிறு வயதிலிருந்தே அந்த வீட்டை அவனுக்குத் தெரியும் தான். ஒரு ஹால், ஒரு பெட் ரூம், கிச்சன் என அளவாக அம்சமாக இருக்கும் அந்த வீடு. வீட்டைச் சுற்றி தான் நிறைய இடம் இருக்குமே தவிர வீடு சிறிய வீடு தான்.

அந்த வீட்டில் உள்ள கனமான பொருட்கள் அனைத்துமே ஹாலில் இடம் பெற்றிருப்பதுப் போலத் தோன்றியது ராகுலுக்கு.

ராகுல் நின்று கொண்டே இருப்பதைக் கவனித்து “உட்காருங்க” என்று அங்கிருந்த மர நாற்காலியை நோக்கிக் கை காண்பித்தாள்.

“இல்ல… பரவாயில்ல, இருக்கட்டும். நீ ஏதோ திங்க்ஸ் எல்லாம் பேக் பண்றதா, உனக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி கௌஷிக் சொன்னான். அதான் வந்தேன். நீ… பேக் பண்ணலையா?”

“ஹ்ம்ம்” பலமாக ஒரு பெருமூச்சுக் கிளம்பியது அமிர்தாவிடமிருந்து.

“எதை எடுக்குறது எதை விடுறதுன்னே தெரியலை” சொல்லிவிட்டு விரக்தியாகப் புன்னகைத்தாள் அமிர்தா.

“இல்ல… உனக்கு எதெல்லாம் வேணுமோ எல்லாமே எடுத்துக்கோ. அங்க… சென்னையில நம்ம வீடு பெரிசு தான். அதனால நீ தயங்காம உனக்கு எது தேவையோ அதை எல்லாம் எடுத்துக்கோ.”

ராகுல் ‘என் வீடு’ என்று கூறியிருந்தால் அமிர்தா என்ன பதிலளித்திருப்பாளோ? ஆனால் அவன் கொஞ்சமும் பிரித்துப் பார்க்காமல் எடுத்த எடுப்பிலேயே ‘நம் வீடு’ என்று கூறியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அமிர்தாவிற்கு. தயக்கம் உடைத்துப் பேசத் துவங்கினாள்.

“இந்த வீடு எனக்கு நிறைய நினைவுகளைத் தந்திருக்கு ரவி. யாருமே இல்லாத போதும் கூட இந்த வீட்டுல இருக்கும் போது ஏதோ அம்மா அப்பா மடியிலேயே இருக்குறது மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்.

அப்பா அஞ்சு வருஷத்துக்கு முன்ன இறந்தப்போ கூட நான் இவ்வளவு லோன்லியா ஃபீல் பண்ணதில்லை. அம்மா அதுக்கு இடம் கொடுக்கலைங்கிறது தான் சரியா இருக்கும். துக்கத்தை அவங்களுக்குள்ளேயே மறைச்சுக்கிட்டு எனக்கும் நித்யாவுக்கும் அவ்வளவு சப்போர்ட்டா இருந்தாங்க.

இந்த வீட்டோட ஒவ்வொரு மூலை முடுக்கும் கூட என்னோட சின்ன வயசுல நாங்க வாழ்ந்த சந்தோஷமான வாழ்க்கையை நினைவுபடுத்துறதாவே இருக்கு ரவி.

இதோ இங்க இருக்கே இந்த திங்க்ஸ் எல்லாம் ஒவ்வொரு ஊரா வீடு மாறும் போது தூக்க எடுக்க கஷ்டமா இருக்குன்னு சொல்லி அப்பா மாடியில சின்னதா ஸ்டோர் ரூம் மாதிரி ஒன்னு கட்டி அதுல போட்டு வைச்சிருந்தாங்க” என்று சொல்லி அங்கிருந்த சில மர சாமான்களைக் கைக் காட்டினாள்.

நடுத்தர அளவிலுள்ள கதவுடன் கூடிய புத்தகங்கள் அடுக்கி வைக்கும் மர அலமாரி, அழுக்குத் துணிகளைப் போட்டு வைக்கப் பயன்படும் வகையில் காற்றொட்டத்துடன் கூடிய மற்றுமொரு மரத்தாலான அழுக்குக் கூடை, என்று அமிர்தா காட்டிய அனைத்துமே மரத்தால் செய்ததாகவே இருந்தது. பார்த்தாலே தெரிந்தது எல்லாமே மிகவும் கனமான சாமான்கள் என்று.

“இதெல்லாம் கூடத்தான் எனக்கு இத்தனை நாளா பாதுகாப்பா இருந்தது” அந்த சாமான்களைக் காட்டிச் சொன்னாள் அமிர்தா. ராகுல் புரியாது விழிக்க,

“புரியலையா? எனக்கு நைட் படுத்தா தூக்கமே வராது. யாராவது வந்து ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயமாவே இருக்கும். இதை எல்லாம் கஷ்டப்பட்டு டெய்லி நைட் நகர்த்தி மூடின கதவை ஒட்டி வைச்சா தான் கொஞ்சமாவது நிம்மதியா தூங்கவே முடியும். அப்பவும் பயந்துக்கிட்டே தான் தூங்குவேன். டெய்லி எப்படா விடியும்னு பார்த்துக்கிட்டே இருப்பேன். காலையில நாலு மணிக்கெல்லாம் சத்யாம்மா எந்திரிச்சுடுவாங்க. அவங்க எழுந்து புழங்கற சத்தம் கேட்கவும் தான் நான் கொஞ்சம் நிம்மதியா ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கவே செய்வேன்.”

அமிர்தா சொல்ல திகைத்துப் பார்த்தான் ராகுல்ரவிவர்மன். தினமும் வெறும் இரண்டு மணி நேரத் தூக்கமா? அது போதுமா? கையில் குழந்தையையும் வைத்துக் கொண்டு இந்தப் பெண் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாள் போலவே. பெண்ணவளின் கஷ்டங்களுக்கு முன் தன்னுடையது எல்லாம் ஒன்றுமே இல்லை என்றுத் தோன்றியது ராகுலுக்கு.

எவ்வளவு சுலபமாக சொல்லிவிடுகிறது இந்த சமூகம். ‘அவளுக்கென்ன திமிர் புடிச்சவ, ஆள் அண்டாதவ’ என்று அவதூறாக சிலரும், ‘கைக்குழந்தையை வைச்சுக்கிட்டு தனியாவே சமாளிக்கிறாளே’ என்று பாராட்டுவதைப் போல் சிலரும் வாய்க்கு வந்ததை மிகச் சுலபமாகப் பேசி விடுகிறார்கள். ஆனால் அந்தப் பெண் ஒரு இரவை நிம்மதியாகக் கழிக்க எவ்வளவு பயப்பட வேண்டி இருக்கிறது?

இதற்கு மேலும் அவளை எதற்கும் கஷ்டப்பட விடக்கூடாது. தன்னால் இயன்ற வரை அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் மனதோடு சபதமெடுத்துக் கொண்டான் ராகுல்.

“நீ தாராளமா உன் நினைவுகளை உன்னோட எடுத்துக்கிட்டு வரலாம் அமிர்தா. ராகுலோட வீட்ல மட்டுமில்ல மனசிலயும் நிறையவே இடம் இருக்கு” சொன்னவனை விழி விரித்துப் பார்த்தாள் அமிர்தவர்ஷினி.

ஆச்சரியமாக அவனைப் பார்த்த அந்த விழிகள் ஏதோ செய்தது ராகுலை. அந்த விழிகளுக்குள் விழுந்துவிடத் துடித்தவனை அவள் கையில் வைத்திருந்த ஃபோட்டோ தடுத்தது.

“நீ போய் பேக் பண்ணு. எதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு. நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பி விட்டு அந்த ஃபோட்டோவைக் கையில் எடுத்துப் பார்த்தான் ராகுல்ரவிவர்மன்.

அதில் நடுநாயகமாக அமிர்தாவின் தாயார் அமர்ந்திருக்க, அவருக்குப் பின் வாட்டசாட்டமாக, அழகனாக ஒரு வாலிபன் நின்றிருந்தான். அமிர்தாவின் தமக்கை நித்யவர்ஷினி ஒரு புறமும் அமிர்தா ஒருபுறமும் எனப் பெண்கள் இருவரும் அவனருகில் நின்றிருந்தார்கள். நித்யா அமைதியாக நின்றிருக்க, அமிர்தாவோ அந்த வாலிபனின் தோள் மீது தன் கையை வைத்தவாறு நின்றிருந்தாள். எந்தக் குழப்பங்களும் கவலையும் இல்லாத அமிர்தாவின் முகம், குறும்புத் தனம் நிறைந்த அமிர்தாவின் முகம், நிலவைப் போல் ஒளி வீசியது.

இவர் தான் ஜீவாவோ? அமிர்தாவின் ஜீவனே இவர்தானோ என்று மனதோடு எண்ணிக் கொண்டான் ராகுல்ரவிவர்மன்.

*************

காலை நேரத்துத் தென்றல் இனிமையான ராகங்களைப் பாடிப் பொழுதைப் புலரச் செய்தது. திருமண நாளும் விடிந்தது. முகூர்த்த நேரமாக அதிகாலை மணி ஐந்து இருபது முதல் ஆறு மணி வரைக் குறித்துக் கொடுத்திருந்தார் அமிர்தா வழக்கமாகச் செல்லும் கோவிலுள்ள அர்ச்சகர்.

அதே கோவிலில் வைத்துத் தான் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. சந்தோஷ் அந்த அதிகாலை நேரத்திலும் சந்தோஷமாகப் புத்தாடை அணிந்து கிளம்பி விட, நிரஞ்ஜலாவோ குளிக்க வைத்தப் பின்னும் தூக்கக் கலக்கத்திலேயே தான் இருந்தாள்.

சத்யவதி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்திருந்தார் அந்தக் குறுகிய கால கட்டத்திலும். ராகுலுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, அமிர்தாவிற்கு அழகான இளஞ்சிவப்பு நிற பட்டுப் புடவை, குழந்தைகள் இருவருக்கும் புத்தாடை என ஒவ்வொன்றையும் அக்கறை எடுத்துப் பண்ணியிருந்தார்.

திருமாங்கல்யம் கூட ராகுலின் அக்கா முன் எப்போதோ பேசும் பொழுது அவர் தாயின் திருமாங்கல்யத்தைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்திப் பார்த்து அதே மாதிரி வாங்கி வந்தார்.

திருமாங்கல்யம் குறித்து ராகுலிடம் கேட்ட போது அவன் திருதிருவென்று முழிக்கத்தான் செய்தான். அவன் பிறந்தவுடன் இறந்து போன தாயார் அணிந்திருந்த திருமாங்கல்யத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்கெப்படித் தெரியும்? மாயாவுடனான திருமணம் முழுக்க முழுக்க மாயா வீட்டினர் வழக்கப்படி தான் நடந்தது.

பெயருக்குக் கூட உங்கள் வழக்கம் எப்படி என்று யாரும் ராகுலிடம் கேட்கவும் இல்லை. ராகுலும் அதை அப்போது பெரிது படுத்தவில்லை. மாயாவின் கழுத்தில் சிற்சில நேரங்களில் அந்தக் கருகமணி இருக்கும். பல நேரங்களில் இருக்காது. நிலைமை இப்படி இருக்க அவன் எப்படித் தன் தாயாரின் திருமாங்கல்யத்தைப் பற்றி நினைவு வைத்திருக்க முடியும்? எல்லாவற்றையும் சத்யவதி தான் அக்கறையாகச் செய்து முடித்தார்.

கோவிலுக்கு வந்து ஐயர் கேட்ட பிறகு தான் வாங்கிய புது மெட்டியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. அதை எடுத்து வரவென்று சத்யவதியும் கௌஷிக்கும் காரில் கிளம்பிப் போக உடன் சந்தோஷும் இணைந்து கொண்டான்.

கோவிலில் ராகுலும் அமிர்தாவும் மட்டுமே தனித்திருந்தனர். ஐயர் திருமணத்திற்கு உண்டான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் இருவரும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது பார்த்து குழந்தை நிரஞ்ஜலா சிணுங்கத் தொடங்க, அமிர்தாவிற்குக் குழந்தைக்குத் தேவையானப் பொருட்கள் அனைத்தும் காரிலேயே இருப்பது அப்போது தான் நினைவு வந்தது.

அவள் சங்கடமாக ராகுலைப் பார்க்க அவன் கேள்வியாக அமிர்தாவைப் பார்த்தான்.

“இல்ல பாப்பாவோட பால் எல்லாம் கார்லேயே இருக்கு. இப்போ திடீர்னு அழ ஆரம்பிச்சுட்டா…” முடிக்காமல் அமிர்தா இழுக்க,

“இங்க வேற எங்கேயாவது பால் கிடைக்குமா?” கேட்டான் ராகுல்.

“எதிர்த்தாப்புல ஒரு ஹோட்டல் இருக்கோனோ, அங்க பால் இருக்கும். நீங்க குழந்தைக்குப் பசியாத்திக் கூட்டிண்டு வாங்கோ. நா அதுக்குள்ள இந்தக் காரியமெல்லாம் முடிச்சு ரெடியா வைக்கிறேன்” என்று அமிர்தாவிற்குப் பதிலாக அர்ச்சகரே பதிலளித்திருந்தார்.

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் ராகுல். அமிர்தா தான் அவன் பின்னோடு ஓட வேண்டி இருந்தது.

“ர…ரா… கொஞ்சம் நில்லுங்களேன்” இன்னமும் அவனை எப்படி அழைப்பதென்று முடிவுக்கு வந்திருக்கவில்லைப் பெண். அவளை மறந்து அவள் பேசும் போது மட்டுமே ‘ரவி’ என்று அழைக்கத் தொடங்கி இருந்தாள். மற்ற நேரத்தில் எல்லாம் தயக்கம் தான்.

“என்ன? பாப்பாவை நான் தூக்கிக்கவா?” புடவையை அணிந்து கொண்டு குழந்தையையும் தூக்கிக் கொண்டு நடக்க சிரமப்படுகிறாளோ என்றெண்ணி ராகுல் கை நீட்ட,

“இல்ல அதில்ல. அது சின்ன ஹோட்டல் தான். அங்க நீங்க எப்படி….? அதுவுமில்லாம இந்நேரத்துக்கு டீ, காஃபி குடிக்க ஆளுங்க இருப்பாங்க. உங்களைப் பார்த்துட்டாங்கன்னா…”

“ஹேய்… சின்ன ஹோட்டலா இருந்தா என்ன? பெருசா இருந்தா என்ன? இதுல என்ன இருக்கு? அங்க இருக்கவங்களும் நம்மள மாதிரி தானே? நிலாவுக்கு அந்தப் பால் ஒத்துக்குமா அதை மட்டும் பாரு. இந்த நேரத்துக்கு அப்படி ஒன்னும் கூட்டம் இருக்காது. வா பார்த்துக்கலாம்” என்று சொல்லிக் கையோடு நிலாவையும் அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு நடந்தான் அந்த மெல்லிசைக்காரன்.

அவன் சொன்னதைப் போலவே கூட்டமெல்லாம் அவ்வளவாக இல்லை. எண்ணி ஒரு பத்து பேர் மாத்திரம் இருந்தார்கள். ஹோட்டல் கல்லாவில் உட்கார்ந்திருந்த மனிதர் ராகுலை அடையாளம் கண்டுவிட,

“ஆர்.வீ சார், நீங்க எப்படி சார் இங்க? நீங்க… நம்ம கடைக்கு… என்னால நம்பவே முடியலை சார்” வாயெல்லாம் பல்லாக வரவேற்றார் அவர்.

“ஹா…ஹா… ஏன்? நான் உங்க கடைக்கெல்லாம் வரக் கூடாதா?” மிகவும் இலகுவாகவே கேட்டான் மெல்லிசைக்காரன்.

“ஐயோ அப்படி எல்லாம் இல்ல சார். நீங்க இங்க வர நான் குடுத்து வைச்சிருக்கணும் சார். சார் நானும் உங்க ஸ்வரங்கள்ல ஒருத்தன் தான் சார். எனக்கு சந்தோஷத்துல கையும் ஓடலை. காலும் ஓடலை. ஏபுள்ள, எம்மா இங்க வாங்க. யாரு வந்திருக்கா பாருங்க” ஹோட்டலுக்குள் இருந்த சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தார் அந்தக் கடைக்காரர்.

“அடடா முதல்ல இந்த சாரை விடுங்கண்ணே. குழந்தைக்குக் கொஞ்சம் பால் வேணும்ணே. பாலும் பிஸ்கெட்டும் குடுக்க சொல்றீங்களா?” மிகவும் இலகுவாகப் பேசுபவனை ஆச்சர்யத்துடன் பார்த்தது அந்தக் கடைக்காரர் மட்டுமல்ல அமிர்தாவும் தான்.

“இதோ… இதோ தம்பி. ஃபிரெஷ் பால் அடுப்புல இருக்கு. ஒரு நிமிசம் தம்பி. ஆத்தித் தரச் சொல்றேன்” அதற்குள் இவர் சத்தம் கேட்டு இவர் மனைவி, தாயார், டீ மாஸ்டர் என்று அனைவரும் அங்கு கூடிவிட, அனைவரிடமும் முகம் சுளிக்காமல் பேசிக் கொண்டிருந்தான் அவர்களின் ஆர்.வீ.

அந்த ஹோட்டல்காரரின் தாயார் போல சற்று வயசானத் தோற்றத்துடன் இருந்த பெண்மணி ராகுல் இசையமைத்திருந்த ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி,

“தம்பீ அந்தப் படத்துல ஒரு தாலாட்டுப் பாட்டு போட்டிருப்பியே அதைக் கேக்கும் போதெல்லாம் எனக்கு எங்கம்மா ஞாபகமே வந்துடும்யா” என்று உணர்ந்து சொல்ல,

“ரொம்ப சந்தோஷம்மா. ஆனா அதுக்கு நான் மட்டும் காரணமில்ல, அந்தப் பாட்டை அவ்வளவு உருக்கமா பாடின அந்தப் பாடகியும் தான்மா காரணம்” தனக்குக் கிடைத்த பாராட்டைத் தன்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்களோடும் பகிர்ந்து கொண்டான்.

அதற்குள் குழந்தைக்குத் தேவையான பாலும் பிஸ்கெட்டும் வந்து சேர நான்கு பிஸ்கட்டுகளைப் பால் ஊற்றி ஒரு கிண்ணத்தில் ஊற வைத்தவள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டே ராகுலைப் பார்த்திருந்தாள் அமிர்தா.

‘சின்ன வயசுல இருந்த மாதிரி இல்ல. இப்பக் கொஞ்சமே கொஞ்சம் நல்லவனாத்தான் இருக்கான்’ அவள் மனது அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கியது.

அனைவருடனும் கலந்துரையாடி அவர்களோடு ஏகப்பட்ட செல்ஃபிக்களைக் க்ளிக்கி விட்டு அவர்களையும் திருமணத்திற்கு அழைத்தப் பின் தான் அங்கிருந்து கிளம்பினான் ராகுல்ரவிவர்மன்.

வெறும் இரண்டு பேரை மட்டுமே சாட்சியாக வைத்து நடக்கவிருந்தத் திருமணம் சில நல்லுள்ளங்களின் ஆசியோடு இனிதே நடைப்பெற்றது.

திருமாங்கல்யம் அவள் கழுத்தில் ஏறப் போகும் நொடி அமிர்தாவின் கண்கள் சற்றுக் கலக்கமாக ராகுலைப் பார்க்க எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாக கண் மூடித் திறந்து அவளுக்கு உறுதியளித்தான் ராகுல். ஏதோ ஒரு பாதுகாப்பான இடம் வந்து சேர்ந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு அமிர்தாவிற்குள்.

அமிர்தவர்ஷினி நினைவுகளில் இருந்து மீளவும் அவர்களின் வாகனம் சென்னை வந்து சேரவும் சரியாக இருந்தது.

இனி ராகுலோடு சேர்ந்து அமிர்தாவின் வாழ்க்கை சங்கீதமாக மாறுமா?

error: Content is protected !!