Jte-9
Jte-9
மருத்துவமனை சென்று வந்த அடுத்த நாள் காலையில்….
அன்று விடுமுறை தினம் என்பதால் நாதன், பாலா மற்றும் பல்லவி மூன்று பேரும் வாசலில் அமர்ந்திருந்தனர்.
மலைப்பிரதேசத்தில் அன்று மிதமான வானிலை நிலவியது. ஆனால் நாதனின் மனம், அத்தனை இதமான மனநிலையில் இல்லை.
பாலா அலைபேசியில்…
நாதன் யோசிப்பில்…
பல்லவி வார இதழில்…
மூழ்கியிருந்தனர்.
“பாலா, அதைக் கொஞ்சம் வைடா. உன்கிட்ட பேசணும்” என்று நாதன் பாலவைக் கேட்டார்.
“சொல்லுங்கப்பா” என்று சொல்லி, அலைப் பேசியைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.
“பல்லவி, பவானி உள்ளேதான இருக்கா?” – நாதன்.
“ஆமாப்பா, தச்சிக்கிட்டு இருக்கா. கூப்பிடவா” – பல்லவி.
“வேண்டாம். உன் வேலையைப் பாரு” – நாதன்.
“என்னாச்சுப்பா ஒரு மாதிரி இருக்கீங்க” – பாலா.
“அது.. அது… பாலா, பவானி பத்தி ஒரு விஷயம் சொல்லனும்டா”
“ம்ம்ம், சொல்லுங்க”
“நம்ம வள்ளிம்மா வீட்டுக்குப் புதுசா ஒருத்தர் குடி வந்திருக்காரு, அவரைப் பத்தியும்… ஒரு பிரச்சனை”
“முத பவானி பத்தின்னு சொன்னீங்க. இப்போ வேற யார் பத்தியோ சொல்றீங்க. என்னப்பா பிரச்சனை?”
“அது..”
“எனக்குத் தெரியும்ப்பா. பவானியும் அந்தப் பையனும் பேசுறாங்களா??”
‘இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்று நாதன் அதிர்ச்சியடைந்தார்.
“சொல்லுங்கப்பா”
‘ஆமாம்’ என்பது போல், நாதன் தலை அசைத்தார்.
“பாலா, உனக்கு எப்படித் தெரியும்??” – நாதன் தயக்கத்துடன் கேட்டார்.
“நேத்து ஹாஸ்ப்பிட்டலுக்கு, அவன் வந்திருந்தானா??”
“ஆமா பாலா. ஆனா உனக்கு…” என்று கேள்வியாய் நிறுத்தினார்.
“ம்ம்ம், மதன் போஃன் பண்ணிச் சொன்னாரு”
“மதனா?? அவருக்கு எப்படிடா தெரியும்? பவானியைப் பார்க்க ஹாஸ்ப்பிட்டல் வந்திருந்தாரா?”
“வந்திட்டாலும்… மதனோட தங்கிச்சி வந்திருக்கு போல, அந்தப் பொண்ணு பார்த்திட்டுப் போய் மதன்கிட்ட சொல்லியிருக்கு”
“ஐயோ! மதன் என்ன சொன்னாரு??”
“அப்பா, அவர் இதையே காரணமா காட்டி, டிவோர்ஸ் வாங்கலாம்னு பார்க்கிறாரு. புரியுதுல உங்களுக்கு”
‘இவ்ளோதானா அவர். இல்லை… அவன். ச்சே! ‘ – நாதன்.
“பாலா, இப்போ என்னடா பண்ண?? ”
“அவரு இப்படித்தான்னு நமக்குத் தெரியும். அதனால அதை விடுங்க. ஆனா பவானிக்கு எப்படி இந்தப் பையனோட பழக்கம்??” – பாலா ஒரு அண்ணனாகத் தங்கையின் குற்றம் குறித்துக் கேட்டான்.
“பவானி பெஞ்சில போய் தனியா உட்கருவால??”
“ஆமாம்”
“அங்கே வச்சுத்தான். அவரும் அங்கே வருவாரு பாலா. அப்படித்தான் பேச்சு ஆரம்பிச்சது போல..”
“இதுக்குத்தான், பவானியை மதன் வீட்டுக்குப் போக சொல்றேன் ப்பா. இல்லைன்னா இப்படி, எவனாவது வந்து ஏமாத்துவான்”
“… ”
“சரி, இப்போ என்ன பிரச்சினை??”
“அவரு கொஞ்சம் சரியில்லை பாலா”
“சரியில்லைன்னா?? கல்யாணமான பொண்ணுகிட்ட வம்பு பண்றானா??”
“ச்சே ச்சே… இல்லடா…”
“அப்புறம் என்னப்பா?? முதல அவன் பேரென்ன?? யாரு? எந்த ஊரு? அதைச் சொல்லுங்க”
“பேரு ஜீவன் சார்… யாருன்னா??”
“ஜீவன் அவ்ளோதான்… சொல்லுங்க யாரு அவன்??”
“அவரு யாருன்னு சரியா தெரியலை பாலா. ஆனா சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்திருக்காரு போல??”
“அங்கேயா???” – இந்த அதிர்ச்சியுடன் கூடிய அருவருப்புக் கேள்வி, பல்லவி குரலில் வந்தது.
‘இவளை மறந்துட்டோமே’ என்று நாதனும் பாலாவும் நினைத்தனர்.
“பல்லவி, உள்ளே போய் வாசிம்மா.” – நாதன்.
“ஏன்?? – பல்லவி.
“ஏய்! எதாவது சொன்னா கேட்கப் படிங்க. ரெண்டும் சொல் பேச்சு கேட்கிறதேயில்லை” – பாலா.
பாலாவின் கத்தலில், பல்லவி எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
“சரி, சொல்லுங்க உங்களுக்கு எப்படி அது தெரியும்?? யார் சொன்னா??” – பாலா.
“நம்ம வள்ளிம்மா”
“அப்படிப்பட்டவனோட பவானிக்கு என்ன பேச்சு?”
“பவானிக்கு இது தெரியாது பாலா, ஆனா பவானிகிட்ட, அவர் கொஞ்சம் நல்லா பேசுவார்டா… அதான்”
“அப்போ அவன் ஏமாத்துறான், இவ ஏமாந்துகிட்டு இருக்கா ”
“என்ன சொல்ற பாலா?”
“வேற என்னப்பா சொல்ல? உங்க பொண்ணுக்கு நாங்க கேள்வி கேட்டா மட்டும், பேசறதுக்கு வராது. ஆனா கண்டவன்கூட பேசறது”
“போதும் பாலா. இப்போ என்ன செய்யன்னு சொல்லு?”
“பவானிகிட்ட சொல்லுங்க, அவன்கூட பேச வேண்டாம்னு.”
“பவானிக்கிட்ட, நம்ம வலுக்கட்ட்டயாமா எதுவும் சொல்ல முடியாது. அது அவளுக்கு நல்லது இல்லைடா”
“நீங்க, இப்படிச் சொல்லிச் சொல்லி, அவ, அவளோட இஷ்டம் போல வாழ்ந்துகிட்டு இருக்கா”
“என்ன பாலா? இப்படிப் பேசற? ”
“அப்போ, அவன்கிட்ட சொல்லுங்க”
“ம், நானும் அதேதான் நினைச்சேன்”
“போய், நல்லா உரைக்கிற மாதிரி பேசிட்டு வாங்கப்பா”
“பாலா, நீயும் வாயேன்டா”
“இல்லப்பா. நான் வரலை”
“ஏன்?”
“எனக்கு அவ்ளோ கோபம் வருதுப்பா. ஹாஸ்பிட்டல்ல, பவானி கையைப் பிடிச்சுக்கிட்டு இருந்ததானாமே, மதன் சொல்றாரு.”
‘இப்படி வேறு நடந்திருக்கிறானா?’ – நாதனின் கோபம்.
“உன் தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பார்த்தாச்சான்னு மதன் கேட்கிறாரு. ”
‘மதனுக்கு இந்த எண்ணம் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்!’ – நாதன்.
“எனக்கு எப்படி இருந்திருக்கும்?”
‘பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்த இடத்திலிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்வது கடினம்.’ – நாதனின் மனக்குமுறல்.
“விடுடா, மதன் பத்தித் தெரியாதா?”
அமைதி நிலவியது.
“ஆமா, நீங்க இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா?? இல்லை கண்டுக்காம விடுறீங்களா?” – பாலா.
நாதன் மனம் கூசிப் போனது.
பாலா சரியான மனிதரிடம், தவறான கேள்வி. – நாம்.
“உங்களைச் சொல்லி என்ன செய்ய? பவானியைச் சொல்லணும். அவன் கையைப் பிடிச்சதும், பட்டுன்னு ஒரு அரை கொடுத்திருக்கணும்”
பாலா, நீங்கள் சரியான அண்ணனாக இருந்து… ஜீவன் சார், சரியில்லா நபராக இருந்தால்,பவானியே இதைச் செய்திருப்பாள். – நாம்.
“அவன் மேல பயங்கர கோபத்தில் இருக்கேன். நான் போய் பேசினா சண்டைதான் போடுவேன்” – பாலா கோபத்துடன் இதைச் சொன்னான்.
“டேய்”
“பின்ன, இப்படிப் பண்ணா சும்மா விடுவாங்களா??”
“பேசத்தான செஞ்சாரு, விடுடா”
“அப்போ எதுக்கு நீங்க பிரச்சனைனு சொன்னீங்க”
“அது…”
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். இவனால், மதனுக்கு டிவோர்ஸ் கிடைக்கிறதுக்கு ஆதாயம் கிடைச்சா. நான் ரொம்ப மோசமானவனா மாறிடுவேன். அவ்ளோதான்”
‘மதனுக்கு ஆதாயம் கிடைத்திடும் என்றே ஜீவன் சாரின் மேல் கோபம். பவானி மேலுள்ள அக்கறையில் அல்ல’ – நாதனின் மனம் அழுதது.
“ப்பா. திரும்பவும் இவன் பவானிகிட்ட பேசினானா… என்கிட்ட அடி, உதை வாங்கிட்டு, அசிங்கப்பட்டுதான் இந்த ஊரை விட்டுப் போவான்.” – பாலாவின் கோபம், கடுங்கோபமாக மாறியது.
“அதெல்லாம் வேண்டாம்டா. நானே போய் பேசுறேன்”
“பேசலாம் வேண்டாம். நல்லா புரியற மாதிரி புத்திமதி சொல்லிட்டு வாங்க. ஏன்னா பவானிகிட்ட அதெல்லாம் சொல்ல முடியாது”
“எப்ப பார்த்தாலும், அவளை இப்படிச் சொல்லாத… ” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றார்.
திரும்பவும் பாலா அலைபேசியில் அமிழ்ந்து கொண்டான்.
*****
அன்றைய தினத்தின் மத்தியானப் பொழுதில், சூரியன் சோம்பலுடன் தன் பணியைச் செய்வதால் மலைப்பிரதேசம் பனிப்புகைச் சூழ்ந்திருந்தது.
நாதன் கிளம்பி, ஜீவன் வீட்டுற்குச் சென்றார். பாலா, கேட்ட கேள்விகள் வேறு, அவருக்கு ஜீவன் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது.
‘எப்படி பேசிப் புரிய வைக்க?? ‘ என்ற கேள்விகளுடன் வள்ளிம்மா வீட்டின் மாடிப் படிகள் ஏறிச் சென்று, ஜீவன் அறைக் கதவைத் தட்டினார்.
கணினியிடம் கற்ற வித்தைகளைக் கடைபரப்பிக் கொண்டிருந்தான், ஜீவன். அறையின் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டதும், கண்கள் இரண்டும் கணினியை விட்டு அகலாமலே, எழுந்து சென்று கதவு திறந்தான்.
‘யார்?’ என்ற மனதின் கேள்விக்கு, ‘நாதன்’ என்று பார்வையின் பதிலை, ஜீவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை, அவன் முகம் சொல்லியது.
ஜீவன், “வாங்க… வாங்க சார்” என்று தடுமாறி அழைத்தான்.
நாதனும் உள்ளே வந்தார். கண்கள் அளவிடும் பார்வைகள் கொண்டு வீட்டைச் சுற்றி வந்தது.
“உட்காருங்க சார்” – ஜீவன்.
“இல்லை, ஜீவன் சார்” என்று தன் ஒதுக்கத்தைப் பதிவு செய்தார்.
“என்ன விஷயம்?”
“அது..அது.. இந்தாங்க” என்று ஒரு இருநூறு ரூபாயை நீட்டினார்.
“எதுக்கு??” – கண்களைச் சுருக்கிக் கேள்வி கேட்டான், ஜீவன்.
“அன்னைக்கு பவானிக்கு சிலது வாங்கிக் கொடுத்தீங்கள, அதுக்கு”
“வேண்டாம்”
“இல்லை, வாங்கிக்கோங்க. அதான் சரி”
“வேண்டாம் சார்”
“ஏன்?”
“அன்னைக்கே சொல்லிட்டேனே! அது பவானிக்காக”
“அதை ஒத்துக்க முடியலை. அதான் வாங்கிக்கோங்க”
“ப்ச், இதுக்குதான் வந்தீங்கனா, நீங்க போகலாம் சார்”
“நான் இதுக்கு மட்டும் வரலை. உங்ககூட கொஞ்சம் பேசணும்.”
“என்ன பேசணும்??”
“பவானிகூட நீங்க பேசறதைப் பத்திப் பேசணும் ”
“அதுல பேசறதுக்கு என்ன இருக்கு?”
“இனிமே பவானிகூட பேசாதீங்க சார்”
ஒரு பெருமூச்சு விட்டு, யோசித்தான்.
“உங்களுக்குப் புரியும்” – நாதன்.
“புரியல. ஏன் பேசக் கூடாது?”
“ஏன்னா? பவானி கல்யாணமான பொண்ணு. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு”
“ஓ! அப்படியா நாதன் சார்…” – ஜீவன் குரலில் இளக்காரம் இருந்தது.
“அப்படித்தான் ஜீவன் சார். அதைக் கெடுத்திராதீங்க”
“சார், அன்னைக்கு மதன் வந்து பேசறப்போ… நானும் இருந்தேன். எனக்கும் எல்லாம் தெரியும்”
“சார், நான் அவளுக்கான வாழ்க்கைன்னு சொன்னதுல அவ மட்டும்தான். நீங்களோ.. மதனோ கிடையாது” – நாதனின் குரலில் இறுமாப்பு இருந்தது.
“… ”
“அதெல்லாம் எதுக்கு? பவானி கூட பேசாதீங்க” – நாதன்.
“முடியாது.”
“புரிஞ்சிக்கோங்க, அவ கல்யாணம்…”
“போதும், திருப்பித் திருப்பி அதையே சொல்லிக்கிட்டு. மதன் டிவோர்ஸ் கேட்காருல்ல. அதைக் கொடுத்திட்டு பவானிக்கு வேற வாழ்க்கை அமைச்சிக் கொடுங்க”
“… ”
“அதை விட்டுட்டுப் பிடிக்கலைன்னு சொல்றவன்கூடப் போய் வாழச் சொல்லிக்கிட்டு”
“சரி சார். கண்டிப்பா வேற வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கிறேன். ஆனா அந்த வாழ்க்கை நீங்க இல்லை.”
“ப்ச், ஏன்??”
“நீங்க பவானிக்கு வேண்டாம்”
“அதான் ஏன்?”
“…. ”
“சொல்லுங்க சார் ஏன்?”
“….. ”
“பவானிக்கே என் மேல அன்பு அக்கறை இருக்கிறப்போ, நீங்க யாரு சார், அதைச் சொல்ல?”
“அவளைப் பெத்தவன் சார். எனக்குத் தெரியும் என் பொண்ணுக்கு என்ன வேணும்? என்ன வேண்டாம்ன்னு??”
“ஓ, அப்படியா! சரி அப்ப, நான் ஏன் வேண்டாம்னு சொல்லுங்க?”
“சொல்றேன் சார். எனக்கென்ன??”
“சொல்லுங்க”
“நீங்க எங்க சார் வளர்ந்தீங்க?? சொல்லுங்க… சின்ன வயசுல எங்க இருந்தீங்க?”
நாதன் தன் ஒற்றைக் கேள்வியால், ஜீவனை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டார்.
“சொல்லுங்க ஜீவன் சார்?”
உயிரின் ஒவ்வொரு பகுதியையும் ஊசி கொண்டு குத்துவது போல் உணர்ந்தான், ஜீவன்.
“இவ்வளவு நேரம் பேசுனீங்க, இப்பென்ன பேச மாட்டிக்கீங்க?”
“உங்.. உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“வள்ளிம்மா சொன்னாங்க”
“ஓ! நாதன் சார், உட்காருங்களேன் கொஞ்சம் தெளிவா பேசலாம்”
“எதுக்கு சார் பேசணும்?”
“உங்களுக்கு அப்போதான் புரியும்”
“எனக்கெதுக்குப் புரியனும்?”
“நான் சொல்றத… ”
“நீங்க பவானிக்கு வேணும்னாதான், நீங்க சொல்றதைக் கேட்கணும்… புரியணும். பவானிக்கு, நீங்க வேண்டாம். அதனால நான் எதையும் கேட்க மாட்டேன்”
“என்னைய பத்திச் சொல்றதுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க.”
“என்ன சொல்லணும்? நீங்க சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்ததைப் பத்தியா??”
“ஆமாம்”
“அப்போ, அது உண்மைதான்”
“ப்ச்.. ஆமாம் சார்.”
“இந்தமாதிரி ஒருத்தர் பவானிக்கு வேண்டாம்”
“நீங்க மதன் மேல நம்பிக்கை வச்சி சொல்றீங்கன்னு நினைக்கிறன். அது வேண்டாம். பவானி கண்டிப்பா மதன் வீட்டுக்குப் போக மாட்டா”
நாதன் சிரித்தார்.
“ஏன் சிரிக்கிறீங்க?” – ஜீவன்.
“எனக்கே அது தெரியும் சார். நானும் அவளை அங்கே போக விடமாட்டேன். அதான், அன்னைக்கு உங்ககிட்ட அப்படிச் சொன்னேன்”
“என்ன சொன்னீங்க?”
‘நான் இருக்கிற வரைக்கும் நான் பார்த்துப்பேன். அதுக்கடுத்து யார் பார்ப்பாங்கனு தெரியல?”
“நான் பார்த்துகிறேன்”
“அதான் வேண்டாம்”
“என்ன சார் பிரச்சினை உங்களுக்கு… சும்மா வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”
“பிரச்சினை என்கிட்ட இல்லை. உங்ககிட்டதான்”
“ப்ச், என்ன பிரச்சினை?”
“சார், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில நீங்க இருந்தீங்களா??”
“ஆமா, அதுக்கென்ன?”
“அங்கே எதுக்குப் போனீங்க?? தப்பு செஞ்சிட்டா?”
“ஆமா, தப்பு செஞ்சேன்.”
“தெரியாம தப்பு செஞ்சீங்களா? ”
“….”
“ம்ம், தெரிஞ்சிதான் செஞ்சிருக்கீங்க. அதுதான் பிரச்சினை”
“சார், அது ஒரு காலம். அது முடிஞ்சும் போயாச்சு”
“எது முடிஞ்சுப் போச்சு? இல்லை எது முடிஞ்சுப் போச்சு சார்? சொல்லுங்க”
“ஆமாம். தப்பு செஞ்சேன், எப்ஐஆர் போட்டாங்க. கோர்ட்ல கொண்டு போய் விட்டாங்க… பதினெட்டு வயசு வரைக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலதான் இருந்தேன்”
“சார், ரொம்ப அழகா சீர்திருத்தப் பள்ளியின்னு சொல்லிடுறீங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் ஜெயில்ல இருந்திருக்கீங்க”
ஜீவனை அவமானத்தின் உச்சத்தை உணரச் செய்தார், நாதன்.
“சரி… ஜெயில்லதான் இருந்தேன். அதுக்கென்ன??”
“அதுக்கென்னவா?”
“சார், அது முடிஞ்சிருச்சு. இப்போ எப்படி இருக்கேன்னு பாருங்க?? இல்லைன்னா அதைப் பத்திச் சொல்லணுமா?? சொல்றேன்”
“என்கிட்ட எதுக்கு சொல்லணும்? பவானிகிட்ட சொன்னீங்களா??’
திரும்பத் திரும்ப, ஜீவனைத் துடிக்கத் துடிக்கத் தோற்கடித்துப் பார்த்தார், நாதன்.
“என்ன பதிலே வர மாட்டிக்கு?”
தலைகுனிந்து நின்றான், ஜீவன்.
“உங்களால பவானிகிட்ட, இதெல்லாம் சொல்ல முடியாதுல. அப்போ பேசாதீங்க”
“வீடு வரைக்கும் வந்து, என்கிட்ட பேசாதீங்கன்னு சொல்றவுங்க, உங்க வீட்லயே இருக்கிற பவானிகிட்ட சொல்ல வேண்டியதுதானே… ஜீவன் சார்கிட்ட பேசாதன்னு”
“அது முடியல ஜீவன் சார். சொன்னா அந்த மனசு என்னாகுமோனு பயமா இருக்கு” – நாதனின் குரலில் நடுக்கம் வந்தது.
“அதே பயம், அதே அளவு… ஏன் அதைவிட அதிகமா எனக்கு இருக்கு. அதான் இவ்வளவு யோசிக்கிறேன், தயங்கிறேன்”
உங்கள் பெண்ணிற்காக, இவ்வளவு யோசிக்கிறாரே! நாதன் சார் அவரைப் புரிந்து கொள்ளலாமே?! – நாம்.
“சார், நாதன் சார். ஏதாவது ஒரு காரணம் சரியா சொல்லுங்க என்னய வேண்டாம்னு சொல்றதுக்கு” – ஜீவன்.
“நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”
“அது எதுக்கு?”
“சும்மா சொல்லுங்க”
“பிபிஏ, எக்கானாமிக்ஸ் பத்தி… ஷேர் மார்க்கெட் பத்தி… சில சர்டிபிகேட் கோர்ஸ். ஏன் கேட்டீங்க?.”
“நிறைய படிச்சிருக்கீங்க, நல்லது. ஆனா ஏன் கம்பெனில வேலை பார்க்காம… வீட்லயிருந்து வேலை பார்க்கிறீங்க”
“சார் அது… அது.. இதுவே போதும். இதுலயும் நல்ல வருமானம் வருது”
“நான் வருமானத்தைப் பத்திப் பேசல. உங்க வாழ்க்கைப் பத்திப் பேசறேன். நீங்க ஏன் கம்பெனிக்கு வேலைக்குப் போகல?”
ஜீவன் அமைதியாக நின்று, தன் அவலங்களை அசை போட்டான்
“நான் சொல்லவா??”
“வேண்டாம் சார். நானே சொல்றேன். என்னைப் பத்தித் தெரிஞ்சா… பார்க்கிறவங்க பார்வை மாறும்… மரியாதை போகும்… வேண்டாம்னு சொல்லி வெளியே அனுப்பிடுவாங்க. போதுமா?”
“ஓ! அதான் நீங்களே மரியாதையைக் கேட்டு வாங்கிறீங்களா? சாருன்னு கூப்பிடச் சொல்றது அதுக்குத்தானா? ம்.. புரியுது ஜீவன் சார். ”
‘ஜீவன் சார்’ என்று ஜீவன் கேட்டு வாங்கும் அழைப்பின் பின்னே உள்ள காரணத்தை தெரியப்படுத்தினார், நாதன். – இது நமக்கு.
“ஆமா நாதன் சார். என்னைப் பத்தித் தெரிஞ்சதுக்கு அப்புறம், மரியாதைக் கொடுத்துப் பேச மாட்டாங்க. அதான் இப்படி… ”
“அது உங்க இஷ்டம்”
“நான் காரணம் கேட்டேன். அதைச் சொல்லுங்க சார்”
“பவானிக்கு, மதன் இல்லைன்னா, இன்னொரு வாழ்க்கை அமையலாம். தெரியலை எப்படின்னு? அப்படி அமைஞ்சா, அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன். ஆனா அதுவாவது நல்ல வாழ்க்கையா இருக்கணும்.”
சராசரி தந்தையின் ஏக்கம். – நாதன்.
தான், அந்த சராசரிக்குள் வரவில்லை என்ற சங்கடம். – ஜீவன்.
“அந்த நல்ல வாழ்க்கை நீங்க இல்லை”
பவானியின் வருங்கால வாழ்க்கை வட்டத்திற்குள், தனது எதிர்காலம் விழவில்லை என்று புரிந்தது. – ஜீவன் மனப்பிரதேசத்தின் வலி.
“கடைசியா என்ன சொல்ல வர்ரீங்க?” – ஜீவன்.
“பவானியை விட்டுருங்க. நான் பார்த்துகிறேன்”
“சரி சார், இனிமே பவானிக்கிட்ட பேசல. நான் ஒதுங்கிக்கிறேன்”
“இன்னொரு காரணமும் சொல்றேன். அது என்னோட நிலைமையை, நான் ஏன் வேண்டாம்னு சொல்றேன்னு? உங்களுக்கு நல்லா புரிய வைக்கும்.”
“இதுவே நல்லா புரியுது. என்ன புரிய வைக்கணும்னு நினைச்சேங்களோ, அது புரிஞ்சிருச்சி. இப்போ புரிஞ்சது, வலிக்குது. போதும்.” என்று ஜீவன் கண் கலங்கினான்.
“ஜீவன் சார், நான் உங்களைக் கஷ்டப்படுத்தணும்னு சொல்லலை.. அது..”
“சார், நீங்க போங்களேன்” என்று தழுதழுக்கும் குரலில் கெஞ்சினான்.
தான் கொண்டு வந்த பணத்தை வைத்துவிட்டு, யோசித்துக் கொண்டே அறை வாயில் வரைச் சென்றவர் திரும்பி நின்றார்.
“ஜீவன் சார், பாலாவுக்கு மதனுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு”
“அதனால பவானிக்கு எதாவது பிரச்சனையா?”
“இல்லை சார். மதன் எப்பவும் போல பவானியைப் பத்தி யோசிக்கிறதல்ல. ஆனா பாலாதான்..”
“பாலா, பவானியை திட்டினாரா?”
“இல்லை. பாலாதான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கான். இனிமே நீங்க பவானிகிட்ட பேசினா அடிப்பேன், உதைப்பேன்னு.. அப்படிச் சொல்லிக்கிட்டு…”
“ஓ”
“நீங்க கொஞ்சம் கவனமா இருங்க சார்”
“சரி”
நாதன் கிளம்பிவிட்டார்.
ஜீவன் மனப்பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதிக்கு, பவானியின் வாழ்க்கைக்கு தான் தகுதியில்லை என்ற தகவல் சென்றடைந்தது. அந்தத் தகவல், ஜீவனைக் கவல் கொள்ளச் செய்தது.
கவல் கண்ணீராய் வெளிவந்தது.
*****
அடுத்த நாள் காலை, தன் தந்தையிடம் சொல்லிவிட்டு நடைப் பயிற்சிக்கு வந்தாள்.
நாதன் தடுக்கவில்லை.
பவானியாகத் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்.
ஜீவன், நாதனிடம் சொன்னது போல் பவானியைச் சந்திக்க வரவில்லை.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள்.
அடுத்தடுத்த நான்கு நாட்களும் இதே போல் ஜீவனின் வரவிற்கான காத்திருப்புக்களும்… ஜீவன் வராமல் போனதின் ஏமாற்றங்களும்…
ஏமாற்றத்தால், பவானியின் மன அழுத்தம் அதிகமானது.
ஐந்தாவது நாள் அதிகாலை நான்கு மணியளவில்…
ஜீவனின் மனப்பிரதேசம் தொடர்ந்து நான்கு நாட்களாக மலைப்பிரதேச வானிலையை உணராமல் இருந்தது.
ஒரே அறையில் தன்னை அடைத்துக் கொண்டு அவதிப்பட்டான்.
அந்த அயற்சியைப் போக்க, அன்று அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.
வீட்டிலிருந்து இருக்கை இருக்கும் இடத்திற்கு வந்தான். எங்கிருந்தோ வந்த ஒளியில், வரிவடிவம் போன்ற யாரோ ஒரு உருவம் தெரிந்தது.
யாரோ? என்ன யாரோ? பவானிதான். போய்ப் பாருங்கள்!! – நாம்.
அருகில் சென்று அலைபேசி டார்ச்சை ஒளிரச் செய்து, கல் இருக்கையின் ஒரு ஓரத்தில் வைத்தான்.
சட்டென்று வந்த ஒளியால், கண்கள் கூச, ஒரு முறை கண்மூடியவள், பின் கைகளால் கண்களைத் தேய்த்துக் கொண்டாள்.
“பவானி” என்று அழைத்தவன், அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.
கண்களில் சோர்வுடன் நிமிர்ந்து பார்த்தவள், எதுவும் பேசவில்லை.
“பவானி கோபமா?”
“இந்த நாலு நாளா ஏன் வாக்கிங் வரலை?” – பவானி குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
பதில்கள் சொல்ல முடியாத இடத்தில், பேசுபொருள் மாற்றப்படும் கேள்வி கேட்கப்படும். அந்தக் கேள்வி கீழே.
“நீ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்து இருக்க?.” – ஜீவன்.
“தூக்கம் வரலை. அதான்”
“அதுக்காக, இப்படி இருட்டுல வந்து உட்கார்ந்திருப்பியா??”
“….”
“உங்க வீட்ல யாரும் இல்லையா??”
“எல்லாரும் தூங்கிறாங்க சார். நான் வந்தது தெரியாது.”
“ஏன் பவானி இப்படிப் பண்ற??”
பவானியின் கண்கள் ஒரே ஒரு துளி கண்ணீர் சிந்தியது. அதற்கு ஜீவன் மனப்பிரதேசம் ஓராயிரம் முறை அழுது புரண்டது.
“ஜீவன் சார்” –
“சொல்லு”
“நான் டெய்லி ஆறு மணிக்கு வந்து வெயிட் பண்ணேன். நீங்க ஏன் வரலை?? ரொம்ப ஏமாந்துட்டேன்.”
“…”
“அதான், இன்னைக்கு சீக்கிரமா வந்தா…உங்களைப் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்”
“அதுக்காக இப்படியா? சேஃப் இல்ல. உனக்கு பயமாயில்லையா?”
சுற்றியிருந்த இருள், இருளை விட அதிகமாக இருந்த குளிர், அதனைத் தாங்க முடியாத உடல் நடுக்கத்துடன், “பயமாதான் இருக்கு” என்றாள்.
“இனிமே இப்படிப் பண்ணக்கூடாது பவானி” என்று கெஞ்சினான்.
“ம்ம்ம் சரி”
“வா, உங்க வீட்ல விட்டுறேன்”
“வேண்டாம். நீங்க ஜாக்கிங் போயிட்டு வாங்க. தூக்கம் வர்ற வரைக்கும் நான் இங்கே இருக்கேன்” – பவானி குரலில் அடம் தெரிந்தது.
“அதெல்லாம் வேண்டாம், நீ வா”
“முடியாது”
“ப்ச், பவானி சொன்னா கேளு” என்று எழுந்தான்.
“முடியாது”
“ப்ச், என்னமோ பண்ணு..” என்று கோபத்துடன் நடக்க ஆரம்பித்தான்.
பவானியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே, சற்று தூரம் நடந்தான். ஆனால் அவளைக் கண்காணிக்கும் தூரத்தைத் தாண்டிக் கால்கள் நடக்க மறுத்தன.
திரும்பி வந்து அமர்ந்தான்.
“ஜீவன் சார்” – பதினேழாவது செல்வமாக ஒலித்தது பவானி குரல்.
“சொல்லு”
“போகலையா?”
“பேசாத! கோபத்துல இருக்கேன்.”
“நானும்தான்”
“உனக்கென்ன கோபம்”
“நீங்க வரேன்னு சொல்லிட்டு, ஏன் வரலை?? பொய் சொல்றீங்க”
“அது..”
சட்டென எழுந்து அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள்.
சற்றே அதிர்ந்து விட்டான்.
“மேல உட்காரு பவானி” – ஜீவன்.
“பரவால்ல, நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்துறேன்னா”
“ஏன் இப்படியெல்லாம் கேட்கிற?”
“எனக்குத் தோணுது”
“அப்படியெல்லாம் இல்லை.”
“நான் மதன் விஷயம் பத்தி இனிமே கேட்கவே மாட்டேன். அது என்னோட பிரச்சனை. ஆனா நீங்க… நீங்க… ” என்று தடுமாறினாள்.
“என்னாச்சு பவானி? யாராவது எதும் சொன்னாங்களா?”
“இல்லை சார்”
“அப்புறம் என்ன? ”
“நீங்க மட்டும், கொஞ்ச நேரம் இங்க வந்து என்கூட பேசிக்கிட்டு இருக்க முடியுமா? வேற எதுவும் வேண்டாம்”
உணர்வுகளையே பார்த்திடாதவன், தந்தையின் வெறுப்பிற்கும் மகளின் விருப்பத்திற்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.
சட்டென்று “பயங்கிறமா யோசிக்கிற பவானி” என்றான், ஜீவன்.
“யோசிக்கிறேனா??”
“பின்ன… கை ரொம்ப வலிச்சது. அதான் வர முடியல. அதுக்குள்ள… ப்ப்பா என்ன இமாஜினேஷன்?”
ஜீவனுக்குப் பவானி விருப்பம்தான் முக்கியம்!
கண்கள் படபடக்க யோசித்தாள்.
“நிஜமாவா?” – பவானி.
“நிஜமா. நான் வராதத்துக்கு அதான் காரணம்”
“இல்லை நான் அதைக் கேட்கல. கை வலிக்குதா?”
“மேல ஏறி உட்காரு”
“பரவால்ல. நான் என்னமோன்னு ரொம்ப பயந்துட்டேன். நாலு நாளா தூக்கமே இல்லை சார். ஒரு மாதிரி குழப்பமா… டென்ஷனா… ”
“இப்போ?”
“இப்பவும் அப்படித்தான் இருக்கு”
“அப்போ, பவானி ரிலாக்ஸாக ஒரு கேம். ஓகேவா??”
“வேண்டாம்”
“ப்ளீஸ் பவானி”
“இந்த இருட்டுல எப்படி?”
“இந்தக் கேம், இங்கே உட்கார்ந்தே விளையாடலாம்”
“என்ன கேம்? ”
“அப்படிக் கேளு… சைமன் சேய்ஸ்( simon says) ”
“அப்படின்னா? ”
“கேம் நேம்”
“அது தெரியுது. கேம் என்ன? ”
“ஓகே, நான் ‘சைமன் சேய்ஸ்ன்னு’ சொல்லி என்ன செய்யச் சொல்றேன் அதைச் செய்யணும். ரெடியா?”
“ம்ம்ம்”
“சைமன் சேய்ஸ், பவானி சிட் ஆன் தே பெஞ்ச்”
“இல்லை… நான் உங்ககூட.. ”
“கேம்” – ஜீவனின், இந்த ஒற்றை வார்த்தையில் அத்தனை அழுத்தம் இருந்தது.
எழுந்து இருக்கையில் அமர்ந்தாள்.
“சைமன் சேய்ஸ், பவானி டச் யுவர் ஐஸ்”
பவானி செய்தாள்.
“சைமன் சேய்ஸ், பவானி டச் யுவர் நோஸ்”
பவானி செய்தாள்.
ஜீவன் சார்!! மிகவும் சிறுபிள்ளைத் தனமாகத் தெரிகிறதே?? சரி, சற்று பொருத்திருந்து பார்க்கலாம்! – நாம்.
“சைமன் சேய்ஸ், பவானி ஸ்மைல்”
பவானி யோசித்தாள்.
“கேம்” என்று ஆழமாகச் சொல்லி, புன்னகைக்க வேண்டும் என்றவாறு விரல்களைக் கொண்டு சைகை செய்தான்.
பவானி, தயக்கத்துடன் புன்னகைத்து விட்டாள்.
“சைமன் சேய்ஸ், பவானி ஸ்மைல் லிட்டில் பிக்”
நன்றாக பவானி புன்னகைத்தாள்.
சூழல் தந்த இருள், அதை விலக்கிடும் அலைபேசி ஒளியில், அந்தக் காட்சி ஓவியம் போல் இருந்தது.
“சைமன் சேய்ஸ், பவானி ஸ்மைல் லிட்டில் லவுட்”
சத்தம் வரும் வண்ணம் சிரித்தாள்.
ஜீவன் சார், பவானியைச் சிரிக்க வைப்பார் என்ற நமது நம்பிக்கை நடந்துவிட்டது. சந்தோஷம் கொள்வோமாக!!
“ரிலாக்ஸாகியாச்சா?” – ஜீவன்.
‘ஆம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டினாள்.
“இப்போ?”
“தூக்கம் வருது”
“சரி வா. உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்”
“ம்கும், வேண்டாம். நான் இங்கயே கொஞ்சம் நேரம் தூங்கவா?”
“இங்கேயா??”
“ம்ம்ம்”
“ப்ச், வேண்டாம். நல்லா இருக்காது.”
“ப்ளீஸ்”
“சரி, பவானிம்மா இஷ்டம்” என்று எழுந்து கொண்டான்.
கல் இருக்கையில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
‘ஏன் எழுந்தோம்?’ என ஜீவனும்: ‘ஏன் எழுந்தார்??’ என பவானியும்: மனதின் மௌனமான ஏக்கத்தைப் பேசிய தருணங்கள் – இவை.
“ஜீவன் சார்”
“சொல்லு”
“நான் உங்களுக்காக ஒண்ணு செஞ்சிருக்கேன். உங்ககிட்ட அதை கொடுக்கனும்”
“அப்புறமா வர்றப்போ கொண்டு வா பவானி. ஏன்னா? நானும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ”
“ம்ம்ம் சரி.”
ஜீவன், கீழே அமர்ந்து கொண்டான்.
“என் லைஃப் பத்தி நினைச்சா பயமா இருக்கு”
“எதுக்கு?”
“தெரியலை… ஆனா பயமா… ”
சட்டென பவானியின் கரம் பிடித்தான். அழுத்தியும் பிடித்துக் கொண்டான்.
“இதுக்கப்புறமும் பயமா இருந்தா, பேசு. இல்லைன்னா தூங்கு”
அதன்பின் பவானி பேசவில்லை.
அமீபா அளவில் கூட தன் வாழ்வில் உறவை விரும்பாதவன், தன் உயிரின் ஒவ்வொரு அணுவிற்கும் அவளையே உறவாய் நினைத்தான்.
இந்த நான்கு நாட்கள் ஜீவனும் தூங்காததால், தூங்கிவிட்டான்.
*****
“ஜீவன் சார்… ஜீவன் சார்” என்ற சத்தம் கேட்டு கண்விழித்தான்.
வானத்தில் விடியலின் அறிகுறி. சூழ இருந்த இருளை வெளிச்சம் விரட்டிக் கொண்டிருந்தது. குளிர் வாட்டியது.
நாதன் வந்திருந்தார். அவர்தான் அழைத்திருந்தார்.
ஜீவன் சார் தூக்க கலக்கத்தில் இருந்தார்.
“பொய்யும் சொல்வீங்களா?” – நாதன்.
“ப்ச்” என்று சொல்லிக் கண்களைத் தேய்த்துக் கொண்டே எழுந்தான்.
“என்ன சார் கேட்டீங்க?” – இன்னும் தூக்க கலக்கத்தில் ஜீவன்.
“பொய் சொல்வீங்களா?” – நாதன்.
அப்பாவும் பொண்ணும் ஒரே கேள்வி கேட்கிறார்கள்! – நாம்.
“பவானியை விட்டு ஒதுங்கிறேன்னு சொன்னீங்க. இதனா அது” – கோபம் கொண்டு கத்தினார் நாதன்!
“ஷ்ஷ்ஷ்… பவானி தூங்கிட்டிருக்கா.”
“சாரி சார்… சாரி சார்”
“நாதன் சார், கொஞ்சம் அந்தப் பக்கம் வாங்களேன்”
இருவரும் சற்றுத் தள்ளிச் சென்றனர். தூரம் சென்றதும், தூக்கம் தூரே போனது, ஜீவனுக்கு.
“நான்தான் என் பொண்ண நானே பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல” – நாதன்.
“என்ன பார்த்துக்கிட்டிங்க? ”
“… ”
“நாலு மணிக்கு எந்திரிச்சி, இங்க வந்து உட்காந்திருக்கா. கவனிக்க மாட்டிங்களா?” – ஜீவன் கத்தினான்.
“கத்தாதீங்க, பவானி தூங்குறா!”
“சாரி சார்… சாரி சார்”
அதிகாலை நேரப் பறவைகளின் ஒலி மட்டும் கேட்கும் அமைதி நிலவிய தருணங்கள் – இவை.
“போதும் நீங்க பார்த்துக்கிட்டது. இனிமே நானே பார்த்துக்கிறேன்”
“ஆனா பவானிகிட்ட… ” – நாதன்.
“என்ன சார்? பவானிகிட்ட என்னைப் பத்திச் சொல்லணும். அவ்ளோதான! சொல்றேன். இன்னைக்கே சொல்லப் போறேன். ”
“…. ”
“அதுக்கப்புறம், அவ முடிவு எடுகட்டும். நான் வேணுமா?? இல்லை வேண்டாமான்னு?? ”
“!!!! ”
“சார்ர் சின்ன வயசிலே எல்லாம் பார்த்தாச்சு. அவமானம், பசி, அடி.. இப்படி எல்லாம்… ”
“… ”
“நான் பார்க்காதது அன்பு, கண்ணீர், சிரிப்பு”
“… ”
“இதை எப்பவுமே பார்க்க மாட்டேன்னு நினைச்சேன்”
“…. ”
“ஆனா, அதையும் எனக்குக் காட்டின பொண்ணு சார் பவானி.”
“… ”
“அவளை எப்படி விட முடியும். இல்லை எதுக்கு விடனும். விடவும் மாட்டேன்”
“… ”
“அப்புறம் என்ன சொன்னீங்க. பாலா, என்னை அடிக்கிற அளவுக்கு, என் மேல கோபமா இருக்காரா??”
“ஆ.. ஆமா”
“ரொம்ப பயந்துட்டேன் சார், ரொம்ப”
“ச்சே ” – இது நாதனின் முகச்சிளிப்பு, ஜீவனின் முந்தைய வசனத்தின் உச்சரிப்பிற்காக!
“நிறைய அடி வாங்கியிருக்கேன்… சிலரை அடிக்கவும் செஞ்சிருக்கேன்”
“!!!! ”
“இவளுக்காக, பாலாகிட்ட அடி வாங்க மாட்டேன்னா… ”
இந்தப் பேச்சு அழகில்லை, ஜீவன் சார். – நாம்.
“இல்லை… இவளுக்காக யாரையும் அடிக்கத்தான் மாட்டேன்னா.”
ஆங்! இது நாயகனுக்கானப் பேச்சு. அழகாய் இருக்கிறது. – நாம்.
“நாதன் சார், நீங்க அன்னைக்கு சொன்னீங்கள… ‘என் பொண்ணு சிரிச்சே எட்டு மாசமாச்சு’ அப்படின்னு. கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உங்க பொண்ணு சிரிச்சா.”
‘தான் பார்க்கவில்லையே’ என்ற ஏக்கம் நாதனின் கண்களில்!
“தைரியமா இருங்க சார். உங்களுக்கு அப்புறமா உங்க பொண்ண நான் பார்த்துக்கிறேன். ” என்று நாதன் தோள் தொட்டுச் சொன்னான்.
ஜீவன் கைகளை, நாதன் தட்டிவிட்டார்.
ஜீவன் சிரித்தான்.
ஒரு விடயம்! பவானி, ஜீவன் பற்றித் தெரிந்தால், மதனும் பாலாவும் என்ன செய்வார்களோ? என்று பதற்றம் கொண்டோமே! அது சற்றே பயனற்ற பதற்றம் போல!!
அகலாதே! என்னைப் பற்றி அறிந்த பின்னும்!! என்று ஜீவனும்…
அகன்று விடு! அவனைப் பற்றி அறிந்த பின்!! என்று நாதனும்…
நின்றிருந்தார்கள்.
இவர்கள் இருவருக்கும் இடையே நடப்பது எதுவும் தெரியாமல், பவானி பனிமலர் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.