Kaalangalil aval vasantham 18(1)

Kaalangalil aval vasantham 18(1)

18

மற்ற அனைத்து கணக்கு வழக்குகளையும் விடுத்து, ட்ரஸ்ட் கணக்குகளை மட்டும் முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தனர் இருவரும். வேறு யாரையும் அறைக்குள் விடக் கூட இல்லை. மொத்தமாக தனியாகவே பார்த்தனர்.

“ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கும் ஹெவி கேஷ் ட்ரஸ்ட்க்கு வந்திருக்கு.” ஷான் நெற்றியை தேய்த்து விட்டபடி கூறினான்.

“அதோட எலெக்ஷன் டைம்ல கூட கேஷ் ட்ரான்சாக்ஷன் ஹேவியா இருக்கு.” என்றாள் ப்ரீத்தி.

அதற்கு என்ன காரணம் என்று விளங்கவில்லை அவனுக்கு. உண்மையில் ட்ரஸ்ட் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட்டதில்லை. குடும்பத்தில் இருக்கும் பெண்களின் பொறுப்பு அது! தாய் இருந்தவரை அவர் தான் முழுமையாக பார்த்துக் கொண்டார். அவர் இறந்தபின் தமக்கை பார்த்து கொள்ள ஆரம்பித்தாள்.

அவள் அறிந்து தான் இவை அனைத்தும் நடக்கிறதா? இல்லையென்றால் அவள் அறியாமல் நடக்கிறதா? தந்தைக்கு இதில் எவ்வளவு தெரியும்?

கேள்விகள் அவனது மனதுக்குள் நிறைய எழுந்தன!

“ப்ளாக்க ஒயிட்டா மாத்த கொண்டு வந்திருக்காங்க… ஆனா இவ்வளவு கேஷ் ஹேண்டில் பண்ணும் போது, ரிசெர்வ் பேங்க் என்ன பண்ணுச்சு?”

“அதுதான் எனக்கும் புரியல பாஸ்…”

“இதுல வேற என்னமோ இருக்கு…” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே பென்டிரைவை எடுத்தவன், லேப்டாப்பில் சொருகி, சிலவற்றை காபி செய்து கொண்டான்.

“எம்ப்டி ஹார்ட் டிஸ்க் இருக்கான்னு கேளு ப்ரீத்.”

“ஓகே பாஸ்.”

அறையிலிருந்து வெளியேறியவள், கையில் ஹார்ட் டிஸ்க்கோடு வந்தாள். இன்னும் சிலவற்றையும் வாங்கி வர சொல்லியிருந்தான் வேறு ஒருவரிடம். அதன் விவரங்களையும் கூறியிருந்தான். அவையும் அவள் வரும் போது அதையும் கொண்டு வந்தாள்.

“என்ன பண்ண போறீங்க பாஸ்?”

“ஜஸ்ட் எல்லா அகௌன்ட் டீட்டைலையும் காப்பி பண்ணி வெச்சுக்கலாம். நம்ம கிட்ட ஒரு காப்பி இருக்கறது நல்லது.” என்றவன், ஹார்ட் டிஸ்க்கை லேப்டாப்பில் இணைத்து லோக்கல் காப்பி ஒன்றை எடுத்துக் கொண்டான்.

“ஆன்லைன் சர்வர்ல கூட அப்லோட் பண்ணி வைக்கலாம் பாஸ்.” என்றவளின் யோசனை சரியாகத்தான் இருந்தது.

“எஸ். ஆனா நம்ம சர்வர்ஸ் எதுவும் வேண்டாம். தர்ட் பார்ட்டி சர்வர்ஸ் ஏதாவதுல பார்க்கலாம்.”

“ஆமா. கரெக்ட் பாஸ்…” என்றவள், அப்போதே ஆராய்ந்து ஒரு சர்வரை வாங்கி, மொத்த கணக்கு விவரங்களையும் அப்லோட் செய்து விட்டாள்.

அப்லோட் செய்து முடிக்கும் போதுதான் ரவி வந்தான்.

“ஹாய் கைஸ். இன்னுமா முடியல?” அவன் கேட்டபோது அவர்கள் நான்காவது நாளில் இருந்தார்கள்.

“என்ன சர் பண்றது? ஹாஸ்டலுக்கு விடுவேனான்னு இருக்கார் எங்க பாஸ். இப்படி எந்த கம்பெனியுமே வேலை வாங்காது. இது மனித உரிமை மீறல்…” என்று சிரித்தபடி ரவியிடம் கூற, அவனும் சிரித்தான்.

“நீங்க ஒருத்தர் தான் இவன் தலைகீழா நில்லுன்னு சொன்னா கூட நிற்கறீங்க. முடியாது, நான் ஹாஸ்டலுக்கு போகணும்ன்னு கொடி பிடிச்சு பாருங்க. அப்ப என்ன பண்ணுவாராம் இவர்?” என்று கிண்டலாக கூறினான்.

“எனக்கு ஒரு அடிமை சிக்கியிருக்கறதை கண்டு உங்களுக்கு காண்டு மாம்ஸ்.”

“ஆமா… ஆமா…” என்று இழுத்த ரவி, “என்ன ஷான்? நைட் வைஷுக்கு கால் பண்ண போல? ட்ரஸ்ட் அக்கௌண்ட்ஸ்ல என்ன டவுட்?” ஒன்றுமறியாதவனை போல கேட்டவனை பார்த்து லேசாக புன்னகைத்த ஷான்,

“இன்னும் அதை பார்க்க ஆரம்பிக்கல மாமா. ஒவ்வொரு டிவிஷனோட அக்கௌண்ட்ஸ் பார்க்கும் போது, அந்தந்த டிப்பார்ட்மென்ட் ஹெட் கூட இருந்தாங்க. இதை பார்க்கணும்னா வைஷு வேணும்ன்னு கேட்டேன். ஆனா கணக்கை நீங்க தான் பார்க்கறதா வைஷு சொன்னா. அதான் நீங்க வரட்டும்ன்னு வெய்ட் பண்ணினேன்.” என்றவன், அவனது முகத்தை கூர்மையாக பார்த்தபடி, “எப்ப மாமா ஃப்ரீயா இருப்பீங்க?” என்று கேட்க, அவனுக்குள் நிம்மதி பரவுவது ஷானுக்கு தெரிந்தது.

“இன்னைக்கு வேற ப்ளான்ஸ் இருக்கே ஷான்.”

“ஓகே எப்ப நீங்க ஃப்ரீயா இருக்கீங்களோ அப்ப சொல்லுங்க… ஜஸ்ட் ஒரு ஒன் ஹவர் போதும்.”

“சியூர் ஷான்.” என்றவன் சுற்றிலும் பார்த்தான். எக்கச்சக்கமான பைல்கள். பேப்பர்களுக்கு இடையில் அமர்ந்திருந்தாள் ப்ரீத்தி.

“ரூமே அதகளமா இருக்கு போல…” அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அவளருகில் போய் அமர்ந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்வையிட்டபடியே தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் ஷான்.

“கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்ஸ் எப்படி போகுது ஷான்? முழுசா இங்கயே இருக்க…”

“ஜிஎம், ஏஜிஎம் இருக்காங்கல்ல. அதுவும் இல்லாம இன்னும் ரெண்டு நாள்ல ப்ரீத்திய அங்க கடத்திடுவேன் மாமா.” பொறுப்பாக கூறியவனை பார்த்து முறைத்தாள்.

ப்ரீத்தி, “நான் வெயில்ல காயலைன்னா எங்க பாஸ்க்கு திருப்தியாவே இருக்காது சர்…” என்றதும் ரவி வாய்விட்டு சிரித்தான்.

ஷான், “எக்சாக்ட்லி…” என்றவன், சற்று இடைவெளி விட்டு, “அப்புறம் எதுக்கு மேன் சிவில் படிச்ச? ஏஸிலையே உட்கார்ந்து வேலை பார்க்கணும்னா ஐடி போயிருக்க வேண்டியதுதானே?” என்று சிரிக்க,

ப்ரீத்தி, “பில்டிங்க்ஸ் ஆர் மை பேஷன். ஒவ்வொரு செங்கலா வெச்சு கொஞ்ச கொஞ்சமா கட்டிடம் வளர்றதை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? அந்த சந்தோஷம் எனக்கு வேற எங்கயும் கிடைக்காது பாஸ்.” உணர்ந்து கூற, அவளது முக பாவனைகளை ரசித்துப் பார்த்தான். இதுதான் இவளிடம் அவனுக்கு மிகவும் பிடித்தது.

கடமையே என்று செய்யாமல், அதை ரசித்து செய்வாள்.

“அது தான் தெரியுமே.” என்று கூறியவன், ரவி புறம் திரும்பி, “அவுட்டிங் போறேன்னு சொல்வா மாமா. ஆனா ஒவ்வொரு பில்டிங்கா பார்த்து, எலிவேஷன் இப்படி இருக்கு, தீம் இப்படி இருக்குன்னு ஸ்டடி பண்ணிட்டு வருவா. இதுதான் இவ பாஷைல அவுட்டிங்…” என்று இன்னும் சிரித்தான்.

“உங்களுக்கு பிடிச்சதை நீங்க செய்றீங்க… அதே மாதிரி எனக்கு பிடிச்சதை நான் செய்றேன். இது தப்பா?”

“தப்பே இல்லை தலைவரே… ஆனா வெயில்ல நான் தான் நிக்க வைக்கறேன்னு ஒவ்வொரு இடத்துலையும் ரெஜிஸ்டர் பண்றீங்க பார்த்தீங்களா… அது தப்பு. நான் சொல்லலைன்னாலும் நீங்களா போய் காய்வீங்க தலைவரே… அதுதான் தலைவரே உண்மை… அதுதான் உண்மை…” என்று ஷான் சிரிக்க, பதிலுக்கு அதே சிரிப்பு ப்ரீத்தியையும் தொற்றிக் கொண்டது.

“அஃப்கோர்ஸ் தலைவரே. நான் காய்வேன் தான் தலைவரே. ஆனா நீங்க தான் காய வெச்சீங்கன்னு ரெஜிஸ்டர் பண்ணியே தீருவேன் தலைவரே.”

“மண்டைய உடைப்பேன். ஒழுங்கா வேலைய பாரு பக்கி. போரடிக்குதுன்னு என்னை வம்பிழுத்துட்டு இருக்கயா?”

“என் பக்கத்து வேலையெல்லாம் முடிச்சாச்சு. இனியும் என்னால வேலை பார்க்க முடியாது. நான் போகணும்… நாலு நாளாகுது குளிச்சு, ட்ரெஸ் மாத்தி… என்னை என்ன ரோபோன்னு நினைச்சீங்களா?”

“இல்லையா பின்ன?” என்று அலட்டிக் கொள்ளாமல் அவன் கேட்க, அவள் பக்கத்திலிருந்த பென்னை எடுத்து அவனை நோக்கி தூக்கி ஏறிய, அதை கேட்ச் பிடித்தவன், “ஐ கேட்ச்” என்று சிரித்தான்.

இருவரின் பேச்சுவார்த்தைகளையும் எதுவும் பேசாமல் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன், சாதாரணமாக எடுப்பது போல அவளது போனை எடுத்தபடி, “நிஜமா நாலு நாளா இங்கயே இருக்கியா ப்ரீத்தி?” ஆச்சரியமாக கேட்பது போல கேட்க, அவன் போனை எடுப்பதை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தி, சட்டென, அவனிடமிருந்து போனை பறித்தாள்.

“டோன்ட் டச் மை போன் சர்…” முகத்திலடித்தது போல கூறியவளை, ஒரு வினாடி அதிர்ந்து பார்த்த ரவி, அதே வினாடி முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டு, வினயமாக புன்னகைத்தான்.

“ஏன்… அது அவ்வளவு பெர்சனலா?” என்று கேட்க,

“எஸ் சர். என்னோட திங்க்ஸ வேற யார் டச் பண்ணாலும் எனக்குப் பிடிக்காது. என்னோடதுன்னா அது என்னோடது மட்டும் தான்.” வெகு தெளிவாக அடித்தவளை சற்று வியப்பாக பார்த்தான் ரவி. இந்த பெண்ணிடம் தனது ஜம்பம் பலிப்பது கொஞ்சம் சிரமம் தான் எனத் தோன்றியது.

“ஏன் அப்படி? உன்னோட போனை ஷான் யூஸ் பண்றதே இல்லையா?” புன்னகைத்தபடியே குதர்க்கமாக கேட்பது அவளுக்கும் புரிந்தது, ஷானுக்கும் புரிந்தது. ஆனால் இதற்கான பதிலை ப்ரீத்தி தான் கொடுக்க வேண்டும் என்று அதில் தலையிடாமல் ஓரக்கண்ணில் அவர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ஷான்.

அவள் எப்படி என்று ரவியும் தான் உணர்ந்து கொள்ளட்டுமே என்ற எண்ணம் தான்!

“அவர் யூஸ் பண்ணா என்ன, யூஸ் பண்ணலைன்னா உங்களுக்கென்ன…” என்றவள், “சர்.. ப்ளீஸ் பெர்சனல் குவஷின்ஸ் அவாய்ட் பண்ணிருங்க. ஐ வோன்ட் ஆன்சர்.”

அவளது இந்த பதிலை ஷான் மிகவும் ரசித்தான். அவள் அப்படித்தான். பிடிக்காத ஒன்றை யாருக்காகவும் அவளை செய்ய வைக்கவே முடியாது. அதே போல தனது எல்லைகளை தாண்டும் யாரையும் அவள் அனுமதிப்பதில்லை . அதற்கான அவளது பதில்கள் அனைத்தும் மிக மிக உறுதியாக இருக்கும். எதிர்கேள்வி கேட்கவே முடியாது என்பது போல.

அப்படியே தனது தாயின் பிரதிபிம்பம்!

ப்ரீத்தியின் பதில் ரவிக்கும் ஸ்ரீமதியைத்தான் நினைவுபடுத்தியது.

அன்று அவனிடம் அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனது மனதை விட்டு அகலவில்லை.

***

“அத்தை நீங்க ரொம்ப லிபரலா இருக்கீங்க.”

“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க ரவி. எதுவும் சொல்லாம இப்படி சொன்னா என்னன்னு எடுத்துக்க?” சாதாரணக் குரலில் கேட்டவரை வியப்பாகப் பார்த்தான்.

“சினிமா வட்டாரத்துல இப்ப இருக்க ஹாட் டாப்பிக்கே மாமா தான். அது உங்களுக்குப் புரியுதா இல்லையா?” கோப மிகுதியில் அவன் கடுப்படிக்க, அவரோ சற்றும் கவலையே இல்லாத பார்வை பார்த்தார்.

“அப்படி என்னதா சொல்ல வரீங்க ரவி? இன்னொரு முறை சொல்லுங்க…”

“மாமா ஸ்வேதாங்கறவளை பார்த்துட்டு இருக்காராம்… இதுக்கு மேல உங்களுக்கு எப்படி நான் விளக்கறது?”

“பார்த்துட்டு போகட்டும் ரவி. அதனால என்ன?” அலட்டாமல் வந்த பதிலில், இவன் தான் வெகுண்டான்.

“என்ன இப்படி சொல்றீங்க? நாங்கல்லாம் சினிமா பீல்ட்ல இருந்தாலும், ஒருத்தியும் எங்க பக்கத்துல கூட வந்ததில்ல. எங்க அப்பாவும் இப்படித்தான், எங்க தாத்தாவும் இப்படித்தான். ஆனா இங்க அப்படி இல்ல போல…” கடுப்பில் வார்த்தைகளை மென்றுத் துப்பினான் ரவி.

“பார்த்து பேசுங்க ரவி. வைஷுவோட மாப்பிள்ளைன்னா என்ன வேண்ணா பேசிடலாம்ன்னு அர்த்தம் கிடையாது.” உறுதியாக கூறியவரை, கூர்மையாகப் பார்த்தான்.

“அப்படீன்னா எப்படி வேணும்னாலும் இருக்கலாம்ன்னு சொல்ல வரீங்க.” நக்கலாக கேட்டவனை, எரிச்சலாக பார்த்தவர்,

“இங்க எங்க வீட்டு ஆம்பிளைங்க அப்படி கிடையாது ரவி. வாக்குல இருந்து வாழ்க்கை வரைக்கும் சுத்தமா இருக்கவங்க. நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க.” பொறுமையை இழுத்துப் பிடித்தபடி கூறியவரை, மேலிருந்து கீழாக பார்த்தவன்,

“நீங்க கண்ல பார்க்காம நம்ப மாட்டீங்க…”

“பார்த்தாலும் நம்ப மாட்டேன்… அதுவுமில்லாம பெர்சனல் விஷயத்துல எல்லாம் தலையிடாதீங்க ரவி. எங்க பெர்சனல்ல எங்க பசங்களையே தலையிட விட மாட்டேன்.”

“அது பெர்சனலா இருக்க வரைக்கும் பரவால்லை. அதுவே நடுத் தெருவுக்கு வந்து, எங்க வட்டத்துல எல்லாம் நக்கலடிக்கற வரைக்கும் வந்துட்டப்புறம் நான் எப்படி சும்மா இருக்கறது? உன் மாமனார் தான் இப்ப ஸ்வேதாவ வெச்சுட்டு இருக்காராம்ன்னு என் மூஞ்சு மேலேயே ஒருத்தன் கேக்கறான். எனக்கு சாகற மாதிரி இருக்கு…” உச்சபட்ச குரலில் இறைந்தவனை தீப்பார்வை பார்த்தவர்,

“ரவி… திஸ் இஸ் தி லிமிட்… இதுக்கு மேல பேசினா மரியாதை இல்ல. சொல்லிட்டேன்…” அவரது குரல் அவனுக்கும் மேலிருந்தது.

“உங்களை ஹர்ட் பண்றது என்னோட நோக்கமில்லை. ஆனா உண்மையை நீங்க புரிஞ்சுக்கணும். எனக்கும் மரியாதை இருக்கு. வயசுக்கு தகுந்த மாதிரி உன் மாமனார் இருக்க மாட்டாரான்னு ஒருத்தர் கேக்கும் போது எனக்கும் கோபம் வரும். உங்களுக்கு சந்தேகம் இருந்தா, இப்பவே தாஜ் கோரமண்டல் போங்க. ரூம் நம்பர் xxxல பாருங்க. அப்புறமா பேசுங்க…” என்று தணலை வாரி இறைக்க, அதற்கு அசராதவர்,

“அப்படியே இருந்தா உங்களுக்கென்ன, இல்லாட்டி உங்களுக்கென்ன? அது என் புருஷனோட பெர்சனல். இன்னொரு தடவை இந்த விஷயத்தை என்கிட்ட பேசாதீங்க. ஐ வோன்ட்  ஆன்சர். ஜஸ்ட் கெட் அவுட்…”

வைஷ்ணவியின் கணவன் என்பதெல்லாம் மறந்து போனது. தனது கணவனை ஒருவன் இப்படி பேசிவிடுவதா என்பது மட்டும் தான் அவரது எண்ணமாக இருந்தது. எதைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை.

“இனிமே இந்த வீட்டுக்கு வந்தா என்னை ஏன்டா வந்தன்னு கேளுங்க. இந்த மானங்கெட்ட வீட்ல பொண்ணெடுத்தது என் தப்பு…” என்று தலையிலடித்துக் கொண்டவன், வெளியேற, தொப்பென்று சோபாவில் அமர்ந்தார் ஸ்ரீமதி. அவன் வந்தது, பேசியது எதுவும் யாருக்கும் தெரியாது. அவர் தெரியப்படுத்தவுமில்லை.

அவர் இது போல கோபப்படுபவர் அல்ல. ஆனால் அவரையும் மீறி கோபப் பட வைத்துவிட்டான். தனது மகளின் பிடிவாதத்துக்கு செவி சாய்த்தது மிகத் தவறோ என்று தோன்றியது அவருக்கு.

ஆனால் ஏதோவொரு ஓரத்தில் தாஜ் சென்று பார்த்தால் என்ன என்றும் தோன்றியது. வாழ்நாளிலேயே செய்யக் கூடாத அந்த தவறை அவர் தவறிப் போய், நம்பிக்கை தவறிப் போய் செய்தார், இல்லை அவரை தவற செய்தான் ரவி. அந்த தவறு அவரது மனதை, நம்பிக்கையை, வாழ்வை உடைத்தது.

வாழ்வை வெறுத்துப் போய் கண்கள் வெறித்தபடி அமர்ந்திருந்த தாயின் மடியை தஞ்சமடைந்த மகனிடம் கூறினார்,

“யாரோட நம்பிக்கையையும் உடைச்சுடாதே ஷான். அது ரொம்பப் பெரிய பாவம்…” உணர்வுகளற்று கூறியவரை நிமிர்ந்து பார்த்தவன்,

“என்னம்மா சொல்ற?” என்று கேட்டான். அர்த்தமில்லாமல் அவர் கூறுவதாக நினைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை, கண்களிலிருந்து உருண்டு அவன் மேல் தெறித்த கண்ணீரை தவிர!

என்னவென்று கேட்டபோதும் அவர் எதுவும் கூறவில்லை. இரவு படுத்தவர் காலையில் எழவில்லை. ஹார்ட்அட்டாக்கில் உலகை விட்டுப் பிரிந்திருந்தார்.

***

 

error: Content is protected !!