Kaalangalil aval vasantham 7 (2)

Kaalangalil aval vasantham 7 (2)

நடுநடுவே ஸ்வேதா வேறு, அவனை அழைத்துக் கொண்டே இருந்தாள். ப்ரீத்தாவோடு திருச்சி வந்த விஷயத்தை அறிந்தது முதல் அவளால் சென்னையில் அமைதியாக அமர முடியவில்லை.

சந்தேகம்… சந்தேகம்… சந்தேகம்!

“யார் கூட போன ஷான்?”

“அவசியம் தெரிஞ்சே ஆகணுமா?”

“அந்த ப்ரீத்தா தானே?” பல்லைக் கடிப்பது அங்கு வரை கேட்டது.

“என்னோட வேலைல தலையிடாத ஸ்வேதா… ஐ டோன்ட் லைக் இட்…”

“அப்படீன்னா ஏன் அவளைக் கூட்டிட்டு போன?”

“ஷீ இஸ் மை ஸ்டாஃப் இடியட். இன்னொரு தடவை இப்படி கேட்காதே…”

“அவ உன் கம்பெனில இருக்கக் கூடாது ஷான்…” எப்போதுமில்லாமல் வெகு பிடிவாதமாக அவள் கூறியது அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“அதை நீ டிஸைட் பண்ணாத…”

“நான் டிஸைட் பண்ணாம அவளா பண்ணுவா?” குத்தலாக இவள் கேள்விக் கேட்க, ஷான் பல்லைக் கடித்தான்.

“அப்படிதான்னு வெச்சுக்க…” என்றவன், அழைப்பை துண்டித்தான். சைலன்ட் மோடில் போட்டவன், எதையும் காட்டிக் கொள்ளாமல் வேலையைப் பார்த்தான். அவன் ஏதோ வாக்குவாதம் செய்கிறான் என்பதை மட்டும் தான் ப்ரீத்தா கவனித்தாள். என்னவென்று இவளாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை!

ஒரு வழியாக நான்கு இடங்களை பார்த்து முடிக்க, பசி வயிற்றைக் கிள்ளியது ஷானுக்கு!

“அதுக்குள்ளவா?” என்று ப்ரீத்தி சிரிக்க,

“ரெண்டாவது ஷிப்ட் அம்மா கையால சாப்பிட்ட லொள்ளு…” என்று அவளது மண்டையில் தட்டியவன், முருகனை பார்த்து,

“இன்னும் கொஞ்சம் பெட்டரா பாருங்க முருகன்…” என்று கூற,

“கண்டிப்பா சார். உங்க தேவை என்னன்னு தெரிஞ்சிடுச்சுல்ல. நான் முடிச்சு தரேன் சார்…” என்று சிரித்தார்.

“சியூர். பார்த்துட்டு என்னை காண்டாக்ட் பண்ணுங்க. இல்லைன்னா இந்த மேடமை காண்டாக்ட் பண்ணுங்க. உங்க ஊர் தான் இவங்களும்…” என்று அவரிடம் புன்னகையோடு கூற,

“நினைச்சேன் சார். அதான் ரொம்ப பழக்கமா வண்டில வந்துட்டுட்டீங்களா?” என்று கேட்க, அவள் புன்னகையோடு, “ஆமாங்க..” என்று தலையாட்டினாள்.

“நீங்க எந்த பக்கம் மேடம்?” முருகன் கேட்க,

“ஸ்ரீரங்கம் தாங்க…” என்றாள்.

“நம்ம பக்கத்துக்கு வர்றீங்க மேடம்… அங்க யார் வீடு?” யோசனையாக முருகன் கேட்க,

“எங்கப்பா பேர் சந்திரமோகன்ங்க…” என்று அவள் முடிக்கும் முன்பே,

“நம்ம மோகன் பொண்ணா நீங்க?” என்று ஆச்சரியப்பட்டார் அவர்!

“நீங்க எந்த மோகனை சொல்றீங்க?” யோசனையாக அவரைப் பார்த்தாள் ப்ரீத்தா.

“ரியல் எஸ்டேட் பண்றாரே. அவர் தான மா?”

“ஆமா…” என்று கூறியவளை, பெரிய புன்னகையோடு பார்த்தார் அவர்.

“மோகனுக்கு இவ்வளவு பெரிய பொண்ணாம்மா? உங்க அப்பாரெல்லாம் நம்ம செட்டு தான். முருகன் மாமான்னு சொல்லுங்க… நல்லா தெரியும். நேத்துக் கூட பஞ்சாயத்துப் பேச போனோம்ல…” என்று அவசர அவசரமாக அவரது நட்பின் ஆழத்தை அவர் விவரிக்க, இவள் அதைவிட அவசரமாய் இடையிட்டாள். எதையாவது சொல்லிவிடப் போகிறாரோ என்று,

“ரொம்ப சந்தோஷம்ங்க…” என்று முடிக்கப் பார்க்க,

“இவங்க அப்பாவே ரியல் எஸ்டேட் தான பாக்கறாங்க சார்…” என்று முருகன் கூற, அது ஷானுக்கும் புதிய தகவல். ப்ரீத்தா கூறியதில்லை. அதுவும் திருச்சியில் இடம் பார்க்கிறோம் என்று தெரிந்த போதும் கூட அவள் ஏதாவது வாயை திறந்தாளா? ‘இருக்கட்டும்’ என்று நினைத்துக் கொண்டான். வைஷ்ணவி, அவரது அக்கௌன்ட்டுக்கு தானே பணத்தை அனுப்பி இருந்தாள். அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்கு இப்போது தெரிந்து கொண்டாக வேண்டும்.

அவளிடம் எதையும் கூறவில்லை. கூறினால் அவளை சந்தேகப்படுவதாக தெரியும் என்பதால் அவளிடம் சொல்லாமல், மெசேஜ் வந்த போன் நம்பரை மட்டும் அவளிடமே கொடுத்து, அது யாருடையது என்று விசாரிக்கச் சொன்னான். அவளும் அவன் முன்னமே, அவர்களுடைய வாடிக்கையான துப்பறியும் நிறுவனத்துக்கு அழைத்து, செல்பேசி எண்ணை கொடுத்து விசாரிக்க சொல்லியிருந்தாள்.

அப்போதும் கூட அவள் என்னவென்று மேற்கொண்டு கேட்கவில்லையே! அவன் சொன்னான். செய்தாள்! அவ்வளவே!

ஆக, அவளுக்குத் தெரியாமல் ஏதோ சதிவலை பின்னப்படுகிறது என்று உணர்ந்து கொண்டான். ப்ரீத்தியை இதில் சம்பந்தப்படுத்திப் பார்க்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ரொம்ப சந்தோஷங்க முருகன். இவ்வளவு க்ளோஸா வருவீங்கன்னு தெரியல…” என்றவன், ப்ரீத்தாவை பார்த்து, “ப்ரீத்தி… உங்கப்பாவும் ரியல் எஸ்டேட் பிசினஸ் தான் பண்றாங்களா?” என்று கேட்க, அவள் சங்கடமாக தலையாட்டினாள்.

“எஸ் பாஸ்…”

“அப்படீன்னா உங்க அப்பாவையும் கூட கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல?”

“அப்பா வீட்ல இல்ல பாஸ்…”

“சரி…” என்று யோசித்தவன், “ஓகே முருகன்… பார்த்துட்டு கூப்பிடுங்க…” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு,

“கிளம்பலாமா?” என்று ப்ரீத்தியை பார்த்துக் கேட்டான்.

“எங்க பாஸ்?”

“இப்ப ப்ரீ தான். எங்க போலாம் சொல்லு?” என்று அவளையே கேட்க,

அவள் தயங்கியபடியே, “நீங்களே சொல்லுங்க பாஸ்…” என்று அவன் புறமே தள்ளிவிட,

“ஓகே… நல்ல நான் வெஜ் ஹோட்டலா சொல்லு… மொதல்ல சாப்பாடு. அப்புறம் தான் மத்தது…” என்று கேட்டவனை தயக்கமாகப் பார்த்தவள்,

“ஹக்கீம்ல நல்லா இருக்கும்ன்னு சொல்வாங்க பாஸ்…” என்று இழுத்தவள், “வீட்டுக்கு வர்றீங்களா?” என்று இன்னமும் தயங்கியபடியே தான் கேட்டாள்.

“அதுக்கு ஏன் ப்ரீத் இவ்வளவு இழுவை?”

“இல்ல… வருவீங்களோ மாட்டீங்களோன்னு தான் பாஸ்…” என்றவளின் குரலில் இன்னமும் தயக்கம் போகவில்லை.

“எங்க நீ கூப்பிடாமையே இருந்துடுவியோன்னு நினைச்சேன். ஷப்பா… இப்பத்தான் மனசு வந்திருக்கு…” என்று பெருமூச்சு விட்டவனை பார்க்கையில் அவளது முகம் தவுசன்ட் வாட்ஸ் பல்பாகி இருந்தது.

“அப்படீன்னா வர்றீங்களா?” என்று பெரியப் புன்னகையோடு கேட்க,

“இதையெல்லாம் கேட்கணுமா? விடு வீட்டுக்கு…” என்று சிரித்தான்.

“ஆனா எங்க வீட்ல வெறும் வெஜ் தான். பரவால்லையா?” என்று கேட்க,

“எனக்கு இப்ப இருக்க பசில இலை தழைய போட்டா கூட சாப்ட்ருவேன் பாத்துக்க…” என்று சிரிக்காமல் சொல்ல,

“அப்படீன்னா வண்டிய தோட்டத்து பக்கமா விடட்டுமா பாஸ்?” என்று அவளும் கலாய்க்க,

“விடுங்க, கூடவே நீங்களும் கம்பெனி குடுங்க ஆபீசர்!”

இருவருக்கும் இந்த பேச்சு ஓயவே ஓயாது!

***

“வாங்க தம்பி…” வந்தவனை வாவென்று அழைத்த சீதாலக்ஷ்மிக்கு புன்னகையை கொடுத்து விட்டு, அந்த வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து ரசித்தவாறே உள்ளே நுழைந்தான் சஷாங்கன்!

அது போன்ற பழைய வீடுகளின் மீது மிகுந்த பிரியமுண்டு அவனுக்கு! முடிந்தால் அதைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டும் என்ற அளவிலான காதல், ப்ரேமம், பியார் எல்லாமுண்டு!

“ப்ரீத்… உங்க வீடு செமடா…” முகப்பிலிருந்த நிலைவாசல்படியை பார்த்தபடி ஷான் கூற,

“எல்லாம் எங்க தாத்தாவோட தாத்தா காலத்துது பாஸ்…”

“எவ்வளவு ரசனை பாரேன் உன் தாத்தாவுக்கு…”

“இருக்காதா? என்னோட தாத்தாவாச்சே…”

“அதனால தான் எனக்கு சந்தேகமா இருக்கு! உனக்குப் போய் எப்படி?” என்று யோசிக்க,

“பாஸ்…” எச்சரிக்கையாக அழைத்தவள், “என் தங்கச்சி முன்னாடி என்னை அசிங்கப்படுத்திடாதீங்க. ப்ளீஸ்… நான் எக்கச்சக்கமா பில்ட் அப்பெல்லாம் குடுத்து வெச்சுருக்கேன்…” பாவப்பட்ட குரலில் கூறியவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

“அது உன் கைல தான் இருக்கு…” என்று வேண்டுமென்றே கலாய்க்க,

“இது உங்க கை இல்ல. கால்…” என்று அவனது கையைப் பார்த்துக் குறும்பாகக் கூற,

“அதெல்லாம் செல்லாது. இதுதான் என்னோட கால்…” என்று அவள் முன் அவனது காலை நீட்டிக் காட்ட, பல்லைக் கடித்தாள். பின்னே! விழ சொல்கிறானாம்!

“வேணாம் பாஸ். நாளைக்கும் என்னைப் பார்க்க வேண்டி வரும்…” அவளது பற்கள் நறநறவென கடிபட, அவனது முகத்தில் குறும்புப் புன்னகை!

“ப்ரீத்தி… என்ன வெளியவே வெச்சு பேசிட்டு இருக்க? தம்பிய உள்ளக் கூப்பிடு…” என்று கூறிய சீதாலக்ஷ்மியை பார்த்து புன்னகைத்தவன்,

“இவங்க என்ன அனுப்பறது? நானே வருவேன்…” என்றவன், அளவாகப் பேசி நிறைய புன்னகைத்தான்!

சீதாலக்ஷ்மியிடமும், காயத்ரியிடமும் எந்தவிதமான அனாவசிய பேச்சுக்களும் இல்லாமல், தேவைக்கேற்ப அளவாகப் பேசியவனை கண் கொட்டாமல் பார்த்தாள் ப்ரீத்தா. அவள் காண்பது கனவா நனவா?

இருவருமாக மதிய உணவை உண்டு கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் மோகன். சஷாங்கன் உஷாரானான்!

“வாங்க சர்…” அவ்வளவு மரியாதையாக வரவேற்றார். பின்னே, மகளது முதலாளி என்றால் சும்மாவா? படியளக்கும் பரமனாயிற்றே! அவரைப் பார்த்து ஒரு பெரியப் புன்னகையைக் கொடுத்தவன், அவரது செய்கைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான், யாரும் அறியாமல்!

ஆனால் அவரது செய்கைகளில் எந்தவிதமான தவறும் தெரியவில்லை. பொய்யோ புரட்டோ, ஒருவரது செய்கை காட்டிக் கொடுத்துவிடும்.

டைனிங் டேபிளில் அவர்கள் முன் வந்து அமர்ந்தார் மோகன்.

“நடேசன் கிட்ட பணத்தைக் கொடுத்துட்டேன் பாப்பா…” இருவருக்கும் பொதுவாகவே கூறியவரை புருவம் நெரிய குழப்பமாகப் பார்த்தாள் ப்ரீத்தா.

சஷாங்கனுக்கு இதுவொன்றும் புதிய செய்தியல்ல என்பதால் அலட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சொல்றீங்க?” அவனுக்கு பூசணிக்காய் கூட்டை வைத்தபடியே இவள் கேட்க,

“அதான் பாப்பா. நடேசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை குடுத்துட்டேன்…” என்று மீண்டும் கூற, மற்ற மூவருக்கும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை.

புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “பாப்பா… வட்டியோட சேர்த்து அசலையும் தந்துட்டேன். மொத்தம் எட்டரை லட்சம். நீ அனுப்புனதுல இன்னும் ஒன்னரை லட்சம் இருக்கு…” என்று விரிவாகக் கூற, அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

“என்ன நான் அனுப்பினேனா? என்ன சொல்றீங்க?” தலையைப் பியைத்துக் கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு!

தந்தையையும் சஷாங்கனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு அப்போது வரையுமே எதுவும் புரியவில்லை.

“என்னப்பா? என்ன சொல்றீங்க? நான் என்ன பணம் அனுப்பினேன்?” குரல் நடுங்கவாரம்பித்து விட்டது அவளுக்கு!

பத்து லட்ச ரூபாயை நான் அனுப்பினேன் என்று கூறுகிறாரே. இவருக்கு என்ன மூளை கெட்டுப் போய்விட்டதா?

“என்ன சொல்றார்ன்னா அவருக்கு நீ பத்து லட்சம் அனுப்பிருக்கயாம். அதை கொண்டு போய் கட்டியாச்சுன்னு சொல்றார். சரியா?” என்று சஷாங்கன் அதை உறுதிப் படுத்த, அவளுக்கு கால்கள் துவண்டு நடுங்க ஆரம்பித்திருந்தது.

பத்து லட்சமா? நானா? எப்போது அனுப்பினேன்? அது முடிகிற காரியமா?

அதிலும் எந்த நேரத்தில், யார் முன்னிலையில் சொல்கிறார்? இதை வைத்து ஷான் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற பயம் அவளை மிக அவசரமாய் ஆட்கொண்டது.

“ப்பா… அந்த பத்து லட்சம் எங்க?” அவசரமாகக் கேட்டாள்!

“அதை கட்டிட்டேனே!”

“ஹய்யோ… இப்ப நான் என்ன பண்ணுவேன்?” சாப்பிடும் மனநிலை எல்லாம் எங்கேயோ போய்விட்டது. கண்ணும் மனமும் கலங்க, அவளது வார்த்தைகளை கேட்டவனுக்கும் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. மெளனமாக எழுந்தவன் கையைக் கழுவினான்.

“அது உன் பணமில்லையா?” அப்பாவியாய் கேட்ட தந்தையை என்ன செய்வது?

“உங்க அக்கௌன்ட்டுக்கு வர்ற பணமெல்லாம் உங்களோட பணமாகிடுமா ப்பா? நாளைக்கே உங்க அக்கௌன்ட்ல தப்பா வந்திருச்சு, பணத்தைத் திருப்பிக் குடுன்னு பேங்க்காரன் கேட்டா என்ன பண்ணுவீங்க?”

“என்னடா பண்றது?” செய்வதையெல்லாம் செய்துவிட்டு எப்படி கேட்கிறார்!

ஆனால் அதையெல்லாம் பார்வைட்டுக் கொண்டிருந்த ஷானுக்கு வேறு ஏதோ தட்டுப்பட்டது!

இன்டர்னல் ஆடிட், ஸ்வேதாவுக்கு கொடுத்த பங்குகளும் பிளாட்ஸ்ஸும், ப்ரீத்தா அவனது குடும்பத்தை சந்திப்பது, அவளது தனிப்பட்ட பிரச்சனைகள், பத்து லட்சம் பணம்.

யாராக இருந்தாலும் இந்த தகவல்களை தான் கனெக்ட் செய்ய சொல்வார்கள். ஆனால் இந்த இடத்தில் வேறெதுவோ, வேறு யாரோ உள்ளே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அது மட்டும் வரிசையிலிருந்து காணாமல் போயிருக்கின்றது. அவனுக்காக பின்னப்பட்ட சதி வலையில் சிக்கியது இந்த அப்பாவிப் பெண்!

“என்ன பண்றதுன்னு என்னை கேட்டீங்கன்னா? என்கிட்டே ஒரு வார்த்தைக் கேட்டீங்களா? நீங்க பாட்டுக்கு எப்படி இப்படி பண்ணலாம்பா?”

“இப்படின்னு நான் சத்தியமா நினைக்கல பாப்பா…” என்றவரை கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

தன்னை ஷான் சந்தேகப்பட்டுவிடுவானோ என்ற பயம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது.

அதுவரை கைகளை கட்டியபடி அமர்ந்து பார்த்திருந்தவன், ப்ரீதாவை அழைத்து,

“ப்ரீத்.. ஏன் இவ்ளோ டென்ஷனாகற?” என்று கேஷுவலாக கேட்க,

“இல்ல பாஸ். எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. என்ன நடக்குதுன்னு சத்தியமா புரியல…” என்று தாள முடியாமல் கூறினாள். தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற பயம் நூறு சதவிதம் வெளிப்பட்டது. இத்தனை வருடங்களாக காப்பாற்றி வந்த உண்மையும் நேர்மையுமே இப்போது உரசிப் பார்க்கப்படும் போது, என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள்!

“தெரியும் ப்ரீத்…” என்றான் அமைதியாக! அவனது பார்வை, காட்சி எல்லாம் ப்ரீத்தா மட்டுமே!

“என்ன?” அவள் கேட்டது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“தெரியும்ன்னு சொன்னேன். காலைலயே எனக்கு தெரியும்…” என்று கூறியவனை வெறித்துப் பார்த்தாள். இப்படியொன்று இருப்பது தெரிந்தும் அவளை எந்த விளக்கமும் கேட்காமல் இருந்திருப்பதுதான் இப்போது அவளது நடுக்கத்தை அதிகப்படுத்தியது.

பதில் பேச முடியவில்லை!

“அப்படீன்னா?” குரல் நடுங்கியது! இவளது பார்வையும் காட்சியும் ஷான் மட்டுமே, வேறு யாரும் அவளது வட்டத்துக்குள் இல்லை… சத்தியமாக இல்லை!

“எனக்கு ப்ரீத்தாவை பற்றி தெரியும்ன்னு சொன்னேன். உலகத்தையே குடுக்கறதா சொன்னாலும் அவளால தப்பு பண்ண முடியாது. மனசாட்சியை தள்ளி வெச்சுட்டு வேலை பார்க்க முடியாதுன்னு வைஷு கிட்ட சொன்னேன்…” என்று நிறுத்தியவன்,

“அவ கேட்டா பத்து லட்சமென்ன, இன்னும் கோடி கோடியா கொட்டிக் கொடுக்கக் கூட அவளோட ப்ரென்ட் வெய்ட் பண்றப்ப, போயும் போயும் ஒரு பத்து லட்சத்துக்கு ஆசைப்படறவ கிடையாதுன்னு சொன்னேன்…”

 முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் காட்டாமல், பதில் சொன்னவனை பார்க்கையில் வாயடைத்துப் போனாள் ப்ரீத்தா!

“இந்த டென் லாக்ஸ்க்கு என்ன அர்த்தம் ஷான்?” குரல் நடுங்க அவள் கேட்க,

“ஐ டோன்ட் கேர்… டூ யூ?”

இடம் வலமாக தலையாட்டினாள்.

“அப்படீன்னா ப்ரீயா விடு…” என்றவன், புன்னகையோடு, “நான் இருக்கேன்ல. பார்த்துக்கறேன்…” என்று கூற, பார்வை வட்டம் முழுவதுமாக மறைந்து அவன் மட்டுமே தெரிந்தான்!

பிரம்மாண்டமாய்… விஸ்வரூபமாய்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!