kaathalDiary

காதல் டைரி

ஸ்ரீதருடன் பேசிவிட்டு வந்ததே அவளின் மனதிற்கு நிறைவாக இருந்தது. அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய செமஸ்டர் தேர்வுகள் முடிந்து கல்லூரிகளுக்கு விடுமுறை ஆரம்பமானது. அன்று வழக்கம்போலவே பகல் முழுவதும் தூங்கிவிட்டு மாலை மூன்று மணிபோல அர்ஜூன் வீட்டிற்கு சென்றாள்.

அர்ஜூன் – ஷர்மிளா மற்றும் அமிர்தா மூவரும் ஊரை சுற்றிப்பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தவளை கண்டதும், “வா இனியா உன்னை தான் தேடிட்டு இருந்தேன்” என்ற ஷர்மிளாவை அவள் கேள்வியாக நோக்கிட, “நாங்க எல்லாம் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பறோம். நீயும் எங்களோட வாடா” என்றழைத்தாள்.

அவர்கள் குடும்பத்துடன் செல்வதை கவனித்த இனியா நாகரிகம் கருதி, “இல்ல அக்கா என்னால வர முடியாது. நீங்க போயிட்டு வாங்க” என்றவள் புன்னகைக்க, “என்ன குரலில் ஒரு குஷியே இல்லாமல் சொல்ற..” ஷர்மிளா அவளின் அருகே வந்து நெற்றியில் கைவைத்து பார்த்தாள்.

அவளின் உடல்நிலை நார்மலாக இருப்பதை உணர்ந்து, “ஏய் வாலு நான் கொஞ்ச நேரத்தில் பதறிப்போயிட்டேன். ஐயோ பிள்ளைக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போயிருசொன்னு” என்ற ஷர்மிளா பலமுறை அழைத்து அவள் வரமாட்டேன் என்று சொல்லிவிட வேறு வழியில்லாமல் கணவனோடு கிளம்பினாள்.

அவர்கள் சென்ற சற்றுநேரத்தில் சகுந்தலா அவளை கோவிலுக்கு அழைக்க, “இல்லம்மா நான் வரல..” என்று மறுத்துவிட்டு தன்னுடைய ஃபிளாட்டிற்கு வந்தவளுக்கு ரொம்பவே போரடித்தது.

அவள் வேண்டா வெறுப்பாக கட்டிலில் அமர்ந்திருக்கும்போது திடீரென்று அந்த விஷயம் ஞாபகத்திற்கு வரவே அறை முழுவதும் தேடி எடுத்ததை நினைத்து, “ஹுரே கிடைச்சிருச்சு” என்று அறைக்குள் குத்தாட்டம் போட்டுவிட்டு அதை கட்டிலின் மீது பத்திரமாக வைத்துவிட்டு சமையலறைக்கு சென்ற இனியா என்ன இருக்கிறது என்று நோட்டம்விட்டாள்.

உருளைக்கிழங்கு மற்றும் சுண்டல் இருப்பதைப் பார்த்தும் தனக்குள் முடிவேடுத்தவளாக வேகமாக வேலையில் இறங்கினாள். சுண்டலை வேகவைத்து வறுத்துவிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் போட்டு எடுத்து ஒரு பிளாஸ்கில் டீ போட்டு எடுத்துகொண்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

அங்கே இருந்த டேபிளை இழுத்துபோட்டு கொண்டு வந்ததை கடைபரப்பி வைத்துவிட்டு கட்டிலின் நடுவே சம்மணமிட்டு அமர்ந்தவள் டைரியை திறந்தாள். முதல் பக்கத்தில் பெஞ்சில் ட்ரையிங்கில் அவளின் புன்னகை முகமே இருக்க அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவள் அடுத்த பக்கத்தை புரட்டிட

உன்னை நேசிப்பது போல

நீ பிறரையும் நேசித்தால்

வாழ்க்கையின் பயணத்தில்

பணக்காரன் ஏழை என்ற

ஏற்றதாழ்வுகளுக்கு இடமில்லை..” டைரியின் வரிகளைப் படித்தவளின் பார்வை ஜன்னலின் மீது பதிந்தது. கதிரவன் செந்நிற நிலவுபோல மறையும்  காட்சி கண்டு மனம் பூரித்தது.

பகல் முழுவதும் செங்கதிரில் சுட்டெரிக்கும் சூரியனோ மாலையானதும் செந்நிலாவாக காட்சிதரும் மாலை வேளையில் மனம் கவர்ந்த கள்வனின் டைரியை அவன் அறியாமல் வாசித்தவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

“நான் யாரோட டைரியை படிக்கிறேன்னு பார்க்கிறீங்களா? எல்லாம் என்னோட மாமா டைரிதான்” தனியறையில் அறையில் தனியா பேசிட்டு இருக்காளே இவளை என்னதான் பண்றது [இது நான் உங்க ரைட்டரான என்னோட புலம்பல்..]

‘அடுத்தவங்க டைரியை படிக்கிற இது அநாகரிகமா தெரியல இனியா’ – அவளின் மனசாட்சி.

“நோ.. இது என் மாமா டைரி. இந்த திருட்டு மாங்கா மாதிரி திருட்டிட்டு வந்த டைரியை வாசிப்பது கூட சூப்பராதான் இருக்கு” என்று கூறியவள் எழுந்து சென்று ஜன்னலின் மீது சாய்ந்து நிற்க இளந்தென்றல் அவளின் கூந்தலை கலைத்துச் சென்றது.

அவனின் டைரியில் தன்னைபற்றி என்ன எழுதியிருப்பான் என்ற ஆர்வத்தில் அடுத்த பக்கத்தை வேகமாக திருப்பினாள். கதிரின் முத்து முத்தான கையெழுத்தை மெல்ல வருடியபடி வாசிக்க தொடங்கினாள் இனியா.

என்னோட டைரியில் நான் யாரைப்பற்றி எழுத போறேன். எல்லாம் என்னோட சாக்லேட் பேபி பற்றித்தான். இனியா பெயருக்கு ஏற்ற இனிமை அவளிடம் இருக்கும். என்னோட தங்கைக்கு நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அதெல்லாம் எனக்கு முன்னாடி செய்யும் அவளோட அக்கறை ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு தான் மேடம் என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாங்க.” என்றவனின் வாக்கியங்களை வாசித்தபடி வந்தவளோ,  “நான் என்ன பண்ணேன்” என்ற கேள்வியுடன் அடுத்த வரிகளை படிக்க தொடங்கினாள்.

இரண்டு லாங் சைஸ் நோட் வாங்கிட்டு வந்தேன். அவளுக்கு அந்த நோட்டில் இருக்கும் பிக்சர் பிடிச்சிருக்குன்னு அதை கொடுக்க சொல்லி ஒரே அடம்படிச்சதும் நான் கொடுக்காமல் அந்த நோட்டில் என்னோட ஹோம் ஹோர்க் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன். திடீரென்று பேனாவில் மை தீர்ந்து போனதும் இங்க் பாட்டல் கொண்டுவா இனியான்னு சொன்னது ஒரு குத்தமா அதை கொண்டுவந்து கையில் கொடுக்கிறேன்னு நோட்டில் ஊத்திட்டா. அப்புறம் என்ன வீடே அதிரும் அளவுக்கு சண்டை வந்திருச்சு” என்றவன் அன்றைய நாளின் நிகழ்வை அழகாக எழுதியிருக்க இவளோ சிரிப்பை அடைக்க முடியவில்லை.

அவன் நோட்டை கொடுக்கல என்ற கோபத்தில் இங்க் பாட்டிலை மொத்தமாக கொட்டிட்டு அவனிடம் வாங்கி வசவு கொஞ்சமா நஞ்சமா? அப்புறம் மாமா நோட் வாங்கிட்டு வந்து கொடுத்தார். அதிலும் எனக்கு பிடிச்ச பிக்சர் இருக்கவும் மாமாவை நான் பார்த்த பார்வையில் என்ன நினைச்சாரோ?

‘நீ இந்த நோட்டை வெச்சுக்கோ ஆன எனக்கு ஹோம்வொர்க் எழுதி கொடுத்துட்டு தான் தூங்கற..’ என்று மிரட்டிவிட்டு சென்ற கதிரை இன்று நினைத்தாலும் அடிவயிற்றிலிருந்து சிரிப்பு கிளம்பிட அவளோ விழுந்து விழுந்து சிரித்தாள்.

“பாவம் கதிர் மாமா. ஒரு சின்ன விஷயம் இதுக்கு அவரை இந்த பாடுபடுத்தியிருக்கேன்” என்றவள் அதன் கீழே இருந்த வரிகளைப் படித்தாள்.

ஒவ்வொரு முறை அவளிடம் தோற்று என்னை நானே வென்றேன். அவளுக்கு விட்டுகொடுக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தில் ஜெய்த்தேன். அந்தநொடி மனசிற்குள் வரும் நிறைவை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது..” என்ற கதிரின் வரிகளில் அவனின் மனம் அவளுக்கு புரிந்தது.

இனிமையான தருணங்கள்

இனிமேல் என் வாழ்வில்

வரும்மென்ற உண்மையை

உரைத்த மெல்லிய பூவே

உன் மனதிற்கு நெருக்கமாக

நான் வரும் நாளில்

நீ என்னவளாக மாறிபோவாயோ?” என்ற கவிதை வரிகள் அவளின் மனதை இதமாக நனைத்தது. சில்லென்ற தீண்டும்போது மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க எந்த கவிஞனாலும் முடியாது. அப்படியொரு உணர்வில் சிக்கித்தவித்தது பெண்ணின் மனம்!

“கதிர்மாமா நீ என்னை பார்க்கும் போது எரிந்து விழுவாய். இப்போ என்ன காதல் மன்னன் ரேஞ்சில் கவிதை ல்லாம் எழுதி வெச்சிருக்க..” என்று தனக்குள் புலம்பியவளின் வயிறு பசியில் க்யா ம்யா என்றதும்,

“ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படிப்போம்” என்றவள் சூட்டாக இருந்த டீயைகுடித்துவிட்டு சுண்டலையும், உருளைக்கிழங்கு சிப்ஸையும் காலி செய்தாள்.

‘கதிரின் டைரியில் தன்னைப் பற்றி என்ன எழுதியிருப்பான் என்ற ஆர்வம் மாறிப்போக அவனின் மனதில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன்’ என்ற உண்மையை உணர அவள் மீண்டும் டைரியைப் படிக்க தொடங்கினாள்.

“சின்ன விஷயங்களில் என்னை அவளின் வசமாக்கி போனவளிடம் என்ன செல்வேன். சிறுபிள்ளை போல கலங்கம் இல்லாமல் சிரிப்பவளிடம் உண்மை சொல்ல மனம் வரவில்லை. அதனால் என் காதலை மனதோடு பொத்தி வைத்தேன். இந்த டைரியில் நான் என்னைபற்றி எழுதியதைவிட அவளைப் பற்றிய விஷயங்கள் எழுதியது தான் அதிகம்..” என்றவன் தொடர்ந்து அவளைப் பற்றிய பல நிகழ்வுகளை அதில் எழுதியிருந்தான்.

அதை படிக்கும் முன்னரே காலிங்பெல் அடிக்கும் சத்தம்கேட்டு எழுந்து சென்றாள். வீட்டின் வாசலில் நின்ற ஸ்ரீதரைப் பார்த்தும், “வா ஸ்ரீ..” என்றவள் வீட்டிற்குள் அழைத்தாள்.

“ஆமா நீ மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கிற” என்றவன் கேட்க, “நான் ஊரிலிருந்து வரும்போது மாமா டைரி எடுத்துட்டு வந்தேன். அதை தான் படிச்சிட்டு இருந்தேன்” என்றவள் அவனுக்கு டீ போட்டு கொடுத்தாள்.

அவள் கடைபரப்பி வைத்திருந்ததை பார்த்த ஸ்ரீதர் சிரித்தபடி, “என்ன இனியா இப்படி பண்ணி வெச்சிருக்க” என்று கிண்டலாக அவளைப் பார்த்தான்.

“டைரி படிக்கும்போது சாப்பிட ஏதாவது வேணும் இல்ல. அப்போதானே படிக்க ஆர்வமாக இருக்கும்” என்றவளைப் பார்த்து அவன் தலையிலடித்துக் கொண்டான்.

மாலை நேரம் கடற்கரைக்கு செல்ல நினைத்து கிளம்பிய கதிரின் பார்வையில் விழுந்தது அவளின் டைரி. கதிர் ஒரு கல்லூரி பேராசிரியர் என்றபோதும் அவனும் மனிதன் தானே? அவனுக்கும் காதலியின் நினைவு இருக்குமல்லவா..

அவனுக்கு டைரி எழுதுவது பிடிக்குமென்று அதை சொல்லிதர சொல்லி கற்றுகொண்ட அவளிடம் இந்த டைரியை எடுத்து வந்த நினைவு இன்றும் அவனின் நெஞ்சில் நீங்காமல் இருந்தது. அந்த நினைவுடன் பைக் சாவியும், அவளின் டைரியையும் எடுத்துகொண்டு கடற்கரைக்கு சென்றான்.

மாலை நேரத்தில் யாரும் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்தான். கடலலைகள் வேகமாக வந்து கரையை தொட்டு செல்வதைப் பார்க்கும்போது மனதில் ஒருவகை அமைதி பரவியது. அவளின் டைரியை எடுத்த கதிர், ‘என்னைப்பற்றி என்ன எழுதி இருக்க போறா.. மிஞ்சி மிஞ்சிப்போன சண்டை போட்ட விஷயத்தை விளக்கமாக எழுதி வெச்சிருப்பா. சரி என்ன பண்ணி வச்சிருக்கான்னு பார்க்கலாம்’ என்ற எண்ணத்துடன் அவளின்  டைரியை வாசிக்க தொடங்கினான்.

“இன்னைக்கு இனியா சரியான அழுகை. அவள் அழுதா என் மனசு தாங்காது. அப்படியிருக்கும்போது அவள் காரணம் சொல்லாமல் அழுததை நினைச்சா செம கோபமா வருது. அப்புறம் அவளை உட்காரவெச்சு விசாரிச்சா பிறகு சொல்ற கிளாஸில் ஒரு பொண்ணு துலக்கமல்லி பூ வெச்சிட்டு வந்துச்சாம். அந்தப்புள்ள இவளுக்கு ஒரு பூ கொடுக்கல என்று வருத்ததில் அழுதிருக்கிற” என்றவள் செய்த செயலை படித்தவனின் மனதில் அந்த நாள் படமாக விரிந்தது.

இந்த நிகழ்வு நடக்கும்போது இனியா ஆறாம் வகுப்பு படிக்க இவனோ பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இனியாவிற்கு எப்போதும் தென்றலைப் பிடிக்கும். அவள் சொன்ன விசயத்தைக்கேட்டு கோபத்தில் எழுந்து சென்றவள் அப்பாவிடம் சொல்லி பக்கத்து தோட்டத்தில் இருப்பவரிடம் துலக்கமல்லி பூவை வாங்கிவந்து செண்டு போல கட்டி தென்றலுக்கு மறுநாள் தலையில் வைத்துவிடுவதைப் பார்த்தான் கதிர்.

“தேங்க்ஸ் இனியா” என்று அவளின் கன்னத்தில் தென்றல் முத்தமிட, “இங்கே பாருடா ஒரு பூ கூட மிஸ் பண்ணாமல் கொண்டுவந்து சாயந்திரம் கொடுக்கற” என்றவள் பலமுறை கூறவே பொறுமை இழந்த கதிர்தங்கை நகர்ந்தும் அவளின் அருகே சென்றான்.

இரட்டை ஜடையில் பச்சை நிற ரிப்பன் வைத்து மடித்து கட்டி நெற்றியில் போட்டு மட்டும் வைத்து சிவப்பும், வெள்ளையும் கட்டம் கட்டமாக போடப்பட்டிருந்த காலர் நெக் சுடிதாரில் தாயாகி நின்றிருந்தவளை இமைக்காமல் பார்த்தான் கதிர்.

“இப்போ எதுக்கு அவளிடம் இத்தனை முறை சொல்ற” என்றவன் எடுத்த எடுப்பில் எரிந்து விழுக, “அதுக்கு ஏன் மாமா நீ இவ்வளவு கோபமாக இருக்கிற” என்று சாதாரணமாக கேட்டு அவனின் கோபத்தை அதிகரிக்க வைத்தாள்.

“நீ காரணத்தை சொல்லு” என்றவன் அவளை அதட்டிட, “துலக்கமல்லி செடிக்கு விதை போட்டாத்தான்” என்றாள் இயல்பாகவே.

“அது எப்படி விதை போட முடியும்” அவள் சிந்தனையோடு கேட்க, “லூசா மாமா நீ. அதில் இருக்கிற இதழ்களை காயவைத்தாலே போதும். அந்த செடிக்கான விதை கிடைக்கும்” என்றவள் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

மாலை தென்றல் வந்தும், “இனியா நீ சொன்ன மாதிரி ஒரு பூ கூட யாரிடமும் கொடுகாமல் கொண்டு வந்துட்டேன்” என்று அவளிடம் கொடுக்க இவள் பூவை காயவைத்து அதிலிருந்து விதையை எடுத்தாள். மூன்று நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு பின்னாடி இருக்கின்ற இடத்தை கொஞ்சம் சுத்தம் செய்து விதையைப் போட்டுவிட்டாள்.

தினமும் அவள் கண்விழித்தும் அந்த இடத்திற்கு சென்று செடி முளைத்தா இல்லையா என்று பார்த்துவிட்டு வருவதை கண்ட கதிருக்கு அவளின் செய்கை ஆச்சரியத்தை கொடுத்தது. கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவள் போட்ட விதைகள் செடியாக முளைத்தது. கிடத்தட்ட நான்கு வாரத்திற்கு பிறகு மெல்ல மொட்டுவிட தொடங்கிய செடியைப் பார்த்து சந்தோஷத்தில் இருந்தாள்.

அப்போது செடியைக் கவனித்த கதிர், “எதுக்கு இனியா இப்போ இந்த செடியை வளர்க்கிற” என்று அவளிடம் அவன் காரணத்தை கேட்க, “தென்றலுக்கு இந்த பூ ரொம்ப பிடிச்சிருக்கு மாமா. ஒரு பூவுக்காக அவள் மனசு உடைந்து போவதை பார்க்க சொல்றீங்களா? சின்ன பொண்ணு மாமா” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளின் இந்த செயல் அவனின் மனத்தைக் கவர்ந்தது. தனக்கு அடுத்த இடத்திலிருந்து தங்கையை பார்த்துகொள்ளும் அவளை உயிராக நேசிக்க தொடங்கினான். அவளின் ஒவ்வொரு முடிவும் தங்கையைப் பொறுத்து தான் இருக்கும். எந்த ஒரு முடிவையும் யாரின் மனமும் கஷ்டப்படுத்தாமல் எடுக்கும் அவளின் பக்குவம் அவனின் மனத்தைக் கவர்ந்தது. அவன் மீண்டும் வாசிக்க தொடங்கினான்.

ஊஞ்சல் பிடிக்குமென்று

நேற்றுதான் டைரியில் எழுதினேன்

இன்று ஸ்கூல் முடிந்து வந்தபோது

தான் பின் வாசலில் கட்டப்பட்டிருந்த

இரும்பு ஊஞ்சலைப் பார்த்தேன்.

நான் எழுதிய கவிதையைப்

படித்துவிட்டானோ?” என்று சந்தேகத்துடன் எழுதி இருந்தவளைப் பற்றி இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வந்தது.

ஒருநாள் அவளுக்கு பிடித்த விஷயங்களை அவள் பட்டியலிட்டு இனியாவிடம் சொல்லிக் கொண்டிருப்பதை இயல்பாக கேட்டுவிட்டான். தன் தங்கையின் மனமறிந்து அவளின் விருப்பத்தை நிறைவேற்றிய அவளின் ஆசையை நிறைவேற்றுவது தன் கடமை என்று நினைத்தான்.

அவளுக்கே தெரியாமல் தந்தையிடம் பேசி அவளுக்காக முற்றத்தில் ஊஞ்சலை அமைக்க ஏற்பாடு செய்தான். அந்த நினைவுகள் எல்லாம் அவளின் டைரியின் பக்கத்தில் இடம்பிடித்திருப்பதை நினைக்கும்போது அவனின் மனம் தித்தித்தது.

“என்னோட காதலி மனம் புரியாதவனா நான்” என்றவன் தனக்குள் பேசியபடி நிமிர்ந்து பார்க்க வானம் இருள் சூழ்ந்துவிட நிலாவின் ஒளி கடலின் அழகிற்கு அழகு சேர்த்ததை நினைத்தபடி வீட்டிற்கு கிளம்பினான்.

உன் காதலை எனக்கும்

என் காதலை உனக்கும்

தெரியபடுத்தி காதலில்

மூழ்கடிக்குதே

இந்த காதல் டைரி!