Kadhal 16
Kadhal 16
மேக்னா கொடுத்த டைரிகளில் இரண்டை முழுமையாக படித்து முடித்த சித்தார்த் அவை இரண்டையும் தன் கையில் வைத்துக் கொண்டு இன்னொரு புறம் தன் மறு கையினால் அவள் கொடுத்த பெட்டியை திறப்பதும், மூடுவதுமாக அமர்ந்திருந்தான்.
‘இரண்டு டைரிக்கே எனக்கு இந்த நிலைமைன்னா! மீதமுள்ள எல்லாம் படித்தால்?’ அதைப் பற்றி சிந்தித்து பார்க்கும் போதே அவனுக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது.
மேக்னா விடாமல் ஒரு பக்கம் இவனை உதவிக்கு நாடியபடி இருக்க அவனோ மறுபுறம் அவளது அழைப்பை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பை போல தவித்துக் கொண்டிருந்தான்.
பல குறுஞ்செய்திகள் அவளிடம் இருந்து சித்தார்த்திற்கு வந்து இருக்க அவனது மனமோ
‘ஒருவேளை அவளுக்கு ஏதாவது பெரிய பிரச்சினையாக இருக்குமோ? அதனால் தான் அங்கிருந்து வெளியேற எனது உதவியை நாடி வந்தாளா?’ என்று யோசிக்க ஆரம்பித்தது.
ஒவ்வொரு முறையும் மேக்னாவிடம் இருந்து குறுஞ் செய்திகள் வரும் போது மேஜையின் மீதிருந்த தொலைபேசியை நோக்கி சென்ற தன் கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தவன் பின் மனம் கேளாமல் அதை கையில் எடுத்துக்கொண்டு
‘இன்னும் உங்க டைரியை படித்து முடிக்கல எல்லாம் படித்ததற்கு அப்புறமாக நானே உங்களை வந்து சந்திக்கிறேன் இப்போ கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்’ அவசரமாக அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு மீண்டும் தன் இருக்கையில் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தான்.
‘சரி இன்ஸ்பெக்டர் ஸார்!’ அவன் அவளுக்கு குறுஞ் செய்தி அனுப்பி ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு உள்ளாகவே அவளிடம் இருந்து பதில் வந்து இருந்தது.
‘ரொம்ப எதிர்பார்ப்புடன் இருக்கா போல!’ சிறு புன்னகையுடன் அவள் அனுப்பிய குறுஞ் செய்தியை படித்தவன் அவளது அடுத்த டைரியை தன் கையில் எடுத்துக் கொண்டான்.
***********************************************
மேக்னா தனபாலனிடம் வேலைக்கு சேர்ந்து கொள்வதாக சம்மதம் தெரிவித்து இருக்க அவரருகில் நின்று கொண்டிருந்த சுதர்சனோ அவரது கை பற்றி அவளிடம் இருந்து சிறிது தூரம் தள்ளி சென்று நின்றவாறே
“தனபாலன்! நீ பண்ணுறது எனக்கு சரியாக இருக்கும்னு தோணல அவளைப் பற்றி எல்லாம் தெரிந்தும் எதற்கு வீணாக அவளை வேலைக்கு சேர்த்துக் கொள்ள பார்க்குற? நீ வம்பை விலைக்கு வாங்கப் பார்க்குற” சற்று கண்டிப்பான குரலில் கூற
பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைத்து கொண்டவர்
“எதிரியை வெளியே விட்டுட்டு எப்போ என்ன நடக்கும்னு பயந்து பயந்து வாழுறதை விட அதே எதிரியை கூட வைத்துக் கொண்டு அவனோட ஒவ்வொரு அசைவையும் நம்மளே கண்காணித்தால்?” கேள்வியாக அவரை நோக்கினார்.
“ஆனா தனபாலன் எனக்கு இவளை பார்த்தாலே பயமாக இருக்கு எப்போ என்ன பண்ணுவாளோ?”
“ஹா! ஹா! ஹா! எனக்கு அது தான் வேணும் ஒரு பொண்ணைப் பார்த்து இத்தனை தூரம் நீ பயப்படுறேன்னா அவ சாதாரணமான ஆளு இல்லை அதனால தான் அவளை நம்ம வேலைக்கு சேர்த்துக்க பார்க்கிறேன் அவ கோபமும், தைரியமும் தான் நம்மளோட மூலதனம்”
“என்னவோ சொல்லுற! நாளைக்கு ஏதாவது குளறுபடி நடந்தால்…”
“கண்டிப்பாக உன்னை கூப்பிடவே மாட்டேன்”
“எனக்கு அது போதும்” தன் தலைக்கு கைகள் இரண்டையும் கூப்பி கும்பிடுவது போல செய்த சுதர்சன்
“சரி தனபாலன் நான் வர்றேன் பார்த்து ஜாக்கிரதையாக இரு” தனபாலனின் தோளில் தட்டிக் கொடுத்தவாறே கூறி விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மேக்னாவையும் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றார்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவளது செவிகளில் நன்றாக விழுந்தாலும் அந்த நேரத்திற்குள் அவளின் மனமோ தான் செய்வது சரியா? தவறா? என பலமுறை தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.
‘நான் மீண்டும் மீண்டும் தவறான வழியைத் தேடி போய் கொண்டு இருக்கின்றேனா? எதை விட்டு நான் விலகிச் செல்ல நினைத்தாலும் அந்த விடயம் என் வாழ்வில் விடாமல் வந்து கொண்டே இருக்கிறதே! நான் என்ன செய்வது?’ மேக்னா வெகு மும்முரமாக சிந்தித்து கொண்டு நிற்கையில்
“என்னம்மா மேக்னா இன்னைக்கே வேலையில் சேர்ந்துக்குறியா?” என்றவாறே தனபாலன் புன்னகை முகமாக அவள் முன்னால் வந்து நின்றார்.
“இன்னைக்கா?” சிறிது நேரம் தயக்கத்துடன் யோசித்துப் பார்த்தவள்
பின்னர் மறுப்பாக தலை அசைத்து விட்டு
“வீட்டில் எல்லோரும் எனக்கு என்ன ஆச்சுன்னு ரொம்ப டென்ஷனாக இருப்பாங்க” என்று கூறவும்
“ஆமா! ஆமா! அது வேற இருக்கு இல்லையா?” என்ற தனபாலன் உடனே தன் போனை எடுத்து மேக்னா மீது கொடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்குவதாக கூற
அவளோ சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்து தன் கரம் கூப்பி
“ரொம்ப நன்றி!” என்று கூறினாள்.
“அப்போ நாளையில் இருந்து நீ வேலைக்கு வந்துடும்மா”
“சரி ஸார்! ரொம்ப நன்றி! நான் வர்றேன்!” முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவரைப் பார்த்து தலை அசைத்தவள் வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றாள்.
தனபாலனின் அலுவலகத்தில் இருந்து வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்த மேக்னாவை நர்மதா வாசலிலேயே ஓடி வந்து அணைத்துக் கொண்டு
“அக்கா! எங்கே க்கா போனீங்க ? அப்பா உங்களை எல்லா இடத்திலும் தேடி பார்த்தாங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நிறைய பேரு வந்து அப்பா முன்னாடி சத்தம் வேற போட்டுட்டு போனாங்க” என்று அழுகையினூடு கூறவும்
சிறிது கவலையுடன் அவளையும், வீட்டிற்குள் இருந்த நடராஜனையும் திரும்பி பார்த்தவள்
“அழக்கூடாது ம்மா கண்ணைத் துடைச்சுட்டு முதல்ல உள்ளே வா அப்புறமாக எல்லாம் சொல்லுறேன்” என்றவாறே கண்கள் கலங்கி நின்றவளை தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறே வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும் வீட்டின் மூலையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்த வள்ளியும் வேகமாக அவர்கள் அருகில் வந்து நின்றார்.
“என்னாச்சு மேக்னா? எங்கே போன நீ? நாங்க எல்லோரும் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? போலீஸ் வேற நீ எங்கேயோ ஓடி போயிட்டேன்னு சொல்லி வீட்டுக்கு முன்னாடி வந்து நின்னு கத்தத் தொடங்கிட்டாங்க அப்படி…”
“வள்ளி! வீட்டிற்குள் வந்த பொண்ணை உட்கார கூட விடாமல் இப்படி பேசிட்டு இருக்கியேம்மா முதல்ல மேக்னாவிற்கு குடிக்க தண்ணீர் கொஞ்சம் எடுத்து வா!” நடராஜன் மேக்னாவின் தயக்கம் நிறைந்த முகத்தை பார்த்து விட்டு வள்ளியை எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்தவாறே உள்ளே செல்லுமாறு கூற அவரும் அவளது தயக்கமான முகத்தை பார்த்து விட்டு சற்றே சங்கடத்துடன் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் தண்ணீர் நிரம்பிய டம்ளர் ஒன்றை எடுத்து வந்து மேக்னாவிடம் அவர் கொடுக்க எதுவும் பேசாமல் அதை வாங்கி கொண்டவள் ஒரே மிடறில் அதில் இருந்த ஒட்டுமொத்த நீரையும் குடித்து முடிக்க நடராஜன் மெல்ல எழுந்து வந்து அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.
தன் கையில் இருந்த வெற்று டம்ளரையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தவள் ஒரு நிலைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நடராஜன் மேல் சாய்ந்து கண்ணீர் வடிக்க அவளை பார்த்து வள்ளியும், நர்மதாவும் பதட்டத்துடன் அவளருகில் வந்து நின்றனர்.
வள்ளி பதட்டத்துடன் ஏதோ கேட்க வர அவரைப் பார்த்து வேண்டாம் என்று தலை அசைத்த நடராஜன் மேக்னாவின் முகத்தை நிமிர்த்தி அவளது கண்களை துடைத்து விட்டபடியே அவளெதிரில் அமர்ந்து கொண்டார்.
“அப்பா! நா…நான் வே…ணும்னு…”
“மேக்னா! இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுவுற? மேக்னா எப்போதும், எதற்காகவும் இவ்வளவு ஈஸியா கண் கலங்க மாட்டாளே! அப்படின்னா இது எங்க மேக்னா இல்லையோ?” நடராஜன் கேள்வியாக மேக்னாவை நோக்க அவளோ பதில் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டாள்.
என்ன தான் தைரியமாக எல்லா விடயங்களையும் எதிர் நோக்கும் மன வலிமை மேக்னாவிற்கு இருந்தாலும் யாரை விட்டு விலகிச் செல்ல நினைத்தாலோ அந்த நபரையே தேடி சென்று அவரின் கீழேயே வேலை செய்வது என்பது அவளுக்கும், அவளது தைரியத்திற்கும் கிடைத்த பெரும் சவாலே.
தான் செய்தது சரியா? தவறா? என அவளுக்கே புரியாத நிலையில் அதை எப்படி தன் வீட்டினரிடம் எடுத்து சொல்வது என அவளுக்கு புரியவில்லை.
“மேக்னா ம்மா! நர்மதா என்ன நடந்ததுன்னு எல்லாம் சொன்னா உன் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு எங்களுக்கு தெரியும்மா”
“ஆனா அப்பா நான்…”
“நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாமல் வேறு எங்கேயோ போய் இருந்தால் அதில் ஏதாவது நியாயமான காரணம் இருக்கும் அது எனக்கு தெரியும்மா அதனால தான் நான் அதை பற்றி உன் கிட்ட எதுவும் கேட்கல நீ எப்போதும் நியாயமான விஷயங்களைத் தான் செய்வ நாங்க உன் கூட பழகியது ஒரு சில மாதங்களாக இருந்தாலும் உன் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கும்மா உனக்கு எப்போது என்ன சொல்ல தோணுதோ அப்போ சொல்லும்மா நான் எதுவும் தப்பாக நினைக்க மாட்டேன்”
“அப்பா!” கண்கள் கலங்க கேவலுடன் அவர் மேல் சாய்ந்து கொண்டவள் தன் மனதிற்குள் இருந்த குழப்பத்தை முழுவதும் அவரிடம் கூற முடியாமல் தவிப்போடு அமர்ந்திருந்தாள்.
‘இவர்கள் என் மேல் இத்தனை தூரம் நம்பிக்கை வைத்திருக்கும் போது நான் செய்து வைத்திருக்கும் காரியம் எத்தனை பாரதூரமானது? நான் இதுவரை செய்த விடயங்கள் எல்லாம் இவர்களுக்கு தெரிந்தால் இப்போது இவர்கள் என் மேல் காட்டும் இந்த உண்மையான பாசம் முற்றிலும் இல்லாமல் போய் விடக்கூடுமோ?’ அவளது தடுமாற்றத்தையும் மீறி ஒரு அச்ச உணர்வு அவள் மனதிற்குள் மேலெழுந்து அவளை வண்டாக குடைய ஆரம்பித்தது.
“சரி ம்மா முதல்ல நீ போய் கை, கால், முகம் எல்லாம் கழுவிட்டு வா காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்க பசியாக இருக்கும்”
“இல்லை ப்பா! முதல்ல நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
“சொல்லும்மா என்ன விஷயம்?”
“அது வந்து அப்பா நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாமல் என் மேல் கம்ப்ளெயிண்ட் கொடுத்த தனபாலன் எம்.எல்.ஏ வைத்தான் பார்க்கப் போனேன்”
“ஓஹ்! அவங்க எதுவும் திட்டுனாங்களாடா?”
“இல்லை ப்பா! நான் நடந்ததை விவரமாக சொன்னேன்”
“அதற்கு அவங்க என்ன சொன்னாங்க?”
“கொஞ்சம் கோபப்பட்டாங்க ஆனா அதற்கு அப்புறம் கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்குவதாக சொல்லி எனக்கு வேலையும் தர்றதாக சொன்னாங்க”
“வேலையா?” இம்முறை வள்ளி கேள்வியாக மேக்னாவை நோக்கினார்.
“நான் வேலைக்கு அப்ளை பண்ணி இருந்த ஒரு லெட்டர் அந்த பசங்களை அடிக்கும் போது அந்த இடத்தில் விழுந்து இருக்கு அதை பார்த்து தான் என் மேல் கம்ப்ளெயிண்ட் பண்ணி இருந்தாங்க”
“அக்கா! அவங்க ரொம்ப மோசமான ஆளுங்க அக்கா அவங்க கிட்ட நீங்க எப்படி க்கா வேலை பார்ப்பீங்க? என்னால தானே இவ்வளவு பிரச்சினையும்?” அத்தனை நேரமாக அவர்கள் எல்லோரும் பேசுவதை கேட்டு கொண்டிருந்த நர்மதா தன்னால் தான் அவர்களுக்கு எல்லாம் கஷ்டமோ என்றெண்ணி சிறிது கவலையுடன் கூற
புன்னகையுடன் அவளது கையை பற்றி கொண்ட மேக்னா
“அப்படின்னு யாரு சொன்னா? நீ வந்ததற்கு அப்புறமாக தானே எனக்கு வேலை கிடைத்து இருக்கு அப்படி பார்த்தால் உன்னால் எனக்கு நல்லது தானே நடந்து இருக்கு நர்மதா இல்லையா சொல்லு?” கேள்வியாக அவளை நோக்க
அவளும் சிறிது நேரம் யோசித்து விட்டு
“ஆமாலே!” புன்னகையுடன் அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.
“நான் அவங்க தர்ற வேலையை செய்யுறதாக சொல்லிட்டேன் ம்மா அது சரி தானே ப்பா?” தன் அருகில் நின்று கொண்டிருந்த வள்ளி மற்றும் நடராஜனை மேக்னா தயக்கத்துடன் ஏறிட்டுப் பார்க்க
ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டவர்கள்
“நீ பண்ணுற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும் டா மேக்னா அதனால எங்களுக்கு உன் முடிவில் எப்போதும் நூறு இல்லை இருநூறு மடங்கு நம்பிக்கை இருக்கு”
“நான் ஆரம்பித்தில் சொன்ன மாதிரி நீ தப்பாக எதுவும் பண்ண மாட்டடா மேக்னா” என்றவாறே அவளது தோளில் ஆதரவாக அழுத்திக் கொடுக்க அவளது மனமோ தான் செய்த காரியங்களை எல்லாம் எண்ணி ஊமையாக அழுதது.
“சரி டா மேக்னா நீ போய் முகத்தை கழுவிட்டு வா நான் சாப்பாடு செய்து வைக்கிறேன்” என்றவாறே வள்ளி சமையலறைக்குள் நுழைந்து கொள்ள நடராஜனைப் பார்த்து புன்னகைத்து விட்டு தன்னறைக்குள் வந்து சேர்ந்த மேக்னாவின் மனமோ தள்ளாடி கொண்டு இருந்தது.
‘இப்போது என்னால் எல்லா உண்மைகளையும் இவர்களிடம் சொல்ல முடியாது மீறி சொன்னால் எனக்கு கிடைக்கும் இந்த அன்பை நான் இழந்து விடுவேன் அதனால் அந்த தனபாலனை முற்றிலும் அவனது சாம்ராஜ்யத்தோடு சேர்த்து அழித்த பிறகு எல்லாவற்றையும் கூறலாம் அதன் பிறகு நடப்பது எல்லாம் என்னை விடாமல் ஆட்டுவித்துக் கொண்டு இருக்கும் அந்த இறைவன் விட்ட வழி!’ தன் மனதிற்குள் இருந்த குழப்பத்திற்கு தனக்குத்தானே தீர்வு கட்டிக் கொண்டவள் தன் அடுத்த கட்ட வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.
அடுத்த நாள் காலை நர்மதாவை தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் அனுமதி பெற்று சேர்த்து கொள்ள செய்தவள் அதன் பிறகு தனபாலனை பழி தீர்க்க போகும் தன் முதல் அடியை அவரது அலுவலகத்திற்குள் எடுத்து வைத்தாள்.
நேற்று அவள் அங்கே வந்த போது அவளை ஏளனமாக பார்த்த ஒரு சில முகங்களும் இப்போது அவளைப் பார்த்து சற்று தயக்கத்துடன் நிற்க அவளது மனதோ அந்த தயக்கத்தை வெகுவாக விரும்பி ரசித்து பார்த்தது.
பலமுறை பல பேர் முன்னிலையில் பல அவமானங்களை சந்தித்தவள் இன்று எல்லோரும் அவளைப் பார்த்து பயந்து சற்றே ஒதுங்கி நிற்பது அவளுக்கு கவலையைத் தராமல் மாறாக சந்தோசத்தையே வாரி வழங்கியது.
நேற்று அவள் வந்த போது ரிசப்ஷன் பகுதியில் இருந்து அவளை சீண்டிய அந்த நபர் இன்று அவள் எதுவும் கேட்காமலேயே அவள் முன்னால் வந்து நின்று
“மேடம்! ஐயா நீங்க வந்ததும் மேல வரச் சொன்னாங்க” என்று கூற புன்னகையுடன் அவரைப் பார்த்து தலை அசைத்தவள் படியேறி தனபாலனைக் காணச் சென்றாள்.
அறைக் கதவை தட்டி விட்டு மேக்னா அந்த அறைக்குள் நுழைந்து கொள்ள முகம் நிறைந்த புன்னகையுடன் அவளைப் பார்த்து தன் இரு கரம் கூப்பியவர்
“வாம்மா! மேக்னா வா! நீ வர்ற வரைக்கும் தான் காத்துட்டு இருந்தேன் உனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்றவாறே அவள் முன்னால் வந்து நிற்க
“என்ன பண்ணணும் சொல்லுங்க ஸார்?” அவளும் பணிவுடன் அவரை பார்த்து தன் வேலையை பற்றி கேட்டாள்.
“இந்த பெட்டியில் பத்து இலட்சம் ரூபா பணம் இருக்கு இதை கொண்டு போய் இந்த அட்ரஸில் இருக்கும் ஆளு கிட்ட கொடுத்துட்டு வா”
“அவ்வளவு தானா?”
“முதல்ல நீ போய் கொடுத்துட்டு வா அப்புறம் பார்க்கலாம்”
“சரி” தனபாலன் கொடுத்த பெட்டியையும், முகவரி எழுதப்பட்டிருந்த காகிதத்தையும் வாங்கி கொண்டவள் பஸ்ஸில் ஏறி அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
வெண்ணிற பளிங்கு மாளிகை போன்று இருந்த அந்த வீட்டை பார்த்து பிரமித்துப் போனவள் மெல்ல மெல்ல தயங்கியபடியே அந்த வீட்டின் கேட் அருகில் வந்து நிற்க உள்ளே இருந்து ஒரு காவலாளி
“யாரு ம்மா நீ? என்ன வேணும்?” என்றவாறே அவள் முன்னால் வந்து நின்றார்.
“தனபாலன் ஸார் அனுப்பி வைத்தாங்க இந்த பெட்டியை இந்த வீட்டில் இருக்குறவங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க” தன் கையில் இருந்த பெட்டியையும், காகிதத்தையும் அவள் சுட்டிக் காட்டியபடி கூற
அந்த காவலாளியோ
“தனபாலன் ஸாரா?” சிறிது யோசனையுடன் அவளை மேலும், கீழும் பார்த்து விட்டு அந்த பெரிய கேட்டை திறந்து விட்டார்.
“ரொம்ப நன்றி அண்ணா!” சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்து இரு கரம் கூப்பி கூறியவள் அந்த வீட்டின் பிரம்மாண்டமான தோற்றத்தை பார்த்து வியந்தபடியே உள்ளே நடந்து சென்றாள்.
‘இந்த பணத்தை கொடுத்துட்டு வர்றது எல்லாம் ஒரு வேலையா? இந்த வேலையை பார்த்தா அந்த தனபாலன் இவ்வளவு வசதியாக இருக்குறான்?’ சிந்தனை நிறைந்த மனதுடன் அந்த வீட்டின் கதவின் முன்னால் வந்து நின்றவள் ஹாலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்து நிற்க அவளது நேரத்தை வீணடிக்காமல் ஒரு சில நிமிடங்களிலேயே அந்த கதவு திறந்து கொண்டது.
“வணக்….” இரு கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லப் போனவள் தன் முன்னால் நின்ற நபரை பார்த்து அதிர்ச்சியில் வாயடைத்துப் போக அந்த நபரோ தன் கைகளை கட்டிக் கொண்டு புன்னகையுடன் அவளைப் பார்த்து கொண்டு நின்றார்……